நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 04

eiPONP961496-0839e18d

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 04

அனுராதாவின் கோபமான வார்த்தைகளைக் கேட்டு விக்கித்துப் போய் நின்ற கிருஷ்ணா தன் சுய நினைவிற்கு வர எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டானோ அவன் அறியான்.

அவள் தன்னிடம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் அவளது வெறுப்பும், வன்மமுமே நிறைந்து போயிருப்பதை எண்ணிக் கவலையுடன் தன்னறைப் பால்கனியில் சென்று நின்று கொண்டவன், ஆறு வருடங்களுக்கு முன்பு தங்கள் இருவருக்கும் இடையே மலர்ந்த அந்த உறவின் ஆரம்ப தருணத்தை நோக்கி தன் நினைவலைகளை அனுப்பக் தொடங்கினான்.

ஆறு வருடங்களுக்கு முன்னர்…..

***** கல்லூரி வளாகம் புதிய மாணவர்களை தனக்குள் எடுத்துக் கொண்ட களிப்பில் ஆரவாரத்துடன் நிறைந்து போயிருக்க, தன் முதல் நாள் கல்லூரி பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்தவனாக தன் வண்டியிலிருந்து இறங்கி நின்றான் ஹரிகிருஷ்ணா.

அந்தக் கல்லூரி வளாகம் முழுவதும் புதிதாய் பறக்க ஆரம்பித்த பட்டாம்பூச்சி போல பல்வேறு மாணவர்கள் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருக்க, அவற்றை எல்லாம் ஒரு விதமான சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டு கடந்து சென்ற கிருஷ்ணா ஒரு மரத்தின் பின்னால் யாரோ ஒரு பெண் மறைந்து, ஒளிந்து நிற்பதைப் பார்த்து சிறு தயக்கத்துடன் தன் பார்வையை சுற்றிலும் சுழலவிட்டபடியே அவளை நோக்கி நடந்து சென்றான்.

ஏதோ ஒரு மன உந்துதலில் அவளை நோக்கி வந்தவன், அவளிடம் பேச்சுக் கொடுத்துப் பார்க்கலாம் என்றெண்ணியபடி, “யாரு அது மரத்தின் பின்னால் ஒளிந்து நிற்கிறது? கொஞ்சம் வெளியே வர்றீங்களா” என்று குரல் கொடுக்க, ஒரு சில நிமிடங்கள் கழித்து தயங்கி தயங்கி ஒரு இளம்பெண் அந்த மரத்தின் பின்னாலிருந்து வெளியேறி வந்தாள்.

ஊதா நிற சுடிதாரில் இடை வரை நீண்டிருந்த தன் ஒற்றைப் பின்னலை தன் கைவிரல்களில் வைத்து சுற்றியபடியே பயத்துடன் அவன் முன்னால் வந்து நின்ற அந்த பெண்ணைப் பார்த்ததுமே அவளை சீண்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் கிருஷ்ணாவின் மனதிற்குள் எழ, சிறு புன்னகையுடன் அவள் முன்னால் வந்து நின்றவன், “உன் பேரு என்ன?” சிறு அதட்டலுடன் வினவ, அவனது அதட்டலில் தூக்கி வாரிப் போட அவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்களோ தாரை தாரையாக கண்ணீர் விட ஆரம்பித்தது.

அவளது கண்களிலிருந்து கண்ணீர் விழுவதைப் பார்த்ததும் பதட்டம் கொண்ட கிருஷ்ணா, “இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு உன் நயகரா நீர்வீழ்ச்சியை திறந்து விடுற, முதலில் கண்ணைத் துடை, யாராவது பார்த்தால் தப்பாக நினைக்கப் போறாங்க. ப்ளீஸ் கண்ணைத் துடைச்சுக்கோ” எனவும்,

அவனைப் பார்த்து சரியென்று தலையசைத்தபடியே தன் கண்களைத் துடைத்து விட்டவள், “என் பேரு அனுராதா” என்று கூற, கிருஷ்ணாவின் பார்வை அவளை மெச்சுதலாக நோக்கியது.

“எதற்காக இங்கே வந்து ஒளிந்து நிற்கிற? யாரும் உன்னை ஏதாவது சொன்னாங்களா?” கிருஷ்ணாவின் கேள்விக்கு பதிலாக அனுராதாவிடமிருந்து மறுப்பாக தலையசைவு மாத்திரமே கிடைத்தது.

“அப்போ இங்கே ஏதாவது திருட வந்து ஒளிந்து நிற்கிறியா?”

“அச்சச்சோ! நான் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்”

“அப்போ எதுவுமே பண்ணாமல் எதற்காக இங்கே வந்து நிற்கிற?”

“……”

“இப்படி நீ எதுவுமே பேசாமல் இருந்தேன்னு வை, நான் போலீஸுக்கு கால் பண்ணி அவங்களை இங்கே வர வைத்து இந்த பொண்ணு ஏதோ தப்பு பண்ணுறான்னு சொல்லி பிடிச்சுக் கொடுத்துடுவேன். என்ன கால் பண்ணவா?” என்றவாறே கிருஷ்ணா தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த போனை எடுக்கப் போக,

அவசரமாக அவனது கையை தட்டி விட்டவள், “ஐயோ! அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க. நான் எந்த தப்பும் பண்ணல, நானும் இதே காலேஜில் தான் பர்ஸ்ட் இயரில் ஜாயின் பண்ணி இருக்கேன். ***** டிபார்ட்மெண்ட்” எனவும்,

அவனோ, ‘அட நம்ம டிபார்ட்மெண்ட்’ என தனக்குள் நினைத்துக் கொண்டு,

“அப்புறம் கிளாஸ்க்கு போகாமல் இங்கே என்ன பண்ணுற?” கேள்வியாக அவளை நோக்கினான்.

“அது வந்து, அது வந்து” சிறிது தயக்கத்துடன் தன் பார்வையை சுற்றிலும் சுழலவிட்ட அனுராதா கிருஷ்ணாவின் முதுகின் பின்னால் கை காட்ட, ‘அங்கே என்ன இருக்கிறது?’ என்ற பாவனையோடு திரும்பிப் பார்த்தவன் அங்கே தான் கண்ட காட்சியைப் பார்த்து தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.

தன் கண்களில் நீர் வரும் அளவிற்கு சிரித்தபடியே அனுராதாவின் புறம் திரும்பியவன் அவளது கலங்கிய கண்களைப் பார்த்ததும் சட்டென்று தன் சிரிப்பை நிறுத்தி விட்டு, “சாரி, நான் வேணும்னே சிரிக்கல, சாரி” என்றவாறே மீண்டும் தன் வாய் வரை வந்த சிரிப்பை வெகு சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு,

“ஏன்ங்க காலேஜ் படிக்கிற பொண்ணு இத்துணூண்டு பூனையைப் பார்த்து பயப்படலாமா? அது உங்களைக் கடித்து முழுங்கவா போகுது?” என்று கேட்க,

தன் தலை குனிந்து நின்றவள், “எனக்கு சின்ன வயதிலிருந்தே பூனை, நாய் எல்லாம் பார்த்தால் பயம். நான் ரொம்ப தைரியமாக தான் நடந்து வந்தேன், திடீர்னு எங்கிருந்தோ வந்த இந்த பூனை என் பின்னாடியே வந்து என் காலைச் சுற்றி சுற்றியே வருது, அதுதான் பயத்தில் இங்கே வந்து ஒளிஞ்சுகிட்டேன்” எனவும்,

“நல்ல பொண்ணும்மா நீ” என்றவாறே அவளைத் தாண்டிச் சென்றவன் முதல் நாள் இரவு பெய்த மழையில் நனைந்து போயிருந்த அந்த பூனையை எடுத்து ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்து விட்டு அவளின் புறம் திரும்பி பார்க்க, அவளோ அவன் ஏதோ மாயமந்திரம் செய்வது போல ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு நின்றாள்.

“என்ன அனுராதா மேடம் இப்போதாவது உங்க குகையிலிருந்து வெளியே வர்றீங்களா?” கிருஷ்ணாவின் கேலி கலந்த பேச்சில் சிறு தயக்கத்துடன் அவனருகில் வந்து நின்றவள்,

“ரொம்ப நன்றி” என்று கூற,

அவனோ, “ஐ யம் ஹரிகிருஷ்ணா, சேம் இயர், சேம் டிபார்ட்மெண்ட்” என்றவாறே தன் கையை நீட்ட, சிறு முறுவலுடன் அவனது கையைப் பிடித்து குலுக்கியவள் அவனுடன் பேசிக் கொண்டே தங்கள் வகுப்பை நோக்கி நடந்து செல்லத் தொடங்கினாள்.

அன்று ஒரு சிறு பூனையைப் பார்த்து பயந்து நின்ற அதே அனுராதா தான் இன்று அத்தனை பேரையும் ஆட்டுவிப்பது மட்டுமின்றி, தன் ஒற்றைப் பார்வையினாலும், சுடுசொற்களினாலும் அனைவரையும் அடக்கி வைத்திருக்கிறாள் என்பதை அவனால் இப்போது வரை நம்பவே முடியவில்லை.

“நீ பழைய படி சின்னச் சின்ன விடயங்களுக்காக பயந்து, நடுங்கி நிற்கும் அனுராதாவாக இல்லாமல் தைரியமாக எதையும் எதிர்கொள்ளும் ஒருத்தியாக இருப்பது எனக்கு சந்தோஷம் தான், ஆனா மற்றவர்களை காயப்படுத்தி பார்க்கும் ஒருத்தியாக இருப்பது சரியா? உனக்குள் இவ்வளவு வன்மமும், கோபமும் வளர நான் எப்படி காரணமானேன்? அந்த ஒரு கேள்விக்குத் தான் இப்போ வரைக்கும் என்னிடம் பதிலே இல்லை” கிருஷ்ணா தன் கடந்த கால நினைவுகளை அசை போட்டபடியே கண்மூடி நின்று கொண்டிருக்க, மறுபுறம் அனுராதா எந்தவொரு கவலையும் இன்றி தன் கையிலிருந்த புத்தகத்தில் மூழ்கிப் போயிருந்தாள்.

**********

கிருஷ்ணா மற்றும் அனுராதாவின் திருமணம் நடந்து முடிந்து அன்றோடு ஒரு மாதம் நிறைவு பெற்றிருந்தது.

இந்த ஒரு மாத காலத்திற்குள் அனுராதா பேசும் வார்த்தைகளை எல்லாம் கிருஷ்ணா எந்தளவுக்கு பொறுமையாக நின்று கேட்க முடியுமோ அந்தளவிற்கு பொறுமையாக நின்று கேட்டு விட்டு தன் வேலைகளைப் பார்க்கச் சென்று விடுவான்.

ஆனால் அவனது வீட்டில் உள்ளவர்கள் அனுராதாவை ஏதோ ஒரு வேண்டாத பொருளைப் போலவே பார்த்து விட்டு கடந்து செல்லுவர்.

அதற்காக அவளும் இதையெல்லாம் அமைதியாக கடந்து செல்லக்கூடியவள் அல்லவே.

ஒவ்வொரு நாளும் தன் வார்த்தைகளினாலும், செயலினாலும் அவர்களைக் காயப்படுத்துபவள் தனிமையில் அமர்ந்து யாரும் அறியாமல் தன் மனக்குமுறலை எல்லாம் தனக்குள்ளேயே கொட்டித் தீர்த்து விடுவாள்.

ஒவ்வொரு நாள் விடியலின் போதும் அந்த நாள் என்ன வகையான ஆபத்தைத் தர காத்திருக்கிறதோ என்றெண்ணியபடியே கிருஷ்ணாவும், அவன் குடும்பத்தினரும் தங்கள் நாட்களைக் கடத்த, அனுராதாவின் அந்தக் கோபத்திற்கான எல்லை தான் இன்று வரை கிட்டவே இல்லை.

அன்று வழக்கம் போன்று தன் அலுவலகம் செல்வதற்காக வேண்டி கிருஷ்ணா தயாராகிக் கொண்டிருக்க, மறுபுறம் அனுராதாவும் அவசர அவசரமாக எங்கோ செல்வதற்கு தயாராவது போல புறப்பட்டுக் கொண்டு நின்றாள்.

தன் முன்னாலிருந்த கண்ணாடி வழியாக அவளைப் பார்த்தபடியே தயாராகி முடிந்த கிருஷ்ணா தன் அறையில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர், “அனுராதா, நீ வெளியே எங்காவது போகணும்னா நான் டிராப் பண்ணவா?” என்று கேட்க, அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள், “எனக்கு உங்க உதவி இப்போதைக்கு தேவையில்லை” என்று விட்டு வேகமாக அங்கிருந்து சென்று விட, கிருஷ்ணாவோ பெருமூச்சு விட்டபடி தன் பையை எடுத்துக்கொண்டு அவளைப் பின் தொடர்ந்து நடந்து சென்றான்.

அனுராதா திருமணமாகி இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து இன்றுவரை ஒரு பருக்கை உணவு கூட அந்த வீட்டில் வைத்து உண்டதில்லை, காலையில் வெளியேறி செல்பவள் மாலை நேரம் தனக்கான இரவுணவை எடுத்துக் கொண்டு தான் வருவாள், இடைப்பட்ட அந்த நேரத்தில் அவள் எங்கேயிருப்பாள் என்பது கிருஷ்ணாவிற்கோ, அவனது வீட்டினருக்கோ தெரியாது.

அவள் எங்கே சென்று வருகிறாள் என்று கூட இதுநாள் வரை அவர்கள் கேட்க முயன்றதில்லை, கேட்டாலும் அவள் பதில் சொல்லுவாளா என்பது உத்தரவாதமின்றிய ஒரு விடயம் தான்.

இரண்டு, மூன்று நாட்கள் அவளிடம் எதுவும் பேசாமல் அமைதியாக அவளின் போக்கிலேயே விட்டிருந்த கிருஷ்ணா இதற்கு மேலும் அவளை இப்படியே தனிமையில் விட்டு வைப்பது சரியில்லை என்று நினைத்தவனாக, இன்று அவளைப் பின் தொடர்ந்து சென்று அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டவன் அனுராதா தங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதும் ஒரு சில நிமிடங்கள் கழித்து அவள் அறியாத வண்ணம் அவளைப் பின் தொடர்ந்து செல்லத் தொடங்கினான்.

அவர்கள் வீட்டிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஒரு ஒற்றையடிப் பாதை பிரிந்து செல்லும், அந்தப் பாதையில் சென்றால் என்ன இடம் இருக்கும் என்பது இதுவரை கிருஷ்ணாவிற்குத் தெரியாது.

அது ஏதோ ஒரு காட்டுப் பாதை போலும் என்று இதுநாள் வரை எண்ணியிருந்தவன் இன்று அந்த பாதை வழியாக அனுராதா நடந்து செல்வதைப் பார்த்து சிறு குழப்பத்துடனும், தயக்கத்துடனும் தன் வண்டியை வீதியின் ஒரு ஓரமாக, மறைவான பகுதியில் நிறுத்தியவன் சிறிதும் சத்தம் எழுப்பாமல் அவளைப் பின் தொடர்ந்து நடந்து சென்றான்.

தான் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் நிறுத்தி நிதானமாக அடிவைத்து நடந்து செல்லுபவள் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு தடவை தன் பின்னால் திரும்பிப் பார்க்கவும் மறக்கவில்லை.

அனுராதா ஒவ்வொரு தடவை திரும்பிப் பார்க்கும் போதும் அவசர அவசரமாக ஏதாவது மரத்தின் பின்னாலும், புதரின் பின்னாலும் மறைந்து கொள்ள எண்ணும் கிருஷ்ணா அவன் எண்ணத்திற்கு மாறாக ஏதாவது ஒரு குழியிலோ, பள்ளத்திலோ விழுந்து வாரிக் கொண்டு தான் இருந்தான்.

எத்தனை அடி பட்டாலும் பரவாயில்லை என்றெண்ணியபடி தன் வலிகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு அவளைப் பின் தொடர்ந்து சென்றவன் அவள் சென்று நின்ற இடத்தைப் பார்த்து முற்றிலும் திகைத்துப் போனான்.

‘இது, இது ராதாவோட வீடாச்சே! இந்த வீட்டுக்கு இப்படியும் வரமுடியுமா? ஆனா எதற்காக ராதா இந்த வழியால் வரணும்? நேரடியாக வரும் வழியில் வந்து இருக்கலாமே?’ தன் மனதிற்குள் சூழ்ந்திருந்த பெரும் கேள்விகளுடனும், குழப்பங்களுடனும் அந்த வீட்டைப் பார்த்துக் கொண்டு நின்றவன், தன் பையிலிருந்த சாவி கொண்டு அந்த வீட்டின் கதவைத் திறந்து கொண்ட சென்ற தன் மனைவியைப் பார்த்து மேலும் மேலும் குழப்பமடைந்து போனான்.

‘இந்த வீடு பூட்டி இருக்கே, இவளோட அம்மா, அப்பா எல்லாம் எங்கே போனாங்க? அன்னைக்கு போனில் அவ அப்பா கூட தானே பேசினா, அவங்க ஊட்டியில் இருப்பது போலத் தான் அன்னைக்கு பேசும் போது புரிந்தது, அப்புறம் எதற்காக இப்போ இந்த வீட்டுக்கு இவ வரணும்? ஒருவேளை அவங்க வீட்டில் இல்லைன்னு எல்லாம் சரி பண்ணி வைக்க வந்து இருப்பாளோ?’ கிருஷ்ணாவின் மனதிற்குள் அடுக்கடுக்காக பல கேள்விகள் வந்து கொண்டேயிருக்க இதற்கு மேலும் இங்கே நின்று யோசிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று எண்ணிக் கொண்டவன் அனுராதாவின் வீட்டை நோக்கி நடந்து சென்றான்.

அவள் வீட்டு வாயிலில் தன் காலை வைப்பதற்கு முன்னர் தான் செய்வது சரியா? தவறா? எனப்பலமுறை தனக்குள் கேட்டுக் கொண்டவன் ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த வீட்டிற்குள் தன் முதல் அடியை எடுத்து வைத்தான்.

அந்த வீடு பார்ப்பதற்கு அவர்களது வீட்டின் அளவை ஒத்திருந்தாலும் அந்த வீட்டிலிருந்த பொருட்களில் எல்லாம் செல்வச் செழிப்பு தாராளமாக கொட்டிக் கிடந்தது.

சில வருடங்களுக்கு முன்பு அனுராதாவுடன் அந்த வீட்டிற்கு வருகை தரும் போது அந்த இடம் என்ன மாதிரியான தோற்றத்தில் இருந்ததோ இப்போதும் அதே மாதிரியான தோற்றத்தில் அந்த இடம் இருப்பதைப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டவன், ‘அனுராதா எங்கே? இங்கே தானே வந்தா?’ என்ற யோசனையுடன் தன் பார்வையை சுற்றிலும் சுழலவிட, அந்த வீட்டின் ஹாலில் சுவற்றில் மாலையிட்டு பெரிதாக்கி மாட்டப்பட்டிருந்த அனுராதாவின் அன்னையினதும், தந்தையினதும் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் விக்கித்துப் போய் நின்றான்.

‘ராதாவோட அம்மாவும், அப்பாவும் இறந்துட்டாங்களா? இது, இது எப்படி சாத்தியம்? அன்னைக்கு அவ அப்பா கூட அவ்வளவு சந்தோஷமாக பேசினாளே? ஒருவேளை அவளோட சித்தப்பா, பெரியப்பா யாராவது இருக்குமா? ஆனா அவளுக்கு தான் சித்தப்பா, பெரியப்பா என யாரும் இல்லைன்னு சொன்னாலே. ராதா, உன்னோட வாழ்க்கையில் என்ன தான் நடந்தது? எதற்காக என் கிட்ட இதெல்லாம் சொல்லாமல் மறைத்த?’ அனுராதாவின் பெற்றோரின் புகைப்படத்தின் முன்னால் மனமுடைந்து போனவனாக கிருஷ்ணா கண் கலங்கி நின்று கொண்டிருந்த வேளை,

சமையலறையில் இருந்து வெளியேறி வந்த அனுராதா, “கிருஷ்ணா! நீங்க என்ன பண்ணுறீங்க?” அதிர்ச்சியும், தவிப்பும் ஒன்று சேர்ந்தவளாக அவன் முன்னால் வந்து நிற்க, அவனோ அவளைப் பார்த்த அடுத்த கணம் எதுவும் பேசாமல் அவளைத் தாவி இறுக அணைத்துக் கொண்டான்.

“கிருஷ்ணா, என்னை விடுங்க” அனுராதா தன் பலம் மொத்தத்தையும் திரட்டி கிருஷ்ணாவைத் தன்னை விட்டு மொத்தமாக விலக்கி நிறுத்தப் பார்க்க,

அவனோ அவளை விட்டு சிறிதும் விலகாமல், “ஏன் ராதாம்மா என்னை விட்டு போன? ஏன் போன? ஏன் போன?” என்று மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டுக் கொண்டு நிற்க, ஒருநிலைக்கு மேல் தன் பொறுமையை மொத்தமாக இழந்தவள் தன் ஒட்டுமொத்த கோபமும் ஒன்று சேர அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டவள் அவன் எதிர்பாராத தருணத்தில் அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்.

“நீ என்ன பண்ணுணாலும் நான் பார்த்துட்டு இருப்பேன்னு நினைச்சியா? என் அனுமதி இல்லாமல் உன் நிழல் கூட என் பக்கத்தில் வர முடியாது, அப்படியிருக்கும் போது நீ என்னைத் தொட்டால் நான் உன்னை சும்மா விடுவேன்னு நினைச்சியா? கொன்னுடுவேன்” என்றவாறே அவனது கன்னத்தில் மாறி மாறி அறைந்தவள் அவனை இன்னமும் கோபமாக தள்ளி விட, கிருஷ்ணாவோ அவள் அடித்த அடிகளை எல்லாம் தாங்கிக் கொண்டு சிலை போல அமைதியாக நின்று கொண்டிருந்தான்.

“நீ என்ன எவ்வளவு வேண்டுமானாலும் திட்டு, அடி. நான் அது எல்லாவற்றையும் தாங்கிப்பேன் ராதாம்மா, ஆனா இதை எப்படி ராதாம்மா நீ தாங்கிக்கிட்ட?” என்றவாறே கிருஷ்ணா தன் கையை அவளது பெற்றோரின் புகைப்படத்தின் புறம் திருப்ப,

தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள், “அவங்களோட இந்த நிலைமைக்கு நீயும், உன் வீட்டு ஆளுங்களும் தானே காரணம்? பண்ணுற எல்லாக் காரியத்தையும் பண்ணிட்டு இப்போ வந்து நல்லவனாட்டம் நாடகம் போடுறியா? மரியாதையாக இந்த இடத்தில் இருந்து வெளியே போ, வெளியே போ” தன் இரு காதுகளையும் மூடிக் கொண்டு சத்தம் போட்டுக் கத்த, அவனோ அவள் சொன்ன விடயத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாமல் திகைத்துப் போய் நின்றான்.

“என்ன சொன்ன? நானும், என் வீட்டு ஆளுங்களும் காரணமா? நாங்க அவங்களுக்கு என்ன பண்ணோம்?”

“ஏன் உனக்குத் தெரியாதா? தெரியாதா? என் கண்ணு முன்னாடியே என் அம்மாவையும், அப்பாவையும் துடிதுடித்து சாக வைத்தது உனக்குத் தெரியாதுன்னு சொல்லுறியா? உன் அம்மா, அப்பா தான் நல்லா நடிப்பாங்கன்னு நினைத்தேன், ஆனா நீயும் நல்லா நடிக்குற. எல்லாவற்றையும் நல்லா பிளான் பண்ணி பண்ணிட்டு இப்போ ஒண்ணுமே பண்ணாத மாதிரி நடிக்குற. துரோகி”

“அனுராதா, வார்த்தையை அளந்து பேசு. நான் உனக்குத் துரோகம் பண்ணேனா, நீ எனக்குத் துரோகம் பண்ணியா? பழைய விடயங்களை எல்லாம் மறந்துட்டுப் பேசாதே, மூணு வருடத்திற்கு முன்னாடி நீ தான் என்னை நட்டாற்றில் விட்டுட்டு போன, மறக்காதே!” கிருஷ்ணா சிறு கோபத்துடன் தன் விரல் நீட்டி எச்சரிப்பது போல அனுராதாவைப் பார்த்துக் கூற,

அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டே அவனது கையை பிடித்து கீழே இறக்கி விட்டவள், “என் வாழ்க்கையில் என்ன எல்லாம் நடந்ததோ அது எல்லாவற்றிற்கும் காரணம் நீயும், உன்னோட அம்மாவும், அப்பாவும் தான். நீ இதை ஏற்றுக் கொண்டாலும் சரி, இல்லைன்னாலும் சரி. அவங்களும், நீயும் ஏமாற்றுக்காரங்க தான்” என்றவாறே விடாமல் அவனை முறைத்துக் கொண்டு நிற்க, கிருஷ்ணாவோ அவளிடம் தன் உண்மை நிலையை எப்படி சொல்லிப் புரிய வைப்பது என்று தெரியாமல் தவிப்போடு அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான்…..

 

Leave a Reply

error: Content is protected !!