நிஹாரி-7

IMG-20211003-WA0016-2906e7d1

நிஹாரி-7

சில வருடங்களுக்கு முன்..

சென்னையிலுள்ள அந்தப் பழைய நான்கடுக்கு மாடி குடியிருப்புகளில், ஒரு வீட்டில் சுப்ரபாதம் அழகாய் ஒலித்துக் கொண்டிருந்தது.

வீட்டின் குடும்பத்தலைவியான கயல்விழி அந்தக் காலை வேளையில் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தார். ஐந்தரை மணிக்கே எழுந்து குளித்துமுடித்து, கணவரை எழுப்பி, காபியை இருவருக்கும் வடித்தவர் கணவருக்கு கொடுத்துவிட்டு தனக்கும் எடுத்துக்கொண்டார்.

காபியை அருந்தியவரை நிற்கவிடாமல் பிடித்துக்கொண்டது அன்றாட வேலைகள்.

காலை உணவிற்காக இட்லியை தட்டில் ஊற்றி வைத்துவிட்டு, மதியத்திற்கு சீமந்த புத்திரனிற்காக புளிசாதத்தை கிண்ட நினைத்தவர், மடமடவென வேலைகளை செய்யத் துவங்கினார்.

முதலில் வெள்ளை சாதத்தை வைத்தெடுத்தவர், அதைத் தனியே வைத்துவிட்டு, கடுகு, கடலைப் பருப்பு, வெந்தயம், மல்லி, சிவந்திருந்த மிளகா அனைத்தையும் நன்கு எண்ணையில் மணமணக்க வறுத்தெடுத்து அரைத்துவிட்டு, மீண்டும் தனியே கருவேப்பிலை, நிலக்கடலை, அனைத்தையும் வறுத்தவர் அதில் கரைத்திருந்த புளியை ஊற்றி, எண்ணெய் பிரிந்தபின் அரைத்திருந்த பொடியை அதில் கலந்தார்.

சாதத்தை கலவையுடன் கலந்தவர், அடுத்து ஜோராக வடகம் வேறு பொரித்தெடுத்தார் அருமை மகனிற்காக.

திருமணம் முடிந்துவந்த இந்த பதினேழு வருடத்தில் அவருக்கு கணவனும், மகனும் மட்டுமே உலகம். நடுத்தரவர்க்க வாழ்வும், அன்பும் பாசமும் நிறைந்த கணவனும், மகனும் என்று அவருக்கு வாழ்க்கை நிறைவாக இருந்தது.

அவ்வப்போது மகன் வைக்கும் செலவுகள் மட்டும் கையைக் கடித்தாலும்,  தன் சேமிப்பால் அதை சமாளித்து வருகிறார்.

“ஏங்க மதியத்துக்கு பூண்டு ஊறுகாயா எலுமிச்சையா?” அவரின் டிபன் பாக்ஸில் சாதத்தை வைத்து முடித்தபடி கயல்விழி கேட்க,

“எருமை இன்னும் எந்திரிக்கலையா?” வினவியபடி உள்ளே வந்த கணவர் கனகராஜை முறைத்தார் கயல்விழி.

“என்ன சொன்னீங்க?”

“இருமா.. நான் இன்னும் கிளம்பலைன்னு சொன்னேன்” என்றார் மனைவி கையில் கரண்டியுடன் நிற்பதைக் கண்டு போலியான பயத்துடன்.

மனைவியைத் தொந்திரவு செய்ய மனமில்லாதவர், எப்போதும்போல தட்டில் இட்லியை வைத்து சாப்பிட்டுவிட்டு, மனைவி கூடையில் வைத்த டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

பிரபல **** புரொடக்ஷனில் இருபத்தைந்து வருடங்களாக வேலை பார்க்கிறார் கனகராஜ்.

தேவையான வருமானம் வர அதிலேயே காலத்தை தள்ளிக் கொண்டிருந்தது இந்த அழகிய குடும்பம்.

கனகராஜ் சென்றதும் தனது அறையிலிருந்து வெளிப்பட்ட மகனிடம் ஹார்லிக்ஸை தந்த கயல்விழி மகனின் கலைந்திருந்த தலையைக் கோதியவாறே, “போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடு ரிஷிப்பா.. ஸ்கூலுக்கு
டைமாச்சு பாரு.. இன்னிக்கு மொத நாள் வேற” என்றிட,

டிவியில் WWF வைத்தபடி, “ம்ம்” என்ற மகனை கோபித்துக்கொள்ள முடியாமல் அவனுடைய அறைக்குள் புகுந்தவர், அவனுடைய பள்ளிச்சீருடை, ஸ்கூல்பேக் அனைத்தையும் எடுத்து வைக்கத் துவங்கினார்.

மூன்றே அறைகள் கொண்ட வீட்டில் அவன் படுக்கை அறையை எடுத்துக்கொள்ள மகனின் தனிமையை கருதி அன்றிலிருந்து வரவேற்பறையில் உறங்க ஆரம்பித்தனர் ரிஷ்வந்தின் பெற்றோர். 

“ம்மா” என்றபடி தனது அறையை ஒழுங்கு செய்து கொண்டிருந்த அன்னையின் கழுத்தைக் கட்டி தோளில் சாயந்தவனின், கன்னத்தைத் தட்டியவர்,

“டைமாச்சு பாரு ரிஷிப்பா.. குளிச்சிட்டு வா.. கவின் வந்திடுவான்” என்றிட அன்னையின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டபடி குளியலறைக்குள் புகுந்தான்.

அடுத்த பதினைந்து நிமிடத்தில் தயாராகி வந்தவனிற்கு தட்டில் இட்லியையும், தேங்காய் சட்னியையும், இட்லிப் பொடியையும் அவர் வைத்துத் தர,

“ம்மா” சலித்தான் சின்னவன்.

“தக்காளி விலை ஏறிடுச்சுன்னு, நேத்து அப்பா வாங்கிட்டே வரலைப்பா” என்றிட,

“நல்லவேளை டெலிவரி செலவு அதிகம் ஆகும்னு, என்னை உங்க வயித்துக்குள்ளேயே பூட்டி வைக்காம இருந்தாரே” இட்லிபொடியையும்
எண்ணையையும் கலக்கியபடி கேலி செய்த மகனின் முதுகில் செல்லமாய்த் தட்டியவர்,

“அப்பாவை கிண்டல் பண்ணது போதும், சாப்பிட்டு கிளம்பு” எனும்போதே, “ரிஷ்வந்த்” என்றபடி உள்ளே நுழைந்தான் கவின். ரிஷ்வந்தின் நெருங்கிய நண்பன்.

“வா கவின்.. சாப்பிடறியா?” கயல்விழி வினவும்போதே, ரிஷ்வந்தின் தட்டிலிருந்து இட்லியைப் பிட்டு அவன் ருசி பார்க்க, அவனிற்கும் தட்டில் இட்லியை வைத்துவந்தார் கயல்விழி.

இருவரும் ஒருவழியாய் கிளம்ப, கடவுளை மனமார வேண்டியவர், இருவரின் நெற்றியிலும் திருநீரைப் பூசி வழியனுப்ப, இருவரும் தங்களது சைக்கிளில் கிளம்பினர்.

ரிஷ்வந்த் தற்போதுதான் பத்தாம் வகுப்பு விடுமுறை முடிந்து பதினொராம் வகுப்பில் அடியெடுத்து வைக்கிறான். சிறுவயதில் இருந்தே விளையாட்டுப்புத்தி அதிகம்.

நான்காம் வகுப்புவரை தந்தைக்கு பயந்து படித்து தொண்ணூறு சதவீதம்
பரீட்சையில் பெற்று வந்தவன், அதன்பின் தனது வயதிற்குரிய விளையாட்டுத்தனத்தாலும், நாட்டங்களாலும் எழுபது சதவீதத்திற்கு சென்றிருந்தான்.

முதலில் எவ்வளவோ எடுத்துச் சொல்லிய கனகராஜும், ஒரு அளவிற்கு மேல் அவனை வற்புறுத்தவில்லை.

ஒழுக்கத்தில் அவன் தவறாமல் இருப்பதே அவருக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.

தந்தையின் கண்டிப்பு அவர் வீட்டில் இருக்கும்போது இருந்தாலும், தாயின் அரவணைப்பிலும், அவர் கொடுக்கும் செல்லத்திலும் பயமறியாது வளர்ந்திருந்தான்.

பள்ளிச்சீருடையில் அரும்பிய மீசையுடனும், ஸ்டைலாக கலைந்த தலையுடனும் சைக்கிளை அழுத்திக்கொண்டு இருவரும் செல்ல, “மச்சி, இன்னிக்கு புது அட்மிசன் எல்லாம் வரும்டா” என்ற கவின்,

“கடவுளே ஒரு அழகான பொண்ணு வரணும். அதுவும் மேம் என் பக்கத்துல உக்கார வைக்கணும்” சின்ஸியராக கவின் கடவுளிடம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க,

“நானும் அதேதான் நினைக்கறேன். அதுக்குள்ள நடுவுல இந்த இன்சார்ஜ் நாதாரி வந்து வேலையைப் பாத்து, பிரிச்சு உக்கார வைக்காம இருந்தான்னா சரி” ரிஷ்வந்த் தான் யோசித்ததைச் சொல்ல, இருவரும் உள்ளுக்குள் வேண்டியபடியே பள்ளிக்கு வந்து சேர்ந்தனர்.

கிட்டத்தட்ட இரண்டுமாத விடுமுறைக்குப் பிறகு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு வந்த இருவருக்கும் மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது.

ஆர்ட்ஸ் க்ரூப் எடுத்திருந்தவர்கள் தங்களது வகுப்பைக் கண்டுபிடித்துச் செல்ல, அங்கு கூடியிருந்த நண்பர்கள், நண்பிகளைக் கண்டவர்கள் ஓடிச்சென்று, ஒருவருக்கொருவர் நீண்ட நாட்களுக்குப்பின் பார்த்த மகிழ்வை வெளிப்படுத்த, அந்த வகுப்பறையே அவர்களின் அலப்பறையில் எதிரொழித்தது.

“வாட்ஸ் திஸ்? இஸ் திஸ் எ க்ளாஸ் ரூம் ஆர் ஃபிஷ் மார்க்கெட்?” அவ்வகுப்பின் இன்சார்ஜ் குமார் வந்து சத்தம்போட, கிடைத்த இடத்தில் திடுதிடுவென அமர்ந்தார்கள் அனைத்து மாணவர்களும்.

“இந்த டயலாக் மட்டும் மாத்தவேமாட்டான் இவன்” ரிஷ்வந்த் வாய்க்குள் முணுமுணுக்க,

“டேய், என்னடா சத்தம்?” அவர் அங்கிருந்த டஸ்டரை வைத்து டேபிளைத் தட்ட, அமைதியான மாணவர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

கையிலிருந்த லிஸ்ட்டை வைத்து, மாணவர்களை சரி பார்த்தவர் வெளியேறிவிட, மீண்டும் தங்களது விட்ட கதைகளைத் தொடங்கினர் அந்த பதின்வயது வண்ணத்துப் பூச்சிகள்.

அனைவரும் பேச்சில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நேரம் உள்ளே நுழைந்தாள் அவள். பேச்சின் சுவாரஸ்யத்திலும், மும்முரத்திலும் யாரும் அவளை கவனிக்கவில்லை. ஆனால், அவள் ஒவ்வொருவரையும் தன் துறுதுறு விழிகொண்டு கவனித்தாள்.

மெல்ல மெல்ல அமர இடம்தேடி கருவிழிகளை அலயவிட்டபடி வந்தவள், ரிஷ்வந்தின் அருகே இடம் இருப்பதைக் கண்டாள்.

ரிஷ்வந்த் கடைசி வரிசையில்  அமர்ந்திருக்க, அவனுடனும், அவனுக்கு முன்னிருந்த வரிசை முழுவதுமே அவனின் தோழர்கள். அனைவரும் முதுகை வளைத்துத் திருப்பி சுவாரசியமாக கதைத்துக் கொண்டிருந்தனர்.

அவனருகே தயங்கியபடியே சென்றவள், “நேன்னு இக்கட கூர்ச்சுண்டேன்னா?”(நான் இங்க உக்காரட்டா) அவள் தெலுங்கில் கேட்க மொத்த வகுப்பும் அமைதியாகி அவளைப் பார்க்க, அவளோ அனைவரையும் கண்டு சினேகமாக புன்னகைத்தாள்.

“வாட்? என்ன சொன்ன?” ரிஷ்வந்த் சிரிப்பை அடக்கியபடி வினவ,

“நான் இங்க உக்காரட்டா?” நிஹாரிகா சொல்ல,

“இல்ல அதுக்கு முன்னாடி..”

“பர்ஸ்ட் தள்ளி உக்காரு.. அப்புறம் ஆன்சர் சொல்றேன்” தனது பேக்கை வைத்து அவனைத் தள்ளி நகர்த்தி அடாவடியாக அமர்ந்தவள்,

“தெலுங்கு தெரியாதா?” வினவ,

அந்த வரிசையில் இருந்தவர்களும், அதற்கு முன்னால் இருந்த வரிசையில் இருந்தவர்களும், ‘இல்லை’ என்பதுபோல உதடு பிதுக்கினர்.

“ஐம், நிஹாரிகா” புன்னகையுடன் கரம் நீட்டியவளிடம், ஆவலாக கரம் நீட்ட வந்த கவினின் கையை முந்தியடித்து, அவளின் கை பற்றி குலுக்கினான் ரிஷ்வந்த்.

“ரிஷ்வந்த்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன், அடுத்த கேள்வி கேட்கும்முன் முதல் வகுப்பின் ஆசிரியர் வர அனைவரும் அமைதியாகினர்.

அறிமுக வகுப்புத் தொடங்கினாலும் ரிஷ்வந்தின் கண்கள் தன்னிருகில் இருந்த நிஹாரிகவை கவனித்துக் கொண்டிருந்தது.

பள்ளிச்சீருடையில், கூரிய துறுதுறு விழியும், தொட்டால் குத்திவிடுமோ எனும் அளவிற்கு கூரிய நாசியும், செதுக்கிய சிவந்த அதரமும், பளபளவென்று வெண்ணையில் வைத்து எடுத்ததுபோல மின்னிய கன்னமுமாக, தன்னருகில் இருந்தவளின் வதனத்தை(முகம்) தன்னை மறந்து தன் மனதில் படம்பிடிக்க ஆரம்பித்திருந்தான் ரிஷ்வந்த்.

சுண்டினால் கன்றும் நிறத்தோடு போட்டி போட்டுக்கொண்டிருந்தது நீலமும், சிவப்பும் கலந்த அவர்கள் பள்ளிச்சீருடை அவளின் மேனியில்.

கழுத்தில் மெல்லிய தங்கச்சங்கிலி, காதில் தோடு, கையில் பிரான்டட் வாட்சும், இரண்டு விரல்களில் தங்க மோதிரங்கள் என்றிருந்தவளைக் கண்டவனிற்கு புரிந்தது ஆள் பெரிய இடம் என்பது.

‘அப்புறம் எப்படி நம்ம ஸ்கூல்ல?’ என்று நினைத்தான்.

அவர்கள் படிக்கும் பள்ளியில் அனைவரும் நடுத்தர வர்க்கத்தினரே. நிஹாரிகாவை பார்வையாலேயே கணக்கிட்டவன், ‘சென்னைல இருக்க பெரிய ஸ்கூல்ல சேர்ற அளவுக்கு பெரிய ஆள் மாதிரியிருக்கா.. ஆனா’ தீவிர யோசனையில் ஆழ்ந்தான்.

அவளின் அழகிய செழிப்பான வழவழ கன்னங்கள் வேறு அவனை ஈர்த்துக் கொண்டிருக்க, அவ்வப்போது அவனின் பார்வை அதன்மேல் படிந்து மீண்டுகொண்டிருந்தது.

காலை அன்னையிடம் தக்காளி சட்னிக்காக சிணுங்கியது ஞாபகம் வர, ‘இதுவும் தக்காளி மாதிரிதான் இருக்கு’ தனக்குள் அவள் கன்னத்தைப் பற்றி  நினைத்தபடி அமர்ந்திருந்தவனின், பெஞ்ச்சின் மேலிருந்த கையை, நிஹாரிகா உலுக்கினாள்.

கனவில் இருந்தவன் வெளியே வந்து அவளைப் பார்க்க, “மேம்” என்று கண்களாலேயே அவள் ஆசிரியரைக் காட்ட,

ஆசிரியரோ கையைக் கட்டியபடி, “என்ன மேன் ட்ரீமா? இன்ட்ரட்யூஸ் யுவர்செல்ப்” என்றிட,

தன் முழு உயரத்திற்கும் எழுந்து நின்றவனை, அவனின் வகுப்புத் தோழிகள் திரும்பி, ஒருமுறை சைட் அடிக்க அது நிஹாரிகாவின் கண்களில் படத் தவறவில்லை.

தன்னருகில் நின்றிருந்தவனை அண்ணார்ந்து பார்த்தவளிற்கு அவனின்
அழுத்தமான செதுக்கிய தாடை நன்றாகவே தெரிந்தது.

பதினாறு வயதிலேயே ஆறடியைத் தொடும் அளவிற்கு வளர்ந்து, ஒருவித செல்ப் கான்பிடன்ஸோடு அவன் நின்ற விதம் அவளிற்கு பிடித்தது.

“ஐம் ரிஷ்வந்த், சென்னை” என்றவன் அமர்ந்துகொள்ள, அடுத்து நிஹாரிகா எழுந்து,

“ஐம், நிஹாரிகா, ஹைதராபாத்” என்றாள்.

வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களின் பார்வையும், நிஹாரிகாவின் பொன்னான அழகை வைத்த கண் வாங்காமல் ரசிப்பதை உணர்ந்தான் ரிஷ்வந்த்.

ஆசிரியர் முன் அனைவரும் நல்ல பிள்ளைகள் போன்று முகத்தை வைத்திருந்தாலும், ஆண் பிள்ளைகளின் மனதை ஆண் பிள்ளையால் கணிக்க முடியாதா?

ஒவ்வொரின் பார்வையும் ஒவ்வொன்றைச் சொல்லியது!

தன்னை அறிமுகம் செய்துகொண்டு அமர்ந்தவள் அவனைக் கண்டு புன்னகைக்க பதிலுக்கு புன்னகைத்தவன்,

அவளருகில் சிறிது நகர்ந்து “நீ உண்மையாவே இந்தக் கலரா இல்ல ஏதாவது மேக்கப்பா?” கிசுகிசுக்க கேட்டவனின் குரலில், வந்த சிரிப்பை அடக்கியவள்,

“ஒரிஜினல்” என்றாள் ஆசிரியரிடமிருந்து பார்வையைத் திருப்பாது கழுத்தை மட்டும் அழகாய் சாய்த்து. 

அந்த ஆசிரியரின் அறிமுக வகுப்பு ஒருவழியாய் முடிய, ஆசிரியர் வெளியேறியபின், ‘உப்ப்ப்ப்ப்’ என்று தங்கள் உதடுகளைக் குவித்து அனைவரும் சலிப்பை வெளியே தள்ளினர்.

“ஹாஸ்டலா?” ரிஷ்வந்த் வினவ,

“இல்ல. இங்க எங்க வீடு இருக்கு. அங்க இருந்து வர்றேன்” என்றாள்.

“நிஹாரிகா, யூ லுக் சோ க்யூட்” இடையில் புகுந்து பால் போட்ட கவினை ரிஷ்வந்த் முறைக்க, நிஹாரிகாவோ சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு தண்ணீர் அருந்துவதுபோல் அமர்ந்துகொண்டாள்.

ஏனோ, மாநிலம் விட்டு மாநிலம் வந்து இருப்பவளிடம், ரிஷ்வந்தினால் மற்ற பெண் பிள்ளைகளிடம் செய்யும் சிறுசிறு வழிசல் பேச்சுக்களை விளையாட்டிற்காக கூட நிஹாரிகாவிடம் காட்ட முடியவில்லை. அதுவும் அவள் புன்னகை அவளின் விழியை எட்டவில்லை, என்பதை உணர்ந்தவன் அவளுடன் தோழமையுடன் இருக்க முடிவெடுத்தான்.

“பிரண்ட்ஸ்?” ரிஷ்வந்த் கரம் நீட்ட,

“டில் வென்?”(Till when?) என்றாள்.

“ம்ம்” யோசிப்பதுபோல பாவனை செய்தவன், “மே பி டில் அவர் லைப் என்ட்ஸ்”(may be till our life ends) யோசிக்காமல் அவன் பதிலளிக்க, அவன் தடுமாறாமல் தெளிவாகச் சொன்ன விதம் நிஹாரிகாவின் இதழை விரியாமல் புன்னகைக்க வைத்தது.

“பிரண்ட்ஸ்” என்று தன் கரத்தை நீட்டினாள் நிஹாரிகா.

இருவரும் அப்போது அறியவில்லை வாழ்நாள் முழுதும் இந்தக் கரத்தை இருவரும் விடப்போவதில்லை என்று.

மதிய உணவு இடைவேளையில், முன் வரிசையில் இருந்தவர்கள் திரும்பி அமர்ந்து, ஆவலாக தங்களது டிபன் பாக்ஸை எடுக்க, நிஹாரிகா எழுந்து செல்வதைப் பார்த்த ரிஷ்வந்த், தன் நண்பர்களோடு எப்போதும்போல உண்ண ஆரம்பித்தான்.

சிறிதுநேரம் கழித்து வந்தமர்ந்தவளிடம், “சாப்பிடலையா?” ரிஷ்வந்த் வினவ,

“பசிக்கல” என்றாள்.

“ஹேய், நிஹாரிகா நீ என்ன கொண்டு வந்திருக்க” ரிஷ்வந்தின் மேல் சாய்ந்து அவனின் புளிசாதத்தை கபளீகரம் செய்தபடி கவின் வினவ,

“பிரியாணி” அவள் சொன்ன நொடி அந்த இரண்டு பெஞ்ச்சில் இருந்தவர்கள் தலையும் விஷமச் சிரிப்புடன் நிஹாரிகாவைக் கண்டது.

“அப்ப எடு நாங்களாவது சாப்பிடறோம்” கவின் கேட்ட விதத்தில் புன்னகைத்தபடியே, கவினிடம் எடுத்து பாக்ஸை நீட்டியவளின் முகத்தையே ரிஷ்வந்த் பார்த்துக் கொண்டிருந்தான்.

இருபுருவத்தை உயர்த்தி, ‘என்ன’ என்பதுபோல கேட்டவளிடம்,

“வீட்டு ஞாபகமா?” அவளை சரியாக கணித்துக் கேட்க, அவனின் கேள்வியில் உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருந்தவள், மேலும் கீழும் தலையை ஆட்டிவிட்டு அமைதியாக அமர்ந்துகொண்டாள்.

அவளது கண்களுக்கு எட்டாத சிரிப்பே அவனுக்கு காட்டிக் கொடுத்தது அவளின் தவிப்பை.

கவினிடம் அவளது பாக்ஸை வாங்க ரிஷ்வந்த் திரும்ப, அதுவரை பிரியாணி இருக்குமா என்ன?

முழுவதையும் காலி செய்திருந்தனர் நண்பர்கள் ஆறு பேரும்.

தனது பாக்ஸிலிருந்த புளிசாதத்தை அவளிடம் நகர்த்தியவன், “நீ சாப்பிடுவையான்னு தெரியல. பட் பசிச்சா சாப்பிடு. எங்கம்மா நல்லாதான் செய்வாங்க” என்றான். அவளின் வசதிக்கு தன் வீட்டு சாப்பாடு சாப்பிடுவாளா என்று எண்ணியே அவன் அப்படிச் சொன்னது.

அவனின் பேச்சு நிஹாரிகாவை அவளறியாமல் ஊடுருவிச் சென்றது. அவள் என்னதான் தன்னை மகிழ்ச்சியாகக் காட்டிக்கொண்டு மாற முயற்சித்தாலும், அவளால் முடியவில்லை.

சிறிதுநேரத்திற்கு முன் எழுந்து வாஷ்ரூமிற்குள் அவள் சென்றதுகூட, தாத்தா பாட்டியின் ஞாபகத்தில் தான். பெற்றோரின் மேலுள்ள கோபமும், தாத்தா பாட்டியின் மேலுள்ள பாசமும், அவளின் நெஞ்சை அழுத்தியது.

அழுகை வற்றி ஹைதராபாத்தில் இருந்து வந்தவளுக்கு அழுகை கூட வரவில்லை. புதியவர்களின் முன் அழவும் பிடிக்கவில்லை. மனம் வெறுத்துப்போனவள் அமைதியாய் வந்து அமர்ந்துகொண்டாள்.

ஏனோ இந்த ஏழுபேரை அவளுக்குப் பிடித்திருந்தது.ஒருவருக்கொருவர் நகைத்துக்கொண்டு, அதேசமயம் விட்டுக்கொடுக்காமல், வெகுளியாய் இருந்தவர்களிடம் ஒன்ற அவள் மனம் ஆசைகொண்டது.

தன்னை அனைவரும் கேலிசெய்த நிலையில் இருந்தவளுக்கு, வந்ததிலிருந்து இவர்களின் கலகலப்பு மனதைக் கட்டி இழுக்கத் தொடங்கியது.

ஒருவருடத்திற்கு மேலாக தனக்குள் நத்தையாகச் சுருங்கிக் கொண்டிருந்தவளுக்கு மனம் வண்ணத்துப் பூச்சிகளோடு வண்ணத்துப் பூச்சியாக ஒன்றிணைந்து சிறகடிக்க ஏங்கியது.

இப்படியே இருந்தால் எந்த பயனும் இல்லை என்று நினைத்தவள், அவர்களுடன் இணைந்து தன் மனதை மாற்றிக்கொள்ள எண்ணினாள்.

“நிஹாரிகா?” அவள் முகத்தின் முன் ரிஷ்வந்த் சொடக்கிட தன்னியல்பு அடைந்தவள்,

“ஒண்ணுமில்ல ரிஷ்வந்த்” என்றவள் அவனின் புளிசாதத்தை எடுத்து உண்ணத் தொடங்கினாள்.

சாப்பிட்டு முடித்து கைகழுவி வந்தவள், “அதென்ன உங்க அம்மா சாப்பாடு நல்லாதான் இருக்கும்னு பொய் சொல்ற” என்றவள்,

“போய் சொல்லு சூப்பரா இருந்துச்சுன்னு” அவனருகில் அமர்ந்து தனது ஒரு பக்க ஜடையை பின்னால் எடுத்துப்போட்டபடி சொன்னவளின் அழகு அவனையும் அறியாமல் அவனை பாதித்தது.

நான்கு மணிக்கு பள்ளி முடிந்து, அனைவரும் தங்களின் பையை எடுத்துக்கொண்டு கிளம்பத் தயாராக,

“ஓகே பை” ஏழு பேருக்கும் பொதுவாக கூறியவள், ரிஷ்வந்திடம் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு நகர்ந்தாள்.

தனது ஹெர்குலஸ் சைக்கிளை வந்து எடுத்த ரிஷ்வந்த், வெளியே வர, நிஹாரிகா விலையுயர்ந்த காரில் ஏறிச் செல்வது தெரிந்தது.

யோசனையுடன் அவள் செல்லும் திசையையே பார்த்தபடி நின்றிருந்தான்.