ஆயட்காரகனே 1
ஏதிரெதிர் துருவங்கள்
அறிந்திடா மர்மங்கள்
இடையிலே சில காதல்
தருணங்கள்சூழ்ந்திருந்த காரிருள் கசியத்தொடங்கியிருந்த ஆதவனின் செங்கதிர்களின் உபயத்தால் தன் இருப்பிடத்தை அரூபமாக்க ஆரம்பித்திருந்தது.
ஆங்காங்கே படர்ந்தும் பச்சைத்தாவரங்களின் மேலணியை மறைத்திடும் போர்வையாய் சூழ்ந்திருந்த பனித்துளிகளோ ஆதவனின் வரவை உணர்ந்து தம் ஆதிமூலத்தை நோக்கி பயணப்பட தயாராகியது.
சுற்றுப்புறத்தின் சூதான அறிவிப்புக்களை கவனித்தும் கவனியாதது போல் கிழக்கிலிருந்து மேலெழத்தொடங்கினான் அகிலத்தின் வலு மோட்டாரான செந்நிற பகலவன்.
அவனின் வரவு ஒவ்வொரு ஜீவராசியையும் வெவ்வேறு விதமாக பாதித்திட அவற்றின் மாற்றங்கள் அனைவருக்குமே பரீட்சயமானது தான் என்பது போல அனைவரின் செயற்பாடுகளும் அமைந்திருந்தது.
சுற்றுப்புறத்தின் மாற்றங்கள் சில எதிரொலிகளை ஏற்படுத்திய போதிலும் அவை அனைத்தையும் அவசியமாய் அலட்சியபடுத்தியபடியே தன் மனதினை தடிமனான கட்டுப்பாடென்ற சங்கிலியால் பிணைத்த பெண்ணவள் அந்த ஒருவழிப்பாதையில் ஓடிக்கொண்டிருந்தாள்.
அவளின் பின் நின்றிருந்த ஒருபடை அவ்விடத்தை யாரும் நெருங்கிடமுடியாதபடி முற்றுகையிட்டிருந்த போதிலும் இவர்களுமே அவளனுமதியின்றி அவளின் நிழலினை நெருங்கிடமுடியாதென்பதை தூரத்திலிருந்து பார்ப்பவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இத்தனை நேரமாய் நில்லாது ஓடியபடியிருந்த அவளின் கால்கள் சட்டென ஓரிடத்தில் நிற்க அதற்கெனவே காத்திருந்தது போல் அந்த படையணியின் தலைவன் போல் முன்னே நின்றிருந்தவன் அவளருகே வந்து அவள் முன் ஒரு பேஸ் டவலை நீட்ட அதனை வாங்கியபடியே அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
அந்த பார்வைக்கு அர்த்தம் புரிந்தவன் போல் அந்த ஆளும் அவளை பார்த்து தலையசைத்துவிட்டு பின்னே பார்த்தான்.
அவளோ அந்த பேஸ் டவலின் உதவியோடு தன் முகத்தில் பூத்திருந்த வியர்வைத்துளிகளை அமைதியாய் களைத்துக்கொண்டிருந்தாள்.
அவள் தன் வேலையை முடிப்பதற்கு முன் அவள் காலடியில் ஒருவன் மண்டியிட்டு அமரவைக்கப்பட்டிருந்தான்.
அவள் முன் இருத்தப்பட்டவன் அந்த படையணியிலிருந்த ஒருவனே. அவனின் கைகளிரண்டும் பின்னாலிருந்த ஒருவனால் வளைக்கப்பட்டிருக்க அவனது இடப்புற நெற்றியினை குறிவைத்திருந்தது ஒரு கருப்பு நிற கைதுப்பாக்கி.
தன் கையிலிருந்த டவலினை கொடுத்துவிட்டு ட்ராக் சூட்டிலிருந்த பாக்கிட்டினுள் தன் இரு கைகளையும் பத்திரபடுத்தியபடியே அருகிலிருந்தவனை பார்த்தாள் அவள்.
அவள் பார்வை மாற்றத்தை உணர்ந்து கொண்ட மண்டியிட்டிருந்த நபர்
“நான் பண்ணது தப்பு தான் மேடம். என்னை விட்டுடுங்க மேடம். இப்போவே இந்த ஊரைவிட்டே காணாமல் போயிடுறேன். என்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கு மேடம். ப்ளீஸ் மேடம்.” என்று கெஞ்சிய அந்த நபர் அவளை பற்றி நன்கு அறிவான்.
அவளிடம் மன்னிப்பு வேண்டிய எவரும் இதுவரை உயிருடன் இருந்ததில்லை. அவளை பொறுத்தவரை மன்னிப்பென்பது அறியாமல் செய்த தவறுக்காக மட்டுமே. ஆசையினாலும் ஆணவத்தினாலும் செய்யப்படுகின்ற தவறுகளுக்கு அவளின் அகராதியில் மன்னிப்பென்ற சொல்லுக்கு இடமில்லை. இதை நன்கு அறிந்ததாலேயே அவளிடம் அந்த நபர் மன்னிப்பு வேண்டவில்லை. மாறாக அவள் கண்களில் படாத வகையில் காணாமல் போய்விடுவதாக கூறினான். மேலும் குடும்பம் என்ற சொல் அவள் முடிவினை ஏதோவொரு வகையில் மாற்றிடுமென்று நம்பினான். ஆனால் அந்த வார்த்தை அவள் முடிவை மீள் பரிசோதனை செய்திடுமே தவிர மாற்றிடாதென்று அந்த நபர் அறிந்திடவில்லை.
சற்று களைத்திருந்த போதிலும் பார்வையிலிருந்த கூர்மையிலோ முகத்திலிருந்த திமிர் கலந்த கம்பீரத்திலோ எவ்வித மாற்றத்தினையும் அவளின் முகம் பிரதிபலிக்கவில்லை.
பெண்ணிற்கே உரிய இலக்கணங்களான மெல்லிடைஇ வெண்பஞ்சு தேகம்இ படபடக்கும் விழிகள்இ சிவந்த கன்னங்கள் என்று அனைத்துமே இவளின் நிலைப்பாட்டில் பொய்த்துப்போயிருந்ததாகவே அனைவருக்கும் தோன்றியது. பெண்களுக்கான நாற்பண்புகளான அச்சம்இ மடம்இ நாணம்இ பயிர்ப்பு முழுவதையும் துறந்து ஆண்களுக்கானதென்று மரபுவாதிகளால் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுஇ நிறைஇ ஓர்ப்புஇ கடைபிடி எனப்படும் நாற்குணங்களே அவளின் படைப்பின் நியதியென்று அனைவரும் நினைக்கும்படியே இருந்தது அவளின் ஆளுமை. அதுவே மற்றவர்கள் அவளை கண்டு அஞ்சும் சூழ்நிலையை உருவாக்கியிருந்தென்பதே உண்மை.
நொடிக்கு நொடி அதிகரித்தபடியிருந்த அவளின் பார்வையிலிருந்த கடுமை எதிரிலிருந்தவனின் முள்ளந்தண்டினை சில்லிடச்செய்தது. அது அவனுக்கு இதுவே தன் இறுதி நிமிடங்களென்ற உண்மையை புரியவைத்தது.
ஏளனத்தின் வெளிப்பாடாய் வளைந்த அவள் இதழ்களும் அவன் உணர்ந்திருந்த உண்மையை ஊர்ஜிதப்படுத்திட அவனுணராமலே அவன் தலை கீழே தொங்கியது.
அது எதிரிலிருந்தவளுக்கு புரிந்ததுபோல் மறுபுறம் திரும்பிய மறுநொடி டமாரென்ற சத்தம் கதை கிழிக்க இப்போது அவளின் இதழ்கள் ஆணவக்களிப்பில் இன்னும் சற்று விரிந்தது.
அதே தோரணையுடன் அவள் ஒரு அடி முன்னே வைக்க அவளின் பாதையை மறைத்தபடி ஒரு கருப்பு நிற கார் சறுக்கிக்கொண்டு முன்னால் வந்து நின்றது.
அதன் கதவினை திறந்து அவள் உள்ளே ஏறுவதற்காக காத்திருந்தது போல் அவள் ஏறிய மறுநொடி அந்த கருப்பு நிற கார் வேகமெடுத்து கணப்பொழுதில் அவ்விடத்திலிருந்து மறைந்தது.
அவள் கார் அங்கிருந்து மறைந்த மறுநொடி அங்கு அனைத்தும் துரிதக்கதியில் ஒழுங்குப்படுத்தப்பட்டு அவ்விடம் பழைய நிலைக்கு திரும்பியது.
அதிகாலையிலே வேலைக்கு செல்வதற்காக தன் அறையில் பரபரப்பாக தயாராகிக்கொண்டிருந்தான் ப்ரணீதன். பிரபல ஆர்.ஜே நிறுவனத்தின் சார்மனின் பர்சனல் அசிஸ்டன்டான கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிகிறான். உலகம் முழுவதும் பல கிளைகளுடன் இரு நூற்றாண்டுகளாக இயங்கிவரும் ஆர்.ஜே நிறுவனத்தில் பணிபுரிவது பலரது வாழ்நாள் கனவாக இருக்க இவனுக்கோ அது முதல் முயற்சியிலேயே சாத்தியமாகியிருந்தது. அதற்கு அவனது திறமையும் முயற்சியும் மட்டுமே காரணம்.
குளித்து முடித்து தயரானவன் ஏதோவொரு பைலை புரட்டியபடியே தன் அறைக்கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு வெளியே வந்து காலிங்பெல்லை மூன்றுமுறை அழுத்தினான்.
அதிகாலை நேரம் ஐந்து மணியே ஆகியிருக்க அழைப்பு மணி சத்தம் கேட்டு இன்னொரு அறையிலிருந்து வெளியே வந்தான் அதிரன்.
முழுதாய் உறக்கத்தின் பிடியிலிருந்ததால் கண்களை மூடியபடியே தன் அறைக்கதவினை திறந்த அதிரனின் கால்கள் எதன் மீதோ மோதி கால்தடுக்கி கீழே விழுந்தான்.
தடுக்கி விழுந்தவன் கண்களை விழித்திட முயற்சித்த போது அவனது முயற்சியினை பலமிழக்கச்செய்யும் வகையில் கண்களை கூசிடும் ஒளி அவ்விடத்தை முற்றுகையிட்டிருந்தது.
தன் கையால் கண்களை மறைத்தபடியே கண்களை குறுக்கிக்கொண்டு இமைகளை கடினப்பட்டு பிரித்த அதிரனின் எதிரே நின்றிருந்தான் ப்ரணீதன்.
அவனை கண்டவனுக்கு கோபம் தலைக்கேற எழுந்து நின்ற அதிரன்
“இப்போ எதுக்குடா காலிங்பெல்லை காது கிழியிற அளவுக்கு அடிச்ச?”
“உன்னை எழுப்ப தான்…” என்று சாதாரணமாக கூறிய ப்ரணீதன் இப்பொழுதும் அந்த கோப்பினை புரட்டுவதை நிறுத்தவில்லை.
அவனது அலட்சிய செயல் பழக்கப்பட்டது தானென்ற போதிலும் தன் தூக்கம் பறிபோன கோபத்தில் பொரியத்தொடங்கினான் அதிரன்.
“என்னதான்டா நினைச்சிட்டு இருக்க மனசுல? அந்த லேடி ஹிட்டலருக்கு நீ கொத்தடிமை வேலை பார்க்கிறதுக்காக என் தூக்கத்தை ஏன்டா கெடுக்கிற? ஆபிஸ்லதான் டார்ச்சர்னு பார்த்தா வீட்டுலயும் இப்படி டார்ச்சர் பண்ணுற…” என்றவனை ஒரு பார்வை பார்த்த ப்ரணீதன் தன் பாக்கெட்டிலிருந்த கார் சாவியை எடுத்து அவன் முன் நீட்டி
“என்னோட காரை எடுத்துட்டு போய் சாஹித்யாவை பிக்கப் பண்ணிக்கோ. நான் பைக்கை எடுத்துட்டு போறேன்.” என்றவன் அங்கிருந்து சென்றிட அவனை பின்னாலிருந்து முறைத்து பார்த்தபடியே
“போடா போடா.. போய் திறக்காத ஆபிசை திறந்து இல்லாத வேலையை நீயே செய். கூட்டு சேர்ந்திருக்காய்ங்க பாரு. இவனுங்க சேர்ந்ததோட நிறுத்திக்காம நம்மளையும் டர்ன் வச்சு டார்ச்சர் பண்ணுறாய்ங்க. எனக்குனே வந்து எல்லாம் ஏழரையா அமையிது.” என்று புலம்பியபடியே பறிபோன உறக்கம் மீண்டிட ஏதேனும் உபாயமுண்டாவென்ற ஆராய்ச்சியில் மூழ்கினான்.
வீட்டிலிருந்து வெளியேறிய ப்ரணீதன் தன் பைக்கை கிளப்பிக்கொண்டு அலுவலகத்திற்கு பறந்தான்.
அதிரன் கூறியதுபோலில்லாது அவ்வலுவலகம் விழிப்புடனேயே இருந்தது. ஒரு முக்கிய வெளிநாட்டு ப்ராஜெக்ட்டொன்று செயற்பாட்டிலுள்ளதால் பணியாளர்கள் இரண்டு ஷிப்டில் வேலை செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக அலுவலகம் 24 மணிநேரமும் விழிப்புடனேயே இருந்தது.
பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டிலிருந்து எடுத்து வந்த கோப்போடு தன்னுடைய கேபினுக்கு வந்த ப்ரணீதன் வேலையில் மூழ்கிவிட்டான்.
அடுத்த மூன்று மணிநேரமும் வேலையில் மூழ்கியிருந்தவனை அலைபேசி எழுப்பிய அலாரத்தின் ஒளி கலைத்தது. அதில் மீண்டவன் நேரத்தை பார்க்க அது மணி எட்டை காட்டியது. தாமதியாது அங்கிருந்து சில கோப்புக்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் ப்ரணீதன்.
—————————————————————————————————–
கருப்பு சூட்டுக்களுடன் சிலர் அவ்விடத்தை நிறைத்திருக்க மேஜை மீதிருந்த லாப்டாப்பினையே உற்று நோக்கியபடியே அமர்ந்திருந்தான் ஒருவன்.
அவன் அமர்ந்திருந்த தோரணையே அவனே அக்கூட்டத்தின் தலைவன் என்பதை உறுதியாய் கூறியது.
அவனெதிரிலிருந்த லாப்டொப்பினையே சற்று நேரம் உற்று நோக்கியவன் சட்டென அதனை மூடிவிட்டு எதிரிலிருந்தவர்களை பார்த்து
“நீங்க போகலாம்.” என்றவன் அவர்கள் அங்கிருந்து சென்றதும் தன் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தான்.
மறுபுறம் அழைப்பு எடுக்கப்பட்டதும்
“குட்மார்னிங் மிஸ் சஹஸ்ரா சத்தியநாதன். காலையிலயே ரொம்ப பிசியாக இருக்கீங்க போல.” என்றவனது கேள்விக்கு எதிர்புறம் மௌனமே பதிலாகியது.
“பரவாயில்லை எதிர்பார்த்ததை விட ரொம்ப வேகமாக இருக்கு உங்க செயல். ஆனாலும்…” என்றவனை இடைமறித்த சஹஸ்ரா
“நீ என்னை கண்காணிக்கிறதோ குத்தம் சொல்லுறதோ எனக்கொன்னும் புதுசில்லை. சொல்லு இப்போ எதுக்கு கால் பண்ண?” என்று அவள் நேரடியாகவே விசயத்திற்கு வந்திட
“உன்னோட இந்த வேகம் தான் உன்னோட பலமும் பலவீனமும்.” என்று அவன் கூற அவளோ அதனை பொருட்படுத்தாதவளாய்
“இப்போ நீ எதுக்கு கூப்பிட்டனு சொல்லப்போறீயா இல்லைனா நான் போனை வைக்கட்டுமா?” என்று குரலில் சற்று காட்டத்துடன் கூறியவளை மேலும் கோபப்படுத்துவதற்காகவென்றே சிரித்தான் அவன்.
அவன் எதிர்பார்த்ததை போலவே மறுநொடி அழைப்பு துண்டிக்கப்பட அவனும் இதழ்களில் புன்னகையுடனேயே போனை அணைத்தான்.
சில விநாடிகளில்; அவனின் அலைபேசி அதிர அதனை எடுத்தவன்
“உங்களுக்கு எல்லா டீடயில்ஸையும் மெயில் பண்ண சொல்லியிருக்கேன். செக் பண்ணுங்க..” என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு அங்கிருந்து தன் லாப்டோப்போடு எழுந்து சென்றுவிட்டான்.
————————————————————————————————————–
ப்ரணீதனின் தங்கையான சாஹித்யாவை அழைத்துச்செல்ல பஸ் தரிப்பிடத்திற்கு வந்திருந்தான் அதிரன்.
பலதரப்பட்ட மனிதர்களாலும் பேரூந்துகளாலும் சூழப்பட்டிருந்த அவ்விடத்தினை சுற்றும் முற்றும் பார்த்தடியே ஒரு ஓரமாக நின்றிருந்தான் அதிரன். இடைக்கிடையே அவனது கண்கள் கடிகாரத்தையும் தூரத்திலிருந்து வரும் பஸ்களையும் நோட்டம் விட்டபடியே இருந்தது.
அப்போது அவன் எதிர்பார்த்திருந்த பஸ் வருவதற்கும் அவனது போன் ஒலிப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது.
அழைப்பை ஏற்று காதில் வைத்தவன்
“நான் பஸ்ஸை பார்த்துட்டேன். நீ அங்கேயே நில்லு சாஹி. நான் இதோ வரேன்.” என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு பஸ் நிறுத்தியிருந்த இடம் நோக்கி நடந்தான்.
பஸ்ஸிலிருந்து தன் உடமைகளோடு இறங்கிய சாஹித்யாவின் உடைமைகளை வாங்கிக்கொண்டான் அவளுக்காக காத்திருந்த அதிரன்.
அவனை தாவி அணைத்துக்கொண்ட சாஹித்யா
“உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் மாமூ…” என்றிட அதிரனோ அவளின் வார்த்தைகள் கேட்டு உள்ளே மகிழ்ந்தபடியே வெளியே
“ஆனா நான் ஹேப்பியா இருந்தேன்.” என்றவனிடமிருந்து விலகியவள் அவன் தலைமுடியை கொத்தாக பிடித்து மாவாட்ட தொடங்கினாள்.
வலியால் அலறியபடியே
“ஆ… ஏய் தாரா வலிக்கிதுடி… விடுடி… அம்மா இந்த ஆட்டு ஆட்டுறாளே…” என்றவனை விடுவித்தவன்
“எத்தன பேரடா சைட் அடிச்ச?” என்று இடுப்பில் கைவைத்தபடி சாஹித்யா கேட்க தன் இடதுகையிலிருந்த லக்கேஜினை தரையில் வைத்தவன் தன் கேசத்தினை சரி செய்தபடியே
“நீ தான் ஜேம்ஸ் பாண்ட் படிச்ச ஸ்கூளோட பிரின்சிபல் மகளாச்சே. நீயே கண்டுபிடி.” என்று அதிரன் கூற
“நான் ஊருக்கு போய் மூன்று நாளாச்சு. என்னை பஸ் ஸ்டாண்டுல ட்ராப் பண்ணிட்டு போற வழியிலேயே உன்னோட வேலையை ஆரம்பிச்சிருப்ப. போற வழியில எப்படியும் இரண்டு. அப்புறம் ப்ளாட்டுல அந்த நேகாவும் திவ்யாவும். தென் ஆபிஸ்ல எப்படியும் ஒரு நாலு. டோட்டல பார்த்தா எப்படியும் எட்டு டூ பத்து.” என்று மேலும் ஏதோ கூற விளைந்தவளை இடைமறித்த அதிரன்
“ஹேய் இது உனக்கே அநியாயமா தெரியல. கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா உனக்கு? அந்த நேகாவும் திவ்யாவும் நீ பண்ண சதியால இப்போ என்னை அண்ணானு கூப்பிடுறாங்க. உனக்கு நல்லாவே தெரியும் என்னோட டிப்பார்ட்மண்டுல மொத்தமே நாலு லேடிஸ் தான். அவங்க நாலு பேருமே மேரிட். இதுல நான் யாரை சைட் அடிக்கமுடியும்.” ஏன்று பாவமாய் தன் நிலைமை எடுத்துரைத்தவனை பார்த்து கேலியாய் சிரித்தாள் சாஹித்யா.
“சரி சரி ரொம்ப சீனப்போடாத. ஆமா எங்க என் கூடப்பிறந்த ஜீவன்?” என்று கேட்டவளிடம்
“ஆபிஸ்ல வேலை பார்க்கிற ஆயா லீவாம். அதான் ஆபிஸை கூட்டி துடைக்க அர்த்தராத்திரியில போயிட்டான்.” என்றபடியே கீழே வைத்திருந்த லாக்கேஜினை எடுத்துக்கொண்டு சாஹித்யாவோடு நடக்கத்தொடங்கினான் அதிரன்.
“அப்படியா தான் இருக்கும். வேலையில்லைனாலே வாட்ச்மேனுக்கு மொதல்ல ஆபிசுல இருப்பான். வேலையிருக்கும் போது போகலைனா தான் அதிசயம்.” ஏன்று தன் தமையன் என்று கூட பாராது அவனை வாரினாள் சாஹித்யா.
இருவரும் பேசியபடியே அங்கிருந்து கிளம்பி தம் பிளாட்டினை வந்தடைந்தனர்.
சாஹித்யா அதிரன் மற்றும் ப்ரணீதன் குடியிருந்த ப்ளாட்டிற்கு எதிரேயிருந்த பிளாட்டில் தன் தோழியான அம்ரிதாவுடன் தங்கியிருந்தாள்.
அவளை இறக்கிவிட்ட அதிரன் அங்கிருந்து கிளம்பி ஆபிஸிற்கு சென்றான்.
இவையனைத்தையும் தூரத்தில் நின்றிருந்த காரில் அமர்ந்திருந்த இருவர் கண்காணித்துக்கொண்டிருந்தனர்.