VVO-24

VVO-24

வெல்லும் வரை ஓயாதே!

 

வெல்! ஓயாதே – 24

 

ரம்யாவிற்கு நந்தா வேண்டாமென்றதை ஒப்புக் கொள்ளவே இயலவில்லை.

அடுத்தடுத்து தனது பெற்றோரிடம் வந்து பேசிட வலியுறுத்த, அவர்களுக்கு நந்தா திருமணமானவன் என்பது தெரிந்திட, “அந்தப் பொண்ணை அவன் டிவோர்ஸ் பண்ணுவான்னா அவங்கிட்ட பேசலாம். அவனும் அந்தப் பொண்ணு மேல உயிரா இருக்கான்னு சொல்ற.  இது கதைக்காகாது”, என்றிட

இன்னும் வெறியே வந்துவிட்டது ரம்யாவிற்கு.

ரம்யாவின் குறுக்குப்புத்தியைப் பற்றி எதுவும் அறியாதவளோ, ஒரு பெண்ணாய், தனக்கு எத்தனை பொறுப்புகள் என்பதைப் பற்றிய யோசனையில் ஆழ்ந்திருந்தாள்!

மனைவியாய், தாயாய், மகளாய், சகோதரியாய், மருமகளாய், தோழியாய், அலுவலகத்தில் சகபணியாளராய் என ஒருவருக்கே வேறு வேறு உறவுகளின் பெயரில், வெவ்வேறு விதமான பொறுப்புகள். எதையும் தட்டிக் கழித்திட இயலாது.  அத்தனையையும் செவ்வனே செய்யாது போனால், எங்கேனும் இதுபோல எதிர்பாரா தோல்வி நிச்சயம்.

எந்த உறவினது பொறுப்பும் கவனிக்கப்படாமல் போகும்போது தோல்வி வருவது இயல்பே!

உரியவர்கள் பொறுப்புடன் பார்த்திடாத, கவனித்திடாத எந்த பணியுமே சோபையை இழந்துதானிருக்கும் என்பதும் தெளிவாகப் புரிந்திருந்தது.

அப்படித் தான் கவனிக்க மறந்து போனது என்ன?

யோசனை… நீண்டது!

எதனால் ரம்யா இதுபோல நடந்து கொண்டாள்?

நடந்தது என்ன?

நீண்ட நாள்களாக, ஆளுக்கொரு புறமாக அவரவர் பணியென்றிருந்ததால், அதிதீயின் கணவன் நந்தா என்கிற விசயம் உடன் பணிபுரிந்த ரம்யாவிற்கு தெரிந்திருக்கவில்லை.

ஒரே ஊருக்குள் அவ்வாறு இருந்ததும் தனது தவறே!

கருத்து மோதல்கள் இருந்தாலும், மோதல்களுக்கான தீர்வு வரும்வரை பொறுமையிழந்த தனது அவசரத்தனம்தான் இது அத்தனைக்கும் காரணம் என்பதும் தெளிவாகப் புரிந்தது.

நந்தாவின் கருத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில், இருவரும் ஆளுக்கொரு புறமாய் இருந்தபோது, அதிதீயைக் காணும்பொருட்டு வந்து காத்திருந்தவனை எதேச்சையாகச் சந்தித்த என்பதைவிட கண்டிட்ட ரம்யா, தனக்காகவே நந்தா வந்ததாக எண்ணி, ஆசையை வளர்த்துக் கொண்டிருந்திருக்கிறாள்.

அதற்கு எந்த விதத்திலும், நந்தா பொறுப்பேற்க இயலாது என்பதும் புரிந்தேயிருந்தது.

அதற்குமேல் கணவனை தூர தள்ளி நிறுத்தி அதிகம் வதைக்கிறோமோ என்கிற வருத்தமும் அதிதீக்கு வந்தது.

கடந்து போன இரவுகளில் அவன் தன்னை நாடிக் கேட்ட கேள்விகளையும், நந்தா உடன் இல்லா நாட்களில் அசைபோட்டாள்.

“நீ நல்லாயில்லைனு எம்மனசு சொல்லுதுடீ! நீ நல்லாயிருக்க நான் என்ன செய்யணும்னு சொல்லு!  கண்டிப்பா அதைச் செய்ய நான் ட்ரை பண்றேன்டீ!”

“இதுவரை நான் உன்னை நல்லா வச்சிருக்கேன்னு நினைச்சிட்டுருந்தேன்.  ஆனா அப்டியில்லைனு இப்ப எனக்குத் தோணுது.  வாயத்தொறந்து என்ன நினைக்கிறேனு உண்மையச் சொல்லுடீ! அப்பத்தான எதாவது ஒரு முடிவுக்கு வரமுடியும்”

“இத்தனை நாள் என்னால நீ சந்தோசமா இருந்தியா?  இப்பத்தான் என்னால உனக்குப் பிரச்சனையா?  இல்ல முன்ன இருந்தே பிரச்சனையில இருந்தியானு சொல்லுடீ?”

“ஆனா நான் உன்னால நல்லாயிருந்தேன்.  நீ என்னை நல்லா வச்சிருந்த!  உன்னால நான் சந்தோசமா இருந்தேன். உன்னோட இந்த நிலைக்கு நான் எந்த விதத்துல காரணம்னு சத்தியமா எனக்குத் தெரியலைடீ.  என்ன செஞ்சா என்னோட பழைய அதிதீயப் பாப்பேன்னு பிராமிஸா எனக்குத் தெரியலைடீ.  உன்னை நல்லா வச்சிக்க ஆசைப்படறேன். நீ சந்தோசமா இருக்கறதைப் பாக்கணும்னு இருக்கு.  அதுக்கு வழி என்னனு நீயே சொல்லு.  இப்டியே இன்னும் எத்தனை நாளு இருக்கப்போற!

நான் உன்னை ஏமாத்திட்டேனு நினைக்கிறியாடீ? இல்ல எதாவது பாவம் பண்ணிட்டேனு நினைக்கிறியா? சொல்லு”, என பிடிவாதமாகக் கேட்டுக் கேட்டு ஓய்ந்திருந்தான்

ஏமாற்றவில்லை என்பது திண்ணமே! ஆனால் பாவம் செய்து விடுவானோ என்கிற பயம் இருக்கிறதென்னவோ உண்மை!

ஒவ்வொரு இரவும், எந்த உணர்வும் காட்டாமல் வெறித்தபடி இருந்த தன்னை, வலுக்கட்டாயமாக தனது அணைப்பிற்குள் வைத்துக் கொண்டு பிதற்றியவாறு இருந்தவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தற்போது வந்து போனது.

திருச்சி கிளம்பும்முன், “எனக்கு எக்ஸாம்னால திருச்சில டென்டேஸ் ஸ்டே பண்ணப் போறேன்.  வரும்போது என்னோட பழைய அதிதீய நான் பாக்கணும்.  நீ இல்லைனா இந்த நந்தா ஒன்னுமேயில்லைடீ! எதுனாலும் பேசித் தீக்க முடியும்.  இப்டியே மனசுக்குள்ள போட்டு, ஒனக்கு ஒன்னுனா அதை ஏத்துக்கற நிலை எனக்கு எப்பவுமே இல்லைடீ.  ப்ளீஸ். இப்ப நான் கிளம்பறேன். வரும்போது எல்லாமே சரியாகியிருக்கணும்.  என்னை ஏமாத்திறாதடீ!”, என தன்னவளை நெற்றியில் முத்தமிட்டு கிளம்பியிருந்தான்.

தனக்குள் அவனது கேள்விகளை எழுப்பி எழுப்பி அதற்கான பதில் பெறப் போராடினாள்.  தனக்கு முக்கியத்துவம் தருகிறானா?  என்றால், நிச்சயம் தனது பதில் ‘தருகிறான்’ என்பதே.

பின் எதற்காக இந்த வேடம் தரித்து, தானும் துன்பம் கொண்டு, கணவனையும் துன்பத்திற்கு ஆட்படுத்தி, வீட்டில் உள்ளவர்களையும் சங்கடப்படுத்தி என யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள்.

நடந்தது நடந்ததுதான்.  அன்று நந்தா பேசியதை அனைத்தும் கேட்டவளுக்கு, நந்தா மீது என்ன வருத்தமென்றால், யாரோ முகந்தெரியாவள் பிடிக்கிறது என்றோ, வேறு ஏதேனும் தேவையென்று நாடியதும், முகத்தில் அடித்தாற்போல பேசி விரட்டியிருக்க வேண்டும்.  தான் கேட்ட போதே அவ்வளவு நேரம் பேசினார்கள் என்றால், அதற்குமுன்பே எவ்வளவு நேரம், அல்லது அதற்கு முன்பும் சந்தித்திருப்பார்களோ என்கிற எண்ணமே அவளைக் கொன்றது.

அப்போதே  தன்னிடம் சொல்லியிருக்கலாமே! ஏன் என்னை அங்கு அழைத்து பேசச் செய்திருக்கலாமே! என்னைக் கொண்டே இருவருக்கும் பரிச்சயம்! அப்டியென்றால் ஏன் என்னை பொருட்டாகக் கருதவில்லை என்பதே!

ரம்யாவிற்கு தன்னை கருத வேண்டிய அவசியம் இல்லாதபோதும், நந்தா தன்னை ஏன் பொருட்படுத்தவில்லை என்கிற வருத்தம்தான் அவளை வாட்டியது!

தான் அங்கு அன்று வந்திருந்தால், இன்னும் ரம்யாவிற்கு தகுந்த பாடம் புகட்டியிருக்கலாம் என்பதே!

வங்கியில் தனக்கு மூத்த அதிகாரி என்கிற நிலையில், ரம்யா இடும் பணிகளைச் செய்தே ஆகவேண்டிய கட்டாயம்.  ஆனாலும் ரம்யா அவளை விட்டு ஒதுங்கியே இருந்ததும், யோசனையைத் தூண்டியது.

அன்று அப்படி அந்த விசயத்தை போனில் கேட்காது போயிருந்தால், நிச்சயம் இந்த விசயம் தனது கவனத்திற்கு வந்திருக்காதோ என்கிற எதிர்மறை எண்ணம் வேறு சேர்ந்த அலைக்கழித்தது.

இவை மொத்தமும் சேர்ந்து பெண்ணை சோர்வுக்குள்ளாக்கியிருந்தது.

இதில் நமக்காக செய்திட்ட சமூகத்திற்கும் செய்ய வேண்டிய கடமைகள் வேறு பணி எனும் நிலையில் காத்துக் கிடக்கிறதே!

அலைக்கழிப்பு அதிகமாகி, அருகில் இல்லாத நிலையில் மனம் நந்தாவின் அருகாமைக்கு ஏங்கியது.

தன்னை தன் தாயைக் காட்டிலும், அவனுக்குள் வைத்துத் தாங்கிய அந்த அணுகுமுறையால் மனம் தேடியது.

அவனின்றி மனம் வாடியது!

நந்தா தன்னிடம் பேசியது, கேட்டது அனைத்தும் நினைவில் வந்து வந்து மோதியது.

அழைத்தால் பேசிவிடலாம்.  ஆனால் தேர்விற்காக சென்றிருப்பவனை அழைக்க மனம் வரவில்லை.

உண்மையில் இதுவரை தான் சந்தோசமாகவே இருந்திருக்கிறோம் என மனம் உணர்ந்து கொண்டது.  தன்னை நன்றாகவே வைத்திருந்தான்.  சில புரிதல்கள் இல்லாமல் சச்சரவுகள் உண்டானாலும், புரிந்த பிறகு தன்னைத்தான் அவன் சரணடைகிறான் என்கிற உண்மை அவளைச் சுட்டது.

திருமணம் ஆனது முதல் தற்போதுவரை நந்தாவின் ஒவ்வொரு செயலையும் உற்றுக் கவனித்தால், தனது தந்தையைக் காட்டிலும், ப்ரீத்தியின் கணவனைக் காட்டிலும் நல்லவன்தான் என மனம் அடித்துச் சொன்னது.

அன்று ரம்யாவின் செயலுக்கான விளக்கம் அவன் கூறத் தயாராக இருந்தபோதும், ஏனோ அதைப்பற்றிப் பேச அதிதீக்கு விருப்பமில்லை.

ஏனெனில் மிகவும் தெளிவான நந்தாவின் பதிலை மீறி பெண் இனி அவனைத் தேடி வரமாட்டாள்.  அப்டி வந்தால் அதனையும் அவனே சமாளிப்பான்.  தன்னை நிர்க்கதியாய் விடுபவன், தன்னை சந்தோசமாக வைத்துக் கொள்ளவில்லையே என சங்கடப்படமாட்டான்.  தான் நன்றாக இல்லையென எண்ணி தன்னையே வருத்திக் கொள்ள மாட்டான்.  தனது நலனுக்காக தன்னிடமே அதற்கான வழிகேட்டு மன்றாட மாட்டான் என்கிற தெளிவு அதிதீக்கு வந்திருந்தது. 

நந்தாவை எதிர்நோக்கிக் காத்திருக்கத் துவங்கினாள்.

மகனோடு இயல்பாக பொழுதைப் போக்கினாள்.

கௌசல்யாவிற்கும் அதிதீயின் தெளிந்த வழமையான செயல்களைக் கண்டே, மனம் நிம்மதியாக உணர்ந்தார்.

…………….

நந்தாவின் தந்தையும் இடையே வந்து சென்றார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று வந்திருந்ததால், அதிதீயும் அவரோடு உரையாடினாள்.

“உங்களுக்கு முடியுதுன்னா அங்க தனியா இருங்க மாமா.  இல்லைனா எங்களோட வந்திருங்க!”

“அதுக்கென்னம்மா! நான் நல்லாத்தான் இருக்கேன்.  அப்டியொரு குறைய அந்த ஆண்டவன் தரமாட்டான்.  கடைசிவரை நல்லாவே வப்பான்!”, என பதிலைக் கூறி மருமகளின் கேள்விக்கு வாயை அடைத்திருந்தார்.

இடையே ஒருமுறை நந்தா அழைத்து, “தம்பியப் பாக்கணும்னு அம்மா கூட்டிட்டு வரச் சொல்லுது.  முடிஞ்சா போ.  இல்லைனா ராஜேஷ் இல்ல ரமேஷ் வருவான்.  குடுத்தனுப்பு!”, என்றதும், தானே குழந்தையோடு சென்று, செலவிற்கு பணம் கொடுத்துவிட்டுப் பார்த்து வந்தாள்.

கீதாவிற்கான சிகிச்சையின் பலனாக கர்ப்பமாக இருந்தாள்.

சமீபகாலமாக நந்தாவும் வேலைகளை எடுத்துச் செய்யத் துவங்கியிருக்க, அவர்களின் தேவையை ஓரளவிற்கு பூர்த்தி செய்தான்.

ஆனாலும் மருமகளிடம், “இன்னும் என்னத்தைப் போயி படிச்சிக்கிட்டு.  ஒழுங்கா முன்ன மாதிரி வேலை பாக்காம!”, என்றவரிடம் எதையும் எடுத்துக்கூறினால் புரிந்து கொள்வர் என உண்மை நிலையைக் கூற, “அப்டியெல்லாமா கேப்பாக!  எங்க ஊருல மேஸ்திரினு யாரும் படிக்க பள்ளிக்கூடம் பக்கம்கூட போயிருக்க மாட்டாங்க! ஆனா அவங்கதான எல்லாவீடும் கட்டுறானுவ! அதுக்காகப்போயி அந்த வேலைய விட்டுட்டுப் போயி காசக் கரியாக்கிப் படிக்கிறானாக்கும்”, என்றிருந்தார்.

இவரிடம் தான் பதில்கூறியதே மடத்தனம் என உணர்ந்தவள், அத்தோடு கிளம்பியிருந்தாள்.

……………..

வருடக் கணக்கில் கணவனைப் பிரிந்திருந்ததைப்போல இருந்தது அதிதீக்கு.

தேர்வு முடிந்து வந்தவனுக்கு, இங்கு பிறரது மேற்பார்வையில் விட்டுச் சென்ற பணிகள் மலைபோல் இருக்க, இரண்டு மணிக்கு வந்து மகனைப் பார்த்துவிட்டுக் கிளம்பியவன், அத்தனையையும் என்னவென்று பார்த்து வீடு வரவே இரவு பதினோரு மணிக்கு மேலாகியிருந்தது.

அதுவரையிலும் உறங்காமல் விழித்திருந்தவளிடம் பேசக்கூடிய நிலையில் இல்லை நந்தா.

அசதியில் வந்தவன், வெளியில் உண்டுவிட்டதாகக் கூறி படுக்கைக்குச் சென்றுவிட்டான்.

அதிதீ பாலை எடுத்து வருவதற்குள் உறங்கியிருந்தான்.

இது அதிக வேலைப்பளுவின்போது வழமையாக நடப்பதுதான். என்றாலும் அதனை ஏமாற்றமாகவே எண்ணினாள்.

படுத்தவளுக்கு உறக்கமே அணுகவில்லை.

விடியல்வரை படுப்பதும், எழுவதுமாக உறக்கத்தைத் துறந்திருந்தாள்.

கடந்திருந்த பத்து நாட்களாகவே காலையில் ஐந்து மணிக்கு எழுந்த பழக்கத்தில் விழிப்பு வந்திட, நடப்பிற்கு வந்திருந்தான்.

சென்றபோது மனைவி இருந்த நிலை நினைவில் வந்திட, தற்போது அவளாகவே தன்னோடு நெருங்கிப் படுத்திருந்த தோரணையே, எல்லாம் சரியாகிவிட்டது எனும் செய்தியைக் கூறாது கூறிட,

 

வாழும் வரை நிழல் என
உடன் நான் வருவேனே…
ஏழ்பிறப்பும் உயிர் துணை
உனை நான் பிரியேனே….

எனும் எண்ண தோன்றிட, தைரியமாகவே தன்னோடு சேர்த்து பெண்ணை அணைத்துக் கொண்டான்.

 

கணவனது பாராமுகம் தந்த அயர்வில், அதுவரை உறங்காது காத்திருந்தவள்,

 

திசையறியாது நானே

இங்கு தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீடு தானே எனும் தன் மனநிலையை, அவனது மார்போடு ஒன்றி, அவனோடு ஐக்கியமாகி நிரூபித்தாள்.

 

இழந்தது எதுவென்று அறியாமலே

இனிமை தொலைத்திருந்தவள்

இழந்ததை மீட்டதுபோல தன்னவனின்

இழையோடிய காதல் சாகரத்தில்

இனிமையாக உணர்ந்தாள்!

இழையோடிக் கிடந்தாள்!

இதழ் பரவசத்தோடு!

 

புரிதலும், புணர்தலும், வாழ்வில்

புதுப்புது வழிகாட்டும்!

ஊடலும், கூடலும், தாம்பத்ய

உறவிற்கு மெருகூட்டும்!

உல்லாசம் காட்டிடும்!

 

காதலும், காமமும், ஆழ்மன

கள்ளத்தனத்தை வேரறுக்கும்!

கலவியும், குழவியும், மனச்சங்கடத்தில்

பிரிந்தவர்களை பந்தமாக்கும்!

பிரிவுத் துயர் போக்கும்!

 

அடுத்து எபிலாக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!