நெருப்பின் நிழல் அவன்! 5

அத்தியாயம்: 5

தொலைகாட்சி பெட்டியில் முக்கிய செய்தி என்று ஓடிய செய்தியை கண்ணெடுக்காமல் பார்த்த சாந்தவிக்கு, அதற்காக அவள் செய்தது நினைவு வந்தது.

சக்தி கம்பேனியை ஒன்றும்… செய்ய முடியாது.. என்று அவளுக்கு தெரியும். ஆனால்.. முயற்சி என்று ஒன்று செய்யாமல் தோல்வியை ஒத்து கொள்ள பாவைக்கு மனம் இணங்கவில்லை. ஏதேனும்.. செய்து அது தோல்வியை தழுவினாலும் அதை ஏற்று கொள்ள நினைத்தவள் அதை செயல்படுத்தும் உறுதியுடன் தான் கிளம்பினாள்.

வீட்டில் இருந்து கிளம்பும் போது.. அவள் பெற்றோர்.. அவர்களுக்கு என்று சேர்த்து வைத்த நகையில் அவளுடையதை மட்டும் எடுத்து கொண்டாள். சிவகாசியில் ‘ரௌடிகள்.., நாட்டு வெடி குண்டு வைப்பவர்கள் இருப்பார்கள்’ என்று என்றோ… காதில் கேட்டதை வைத்து சிவகாசி சென்றாள். ஆனால் அவள் நினைத்தது போல் ஆட்கள் எளிதில் கிடைக்கவில்லை.

கடைசியாக வேறு எங்கே செல்வது என்று தெரியாமல்… வீட்டிற்கே.. சென்று விடலாம் என்று ஊட்டிக்கு செல்ல வரும் போது தான்.. ரௌடி போல் இருந்த ஒருவன் கண்ணில் பட்டான். ‘அவன் அந்த மாதிரி வேலை செய்வானா..!!?’ என்ற சந்தேகத்துடனே… அவனிடம் சென்று மெதுவாக விவரம் கேட்க, முதலில் ‘அப்படி யாரையும் தெரியாது..’ என்றவன், பணம் தருவதாக சொன்னதும் ஒத்து கொண்டு சிவகாசியில் உள்ள சந்தெல்லாம் சுற்றி மற்றொருவனிடம் அழைத்து சென்றான்.

முதலில் அவனும் ‘முடியாது..’ என்றவன், சாந்தவி சக்தி கம்பேனி என்று சொன்னதும் அவளை சந்தேகமாக பார்த்தவன் “உனக்கும் அவனுக்கும் என்ன பகை?” என்று கேட்க, சாந்தவி, ஈஸ்வரனுக்கும்.. அவளுக்கும் இடையில் நடந்த விவரம் சொன்னதும்.. சிலநிமிட யோசனைக்கு பிறகு ஒத்து கொண்டான்.

அவனுக்கும் சக்திக்கும் இடையில் முன் பகை இருந்திருக்கும் போல் அதில் சாந்தவிக்கு சாதகமாக அமைய வாய்ப்பை பயன்படுத்தி கொண்டாள். ‘சக்தி வம்பு வளர்க்காத இடமே இல்லை போல..!” என்று பாவை நினைக்கும் போதே “போலீஸ் கேஸ்னு வந்தாலும் வாய திறக்க கூடாது! மீறி… விசயம் வெளிய போச்சி… உடம்புல உயிர் இருக்காது..!” என்று அவளை மிரட்ட..,

சாந்தவி சாந்தமாக தலையசைக்கவும் அந்த கூட்டத்தில் தலைவன் போல் இருந்தவன், அருகில் இருந்தவனிடம் கண்ணை காட்ட… அவன் சென்று ஒரு அட்டை பாக்சை எடுத்து கொண்டு வந்து சாந்தவி கையில் தர.., அவள் அதை வாங்கியதும் “இதுல வெடி மருந்தும்…, வெடியும்.. இருக்கு” என்றவன் அதை எப்படி உள்ளே அனுப்ப வேண்டும் என்றும் ஐடியா சொல்ல…

அதன் படியே… புர்கா அணிந்து தன்னை அடையாளம் தெரியாமல் மறைத்து கொண்ட சாந்தவி, கேட் வாச்மேனிடம் ‘தன் கணவர் உள்ளே வேலை செய்வதாகவும்.., இந்த பையை அவரிடம் கொடுத்து விடும் படி கூறி…” வெடி மருந்தை ஒரு பையில் வைத்து அவரிடம் கொடுக்க, அவரும் உள்ளே இருந்து ஒருவரை அழைத்து அந்த பையை கொடுத்து விட,

அந்த வெடி மருந்தால் மற்றவருக்கு எந்த பாதிப்பு வந்து விட கூடாது என்று உடனே அங்கிருந்து கிளம்பி வெளியே வந்தவள்… பக்கத்தில் இருந்த ஒரு ரூபாய் காயின் டெலி போனின் இருந்து போலீஸ்க்கும், மாசு கட்டுப்பாட்டு துறைக்கும் அழைத்து விவரம் கூறி விட்டே அங்கிருந்து கிளம்பினாள்.

இப்போது தோற்று விட்டோம் என்று வருத்தமாக இருந்த போதும்… ஈஸ்வரன் சொன்னது போல் கேவலமாக தோற்று போகாமல் ஒரு நொடி என்றாலும் அவனையும் பதற வைத்துள்ளோம் என்ற நிம்மதியும் இருந்தது. ‘நாளைக்கு… அவள் ஈஸ்வரனிடம் கூறியது போல்.. திருப்பூர் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்..’ என்று நினைத்தவள், அதன் பிறகு அதை பற்றி நினைக்க கூட செய்யாமல் சாரதாவின் திருமணத்தை பற்றி நினைக்க தொடங்கி விட்டாள்.

‘நாளை ஒரு நாள் மட்டுமே.. தான் மகிழ்ச்சியாக இருக்க போகும் நாள் அதனால் அதை சந்தோசத்துடன் அமைத்து கொள்ள வேண்டும்’ என்று நினைத்த பாவை அறியவில்லை அதுவும் அவளுக்கு கிடைக்க போவது இல்லை என்று. ‘ஈஸ்வரனிடம் சென்ற பிறகு தனக்கு சந்தோசம் என்ற ஒன்று இருக்க போவதே… இல்லை!’ என்று நினைத்த பாவை தானே அவனுடன் இருக்கும் ஆயுள் தண்டனையை கேட்டு பெற போவதை அறிவாளோ..!!

அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை.. இருக்கும் வரை மகிழ்ச்சியுடனும்… மற்றவருக்கு பயனுள்ளவர்களாக இருந்து விட்டு செல்வோம்… என்ற வார்த்தையே.. பணம் இல்லை, என்ற கவலை இன்றி பல உயிர்கள் இன்றைக்கு நிம்மதியாக உறக்கம் கொள்ள காரணமாக இருக்கிறது. இன்று அதில் சாந்தவியும் ஒன்றாகி விட‌ மற்ற அனைத்தையும் புறம் தள்ளி விட்டு சாரதாவின் கல்யாண நினைவில் மூழ்கி விட்டாள்.

####

ஈஸ்வரன் கோபத்தில் எரிமலை என பொங்கி கொண்டிருந்தான். கண்கள் இரண்டும் ரத்த கோலம் கொள்ள.., தாடை இருக…, கை நரம்புகள் ஆத்திரத்தில் புடைத்திருக்க.. ஒவ்வொரு நொடியும் அவன் கோபத்தில்.. அவன் அறையில் இருந்த பொருட்கள் ஒவ்வொன்றாக உடைந்து கொண்டிருந்தது.

“நான் ஒரு நொடி, ஒரு நொடி…. அசந்து இருந்தாலும்..! இந்த சக்தி சாம்ராஜ்ஜியத்தை இழுத்து மூடி இருப்ப இல்ல‌..!!, வெடி மருந்து வைக்குறவன தெரியுற அளவு பெரிய ஆளா நீ…?!, உன் அப்பனுக்கு பிறந்த நீ வேற எப்படி இருப்ப..?!” என்று பாவையின் செயலை நினைத்து பார்த்து வேங்கை என உறுமியவன், ஆத்திரத்தில் அலங்காரத்திற்கு என வைத்திருந்த பீங்கான் குவளையை எடுத்து சுவற்றில் விட்டேறிய, அது… அவன் பாவையை சிதைக்க நினைத்தது போல்… சில்லு, சில்லாக நொறுங்கி இருந்தது.

நொறுங்கி கிடந்த சில்லுகளை உறுத்து பார்த்தவன் “எனக்கே வெடி வச்சிட்ட இல்ல..! உனக்கு அனுகுண்டே வைக்குறைன் டி. இந்த ஈஸ்வரன் மேல கை வச்சா… என்ன நடக்கும் னு காட்டுறேன்” என்று உரும, அவன் போன் ‘என்னை இன்னும் உடைக்கவில்லை..!’ என்று இசை பாட

அதை எடுத்து அழைப்பை ஏற்று காதிற்கு கொடுத்தவன் “என்ன‌..?!” என்றான் அழுத்தமாக. அந்த பக்கம் என்ன சொல்ல பட்டதோ “வாட்….!!!” என்றவன் அதன் பிறகு பேசிய வார்த்தைகளை அவனே காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகள். ஆனால் எதிரில் இருந்தவனுக்கு அது ஒரு விசயமே இல்லை போலும் ( எத்தனை முறை வாங்குனானோ!) ஈஸ்வரன் திட்டும் வரை அமைதி காத்தவன், இவன் முடித்ததும் அவன் சொல்ல வந்ததை சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து விட, அடுத்த நிமிடம் ஈஸ்வரனின் போனும் நொறுங்கி தன் உயிரை விட்டிருந்தது.

உமையாள் மகன் அறையில் இருந்து வந்த சத்தத்தை கவலை படிந்த முகத்துடன் கேட்டு கொண்டிருக்க.., மகனின் செய்கை எதனால்..! என்று தெரிந்தாலும், அனைத்தையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக அமர்ந்து இருந்த ரத்தினம் “உமையா… டீ தாயேன்” என்றார் மனைவியையும் திசை திருப்பும் எண்ணத்தில்.

“நீங்க… எப்படி இப்படி எந்த கவலையும் இல்லாம இருக்கிங்க..?!, கருவேப்பிலை நாத்து மாதிரி..! ஒத்த பிள்ளை பெத்து வச்சிருக்கோம். எப்பவும் கோபமா இருக்கான். அவனுக்கு என்ன பிரச்சனையோ..! முகத்துல சிரிப்பே இல்லை…, அடிக்கடி இப்படி தான் நடந்துக்குறான்.., என்ன? ஏதுன்னு? பெத்தவரா அவனை கூப்பிட்டு கேக்குறிங்களா….?” என்று ஆதங்கப்பட.

“நாம… பேசாம இருந்தாலே அவன் தானா சரி ஆகிடுவான். நேத்து ஆலைக்கு குண்டு வைச்சி இருக்காங்க இல்ல..! அந்த கோபத்துல இருக்கான். சரி ஆகிடுவான். நீ.. போய் டீ போட்டு எடுத்துட்டு வா…, மண்டபத்துக்கு அலங்காரம் பண்ண ஆள் வந்துட்டாங்களானு போய் பார்த்துட்டு வரேன்…” என்றார் ரத்தினம். மனைவியை சமாதானம் செய்யும் முறையில்.

ரத்தினம் இந்த.. நேரத்தில் வெளியே செல்வதில் உமையாளுக்கு உடன்பாடு இல்லை என்றாலும்… திருமண வேலையையும் அவர் மட்டுமே தான் பார்க்க வேண்டும் என்பதால், அமைதியாக அவருக்கு டீ போட சென்றார்.

உமையாள் சென்றதும் நிமிர்ந்து மேலே பார்த்த ரத்தினம்… மகன், அவன் காயத்தை இப்படியாவது.. ஆற்றி கொள்ளட்டும் என்று நினைத்தாரோ..!! ஒரு பெருமூச்சுடன் வெளியே ஊஞ்சலில் சென்று அமர்ந்து கொண்டார். சிறிது நேரத்தில் உமையாள் டீ கொண்டு குடுக்க… வாங்கி பெயருக்கு இரண்டு வாய் அருந்தி விட்டு அதற்க்கு மேல் உள்ளே இறங்காமல் அப்படியே வைத்து விட்டு எழுந்து சென்று விட்டார்.

####

சாந்தவி மிகவும் பரபரப்பாக இருந்தாள். இன்று அவள் அக்காவின் திருமணம். இனிமேல்.. அவள் எந்த பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக இருப்பாள்… என்று நினைத்து தானும் சந்தோசமாக இருந்தாள். சிங்கத்தின் வெறியை தீர்த்து கொள்ள அதன் குகைக்கு அடிமையாக சென்ற பிறகு தன்னால் சிரிக்க கூட முடியாது… என்று இயன்ற வரை தன்னை மகிழ்ச்சியாக வைத்து கொண்ட பாவை இனி நடக்கும் நிகழ்வுகள் யாவும் அவள் எழுந்து கொள்ள முடியாத அளவு வலி கொடுக்க கூடியதாக இருக்கும் என்றும்…, தான் தன் உணர்வுகளை இழந்து விடுவோம் என்றும்… அறிந்திருக்கவில்லை.

நாளை நடப்பது இன்று தெரிந்துவிட்டாள், நாளைய வாழ்க்கைக்கான சுவாரசியம் இல்லாமல் சென்று விடும்.. என்று தான் கடவுள் நாளைய நாள் என்பதை கனவாக வைத்திருக்கிறார் போலும். இனிமேல் நடப்பது அனைத்தும் இந்த சக்தீ ஈஸ்வரனின் செயலா..! இல்லை அந்த பரப்பிரம்மன் ஈஸ்வரனின் விளையாட்டா…! என்று காலம் தான் பதில் கூறும்.

சாராதவின் திருமணத்திற்கு என்று சாரதா எடுத்து கொடுத்த பட்டு புடவை கட்டி… தலை நிறைய பூ வைத்து.. கண்ணாடியில் தன்னை பார்த்து திருப்தி ஆன சாந்தவி, திரும்பி சாரதாவை பார்த்தாள்.

சாரதா மண பெண்ணுக்கே உறிய சர்வ… அலங்காரத்துடன் அமர்ந்து இருந்தவள்.. சாந்தவியை பார்த்து முறைக்க, “எப்படி பார்த்தாலும் என்னை விட நீதான் அழகா இருக்கடி.. சாரு” என்று கூறி சாரதாவிற்கு திருஷ்டி எடுத்தவள் அவள் கண்ணில் சிறிது மை எடுத்து காதுக்கு பின்னால் வைத்து விட்டாள்.

சிறிது நேரத்தில் மிதுன் காருடன் வந்து விட.. மூவரும் கோவிலுக்கு கிளம்பினர். மிதுன் பெற்றோர் அவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்காததால் உறவு என்று வேறு யாரையும் அழைக்கவில்லை. கோவில் வந்ததும் மூவரும் உள்ளே செல்ல “ஒரு நிமிசம் இருங்க..!” என்ற மிதுன் சாமி சன்னதிக்கு செல்லாமல் இடையிலேயே நிற்க,

“என்ன‌ மாமா..! ஏன் நின்னுட்டிங்க..!” என்று சாந்தவி கேட்க, “என் பெஸ்ட் பிரண்ட்ட கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணேன். அவன் வரேன்னு சொன்னான்..! அதான்…” என்று கூறி கொண்டே வாசலை நோக்கிய மிதுன் “இதோ… வந்துட்டான்” என்றவன் “சக்தி…” என்று நண்பனுக்கு கை அசைக்க,

“சக்தியா…!” என்று நினைத்து கொண்டு மிதுனின் பார்வையை தொடர்ந்து தன் பார்வையை செலுத்திய சாந்தவி… கோவிலின் தலை வாசலை தொட்டு நெஞ்சில் வைத்து மடித்து கட்டி இருந்த வேஷ்டியை இறங்கி விட்டபடி உள்ளே வந்த ஈஸ்வரனை பார்த்து கண்கள் இரண்டும் நிலை குத்தி நிற்க அவன் வரும் திசையை வெறித்து பார்த்து நின்றாள்.

சாந்தவி எது நடக்கவே கூடாது… என்று நினைத்தாலோ..! அது நடந்து விட்டது. பாவை அடுத்து என்ன..?! என்று புரியாமல் அசையாமல் நிற்க, ஈஸ்வரன் நெருங்கி வர வர சாரதாவின் கையை இறுக்க பற்றி கொண்டாள்.

ஈஸ்வரன் நேராக மிதுனிடம் வந்தவன் “ஹேப்பி மெரிட் லைப் டா..” என்று தோள் அனைத்து விடுவித்தவன் “உனக்கும்.. என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் மா..” என்றவன் தன் பின்னால் கையில் பெரிய தாம்பாளம் தட்டுடன் நின்றவரிடம் இருந்து தட்டை வாங்கி “உன்னோட தாய் வீட்டு சீரா இந்த அண்ணா தர பரிசு..” என்று சாரதாவிடம் கொடுத்தான், தாய் வீட்டு சீரீல் அழுத்தம் கொடுத்து.

ஈஸ்வரன் சாந்தவியை திரும்பியும் பார்க்கவில்லை. அவளை யார் என்றே தெரியாதது போல்… காளை நடந்து கொள்ள, பாவை அங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்து நின்றாள். ஆனால் அவள் ஈஸ்வரனை நம்புவதாக இல்லை. அவனின் இந்த செய்கைக்கு பின்னால் பெரிதாக ஏதோ..! இருக்கிறது என்று நினைத்தவள் அவனை சந்தேகத்துடனே பார்த்தாள்.

சாந்தவியின் பார்வை நொடி நேரமும் அகலாமல் ஈஸ்வரனை தொடர…, சாரதா, மிதுன் திருமணம் எந்த தடையும் இல்லாமல் நல்லபடியாக முடிந்தது. இதில் சாந்தவியால் ஏற்று கொள்ள முடியாத ஒன்று ஈஸ்வரன் தாலி எடுத்து கொடுத்தது தான். முகத்தில் அதிருப்தியுடன் நின்ற பாவையை யாரும் கவனிக்கவில்லை.

திருமணம் முடித்து நால்வரும் கோவிலை விட்டு வெளியே வந்து காருக்கு செல்ல போக…, ஒரு சிறுவன் சாந்தவியிடம் வந்தவன் “அக்கா உங்க வீடு கேஸ் வெடிச்சி தீ பிடிச்சி எரியுது…” என்று கூற, சாரதா பதறி அழுகையில் உதடு துடிக்க “சாவி…” என்று தங்கையை அனைத்து கொள்ள, சாந்தவி திகைத்து ஈஸ்வரனை தான் பார்த்ததாள். அவன் முகத்தில் பொய்யோ..! என்று நினைக்கும் படி தோன்றி மறைந்த பலி வெறியையும் இதழோர ஏளன அசைவையும் கண்டு கொண்டவள் சாரதாவை பிரித்து நிறுத்தி விட்டு…,

“ஏன்டா… இப்படி பண்ணுன?!, நான் உன்னை என்ன பண்ணுனேன்…?!, ஏன்.. இப்படி என்னை உயிரோட வதைக்குற?!!” என்று கேட்டு ஆவேசமாக ஈஸ்வரனின் சட்டையை பற்ற, “சாந்தவி… என்ன பண்ற?, விடு அவனை, அவன் என்ன பண்ணுனான்..?!” என்று மிதுன் சாந்தவியை ஈஸ்வரனிடம் இருந்து பிரிக்க,

நிதானமாக அவள் கையை தன் சட்டையில் இருந்து எடுத்து விட்ட ஈஸ்வரன் “இதுக்கும்… சேர்ந்து அனுபவிப்படி..” என்றான் அவள் மட்டும் கேட்கும் படி. சாரதா அங்கே ‘என்ன நடக்கிறது..!’ என்று புரியாமல் பார்த்து நிற்க,

ஈஸ்வரன் வார்த்தையை கேட்ட சாந்தவி… ஒரு நிமிடம் திகைத்து, பின்பு “இவன் தான் மாமா… எல்லாத்துக்கும் காரணம். எல்லாமே.. இவனால தான். உங்க கல்யாணம் அவசரமா நடக்க காரணம், எங்க வீடு வெடிக்க காரணம், ஏன்.. என்னை கடத்திட்டு போனதும் இவன் தான்…” என்றாள் அழுகையும் ஆவேசமுமாக.

“என்ன உளறுர சாந்தவி..!” என்று முதுன் சாந்தவியை அதட்ட, நான் சொன்னது உண்மை மாமா… என்னை கடத்துனது தெரிஞ்சா… சாரு பயப்படுவானு தான் நான் சொல்லாம மறைச்சேன் என்றாள்…” அழுகையுடன்.

“வாட்… சக்தி உன்னை கடத்துனானா..!!, நீ காணாம போன சமயம் சக்தி என்னோட இங்க தான் இருந்தான். சொல்ல போனா… அவனும் உன்னை தேட எனக்கு ஹெல்ப் பண்ணான். இது சாருவுக்கும் தெரியும்…” என்று மிதுன் கூற, “மாமா…” என்ற சாந்தவி அந்த நாளில் மீண்டும் ஒரு முறை திகைத்தாள்.

அவளை சுற்றி என்ன நடக்கிறது.. என்றும் புரியாமல், யாரை நம்புவது என்றும் புரியாமல்… அப்படியே நின்று விட்டாள்.

இதில் கயவர் யாரோ..?! அவர்கள் செயலின் காரணம் என்னவோ..?!

நிழல் தொடரும்…