நெருப்பின் நிழல் அவன்! 7

eiC6JL558893-d46cd957

நெருப்பின் நிழல் அவன்! 7

அத்தியாயம்: 7

சக்தீஸ்வரனின்.., தன் மீதான கோபம் மற்றும் வெறுப்புக்கு வேறு காரணம் ஏதோ இருக்கிறது என்று நினைத்த சாந்தவியின் மனதில்.. அந்த எண்ணம் மண்ணில் புதைந்த விதையாக வேர் விட்டு விருட்சம் ஆனது.

ரத்தினம் மற்றும் சாரதாவின் உருவ ஒற்றுமையும்.., சக்தி சாருவிடம் அன்பாக நடந்து கொள்வது, மிதுனும் ஈஸ்வரனுக்கு ஆதரவாக இருப்பது.. என அனைத்தையும் நினைத்த சாந்தவிக்கு தான் ‘யாரும் அற்ற அனாதையாக’ நிற்பது போல் தோன்றி மனதில் ரணத்தை கொடுத்தது.

ஈஸ்வரன் கொடுத்த காயமே ஆறா ரணமாக இருக்க, அதில் அவள் மன எண்ணமும் சேர்ந்து தாங்க முடியா வலியை கொடுத்தது. இன்னது என‌ சொல்ல முடியாத உணர்வில் பாவை மனம் சிக்கி தவித்தது. ஆனால் அவளின் காயம், அவளின் ‘யாரும் அற்றவள்’ என்ற உணர்வின் வலி அனைத்தையும் போக்கும் மருந்து ஈஸ்வரனிடம் இருப்பதாக சாந்தவிக்கு தோன்றியது. அவள் நினைக்கும் மருந்து காயத்தை ஆற்றுமா இல்லை இன்னும் ரணப்படுத்துமா

தன்னை பார்த்தாலே பார்க்க கூடாதவரை பார்த்தது போல் எரிமலை என வெடித்து நெருப்பை கொட்டுபவனிடம் ‘எப்படி கேட்டது!’ அப்படியே கேட்டாலும் பதில் சொல்வான் என்றும் தோன்றவில்லை. அவனின் அதிகபட்ச பேச்சை பாவையை காயப்படுத்த மட்டுமே உபயோகிப்பவன் உண்மையை சொல்வதும் சாத்தியம் இல்லை தான்.

ஆனால் எனக்கு இது அனைத்துக்கும் பதில் தெரியாமல் இருக்க முடியாது என்று பாவை மனம் முரண்ட, ஈஸ்வரன் செயலுக்கான காரணத்தை அவனிடம் எப்படியும் கேட்டு விட வேண்டும் என்று நினைத்து கொண்ட உள்ளே வந்த சாந்தவியை “எங்க சாவி போன..! உன்னை எங்க எல்லாம் தேடுறது..!” என்று கேட்ட சாரதாவின் குரலில் தன் நிலைக்கு வந்த சாந்தவி “கூட்டமா இருக்கவும் வெளியவே நின்னுட்டேன் சாரு..” என்றாள் அமைதியாக.

“ஹோ..‌சரி” என்றவள் “சாவி நீ பார்த்தியா.. அவங்களை!?” என்று மண்டப வாசலில் நின்ற ரத்தினத்தை கை காட்டிய சாரதா “அவங்க அந்த சக்தி அண்ணா அப்பாவாம். அவர் என்னை மாதிரியே இருக்கார்” என்று ஆர்வமாக கூற, “ஒரே.. மாதிரி உலகத்துல ஏழு பேர் இருப்பாங்களாம்! இது இரண்டாவது ஆள் போல சாரு.. இன்னும் ஐஞ்சி பேர் எங்கயாவது இருப்பாங்க..!” என்று மிதுன் கூற

அவனை ஏறிட்ட சாந்தவி “ஆமா.. சாரு அப்படி தான் இருக்கும். அவர் என்ன‌ நமக்கு சொந்தமா வா இருக்க போறார்..!” என்று கூற, “சொந்தமாவா..!!! உனக்கு அப்படியா தோணுது…?!” என்று சாரதா கேட்கவும், “அப்படி எதுவும் இருக்காது. சாவி உன்னை குழப்ப பாக்குறா சாரு” என்று மிதுன் அவசரமாக குறுக்கிட்டவன் சாந்தவியை கெஞ்சல் பார்வை பார்க்க, அவனை பார்க்காமல் முகத்தை திருப்பி கொண்ட சாந்தவி அதன் பிறகு அமைதியாகி விட்டாள்.

மேலும் அதை பற்றி சாரதாவை பேச விடாமல் தடுத்த மிதுன் “சரி.. நீங்க போய் ரெடி ஆகுங்க, நான் சக்தி கூட வீட்டுக்கு போய்ட்டு வரேன்..” என்று வெளியே கிளம்பி விட்டான்.

அவன் சென்றதும் சாந்தவியின் கை பிடித்து அழைத்து வந்த சாரதா ஒரு அறைக்குள் சென்று கதவடைக்க “ஏய்… சாரு இங்க ஏன் கூட்டிட்டு வந்த! இது யார் ரூம்..!” என்று சாந்தவி கேட்க, “இது நமக்கு தந்த ரூம் தான். ஈஸ்வர் அண்ணா அம்மா தான் இங்க ரெடி ஆகிக்க சொன்னாங்க..” என்ற சாரதா அந்த அறையில் இருந்த கட்டிலில் அமர்ந்து சாந்தவியையும் தன் அருகில் அமர்த்தி கொண்டவள் “நீ சொன்னது உண்மையா சாவி..!?” என்று சாந்தவியை கூர்ந்து பார்த்து கேட்டாள்.

சாரதா எதை பற்றி கேட்கிறாள் என்று புரியாமல் முழித்த சாந்தவி “நீ எதை கேக்குற சாரு..!, நான் என்ன சொன்னேன்..?!’ என்று கேட்க, “காலையில அந்த சக்தீஸ்வரன் அண்ணா உன்னை கடத்துனதா சொன்னியே…! அது…” என்று சாரதா நினைவு படுத்த, அவள் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று கையை பிசைந்த சாந்தவி “அது… இல்லை. அப்படி எதும் இல்லை.. நான் சும்மா சொன்னேன்!” என்றாள் திக்கி சாரதா வை பார்க்காமல் வேறு புறம் பார்த்து.

“பொய் பேசாத சாவி! நீ முழிக்குறதுலயே தெரியுது… ஏதோ நடந்து இருக்கு! என்ன நடந்தது..!சொல்லு..” என்று சாரதா கோபமாக அதட்ட, சில நொடிகள் தயங்கிய சாந்தவி பின்பு எப்படியும் சாரதாவிற்கு என்றோ.. ஒரு நாள் உண்மை தெரியலாம். அதிலும் மிதுன் மீதான நம்பிக்கையும் சிறிதேனும் ஆட்டம் கண்டிருக்க, உண்மையை சொன்னால் சாரதாவும் கவனமாக இருப்பாள் என்று நினைத்தவள், ஈஸ்வரன் அவளை ‘பழி வாங்குவேன்’ என்று கூறியதையும்.. புதிதாக ‘சாரதா அவன் குடும்பத்து பெண்ணோ..!’ என்று தோன்றிய எண்ணத்தையும் மட்டும் மறைத்து விட்டு, மீதி நடந்த அனைத்தையும் கூறி விட, சாரதா கோபத்தில் சாந்தவியை அறைந்து இருந்தாள்.

“இவ்வளவு பெரிய விசயத்தை மறைக்கும் அளவு நீ பெரிய ஆளா ஆகிட்டியா டி..!, எத்தனை முறை சொல்லி இருக்கேன்… ஒரு செயலை செய்யுறதுக்கு முன்னாடி யோசிச்சி செய் னு…, ரௌடிய பார்த்து வெடி வைக்குற அளவு தைரியமோ மேடமுக்கு…! அவனுங்க உன்னை ஏதாவது செய்து இருந்தா… என்னடி பண்ணி இருப்ப..?, ஆயிரம் பேர் வேலை செய்ற ஆலைக்கு வெடி வச்சிருக்கியே யாருக்காவது ஏதாவது ஆகி இருந்தா… அவங்க குடும்பத்துக்கு உன்னால ஈடு கொடுக்க முடியுமா..!! அறிவு இருக்க யாராவது இப்படி செய்வாங்களா…?!” என்று கோபமும் ஆத்திரமுமாக சாரதா வெடிக்க,

ஏற்கனவே சுய அலசலில் தன் தவறை உணர்ந்து இருந்த சாந்தவிக்கு சாரதாவின் பேச்சு குற்ற உணர்வை கொடுக்க தலையை குனிந்து கொண்டவள் “நான் உடனே போலீஸ்கு போன் பண்ணி சொல்லிட்டேன்..” என்றாள்.

“நீ என்ன சொன்னாலும்.. நீ பண்ணது தப்பு. அதுவும் வீட்டுக்கு வந்ததும் நடந்ததை சொன்னியா..?, இப்போ வந்து மிதுன் சரி இல்லனு சொல்றியே… உன்னால நாம என்ன நிலையில வந்து நிக்குறோம் புரியுதா.. உனக்கு..!!, அதை நினைச்சாலே எனக்கு மனசு பதறுது அடுத்து என்ன நடக்குமோனு..!!” என்ற சாரதா சோர்ந்து அமர்ந்தாள்.

சாந்தவிக்கு புரியதான் செய்தது. கோவிலில் வைத்தே சாந்தவி அவள் தவறை உணர்ந்து விட்டாள். அதனால் தான் சக்தி இருப்பதையும் பொருட்படுத்தாமல் அவன் முன்பே உண்மையை சொன்னாள். ஆனால்.. மிதுனின் பேச்சு அதிர்ச்சியை தந்ததை விட குழப்பத்தை தான் தந்தது. ‘ஏன் இப்படி சொல்கிறான்..!’ என்று என்ன முயன்றும் சக்தியுடன் மிதுன் கூட்டு என்று அவளால் எண்ண முடியவில்லை. சக்தியை அவளுக்கு தெரியாது ஆனால் மிதுனை இரண்டு வருடமாக தெரியுமே.. அவன் அதை மறைக்க காரணம் இருக்கும் என்று உணர்ந்தே அந்த பேச்சை அத்துடன் நிறுத்தி விட்டு மிதுன் மீதான வருத்தத்தையும் பார்வையில் உணர்த்தி விட்டு சென்று விட்டாள்.

இப்போதும் அதையே வேறு விதமாக சாராதாவிடம்.., சாந்தவி கூறினாள்

“நீ ஃபீல் பண்ணாத சாரு, சக்தி பற்றி தான் நமக்கு தெரியாது ஆனா மிதுன் மாமா பத்தி தெரியும். அவர் உன் மேல வச்சிருக்க காதல் உண்மை. நீ அவரை நம்பு..” என்று கவலையுடன் கூறினாள்.

சாந்தவியின் தவறை உணர வைக்கவ தான் சாரதாவும் மிதுனை பற்றி அப்படி பேசியது. சாந்தவி சொல்வது போல் மிதுனை பற்றி அவளுக்கு தெரியாமே..! எனவே அதற்கு மேல் தங்கையின் முக சுணக்கம் தாங்காதவள் “இனிமேல் எது நடந்தாலும் என்கிட்ட சொல்லு! நீயே.. அறிவாளியா யோசிக்காத..” என்று சமாதானமாக கூற, முகம் மலர்ந்த சாந்தவியும் “சரி..” என்றாள் சம்மதமாக சற்று நேரத்தில் அதை மீற போவது தெரியாமல்.

அக்கா.., தங்கை இருவரும் கிளம்பி வெளியே வர, அவர்களுக்கு எதிரில் வந்த உமையாள் “உன்னை தேடி தான் சாரதா வரேன். நீயே வந்துட்ட வா… சக்தி நிச்சயத்துக்கு தேவையானதை எடுத்து வைப்போம்” என்று சாரதாவை அழைக்க, “நான் ஏன்..!!” என்று சாரதா தயங்கவும், “அட‌ நம்ம வீட்டு விசேஷம். நீ தான் செய்யனும் வா…” என்றவர் “நீயும் வாமா..” என்று பெயருக்கு சாந்தவியை அழைத்து விட்டு சாரதாவை கை பிடித்து அழைத்து சென்றார்.

அவரின் செயலில் சற்று தெளிந்து இருந்த சாந்தவியின் முகம் விழுந்து விட்டது. தெரிந்தோ..! தெரியாமலோ..! அங்கே உள்ள அனைவரின் செய்கையும் ‘நீ அனாதை..’ என்று சொல்லாம் சொல்வது போல் இருக்க, தொண்டை குழியில் அடைத்த கேவலை சிரமப்பட்டு அடக்கி கொண்டவள் சாரதாவுடன் செல்லாமல் மண்டபத்தின் ஒரு ஓரமாக.. யார் கண்ணிலும் படாத அளவு சென்று அமர்ந்து கொண்டாள்.

சேரில் அமர்ந்து அருகில் இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்த சாந்தவிக்கு உமையாளின் ‘நீ எங்க வீட்டு பொண்ணு’ என்ற சொல் ஊசியாக குத்த, தன் மன‌ குமுறலை இறக்கி வைக்க முடியாமல் தனக்குள் இறுகி போய் அமர்ந்து இருந்தாள்.

சாந்தவி எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்து இருந்தாளோ மண்டபத்தில் கேட்ட சலசலப்பு சத்தத்தில் தன்நிலைக்கு மீண்டு நிமிர்ந்து பார்க்க, உமையாள் அழுது கொண்டிருப்பதும்.., ஈஸ்வரன் அவரை அணைத்தபடி முகம் இறுக நின்றிருக்க, அவன் அருகில் மிதுன், சாரதா இருவரும் முகத்தில் கவலையுடன் நிற்பதும் தெரிய.. எழுந்து சாரதா அருகில் சென்றவள் “என்ன ஆச்சி சாரு..!, அவங்க ஏன் அழறாங்க..!” என்று மெதுவாக சாரதாவுக்கு மட்டும் கேட்கும் படி கேட்க,

“சக்தி அண்ணா அவங்க கல்யாணம் பண்ணிக்க போற பொண்ண பார்த்ததோ.. பேசுனதோ.. இல்லை போல!, அதான்.. “என்னை பிடிக்காதவரை எனக்கும் பிடிக்கலை. எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை. எனக்கு பிடிச்சவரோட போறேன் னு” எழுதி வச்சிட்டு ஓடி போய்ட்டாங்கலாம்” என்றாள் சாரதாவும்.. சாந்தவிக்கு மட்டும் கேட்கும் படி

“ஹோ…” என்று அங்கே நடப்பதை கிரகித்து கொண்ட சாந்தவி ஈஸ்வரனை பார்த்தாள்.

தன் அணைப்பே ஆயிரம் ஆறுதல் வார்த்தை என்பது போல் உமையாளை அணைத்து அவர் தோளில் தட்டி கொடுப்பதை பார்த்த சாந்தவிக்கு ஈஸ்வரன் தன் உறவானால் அங்கே உள்ள அனைவரும் தனக்கும் சொந்தம். பின்பு ‘தான் அனாதை இல்லை’ என்ற எண்ணம் தோன்ற.., அடுத்த நிமிடம் அவன் தன்னை பழி வாங்க துடிப்பவன் என்பதையும் மறந்து “ஆண்டி உங்க பையனுக்கு சரின்னா, நான் அவங்களை கல்யாணம் பண்ணிக்குறேன்..” என்று உமையாளிடம் கூறிவிட்டு, சாரதாவின் சம்மதம் வேண்டி அவள் முகம் பார்த்தாள்.

அவளை சுற்றி இருந்த அனைவரும் திகைக்க, ஈஸ்வரன் முகத்தில் தானாக வந்து அமர்ந்தது.. நினைத்து நடந்து விட்ட கர்வ புன்னகை. சாந்தவியின் பேச்சில் அதிர்ந்து மீண்ட சாரதா “உனக்கு பைத்தியமா டி??, எத்தனை தடவை சொன்னாலும் புத்தியே வராதா..!” என்று சாந்தவியை திட்டி அவளை இழுத்து தன் அருகில் நிறுத்தி கொண்டவள் “சாரி ஆண்டி அவ புரியாம பேசுறா! நீங்க தப்பா எடுத்துக்காதுங்க!” என்றாள்.

தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தால் அவன் கோபம் மறந்து.., அவனும் மற்றவரை போல் குடும்பம், குழந்தை என நன்றாக இருப்பான் என்று நினைத்து அனைத்தையும் செய்த உமையாளுக்கு ஈஸ்வரனின் திருமணம் நின்றது தலையில் இடி விழுந்தது போல் இருந்தது.

திருமணம் நின்றதிலேயே தன் ஒட்டு மொத்த திடமும் உடைந்து போய் இருந்தவருக்கு.. சாந்தவியின் பேச்சு நிம்மதியை தந்தது. எத்தனை நாட்கள் அடை மழை பெய்தாலும் ஏதோ ஒர் விடியலில் சூரியன் ஒளி கொடுப்பது போல் சாந்தவியின் சொல் அவர் மகனின் வாழ்க்கை சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கையை தந்தது.

அவர் நம்பிக்கையை நீடிக்க விடாமால் சாரதாவின் பேச்சி அவரை காயப்படுத்த.. அவசரமாக எழுந்து வந்து அவள் கையை பிடித்து கொண்ட உமையாள் “அம்மாடி.. என்ன குல சாமி. நீ.. இந்த வீட்டு பொண்ணு டா. நீயே இந்த கல்யாணத்தை தடுக்காதமா…” என்று அழுகையுடன் கூறினார். உமையாள் அறியவில்லை அவரின் சாரதா மீதான இந்த உரிமை சொல் தான் சாந்தவியின் செயலுக்கு காரணம் என்று.

‘நீ எங்க வீட்டு பொண்ணு’ என்ற உமையாளின் சொல், ஈஸ்வரனின் கோபத்துக்கு பின் இருக்கும் காரணம், இந்த திருமணம் முடிந்த பிறகு எங்கே செல்வது என்ற சாந்தவியின் கவலை அத்தனைக்கும் தீர்வு சக்தீஸ்வரன் ஆகி போனான்.

உமையாளின் கண்ணீர் மனதை கரைந்தாலும்.., தன் தங்கையை அரக்கனின் ஒப்படைக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்த சாரதா “இல்லை… ஆண்டி, நீங்க வேற பொண்ணு பாருங்க!, நாங்க இப்போ இவளுக்கு கல்யாணம் பண்ணுறதா இல்லை..” என்றவள் மிதுனை ஒரு பார்வை பார்த்து விட்டு சாந்தவியை அழைத்து செல்ல,

“ப்ளீஸ்.. சாரு! நடந்த எல்லாத்துக்கும் இது ஒன்று தான் தீர்வு. நான் அவரையே கல்லாணம் பண்ணிக்குறேன். சரின்னு சொல்லேன்…, இருக்க வீடு கூட இல்லாம தனியா எங்க போய் இருப்பேன்..! புரிஞ்சிக்க..!!” என்று சாந்தவி தான் நினைத்ததை சாரதாவிடம் கெஞ்சலாக கூறினாள்.

காலையில் தன் வாழ்க்கையை முடித்து கொள்ள போவதாக வெடித்தவள் இப்போது அதே வாழ்க்கையின் தொடக்கத்தையே அரக்கன் கையில் கொடுத்து அதன் முடிவை எழுதியவளை என்னவென்று சொல்வது!

சாந்தவியின் பேச்சு சாரதாவை இளக வைக்காமல் இன்னும் கோபத்தை கொடுக்க மீண்டும் சாரதாவின் கை சாந்தவியை பதம் பார்த்து இருந்தது. “இதுக்கெல்லாமாடி கல்யாணம் பண்ணுவாங்க!, அதுவும் கடத்திட்டு போய்…” என்ற சாரதா அடுத்த வார்த்தை சொல்லும் முன் அவசரமாக அவள் வாயை மூடிய சாந்தவி இதற்கு சாரதாவை ஏதும் செய்து விடுவானோ என்று உள்ளம் பதற திரும்பி ஈஸ்வரனை பார்க்க, அவன் பார்த்த பார்வையில் உயிரே ஆட்டம் கான பார்வையை தழைத்து கொண்டாள்.
அதற்கு மேல் அவன் பார்வையை எதிர் கொள்ள முடியாமல்.

இவர்கள் சண்டையில் அங்கே இருந்த உறவினர்களும் சாந்தவிக்கு ஆதரவாக பேச, சாரதா தன் முடிவில் உறுதியாக இருக்க, எங்கே இந்த திருமணம் நடக்கலாம் போய் விடாமோ என்று பயந்த உமையாள் “அம்மாடி உங்கிட்ட மடி ஏந்தி கேக்குறேன் மா.. இந்த கல்யாணத்துக்கு சரி சொல்லிட்டு” என்று சாரதா முன்பு மட்டியிட்டு கெஞ்ச,

“அம்மா…”, “உமையா..” என்று ஈஸ்வரும், ரத்தினமும் பதறி அவரை தூக்க, இருவரையும் தள்ளி விட்ட உமையாள் அங்கேயே மடிந்து அமர்ந்தது அழுது தீர்த்து விட்டார்.
ஒரு தாயாக அவருக்கு இனிமேல் தன் மகனுக்கு திருமண வாழ்க்கையே இல்லையோ என்று நினைத்து பறிதவித்து போனது. இதற்கு எல்லாம் காரணம் ஆனா ஈஸ்வரனோ அரக்கனாக நின்றான் பெற்ற தாய் கண்ணீரில் கரைவது கூட அந்த கல் மனது கொண்டவனை கரைக்கவில்லை.

உமையாள் அழுகைக்காக தன் தங்கையை பலி கொடுக்க முடியாது என்று நினைத்த சாரதாவும் அசையாமல் நிற்க, சுற்றி இருந்தவர்கள் வற்புறுத்த.., சாந்தவியும் அவள் முடிவில் மாறாமல் இருக்க.., சாரதா திரும்பி மிதுனை பார்த்தாள். மனதின் பயம் கண்ணீராக வெளியேர அவளை கையை ஆதரவாக பற்றி கொண்ட மிதுன் “ஓகே சொல்லு சாரு.., சாந்தவி நல்லா இருப்பா! இது சக்தியை பத்தி நல்லா தெரிஞ்சு சொல்றேன்‌” என்றான் அவனும் தன் பங்கிற்கு.

அனைவரின் வற்புறுத்தல், சாந்தவியின் பிடிவாதம், கணவன் மேல் இருந்த நம்பிக்கை என சாரதா, சாந்தவி மற்றும் ஈஸ்வரன் திருமணத்திற்கு ஒத்து கொள்ள, “இது போதும்மா! இது ஒன்னு போதும்..!” என்றவர் “சக்தி அம்மாவுக்காக நீயும் இந்த கல்யாணத்துக்கு சரி சொல்லுடா…” என்று ஈஸ்வரனை கேட்க, தலை குனிந்து நின்றிருந்த சாந்தவியை எரித்து விடுவதை போல் பார்த்த ஈஸ்வரன் சம்மதமாக தலையசைக்க, அதுவே பெரிது என நினைத்த உமையாள் “சந்தோசம் டா..!” என்று மகனை அணைத்து விடுவித்தாவர்,

“ஒரு நிமிசம் இரு. இதோ வரேன்..” என்று முந்தானையால் கண்ணை துடைத்து கொண்டே மணமகன் அறை என்று எழுதி இருந்த அறைக்குள் சென்று கையில் மாலையுடன் வந்தவர் “அம்மாடி இங்க வாமா..” என்று சாந்தவியை அழைத்து ஈஸ்வரன் அருகில் நிறுத்தி இருவர் கையிலும் மாலையை கொடுத்தவர் “மாலைய மாத்திட்டு இந்த தாலியை அந்த பொண்ணு கழுத்துல கட்டு சக்தி..” என்று கையில் திருமாங்கல்யத்தை ஏந்தி கூற மீண்டும் ஒரு முறை அனைவரும் அதிர்ந்தனர்.

அது வரை அமைதியா இருந்த ரத்தினம் “உமையா அதான் எல்லாரும் சம்மதம் சொல்லியாச்சே..! அப்பறம் ஏன் அவசர படுற..!, நாளைக்கு குறிச்ச முகூர்த்தத்துல கல்யாணம் நடத்தலாம்” என்க, “நான் யாரையும்.. நம்ப மாட்டேன். எல்லாரும் நாளைக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிடுவிங்க. எனக்கு இப்பவே இந்த கல்யாணம் நடக்கனும்..” என்றார் பிடிவாதமாக.

நாளைக்கு யார் மனம் எப்படி மாறுமோ..!, சாந்தவியே கூட கல்யாணம் வேண்டாம் என்று கூறலாம். ஈஸ்வரனும் வேண்டாம் என்றாள்…! இன்னும் ஒரு முறை அனைவரையும் சம்மதிக்க வைப்பது கஷ்டம் என்று நினைத்த உமையாள் அனைவர் மனமும் இளகி இருக்கும் போதே வளைத்து திருமணத்தை முடிக்க நினைத்தார். அத்தனை பேரும் எடுத்து சொல்லியும் உமையாள் தன் பிடிவாதத்தை விடாமல் நிற்க வேறு வழி இன்றி மற்ற அனைவரும் ஒத்து கொள்ள “முதல்ல மாலையை மாத்துங்க..” என்ற உமையாள் “சக்தி போட்டு விடு..” என்றார் ஆர்வமும், சந்தோசமுமாக.

உள்ளுக்குள் நினைத்ததை நடத்தியதை நினைத்து மகிழ்ந்த மனதை வெளிக்காட்டாமல் ஈஸ்வரன் முதலில் சாந்தவிக்கு மாலை அனுவிக்க.., சாந்தவி உள்ளே உதறிய மனதை வெளிக்காட்டாமல் தயக்கத்துடன் அவனை நெருங்கினாள்.

சாந்தவி ஈஸ்வரன் அருகில் நெருங்க.., நெருங்க… அவன் உயரம் கூடி அவள் அவன் மார்பு அளவு இருந்தாள். தன் உயரத்தை அவனுடன் ஒப்பிட்டு பார்த்து “இன்னும் கொஞ்சம் வளர்ந்து இருக்கலாம்..” என்று முகம் சுணங்கி கவலை பட்டு கொண்டது பெண் மனம்.

இதயம் படபடக்க சாந்தவி நிமிர்ந்து ஈஸ்வரனை பார்க்க.. அவளை எள்ளலாக பார்த்த ஈஸ்வரன் விரைப்பாக நிமிர்ந்து நிற்க, அவனை பாவமாக பார்த்து நின்றாள் பாவை. மகன் விரைப்பாக நிற்பதையும் மருமகள் தயங்கி நிற்பதையும் பார்த்த உமையாள் “எவரெஸ்ட் மாதிரி வளர்ந்துட்டு.. எருமை மாதிரி அசையாம நிக்குற..! குனியேன்டா..” என்று ஈஸ்வரனை இழுத்து குனிய வைக்க, சாந்தவி சின்ன சிரிப்புடன் அவனுக்கு மாலை அனுவிக்க ஈஸ்வரன் முகம் கடுப்பில் சினத்தது.

சாரதா கண்ணில் தோன்றிய நீருடன் தங்கையை வெறித்து பார்த்தாள்.

அடுத்து தாலியை கொடுத்து கட்ட சொல்ல‌ ரத்தினம் மற்றும் உமையாளின் ஆசீர்வாதத்துடனும், மேடை அலங்காரத்திற்கு வாங்கிய மலர்கள் அச்சதையாக தூவ சாந்தவியின் கழுத்தில் மூன்று முடிச்சை போட்டு அவளை தன் சரி பாதியாக ஏற்று கொண்ட ஈஸ்வரன் “வெல்கம் டு தி ஹெல்…, இது தாலி இல்ல உனக்கு நீயே கேட்டு வாங்குன தூக்கு கயிறு..” என்று பல் இடையில் வார்த்தையில் விசத்தை தேய்த்து துப்ப, சாந்தவியின் இதழில் இருந்த புன்னகை நொடியில் காணாமல் போக, மனதில் பயம் வந்து அமர்ந்து கொண்டது.

நிழல் தொடரும்….

Leave a Reply

error: Content is protected !!