நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 01

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 01
மகாலட்சுமி திருமண மண்டபம்
தென்காசியில் இருக்கும் மிகவும் பிரபலமான திருமண மண்டபங்களில் ஒன்றான மகாலட்சுமி திருமண மண்டபம் பூக்களின் அணிவகுப்பில் நந்தவனம் போல மிளிர்ந்து கொண்டிருந்தது.
அந்த மண்டபத்தின் வாயிலில் ஹரிகிருஷ்ணா வெட்ஸ் அனுராதா என்று சிவப்பு மற்றும் வெண்ணிறப்பூக்களினால் அமைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையைத் தாண்டி செல்லும் அனைத்து நபர்களும் ஏதோ ஒரு கடமைக்காக அங்கே வந்திருக்கிறோம் என்பது போல சென்று கொண்டிருக்க, அந்த திருமண மண்டபத்தின் நடுவே போடப்பட்டிருந்த மண்டபத்தில் மாலையும், கழுத்துமாக அமர்ந்திருந்தனர் நம் நாயகன் ஹரிகிருஷ்ணா மற்றும் நாயகி அனுராதா.
ஹரிகிருஷ்ணா இருபத்தொன்பது வயது நிரம்பிய ஆண்மகன், தென்காசியில் இருக்கும் பிரபல்யமான ஷாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் டீம் லீடராக பணிபுரிந்து வருகிறான்.
அவனது தந்தை மூர்த்தி ஓய்வுபெற்ற வங்கி கணக்காளர், அவனது அன்னை வள்ளி ஒரு பொறுப்பான இல்லத்தரசி.
ஹரிகிருஷ்ணாவின் உடன்பிறந்தவர்கள் இருவர், தங்கை தர்ஷினி மற்றும் தம்பி ராகவ்.
தர்ஷினி பிரபலமான கல்லூரி ஒன்றில் எம்.காம் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்க, ராகவ் அதே கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறான்.
கிருஷ்ணாவின் குடும்பம் பரம்பரை பரம்பரையாக பணவசதி கொண்ட குடும்பம் என்று கூறி விட முடியாது, அதற்காக ஒட்டுமொத்தமாக உழைப்பால் உயர்ந்தவர்கள் என்றும் கூறி விட முடியாது.
கிருஷ்ணாவின் தாத்தாவிற்கு மூர்த்தி மாத்திரமே ஒற்றைப்பிள்ளை, அதனால் தனது பூர்வீக சொத்துக்களை எல்லாம் தங்கள் பேரக்குழந்தைகளின் பெயரில் எழுதி வைத்தவர் ராகவ் இரண்டு வயதாக இருக்கும் போது இந்த உலகை விட்டுச் சென்றிருக்க, அந்த பூர்வீக சொத்துக்களின் மூலம் கிடைத்த சிறு வருமானத்திலும், தன் உழைப்பினாலுமே தற்போது ஒரு நல்ல நிலையில் தன் குடும்பத்தினரை வைத்துப் பராமரித்து வர மூர்த்தியால் முடிந்திருந்தது.
தனது வாழ்நாள் முழுவதும் தங்கள் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து விட வேண்டும் என்பது மூர்த்தியினதும், வள்ளியினதும் ஆசையாக இருந்தாலும், இன்று தங்கள் மூத்த பிள்ளையின் திருமணத்தைக் கண்குளிரக் காண அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை.
அதற்கு ஒரே காரணம் அனுராதா.
அனுராதா பார்ப்போரை ஒரே பார்வையில் தன் புறம் ஈர்த்து விடும் பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும், அவள் மனதளவிலும், குணத்திலும், தோற்றத்திலும் அழகானவள் தான்.
அனுராதா அவள் இப்போது வரை யாராலும் அறிந்து கொள்ள முடியாத ஒரு புதிர்.
அவள் எந்த நேரத்தில் எதைச் செய்யக் காத்திருக்கிறாள் என்பது யாருக்கும் தெரியாது, ஏன் சில நேரங்களில் அவளுக்கே தெரியாது.
அனுராதாவிற்கும், ஹரிகிருஷ்ணாவிற்குமான உறவு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்து இருந்தாலும் இந்த இடைப்பட்ட மூன்று வருட காலப்பகுதியினுள் அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளி அவர்கள் இருவரது உறவிலும், வாழ்க்கையிலும் மிகப்பெரும் மாற்றத்தை உண்டுபண்ணியிருந்தது.
அந்த மிகப்பெரும் மாற்றம் அனுராதாவின் வாழ்விலும் பெரும் புயலை உருவாக்கியிருந்தது என்று கூறினால் மிகையாகாது.
அந்த மாற்றத்தின் விளைவுகள் காலப்போக்கில் அனைவருக்கும் தெரிய வரும் போது யாருக்கு அது பேரதிர்ச்சியை அளிக்குமோ? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
ஒரு புறம் காலம் அதன் விளையாட்டை நிகழ்த்த காத்திருக்க, மறுபுறம் பொன்நிறப் பட்டு சேலை உடுத்தி அதற்கேற்றாற் போல ஆபரணங்கள் அணிந்து முகம் நிறைந்த புன்னகையுடன் அமர்ந்திருந்த அனுராதாவின் அருகில் தன் முகத்தில் எந்தவொரு உணர்வையும் பிரதிபலிக்காமல் வெளியிலேயும், தனக்குள்ளேயும் இறுகிப் போய் அமர்ந்திருந்தான் அவளது வருங்காலத் துணைவன் ஹரிகிருஷ்ணா.
மண்டபத்தில் குழுமி நிற்கும் நபர்களையும், தன்னருகே அமர்ந்திருப்பவளையும் இப்போதே கொன்று விட வேண்டும் என்பது போல அவன் மனதிற்குள் வெறி சூழ்ந்திருந்தாலும் அவனால் அந்த இடத்தை விட்டு ஒரு அடி கூட நகர்ந்து செல்ல முடியாது, அதுதான் அப்போதைய நிதர்சனம்.
நடக்கவிருக்கும் இந்த திருமணத்தில் அவனுக்கு ஒரு துளியும் விருப்பம் இல்லாமல் இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல், தைரியமாக எதிர்த்துப் பேச முடியாத ஒரு கோழையாக அமர்ந்திருக்கும் தன் கையாலாகாத தனத்தை எண்ணி தன்னைத் தானே ஹரிகிருஷ்ணா கடிந்து கொண்டு அமர்ந்திருந்த வேளை, அய்யர் தன் மந்திரங்களை உச்சரித்தபடியே அவன் முன்னால் தாலியை எடுத்து நீட்டினார்.
சிறு நிமிடங்கள் அந்த தாலியைத் தன் கையில் வாங்காமலேயே அவன் அமர்ந்திருக்க, மெல்ல அவன் புறம் சாய்ந்து அமர்ந்த அனுராதா, “என்ன கிருஷ்ணா சார், உங்களுக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லையா என்ன? ஒருவேளை உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னா இப்போவே இங்கே இருந்து எழுந்து போயிடுங்க” என்று கூற, கிருஷ்ணா அவளை அதிர்ச்சியாக திரும்பிப் பார்த்தான்.
“நீ நிஜமாகத் தான் சொல்லுறியா?”
“ஆமா, கிருஷ்ணா சார். உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னா நீங்க தாராளமாக இங்கே இருந்து போகலாம், ஆனா என்ன, நீங்க இந்த மண்டபத்தை தாண்டி அப்படி உங்க காலை வெளியே வைப்பதற்குள்ள என் ஆளுங்க உன் அம்மா, அப்புறம் உன் அப்பா, அதற்கு அப்புறம் உன் தங்கச்சி, அதற்கு அப்புறம் உன் தம்பின்னு ஆர்டரா ஒவ்வொருவருத்தராக சட்டு சட்டுன்னு போட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்பாங்க. அவ்வளவுதான், சிம்பிள். அது பரவாயில்லையா?” அனுராதா அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே கேள்வியாக தன் புருவம் உயர்த்த அவள் கழுத்தை நோக்கி தன் கையைக் கொண்டு சென்றவன், சிறிது சலிப்புடன் தன் கையை விலக்கிக் கொண்டு அய்யர் நீட்டிய தாலியை வெடுக்கென்று வாங்கிக் கொண்டான்.
“கெட்டி மேளம், கெட்டி மேளம்” அய்யரின் கூற்றில் மேளதாளங்கள் ஒலிக்கத் தொடங்க, தன் கையில் இருந்த தாலியை வெறித்துப் பார்த்தபடியே தன் அருகில் அமர்ந்திருந்த அனுராதாவின் கழுத்தில் கட்டியவன் தன் கலங்கிய கண்களை யாரும் அறியாத வண்ணம் துடைத்துக் கொண்டான்.
தன் திருமணத்தைப் பற்றி தன் பெற்றோர் எவ்வளவு ஆசைகளை சுமந்திருந்தார்கள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும், அப்படியிருக்கையில் இன்று அவர்கள் உயிரைப் பணயம் வைத்து தன் திருமணம் நடந்திருக்கும் நிலைமையை எண்ணி அவனால் கவலை அடையாமல் இருக்கவே முடியவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய இந்த நிலைக்கு தன் அருகில், தன் மனைவியாக அமர்ந்திருக்கும் இவள் தானே காரணம் என்கிற உண்மை நிலை அவனுடைய கோபத்தை இன்னமும் தூண்டி விடுவது போலவே இருந்தது.
சிறிது நேரத்தில் திருமணத்திற்குரிய சடங்குகள் எல்லாம் முடிந்த பின்பு அந்த மண்டபத்தில் குழுமியிருந்த சொந்தங்களும், நட்புக்களும் கலைந்து செல்ல ஆரம்பித்திருக்க, கிருஷ்ணா பதட்டத்துடன் தன் கைக்கடிகாரத்தையும், அனுராதாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நின்றான்.
ஒரு சில நிமிடங்களுக்குப் பின்பு அந்த இடத்திலிருந்து எல்லோரும் சென்று விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட கிருஷ்ணா அனுராதாவின் முன்னால் வந்து நின்று, “இதோ பாரு, நீ சொன்ன மாதிரி உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன், நீ எனக்கு வாக்கு கொடுத்த மாதிரி என் குடும்பத்து ஆளுங்களை தயவுசெய்து என் கிட்ட திரும்பி அனுப்பிடு, ப்ளீஸ். உன் கிட்ட கெஞ்சிக் கேட்டுக்கிறேன். இதற்கு மேலேயும் என்னால உன் கிட்ட போராட முடியல. நான் உன் கூட போராடி போராடி ரொம்ப களைத்துப் போயிட்டேன்” என்று கூற,
அவனைப் பார்த்து உச்சுக் கொட்டியவள், “ஐயோ பாவம், உன்னைப் பார்க்கும் போது ரொம்ப பாவமாகத் தான் இருக்குது கிருஷ்ணா, ஆனா என்ன பழைய கணக்கு சில மீதியாக இருக்கே, அதுதான் அந்த கணக்கை எப்படி எல்லாம் தீர்த்துக்கலாமோ அப்படி எல்லாம் தீர்த்துக்கப் போறேன்” என்றவாறே தன் தொலைபேசியைப் பார்த்துக் கொண்டு மணமகள் அறையை நோக்கிச் செல்லப் பார்க்க, அதற்குள் கிருஷ்ணா கோபத்துடன் அவளது வழியை மறித்தவாறு வந்து நின்று கொண்டான்.
“ராதா, நீ பண்ணுறது கொஞ்சம் கூட சரியில்லை. நான் உனக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றிட்டேன், அதேமாதிரி நீயும் எனக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றியே ஆகணும். என் குடும்பத்தில் உள்ள யாராவது ஒருத்தருக்கு சரி ஒரு சின்னக் கீறல் விழுந்தாலும் நான் உன்னை சும்மா விடமாட்டேன்” கிருஷ்ணா கோபத்துடன் அனுராதாவின் கையிலிருந்த தொலைபேசியைப் பிடுங்கிக் கொள்ள,
அவனைப் பார்த்து நக்கலாக சிரித்தவள், “என் போனை வாங்கிக்கிட்டா உன் அம்மா, அப்பாவை நான் எதுவும் பண்ண மாட்டேனா என்ன? ஆனாலும் கிருஷ்ணா நீ ரொம்ப வெகுளியாக இருக்கப்பா” என்றவாறே அவனின் காதருகே எம்பி,
“உனக்கு ஒரு ஹாட் நீயூஸ் சொல்லவா? உன் பாசத்திற்குரிய அம்மா, அப்பா, தங்கச்சி அப்புறம் தம்பி எல்லோருமே இந்த மண்டபத்தில் தான் இருக்காங்க, அதுவும் நம்ம கல்யாணத்தை நேரடியாக பார்த்துட்டுத் தான் இருந்தாங்க, அது உனக்குத் தெரியுமா மிஸ்டர். கிருஷ்ணா?” என்று வினவ கிருஷ்ணா அதிர்ச்சியாக அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான்.
“நீ என்ன சொல்லுற? என் அம்மா, அப்பா இங்கே தான் இருக்காங்களா?”
“ஆமா கிருஷ்ணா. நான் உன்கிட்ட பொய் சொல்லுவேன்னா சொல்லு. வேணும்னா இப்படி பண்ணலாமா? நான் உனக்கு முப்பது நிமிடம் டைம் தர்றேன், அந்த முப்பது நிமிடத்திற்குள் உன் அம்மா, அப்பா அப்புறம் உன் உடன்பிறப்புகளை எல்லாம் நீ கண்டுபிடிக்கணும், ஒரு வேளை உன்னால அவங்களைக் கண்டுபிடிக்க முடியலேன்னு வை, அப்புறம் நடக்கப்போகும் சேதாரங்களுக்கு நான் பொறுப்பு இல்லை, இப்போவே சொல்லிட்டேன்”
“உன்னை” கிருஷ்ணா கோபமாக அனுராதாவை நோக்கி அடியெடுத்து வைக்க,
தன் கைக்கடிகாரத்தை திருப்பிப் பார்த்தவள், “அச்சச்சோ! இப்போவே ஒரு நிமிடம் போயிடுச்சே. கிருஷ்ணா சார், உங்களுக்கு இன்னும் இருபத்தொன்பது நிமிடங்கள் தான் இருக்கு, கம் ஆன், குயிக், குயிக்” என்றவாறே அவனது கையிலிருந்த தன் தொலைபேசியை வாங்கிக் கொள்ள, கிருஷ்ணா பதட்டத்துடனும், பரபரப்புடனும் அந்த மண்டபத்தின் நாலாபுறமும் தன் குடும்பத்தினரை சல்லடை போட்டுத் தேடத் தொடங்கினான்.
கிருஷ்ணா அந்த திருமண மண்டபத்தின் வெளியேயும், உள்ளேயும் தன் கண்ணுக்குப் புலப்பட்ட இடத்தில் எல்லாம் தன் தேடலைத் தொடர்ந்தும் அவனால் அவன் குடும்பத்தினர் யாரையும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
அனுராதா அவனுக்கு கொடுத்திருந்த நேரத்தில் இன்னமும் இரண்டு நிமிடங்களே மீதமிருந்த நிலையில் தன் தோல்வியை ஏற்றுக் கொண்டவனாக அவள் முன்னால் தலை குனிந்து வந்து நின்றவன், “அனுராதா தயவுசெய்து என்னை இப்படி அலைக்கழிக்காமல் உண்மையைச் சொல்லு. சத்தியமாக என்னால முடியல, ப்ளீஸ்” என்று கெஞ்சலாகக் கூறவும்,
தன் பார்வையை அவன் புறம் திருப்பாமலேயே தன் கையிலிருந்த சாவியை அவனிடம் கொடுத்தவள், “என் ரூமை போய்த் திறந்து பாரு” என்று கூற, கிருஷ்ணா அவளது கையிலிருந்த சாவியை வாங்கிக் கொண்டு அவசர அவசரமாக மணமகள் அறையை திறந்து பார்த்தான்.
அந்த அறையின் நடுவே போடப்பட்டிருந்த பெரியதொரு ஷோபாவில் கிருஷ்ணாவின் அன்னை, தந்தை மற்றும் அவனது உடன்பிறப்புகள் இருவரும் கட்டி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து ஒரு நொடி அதிர்ச்சியாகி நின்றவன் மறுகணமே தன்னை சுதாரித்துக் கொண்டு அவர்கள் அனைவரது கட்டுக்களையும் வேகமாகப் பிரித்து விடத் தொடங்கினான்.
கிருஷ்ணாவை அங்கே பார்த்ததும், “கிருஷ்ணா” என்றவாறே கேவலுடன் அவனது அன்னை வள்ளி அவனை ஒருபுறமாக அணைத்துக் கொள்ள,
மறுபுறம் அவனது தங்கை தர்ஷினி மற்றும் அவனது தம்பி ராகவ், “அண்ணா” என்றவாறே அவனைத் தாவி அணைத்துக் கொண்டனர்.
“கிருஷ்ணா, என்னடா இதெல்லாம்? எதற்காக இந்த பொண்ணு இப்படி எல்லாம் பண்ணுறா? இத்தனை வருடங்களாக நம்ம இருக்கும் பக்கமே வராமல் இருந்தவ இப்போ எதற்காக நம்மளை இவ்வளவு பாடாய்படுத்துறா? அப்படி அவளுக்கு என்ன தான் வேணுமாம்?” கிருஷ்ணாவின் தந்தை மூர்த்தி கோபமாக அவனைப் பார்த்து தன் கேள்விக் கணைகளைத் தொடுக்க,
“அதற்கு பதில் நான் சொல்லவா மாமா?” அனுராதா புன்னகை முகமாக அவர்கள் எல்லோருக்கும் முன்னால் வந்து நிற்க, அவளைப் பார்த்த அடுத்த கணமே கிருஷ்ணா உட்பட மற்ற அனைவரது முகங்களும் ஆற்றாமையினால் சுருங்கிப் போனது.
“என்ன யாரும் எதுவுமே பேசாமல் இருக்கீங்க? ஓஹ், ஒருவேளை என்னைப் பார்த்ததும் சந்தோஷத்தில் வாயடைத்துப் போயிட்டீங்களா?”
“அனுராதா, நீ ரொம்ப ஓவராக போயிட்டு இருக்க. நானும் என் பொறுமையை இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டு தான் இவ்வளவு நேரமும் நீ பண்ணுற தொந்தரவை எல்லாம் சகிச்சுக்கிட்டு இருக்கேன், இதற்கு மேலேயும் நீ ஏதாவது பண்ணா அப்புறம் நான் மனுஷனாகவே இருக்க மாட்டேன்”
“அப்படியா? அப்படி என்ன பண்ணிடுவீங்க மிஸ்டர். கிருஷ்ணா? சொல்லுங்க, என்ன பண்ணிடுவீங்க?”
“……”
“உங்களால ஒண்ணும் கிழிக்க முடியாதுன்னு தெரியுது இல்லையா? அப்புறம் எதற்கு இந்த வீணான சவால் எல்லாம்?”
“நீ ரொம்ப மாறிட்ட அனுராதா, நான் காலேஜில் பார்த்து விரும்பிய அந்த அனுராதா நீ இல்லை, நீ ரொம்ப ரொம்ப கெட்டவளாக மாறிட்ட” கிருஷ்ணா வலி நிறைந்த குரலுடன் அனுராதைவை நிமிர்ந்து பார்க்க,
அவனது வலி நிறைந்த குரல் தன்னை சிறிதும் அசைக்கப் போவதில்லை என்பது போல நின்று கொண்டிருந்தவள், “ஆமா கிருஷ்ணா, நான் அந்த அனுராதா இல்லை தான், ஏன்னா அவ ரொம்ப வெகுளி. அதோடு அவ எல்லோரையும் அவளைப் போல உண்மையானவங்க, நல்லவங்கன்னு ரொம்ப நம்புவா, அப்படி நம்பியதால் தான் அவ நிறைய விடயங்களை இழந்துட்டு நிற்கிறா” அந்த இறுதி வசனங்களை சொல்லும் போது தன்னையும் அறியாமல் கிருஷ்ணாவின் பெற்றோரை குற்றம் சாட்டும் வகையில் பார்க்க, அவர்கள் இருவருமோ அவளது பார்வையை தாங்கிக் கொள்ள முடியாமல் தலை குனிந்து நின்றனர்.
ஒரு சில நிமிடங்கள் அங்கே என்ன நடக்கிறது என்பது கிருஷ்ணாவுக்கு புரியவே இல்லை, அனுராதாவின் பேச்சில் தெரிந்த மாற்றம், தன் பெற்றோரின் மௌனம் என எல்லாம் சேர்ந்து அவனைக் குழப்பத் தொடங்க, அவனது குழப்பத்தை மேலும் நீட்டிக்க விரும்பாதவள், “சரி, சரி நல்ல நேரம் போயிட்டே இருக்கு, வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்” என்றவாறே அவனது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் காரில் சென்று அமர்ந்து கொண்டாள்.
அவர்கள் இருவரும் காரில் ஏறி அமர்ந்ததும் அந்த மண்டபத்தை சுற்றி நின்று கொண்டிருந்த அனுராதாவின் உதவியாளர்கள் கிருஷ்ணாவின் குடும்பத்தினரை இன்னுமொரு காரில் ஏற்றிக் கொண்டு அவளைப் பின் தொடர்ந்து சென்றனர்.
ஓரளவிற்கு பங்களா போன்று அமைக்கப்பட்டிருந்த ஒரு இரட்டை மாடி வீட்டின் முன்னால் தன் காரைக் கொண்டு சென்று நிறுத்தியவள் கிருஷ்ணாவின் பெற்றோர் அமர்ந்திருந்த காரின் கதவைத் திறந்து, “என்ன என் மாமனாருக்கும், மாமியாருக்கும் அவங்க வீடே மறந்துடுச்சு போல. இது உங்க வீடு தான், வாங்க,வாங்க” என்றவாறே வள்ளியின் கையைப் பிடித்துக் கொண்டு அந்த வீட்டின் வாயிலில் கொண்டு நிறுத்தியவள்,
“போங்க, போய் சீக்கிரம் ஆராத்தி தட்டை எடுத்துட்டு வாங்க” என்று கூற, அவரோ தவிப்போடு கிருஷ்ணாவின் புறம் திரும்பிப் பார்த்தார்.
தன் அன்னையின் முகத்தில் இதுநாள் வரை சந்தோஷத்தை மாத்திரமே பார்த்து வளர்ந்த கிருஷ்ணா முதன்முதலாக அவர் முகத்தில் தெரிந்த தவிப்பையும், பயத்தையும் பார்த்து கோபம் தலைக்கேற அவளை நோக்கி சென்று விட்டு, பின்னர் அக்கம்பக்கத்தினர் எல்லோரது பார்வையும் தங்கள் வீட்டையே நோட்டம் விடுவதை உணர்ந்து கொண்டவனாக தனக்குள் எழுந்த கோபத்தை சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டு அவரை அனுராதா சொன்னதை செய்யுமாறு சைகையால் சம்மதம் தெரிவித்தான்.
கிருஷ்ணாவின் முன்னிலையில் தன் கோபத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் தனது மனதிற்குள்ளேயே அனுராதாவை பலவிதமாக திட்டியபடி ஆராத்தி தட்டை தயார் படுத்தி எடுத்துக் கொண்டு வந்த வள்ளி வேண்டாவெறுப்பாக கிருஷ்ணா மற்றும் அனுராதாவிற்கு ஆராத்தி எடுக்க, அவரைப் பார்த்து புன்னகைத்தபடியே அணைத்துக் கொண்டவள், “என் மாமியாருக்கு என்னை மறுபடியும் பார்த்ததில் பேச்சே வரல போல. என் பாசத்திற்குரிய மாமியாரே! இது வெறும் ஆரம்பம் தான், மூன்று வருடங்களுக்கு முன்னாடி எனக்கு நீங்க என்ன என்ன எல்லாம் கொடுத்தீங்களோ அது எல்லாம் வட்டியும், முதலுமாக திருப்பித் தராமல் நான் இந்த இடத்தை விட்டுப் போக மாட்டேன், அதனால என் கிட்ட ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கப் பழகிக்கோங்க, என் செல்ல மாமியாரே” என்று அவருக்கு மாத்திரம் கேட்கும் வகையில் கூறி விட்டு அவரைத் தாண்டிச் சென்று விட, வள்ளி அதிர்ச்சியாக அவள் சென்ற வழியையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றார்.
“அம்மா, என்னம்மா ஆச்சு? அவ என்ன சொல்லிட்டுப் போறா?” கிருஷ்ணா தன் அன்னையின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைப் பார்த்துக் கவலை கொண்டவனாக அவரின் தோளில் கை வைத்து வினவ, சிறு பதட்டத்துடன் அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவர் எதுவும் பேசாமல் தன்னறையை நோக்கி நகர்ந்து செல்ல, அவனுக்குத் தான் அங்கே நடக்கும் எதுவும் புரியவே இல்லை.
இரண்டு வாரங்களுக்கு முன்பு அனுராதா தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி வந்து பேசிய போது அவளிடம் அத்தனை தூரம் கோபமாகப் பேசி, அவளைத் தங்கள் வீட்டிலிருந்து வெளியே அனுப்பியவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து பதட்டத்துடன் நடமாடித் திரிந்ததை அவன் கண்டுகொள்ளாமல் இல்லை.
அதிலும் அனுராதா தன் தாய், தந்தையின் முன்னால் வரும் போதெல்லாம் அவர்கள் முகம் காண்பிக்கும் பதட்டமே அவனது குழப்பத்திற்கு தூபம் போடுவது போல இருந்தது.
இந்த விடயத்தைப் பற்றி எப்படியாவது தன் பெற்றோரிடம் பேசிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்களது அறையை நோக்கிச் சென்றவன் காலையில் இருந்து நடந்த விடயங்களின் தாக்கத்தினால் அவர்கள் மிகவும் கவலை கொண்டிருப்பார்கள், அப்படியிருக்கையில் இப்போதே இதைப்பற்றி பேசி மீண்டும் அவர்களைக் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு தன்னறையை நோக்கி நகர்ந்து செல்ல, அங்கே அவனது அறை வாயிலில் அனுராதா தன் கையைக் கட்டிக் கொண்டு அவனது வருகையை எதிர்பார்த்து நிற்பது போல நின்று கொண்டிருந்தாள்.
“நீ இங்கே என்ன பண்ணுற?” கிருஷ்ணாவின் கேள்வியில் அந்த இடத்தை சுற்றிலும் நோட்டம் விட்டவள்,
“என் கிட்டயா கேட்குற கிருஷ்?” என்று கேட்க,
தன் கண்களை மூடி தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டவன், “என் பேரு கிருஷ்ணா, யாரும் என் பெயரை மாற்றிச் சொல்லணும்னு அவசியமில்லை” எனவும், சிறு புன்னகையுடன் அவன் முன்னால் வந்து நின்றவள் அவனை ஏற இறங்கப் பார்த்தாள்.
“இந்த வாய்ப்பேச்சு எல்லாம் உங்க குடும்பத்துக்கு மட்டும் ரொம்ப சாதாரணமாக வரும் போல”
“என்னைப் பற்றியோ, என் குடும்பத்தைப் பற்றியோ பேச உனக்கு எந்த உரிமையும் இல்லை அனுராதா”
“அதெல்லாம் கடந்த காலம் மிஸ்டர். கிருஷ்ணா, இப்போ நீங்க என்னோட ஹஸ்பண்ட், காலையில் நம்ம இரண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தது ஞாபகம் இருக்கு இல்லை”
“ஒரு ஆளை மிரட்டி, அவனோட குடும்பத்தை கடத்தி வைத்து இப்படி எல்லாம் கல்யாணம் செய்துக்கணும்னு உனக்கு என்ன அவசியம் வந்தது?”
“அதெல்லாம் இப்போ சொல்ல முடியாது மிஸ்டர். கிருஷ்ணா, ஓஹ், சாரி, சாரி, கிருஷ்”
“ராதா!” என்றவாறே கிருஷ்ணா கோபத்தில் முகம் சிவக்க அவளை நோக்கி அடியெடுத்து வைக்க,
தன் ஒற்றைக் கையினால் அவன் நெஞ்சில் கை வைத்து அவனைத் தள்ளி விட்டவள், “இப்போ சார் மட்டும் என்ன சொன்னீங்க? ராதா! ஆனா என் பேரு அனுராதா தானே?” கேள்வியாக அவனைப் பார்க்க, அவனோ சிறு அதிர்ச்சியோடு அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான்.
“நான் தான் சொன்னேனே, உங்க குடும்பத்துக்கு அடுத்தவங்களை குறை சொல்ல மட்டும் தான் தெரியும், அப்படியிருக்கும் போது நீங்க மட்டும் நல்லவரா இருந்துடப் போறீங்களா என்ன?”
“அனுராதா உனக்கு என்ன தான் வேணும்? எதற்காக இப்படி எல்லாம் பண்ணுற?”
“எனக்கு என்ன வேணும்னு சொல்லணுமா? சொல்லணுமா?” அத்தனை நேரமும் முகத்தில் புன்னகை தவழ நின்றிருந்த அனுராதா இப்போது கோபத்தில் தன்னை மறந்து கிருஷ்ணாவின் சட்டையை இறுகப் பற்றியிருக்க, அவனது முகமோ ஒரு நொடியில் வெளுவெளுத்துப் போனது.
“அனு…ராதா”
“நான் எதற்காக இப்படி எல்லாம் பண்ணுறேன்னு சொல்லவா? பழிக்குப் பழி. மூன்று வருஷமாக என் மனதிற்குள் இருக்கும் வெறுப்பு, கோபம், வன்மம் இன்னும் என்ன என்ன எல்லாம் சொல்லலாமோ அது எல்லாம் தான் காரணம். இனி வரப்போகும் ஒவ்வொரு நாளும் உன்னையும், உன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருத்தரையும் கஷ்டப்படுத்திப் பார்க்கணும், அந்த ஒரு காரணத்திற்காக இன்னும் என்ன எல்லாம் செய்யலாமோ எல்லாம் செய்வேன்” என்று விட்டு தன் பிடியிலிருந்த கிருஷ்ணாவின் சட்டையை உதறிவிட்டு அனுராதா அந்த அறைக்குள் நுழைந்து விட, அவளது கோபமான அவதாரத்தைப் பார்த்து அவனுக்கு சப்தநாடிகளும் ஒடுங்கிப் போனது…..