நெஞ்ச தாரகை 17

உறக்கம்!

அது உலக பிணைப்புகளிலிருந்து கண நேர விடுதலை. ஒரு சிறு மரணம்.

கவலைகள் அண்டாமல் தாயின் பனிக்குடத்தில் கதகதப்பாய் மிதந்து கொண்டிருக்கும் சிசுவைப் போல, வருத்தங்களை துறந்து ஆசுவாசமாய் தவழும் ஒரே இடம் உறக்கம் மட்டுமே.

பல நாட்கள் கழித்து நிம்மதியாய் விழி மூடினான் காவ்ய நந்தன்.

பறவைகளின் கீச்சு கீச்சு ஒலியும் இயற்கையின் சுகந்தமான வருடலும் அவனை ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் செல்ல அவன் மூச்சுக்காற்று சீரான வேகத்தில் மேல் ஏறி இறங்கியது.

அவன் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட எழில்மதி மெல்ல அவனருகில் சென்று அவன் முகத்தையே உற்றுப் பார்த்தாள்.

இனி இத்தனை அருகில் பார்க்க முடியுமோ என்னவோ!

எனவே அவன் முகத்தை பழச்சாற்றைப் போல கண்களால் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிக் கொண்டிருந்தாள்.

அவன் உறக்கத்தை கலைக்கும் வண்ணம் ஈ ஒன்று பறந்து அவன் மூக்கில் மேல் அமரப் பார்க்க, எழில் வேகமாய் கைகளை கொண்டு விரட்ட எத்தனித்தாள்.

சப்தம் கேட்டு அரைக் கண்ணை மட்டும் திறந்து பார்த்த காவ்யநந்நதன், தன் மேலே கிட்டத்தட்ட பாதி அணைத்த வாக்கில் கிடந்த எழில்மதியைப் பார்த்தான்.

எழிலின் முகமெங்கும் பதற்றத்தில் வியர்வை பூக்கள் மலர்ந்தது.

ஈயை விரட்ட தான் அருகில் நெருங்கினேன் என்ற உண்மையை சொன்னால் நம்ப மாட்டானே… உனக்கு அறிவு இருக்கா மானம் இருக்கா என ஆதியில் தொடங்கி அந்தம் வரை கிழித்து எடுத்துவிடுவானே என  பதற்றத்தில் அவள் இதழ்கள் படபடத்து கொண்டது.

ஆனால் காவ்யனோ அவளைப் பார்த்து “ப்ச்ச்” என்று சலித்தபடி உறக்கத்தில் உச்சுக் கொட்டினான்.

“என்னை நிம்மதியாவே விட மாட்டியாடி… எப்போ தான் என் கனவுலே வந்து என்னை இப்படி கட்டிப்பிடிச்சு சாகடிக்கிறதை நிறுத்தப் போறியோ” என தூக்கக் கலக்கத்தில் புலம்பியபடியே அவன் மேல் பட்டும் படாமல் அணைத்தவாக்கில் கிடந்தவளை இவனோ முழுவதாய் தன்னுள் இறுக்கிக் கொண்டு விட்ட தூக்கத்தை மீண்டும் தொடர்ந்தான்.

எழிலுக்கு நடப்பது எல்லாம் கனவா நனவா என புரியவில்லை.

நிஜம் தான் என உறுதிப்படுத்தி கொள்ளும் அவசரத்தில் அவன் கையை கிள்ளி தூங்கும் உர்ராங்குட்டானை எழுப்பி ஏழரையை கூட்டிவிடக் கூடாது என்னும் கவனத்தோடு தன் கையை மிக மெதுவாக கிள்ளிக் கொண்டாள்.

அவளுக்கு வலித்தது. அப்படியானால் இது நிஜம் தானா!

புன்னகையுடன் அவனுக்குள் இன்னும் அழுத்தமாய் புதைய துவங்க, “ஏன்டி இப்படி டெய்லி கனவுலே வந்து என்னை சாகடிக்கிற?” என்று உளறியபடியே அவளை இன்னும் தனக்குள் நெருக்கிக் கொண்டான்.

‘அட கேடி மாமா. என்னை நேர்லே பார்த்தாலே முகத்தைத் திருப்பிக்கிட்டு, கனவுலே யாருக்கும் தெரியாம இத்தனை நாளா டூயட் பாடிட்டு இருக்கியா?’ என நினைத்தவள் அவன் நெஞ்சுக்குள் இன்னும் ஆழப் பொதிந்து தூக்கத்தில் ஏறி இறங்கும் அவன் மூச்சுக்காற்றையே  கவனித்து கொண்டிருந்தாள்.

இந்த காற்றாய் பிறக்கும் வரம் கிடைத்திருந்தாலவாது எந்த தடையுமில்லாமல் அவன் சுவாசத்தை தொட்டுவிட்டு வந்திருந்தக்கலாம் அல்லவா!

நினைக்கும் போதே பெரும் பெருமூச்சு ஏற்பட்டது அவளுக்கு.

அவளது மூச்சுக்காற்று தீண்டியதாலோ இல்லை வெகு நேரம் தூங்கியாதாலோ, இல்லை ஏதோ ஒன்றால் காவ்ய நந்தன் பட்டென்று கண்விழித்தான்.

தன்னைக் கட்டிக் கொண்டு கிடந்த எழில்மதியை கண்டதும் அதுவரை சாந்த மூர்த்தியாய் இருந்தவன் ரௌத்திர மூர்த்தியாய் உருவெடுத்தான்.

எடுத்த எடுப்பிலேயே, “சே… எப்படி டி நீ என்னை தொடலாம்? உனக்கு மானம் ரோஷம், சூடு, சொரணைலாம் இருக்கா?”  கொதிக்கும் எண்ணெய்யை தொட்டது போல அவளை உதறிக் கொண்டு எழுந்தான்.

அவளிடம் பதில் மொழி இல்லாது போக,
“சே ஒரு ஆம்பளைப் பையன் கற்புக்கு இந்த உலகத்துலே கொஞ்சமும் பாதுகாப்பே இல்லை” என சப்தமாய் முணுமுணுத்துக் கொண்டவனைப் பார்த்து எழில்மதிக்குள் புன்னகைப் பூத்தது.

“இந்தா பாருடி… இந்த சிரிக்கிற வேலை எல்லாம் என் கிட்டே வேண்டாம்…”  மிரட்டியபடியே தான் படுத்திருந்த போர்வையை மடித்து வைத்து விட்டு, எட்டி அருவிப் பக்கமாய் பார்த்தான்.

அங்கே ஆளரவம் இல்லை.

மஞ்சள் வெயில் மாலையைத் தாண்டி இருள் அடர துவங்கியிருக்க அவசரமாய் திரும்பி கடிகாரத்தைப் பார்த்தான்.

மணி ஆறரையை நெருங்கியிருந்தது.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாகவா இப்படி அடித்துப் போட்டதை போல தூங்கினோம், என அதிர்ந்தவாறே அவசரமாய் திரும்பினான்.

“சீக்கிரமா நட… போக போக இருட்டிடும். அப்புறம் காட்டுலே விலங்குலாம் நடமாட ஆரம்பிச்சுடும்” என துரிதப்படுத்தபடியே முன்னேறி வேகமாய் நடந்தவன் பாதி தூரம் வரை சென்று திரும்பி அவளைப் பார்த்தான்.

மலை, ஏறும் பொழுதை விட இறங்கும் பொழுது மிகவும் சிரமப்பட்டு மூச்சு வாங்கினாள். அவளது சிரமமும் அவஸ்தையும் பார்க்கும் போதே அவனுக்கு புரிந்தது.

“நடக்க முடியலையா?” என்று அவள் முகத்தைப் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு கேட்டான்.

ஆமாமென்று இவள் தலையசைத்த அடுத்த நிமிடம் அவனது வலிய கரங்களுக்குள் அடங்கிப் போயிருந்தாள்.

அவள் திகைத்துப் போய் நிமிர்ந்துப் பார்க்க, “நைட் ஆனா இங்கே மிருகங்க நடமாட்டம் ஜாஸ்தி… நீ ஆடி அசைஞ்சு வர வரைக்கும் குரங்கும் நரியும் ஊளையிடாம உனக்காக காத்துட்டுலாம் இருக்காது… அதான் தூக்குறேன்”  என்றவன் தூக்கியதற்கான காரணம் சொல்லவும் எழில்மதி எதுவும் சொல்லாமல் அவனையேப் பார்த்து கொண்டிருந்தாள்.

இருள் கவிய துவங்கிய வானம்.

மெல்லிய இளங்காற்று.

காட்டுப்பூக்களின் சுகந்தம்.

தனக்கு பிடித்தவன் கையில் சரணாகதி.

இந்த அழகிய மோன நிலையை கலைக்க யாருக்கு தான் மனம் வரும்…

எழில்மதி அமைதியாய் அவன் கைகளுக்குள் அடைக்கலம் புகுந்து அவனையே விழியகலாமல் தன் குண்டு கண்களால் பார்த்துக் கொண்டிருந்தாள்.

எப்போதும் அவள் விழிகளை கண்டாலே நேராய் சந்திக்க முடியாமல் தலையை குனிந்து கொள்ளும் காவ்ய நந்தன் இன்று வெகு அருகில் அவள் விழிகளை காண முடியாமல் தடுமாறினான்.

“என் முகத்துலே ஏதாவது படம் ஓடுதா என்ன? எதுக்கு உத்து பார்த்துட்டு இருக்க?” என்று போலியாய் மிரட்டியவன் அவள் பார்வையை தாங்க முடியாமல் நெளிந்தான்.

“நான் பார்க்கிறதை எதுக்கு நீங்க பார்க்குறீங்க… ஒழுங்கா நேரா பார்த்து நடங்க” என்று பதிலுக்கு பதில் பேசியவள் லஜ்ஜையேயின்றி அவனை விழியகலாமல் பார்த்து வைத்தாள்.

இதற்கு பின்னால் இவனை இந்தளவிற்கு நெருங்க முடியாது என்ற எண்ணம் தந்த பயமோ என்னவோ இன்று அவனை விதவிதமாக தன் கண் கேமராவில் பல புகைப்படங்களாய் எடுத்து மனதிற்குள் சுருட்டிக் கொண்டாள்.

இருவர் இதயத்தையும் ஏதோ ஒரு மாயக்கயிறு கட்டிப் போட தங்களையும் அறியாமல் புது இணக்கம் உருவானது இருவருக்குள்ளும். எழில் மதியும் சரி காவ்ய நந்தனும் சரி அதை கலைக்க முனையவில்லை.

மௌனமாய் நடந்தவன் மலையின் தாழ்வாரத்தை நெருங்கிவிடவும், அவளை இறக்கி கீழே விட்டான். அவன் பைக்கை ஸ்டார்ட் செய்யவும் பின்னால் ஏறி அமர்ந்த எழில் அவன் முகத்தையே ரியர் க்ளாஸ்ஸில் பார்த்தாள். அவனும் அந்த கண்ணாடி வழியே தான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இம்முறை பைக்கில் ஏறி எழில்மதி, கையைப் போடும் போது திரும்பி ஒரு பார்வை பார்த்தானே, தவிர கையைத் தட்டிவிடவில்லை. தட்டிவிடவும் தோன்றவில்லை.

மௌனமாய் வண்டியெடுத்தான்.

இருவருக்குள்ளும் அதன் பிறகு எந்த பிணக்கமும் ஏற்படவில்லை. ஆனால் பைக் ஊர் எல்லையை நெருங்க நெருங்க அவர்களுக்கிடையே கட்டப்பட்டிருந்த ஒரு மாயக்கயிறு கொஞ்சம் கொஞ்சமாய் அறுப்பட ஆரம்பித்தது.

ஊராரின் கண் பார்வைக் கண்டு காவ்ய நந்தன் முகத்தில் இருந்த மென்மை மறைய கடினத்தன்மை கூடிக் கொண்டது.

ஏனோ தெரியவில்லை… எல்லோருடைய பார்வையும் தன்னை ஊசியாய் குத்தியதைப் போல தோன்றியது.

அவன் மனதில் லேகுத்தன்மை மறைந்து கொஞ்சம் கொஞ்சமாய் இறுக துவங்க, அதை மேலும் கடினமாக்கும்படி திலக் வர்மா பைக் முன்னால் வழி மறித்து நின்றான்.

சடென் ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தியவன் எதிரிலிருந்த திலக்கை வெட்டும் பார்வை பார்த்தான், காவ்ய நந்தன்.

இதோ இவன் தான்…

தன்னை பழிவாங்குவதற்காக இவன் போட்ட பழியால் தானே என்னை இந்த ஊர் உலகம் எள்ளலாய் பார்க்கிறது என நினைத்தவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் மாறி மாறி வெடித்தது.

திலக் வர்மாவோ இவனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் நேரே தன் தங்கையிடம் சென்றான்.

“எப்படிடா இருக்கே?” என வாஞ்சையாய் திலக் கேட்க எழிலிடம் மௌனம்.

“அங்கே புது இடத்திலே எல்லாமே செட் ஆகிடுச்சாடா?” என அடுத்த கேள்வியை வைத்தான்.

இப்போதும் அவளிடம் மௌனம் மட்டுமே…

“இன்னும் என் செல்ல தங்கச்சிக்கு அண்ணா மேலே கோபம் குறையிலையா?” என்றவன் அவள் தலையை வருடிவிட வரவும் எழில் கோபமாய் கையைத் தட்டிவிட்டாள்.

எழிலின் அந்த செயலில் திலக்கின் முகத்தில் வருத்தம் கவிந்த பொழுது இடையில் காவ்ய நந்தனின் குரல் வந்து விழுந்தது.

“இப்போ எந்த பழியை போட்டு என்னை அசிங்கப்படுத்த வந்து இருக்கே? நீ இதுவரைக்குமே பண்ணது எல்லாம் போதும்… முதலிலே  இங்கேயிருந்து கிளம்பு” என்றான்  காவ்யநந்தன் வேட்டியை மடித்துக் கொண்டு.

“என் தங்கச்சி கிட்டே நான் பேச வருவேன்டா… நீ யாரா என்னை தடுக்கிறது? உன்னாலே தான்டா… உன் ஒருத்தன் தானலே தான்டா என் தங்கச்சி வாழ்க்கை இப்படி கேள்விக்குறியா நிற்குது” என்று மறுபுறம் திலக்கும் வேட்டியை மடித்துக் கொண்டு முட்ட வரவும் அங்கு சூழல் வாடிவாசல் களமானது.

பார்த்தாலே முட்டிக் கொள்ளும் ஜல்லிக்கட்டு காளைகள் இதோ சண்டையை ஆரம்பித்துவிட்டது.

“என் வாழ்க்கையை நாசம் பண்ணவனே நீ தான்டா… நான் பட்ட அசிங்கம் எல்லாத்துக்கும் நீ தான் காரணம்… உன்னை விட மாட்டேன்” என காவ்ய நந்தன் அவன் முகத்தில் ஒரு குத்துவிடவும் பதிலுக்கு திலக்கும் அவன் வயிற்றில் குத்தினான்.

இருவருக்குள் ஆரம்பித்த வாய் சண்டை கை சண்டையில் முடிய எழில் சுற்றி முற்றிப் பார்த்தாள். மொத்க ஊர் கண்ணும் இவர்களின் மீது தான்.

ஊரார் விழிகளுக்கு இருவரும் காட்சிப் பொருளாவதை விரும்பாத எழில்,  அவசரமாய் இருவரையும் பிரித்துவிட முயன்றாள்.

ஆனால் அடிதடி பரபரப்பில் இருந்த காவ்ய நந்தன், எழில் அருகே வரவும் திலக்கின் மீதிருந்த கோபத்தை அவளிடமும் வஞ்சனையில்லாமல் காட்டினான்.

“எல்லா பிரச்சனைக்கும் நீ ஒருத்தி தான்டி,காரணம்… தள்ளி போ” என்று ஆங்காரமாய் கத்தியவன் அவள் தோளின் மீது கை வைத்து தள்ளிவிட அடுத்த நொடி பிடிமானமின்றி தரையில் ‘அம்மா’ என்ற அலறலோடு கீழே விழுந்து கிடந்தாள்.

‘மெதுவாக தானே தள்ளிவிட்டேன். இவள் என்னமோ சீரியல் ஆர்டிஸ்ட் போல இரண்டடி தள்ளு விழுந்து கிடக்குறாள்… சரியான நடிப்புக்காரி’ என உள்ளுக்குள் கருவியபடி திரும்பி அவளைப் பார்த்தவனின்  கண்களில் நொடிப் பொழுதில் பருவ நிலை மாற்றம். அதிர்ச்சியில் இதயம் உறைந்துப் போனது.

“எழில்” என்று அழைத்தவனுக்கு அதற்கு மேல் வார்த்தை வசப்படவில்லை. அதிர்வில் சிலையென சமைந்து நின்றவனின் காலில் ஈரம் படர குனிந்துப் பார்த்தான்.

எழில்மதியின் வயிற்றிலிருந்து பிரிந்து வந்த உதிரம் அவன் பாதத்தை வந்து தொட்டிருந்தது.

ரத்த வெள்ளத்தில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டு கிடந்த எழில்மதியைக் கண்டு அவன் விழிகளில் கண்ணீரின் திரட்சி.

“எழில்…” என திகைத்துப் போய் அழைக்க திலக் வர்மாவோ கோபமாய் வந்து காவ்ய நந்தனின் சட்டையைப் பிடித்திருந்தான்.

“அடப்பாவி உன் குழந்தையை உன் கையாலேயே கொன்னுட்டியேடா…” என்று ஆங்காரமாய் கத்தியவன் அவன் கன்னத்தில் மாறி மாறி அடிக்க, காவ்ய நந்தனின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி.