நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 13

eiPONP961496-0a1afef1

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 13

கிருஷ்ணா மற்றும் அனுராதாவின் பெற்றோர் தென்காசியை வந்து சேர்ந்திருந்த நேரம் நள்ளிரவைத் தாண்டியிருக்க, அந்த நேரத்தில் தன் வீட்டிற்கு செல்வதா? அல்லது அனுராதாவின் வீட்டிற்கு செல்வதா? என்று சிறிது தடுமாறியவன் அனுராதா எப்படியும் தனது வீட்டில் இருக்கமாட்டாள் என்கிற நம்பிக்கையில் முதலில் அவளது வீட்டைச் சென்று பார்க்கலாம் என்ற முடிவோடு அவளது வீட்டை நோக்கி புறப்பட்டுச் சென்றான்.

வீட்டின் வாயிலில் காரை நிறுத்திவிட்டு அந்த வீட்டின் கதவைத் தட்ட அவன் கையை வைக்கப் போன தருணம் முன்னரே அவன் வந்திருப்பதை அறிந்தது போல அந்த வீட்டின் கதவும் திறக்கப்பட, ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி நின்றவன் பின்னர் சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டான்.

“கிருஷ்ணா! நீ எப்படி இங்கே? அதுவும் இந்த நேரத்தில்?” சிறு குழப்பத்துடனும், ஆச்சரியத்துடனும் அவனைப் பார்த்து வினவிய அனுராதா அவனது பின்னால் எட்டிப் பார்க்க, அங்கே நின்று கொண்டிருந்த தன் பெற்றோரைப் பார்த்து அவளுக்கு சப்தநாடிகளும் உறைந்து போனது.

“அம்மா! அப்பா!” தன் பெற்றோரை அங்கே, அந்த சந்தர்ப்பத்தில் பார்த்தது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றால் அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்த ராமச்சந்திரனைப் பார்த்து அவளுக்கு பேரதிர்ச்சியே உருவானது எனலாம்.

“என்ன ராதா? ரொம்ப நாளைக்கு அப்புறம் எல்லோரையும் பார்த்தது அதிர்ச்சியாக இருக்கு போல, சரி, வாங்க, உள்ளே போய் பேசலாம்” என்றவாறே அனுராதாவின் தோளில் தன் கையைப் போட்டுக் கொண்டவன் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டபடியே வீட்டினுள் அழைத்துக் கொண்டு செல்ல, அவளுக்குத்தான் அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை.

அவள் கிருஷ்ணாவை அந்த நேரத்தில் எதிர்பார்த்தே இருக்கவில்லை, வெளியே ஏதோ வாகனம் வந்து நிற்பது போல சத்தம் கேட்கவும் என்னவாக இருக்கும் என்று பார்க்க கதவைத் திறந்தவள்தான் இப்போது பெரும் தர்மசங்கடமான நிலைக்குள் சிக்கியிருந்தாள்.

அதிலும் கிருஷ்ணாவின் அன்னை வள்ளி வேறு அதே வீட்டில் இருக்கிறார் என்கிற விடயம் அவனுக்குத் தெரிந்து விட்டால் என்ன செய்வது என்ற கடும் சிந்தனையுடன் அவனது தொடுகையைக் கூட உணர முடியாதவளாக நடந்து சென்றவள் சிறிது நேரம் கழித்தே அவனது கை தன்னை அணைத்திருப்பதைப் பார்த்து விட்டு கோபம் பொங்க அவனைத் தன்னை விட்டும் தள்ளி விட்டிருந்தாள்.

“ஹேய், ராதாம்மா. என்ன பண்ணுற? நான் உன்னோட கிருஷ்ணாடா. ஒருவேளை தூக்கக் கலக்கத்தில் இருக்கியா என்ன?” அனுராதாவின் முகத்தை தன் கைகளில் ஏந்திக் கொண்டு அவளது கன்னத்தில் தட்டியவன்,

“அதோ பாரு, நான் யாரை என் கூட அழைச்சுட்டு வந்திருக்கேன்னு” எனவும்,

அவனை விசித்திரமாக பார்த்துக் கொண்டு நின்றவள், “நீ என்ன தண்ணி அடிச்சுருக்கியா?” என்று கேட்க, கிருஷ்ணா அதிர்ச்சியாகி நிற்பது போல தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு அவளைப் பாவமாக நிமிர்ந்து பார்த்தான்.

“என்னைப் பார்த்து என்ன ராதாம்மா இப்படி கேட்டுட்ட? உன்னைப் பார்க்கணும்னு எவ்வளவு ஆசையாக ஓடி வந்தேன், ஆனா நீ இப்படி பண்ணுற? இதெல்லாம் ரொம்ப தப்பும்மா”

“கிருஷ்ணா, போதும். ரொம்ப நடிக்க வேணாம். இப்போ என்ன எங்க அம்மா, அப்பா உயிரோடுதான் இருக்காங்கன்னு உனக்கு உறுதியாக தெரிஞ்சுடுச்சு, அவ்வளவுதானே? இப்போ அதற்காக என்ன பண்ணப்போற? என்னைத் திட்டப் போறியா? இல்லை, என் மேலே கோபப்பட்டு கோவிச்சுட்டு போகப் போறியா? நீ என்ன வேணும்னாலும் பண்ணு, எனக்கு அதைப்பற்றிக் கவலையே இல்லை”

“ஐயோ, ராதாம்மா! உன்னைப் பார்த்தால் எனக்கு ரொம்ப சிரிப்பு சிரிப்பாக இருக்கு, நீ இன்னும் வளரவே இல்லை ராதாம்மா, காலேஜில் பார்த்த போதிருந்த அதே குழந்தை தனம் இன்னும் மாறவே இல்லை. நீ எப்போதும் ரொம்ப ரொம்ப தப்பாக என்னைப் பற்றி முடிவெடுக்குற, நான் ஏன் ராதா உன் மேலே கோபப்படணும்? நீதான் எந்த தப்பும் பண்ணலயே” என்றவாறே கிருஷ்ணா அவளது அன்னை தேவி, தந்தை ராஜலிங்கம் மற்றும் ராமச்சந்திரனை அங்கிருந்த நாற்காலியில் அமரச் செய்ய,

அவனது நடவடிக்கைகளைப் பார்த்து வெகுவாக குழப்பம் கொண்ட அனுராதா, “நான் உன் கிட்ட இவ்வளவு பெரிய விடயத்தை மறைத்தேன்னு உனக்கு என் மேலே கொஞ்சம் கூட கோபமே வரலையா?” என்று வினவ, அவளை முகம் நிறைந்த புன்னகையுடன் நிமிர்ந்து பார்த்தவன் மறுப்பாக தலையசைக்க, அனுராதா மட்டுமின்றி அங்கிருந்த மற்றைய மூவரும் கூட அவனை விசித்திரமாக பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

ஊட்டியில் இருந்து புறப்பட்டு வரும் போது அவனிருந்த மனநிலையைப் பார்த்து தென்காசி வந்ததும் அவன் அனுராதா மீது அளவில்லாமல் கோபப்படுவான் என்று அவர்கள் எல்லோரும் நினைத்திருக்க, அவர்கள் எல்லோரது நினைப்பிற்கும் மாறாக அவன் அவளிடம் நடந்த கொண்ட விதம் அவர்கள் அனைவரையும் வெகுவாக குழப்பத்தில் ஆழ்த்தியது.

“உண்மையை சொல்லப் போனால் கொஞ்சம் கோபம் வந்தது என்னவோ உண்மைதான், ஆனா அது நீ இந்த விடயத்தை எல்லாம் ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலேன்னு கோபம்தானே தவிர மற்றபடி உன் மேல் எந்த கோபமும் இல்லை. ஒருவேளை ஆரம்பித்திலேயே நீ இதை எல்லாம் என்கிட்ட சொல்லியிருந்தால் நான் உனக்கு ஆதரவாக இருந்திருப்பேன், ஆனாலும் பரவாயில்லை இப்போதும் நான் உனக்கு ஆதரவாகத்தான் இருக்கேன், இனியும் ஆதரவாகத்தான் இருப்பேன். புரிஞ்சுதா ராதா மேடம்?” என்றவாறே கிருஷ்ணா அவளது கன்னத்தைப் பிடித்து ஆட்ட,

சிறு கோபத்துடன் அவனது கையை தட்டி விட்டவள், “போதும், உங்க நடிப்பைப் பார்த்து எனக்கு சளிச்சுப் போயிடுச்சு, அதோடு எதுவாக இருந்தாலும் தள்ளி நின்று பேசுங்க” என்றவாறே அவனை விட்டு விலகி தன் பெற்றோரின் முன்னால் சென்று மண்டியிட்டு அமர்ந்து கொண்டாள்.

“அம்மா, அப்பா, ராமுப்பா. நீங்க மூணு பேரும் என்மேல ரொம்ப ரொம்ப கோபமாக இருப்பீங்கன்னு எனக்குத் தெரியும், தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க, நான் உங்ககிட்ட இருந்து இதையெல்லாம் மறைத்து வைக்கணும்னு நினைக்கல, இப்போதைக்கு சொல்ல வேண்டாம்னு நினைத்தேன், அவ்வளவுதான். மற்றபடி உங்க யாரையும் நான் ஏமாற்ற நினைக்கல” என்றவாறே அனுராதா தன் அன்னையின் கையைப் பிடித்துக் கொள்ள,

அவளது கையை தன் கையை விட்டும் மெல்ல விலக்கி விட்டவர், “நீ இப்போ செய்திருக்கும் காரியத்தைப் பார்த்து நாங்க எல்லோரும் உன்னைப் பாராட்டணும்னு நீ நினைக்கிறியா அனுராதா?” என்று வினவ, அவளோ தன் அன்னையை சங்கடத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.

“நான் ஒத்துக்கிறேன் வள்ளி பண்ணது தப்புதான், அவ தப்பான வேலைதான் பண்ணியிருக்கா, ஆனா நீ மட்டும் என்ன பண்ணியிருக்க அனுராதா? அவ நேரடியாக எங்களைத் தாக்குனா, நீ மறைமுகமாக அவளைத் தாக்குற, அவ்வளவுதானே வித்தியாசம்? உங்க இரண்டு பேரோட மனசிலேயும் வெறுப்பு மட்டும்தானே இருக்கு, அப்படியிருக்கும் போது நீ அவளைத் தப்புன்னு சொல்லவோ, அவ உன்னைத் தப்புன்னு சொல்லவோ எந்தவொரு அவசியமும் இல்லை”

“அம்மா! நீயாம்மா இப்படி எல்லாம் பேசுற? அந்த கிருஷ்ணாவோட அம்மாவும், நானும் ஒண்ணுன்னு சொல்ல வர்றியாம்மா? அவங்க பண்ணது எவ்வளவு பெரிய பாவம், அவங்களைப் போய் என்கூட ஒப்பிட்டுப் பேசுற. நீ யோசிச்சுத்தான் பேசுறியாம்மா?”

“நான் நல்லா யோசிச்சுத்தான் பேசுறேன் அனுராதா, அவ பண்ணது தப்புன்னா அதற்கு தண்டனை வாங்கிக் கொடுக்க பல வழிகள் இருக்கு, ஆனா உனக்கு இந்த ஒரு வழிதான் கிடைத்ததா? இதற்கு ஆமான்னு நீ பதில் சொன்னால் அதை நம்ப நான் ஒண்ணும் சின்னக்குழந்தை கிடையாது. நீ எதற்காக இப்படி ஒரு வேலையைப் பண்ணேன்னு எனக்கு நல்லாவே தெரியும்”

“நீ என்ன யோசிச்சாலும் சரிம்மா, நான் இதையெல்லாம் பண்ணது உனக்கும், அப்பாவுக்காகவும் தான், வேறு எதற்காகவும் இல்லை” என்றவாறே சிறிது கோபத்துடன் எழுந்து நின்ற அனுராதா அங்கிருந்து நகர்ந்து செல்லப் போக,

அவசரமாக அவளது கைகளை எட்டிப் பிடித்துக் கொண்ட தேவி, “நீ என்கிட்டயே பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டியா அனுராதா? உன் அம்மாவோட கண்ணைப் பார்த்து சொல்லு, எங்களுக்காக மட்டும்தான் இதெல்லாம் நீ பண்ணியா?” என்று வினவ, அவளோ அவரை நேர் கொண்டு பார்க்கமுடியாமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு ஆமோதிப்பாக தலையசைத்தாள்.

“சரி, நீ உண்மையை சொல்ல மாட்ட, பரவாயில்லை. நீ உண்மையை சொல்லலேன்னா என்ன, நான் கிருஷ்ணா கிட்ட பேசிக்கிறேன்” என்று விட்டு அனுராதாவைக் கடந்து சென்ற தேவி கிருஷ்ணாவின் முன்னால் சென்று நிற்க,

வேகமாக ஓடி வந்து அவர்கள் இருவருக்கும் நடுவில் நின்று கொண்டவள், “அம்மா! நான் உன் பொண்ணு. அது உனக்கு ஞாபகம் இருக்கா, இல்லையா? கண்டவங்ககிட்ட எல்லாம் உனக்கு எதற்கு தேவையில்லாத பேச்சு, நீ முதல்ல அந்தப்பக்கம் வாம்மா” என்றவாறே அவரது கையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல, அனுராதாவின் ‘கண்டவங்க’ என்ற அழைப்பில் கிருஷ்ணாவின் வெகுவாக வாடிப் போனது.

“ராதா, என் கையை விடு. எதற்காக இப்படி தேவையில்லாமல் கிருஷ்ணா மேலே கோபப்படுற? அவன் மேலே எந்த தப்பும் இல்லைன்னு தெரிஞ்சும் நீ அவனை எவ்வளவோ தொந்தரவு பண்ணியிருக்க, அப்படியிருந்தும் அவன் உனக்காக யோசித்து, உன்னையே நினைச்சு உன் முன்னாடி வந்து நின்னா, இப்போ கூட அவனைத் திட்ட உனக்கு எப்படி மனசு வந்தது? நீ அவனை ஏமாற்ற நினைச்சுத்தான் ஊட்டி அனுப்ப திட்டம் போட்ட, ஆனா அந்த கடவுளோட விளையாட்டு அவனை கஷ்டப்படுத்தாமல் அவனுக்கு உண்மையைக் காட்டிடுச்சு, அப்படியிருந்தும் அவன் உன்னைப் பார்த்து சின்னதாக கூட முகம் சுளிக்கல, ஆனா நீ? உன்னை என் பொண்ணுன்னு சொல்லவே எனக்குப் பிடிக்கல அனுராதா”

“ஓஹ்! இப்போ உன் பொண்ணை விட இவன்தான் ரொம்ப நல்லவனாக உனக்குத் தெரியுறானா? அப்போ இத்தனை நாளாக உங்களுக்காக இவன் கூடவும், இவன் குடும்பத்து ஆளுங்க கூடவும் நான் கஷ்டப்பட்டது எல்லாம் உனக்கு ஒரு கணக்கே இல்லாமல் போயிடுச்சு இல்லையா? ஒரு வருஷமா நீங்க இரண்டு பேரும் உயிரோடுதான் இருக்கீங்களா, இல்லையான்னு தெரியாமல் காட்டிலேயும், மேட்டிலேயும் அலைந்து திரிந்து உங்க இரண்டு பேரையும் கண்டுபிடிச்சு, உங்க பாதுகாப்புக்காக தினமும் யோசித்து, யோசித்து ஒவ்வொரு விஷயமாக பார்த்து பார்த்து செய்து வந்த உங்க பொண்ணு இன்னைக்கு உங்களுக்குத் தப்பானவளாகிட்டா. ஆனா உங்களை உயிரோடு இருக்கவே கூடாதுன்னு கொல்ல நினைத்த அந்த மகாதேவி வள்ளியோட பையன் தியாகி ஆகிட்டான், அப்படித்தானே?” அனுராதா தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தன் கைகளை அருகிலிருந்த சுவற்றில் ஓங்கிக் குத்தியபடியே தன் மறு கையினால் தனது அன்னையின் முகத்தை அழுத்திப் பிடிக்கப் போக,

வேகமாக அவளைத் தன் புறமாக இழுத்துக் கொண்ட கிருஷ்ணா, “ராதா, நீ என்ன பண்ணுற? அவங்க உன்னோட அம்மா” என்று கூறவும்,

அவனைத் தன்னை விட்டும் தள்ளி விட்டவள், “இது எனக்கும், என் அம்மாவுக்கும் இடையில் நடக்கும் விஷயம், இதில் தேவையில்லாமல் நீ தலையிடக்கூடாது” அவனைப் பார்த்து எச்சரிப்பது போல கூறி விட்டு, மீண்டும் தன் அன்னையின் முன்னால் சென்று நின்று கொண்டாள்.

“அம்மா, ஐ யம் சாரி, நான் உன்னைக் காயப்படுத்தணும்னு இப்படி பண்ணல. ஏதோ ஒரு கோபத்தில், தயவுசெய்து என்னை மன்னிச்சிடு ம்மா” தேவியின் முகத்தை துடைத்து விட்டபடியே அவரை அமரச் செய்த அனுராதா அவரின் முன்னால் முழங்காலிட்டு அமர்ந்து கொண்டு,

“எனக்கு நீங்க எல்லோரும் தானேம்மா உலகம்? உங்க யாருக்காவது ஏதாவது நடந்தால் நான் எப்படி தாங்கிப்பேன் சொல்லுங்க, அன்னைக்கு அந்த ஆக்சிடென்டில் உங்களுக்கு எதுவும் ஆகல, நான் அதை ஒத்துக்கிறேன், ஆனா ஏதாவது நடந்திருந்தால்? அப்புறம் எப்படி இவங்களுக்கு அவங்க பண்ண தப்பை புரிய வைக்கிறதும்மா? இத்தனை நாளாக அவங்க பண்ணது தப்பே இல்லைன்னு நினைச்சுட்டு இருந்தவங்க இப்போ என்னைப் பார்த்த அப்புறம்தான் அவங்க பண்ண தப்பைப் புரிந்து அதற்கான தண்டனையை ஏத்துக்க தயாராக இருக்காங்க. இதற்கு எல்லாம் யாரு காரணம்? நான்தானே? நான் மட்டும் இவங்க முன்னாடி மறுபடியும் வரலேன்னா இவங்க எப்படி எல்லாம் மாறியிருப்பாங்களா? சத்தியமா இல்லை” தனது இத்தனை நாள் நடவடிக்கைகளுக்கான விளக்கத்தை மெல்ல மெல்ல சொல்லி முடிக்க,

அவளது முகத்தை மெல்ல நிமிர்த்தியவர், “சரி, நீ சொல்லுற மாதிரியே நானும் சொல்லுறேன், அதற்கு முன்னாடி நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லு. இதையெல்லாம் பண்ணது கிருஷ்ணாவா? இல்லை, அவனோட அம்மாவா?” என்று வினவ, அவளோ அவரது கேள்விக்கான பதிலைச் சொல்ல விருப்பமற்றவள் போல தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“ராதா, நான் உன்கிட்டதான் கேட்கிறேன், தப்பு பண்ணது கிருஷ்ணாவா? அவனோட அம்மாவா? சொல்லு” தேவி இம்முறை சிறு அதட்டலுடன் அனுராதாவைப் பார்த்து வினவ,

தயங்கியபடியே அவரைத் திரும்பிப் பார்த்தவள், “கிருஷ்ணாவோட அம்மா” என்று கூற, அவளைத் தவிர மற்ற அனைவரும் சிறு புன்னகையுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“கரெக்ட், இந்த பதிலைத்தான் நானும் எதிர்பார்த்தேன். அப்போ தப்பு பண்ணது கிருஷ்ணாவோட அம்மான்னா நீ எதற்காக கிருஷ்ணாவைக் கல்யாணம் பண்ணிக்கணும்? உனக்குத்தான் அவங்க யாரையுமே பிடிக்காதே, அப்படியிருக்கும் போது நீ எதற்காக அவங்க கூட மறுபடியும் போய் இருக்கணும்? ஒருவேளை உனக்கு அவங்க பண்ண தப்புக்கு தண்டனை கொடுக்க நினைத்தால் அதைப் பண்ண ஆயிரம் வழி இருக்கு, ஆனா எதற்காக கிருஷ்ணாவைக் கல்யாணம் பண்ணிக்கிறதை நீ ஒரேயொரு வழியாக தெரிவு பண்ண?”

“ஓஹ்! ஐயோ அம்மா! நீ இதைத்தான் அப்போ இருந்து கேட்க வந்தியா? இதைத் தெளிவாகவே கேட்டிருக்கலாமே, அட போம்மா. அவங்க அம்மா எதற்காக நம்ம எல்லோரையும் கொலை பண்ண நினைத்தாங்க? அவங்களோட இந்த சீமந்திரப் புத்திரன் என்னைக் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு தானே இதெல்லாம் பண்ணாங்க? அதுதான் அவங்களுக்கு முதல் அடியே இந்தக் கல்யாணமாக இருக்கணும்னு நான் நினைச்சேன், சிம்பிள்” இயல்பாக தன் தோளைக் குலுக்கியபடி கூறிய அனுராதாவைப் பார்த்து தன் தலையில் அடிக்காத குறையாக அவளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த தேவி,

‘அட மக்குப் பொண்ணே! நீ உன் மனதில் கிருஷ்ணாவை இன்னமும் காதலிச்சுட்டு இருக்க, அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள உனக்குத் தைரியமில்லை. சரி, பரவாயில்லை, கூடிய சீக்கிரம் உன் வாயாலேயே அந்த உண்மையை எல்லோர் முன்னாடியும் சொல்ல வைக்கிறேன்’ என் தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டபடி கிருஷ்ணாவைப் பார்த்து தன் அருகில் வருமாறு சைகை செய்தார்.

“சொல்லுங்க ஆன்ட்டி, நான் ஏதாவது உதவி பண்ணணுமா?” தேவியின் அழைப்பில் அவசரமாக அவரது அருகில் வந்து அமர்ந்து கொண்டவன் அவரது கைகளைப் பிடித்துக் கொள்ள,

சிறு புன்னகையுடன் அவனது தலையைக் கோதி விட்டவர், “ராதாவுக்கு அவ மனதில் என்ன இருக்குன்னு இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை கிருஷ்ணா, அவ ஏன் இப்படி எல்லாம் பண்ணுறான்னு நீ புரிஞ்சிருப்பன்னு நான் நம்புறேன். புரிஞ்சுருப்ப தானே?” தயக்கத்துடன் அவனைப் பார்த்து வினவ,

அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவன், “நீங்க இதற்கு எல்லாம் விளக்கம் சொல்லத் தேவையே இல்லை ஆன்ட்டி, என் ராதாவைப் பற்றி நான் எப்போதும் தப்பாக நினைக்கவே மாட்டேன், ஒரு தடவை அவளைப் புரிந்து கொள்ளாமல் நான் பண்ண தப்பே போதும். அவ எனக்கு எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும் சரி, அவ மேலே நான் வைத்திருக்கும் காதல் மட்டும் மாறவே மாறாது” என்று கூற, தேவி அவனது முகத்தை கண்கள் கலங்க பாசத்தோடு வருடிக் கொடுத்தார்.

‘இவ்வளவு நல்ல மனசு உள்ள பையனை எதற்காக ராதா இவ்வளவு கஷ்டப்படுத்துற?’ தன் மகளைப் பார்த்து கேட்க எண்ணிய கேள்வியை தன் மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டவர் சிறு புன்னகையுடன் அவனைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்க,

தற்செயலாக தன் கைக்கடிகாரத்தை திருப்பிப் பார்த்த கிருஷ்ணா, “ஐயோ! மணி விடியற்காலை ஐந்து ஆகப் போகிறது, இவ்வளவு நேரமாக நீங்க யாரும் தூங்கவும் இல்லையே, அங்கிள், ஆன்ட்டி நீங்க எல்லோரும் முதல்ல போய் ரெஸ்ட் எடுங்க, இனி எதுவாக இருந்தாலும் ஒரு இரண்டு, மூணு நாள் போனதும் பேசிக்கலாம்” என்றபடியே அங்கிருந்து வெளியேறி செல்லப் பார்க்க,

“கிருஷ்ணா, ஒரு நிமிஷம்” என்ற அனுராதாவின் அழைப்பில் சிந்தனை வயப்பட்டவனாக அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“நீ என் அம்மா, அப்பா எல்லோரையும் அவ்வளவு தூரம் இருந்து கூட்டிட்டு வந்திருக்க, அதற்காக ஒரு சின்ன கைம்மாறு செய்யலாம்ன்னு இருக்கேன்” என்றபடியே அழுத்தமான நடையுடன் அவன் முன்னால் வந்து நின்றவள்,

“உன்னோட அம்மாவை மேலே அந்த ரூமில் போட்டு பூட்டி வைத்திருக்கேன், போகும் போது கூடவே அழைச்சுட்டுப் போ” என்றவாறே தன் கையிலிருந்த சாவியை அவன் புறமாக நீட்ட, கிருஷ்ணா மட்டுமின்றி அங்கிருந்த மற்றைய பெரியவர்களும் அவள் சொன்ன விடயத்தைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்…….

Leave a Reply

error: Content is protected !!