Uyir Vangum Rojave–EPI 6

ROSE-79a7f7b1

Uyir Vangum Rojave–EPI 6

அத்தியாயம் 6

கண்ணுக்கு பிடிச்சவள கட்டிக்கிறது இல்ல கல்யாணம்

மனசுக்கு பிடிச்சவள கட்டிக்கிறதுதான் கல்யாணம்

(அவள் வருவாளாஅஜித்)

 

சாவியைத் துளையில் இட்டு வீட்டுக் கதவைத் திறந்த கார்த்திக்,
“அம்மா, நான் வந்துட்டேன். “ என கூவிக் கொண்டே நுழைந்தான்.
“இன்னிக்கு என்ன செஞ்சிங்க? பொழுது நல்லா போச்சா? இருங்கம்மா நான் குளிச்சிட்டு வரேன். ஹாஸ்பிட்டல் அங்க இங்கன்னு அலைஞ்சது கச கசன்னு இருக்கு”
ஹீட்டர் போட்டு நன்றாக சுடுதண்ணீரில் குளித்துவிட்டு, டீ சர்ட் சொர்ட்சுடன் ரூமில் இருந்து வெளியே வந்தவன் நேரே அவனின் அம்மாவின் அறைக்கு சென்றான். கதவைத் தட்டிவிட்டு திறந்தவன் லைட்டை போட்டு ரூமை வெளிச்சமாக்கினான். அங்கே சுவற்றில் ஆளுயர போட்டோவில் அவன் அம்மா சாந்தி சாந்தமாக சிரித்துக் கொண்டிருந்தார். போட்டோவின் அருகே சென்றவன் அவரின் கன்னத்தை தடவினான்.
“ அம்மா, இன்னிக்கு உன்னை ரொம்ப மிஸ் பண்ணுறேன்மா. சந்தோஷமா சுத்திக்கிட்டு இருந்த என் தலையில இவ்வளவு பெரிய சுமைய தூக்கி வச்சிட்டு போய்டீங்களேமா. இருந்தாலும் இது ஒரு சுகமான சுமைதான். உங்களுக்கு செஞ்சு குடுத்த சத்தியத்த நான் கண்டிப்பா காப்பாத்திடுவேன்மா. நீங்க மேலுலகத்திலயாச்சும் எந்த கவலையும் இல்லாம சந்தோஷமா இருங்க. ஓகேவா? ஐ லவ் யூ மா. என்ன சிரிக்கிறீங்க. மருமகளுக்கு சொல்ல வேண்டிய வயசுல உங்களுக்கு சொல்லுறேன்னு நினைக்கறீங்களா? நான் என்னம்மா பண்ண? அவதான் என்னை பார்த்தாலே அடுப்புல வைச்ச சுடுதண்ணி மாதிரி கொதிக்கிறாளே. நீங்கதான் ஆவியா வந்து அவளை பயம் காட்டி என்னை ஏத்துக்க சொல்லனும். ஹிஹிஹி. சும்மா சொன்னேன்மா. அப்படி ஏதும் பண்ணிறாதீங்க. அவ கத்துற கத்துல நீங்க தெறிச்சு போய் ஓடி வந்துருவீங்க. ஓகே மா. நான் தூங்க போறேன். குட் நைட் டார்லி”
போட்டோவுக்கு முத்தம் ஒன்றை கொடுத்தவன், லைட்டை மூடிவிட்டு ஹோலுக்கு வந்தான்.

அவன் வசிப்பது இரு அறைகள் கொண்ட அபார்ட்மெண்ட். டிவியை போட்டவன் மியூசிக் சென்னலை ஓட விட்டான். ஐஸ்வர்யா ராய் ‘நன்னாரே நன்னாரே’ குரு பட பாடலுக்கு மழையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். அந்த பாடலை பார்த்ததும் பக்கென லட்டு அவன் நெஞ்சில் வந்து அமர்ந்து கொண்டாள். எழுந்து ரூமுக்குள்
சென்றவன் பிரேம் போட்டு பெட்சைட் டேபிளில் வைத்திருந்த கவிதையை எடுத்துக் கொண்டு மீண்டும் ஹாலுக்கு வந்தான். கவிதையின் ஓரத்தில் அவள் வீட்டிலிருந்து திருடி வந்திருந்த அவள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும் இருந்தது. பெரிய பொட்டு வைத்து இரட்டை ஜடையில் திரு திருவென முழித்துக் கொண்டிருந்தாள் லாவண்யா. எப்பொழுதும் போல் அந்த போட்டோவுக்கு அழுத்தமாக ஒரு முத்ததைக் கொடுத்தான். அவன் காதல் கவிதைக்கு அவள் கொடுத்திருந்த ரிப்ளை கவிதையைத் தான் பிரேம் செய்து வைத்திருந்தான்.
‘கவிதைய பாரு, சிநேகன் தோத்து போயிருவாரு. என் குட்டி ரவுடி’ என அவளைக் கொஞ்சிக் கொண்டே பிளாஸ்பேக்குகுள் நுழைந்தான் இந்த காதல் பேக்கு.

அப்பொழுது கார்த்திக் ஹாஸ்டலில் தங்கி காலேஜில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தான். வேந்தன் இவனது காலேஜ் மற்றும் ரூம்மேட். விடுமுறை காலங்களில் கூட இருவரும் வீட்டுக்கு போகாமல் ஹாஸ்டலிலே இருப்பார்கள். கார்த்திக் அம்மா உடல் நல குறைவால் நர்சிங் ஹோமில் இருப்பவர். வேந்தனின் அம்மாவோ அண்ணனை அண்டி அவர் வீட்டில் வசிப்பவர். அங்கே சென்று அத்தையின் குத்தல் பேச்சுக்களைக் கேட்பதைவிட ஹாஸ்டலிலே இருந்து கொண்டு படிக்கலாம் என இங்கேயே இருந்து விடுவான். இருவரும் நெருங்கி பழகினாலும், குடும்ப சூழ்நிலையைப் பற்றி சகஜமாக பேசிக் கொள்ள மாட்டார்கள். தன் ஏழ்மையை வெளிக்காட்ட வேந்தனுக்கு பிடிக்காது. அதே மாதிரி பல பிரச்சனைகளை கொண்ட தன் குடும்ப சூழ்நிலையை பகிர்ந்துக் கொள்ள கார்த்திக்குக்கும் தயக்கம்.

அந்த வருட பொங்கல் விடுமுறைக்கு மாமாவின் குடும்பம் வெளிநாட்டு டூருக்கு போவதாக அறிந்த வேந்தன் ஊருக்கு கிளம்பினான்.

“மச்சி, எப்பவும் ரெண்டு பேரும் தானே மோட்டுவளைய பார்த்துக் கிட்டு லீவ எஞ்சாய் பண்ணுவோம். இப்ப நீ மட்டும் வீட்டுக்கு போறேன்னு சொல்லுற பார்த்தியா? நான் தனியா இங்க என்னடா செய்யட்டும்?” பரிதாபமாக பார்த்தான் கார்த்திக்.

“வீட்டுக்கு போய் அம்மாவையும் தங்கச்சிங்களையும் பார்க்க ஏதோ ஒரு முறை தான் நல்ல சான்ஸ் அமையுது. எப்படி மச்சான் போகாம இருக்கறது. என் கடைசி தங்கச்சியும் ஹாஸ்டல்ல இருந்து வரா. நான் போகாட்டி அழுதே கரைஞ்சிருவா” என்றான் வேந்தன்.

“அப்படினா நானும் உன் கூட வரேன்டா.”

“அதெல்லாம் முடியாது. வீட்டுல வயசுக்கு வந்த ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க. உன்னை எல்லாம் நம்பி அங்க கூட்டிட்டு போக முடியாது.”

“டேய்! வாயில நல்லா வந்துரும். அந்த போட்டோல இருக்கற உன் கருவாச்சி தங்கச்சிங்கள நான் சைட் அடிச்சிருவேன்னு உனக்கு பயமா?” வேந்தனின் மேசை மேல் இருந்த பழைய குடும்ப படத்தைக் காட்டி கேட்டான் கார்த்திக்.

“என் தங்கச்சிங்கள கலாய்க்கிற வேலை வச்சிக்காதடா. அப்புறம் நம்ப நட்ப நான் முறிக்க வேண்டி வரும்”

‘ஆமா, நீ தேவா நான் சூரியா. ரெண்டு பேரும் தளபதி பார்ட் 2 எடுக்க போறோம். போடா’ மனதில் நினைத்தவன் வெளியில்,

“மச்சி, புரிஞ்சுக்கடா. நல்லதா சாப்பாடு சாப்பிட்டு எத்தனை வருஷம் ஆச்சு. நாக்கு செத்துப் போச்சுடா. உடனே நாக்க அடக்கம் பண்ணுன்னு பழைய ஜோக்க எடுத்து விடாத. நான் கடுப்ஸ் ஆகிருவேன். நீ ஒன்னும் சும்மா கூட்டி போக வேணாம். பிரயாண செலவெல்லாம் நான் பார்த்துக்கறேன். நாக்குக்கு ருசியா சாப்பாடு போட்டா மட்டும் போதும்”

வேந்தன் சிறிது நேரம் யோசித்தான்.

‘ட்ராண்ஸ்போர்ட் செலவை இவன் பார்த்துகிட்டா கொஞ்சம் காசு கையில இருக்கும். அதுல தங்கச்சிங்களுக்கு ஒரு செட் காட்டன் சுடி எடுக்கலாம். சரி வந்து தொலையட்டும். எக்ஸ்ட்ரா ஒரு வயித்துக்கு சாப்பாடு போடறதுல்ல நாம குறைஞ்சிற மாட்டோம்’

“நான் நல்லா யோசிச்சு பார்த்தேன். எனக்கு ஓகே தான். ரெண்டு நாளைக்கு தங்குற மாதிரி துணி எடுத்துக்க. இன்னிக்கு நைட் பஸ்சுல சென்னை கிளம்பலாம். கொஞ்சம் ஷோப்பிங் பண்ணிட்டு அப்புறமா ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போயிறலாம். ஆனா ஒரு கண்டிஷன்” என நிறுத்தினான்.

“இன்னும் என்னடா?”

“என் தங்கச்சிங்கள, உன் தங்கச்சியா நினைக்கனும். சரியா?”

“சரிடா சாமி சரி”

‘உலக அழகிங்கள தங்கச்சியா வைச்சிருக்கற மாதிரி பெரிய பில்ட் அப்பு. ரெண்டும் போட்டோவுல பார்க்கறப்பவே அங்கவை சங்கவை மாதிரி இருக்குங்க. நேருல பார்த்து நான் மயங்கிட்டாலும். போடா டேய்’

ஆனால் அதில் ஒருத்தியைப் பார்த்து, தான் தலைக்குப்புற விழுந்து வாற போவதை, பாவம் கார்த்திக் அறிந்திருக்கவில்லை.

அவர்கள் வேந்தனின் மாமா வீடு இருக்கும் தெருவை அடையும் போது காலை மணி ஆறு ஆகியிருந்தது. தெருவே அப்பொழுதுதான் எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது. பச்சை சாயம் தீட்டப் பட்டிருந்த அந்த விசாலமான வீட்டு வாசலில் ஒரு பச்சை தாவணி  கோலம் போட்டுக்கொண்டிருந்தது. அவள் அணிந்திருந்த ஜிமிக்கியில் சூரிய ஒளி பட்டு, அசையும் போதெல்லாம் ஒளி கற்றைகளை வாரி இறைத்துக் கொண்டிருந்தது. கார்த்திக் கண் இமைக்க மறந்து, அந்த இளம் பெண்ணையே வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான். நிமிர்ந்து இவனைப் பார்த்து கன்னங்குழிய சிரித்தவள், கோல டப்பாவை அப்படியே போட்டு விட்டு இவனை நோக்கி ஓடி வந்தாள்.

‘வாவ்! மார்வலஸ் பியூட்டி, நீதான்டி என் பொண்டாட்டி. அவளுக்கும் நான் தான் அவ ராஜகுமாரன்னு தெரிஞ்சிருச்சோ. இப்படி ஓடி வரா. எதுக்கும் கையை நீட்டிக்குவோம். படத்துல வர மாதிரி தூக்கி ஒரு சுத்து சுத்திருவோம்’.  ரோஜா வண்ண நிறம், குழந்தைத்தனமான முகம், பிறை நெற்றி, கெண்டை மீன் விழி, கூர் நாசி, இடை வரை புரளும் கேசம், மெல்லிய தேகம். அவள் ஓடி வந்த பத்து செகண்டில் அவளை முழுதாக ஸ்கேன் பண்ணிவிட்டன அவன் கண்கள்.

அவன் நினைத்ததுதான் நடந்தது. ஆனால் தூக்கி சுற்றியது அவன் இல்லை, வேந்தன்.

“அண்ணா” என ஆர்ப்பரிப்புடன் ஓடி வந்தவளை, கையில் இருந்த பேக்கையெல்லாம் கீழே போட்டு விட்டு தூக்கி ஒரு சுற்று சுற்றினான் வேந்தன்.

“லட்டும்மா. எப்படிடா இருக்க?” தங்கையை ஆரத் தழுவிக் கொண்டான் அவன்.

“நான் நல்லா இருக்கேண்ணா. உங்க எல்லாரையும் நான் ரொம்ப மிஸ் பண்ணுறேண்ணா. நாம எப்ப சேர்ந்து ஒரு குடும்பமா இருப்போம்? எனக்கு ஹோஸ்டல்ல இருக்க பிடிக்கலண்ணா.” வாட்டர் டேமை திறந்தாள் லாவண்யா.

“நல்ல நாளும் அதுவுமா அழக் கூடாது. என் பவுனுக்குட்டி இல்ல. சீக்கிரமா அண்ணா படிச்சு முடிச்சவுடனே ஒன்னா இருக்கலாம். இப்ப கண்ண துடை லட்டு. அம்மா பார்த்தா மனசு உடைஞ்சி போயிருவாங்க”

கண்ணை துடைத்துக் கொண்டவள்,

“இப்ப பாருண்ணா. அழுத மாதிரி இருக்கா?” என கேட்டாள்.

‘வேந்தன் தங்கச்சியா இவ? அடக்கடவுளே. அசிங்கமான போட்டாவ காட்டி என்னை இத்தனை நாளா ஏமாத்திபுட்டானே இந்த சண்டாளன். தகதகன்னு தங்க சிலை மாதிரி இருக்கும் இவளையா கருப்பின்னு கவுன்ட்டர் குடுத்தோம். ஐயகோ’

அவள் கண்ணீரைப் பார்த்த கார்த்திக்குக்கு, கை பரபரத்தது அதை துடைக்க. அடக்கி கொண்டு நின்றிருந்தான். அண்ணனும் தங்கையும் பாச மழையை பொழிந்து முடித்துவிட்டு தான் இவன் பக்கம் திரும்பினர்.

கேள்வியாக நோக்கிய லாவண்யாவிடம்,

“என் பிரண்ட்மா. நம்ப கூட தங்க வந்துருக்கான். உனக்கு இன்னொரு அண்ணன்.”

‘டேய் பாவி வேந்தா. உனக்கு நான் என்னடா துரோகம் பண்ணேன்? என் ஜட்டிய தவிர மத்ததெல்லாத்தையும் உனக்கு ஷேர் பண்ணிக்க குடுக்கறேன் தானடா. அந்த நன்றி கடனுக்காகவாவது வெறும் கார்த்திக்னு அறிமுக படுத்தக் கூடாதா?’ நொந்து போனான் கார்த்திக்.

மேலும் கீழும் அவனை ஏறிட்டுப் பார்த்த லாவண்யா,

“இந்த மாதிரி லூசையெல்லாம் நான் அண்ணன்னு கூப்பிட மாட்டேன். எனக்கு ஒரு அண்ணன், அது நீ மட்டும்தான்” என சொல்லிவிட்டு உள்ளே நுழைந்து விட்டாள்.

அண்ணன்னு கூப்பிடாததற்கு சந்தோஷப்படுவதா, இல்லை லூசு என சொல்லியதற்கு துக்கப்படுவதா என முழித்தப்படி நின்றிருந்தான் கார்த்திக்.

“மச்சி, நம்ப தங்கச்சி சொன்னத மனசுல வச்சிக்காதே. இப்பத்தானே பதினாறு வயசு. எல்லாத்திலயும் வெலையாட்டுத்தனம்தான்” என நண்பனை தேற்றுவதாக எண்ணி இன்னும் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினான்.

‘அவ என் தங்கச்சி இல்லடா, என் தங்கம்’

உள்ளே நுழைந்த இருவரையும் பாசமாக வரவேற்றார் இந்து.

“வாப்பா. நல்லா இருக்கியா? உன் பேரு என்னமோ சொன்னானே இவன்”

“கார்த்திக்மா”

“ஆமா, கார்த்திக். சின்ன வயசுல நடிகர் கார்த்திக் இருந்த மாதிரி தான் வெடவெடன்னு இருக்க. சாப்புடறது எல்லாம் எலும்புல சொருகிக்கிக்குமோ?” என தனது பெரிய சந்தேகத்தைக் கேட்டார் அவர்.

அனுவும் லாவண்யாவும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

“அம்மா, கொஞ்சம் சும்மா இருங்க. நம்ம மாதிரி கிண்டல் கேலி எல்லாம் இவனுக்கு பழக்கமில்ல. பணக்கார வீட்டுப் புள்ளை. பயம் காட்டி ஒரே நாள்ல துரத்திறாதீங்க” என சிரித்தபடியே அம்மாவிடம் கூறினான் வேந்தன்.

“கோவிச்சுக்காதப்பா. நாங்க நாலு பேரும் இப்படி ஒன்னா சந்திக்கறதே அபூர்வம். அந்த டைம்ல இப்படி தான் பேசிக்குவோம். சகஜமா இருப்பா. போய் குளிச்சுட்டு வாங்க, சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என சமையலறைக்குள் புகுந்து கொண்டார்.

அந்தக் காலத்தில் கட்டப்பட்ட பெரிய வீடு அது. முற்றம், தாழ்வாரம் என அழகாக இருந்தது. கொஞ்சம் நவீனமாகவும் இருந்தது. வேந்தனின் குடும்பத்திற்கு என ஒரு ரூம் தான் ஒதுக்கப்பட்டு இருந்தது. வேந்தன் வந்தால், ஹோலில் ஒரு மூலையில் பாய் விரித்துப் போட்டு படுத்துக் கொள்வான்.

குளித்துவிட்டு வந்தவர்களுக்கு சுடச்சுட தோசையை பறிமாறினார் இந்து. வரிசையாக நால்வரும் கீழே அமர்ந்திருந்தனர். இந்துவின் கவனிப்பில் வயிறார திருப்தியாக சாப்பிடான் கார்த்திக். காபியும் மணக்க மணக்க இருந்தது.

“இந்தும்மா, சாப்பாடு நல்லா ருசியா இருந்தது. எக்பெசலி இந்த காப்பி”

“என்னம்மோ சொன்னியே எலி காப்பின்னு, அதைப் போட்டது நான் இல்லப்பா. நம்ப லட்டுதான். நான் போட்டிருந்தா மனுஷங்க குடிக்கற மாதிரி இருந்திருக்கும். இவ இப்பத்தான பழகற அதான் எலி குடிக்கற மாதிரி போட்டுருக்கா.”

காப்பி குடித்தபடி அவர் கூறியதைக் கேட்டவனுக்கு புரை ஏறிக் கொண்டது. பக்கத்தில் அமர்ந்திருந்த லாவண்யா தான் அவன் தலையில் தட்டினாள். அப்படியே பரவசமாக அவளைப் பார்த்தான் அவன்.

“என்ன பார்வை? நோண்டிருவேன் கண்ணை” முறைத்தாள் அவள்.

அவர்கள் குடும்பத்திலேயே லாவண்யா கொஞ்சம் புத்திசாலி. வயதிற்கு மீறிய வளர்ச்சி உடம்பில் மட்டுமல்ல, மூளையிலும் தான். கார்த்திக் முதன் முதலில் பார்த்த பார்வையிலே அவன் மனதில் இருப்பதைப் படித்துவிட்டாள் அவள். அதனாலேயே அவனை முறைத்துக் கொண்டே இருந்தாள்.

‘அண்ணனோட வந்தமா, பொங்கல கொண்டாடினமா கிளம்புனமான்னு இருக்கனும். அதை விட்டுட்டு ரொமன்டிக் பார்வை என்ன வேண்டி கிடக்குது’ மனதிற்குள்ளேயே கார்த்திக்கைத் திட்டி தீர்த்தாள்.

அன்று பகல் பொழுதை வீட்டிலேயே பேசி சிரித்தபடி கழித்தனர். திருட்டுத்தனமாக கார்த்திக் தன் சைட்டை தொடர்ந்து கொண்டு தான் இருந்தான். அன்று இரவு மழை பிய்த்து அடித்தது. லாவண்யா எதற்காகவோ அவள் அம்மாவிடம் கெஞ்சி கொண்டிருந்தாள். அவரோ வேண்டாம் என மறுத்துக் கொண்டே இருந்தார். அவளது குடைச்சல் தாளாது கடைசியில் சரி என சொல்லிவிட்டு உள்ளே சென்றார். செல்லும் முன்,

“பத்தே நிமிசம் தான் லட்டு. சுடுதண்ணீ போடுறேன் அப்புறம் வந்து குளிச்சிறனும்” என்றார் கண்டிப்பாக.

ஹாலில் இருந்து பார்த்தால் வீட்டு முற்றம் தெரியும். அங்கே மழைநீர் அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது. ரேடியோவில் அனு கேசட்டை போட, சுடிதார் துப்பட்டாவை குறுக்காக கட்டிக் கொண்டு முற்றத்தில் இறங்கினாள் லாவண்யா. ரேடியோவில் பாடல் ஒலிக்க, வளைந்து நெளிந்து மழையில் ஜோராக ஆடினாள் அவள்.

“நன்னாரே நன்னாரே நன்னாரே நாரே நா 
நன்னாரே நன்னாரே நன்னாரே நாரே நா

வெண்மேகம் முட்ட முட்ட 
பொன் மின்னல் வெட்ட வெட்ட 
பூவானம் பொத்து கொண்டதோ

பன்னீரை மூட்டை கட்டி 
பெண் மேலே கொட்ட சொல்லி 
விண் இன்று ஆணை இட்டதோ

நன்னாரே நன்னாரே நன்னாரே நன்னாரே 
நன்னாரே நன்னாரே நன்னாரே நன்னாரே …”

கார்த்திக் இதயம் படபடக்க , நெற்றி வியர்க்க, கண்கள் இரண்டும் அவள் மேலேயே நிலைக்குத்தி நிற்க உட்கார்ந்த இடத்திலேயே சொர்க்கத்திற்கு சென்று விட்டான். அவள் பிடித்த ஒவ்வொரு அபிநயமும் அவன் நெஞ்சுக்குள் ஆணி அடித்தது போல் அமர்ந்து கொண்டது. அப்பொழுது மட்டும் அந்த பாட்டுக்கு ஆடியது ஐஸ்வர்யா ராய் என யாராவது கூறியிருந்தாள், எவ அவ என கேட்டிருப்பான். விடலைப் பருவம் முடிந்து அடல்ட் லைப்பிற்கு அடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் அவன் மனதில், தன் குட்டி பாதங்களால் மென்நடை போட்டு அமர்ந்து கொண்டாள் லாவண்யா.

மழையில் சந்தோசமாக ஆடிவிட்டு, அம்மா போட்டுக் கொடுத்த சுடுதண்ணீரில் குளித்துவிட்டு வந்தாள் லட்டு. நீண்ட முடியை அந்நியன் மாதிரி முன்னே விட்டுக் கொண்டு,

“அம்மா, தலை துவட்டி விடுங்க “ என கத்திக் கொண்டே வந்தாள்.

“நானும் அக்காவும் டிபன் செய்யுறோம். அண்ணன் ஹோல்ல இருக்கான் பாரு. அவனை துவட்டி விட சொல்லு லட்டு” என குரல் கொடுத்தார்.

ஹோலில் கார்த்திக் மட்டும்தான் சோபாவில் அமர்ந்திருந்தான். வேந்தன் படிப்பதற்காக ரூமுக்குள் சென்று விட்டான். நேராக ஹோலுக்கு வந்தவள், கார்த்திக்கின் காலடியில் அமர்ந்து கொண்டு,

“துவட்டி விடு அண்ணா” என்றாள்.

‘முடி முன்னுக்கு மறைச்சா உட்கார்ந்திருக்கறது யாருன்னு கூடவா தெரியாது. இப்படி இம்சை பண்ணுறாளே’ சுற்றி முற்றி பார்த்தான். யாரும் அருகில் இல்லை. அவள் வேறு குளிரில் நடுங்கி கொண்டு இருந்தாள்.

“சீக்கிரம்ணா. பல்லெல்லாம் டைப் அடிக்குது”

அவள் மேல் வந்த சந்தன சோப்பின் வாசம் வேறு அவனை என்னவோ செய்தது. நீர் சொட்ட ஈர முடியுடன் இருந்தவள் அருகாமை அவனை வேறு உலகத்துக்கு இழுத்துச் சென்றது. மெல்ல துண்டை தலையில் வைத்து வலித்துவிடுமோ என மெதுவாக துவட்டினான். சைக்கில் கேப்பில் கையை தலையில் விட்டு அவள் முடியை அளைந்தான்.

‘என்ன ஒரு சோப்ட இருக்கு. வாசம் கிறுகிறுக்க வைக்குது. பேபிமா, என் ஜென்மம் முடியற வரைக்கும் உனக்கு நான் தான் தலைதுவட்டனும். என் புஜ்ஜிமா, என் செல்லம்மா’ என கொஞ்சி கொண்டான், நாளை மறுநாள் அவள் தன் மனதையே சுக்கு நூறாக உடைக்கப் போகிறாள் என தெரியாமல்.

 

உயிரை வாங்குவாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!