நினைவு தூங்கிடாது 6.1

நினைவு தூங்கிடாது 6.1

நிஜம் 6

நான் கொண்ட தவிப்பை

 சொல்லாமலே

புரிந்து கொள்ளும்

 உன் அன்பை

என்னவென்று நான் சொல்ல

ரிஷியின் கைபேசி எண்ணுக்கு, தொடர் அழைப்பு விடுத்து சோர்ந்து போனாள் பாவை. “நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளரின் எண், தற்போது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது, அல்லது தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது. மீண்டும் சிறிது நேரத்திற்குப் பின் முயற்சிக்கவும்” என பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரலே திரும்பத் திரும்ப ஒலித்து, மித்ராவின் பொறுமையை அதிகம் சோதித்தது.

‘ரிஷியுடன் எவ்வாறு பேசுவது?’ என்று புரியாமல் முழித்து நின்றாள் பெண். நேரே மருத்துவமனைக்கு செல்லலாம், ஆனால் ரிஷி அவளை எங்கும் தனியே செல்லக்கூடாது என கட்டளையிட்டிருக்கிறான்.

அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே அவர்களது உறவைப் பற்றிய வதந்திகள் பரவி வரும் நிலையில், மருத்துவமனையில் வைத்து ரிஷியை சந்தித்தால் வதந்திகள் ஊர்ஜீகப்படும்.

அப்படி வதந்திகள் உறுதியாகும் பட்சத்தில், ருத்ராவின் நடவடிக்கையை பெண்ணவளால் கணிக்கவே முடியவில்லை. ருத்ரா நிச்சயம், ருத்ரமூர்த்தியாக மாறி, ரிஷியை வதைத்து எடுப்பான் என்பது மட்டும் உறுதி.

தாங்கள் நினைத்த காரியம் முழுவதும் வெற்றியடையாத நிலையில், எந்த காரணத்தைக் கொண்டும் தாங்கள் மாட்டி கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். அதனால் ரிஷி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் நேரத்திற்காக காத்திருந்தாள். 

கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை கரைந்தது. ரிஷியின் மேனேஜரை அழைத்து,”எப்போ வருவீங்க?” என்றாள் கடும் கோபத்துடன்.

“வந்துட்டோம் மேடம். இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் வந்துடுவோம்.” என்றான் பவ்யமாக.

“எப்ப கேட்டாலும் இதோ வந்துட்டோம், அதோ வந்துட்டோம் என்றுதான் சொல்றீங்களே தவிர, வந்த பாடகாணம். அட்லீஸ்ட் ரிஷி கூட பேசணும்னு சொல்றேன், அதற்கும் நீங்கள் ஏதாவது காரணம் சொல்லி அவாய்ட் பண்றீங்க. நானும் எவ்ளோ நேரமா கேட்டுக்கிட்டே இருக்கேன்?” பொறுமை இழந்து கத்தினாள்.

“இல்ல மேடம். கார்ல தான் வந்துட்டு இருக்கோம். கண்டிப்பா சீக்கிரம் வந்துருவோம்.” உறுதி கொடுத்தான்.

ஆனால் அதை நம்பாத பெண்,”நீங்கள் ரிஷியிடம் போனை குடுங்க நான் பேசணும். இல்லை என்றால் நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க நான் உடனே கிளம்பி வரேன்.” முடிவாக தெரிவித்தாள்.

அவளின் வார்த்தைகளில் பதறிய மேனேஜர்,”என்னது கிளம்பிவரீங்களா?” என வார்த்தையை விட்டான். 

பின்னிருக்கையில் கண்களை மூடி சோர்வாக சாய்ந்தமர்ந்திருந்த ரிஷியின் செவியை, அவன் வார்த்தைகள் தீண்ட, கண்களைத் திறந்த ரிஷி ‘என்ன?’ என பார்வையால் வினவினான்.

“சார் மேடம் உங்க கூட பேசணுமாம். இல்லைனா நீங்க இருக்கிற இடத்துக்கு உடனே வருவேன்னு அடம்பிடிக்கிறாங்க.” என்றான் சிறிது அச்சத்துடன். 

அவன் கூறியதைக் கேட்ட ரிஷியின் முகத்தில் அழகான புன்னகை தோன்றியது. அலைபேசி வேண்டி அவன் கரங்கள் நீண்டது.

அலைபேசியை தன் செவியில் பொருத்தி,”மிரு என்ன இது? சின்ன பொண்ணு மாதிரி அடம்பிடிச்சிட்டு இருக்க? இன்னும் கொஞ்ச நேரத்துல நாங்க வந்திருவோம்.” என்றான் முகத்தில் இல்லாத கடுமையை குரலில் காட்டி.

பெண் அதை கண்டுகொண்டதாக தெரியவில்லை. “வரு, வரு என்ன ஆச்சு? டிவில என்னேன்னமோ சொல்லுறாங்க, எனக்கு ரொம்ப பயமா இருக்கு. உன்னோட போன் ஏன் சுவிட்ச் ஆப்ன்னு வருது? என்கிட்டே பேசணும்னு உனக்கு தோணவே இல்லையா?” என்றாள் குரலில் நடுக்கத்துடன்.

அவளின் நடுக்கத்தை உணர்ந்தவன்,”மிரு காம் டவுன். எனக்கு ஒன்னும் இல்லை. சின்ன ஆக்சிடெண்ட்தான். போன் ஆக்சிடெண்ட்ல உடஞ்சிடுச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல நாங்க வீட்டுக்கு வந்துவிடுவோம். தைரியமா இருக்கணும்.” மனதை வருடும் குரலில் அவளுக்கு ஆறுதல் அளித்தான்.

சிறிது சமாதானமான மித்ரா,”சரி வரு சீக்கிரம் வாங்க. இல்லனா நான் கிளம்பி வந்துருவேன்.” மிரட்டலோடு தொடர்பை துண்டித்தாள்.

‘நமக்காக துடிக்கவும் இந்த உலகத்தில் ஒரு ஜீவன் இருக்கிறது’ என ரிஷி மகிழ்ச்சியில் திளைத்தான். 

ரிஷியின் சிறு வயதிலேயே, தாயும் தந்தையும் நோய்வாய்ப்பட்டு ஒருவர் பின் ஒருவராக இறைவனடி சேர்ந்தார்கள். தனது தந்தை வழி தாத்தாவிடம் வளர்ந்தான் ரிஷி. திரைத்துறையில் காலடி வைத்த சில மாதங்களிலேயே தனது ஒரே உறவினரான தாத்தாவையும் பரி கொடுத்தான். 

தட்டிக்கேட்க ஆள் இல்லாத தனிமை, அளவில்லாத செல்வம், தான் இருக்கும் கவர்ச்சி உலகம், தவறான நண்பர்கள் என அனைத்தும் சேர்ந்து ரிஷியை மது, மாது என்ற போதையில் ஆழ்த்தியது.

இதுதான் உலகம்: இதுதான் சந்தோஷம்: என வாழ்ந்து வந்த ரிஷியின் வாழ்க்கையில், என்று மித்ரா என்ற பெண் நுழைந்தாலோ, அந்த நிமிடத்தில் இருந்து,’உண்மையான சந்தோஷம் எது?’ என்று ரிஷி உணரத் தொடங்கினான். தான் செய்யும் தவறுகள் புரிந்தது. அன்று முதல் மித்ராவிற்கு நல்ல தோழனாகவும், பாதுகாவலனாகவும், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஒழுக்கமான ஆண்மகனாகவும் மாறினான். 

இந்த நிமிடம் ‘மித்ராவை திருமணம் செய்து கொள்’ என்று கூறினாள், எந்த வித தயக்கமும் இன்றி சம்மதம் கூறுவான்.  ஆனால் அது காதலால் அல்ல அவள் மீது கொண்ட அளவற்ற நேசத்தால்.  அந்த நேசம் மித்ராவின் மனதிலும் இருக்கிறது.

அவர்களது நேசம் காதலாக மலருமா?

நண்பர்கள் என்ற எல்லையிலேயே பயணிக்குமா?

ருத்ரேஸ்வரன் எனும் தடைக் கல் அவர்களை சேர அனுமதிக்குமா?

†††††

‘இதோ வந்துருவேன்னு சொல்லி, எவ்வளவு நேரம் ஆச்சு? இன்னும் காணோம். வரட்டும் அவங்களை கவனிச்சுக்கிறேன்’ என புலம்பிக்கொண்டே, மித்ரா வாசலுக்கும் வீட்டுக்கும் அலைந்து கொண்டிருந்தாள். இப்போது அவள் அலைந்து கொண்டிருந்தது ரிஷியின் வீட்டில். 

வாசலில் வாகனம் நிறுத்தும் சத்தம் கேட்டு வாசலுக்கு விரைந்தாள். அங்கு அவர்கள் மேனேஜர் கிரிதரன், ரிஷி காரை விட்டு இறங்குவதற்கு உதவி கொண்டிருந்தான். டிரைவர் வீல் சேருடன் அருகில் நின்று கொண்டிருந்தார். 

காலில் கட்டுடன் காரை விட்டு இறங்கிய ரிஷியை கண்டதும், எதைப்பற்றியும் சிந்திக்காமல், தான் வாசலில் இருக்கிறோம் என்பதையும் மறந்து, ஓடிச்சென்று அவனை அணைத்து கண்ணீர் சிந்தினாள்.

அவளின் செயலில் ஒரு நிமிடம் திகைத்து நின்ற ரிஷி, அவளின் நிலையை உணர்ந்து கொண்டவனாக, அவளது தலையை கோதி, ஆறுதலாக அவளை அணைத்துக் கொண்டான். அந்த நிமிடம் அந்த ஆறுதல் அவளுக்கு தேவையாக இருந்தது.

“ஏன் வரு பார்த்து நடிக்க மாட்டியா? இப்படிதான் அடிபட்டு வருவியா?” என்றாள் இயலாமையுடன்.

“சண்டைனாலே சில பல அடிகள் விழுவது சகஜம்தான் குட்டி. சின்ன பிராக்சர்தான். ஒரு மூணு மாசம் ரெஸ்ட் எடுத்தா சரியா போகும்?” என புன்னகையுடன் அவளை ஆறுதல் படுத்தினான்.

“போ வரு உனக்கு எல்லாம் விளையாட்டுதான். நான் எவ்வளவு பயந்தேன் என்று எனக்குதான் தெரியும்.” சலுகையாக அவனது மார்பில் அடித்து சினுங்கினாள். அவனிடம் அடைக்கலம் ஆகிய பெண் இன்னமும் அவனிடமிருந்து விலக வில்லை.

அவளின் சிறுபிள்ளை தனத்தை ரசித்தாலும், தாங்கள் இன்னமும் வாசலிலேயே இருக்கிறோம் என்பதை உணர்ந்த ரிஷி,”மிரு குட்டி என்னை வீட்டுக்குள்ள விடற ஐடியா இருக்கா? இல்லை இப்படியே வெளிய பெட் போட்டு குடுக்கற ஐடியாவா?” என குறும்போடு கூறி, சிரித்துக் கொண்டே அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டினான்.

அவனின் சிரிப்பில் கோபம் வரப்பெற்ற மித்ரா,”கால்ல அடிபட்டுட்டு வந்துட்டு உனக்கு என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு? உனக்கெல்லாம் காலுல அடி பட்டிருக்ககூடாது, வாயில அடிபட்டு நாலு பல்லு உடைஞ்சி இருக்கணும்” என அவனின் குமட்டில் ஒரு குத்து குத்தி,”சீக்கிரம் உள்ள வாங்க.” என உத்தரவிட்டு உள்ளே சென்றாள். 

மேனேஜர் அந்த வீல் சேரில் அவனை அமரவைத்து உள்ளே தள்ளிக் கொண்டு சென்றான். டிரைவர் காரை அதனிடத்தில் நிறுத்திவிட்டு, வாட்ச்மேனிடம் வண்டி சாவியை ஒப்படைத்து விட்டு கிளம்பினார். ரிஷியை கொண்டு படுக்கையில் விட்ட மேனேஜரும், அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு விடைபெற்றார்.

இவர்கள் நடத்திய பாசப் போராட்டத்தை, இவ்வளவு நேரமும் தன் மடிக்கணினியில் பார்த்துக்கொண்டிருந்த ருத்ராவின் மனதில் எரிமலையின் சீற்றம். 

மித்ராவும் ரிஷியும் அருகருகே வசிப்பதை தெரிந்த ருத்ரா, ஏற்கனவே கோபத்தில் இருந்தான். அவர்களை கண்காணிப்பதற்காக அவர்கள் வீட்டு வாசலில் இருந்த கேமராவை ஹேக் செய்திருந்தான். வாசலில் வைத்து இவர்கள் நடத்திய நாடகத்தை கண்டு, உடனே அவர்களைப் பிரிக்கத் திட்டமிட்டான்.

††††† 

கிரிதரன் சென்ற பின், ரிஷியை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, அவனுக்கு உணவு தயார் செய்ய சமையலறை சென்றாள் மித்ரா. 

அப்போது அவளது கைப்பேசி அழைத்து அவள் கவனத்தை திசை திருப்பியது. யாரென்று பார்த்த மித்ராவின் கண்களில் கோபம்.

அவர்கள் வீட்டை பொறுத்தவரை மேனேஜர் கிரிதரன், கார் டிரைவர், வாட்ச்மேனை தவிர வேற யாருக்கும் அனுமதி இல்லை. கிரிதரன் மட்டுமே வீட்டினுள் வந்து செல்லக் கூடிய ஒரே நபர். திரைத்துறை தொடர்பாக யார் வந்தாலும் ரிஷி வீட்டில் உள்ள அலுவலக அறையை மட்டுமே பயன்படுத்துவார்கள்.

அவர்களின் ரகசியம் அந்த வீட்டைத் தாண்டி செல்வதை அவர்கள் விரும்பவில்லை. சமையல் வேலை, வீட்டு வேலை, என்று பெண்களை அனுமதித்தால், வீட்டில் நடக்கும் விஷயம் நிச்சயமாக வெளியே கசியும், என்பதை உணர்ந்த அவர்கள் வீட்டு வேலைக்கு என்று யாரையும் வைக்கவில்லை.

ஷூட்டிங் நடக்கும்போது அவர்கள் அங்கேயே உணவை முடித்துக் கொள்வார்கள். ஷூட்டிங் இல்லாத நாட்களில், யார் வீட்டில் இருக்கிறார்களோ அவர்கள் சமைத்து கொள்வார்கள். இருவரும் இருக்கும்போது பேசிக்கொண்டே சமையலறையே ஒரு வழி ஆக்கிவிடுவார்கள். விளையாட்டு, கெஞ்சல், கொஞ்சல் என அவர்களது நாட்கள் அற்புதமாக கழிந்தது.

இப்போது அவர்கள் வாழ்வில் ஒரு புயல் அடிக்கத் தொடங்கியுள்ளது.

அதை தாண்டி கரை ஏறுவார்களா? 

அந்தப் புயலில் சிக்கி சின்னாபின்னம் ஆவார்களா?

error: Content is protected !!