நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-28

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-28

அவனின் ஒரு நிமிடத்தில் ‘இப்போ என்ன?’ என்று கடுப்புடன் நினைத்தவள் அதே இடத்தில் அவனுக்கு முதுகு காட்டி நிற்க.

 

அவள் நின்றதும் சற்று யோசித்தவனுக்கு எங்கிருந்து ஆரம்பிக்க என்பது புரியாது அவன் விழி பிதுங்க, சற்று நேரம் பொறுத்துப்பார்த்தவள் அவனை நோக்கி திரும்பினாள்.

 

அவனது குழப்பமான முகத்தை பார்த்தவள் ‘இவன் தானே எல்லாத்தையும் குழப்புவான் இப்போ இவனே எதுக்கு குழம்புறான்’ என்று மனதோடு நினைத்தவள்.

 

“ஒன்னுமில்லைன்னா நான் போகவா”என்றாள் அவனிடம்.

 

“இல்ல…இரு உன்கிட்ட பேசணும்”என்றான்.

 

மறுபடியும் சற்று நேரம் அமைதியே நிலவ…கடுப்பானவள் “சீக்கிரம் சொல்றியா, நான் சாரதாம்மாவை பார்க்க போகணும்”என்றாள்.

 

“இப்போ தானே பார்த்திட்டு வர, பரவால கொஞ்ச நேரம் கழிச்சு போ”என்றான்.

 

அவனை இவள் முறைக்க, “பேசணும், பேசணும்னு சொல்ற அப்புறம் அமைதியாவே இருக்க, என்ன பிரச்சனை உனக்கு?”என்றாள் கோபத்தோடு.

 

“கொஞ்சம் இரேன் ப்ளீஸ்…”என்றான் தேவ்.

 

“பார்ரா…உன் வாயிலே ப்ளீஸ் எல்லாம் வருமா… இதுவும் நல்லா இருக்கு”என்றாள் ஏளனமாக.

 

“ப்ளீஸ் ஆத்மி”என்றான் தேவ்.

 

“ஆஹான், அடடே உனக்கு தலையில எதுவும் அடிப்படலையே, எனக்கே தலையே சுத்துது நீ இப்படி பேசுறதை பார்த்து”என்றாள் குதர்க்கமாக.

 

“இதான் இதான் இப்பவே இப்படி பேசுற, உண்மை தெரிஞ்சா நீ எப்படி ரியாக்ட் பண்ணுவியோனு தான் எனக்கு யோசனையா இருக்கு”என்றான்.

 

“உண்மையா? இன்னும் என்ன உண்மை சொல்லு அதையும் கேட்டுறேன், எதை எதையோ தாங்கிட்டேன் நீ சொல்ல போறது எப்படியும் நான் அனுபவித்ததுக்கு ஈடாகாது, அதனாலே ஒன்னும் பிரச்சனையில்லை நீ சொல்லு”என்றாள் அவள் அழுத்தமாக.

 

“என்ன சொல்ல சொல்ற ? நீ அனுபவித்தது எல்லாமே என்னோட தவறாலன்னு எப்படி சொல்லுவேன், அதை எப்படி சொல்லுவேன்”என்று அவன் கத்த.

 

ஒரு நிமிடம் ஸ்தம்பித்தவள், தான் சரியாகத்தான் கேட்டோமா என்று உறுதி செய்ய மறுபடியும் “என்ன சொன்னா?”என்றாள் அமைதியாக.

 

அவன் மௌனம் காக்கா, அதில் கடுப்பானவள் ஆக்ரோஷமாக அவனது சட்டை காலரை தன் இரு கைகளால் பற்றியவள் “சொல்லி தொல டா என்ன சொன்ன இப்போ”என்று கத்த.

 

“தப்பு பண்ணிட்டேன், நான் தப்பு பண்ணிட்டேன், ஒரு பாவமும் அறியாத உன்னை தேவையில்லாமல் கஷ்ட்டப்படுத்திட்டேன், உன் கிட்ட சாரி கூட கேட்க முடியாத அளவு பெரிய பெரிய பாவத்தையெல்லாம் பண்ணிட்டேன்”என்று அவனும் உணர்ச்சிகளின் பிடியில் கத்த.

 

அவனது சட்டையிலிருந்து தன் கைகளை எடுத்தவள், அதிர்ச்சியோடு அதே இடத்தில் பொத்தென்று அமர்ந்துவிட்டாள்.

 

அவளது நிலையை பார்த்தவன், அவளது தோளில் ஆறுதலாய் கை வைக்க, அவனது கைப்பட்டதும் ஆக்ரோஷமாய் எழுந்தவள்,

 

“செறுப்பு பிஞ்சிடும்…கையை எடுடா”என்றிருந்தாள்.

 

அவளது இந்த வார்த்தையை எதிர்ப்பாராதவன், ஒரு நிமிடம் அதிர்ந்து நிற்க, அவனது முகத்தை கோபமாய் பார்த்து நின்றிருந்தவளும் அக்னி பிழம்பாய் காட்சி அளிக்க.

 

தன்னை மீட்டுக்கொண்டவன் “இல்லை ஆத்மி…”என்று கூறி கொண்டே அவளை நெருங்கி போக.

 

“ம்ப்ச்”என்று சலித்தவள், செருப்பை கையில் எடுத்திருந்தாள், “சொன்னா புரியாதா உனக்கு? செஞ்சு காட்டவா?”என்றாள் இம்முறை.

 

தேவ் அவளையும் செருப்பையும் மாறி மாறி பார்த்தவன், தள்ளி போய்விட.

 

செருப்பை கீழே போட்டவள், வெளியே நடக்க, “ஆத்மி நில்லு, ஒரே ஒரு நிமிஷம் நான் உனக்கு புரிய வைக்கணும்”என்று கெஞ்ச.அவள் நடந்துக்கொண்டே இருக்க.அவளை நிறுத்தும் வழி அறியாது விழி பிதுங்கியவன் ஓடி சென்று மெயின் டோரை பூட்டியிருந்தான்.அதில் சினம் தலைக்கேற காளியாக மாறியவள் அவனது கன்னத்தில் பளார் என்று ஒன்று வைத்திருந்தாள்.

 

“கதவை திற டா “என்னும் கர்ஜனையோடு.

 

அவளது அடியை பெற்றுக்கொண்டவனின் இரு கன்னங்களும் தீச்சுட்டாற் போல எரிய அதை பொறுத்துக்கொண்டவனும் “நான் சொல்றதை கேளேன்…”என்று கெஞ்சினான்.

 

மறுபடியும் அவனது சட்டையை பற்றியவள் “எதுக்கு டா கேக்கணும்? ஏன் கேக்கணும்? நீ தானே சொல்லுவ இங்க உன் சத்தம் மட்டும் தான் கேக்கணும் இப்போ நான் சொல்றேன் இங்க என் சத்தம் மட்டும் தான் கேக்கணும்…”என்றாள் அவனை திருப்பி அடிக்க.

 

அவன் ஸ்தம்பித்து நிற்க, அந்த இடைவெளியை பயன்படுத்தி வெளியேறியிருந்தாள் தேவ்வின் மில்கி…

 

தலையில் கை வைத்தப்படி அமர்ந்துவிட்டான் தேவ், அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்பதே புரியவில்லை அவனுக்கு. பேசுவதற்கு இடமே அவள் அளிக்கவில்லையே… இவனை பேச விட்டால் அல்லவா இவன் இவனது நியாயத்தை கூறி. நியாயம் என்று பார்த்தால் ஒன்னுமில்லைதானே, இங்கு யார் மேல் பழி போட? ஆத்மிகா, ஆத்விகா என்ற ஒரே பெயரின் மேலா? இருவரின் தந்தை பெயரும் ஒரேப்போல் இருந்தது மேலா? இவன் அதை தவறாய் புரிந்துக்கொள்ள வைத்த விதியின் மேலா? இந்த விஷயத்திற்கு அவளுக்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத ஒருவளின் மேல் பழி போட்டு அவளது வாழ்க்கையை கேள்வி குறி ஆக்கியது எவ்வளவு பெரிய பிழை.

 

சிறிது நேரம் அமைதியாய் அதே இடத்தில் இருந்தவன், ஒரு முடிவு எடுத்தவனாக அவளை நோக்கி சென்றான்.

 

*************

 

இங்கே, வந்தது முதலே அழுகையில் கரைந்தவளை சாரதா எவ்வளவோ தேற்றியும் அவள் வாயை திறக்காது அழுதுக்கொண்டே இருக்க, என்ன நடந்ததோ என்று கவலை கொண்டார் அந்த தாய்.

 

அன்று அறிவழகனிடம் வீடு பார்க்க சொன்னவர் மறுநாளே தேவ் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் கூடிவந்துவிட்டார் சாரதா, அவருக்கான மருத்துவ உபகரணங்களும் வந்து சேர்ந்திருந்தது. வந்தவர் உடனே, ஆத்மியை கூட்டி வர சொல்ல அவள் வெளியே சென்றிருந்ததால் விட்டுவிட்டார், மறுநாள் காலை தனியாக காரில் வந்ததை கவனித்த அறிவு தான் அவளை இங்கு அழைத்து வந்திருந்தார், சிறிது நேரம் சாரதாவோடு இருந்தவளை சாரதா தான் வீட்டிற்கு சென்று வா என்று அனுப்பியிருந்தார்.

 

அவரை பொறுத்தவரை தன் மகனும் ஆத்மியும் நல்ல முறையில் திருமணம் செய்து உள்ளனர் என்பது மட்டுமே, அவரின் ஆசையை தன் மகன் நிறைவேற்றியுள்ளான். அது மட்டுமே அவரின் எண்ணமாக இருக்க, வீட்டிற்கு சென்று வந்தவள் இப்படி அழுகையில் கரைவதற்கான காரணம் புரியாமல் தவித்தவர், அவளிடம் பாசமாக, கெஞ்சி, உருட்டி மிரட்டி என அத்தனை வழிகளிலும் முயன்றும் அவள் வாயை திறக்கவேயில்லை….

 

அவர் அவளிடம் மறுமுறை விசாரிக்கும்பொழுதே அங்கு வந்து சேர்ந்திருந்தான் தேவ், அவனை பார்த்து ஆத்மி முகத்தை அந்த பக்கம் திருப்பிக்கொள்ள, அவனும் அமைதியாய் சென்று அவனது அன்னைக்கு மறுபுறம் அமர்ந்துக்கொண்டான்.

 

அங்கே ஒரு அசாத்திய அமைதி நிலவ… அறிவழகனும், சாரதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள.தொண்டையை கணைத்தவன் “அம்மா”என்றான்.

 

அவனை அவர் கோபமாக முறைக்க, அதை சட்டை செய்யாதவன், “நான் உங்க கூட பேசணும்”என்றான் முடிவாக.அவர் ஏதோ சொல்ல போகையில் அதை தடுத்தவன் “ப்ளீஸ் மா”என்றான் கண்களில் வலியோடு.

 

அன்று ஆத்மியின் தந்தையை சந்தித்து வந்த சாரதாவிற்கு அங்கு நடந்து நிகழ்வினால் பாதிக்கப்பட்டவரின் நிலையை கண்டு வேதனையுற்றவன், ஆத்மியின் தந்தையின் மேல் கொலை வெறியிலிருந்தான், அவனை மிகவும் பயம்முறுத்திய சாரதா அன்றிரவு கண் விழிக்க அவரிடம் அவன் பேச வாயை திறக்கும்பொழுது.

 

“யாரும் என்கிட்ட பேச தேவையில்லை, நான் யாரோடவும் பேச தயாரில்லை… தவறு என் பக்கமும் இருக்கு உன்னை நான் சரியா வளர்க்கலை அதை நான் ஒத்துக்கிறேன், ஆனால் நேற்று வரை என் பையன் முரடன், பிடிவாதக்காரன், திமிராய் இருப்பான், மத்தபடி பொறுப்பானவன் தான் என்று நினைத்திருந்தேன், எனக்கே தெரியாம என் பையனுக்கு இன்னொரு பரிமாணம் இருந்திருக்கு, கடத்தல் காரன்”என்றார் வேதனையோடு.

 

அவன் “இல்ல மா”என்று ஆரம்பிக்க அதை தடுத்தவராக.

 

“ஹையோ, நான் உங்களை தப்பே சொல்லலை நான் தான் உங்களை சரியா வளர்க்கலை அதுக்கு தான் எனக்கு இந்த தண்டனை, நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிட்டு போங்க இனிமே என்கிட்ட பேசாதீங்க எனக்கு அது போதும்”என்று முடித்துக்கொண்டார்.

 

அவன் அங்கேயே நிற்க “எனக்கு தூக்கம் வருது, கொஞ்சம் வெளியே போறீங்களா”என்று கூறியிருந்தார். வேறு வழி இல்லாது வெளியே வந்தவன் உச்சக்கட்ட கடுப்பில் இருந்தான், ‘தான் எதற்காக, ஏன் கடத்தினோம்? என்று எதுவுமே தெரியாது, கடத்தினேன் என்று மட்டும் கூறி நேற்றுவரை அத்தனை ரகசியமாய் இவன் பாதுகாத்து வைத்திருந்த விடயத்தை இப்படி போட்டுடைத்தவர்களின் மேல் வெறுப்பின் உச்சிக்கு சென்றவன், இது அவனுக்கு வேண்டாதவர்கள் வேலையாய் இருக்கும் ‘என்று நினைத்தான்.

 

ஹரியை அழைத்தவன், நியூஸ் சேனலுக்கு சென்று என்ன ஆதாரம்? யார் கொடுத்தார்கள் போன்ற அனைத்தையும் விசாரித்தான். அவர்கள் கூற மறுக்கவே எப்படியோ உருட்டி மிரட்டி அது ஒரு இமெயிலில் வந்த செய்து என்பதை மட்டும் கூறவே, அந்த ஐடியை வாங்கி வர செய்தவன், சைபர் க்ரைமில் அது எங்கிருந்து அனுப்பப்பட்டது என்ற லோக்கஷனை கண்டுப்பிடித்தவர்கள் அது பத்து நாட்களுக்கு முன் அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் உரைத்தனர்.

 

ஆனால் ஆத்மி அவன் கவர்ந்து வரப்பட்டதிற்கு முந்தைய நாள் தான் இங்கு வந்திருக்கிறாள் என்பதை அறியாதவன் அவன் சென்ற போதிருந்தே ஆத்மியை குற்றவாளி என்று முடிவு செய்திருந்தான். தன் அன்னைக்கு ஆத்மியின் தந்தையிற்கும் ஏற்ப்பட்ட வாக்குவாதத்தை கார் ட்ரைவர் மூலம் அறிந்துக்கொண்டவன் கொதி நிலைக்கு சென்றிருந்தான்.

 

மகள் என்னை பற்றி தவறான செய்தி பரப்புவாள், தந்தை அதை மேற்கோள் காட்டி என்னை அசிங்கப்படுத்துவார், என்னமா ப்ளான் பண்ணி எல்லாம் பண்ணியிருக்காங்க என்று அவனுக்கு ஆத்திரம் தலைக்கேற தந்தையையும், மகளையும் ஒருசேர பழிவாங்க நினைத்தே அங்கு சென்று அதன் பின் நடந்ததையும் ஒன்று விடாமல் அவன் உரைக்க. அவளை மிரட்டி திருமணம் செய்தவரை கூறினான்.

 

அறிவழகனிற்கு ஒரு அளவிற்கு நடந்தவை தெரியும் ஆனால் அவரே மகன் இப்படி செய்திருக்கிறான் என்பது அதிர்ச்சியாக இருக்க. ஆடி போய் விட்டார் சாரதா.

 

சற்று நேரம் அமைதியாய் இருந்த சாரதா, “ஆத்மி”என்றார் நா தழுதழுக்க அவள் அவரின் கைகளை பற்றிக்கொண்டாள்.

 

“என்ன மன்னிச்சிடு டா”என்று அவர் கதற அவள் அவரின் கண்ணீரை துடைத்துவிட்டாள். “நான் தப்பு பண்ணிட்டேன் டா, ஒன்னு அவனை கருவிலே அழித்திருக்கணும் இல்ல அவனை பெத்து ஒழுங்காய் வளர்த்திருக்கணும் ரெண்டையும் நான் செய்ய தவறிட்டேன், உன்கிட்டே மன்னிப்பே கேட்க கூட தகுதி இல்லாதவள் ஆகிட்டேன், மன்னிச்சிடு மா”என்று அவர் பிதற்ற.

 

“இல்லை சாரதாம்மா, நீங்க ஏன் மன்னிப்பு கேட்கணும்? அது உங்களுக்கும் உங்க மகனுக்குமானது. அதை பத்தி எனக்கு தேவையில்லை. நான் அவன்கிட்டே கேக்கணும் நிறைய கேட்கணும்”என்றவள் அவனின் முன் போய் நின்றவள்.

 

“சொல்லு உன்கிட்ட எத்தனை தடவை கேட்டேன், நான் என்ன தப்பு பண்ணனேன்? நீ சொன்னியா?சொல்லுடா சொன்னியா? அன்னைக்கே சொல்லி தொலைச்சிருந்தா இத்தனை பிரச்சனை ஆகியிருக்குமா? இப்போ நீ அது என்னனு சொல்றதுனாலே என்ன நடக்க போகுது? ஏதாவது மாறப் போகுதா? சொல்லுடா மண்ணாய் போனது போனது தானே” என்றாள் அழுகையுடன்.

 

“என் வாழ்க்கையை ஒரே நாளில் மாத்தினியே டா, உன்னால எத்தனை இழந்தேன் என்றாள் வேதனையான குரலில், நீ இப்போ வந்துட்ட நான் சொல்றதை கேளுன்னு, இப்போ நீ சொல்றதை கேட்டா என்ன கேட்காட்டி என்ன? எனக்கு எல்லாம் ஒன்று தான்”

 

“உனக்கு தேவையான ஒவ்வொன்னையும் நீ அடைவதற்கு என்னோட சந்தோஷத்தையும், கனவுகளையும் அழிச்ச ஒரு கேவலமான பிறவி நீ, என் கனவை அழிப்பேன்னு பயமுறுத்தின, என அப்பாவையும், அம்மாவையும் எவ்ளோ கஷ்டப்படுத்தின, என் தியா குழந்தை அவளுக்கு கருணை காட்டுனியா? என் கிட்டி வாயில்லாத பிராணி அதையாவது விட்டு வெச்சியா?” என்றவள் ஆக்ரோஷமாய் மாறியிருந்தாள்.

 

“நீ உன்னை பாத்தலே பத்திகிட்டு வருதே, இத்தனை நாளும் இவன் நம்ம கிட்ட இவ்ளோ கொடுமையாய் நடந்துக்கிட்டதுக்கு தெரிஞ்சோ, தெரியாமையோ, ஏதோ காரணம் இருக்கும்னு அமைதியாய் இருந்தேன் தெரியுமா? நீ எங்க அம்மா அப்பா கிட்ட எப்படி நடந்துகிட்டாளும் உன் பெத்தவங்கிட்ட நான் அமைதியாய் தானே போனேன். அது கூட என் மேல என்னால நீ காயப்பட்டிருக்கியோன்னு தான்”

 

“இப்போ நீயே சொல்லிட்ட நான் எந்த தப்பும் பண்ணலைன்னு…இனிமே நீ உன் பக்கத்தை விவரிப்பதால் எதுவும் மாற போவதில்லை நான் அதை கேட்கபோவதுமில்லை, அதை கேட்கணும்ங்கிற அவசியம் எதுவுமில்லை…”என்றவள் சாரதாவிடம் சென்றவள்.

 

“சாரதாம்மா, நான் என்ன பண்ணட்டும், இவன் உங்கள் பிள்ளைங்கிறதை நான் மறந்து, நீங்கள் என் ஆசான் என்கிற உறவிலும் நீங்களும் ஒரு பெண் அப்படிங்கிறதாலேயும் இதை கேட்கிறேன்”என்றாள்.

 

சற்று யோசித்த சாரதா, “இதே மாதிரி எனக்கு ஒரு சூழ்நிலை வந்தப்போ நான் தனியா என் மனசுக்கு எது சரின்னு பட்டுச்சோ, அதை செய்தேன், இது உன் வாழ்க்கை இதில் நீ தான் முடிவெடுக்கணும், இதை நான் அவன் தாயாய் சொல்லவில்லை, நீ உன் கையாலேயும் அவனை தண்டிக்கலாம், அதை இறைவன் கைகளிலும் கொடுக்கலாம் அது அவரவர் நம்பிக்கை சார்ந்தது. அன்று என் நம்பிக்கை இறைவனின் மேல் இருந்த பக்தியில் அதை அவன் கையில் ஒப்படைத்தேன், என் நம்பிக்கை பொய்க்கவில்லை ” என்று அவர் அறிவழகனை பார்த்தார்.

 

அறிவு தலையை தாழ்த்திக்கொண்டார், ஏதோ புரிந்தவள் போல் தன் கண்களை துடைத்துக்கொண்டாள் ஆத்மி, ஆம் முடிவெடுத்துவிட்டாள்.

 

“புரிந்தது சாரதாம்மா, நிறைய முடிவுகளை எடுத்திருக்கிறேன், முதலில் இவரை விட்டு செல்ல போகிறேன்…

என்றாள் ஆத்மி திடமாக.

 

தொடரும்…

Leave a Reply

error: Content is protected !!