நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 14

eiPONP961496-b65d4645

அனுராதாவின் கையிலிருந்த சாவியையும், அவளது முகத்தில் தெரிந்த புன்னகையையும் பார்த்து அதிர்ந்து போய் நின்ற கிருஷ்ணா தன் சுயநினைவை அடைய வெகு நேரம் எடுத்துக் கொண்டான்.

அவள் தன்னை வெளியூருக்கு அனுப்பியதன் பிண்ணனியில் ஏதாவது ஒரு காரணம் இருக்கக்கூடும் என்பது அவனுக்குத் தெரியும், ஆனால் இப்படியான ஒரு சம்பவம் நடக்கக் கூடும் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

தன்னை நேசித்து காதலால் மெய்மறக்கச் செய்த தனது அனுராதா இவள்தானா என்பது போல அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றவன் ஒரு சில நிமிடங்களில் தன்னை சுதாரித்துக் கொண்டு அவளது கையிலிருந்த சாவியை வாங்கிக் கொண்டு அவள் கை காண்பித்த அறையின் புறமாக வேகமாக ஓடிச் சென்றான்.

அவன் அறைக்கதவைத் திறந்த நேரம் முற்றிலும் இருள் சூழ்ந்திருக்க, தட்டுத்தடுமாறி அந்த அறை விளக்குகளை ஒளிரச் செய்தவன் அங்கே ஒரு மூலையில் முடங்கிக் கிடந்த தன் அன்னையைப் பார்த்து சகலமும் மறந்தவனாக, “அம்மா!” என்றவாறே அவர் முன்னால் ஓடிச் சென்று மண்டியிட்டு அமர்ந்து கொண்டான்.

கிருஷ்ணாவின் குரல் கேட்டதும் வெகு சிரமப்பட்டு தன் கண்களைத் திறந்து கொண்டவர் அந்த அரை மயக்க நிலையிலும் தன் மகனைக் கண்டு கொண்ட ஆனந்தத்தில், “கிருஷ்ணா, வந்துட்டியா?” என்றவாறே அவன் மேலேயே மயங்கி சாய,

அவனோ, “அம்மா, கண்ணைத் திறந்து பாருங்க ம்மா. அம்மா, ப்ளீஸ் ம்மா” பதட்டத்துடன் அவரது கன்னத்தில் தட்டியபடியே அவரைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டு படியிறங்கி வந்து ஹாலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் படுக்கச் செய்து விட்டு சிறிது நீரைத் தெளித்து அவரை மயக்கத்திலிருந்து எழச் செய்ய வெகுவாக முயற்சி செய்ய ஆரம்பித்தான்.

என்னதான் தனது அன்னை தவறான காரியம் செய்தவராக இருந்தாலும் அப்படியான ஒரு நிலையில் அவரைப் பார்க்கும் போது அவனால் வெகு சாதாரணமாக அவரை அப்படியே விட்டுவிட முடியவில்லை. தன்னால் இயன்ற மட்டும் முயற்சி செய்து பார்த்தவன் வள்ளி மெல்ல மெல்ல மயக்கத்திலிருந்து எழுவதைப் பார்த்ததும் கண்கள் கலங்க அனுராதாவைத் திரும்பிப் பார்த்தான்.

கிருஷ்ணாவின் கலக்கமான பார்வை தன் மேல் இருப்பதைப் பார்த்ததும் எதையோ சாதித்து விட்ட திருப்தியோடு நிற்பது போல அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவள் தன் அன்னையின் அழைப்பைப் பொருட்படுத்தாமலேயே தன்னைறையை நோக்கிச் சென்று விட, தன் மகளின் நடவடிக்கைகளைப் பார்த்து வெகுவாக கலங்கிப் போன தேவி தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு கிருஷ்ணாவின் அருகில் சென்று அவனது தோளில் தனது கையை வைத்தார்.

தனது தோளில் பட்ட ஸ்பரிசத்தில் அவசர அவசரமாக தனது கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றவன், “ஆன்ட்டி, நீங்களா? நீங்க இன்னும் தூங்கப் போகலயா?” இயல்பாக கேட்பது போல அவரைப் பார்த்து வினவ,

சிறு புன்னகையுடன் அவனது முகத்தை வருடிக் கொடுத்தவர், “உன்னோட கவலை எனக்குப் புரியுது கிருஷ்ணா, இப்போ அதைப்பற்றி பேசி மறுபடியும் உன்னை நான் கஷ்டப்படுத்த விரும்பல. முதல்ல நீ உன் அம்மாவை அழைச்சுட்டு வீட்டுக்குப் போ, மற்ற எல்லா விடயங்களையும் காலையில் பேசிக்கலாம்” என்றவாறே அங்கிருந்து நகர்ந்து செல்லப் போக,

“தேவி!” தடுமாற்றத்துடன் ஒலித்த வள்ளியின் குரலில் சட்டென்று தன் நடையை நிறுத்தி விட்டு திரும்பிப் பார்த்தார்.

“தேவி! நீ உயிரோடு இருக்கியா? உனக்கு எதுவும் ஆகலையா? அப்போ, ராதா அப்படி…” வள்ளி தட்டுத்தடுமாறியபடியே கிருஷ்ணாவின் கையைப் பிடித்து எழுந்து நின்றவாறே தங்கள் முன்னால் நின்று கொண்டிருந்த தேவியை அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டு நிற்க,

அவரைப் பார்த்து முயன்று புன்னைகை செய்தவர், “வள்ளி, நம்ம நினைக்கிறதுதான் எப்போதும் நடக்கணும்னு அவசியம் இல்லை, நமக்கு மேலேயும் ஒருசில விஷயங்கள் இருக்கு. சரி, அதெல்லாம் போகட்டும், நீ பார்க்கவே ரொம்ப பலவீனமாக இருக்க, முதல்ல உன் வீட்டுக்கு போய் ஓய்வெடு, அப்புறம் என் பொண்ணு ஏதோ ஒரு கோபத்தில் இப்படி பண்ணிட்டா அவளைத் தப்பாக எடுத்துக்காதே, நாளாக நாளாக எல்லாம் சரியாகிடும்” என்றவாறே அங்கிருந்து விலகிச் செல்லப் பார்க்க, வள்ளியோ அவரை நகர விடாமல் அவரது கால்கள் இரண்டையும் பிடித்துக் கொண்டு கதறியழ ஆரம்பித்தார்.

“தேவி, என்னை மன்னிச்சுடு, தயவுசெய்து என்னை மன்னிச்சிடு. நான் உனக்கு ரொம்ப பெரிய துரோகம் பண்ணிட்டேன், நான் பண்ணது ரொம்ப பெரிய பாவம், நான் பண்ணது பாவம்ன்னு தெரிஞ்சும் நீ அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் எப்போதும் போல என்கூட சகஜமாக பேசுற, ஆனா நான்? நான் ரொம்ப பெரிய பாவி தேவி, ரொம்ப பெரிய பாவி. அன்னைக்கு நான் உனக்கு அப்படி ஒரு துரோகத்தைப் பண்ண காரணம் ராதா உன்…”

“வேண்டாம் வள்ளி, நீ எதுவும் சொல்ல வேண்டாம். இதுநாள் வரைக்கும் நீ ஏன் அப்படி பண்ணேன்னு ஒரு தடவை கூட நான் யோசித்துப் பார்த்ததில்லை, யோசித்துப் பார்த்ததில்லைன்னு சொல்லுறதை விட யோசிக்க விரும்பல. அது என்ன காரணமாக வேணும்னாலும் இருக்கட்டும், அது எனக்குத் தெரிய வேண்டாம், நீ எதையோ மனதில் நினைத்து அவசரப்பட்டு அப்படி ஒரு காரியத்தைப் பண்ணிட்ட, பரவாயில்லை, போனது போகட்டும். இப்போ அந்தக் காரணத்தை நீ சொல்லி அது எனக்குத் தெரிய வந்ததால், திரும்ப உன்னைப் பார்க்கும் போதெல்லாம் அந்த விஷயம் எனக்குத் திரும்பத் திரும்ப நினைவு வந்துட்டே இருக்கும், அந்த ஒரு இக்கட்டான நிலைமை எனக்கு வேண்டாம். அதனாலதான் சொல்றேன், நடந்த எதைப்பற்றியும் நான் பேச விரும்பல” தன் மனதில் எந்தவொரு கள்ளங்கபடமும் இல்லாமல் தான் நினைத்த விடயத்தை தெளிவாக சொல்லி விட்ட திருப்தியோடு வள்ளியின் கையை ஆதரவாக அழுத்திக் கொடுத்தவர்,

கிருஷ்ணாவின் புறம் திரும்பி, “கிருஷ்ணா, ஏற்கனவே ரொம்ப நேரம் ஆகிடுச்சு, நீ வேற ரொம்ப களைப்பாக தெரியுற, முதல்ல வள்ளியை இங்கேயிருந்து அழைச்சுட்டு போ, அப்புறம் மறுபடியும் ராதா இங்கே வந்தால் தேவையில்லாத பிரச்சினை, நீ முதல்ல கிளம்பு” என்றவாறே அவனது தோளில் தட்டிக் கொடுக்க, அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவன் தன் அன்னையைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றான்.

முற்றிலும் சோர்ந்து போனவர்களாக நடந்து செல்லும் கிருஷ்ணாவையும், வள்ளியையும் பார்த்து பெருமூச்சு விட்டபடியே தனது அறைக்குச் செல்ல எண்ணி திரும்பிய தேவி தன் முன்னால் நின்று கொண்டிருந்த அனுராதாவைப் பார்த்து ஒரு கணம் திடுக்கிட்டுத்தான் போனார்.

“ராதா! நீ இன்னும் தூங்கலயா?” அனுராதாவைப் பார்த்து இயல்பாக புன்னகைத்துக் கொண்டே தேவி வினவ,

அவரைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள், “எனக்குத் தூக்கம் வரலம்மா, கொஞ்ச நேரம் உங்க மடியில் தூங்கவா?” என்று கேட்க, அவளது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தவர் அங்கேயிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு அனுராதாவை தன் மடியில் தூங்கச் செய்தார்.

“அம்மா”

“சொல்லு ராதாம்மா”

“உங்களுக்கு கோபமே வராதாம்மா?”

“எதற்காக கோபப்படணும்?

“என்னம்மா இப்படி கேட்குறீங்க? யாராவது உங்களுக்கு ஏதாவது கெடுதல் பண்ணால் உங்களுக்கு கோபம் வராதா?”

“யாராவது கெடுதல் பண்ணால் அதற்கான தண்டனை அவங்களுக்கு கிடைக்கப் போகுது, இதற்கு நடுவில் நான் எதற்காக கோபப்படணும்?”

“அப்போ யாரு என்ன தப்பு பண்ணாலும் நீங்க அமைதியாகவே கடந்து போயிடுவீங்களா?”

“வேறு என்ன பண்ணணும்?”

“ஐயோ அம்மா! போம்மா, உன்கூட பேசினால் எனக்குப் பைத்தியம்தான் பிடிக்கும்” தேவியின் பேச்சைக் கேட்டு கோபம் கொண்டவளாக அவரது மடியிலிருந்து எழுந்து அமர்ந்து கொண்டவள் தன் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டு அமர்ந்திருக்க,

அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவளது முகத்தை தன் புறமாக திருப்பியவர், “இந்த உலகத்தில் எத்தனையோ விதமான விஷயங்கள் நடக்கும் ராதாம்மா, அது எல்லாவற்றிற்கும் நம்ம பதில் கொடுக்கணும்னு அவசியமில்லை. சில விஷயங்களை எதிர்த்துப் போராட வேண்டிய தேவை ஏற்படும், ஆனால் சில விஷயங்களை கண்டு கொள்ளாமலே போக வேண்டிய நிலைமையும் வரும்.

இப்போ வள்ளி பண்ண விஷயத்தையே பாரு, அவளுக்குள்ளே இருந்த ஏதோ ஒரு தப்பான எண்ணம் அவளை இப்படியான ஒரு காரியத்தை செய்ய வைச்சுடுச்சு, அது அவளோட மனசு சம்பந்தமான விஷயம், அதற்குப் பதிலுக்கு பதில் சொல்லணும்னு எந்தவொரு அவசியமும் நமக்கு இல்லை, அவளோட தப்பை உணர்த்த அவளுக்கு கொடுக்கும் மிகப்பெரிய தண்டனைதான் மன்னிப்பு, அதை நான் எப்போவோ அவளுக்கு கொடுத்துட்டேன், அவ்வளவுதான்” என்றவாறே அவளைப் பார்த்து தன் தோளைக் குலுக்கிக் கொள்ள,

“அம்மா” என்றவாறே அவரைத் தாவி அணைத்துக் கொண்டவள்,

“உங்களுக்கு போய் அப்படி ஒரு கெடுதலை அவங்க பண்ணிட்டாங்களேம்மா” என்றவாறே கவலையுடன் அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“அதெல்லாம் விடு ராதாம்மா, எனக்கு இப்போ யாரு மேலேயும் எந்தக் கோபமும் இல்லை. என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு, அதனால இனிமேல் என் கவனம் எல்லாம் என் பொண்ணோட கல்யாண வாழ்க்கை மேலேதான் இருக்கும், வேறு எதைப்பற்றியும் எனக்கு கவலை இல்லை” என்று விட்டு தேவி அனுராதாவின் கையை வருடிக் கொடுக்க,

சட்டென்று அவரது கையிலிருந்த தன் கையை விலக்கி எடுத்துக் கொண்டவள், “எனக்கு தூக்கம் வருது, நான் தூங்கப் போறேன் ம்மா” என்று விட்டு அவரது முகத்தையும் நிமிர்ந்து பாராமல் வேகமாக படியேறி சென்று விட, தேவி தன் மகளின் மன எண்ணத்தைப் புரிந்து கொண்டது போல முகம் நிறைந்த புன்னகையுடன் அவள் சென்ற வழியைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

“எத்தனை நாளைக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம்ன்னு பார்க்கலாம் ராதாம்மா” அனுராதா சென்ற வழியைப் பார்த்துக் கொண்டே தனது அறைக்குள் தேவி சென்று விட, மறுபுறம் கிருஷ்ணா வள்ளியை அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தான்.

நான்கு, ஐந்து நாட்களாக தன் மனைவியைப் பற்றியும், தன் மகனைப் பற்றியும் எந்தவொரு தகவலும் இல்லாமல் வெகுவாகத் தவித்துப் போயிருந்த மூர்த்தி இருளில் கிடந்த நபருக்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்த வெளிச்சம் போல தங்கள் வீட்டிற்கு திரும்பி வந்திருந்த தன் மனைவி மற்றும் மகனைப் பார்த்து ஆனந்தத்தில் வாயடைத்துப் போய் நின்றார்.

“கிருஷ்ணா! வள்ளி!” தன் மனைவி மற்றும் மகனின் ஒரு சில நாட்கள் பிரிவையே தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்கள் இருவரையும் வாரி அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறியழுதவரது மனமோ அனுராதாவும் இவ்வாறுதானே வேதனை அடைந்திருப்பாள் என்று அவரை எண்ணிப் பார்க்கச் செய்தது.

‘அந்தப் பொண்ணோட கோபத்தின் பிண்ணனியில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது?’ முதன்முதலாக மூர்த்தியின் மனம் அனுராதாவை எண்ணி வருத்தம் கொள்ள முயல, அவரோ தற்காலிகமாக அந்த சிந்தனைக்கு தடை போட்டுக் கொண்டு தன் மனைவி மற்றும் மகனை நோக்கி தன் சிந்தனையை திசை திருப்பிக் கொண்டார்.

“கிருஷ்ணா, நீ எங்கேடா போன? அப்புறம் வள்ளி எங்கே போனா? அவளை நீ எங்கே பார்த்த? வள்ளிக்கு என்ன ஆச்சு? அவ ஏன் எதுவும் பேசமாட்டேங்குறா? உங்க இரண்டு பேருக்கும் என்னதான் ஆச்சு?” மூர்த்தி பதட்டத்துடன் கிருஷ்ணாவைப் பார்த்து வினவ,

“முதல்ல அம்மாவை அவங்க ரூமில் விட்டுட்டு வர்றேன்” என்றவாறே அவரைத் தாண்டிச் சென்றவன், வள்ளியை அவரது அறையில் தூங்கச் செய்து விட்டு முற்றிலும் ஓய்ந்து போனவனாக ஹாலில் அமர்ந்திருந்த தன் தந்தையின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.

“கிருஷ்ணா, என்னப்பா ஆச்சு?” மூர்த்தியின் கேள்விக்காகவே காத்திருந்தது போல அவரது தோளில் சாய்ந்து கொண்டவன் இந்த நான்கு நாட்களும் என்னன்ன விடயங்கள் எல்லாம் நடந்து முடிந்திருந்ததோ அவை அனைத்தையும் சொல்லி முடிக்க,

“அனுராதா இவ்வளவு மோசமாக எல்லாம் நடந்து கொள்ளுவாங்களா?” என்று தன் பின்னால் கேட்ட குரலில் குழப்பத்துடன் திரும்பிப் பார்க்க, அங்கே அவனது தங்கை தர்ஷினி கோபமாக நின்று கொண்டிருந்தாள்.

“யாரு மோசமாக நடந்துக்கிட்டா தர்ஷினி?” தன் தங்கையின் கேள்விக்கு பதில் கேள்வி கேட்டுக் கொண்டே அவள் முன்னால் வந்து நின்ற கிருஷ்ணா,

“அனுராதா நம்ம கிட்ட நடந்துகிட்டது மோசம்னா அப்போ நம்ம வீட்டிலிருந்து அவளுக்கு என்ன சிகப்பு கம்பள வரவேற்பா கொடுத்தாங்க?” என்று வினவ, தர்ஷினி அமைதியாக தன் தலையைக் குனிந்து கொண்டாள்.

“அனுராதா கிட்ட என்ன பிரச்சினை வேணும்னாலும் இருந்திருக்கலாம், அதை ஆரம்பத்தில் தெளிவாகப் பேசாமல் இப்படி அவசரப்பட்டு அம்மா பண்ண வேலைதான் இந்தளவிற்கு எல்லோருக்கும் கஷ்டம் கொடுத்திருக்கு”

“அதற்காக இப்படி அம்மாவை அடைச்சு வைத்துக் கொடுமைப்படுத்தணுமா?”

“அங்கே நடந்தது எதுவுமே தெரியாமல் நீயாக எதுவும் பேசாதே தர்ஷினி. அனுராதா ஒண்ணும் அம்மாவைக் கொடுமைப்படுத்தல, வர்ற வழியில் அங்கே இந்த மூணு நாளாக என்ன நடந்ததுன்னு அம்மா எல்லாம் சொன்னாங்க. அவ அம்மா மேலே கோபமாக இருந்தது என்னவோ உண்மைதான், அதற்காக அனுராதா அவங்களைத் தொல்லை பண்ணல, வேளா வேளைக்கு சமைச்சு அவங்க சாப்பிட்டு முடியும் வரைக்கும் அந்த அறைக்குள்ளேயே வேலை செய்யுற மாதிரி சுற்றி சுற்றி வந்து அவங்களை நல்லாத்தான் பார்த்துட்டு வந்திருக்கா, வார்த்தைக்கு வார்த்தை அவங்களைப் பழிவாங்கணும்னு அவ சொல்லி இருந்தாலும் இந்த மூணு நாளில் ஒரு தடவை கூட அவ அப்படி அம்மாகிட்ட நடந்துக்கவே இல்லையாம்”

“அப்போ அம்மாவோட இந்த நிலைமைக்கு யாரு காரணம்?”

“நான்தான்”

“என்ன?” கிருஷ்ணாவின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியான தர்ஷினி தன் தந்தையைத் திரும்பிப் பார்க்க, அதே நேரத்தில் அவரும் அவனது முகத்தையே அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டு நின்றார்.

“நான் வீட்டை விட்டுப் போனதுதான் அம்மாவோட இந்த நிலைமைக்கு காரணம், அவங்க என் மேலே கண்மூடித்தனமாக பாசம் வைத்திருக்காங்க, அதுதான் அவங்களோட இந்த நிலைமைக்கு காரணம். நான்தான் எல்லாவற்றிற்கும் காரணம், நான்தான் காரணம்” கிருஷ்ணா தன் தலையில் அடித்துக்கொண்டே மண்டியிட்டு அமர்ந்து கொண்டு தன் கைகளில் முகம் புதைத்து கண்ணீர் விட்டு அழ ஆரம்பிக்க,

அவசரமாக அவனைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்ட மூர்த்தி, “இங்கே யாரு சரி, யாரு தப்புன்னு இப்போ பேசி பலனில்லை கிருஷ்ணா, இனி நடக்கப் போகும் விடயங்களை சரியாக செய்தாலே போதும். முதல்ல இப்படி நீ அழுவதை நிறுத்து” என்றவாறே அவனை எழுந்து நிற்கச் செய்ய,

“அண்ணா! அம்மா அங்கே…அம்மா” வியர்வை வடியும் முகத்துடன் மூச்சு வாங்கியபடியே ராகவ் அவர்கள் முன்னால் வந்து நின்றான்.

“ராகவ், என்னடா ஆச்சு? அம்மாவுக்கு என்ன?” கிருஷ்ணா பதட்டத்துடன் தன் தம்பியைப் பார்த்து வினவ, அவனோ தனது அன்னை உறங்கிக் கொண்டிருந்த அறையின் புறமாக கை காட்டியபடியே கண்கள் கலங்கி நிற்க,

“அப்பா, ஏதோ சரியில்லை. சீக்கிரம் வாங்க” தன் தம்பி, தங்கையை விலக்கிக் கொண்டு தன் அன்னை உறங்கிக் கொண்டிருந்த அறையை நோக்கி ஓடிச் சென்றவன் அங்கே தான் பார்த்த காட்சியில் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்……..