நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான் -24

சொன்னது போலவே மதிய உணவு இடைவெளியில் ஹோட்டலிலிருந்து உணவு வந்தது. பறிமாற வந்தவர்களை வேண்டாம் என்று அனுப்பிவிட்டவள் அவனை பரிமாறும்படி பணித்தால்.

முதலில் தயங்கியவன் பின் ஒருவாறு தன்னை நிலை நிறுத்திக்கொண்டு தனியாளாய் பரிமாறியவனுக்குள் தயக்கத்தின் தடம். 

அவன் அந்த அலுவலகத்தின் பழைய முதலாளி என்பதால் சிலர் தயங்க, சிலர் கிடைத்ததடா வாய்ப்பு என்று அவனை பழி வாங்க முயன்றனர்.

“யார் யாருக்கு என்ன என்ன வேணுமோ? கேட்டு வாங்கிக்கோங்க, தயக்கம் வேண்டாம்” கம்பீரமாய் உரைத்தாள் ஆத்மி.

அவள் வார்த்தையில் எல்லோருக்கும் சற்றே தைரியம் வர ஆள் ஆளுக்கு ரசம், கூட்டு, பொறியல், சாம்பார் என்று அடுக்க இரு கைகள் பத்தாது அவதியுற்றான் தேவ்.

அங்கும் இங்கும் கணமான பாத்திரங்களை ஏந்தியவனின் கைகளிலும் கால்களிலும் வலி ஏற்பட, ஒருவாறு தன்னை சமாளித்து நிமிர்ந்தான்.

அவன் உபசரிப்பில் எல்லோரும் திருப்தியாக உண்டுவிட்டு எழுந்தனர்.

எச்சில் இலைகளை எடுக்க போனவனை தடுத்தவள், “நான் சொல்றதை மட்டும் நீ பண்ணினா போதும், வேற எதுவும் பண்ண தேவையில்லை புரிஞ்சதா?”என்றாள் தேவ்வின் மில்கி.

அவனது உள்ளத்தை மயிலிறகால் வருடியது அந்த வார்த்தை. ஆனால் அடுத்து அவள் செய்த காரியத்தில் அவனது உள்ளம் பல கீறல்களை கண்டது.

அவனது எண்ண ஓட்டத்தை படித்தவள், சாம்பார் வாளியிலிருந்து சிறிதளவு எடுத்து தன் செருப்பில் ஊற்றிக்கொண்டவள் அதை கழற்றிவிட்டு “கையில எடுத்திட்டு போய் வாஷ் பண்ணிட்டு வா” என்றாள் அதிகாரமாக. 

அந்த வார்த்தையில் அவன் மனம் ஆட்டம் கண்டது.

சிங்கமாய் வளம் வந்து, கர்ஜனைகள் பல கொடுத்த இதே அலுவலகத்திலா இது நடக்க வேண்டும்? இடம்  பெயர், ஊர் பெயர், கண்டம் பெயர் தெரியாத ஏதோ ஒரு நாட்டில் நடந்திருக்கக்கூடாதா மனம் முழுக்க வலியின் சுவடுகள்.

பல முறை நாம் விரும்பி செல்லும் நமக்கே சொந்தமான ஒரு இடத்தில்,ராஜாவாய் வாழ்ந்த இடத்தில்  இது போல் நடக்கும் என்று யாரும் கற்பனை பண்ணியிருப்பார்களா? 

இவனும் விதிவிலக்கல்ல இவன் கற்பனையிலும் நினைக்கவில்லை இப்படி நடக்கும் என்று.

அவளது செருப்பை கையில் எடுத்துக் கொண்டவனும், அவள் சொன்னதை செய்ய, அவனை கோபப்படுத்தி பார்க்கும் ஆத்மியின் முயற்சி எப்பவும்போல் தோல்வியை தழுவ அந்த எரிச்சலையும் சேர்த்து தேவ்விடம் காட்டினாள்.

செருப்பை கழுவி எடுத்து வந்தவன், அவளது கால்களில் அதை அணிய வைக்கவென்று அவளது காலை பற்ற விதிர்விதிர்த்து போனவள். அவனிடம் தன் காலை கொடுக்காமல் தடுமாற ஒரு காலில் நிற்க முடியாமல் அவன் மீதே சரிந்திருந்தாள். இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஊழியர்களும் சென்றுவிட.

தன்னவளின் இடையில் இரு கரம் ஊன்றி அவளை விழாமல் தடுக்க வேண்டி அவன் உதவ, கண்களை இறுக மூடியிருந்தவள். தான் விழாததை எண்ணி கண்களை திறந்து பார்க்க அவனுடைய அணைப்பில் இருப்பது புரிய வெடுக்கென அவனது கையை தட்டிவிட்டவள். அவனது கன்னத்தில் பளார் என்று ஒன்று வைத்திருந்தாள்.

“கீழே விழுந்தா விழ வேண்டிதானேன்னு விட்டிருக்க வேண்டியது தானே, நீ ஏன்டா என்னை தொட்ட? கீழே விழுந்தா அதிகபட்சம் இடுப்பு வலிக்கும் அவ்ளோதானே, நீ தொட்டால் அருவெறுப்பா இருக்கு, எனக்கே என்னை புடிக்கலை” கோபமாக கத்தியவள்

 “இன்னொரு முறை நீ என்னை தொட்டால் ஆசிட் நானே எனக்கு ஊற்றிப்பேன்” மிரட்டலாக வந்த வார்த்தையில்  மிரண்டு போய்விட்டான் தேவ்.

“இல்லை நான் வேணும்னே தொடலை” என்று அவன் ஆரம்பிக்க

கை காட்டி அவனை “நிறுத்து” எனக் கூறியவள் “போதும், உன் விளக்கத்தை நான் கேட்கலை, நான் கேட்டா மட்டும் நீ பதில் சொன்னா போதும்” என்று காரமாக உரைத்துவிட்டு சென்று விட்டாள்.

தான் கூறிய ஒவ்வொரு வார்த்தையுமே இப்படி தன்னை துரத்தி வரும் என்று நினைத்து பார்க்கவேயில்லையே. அவளின் ஒவ்வொரு வார்த்தையும்  ரணமாய் வலிக்க செய்தது தேவிற்கு. குறிப்பாக அவன் செய்த ஒவ்வொரு செயலும் அவளை எந்த அளவு பாதித்திருக்கும் என்பதும் புரிய மனம் கலங்கியது.தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்கள் முன்னிலையில் ஏற்பட்ட அவமானம்.

இனி இந்த அலுவலகம் பக்கம்  நிமிர்வாக வரமுடியாதபடி ஆகிவிட்டதே.

************

அன்று மாலை காரில் ஏறி அமர்ந்தவள், அவனை ஒரு இல்லத்திற்கு அழைத்துசென்றாள். அவனிற்கு ஏதோ புரியும்படி இருந்தது.

இல்லத்தின் உரிமையாளரிடம் ஏதோ பேசியவள், இவனிடம் வந்து “வா” என்று கூறி முன்னே நடந்தாள்.இவனும் பின்தொடர அங்கு சின்ன சின்ன அழகு மலர்கள் இருக்க அவர்களிடம்

“ஹலோ குட்டி ஹீரோஸ் அண்ட் ஹீரோயின்ஸ், இன்னைக்கு நைட் டின்னர் உங்களுக்கு நாங்க தான் வழங்கப்போறோம், உங்க கூட விளையாடி, பேசி , ஜாலியா இருக்க போறோம் பண்ணலாமா?”என்றாள் ஆத்மி குதூகலத்துடன்.

எல்லா மழலையும் “ஜாலி” என்று ஒரு சேர கத்தி உற்சாகமூட்ட அந்த உற்சாகம் அவளையும் தொற்றிக் கொள்ள அவர்களுடன் குழந்தையாகவே மாறி போன தன்னவளை தன் கண்களில் நிரப்பிக்கொண்டவன் இத்தனை நாளாய் அவள் தொலைத்திருந்த சந்தோஷத்தை அவளது விழிகளில் கண்டான்.

அவனது பார்வையை கண்டுக்கொண்டவள், அவனிடம் வந்து ” என்ன, இவ்ளோ சந்தோஷமா இருக்காளே, எப்படி அதை கெடுக்கலாம்னு யோசிக்கிறியா? நான் நிம்மதியா இருந்த உனக்குத்தான் பிடிக்காதே”என்று ஊசியாய் வார்த்தையை இறக்க கலங்கி போனவன்.

“இல்ல டா, நான்…”என்று அவன் ஆரம்பிக்க.

“உன்கூட பேசுற அளவிற்கு எனக்கு பொறுமைலாம் கிடையாது, நீ பண்ணின பாவங்கள் கொஞ்ச நஞ்சம் கிடையாது, நீ எல்லாம் பண்ணி முடிச்சுட்ட, அந்த பாவம் உன்னை சும்மா விடாது, நானும் உன்னை சும்மா விடமாட்டேன்…” கண்களில் அனலோடு சொன்னவள்

“போய், சாப்பாடு வந்திருச்சா பாரு” என்று அனுப்பி வைத்தாள்.

************

அதே நேரம் இங்கே, சாரு தன் மகனை பற்றி தான் நினைத்துக் கொண்டிருந்தார். அவனை அவர் உணர்ந்த தருணத்தையும்.

அவனுடைய இருபதாவது வயதில் அவன் கல்லூரி படித்துக்கொண்டிருந்த சமயம், கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டான் தேவ், பத்து நாட்கள் அவன் காய்ச்சலில் துடித்த சமயம், சாரதா அவனை பூப்போல் தாங்கிக்கொண்டார்.

 

தாயிற்கு தன் மேல் பாசமில்லை என நினைத்துக்கொண்டிருந்தவனின் எண்ணமும் காணாமல் போன தருணம் அது.

நடு இரவில் கடும் காய்ச்சலில் பிதற்றுபவனின் அருகில் இருந்து அவனை பார்த்துக்கொண்டதாகட்டும், சாப்பாடு ஊட்டியதாகட்டும், அவன் வாந்தியை தன் கரங்களில் ஏந்தியதாகட்டும் உலகில் உள்ள எல்லா தாயும் இப்படித்தான் என்கிற முடிவிற்கு வந்தான் தேவ்.

நமக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும்போது ஒருவர் நம்முடனே இருந்து ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறார் என்றால் அவர் நம் மேல் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்ப்பார்க்காது அன்பு செலுத்துக்கிறார் என்று பொருள். அந்த நேரம் தான் நம் உள்ளம் அன்பிற்காக ஏங்கும். அப்பொழுது நம்மை தாங்கும் உறவை எப்பொழுதும் மறக்க நினைக்க மாட்டோம்.

அதுவரை தாயுடன் நல்ல உறவை பேணாதவன் அதன் பின், தாயிடம் அதே அன்பை எதிர்பார்த்தான், அவருமே அவனை நன்றாக பார்த்துக்கொண்டார். மனம் விட்டு இருவரும் பேசிக்கொண்டனர்.

“அம்மா, உங்களுக்கு என்னை பிடிக்காதா?”என்று அவன் வினவிய நொடி சாரதாவிற்கு புரிந்தது பிள்ளை எப்படி ஏங்கியிருக்கிறான் என்று.

“நிச்சயம் இல்லை கண்ணா, தப்பு தான் உன்னை நான் கவனிக்காம விட்டது தப்பு தான், என்னை பொறுத்தவரை நான் உன்னை வளர்க்க தகுதியில்லாதவள்னு நான் நினைத்தேன், அதனால் தான் உன்னை நான் வளர்க்கலைன்னு” உணர்வற்று இருந்தது அவர் குரல்.

அவன் “புரியலை அம்மா” என்றதும் அதனை விளக்கினார்.

மென்மையாக புன்னகைத்தவர் “உன் அம்மா இப்பொழுது தான் தைரியமான பெண், முன் அப்படி அல்லவே, நான் ஏமாற்றப்பட்டேன், நான் புத்திசாலி இல்லையே இருந்திருந்தால் அப்படி நடந்திருக்காதே, அதை விட உன் சாயலில் இருக்கும் இன்னொருவரின் மேல் எனக்கு இருக்கும் கோபத்தை நான் உன் மேல் காட்டிவிடுவேணோங்கிற பயம். இன்னும் சொல்லனும்னா பயம் தான், உன்னை சரியா வளர்க்க முடியாதோங்கிற பயம்” ஆற்றாமையோடு சொன்னவர் சற்று இடைவெளி விட்டார்.

“அதனால் தான் ஒரு ஆசிரமத்தை தேர்ந்தெடுத்தேன், அங்கு நாம் ஏழைங்கிற பிம்பத்தை உனக்குள் பதியவைக்க முயன்றேன், அங்கு பிள்ளைகளோடு சேர்ந்து நீ ஒழுக்கமானவனாக வளர்வாய் என்று நினைத்தேன். ஆனால், நான் உன்னை நீ சரியாகத்தான் இருக்கிறாய் என்று நானே நினைத்து விட்டது, தான் தவறாய் ஆனது.”என்றார் வருத்தத்துடன்.

“இல்லை அம்மா, நான் உங்களை ரொம்ப தேடுவேன், இப்படியெல்லாம் செய்தாலாவது நீங்கள் என்னை கவனிப்பீர்களானு தான் இப்படியெல்லாம் முதலில் செய்ய துவங்கினேன், நாளாக நாளாக அது எனக்கு பிடிச்சிருந்தததால் அப்படியே பழகிட்டேன்” என்றான் ஒருவித குற்றவுணர்வோடு.

“தவறு தான் நான் உன்னை கவனிக்காதது, ஆனால் இன்று நான் உயிரோட இருக்க காரணமே அன்று என் வயிற்றில் உதித்த நீ தான், உன்னை நான் வெறுக்கவுமில்லை ஏற்றுக்கொள்ளவுமில்லை, இரண்டிற்கும் இடையில் தத்தளித்தேன். இன்னொன்னு உன்னை வளர்த்து உன் அப்பாவிடம் ஒப்படைக்க விரும்பினேன். அப்படி கொடுக்க வேண்டுமானால் நீ என்னை விட்டும் நான் உன்னை விட்டும் தள்ளி இருக்கிறதுதானே சரி, இருவரும் ஒருவரின் மேல் ஒருவர் பாசம் கொண்டால் அது கடினமல்லவா?” என்றவரின் முகம் கவலையில் தோய்ந்து இருந்தது.

ஒரு அசாத்திய அமைதி அங்கே அதன் பின் நிலவ தேவ் மெதுவாக ஆரம்பித்தான்.

“அப்பா உங்களுக்கு என்ன பண்ணினார்?” என்றான் கேள்வியாக. 

அவனை ஒரு நிமிடம் பார்த்தவர், “அதை கூற நான் பிரியப்படவில்லை, உன் தந்தை எப்படிப்பட்டவர் என்பது அவரை நீ சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்பொழுது தெரிந்துக்கொள்” என்று முடித்துக்கொண்டார்.

சாரதாவை பொறுத்தவரை ஒருவர் நமக்கு துரோகமே செய்திருந்தாலும் அது அவர் நமக்கு செய்தது, அதை இன்னொருவரிடத்தில் அவரை பற்றி கூற அவசியமில்லையே, அவர்களிற்கு அவர் நல்லவராக இருக்கலாமே, அப்படி கெட்டவராய் இருந்தால் அவர்களே புரிந்துக்கொள்வார்ஙளே.இன்னொன்று நாம் அவர்களை தவறாய் புரிந்துக்கொண்டிருக்கலாம். நமக்கு அவர் செய்ததிற்கான நிச்சயம் தண்டனை கிடைக்கும் அதை நாம் மற்றவரிடம் கூறி அவரை அவர்களிடமும் கெட்டவர் ஆக்காமல் இருக்கலாமே இது சாரதாவின் எண்ணம்.

அதன் பின் தாயின் செல்ல பிள்ளை ஆகியிருந்தான் தேவ். அவருக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்தான்,  தாயிடம் உரிமையோடு பழகினான். அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டான். இருந்த போதும் அவனின் செலவுகள் யாவும் சாரதாவால் பார்க்கப்பட்டது.

அப்போதைக்கு அவனுக்குள்ளிருந்த முரடன் காணாமலும் போயிருந்தான், நாட்கள் அழகாக தெளிந்த நீரோடை போலவும் சென்றது அவர் திரும்ப அவர்கள் வாழ்வில் வராத வரை.

தேவ்வின் இருபத்தியொன்றாவது பிறந்த நாள் விழாவை கொண்டாட கேக் ஆர்டர் செய்ய சென்றிருந்தார் சாரதா.

கேக் வாங்கிவிட்டு திரும்புகையில் ஒருவர் மேல் இடித்துவிட அவசரமாக “சாரி” சொல்லிவிட்டு நிமிர்ந்தவரின் விழிகளில் அறிவழகனின் பிம்பம். 

அங்கு அறிவை காண்போம் என்று சாரதா கனவிலும் நினைக்கவில்லை.

அவர் “சாரு”என்றழைக்க, அவரை கைநீட்டி தடுத்தவர் “நீங்க யாருனே எனக்கு தெரியாது வழியை விடுங்க” என்று காட்டமாக உரைக்க.

“ஒரு நிமிடம் நான் சொல்றதை கேளேன்…”என்று அவர் ஆரம்பிக்கவும் தேவ் அவனது தாயை கூப்பிட வரவும் சரியாக இருக்க அங்கு ஒருவன் தன் தாயிடம் வம்பிழுப்பது போல் தெரிய யோசியாது கோபத்தில் அறிவின் சட்டையை பற்றியிருந்தான் தேவ்.

சாரதா அவனை தடுக்க படாதபாடுப்பட்டவர் எப்படியோ அழைத்துக்கொண்டு வீடுவந்தார்.

அவர்களை பின்தொடர்ந்து அவரும் வருவதை கண்டவன் தாயை வீட்டில் விட்டுவிட்டு வந்து அவரை உக்கிரமாக முறைக்க.அவரோ “தம்பி நீ?” என்றார் கேள்வியாக.

அதே முறைப்போடு”அதை நான் கேட்கணும்? யாருய்யா நீ? உனக்கு என்ன வேணும்?”என்றான் .

“நான் அறிவழகன், சாருவை பார்க்கணும்” என்றார் தவிப்பாக.

அறிவழகன் என்கிற பெயர் அவனது மூளையில் மின்னலடிக்க ஒரு நிமிடம் ஸ்தம்பித்தவன், “எதுக்கு நீங்க அவங்களை பார்க்கணும்?என்றான் இம்முறை மரியாதையை குரலில் தேக்கி.

“அது வந்து…நீ?”என்று அவர் தயங்க.

“எல்லாம் அங்களுக்கு வேண்டப்பட்டவங்க தான் சொல்லுங்க?”என்றான் அவன் அவர்களின் மகன் என்பதை மறைத்து.

அவர் மேலும் தயங்க, “இங்க பாருங்க சொல்றதுனா சொல்லுங்க, இல்லாட்டி கிளம்புங்க” என்றான் கடுப்புடன்.

“இல்லைபா நான் அவளிடம் மன்னிப்பு கேட்கணும்”என்றார் அமைதியாக.

“எதுக்கு?”என்றான் ஒற்றை புருவத்தை உயர்த்தி.

***********