நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 05

eiPONP961496-1b9137af

தன் வீட்டின் நடுவே ஒருவன் நின்று கொண்டிருக்கிறான் என்பதைக் கணக்கிலேயே எடுக்காதது போல அனுராதா தன் மடிக்கணினியில் தனது அலுவலக வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க, அவளது மனதில் இருக்கும் தன்னைப் பற்றிய பிழையான எண்ணத்தை எப்படி போக்குவது என்று தெரியாமல் ஹரிகிருஷ்ணா விழித்துக் கொண்டு நின்றான்.

மூன்று வருடங்களுக்கு முன்பு அவள் தன்னை விட்டு பிரிந்து போனதில் தனக்கும் பங்கு இருக்கிறது என்று எப்படி அவளால் நினைக்க முடிகிறது என்பது கூட அவனுக்குப் புரியவில்லை.

வாய் விட்டுப் பேசினால் தானே நடந்த விடயத்தில் இருக்கும் உண்மைத்தன்மையை தன்னால் அறிய முடியும்? அப்படியிருக்கையில் தன் பேச்சையே அவள் கேட்க விரும்பவில்லை என்பது அவனை இன்னமும் கவலைக்கு உள்ளாக்கியது.

‘நான் ஒருத்தன் குத்துக்கல்லாட்டம் நடு ஹாலில் நிற்பது கூட அவளுக்கு தெரியலையா? இல்லை இவன் நின்றால் எனக்கு என்னன்னு இருக்காளா? ஒரு மரியாதைக்காகவது இருங்கன்னு சொல்லுறாளா பாரு, அந்தளவுக்கு என்ன பிடிவாதம்?’ தனது மடிக்கணினியில் வெகு சிரத்தையுடன் வேலை செய்து கொண்டிருந்த அனுராதாவைப் பார்த்தபடியே அவளெதிரில் வந்து அமர்ந்து கொண்ட கிருஷ்ணா அவளது மடிக்கணினியைப் பார்க்கப் போக, அவளோ அதை சட்டென்று தனக்கு மாத்திரம் தெரியும் வகையில் திருப்பி வைத்துக் கொண்டாள்.

‘ஆஹ்ஹஹ்ஹா! இந்த கோபத்திற்கு மட்டும் குறைச்சலே இல்லை, அவ என்ன பண்ணுறான்னு எங்களுக்கு சொல்லிட்டா நாங்க அப்படியே காப்பி பண்ணிடப் போறோம்? இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப ஓவரு’ அனுராதாவின் ஒவ்வொரு செயலுக்கும் தனது மனதிற்குள்ளேயே பதில் கொடுத்தபடி கிருஷ்ணா அமர்ந்திருக்க, சிறிது நேரம் அவர்கள் இருவருக்கும் இடையே எந்தவொரு பேச்சு வார்த்தையும் இருக்கவில்லை.

அந்த வீட்டில் நிலவிய அசாதாரண அமைதி அவனை ஏதோ செய்வது போல் இருக்க தன் கைகள் இரண்டையும் தன் தலையின் பின்னால் தலையணை போல வைத்துக் கொண்டவன், “ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ? கண் ரெண்டும் தந்தியடிக்க ஹரிகிருஷ்ணா வந்தேன் கண்டுபிடிக்க” ஓரக்கண்ணால் அனுராதாவைப் பார்த்தபடியே பாட, அவளோ விருட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“ஓஹ்! இந்தப் பாட்டு பிடிக்கல போல. அப்போ வேறு ஒரு பாட்டு படிக்கலாம்” அவளைப் பார்த்தும் பார்க்காதது போல தன் கண்களை மூடிக்கொண்டவன்,

“ராதா ஓ ராதா ராதா ஓ ராதா
தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி
உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி
தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி
உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி
உன்னால தான் மனம் பித்தானது
கண்ணீரு தான் என் சொத்தானது” என்று பாட, இப்போது மேஜை மீதிருந்த டம்ளர் அனுராதாவின் கையில் சிக்கி சுக்குநூறாக போக,

அந்த சத்தம் கேட்டு தன் கண்களைத் திறந்து கொண்ட கிருஷ்ணா, ‘ஆஹா! நம்ம தான் அந்த டம்ளர் போல. கிருஷ்ணா கொஞ்சம் உஷார் ஆகிக்கோ டா’ என தன் மனதிற்குள் நினைத்தபடியே தன் பாடலைக் கை விட்டு விட்டு அவளது கையிலிருந்த டம்ளரை வாங்கி சிறிது தள்ளி வைத்தான்.

கிருஷ்ணாவை முறைத்துப் பார்த்துபடியே தனது மடிக்கணினியில் வெகு மும்முரமாக எதையோ தேடியவள், “இவ்வளவு நேரம் பாட்டு பாடி களைச்சுப் போய் இருப்பீங்க, இப்போ உங்க பாட்டுக்கு பதில் வரும்” என்றவாறே,

“சொன்ன படி கேளு மக்கர் பண்ணாத
எத்தனை வேலை இருக்கு
அத்தனையும் உங்கப்பனா செய்வான் நான் தான செய்யணும்
காலைல தோப்பு போய்ட்டு
போனது வந்தது பாக்கணும் அப்றம்
இங்க வந்து தவுடு வைக்கணும்
தண்ணி கட்டனும் அப்பறம்
வயலு வாய்க்கா ஒன்னா ரெண்டா
போ போ ஒழுங்கா சொன்னத கேளு” என்ற பாடலை ஒலிக்க விட, அவனோ சட்டென்று தன் இருக்கையில் நேராக அமர்ந்து கொண்டு அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு தன் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டான்.

நேரம் செல்லச் செல்ல கிருஷ்ணா தனது கைக்கடிகாரத்தைப் பார்ப்பதும், அனுராதாவின் முகத்தைப் பார்ப்பதுமாக இருந்த போதும் அவள் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, அதற்கு மாறாக அவனைப் பாராமலேயே சமையலறையை நோக்கிச் சென்றவள் சிறிது நேரத்தின் பின்னர் ஒரு ட்ரேயில் இரண்டு கப்களை வைத்து எடுத்து வர, அவனது பார்வையோ அவளை மெச்சுதலாக நோக்கியது.

“என்ன தான் கோபமாக இருப்பது போல வெளியே காண்பித்தாலும் மனதில் ஒரு ஓரத்தில் பாசம் இருக்கத்தான் செய்கிறது போல, எனக்கு இதெல்லாம் முன்னாடியே தெரியும் ராதாம்மா, என் ராதா என்னோடு ரொம்ப நாளைக்கு எல்லாம் கோபமாக இருக்க மாட்டா” என்றவாறே கிருஷ்ணா அவள் கொண்டு வந்து கப்பை எடுக்கப் போக, அவளோ தன் கையிலிருந்த ட்ரேயை சட்டென்று பின்னிழுத்துக் கொண்டாள்.

“ஹேய்! என்ன பண்ணுறீங்க?” அனுராதா பதட்டத்தோடு அவனைப் பார்த்து வினவ,

அவனோ, “காஃபி எனக்குன்னு நினைத்தேன்” எனவும்,

“காஃபியா?” அவனை விசித்திரமாகப் பார்த்தவள்,

“இது பூனைக்கு வைக்கும் சாப்பாடு, நான் பட்டினியாக இருந்தாலும் அதுங்களுக்கு வேளாவேளைக்கு சாப்பாடு வைக்கிறது என் பழக்கம்” என்று விட்டு தன் வீட்டின் முன்னால் நின்ற இரண்டு சிறு பூனைகளுக்கு உணவு வைத்து விட்டு திரும்பி வர, கிருஷ்ணா அவளை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு நின்றான்.

“ராதா, நீ பூனைங்க கிட்ட எல்லாம் போவியா?”

“ஏன் அதுங்க என்ன பண்ணுச்சு? நான் அதைப் பார்த்து ஒதுங்கி போகும் அளவிற்கு அது ஒண்ணும் உங்க வீட்டு ஆளுங்க இல்லை”

“ராதா இது தேவையில்லாத பேச்சு, எப்போ பார்த்தாலும் எதற்காக எங்க எல்லோர் மேலேயும் பழி போடுற? அப்படி அவங்க உனக்கு என்ன பண்ணாங்க? அதை எல்லாம் விட நான் என்ன பண்ணேன்?”

“ஏன் இந்த மூணு வருஷமா நீங்க என்ன செவ்வாய் கிரகத்திலயா இருந்தீங்க? இல்லை உங்க வீட்டில் என்ன நடந்ததுன்னு கூட உங்களுக்கு தெரியாதா? அதுவும் இல்லைன்னா உங்க வீட்டில் உங்க கிட்ட யாருமே பேசுறது இல்லையா? எப்போ பார்த்தாலும் எனக்குத் தெரியாதுன்னு ஒரு பதில் சொல்ல மட்டும் தயாராக இருப்பீங்க”

“நீ சொன்னாலும், சொல்லாவிட்டாலும் எனக்கு எதுவுமே தெரியாது தான், அதைப் பற்றி பேசத்தான் நான் ரொம்ப நேரமாக ட்ரை பண்ணுறேன். நீதான் என் பேச்சைக் கேட்கவே மாட்டேங்குறா, ஆனா அதற்கு முதல் இந்த கேள்விக்கு பதில் சொல்லு, நம்ம காலேஜ் முதல் நாள் உனக்கு ஞாபகம் இருக்கா? அன்னைக்கு ஒரு மரத்திற்கு பின்னாடி நீ ஒரு சின்ன பூனையைப் பார்த்து பயந்து நின்ன, ஆனா இன்னைக்கு இவ்வளவு தைரியமாக அதற்கு பக்கத்திலேயே போற, அது எப்படி?”

“உங்களுக்கு ஒரு விடயம் புரியல மிஸ்டர் ஹரிகிருஷ்ணா, வாழ்க்கையில் எல்லாம் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. காலமும், நம்மை சுற்றி இருக்கும் ஆளுங்களும் நம்மை எப்போதும் ஒரே மாதிரி இருக்க விட மாட்டாங்க, ஏதாவது செய்து நம்மை மாற வைத்துட்டே இருப்பாங்க. அது உங்களுக்கு புரியலைன்னா தான் அதிசயம். சரி, நீங்க உட்காருங்க, உங்களுக்கு காஃபி எடுத்துட்டு வர்றேன், அப்புறம் அந்த வாயில்லா ஜீவனுங்களுக்கு வயிறு வலி வந்துடும்” என்று விட்டு அனுராதா மீண்டும் சமையலறை நோக்கிச் செல்ல, கிருஷ்ணா சிறு புன்னகையுடன் அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.

சூடான காஃபி நிறைந்த கப்களை ட்ரேயில் எடுத்து வைத்தவாறே திரும்பிய அனுராதா சமையலறை வாயிலில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணாவைப் பார்த்து, “நீங்க எதற்காக இங்கே வந்தீங்க? போய் ஹாலில் வெயிட் பண்ணுங்க, நான் வர்றேன்” எனவும், அவனோ அந்த இடத்தை விட்டு அசையாமல் தன் கைகளைக் கட்டிக் கொண்டு அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

“கிருஷ்ணா, நான் உங்க கிட்ட தான் பேசுறேன், உங்களுக்கு காது கேட்காதா?”

“அதெல்லாம் நல்லாவே கேட்கும், ஏன் நான் இங்கே நிற்க கூடாதா?”

“முதல்ல நீங்க எனக்குத் தெரியாமல் என் பின்னாடி பாலோ பண்ணிட்டு வந்ததே தப்பு, அதை நான் பெரிதாக்காமல் விட்டேன்னு இன்னும் இன்னும் ஓவராக போறீங்க, என் பொறுமையை சோதிக்காமல் தயவுசெய்து இந்த காஃபியை சாப்பிட்டுட்டு இங்கே இருந்து கிளம்புங்க” என்றவாறே அவள் அவனது கையில் காஃபி கப்பை வைக்க,

அவனோ, “காஃபிக்கு ரொம்ப நன்றி, ஆனா உன்னை நான் தனியாக விட்டுட்டு போக மாட்டேன்” என்றவாறே அவளருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

“கிருஷ்ணா, எனக்கு இப்போ உங்க கூட சண்டை போட நேரம் இல்லை, ஏற்கனவே முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு, ப்ளீஸ் நீங்க இங்கே இருந்து போங்க, உங்களுக்கு என்ன பேசணுமோ அதை நைட் பேசிக்கலாம்” அனுராதா தன் நெற்றியை நீவி விட்டுக் கொண்டே கிருஷ்ணாவின் புறம் திரும்ப, அவனோ அவள் பேசி முடிப்பதற்குள் அவளது மடிக்கணினியை எடுத்து மின்னல் வேகத்தில் அவளது வேலைகளை எல்லாம் செய்து முடிக்க ஆரம்பித்தான்.

“ஐயோ! கிருஷ்ணா, நீங்க என்ன பண்ணுறீங்க? இதற்கு முன்னாடி நீங்க தான் எனக்காக இந்த வேலை எல்லாம் செய்து தந்தீங்களா? முதல்ல அதை என் கிட்ட கொடுங்க” என்றவாறே அவனிடமிருந்த தன் மடிக்கணினியை இழுக்காத குறையாக வாங்கி எடுத்தவள்,

“கடைசியில் உங்க அம்மா சொன்ன மாதிரி எல்லா வேலைக்காகவும் உங்களைத் தான் நான் தங்கி இருக்கணும்னு சொன்னதை உண்மையாக்க ட்ரை பண்ணுறீங்களா?” எனவும், அவனோ அவள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு ஸ்தம்பித்து போய் அமர்ந்திருந்தான்.

“ஏன் ராதா ம்மா இப்படி எல்லாம் பேசுற? நான் உன் மேல் எந்தளவிற்கு காதல் வைத்திருந்தேன்னு உனக்குத் தெரியாதா?”

“உங்க காதலைத் தான் நான் என் கண்ணால் பார்த்தேனே”

“புரியுற மாதிரி சொல்லு, நான் என்ன பண்ணேன்? உன் மேல் உண்மையாக நேசம் வைத்தது தப்பா?”

“ஆமா, தப்புதான். ஆனா உண்மையாக காதல் பண்ணது நீங்க இல்லை, நான் தான், அதுதான் நான் என் வாழ்க்கையில் பண்ண பெரிய தப்பு. உங்க அம்மா ஆரம்பத்திலிருந்தே நீங்களும், நானும் சேரக்கூடாதுன்னு என்ன என்னவோ சொன்னாங்க, அதை எல்லாம் தாண்டி உங்களை நம்பியிருந்தேனே அதுதான் நான் பண்ண தப்பு. என்ன பிரச்சினை வந்தாலும் நீங்க எனக்குத் துணையாக இருப்பீங்கன்னு நம்பினேனே அதுவும் பெரிய தப்பு. இது எல்லாவற்றிற்கும் மேலே என் அம்மாவையும், அப்பாவையும் கொலை பண்ண நீங்க துணையாக இருந்திருக்க மாட்டீங்கன்னு என் உயிர் போகும் நேரத்திலும் நம்பியிருந்தேனே அதுதான் நான் பண்ண மிகப்பெரிய தப்பு” என்றவாறே அனுராதா கிருஷ்ணாவின் சட்டைக் காலரை தன் பலம் கொண்ட மட்டும் இறுக்கி பிடித்து நிற்க,

அவனோ, “கொலையா?” என்றவாறே அவளைப் பார்த்து அதிர்ச்சியாகி நின்றான்.

“ஏன் இப்போதும் உங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லலன்னு சொல்லப் போறீங்களா?”

“ஐயோ! ராதா, நீ சொன்னால், சொல்லாவிட்டாலும் எனக்கு எதுவுமே தெரியாது. அதோடு உன் அம்மா, அப்பாவைப் போய் நான் எப்படி கொல்ல நினைப்பேன்? நான் என் அம்மா, அப்பா மேல் எந்தளவிற்கு அன்பும், பாசமும் வைத்திருக்கிறேனோ அதே அளவிற்கு தான் அவங்க மேலேயும் அன்பும், பாசமும் வைத்திருந்தேன், அது உனக்கும் நல்லாவே தெரியும், அப்படியிருக்கும் போது உன்னால் எப்படி இப்படி அபாண்டமான ஒரு பழியை என் மேல் போட முடியுது?”

“அபாண்டமான பழி? வாவ்! சூப்பர் ஆக்டிங் கிருஷ்ணா, சூப்பர். இப்படி அப்பாவி மாதிரி நடிச்சு இன்னும் எத்தனை நாளைக்கு என்னை ஏமாற்றப் போற? நான் ஒண்ணும் வீணாக உன் மேல் பழி போடல, என் கண்ணால் பார்த்ததையும், காதால் கேட்டதையும் தான் சொல்லுறேன். அன்னைக்கு என் அம்மாவையும், அப்பாவையும் என் கண் முன்னாடி பறி கொடுத்துட்டு அந்தக் கஷ்டத்தையும் தாண்டி உன்னைத் தான் நான் தேடி வந்தேன், அப்போ நீ உன் அம்மா, அப்பாவோடு என்ன பேசிட்டு இருந்தேன்னு நீ வேணும்னா மறக்கலாம், ஆனா நான் மறக்க மாட்டேன்”

“நான்… நான் என்ன பேசுனேன்?”

“ஓஹ்! அப்போ அதுவும் ஞாபகம் இல்லை, அப்படித்தானே?”

“ராதா சத்தியமாக நான் பொய் சொல்லல, என்னை நம்பு”

“உங்களால் மட்டும் எப்படி இப்படி வாய் கூசாமல் பொய் சொல்ல முடியுது கிருஷ்ணா”

“ராதா, நீ எல்லையை மீறிப் பேசுற”

“ஓஹ்! அப்போ உங்க வீட்டு ஆளுங்க எனக்கு பண்ணது மட்டும் சரியா? உங்களைக் காதலித்தேன்னு ஒரே ஒரு காரணத்திற்காக தானே எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்தாங்க”

“நீ ஏதோ தப்பாக புரிந்து இருக்க, அவங்க அப்படி எல்லாம்…”

“போதும் கிருஷ்ணா, போதும். அன்னைக்கு நான் என் கண்ணால் பார்த்தேன், உன் அம்மா கிட்ட அவங்க நினைத்த காரியத்தை ரொம்ப வெற்றிகரமாக செய்து முடிச்சுட்டேன்னு அவ்வளவு சந்தோஷமாக நீ சொல்லிட்டிருந்த, அப்போ கூட நீ வேறு எதைப்பற்றியோ பேசுறேன்னு நினைத்து உனக்கு நான் கால் பண்ணேன், ஆனா நீ ‘இவ தொல்லை இன்னும் முடியல’ன்னு சொல்லிட்டு என் போனை கட் பண்ண. எல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு கிருஷ்ணா, நல்லாவே ஞாபகம் இருக்கு”

“இல்லை ராதாம்மா, நீ இப்போவும் தப்பாகத் தான் நினைத்திருக்க, ஒரேயொரு தடவை நான் சொல்ல வர்றதை நம்பும்மா”

“உன்னை நம்பி நம்பி நான் இழக்கக் கூடாதது எல்லாம் இழந்துட்டேன் கிருஷ்ணா, இனி என் கிட்ட இழக்க எதுவும் இல்லை, என் உயிர் மட்டும் தான் இருக்கு, ஆனா அதை அவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுப் போக விட மாட்டேன், ஏன் தெரியுமா? நான் எனக்குள் இருந்த அந்த பழைய அனுராதாவை மொத்தமாக அழிச்சுட்டு உன்னைத் தேடி வந்ததே நீ பண்ண தப்புக்கு தண்டனை கொடுக்கத்தான். அதை முழுமையாக நிறைவேற்றாமல் அவ்வளவு சீக்கிரம் நான் ஓய மாட்டேன்” என்றவாறே அனுராதா அவனது சட்டைக் காலரைப் பற்றியிருந்த தன் கையை உதறவிட, அவள் தன் கையை உதறிய வேகத்தில் கிருஷ்ணா அவளை விட்டும் இரண்டடி தள்ளிப் போய் நின்றான்.

“அப்போ என் வார்த்தையில் உனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லையா?” கிருஷ்ணா கெஞ்சலாக அவளைப் பார்த்து வினவ,

தன் கண்களை மூடி ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டவள், “நான் உன் பக்கத்தில், உன் வீட்டிலிருந்து உங்க எல்லோருக்கும் தண்டனை கொடுக்கலாம்ன்னு தான் இவ்வளவு ரிஸ்க் எடுத்து உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன், ஆனா அது எனக்குத் தான் மறுபடியும் தண்டனையாக வந்து அமைந்திருக்கிறது, எல்லாம் என் நேரம். தயவுசெய்து இங்கே இருந்து போயிடு” என்றவாறே தன் வேலைகளை பார்க்கத் தொடங்க, கிருஷ்ணா அவளது பேச்சைக் கேட்டு தனக்குள் மேலும் மேலும் முற்றாக உடைந்து போனான்.

‘என்னால் கொலை பண்ணும் அளவிற்கு யோசிக்க முடியும்னு நீ எப்படி ராதா நினைச்ச? உன்னோடு சந்தோஷமாக வாழணும்னு தானே நான் அவ்வளவு ஆசைப்பட்டேன், இப்படி உன்னைத் தனிமரமாக நிறுத்தவா நான் ஆசைப்பட்டேன்? உனக்கும், எனக்கும் நடுவே இருக்கும் இந்தப் பிரிவிற்கான தீர்வு எங்கே, யாரைக் கேட்டால் கிடைக்கும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும். நான் அங்கே பேசிக்கிறேன்’ அனுராதா தன் மேல் சுமத்தியிருக்கும் இந்த வீணான பழியை தன்னை விட்டு அகற்றியே தீர வேண்டும் என்று உறுதியான முடிவெடுத்துக் கொண்ட கிருஷ்ணா தனது கேள்விக்கான பதிலைத் தேடி தன் வீட்டை நோக்கி மின்னல் வேகத்தில் புறப்பட்டுச் சென்றான்……