நீயாக நான், நானாக நீ

eiDYFUS91703-019f5881

 

அத்தியாயம் 9

பூமி தன் வெட்கத்திலிருந்து வெளிவந்து, தயங்கியபடி ஆகாஷைப் பார்க்க, அவனின் சிவந்த முகத்தைக் கண்டவள், ‘நியாயமா பார்த்தா, நான் தான வெட்கப்படனும்… இவன் ஏன் வெட்கப்பட்டுட்டு இருக்கான்… ஒரு வேள உடம்பு மாறுன மாதிரி உணர்வும் மாறிடுச்சோ…’ என்று அவளின் சிந்தனை தாறுமாறாக செல்ல, அதை அடக்கியவள் அவனை அழைத்தாள்.

“ஹே ஸ்கை ஹை என்ன யோசிச்சுட்டு இருக்க…” என்று பூமி கேட்க, அப்போது தான் யோசனையிலிருந்து வெளிவந்தவன், “ஒன்னுமில்ல…” என்றான்.

என்ன தான் அவன் ஒன்றுமில்லை என்று கூறினாலும், அவனின் முகஇறுக்கம் ஏதோ பிரச்சனை என்று காட்டிக் கொடுத்தது.

“ஆஃபிஸ்ல ஏதாவது பிரச்சனையா… யாருக்கிட்டாயாவது சண்டை போட்டியா… இல்ல யாராவது உன்ன திட்டுனாங்களா…” என்று வரிசையாக கேட்டுக் கொண்டிருந்தவளை முறைத்தவன், “நான் என்ன உன்ன மாதிரியா… திட்டுன்னா அழுறதுக்கு…” என்றான் காட்டமாக.

“ப்ச் அப்போ எதுக்கு இப்படி காண்டா இருக்க காண்டாமிருகம் மாதிரி இருக்கன்னு சொல்லித்தொல…”

“அது… நீன்னு நெனச்சு…”

“நெனச்…சு….”

“உன் ட்ரைனர்…”

“ட்ரைனர்ர்ர்ர்…”

“அவன்… என்ன ப்ரொபோஸ் பண்ணிட்டான்…”

அதைக் கேட்டதும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள் பூமி. ஆகாஷ் அவளை முறைத்ததும், கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கியவள், “வெறும் ப்ரொபோசல் தானா…” என்று பூமி இழுக்க, ஆகாஷின் முறைப்பைக் கண்டு, “இல்ல… படத்துல முட்டிக்கால் போட்டு ப்ரொபோஸ் பண்ணுவாங்களே அது மாதிரி ஏதாவது சம்பவம் நடந்துச்சான்னு கேக்க வந்தேன்…” என்று கூறி சமாளித்தாள்.

அவன் கோபமாக எழுந்து செல்ல, பூமி அவனின் கைகளைப் பற்றி அமர வைத்து, “சரி சரி நான் இனிமே பேசல… நீ சொல்லு என்ன நடந்துச்சுன்னு…” என்று கூறினாள். அவனும் ஒரு பெருமூச்சுடன் கூறத் துவங்கினான்.

ஒரு மணி நேரத்திற்கு முன்பு…

வேலை நேரம் முடிய, அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்க, ஆகாஷோ மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தான். தோழிகள் அழைக்க, அவர்களை கேன்டீனில் காத்திருக்குமாறு கூறி மீண்டும் வேலையில் மூழ்கினான்.

“வரவர ஓவரா தான் வேலை பாக்குறா…” என்று சலித்துக் கொண்டே கிளம்பினர் தோழிகள். அடுத்த பத்து நிமிடங்களில், வேலையை முடித்தவன், அப்போது தான், அங்கு அவனைத் தவிர யாருமில்லை என்று உணர்ந்து, வேகவேகமாக கிளம்பினான்.

“மிஸ். பூமிகா..”

முதலில் அதை கவனிக்காமல் நடந்து கொண்டிருந்த ஆகாஷ், இரண்டாவது முறையும் அதே பெயர் காதில் விழுகவும், ‘ச்சே நம்மள தான் யாரோ கூப்பிடுறாங்க…’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவன், திரும்பிப் பார்த்தான்.

அங்கு அந்த ‘சிடுமூஞ்சி’ பயிற்சியாளர், எப்போதும் இல்லாத வகையில் மில்லிமீட்டர் அளவிற்கு, இதழ்களை விரித்தும் விரிக்காமலும் ஒரு சிரிப்பை சிந்தியபடி நின்றிருந்தார்.

புருவம் சுருக்கி யோசித்த ஆகாஷ், அவரை நோக்கி நடந்தான்.

“ஏன் தனியா போறீங்க…?” என்று அவர் ஏதேதோ கேள்விகள் கேட்க, இவனும் ஒன்றும் புரியாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

‘இந்த ஆள் எதுக்கு நம்மகிட்ட கடலை போட்டுட்டு இருக்கான்..’

அவரோ தன் கையிலிருந்த கடிகாரத்தையும் வாயிலையும் அடிக்கடி பார்க்க, வேறு யாருக்கோ காத்திருக்கிறார் என்று நினைத்தான் ஆகாஷ்.

ஆனால் அடுத்த ஐந்தாவது நிமிடம் அவர் செய்த வேலையில், அதிர்ந்து தான் போனான் பாவையவன்(!!!)

சரியாக ஆறு மணிக்கு, அங்கிருந்த அனைத்து விளக்குகளும் அணைந்து, இவர்கள் நிற்கும் பகுதி மட்டும் வெளிச்சத்தால் நிரம்பியது. ஆகாஷ் என்னவென்று யோசிக்கும் முன்பே, ஒற்றைக்காலில் அமர்ந்த அந்த பயிற்சியாளர், “பூமிகா, வில் யூ மேரி மீ…” என்றார்.

ஆகாஷின் நிலை தான் மிகவும் மோசமாக இருந்தது. அவன் நிச்சயம் இதை எதிர்பார்த்திருக்க வில்லை. அந்த அதிர்ச்சியில் அவன் சிலையாக நின்றிருக்க, எதிரில் நின்றவரோ பேச்சை தொடர்ந்தார்.

“இது உனக்கு ஆச்சரியமா தான் இருக்கும்னு எனக்கு தெரியும் பூமி. இன்ஃபேக்ட் நாம சரியா கூட பேசிகிட்டது இல்ல… உண்மைய சொல்லணும்னா ஃபர்ஸ்ட் உன்ன பார்த்தப்போ, ரொம்ப திமிருன்னு கூட நெனச்சுருக்கேன்… ஆனா அன்னைக்கு நான் திட்டுனத்துக்கு அப்பறம் உன் பிஹெவியர்ல தெரிஞ்ச மாற்றம் தான் என்ன உன்ன நோக்கி ஈர்த்துச்சு… நான் சொன்னதுக்காக நீ மாறுனேனா, உனக்கும் என்ன பிடிச்சுருக்குன்னு தான அர்த்தம்…”

‘என்னாது இவனுக்காக மாறுனேனா… லூசாடா நீ… லாஜிக்கே இல்லாம பேசுற… சரியான மாங்கா மடையன் டா நீ…’

“உன்ன மாதிரி பொண்ண நான் பார்த்ததே இல்ல… நீ பொண்ணே இல்ல… தேவதை…” என்று காதல் போதையில் அவர் பிதற்றிக் கொண்டிருந்தார்.

‘அடேய் அத தான் டா நானும் சொல்றேன்… நான் பொண்ணே இல்ல… என்ன விட்டுடு டா…’ என்று மைண்ட் வாய்சிலேயே அவனைத் திட்டிக் கொண்டிருந்தான் ஆகாஷ்.

அடுத்து அவன் பேச ஆரம்பிக்கும் முன், “ஹோல்ட் ஆன்… எனக்கு ஏற்கனவே கல்யாணம் நிச்சயமாகிடுச்சு…” என்று கூறி அவரை ‘ஆஃப்’ செய்தான் ஆகாஷ்.

இவ்வளவு நேரம் ஆகாஷ் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த பூமியோ மீண்டும் சிரித்தாள். “பரவாலையே ரெண்டே நாள்ல அவன கரெக்ட் பண்ணிட்ட… ஹாஹா…” என்று சிரிக்க, அவளின் தலையில் கொட்டினான் ஆகாஷ்.

“ஸ்…ஆஆ.. எருமை…. சரி சொல்லு அப்பறம் என்னாச்சு…”

“ஃபர்ஸ்ட் அவன் நம்பல… அப்பறம் எப்படியோ அவன நம்ப வைக்குறதுக்குள்ள எனக்கு தான் தலையே சுத்திடுச்சு… அப்பறம் என்ன சாரி கேட்டுட்டு சோகமா லுக் விட்டுட்டு போயிட்டான்…”

“ஹாஹா… அப்போ இன்னும் ஒரு வாரம், சார் தேவதாஸ் லுக்கு விட்டுட்டு இருப்பாரு… ஆமா அதான் அவன சமாளிச்சுட்டேல, அப்பறம் ஏன் மூஞ்சிய தூக்கி வச்சுருந்த…” என்று கூறிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட்டாள் பூமி.

ஆனால் ஆகாஷின் மனமோ, ‘ஆமா நான் ஏன் இவ்ளோ கோபப்பட்டேன்…’ என்று சிந்தித்துக் கொண்டிருக்க, அந்த ‘உருப்படியான’ காரியத்தை செய்ய விடாமல், அவனை அழைத்தாள் பூமி.

“ஹே ஸ்கை ஹை, நாளைக்கு ஈவ்னிங் ட்ரீட்… நான்… இல்லல்ல நீ… ப்ச் நான் தான்… ப்ரோமோஷன் வாங்குனதுக்கு ட்ரீட் தரேன்னு சொல்லிருக்கேன் உன் பிரெண்ட்ஸுக்கு… சோ என்ன ட்ரெஸ் போடுறதுன்னு ஹெல்ப் பண்ணு…” என்று பூமி கூறவும், அது என்ன மாதிரி ‘ட்ரீட்’ என்று தெரிந்ததால் ஆகாஷ், “அதுக்கெல்லாம் நீ போக வேணாம்…” என்று கூறினான்.

உடனே ‘சந்திரமுகி’யாக மாறிய பூமி, “ஏன் ஏன் ஏன்… நான் ஏன் போகக் கூடாது…” என்று அடம்பிடிக்க, ‘எத்தன ஏன் போடுறா பாரு… அவசரக்குடுக்க… நான் இங்க ட்ரிங்க் பண்றதுக்கே அந்த குதி குதிப்பா, அங்க போய் நீ என்ன பண்றன்னு பாக்குறேன் டி…’ என்று மனதில் எண்ணியவன், “சரி போயிட்டு வா…” என்று சலித்துக் கொண்டே கூறினான்.

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியவள் (!!!), “என்ன ட்ரெஸ்ஸிங் சென்ஸ் டா உன்னோடது… கப்போர்ட் ஃபுல்லா பிளாக் ஷிர்ட் தான் வச்சுருக்க… பிங்க், எல்லோ, கோல்டன் இப்படி ஏதாவது கலர் வச்சுருக்கியா…” என்று பேசிக்கொண்டே வந்தவள், அவனின் முறைப்பைக் கண்டு, “ஸ்ஸ்ஸ் அது கேர்ள்ஸ் கலர்ல… ஹிஹி… கொஞ்சம் எக்ஸ்சைட் ஆகிட்டேன்…” என்று சமாளித்தாள்.

ஒருவழியாக உடையை தேர்வு செய்து முடித்ததும், பேசிக் கொண்டே இரவு உணவை சமைத்தனர் (சமைத்தான்!!!)

படுக்கச் செல்லும்முன், “ஹே ஸ்கை ஹை… உனக்கு ப்ரோமோஷன்லா வாங்கி குடுத்துருக்கேன்… எனக்கு ட்ரீட் எதுவும் இல்லையா…” என்று உதட்டைப் பிதுக்கி கேட்க, அவளின் பாவனையில் சிரித்தவன், “சரி தரேன்… என்ன வேணும்…” என்று கேட்டான்.

“ஹே உண்மையா தான சொல்ற…” என்று உறுதிபடுத்திக் கொண்டவள், வரிசையாக அவளின் தேவைகளை சொல்ல, மீண்டும் அவளிடம் சிறு வயது பூமியைக் கண்டவன், அவளை சிரிப்புடன் ரசித்துக் கொண்டிருந்தான். இத்தனைக்கும், அவளிருப்பது அவனின் உடலில். ஆனாலும் அவளின் பிரத்யேக பாவனைகளில் மயங்கித் தான் போனான்.

அவனின் சிந்தனை எங்கோ சுற்றிக் கொண்டிருக்க, தான் சொல்வதை கவனிக்காதவனை உலுக்கினாள் பூமி. சட்டென்று அவனின் நினைவுகள் அறுந்து விழ, நிகழ்விற்கு வந்தவன், ‘என்ன பண்ணிட்டு இருக்கேன் நான்… நான் எப்படி…’ என்று குழம்பினான்.

“டேய் கருவாயா… நான் சொன்னது கேட்டுச்சா…” என்று அவனின் காதருகே வந்து கத்தியவளைப் பார்த்து, லேசாக தலையசைத்தான்.

அவனின் தலையசைப்பில் சந்தோஷம் பொங்க, “குட்… இந்த சன்டே ஷாப்பிங் போறோம்… நான் சொன்ன எல்லாத்தையும் வாங்குறோம்…” என்று கூவியபடி அறைக்குள் சென்றாள் பூமி.

‘ஐயோ… என்ன சொன்னான்னு தெரிலயே… மண்டைய வேற ஆட்டி வச்சுருக்கேன்… இந்த டைம் என் பேலன்ஸுக்கு வேட்டு வைக்காம விட மாட்டா போலயே…’ என்று அவன் மனதினுள் புலம்ப, புதிதாக தோன்றிய உணர்வு மனதின் அடியாழத்திற்கு சென்றதோ…

*****

அடுத்த நாள் வேலைக்குச் சொல்லும்போதே உற்சாகத்துடன் கிளம்பினாள் பூமி. அவளின் சந்தோஷத்தைக் கண்டவன், ‘திரும்ப வரும்போது இப்படியே இருந்தா சரி தான்…’ என்று நினைத்துக் கொண்டான்.

பூமியை அழைத்துச் செல்ல அசோக் வந்துவிட, பூமி கிளம்பிக் கொண்டிருந்தாள். ஆகாஷ் அசோக்கிடம், அவன் காதிலிருந்து ரத்தம் வருமளவிற்கு பூமியை பார்த்துக் கொள்ளுமாறு கூறியிருந்தான்.

“எப்பா சாமி… போதும் டா… இதுக்கு பேசாம நீயும் எங்க கூட வந்துடு… அதான் மத்தவங்க யாரும் பூமிய இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லல… உன்ன என் கேர்ள்-பிரெண்டுன்னு சொல்லிக்கிறேன்…” என்று கண்ணடித்துக் கூறினான் அசோக் .

“உன்னயெல்லாம் திருத்தவே முடியாது டா… அவளுக்கு மட்டும் இது தெரிஞ்சுது, மவனே நீ காலி…” என்று ஆகாஷ் மிரட்ட, “டேய் மச்சான், உன் கைய காலா நெனச்சு கேக்குறேன், அவகிட்ட மட்டும் சொல்லிடாத டா…” என்று கெஞ்சிய அசோக், திடீரென்று சிரிக்க, “எதுக்கு டா இப்போ லூசு மாதிரி சிரிச்சுட்டு இருக்க…” என்று ஆகாஷ் வினவினான்.

“உனக்கு நியாபகம் இருக்கா மச்சான்… ஒரு தடவ அந்த குடுமி மண்டையன் கிட்ட திட்டு வாங்குனேன்னு நீ ஃபீல் பண்ணப்போ, நான் கூட ஒரு சொல்யூஷன் குடுத்தேன்ல… மும்பை போய் ஆப்பரேஷன் பண்ணுன்னு… ஆனா அப்படி எதுவும் பண்ணாமயே நீ மாறிருக்க… ஹாஹா…” என்று அசோக் சிரிக்கும்போதே பூமி கிளம்பி வந்துவிட, அந்த பேச்சு அத்துடன் நின்றது.

பூமியை வழியனுப்பும்போதும் ஆயிரம் பத்திரம் சொல்லியே அனுப்பி வைத்தான்.

*****

மாலை ஆறரை மணிக்கே அந்த உயர்ரக பப், வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்தது. பூமி அதைக் கண்டதும், ட்ரீட்டிற்கான இடத்தைப் பற்றி விசாரிக்காத தன் மடத்தனத்தை நொந்து கொண்டாள்.

அடுத்து அவளின் கோபம் அசோக்கை நோக்கித் திரும்ப, அவனோ அங்கு வரும் பெண்களை சைட்டடித்து கொண்டிருந்தான்.

அவனருகே சென்று, “டேய் பூனமூஞ்சி…” என்று அடிக்குரலில் கூப்பிட, “யாரு நம்மள இவ்ளோ மரியாதையா கூப்பிடுறது…” என்று அவனும் திரும்பிப் பார்த்தான்.

அங்கு கோபமாக இருக்கும் பூமியைக் கண்டவன், ‘போச்சு எனக்கு ஏழரை ஸ்டார்ட் ஆகிடுச்சு…’ என்று உள்ளுக்குள் பயந்தாலும், வெளியே காட்டிக்கொள்ளாமல், “ஹிஹி பூமி எதுக்கு கூப்பிட்ட…” என்று இளித்தான்.

“என்ன இது… ட்ரீட்ன்னா ஹோட்டலுக்கு போக மாட்டீங்களா… பப்புக்கு கூட்டிட்டு வந்துருக்கீங்க…”

“ஹோட்டலுக்கா… நாங்க எப்பவும் ட்ரீட்னாலே பப்புக்கு தான் வருவோம்… ஆகாஷ் உன்கிட்ட சொல்லையா…”

‘அச்சோ… அதுக்கு தான் போக வேணாம்னு சொல்லிருப்பானோ…’ என்று பூமி யோசிக்கையிலேயே மற்றவர்கள் அவளை உள்ளே அழைத்துச் சென்றனர்.

பூமியால் அங்கு சுத்தமாக ஒட்டவே முடியவில்லை. ஏனோ அங்கு தான் மட்டும் தனித்திருப்பது போல தோன்றியது. அவளின் சங்கடமான முகத்தைக் கண்ட அசோக், “பூமி வா நான் வேணா உன்ன ட்ராப் பண்றேன்…” என்றான்.

ஆனால் பூமியோ, அவனின் மகிழ்ச்சியை ஏன் கெடுக்க வேண்டும் என்றெண்ணியவளாக மறுத்து விட்டாள்.

அவளின் கையில் மாம்பழ சாறைக் கொடுத்தவன், “இந்தா இத குடி… எப்பவும் ஆகாஷ் இங்க வந்தா ஜூஸ் தான் குடிப்பான்… அதனால யாருக்கும் சந்தேகம் வராது…” என்றான்.

“ஏன் அவன் குடிக்க மாட்டான்…” என்று பூமி வினவ, “அது அவனோட ப்ரின்சிபலாம்… வெளியிடத்துல குடிக்க மாட்டானாம்… ஆனா அதுலயும் ஒரு நல்லது மாதிரி, நாங்க குடிச்சுட்டு மட்டையாகிட்டா அவன் தான் எங்கள பத்திரமா கூட்டிட்டு போவான்…” என்று விளக்கினான் அசோக்.

“அப்போ இன்னிக்கும் குடிச்சுட்டு மட்டையாகப் போற…” என்று ஒரு மாதிரி குரலில் பூமி கேட்கவும், “ச்சே ச்சே… அப்படி மட்டும் பண்ணா, ஆகாஷ் என்ன அடிச்சு தொவைச்சுடுவான்… கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரமா கிளாஸ் எடுத்துருக்கான்… உன்ன பத்திரமா பாத்துக்கணும்னு…” என்று அசோக் கூறியதும், பூமியின் மனதில் ஆகாஷ் மேலும் உயர்ந்தான்.

சற்று நேரத்தில் அங்கு ஆட்டம் களைகட்ட, அசோக்கும் நடுவில் சென்று பாடலுக்கு ஏற்றவாறு ஆடிக் கொண்டிருந்தான்.

அப்போது பூமியின் அருகே வந்த சோனு, “ஹே ஆகாஷ், டோன்ட் யூ ட்ரிங்க்…” என்று மது கோப்பையை நீட்டினான்.

பூமியோ அவள் கையில் இருக்கும் மாம்பழ சாறைக் காட்டி, “ஐ’ம் ஒகே வித் இட்…” என்றாள்.

மற்ற நண்பர்களையும் அவர்களின் ஆட்டத்தையும் பூமி பார்த்துக் கொண்டிருந்தாள், தன்னை ஒருவன் ரசிப்பதைக் கவனிக்காதவளாக…

சிறிது நேரத்திற்கு பின்பே யாரோ அவளை உற்று நோக்குவது போலிருக்க, திரும்பிப் பார்த்தவள், சோனுவின் பார்வையைக் கண்டு திடுக்கிட்டாள்.

சோனுவோ, பூமி அவனைப் பார்த்ததும் மெல்ல அவளின் அருகே அமர்ந்தவன், “ஷால் வீ டேட்…” என்று கூற, பூமிக்கு குடித்துக் கொண்டிருந்த பானம் புரையேறியது.

“வாட்…” என்று அந்த இடமே அதிரும் வண்ணம் கத்தியிருந்தாள் காளையவள்!!!

 

தொடரும்…