நேச தொற்று – 4a

நேச தொற்று – 4a

ஆருஷாவிடம் இருந்த அந்த தாயக்கட்டையையே தீவிரமாக பார்த்துக் கொண்டு இருந்தனர் எல்லோரும்.

இரண்டு  அணியுடைய காய்களும் இப்போது சரியாக தாயத்தின் மேல் வந்து நின்றது.

யார் முதலில் தாயம் போட்டு அந்த இறுதி காயை பழத்திற்கு அனுப்புகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர் ஆவர்.

ஆதலால் தான் எல்லோருடைய கவனமும் ஆருவின் மேல் குவிந்து இருந்தது.

“ஆரு அக்கா…ப்ளீஸ் தாயத்தை போட்டுடு…” என  அபி திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருக்க

“அடேய் அபி கொஞ்ச நேரம் சும்மா இரு டா. இவ்வளவு நேரம் நீ தாயக்கட்டையை உருட்டிட்டு சரியா இப்போனு பார்த்து என்னை போட சொல்ற… போட்டு தொலையுறேன். தாயத்தை தவிர வேற எந்த கருமம் விழுந்தாலும் என்னை அடிக்கக்கூடாது சொல்லிபுட்டேன். ” என்று அபியிடம் சொல்லியபடியே ஆரு தாயக்கட்டையை உருட்ட அது சரியாக தாயத்தில் நின்றது.

அபியும் நிவியும் எழுந்து நின்று ” நாம ஜெயிச்சுட்டோம்… நாம ஜெயிச்சுட்டோம்… நாம ஜெயிச்சுட்டோம்… “என்று டோரா போல பாட்டு பாட ஆரு அவர்களை நோக்கி புன்னகைத்தாள்.

“என் செல்ல ஆரு அக்கா. சூப்பர் அக்கா சூப்பர். நாம எதிர் டீம்மை ஜெயிச்சுட்டோம். ஆமாம் ஆரு அக்கா இந்த நாமக்கட்டி எங்கே இருக்கு? எதிர் டீம்க்கு நாமத்தை போடணும்.” என நிவி கேட்க அவள் பூஜை அலமாரியை சுட்டிக் காட்டினாள்.

ஓடி சென்று  நிவி நாமக்கட்டியை எடுத்து வந்து ஆதியின் நெற்றியிலும் தர்ஷியின் நெற்றியிலும் தன் கைவண்ணத்தை காட்டினாள்.

“கண்ணா முதலிலே யாரு தாயம் போடுறாங்கன்றது முக்கியம் இல்லை. கடைசியா யாரு சரியான நேரத்துல தாயம் போடுறாங்க அப்படின்றது தான் முக்கியம். ஹா ஹா… ” என்று நிவி பஞ்ச் டயலாக் பேச எதிரணியில் இருந்த இரண்டு பேரும் நாமத்தோடு பரிதாபமாக அவளை பார்த்தனர்.

ஆரு வாய்விட்டு சிரித்தே விட்டாள்.

இரண்டு பேரும் நிவியை அடிக்க துரத்த அவள் தன் தம்பியைத் தூக்கிக் கொண்டு தன் வீட்டிற்கு ஓடினாள்.

தர்ஷி அவர்களை பிடிக்க வெளியே ஓட ஆதியும் அவளின் பின்னே வெளியே ஓட எத்தனித்தான்.

ஆனால் இடையில் புகுந்து ஆரு வழிமறித்தாள்.

“வழி விடு ஆரு.”

“விடமாட்டேன் ஆதி. “

“ஏன் உனக்கு கவலையா இருக்கா?”

“எனக்கு என்ன கவலை. உனக்கு தான் கவலை ஆதி. “

“ஹா ஹா… நான் தர்ஷி பின்னாடி போறதை உன்னாலே பார்க்க முடியாம இப்படி கவலைப்படுறீயே ஆரு மா.”

“மூதேவி நீ நைட்டியோட வெளியே போன உனக்கு தான் டா கவலை ” என சொல்ல அப்போது தான் குனிந்து தன்னைப் பார்த்தபடி தலையை சொறிந்தான்.

“ஏன்டா அதான் உனக்கு ஷர்ட் தான் வாங்கி கொடுத்தேன்ல மாத்த வேண்டியது தானே…”

“இல்லை நைட்டி ப்ரீயா comfortable ஆ இருந்துச்சா அதான் அப்படியே போட்டுக்கிட்டேன்.” என்று சொல்லி அசட்டு சிரிப்பு சிரித்தான்.

அவனை கேவலமாக பார்த்துவிட்டு முன்னே நடந்தவள் ஏதோ தோன்ற திடீரென்று தடைப்பட்டு நின்றது அவள் கால்கள்.

சட்டென திரும்பி அவனை பார்த்தாள்.

“ஆமாம் நீ தர்ஷி பின்னாடி போனா நான் ஏன் கவலைப்படனும். ஏன் என் கிட்டே அப்படி கேட்ட?”

“இல்லை நானும் தர்ஷியும் பேசுறது பார்த்து நீ  பொசஸ்சிவ் ஆன இல்லை அதுக்கு தான் அப்படி கேட்டேன்.”

“நான் எப்போ பொசஸ்சிவ் ஆனேன்.. ” என்று கைகளை மடக்கி கொண்டு அவனைப் பார்த்து கேட்டாள்.

அவள் கேட்ட தொணியே அவன் வயிற்றில் பட்டாம்பூச்சு பறந்தது.

“அது அது வந்து” என்று பேச முடியாமல் தடுமாறினான்.

“எது எது வந்து ” என்று ஆரு அவனை நக்கலடித்தாள்.

அவன் தலையை சொறிந்து கொண்டு சிரிக்க, “சீ சிரிக்காம சொல்லித் தொலை.” என்றாள் கோபமாய்.

“அது நம்ம தாயபாஸ் விளையாடும் போது நான் தர்ஷி கிட்டே பேசுறதைப் பார்த்து நீ ஒரு மாதிரி பார்த்தியே…அது பொசஸ்சிவ்நெஸ் ஆனதாலே தானே…” என அவன் கேட்க அவள் கோபமாய் அவனைப் பார்த்து முறைத்தாள்.

“குழந்தைங்க கிட்டே போய் போட்டி போட்டு சேலன்ஞ் பண்றியேனு தான் நான் உன்னை கேவலமா பார்த்தேன். நான் ஏன் உங்க ரெண்டு பேரையும் பார்த்து பொசஸ்சிவ்நெஸ் ஆகணும்? “

“இல்லை காதல் வந்தால் பொசஸ்சிவ்நெஸ் வரும்ல..அதான் அந்த காரணத்தாலே தான் காதல் வந்துடுச்சோனு நினைச்சேன். “

“மவனே காதல் வருதோ இல்லையோ நான் அடிக்கிற அடியில இப்போ உனக்கு காதுல இருந்து ரத்தம் வர போகுது பாரு. ” என்று சொல்லி அவனது காதைப் பிடித்து திருகினாள்.

“ஆரு இங்கே பாரு… என்ன தான் இருந்தாலும் ஒரு ஃபாரின் மாப்பிள்ளையை போட்டு இப்படி குமுறு குமுறுனு குமுறது சரியில்லை சொல்லிட்டேன்… நான் அப்படி என்ன தப்பா சொன்னேன். இந்த பொசஸ்சிவ்நெஸ் தானே காதல் வரக் காரணம்.”

“பைத்தியம் பைத்தியம் காதல் வரக் காரணம் பொசஸ்சிவ்நெஸ்  இல்லை… நம்ம பொருட்கள் மேலே தான்  பொறாமைப்படுவோம். மனுஷங்க மேலே இல்லை… இந்த பொறாமை கொஞ்சம் காதலுக்கு தேவைப்படும் தான் ஒத்துக்கிறேன். ஏன்னா எல்லா நாளும் ஒரேப் போல கடத்துனா காதல் கொஞ்சம் போரடிச்சு போயிடும். சண்டை போட்டா தான் ஜாலியா ஸ்மூத்தா லவ் லைப் போகும். அப்படி சண்டை போட்டுக்கிறதுக்காக  நம்ம பொறாமையை பயன்படுத்திக்கிறோம். காதலை உயிர்ப்போட வெச்சுக்கிறதுக்காக தான் பொறாமை தேவைப்படுமே தவிர. காதலை வர வைக்கிறதுக்கு பொறாமை தேவைப்படாது புரியுதா. ” என  நீண்ட விளக்கம் தந்தாள் அவள்.

“புரிஞ்சுடுச்சு புரிஞ்சுடுச்சு…புரிஞ்சுடுச்சு.. ” என்று இந்த பக்கம் அலறினான் ஆதி.

அவனது காதுகளை விட்டுவிட்டு முறைத்தபடி முன்னே இரண்டடி எடுத்து வைத்தாள்.

ஆனால் சென்றவளின் விழிகள் சட்டென்று மீண்டும் இவனை  திரும்பிப் பார்க்க ஆதியின் வயிற்றில் மீண்டும் தண்ணீர் இல்லாமலே புளி கரைந்தது.

“ஐயயோ ஆத்தா மகமாரி போனவள் எதுக்கு இப்போ  திரும்பி பார்த்து முறைக்கிறானு தெரியலயே. இப்ப என்ன பாய்ண்ட் சிக்கியிருக்கும். என்ன சொல்லி அடிக்க போறானு தெரியலேயே” என்று அவன் பயத்தில் நின்று கொண்டு இருந்த நேரம் அவள் அவனை கூர்மையாகப் பார்த்தபடி நின்றாள்.

“அப்போ நீ எனக்கு பொசசிஸ்நெஸ் வர வைக்கிறதுக்காக தான் தர்ஷி கிட்டே க்ளோஸ்ஸா பேசுனியா. ” என அவள் கேட்க இவன் ஆமாம் என்றும் இல்லை என்றும் மாறி மாறி தலையாட்டினான்.

“ஆமாமவா? இல்லையா?” என்று தீர்க்கமாக கேட்டாள்.

“அது கொஞ்சமா ஆமாம் தான்…
நானும் அவளும் பேசுனதை ஒரு மார்க்கமா நீ பார்க்கிறா மாதிரி எனக்கு தெரிஞ்சதாலே அவள் கிட்டே க்ளோஸ்ஸா பேசுனேன்.” என்று சொல்ல ஆரு அவனது சட்டைக் காலரை பற்றி அவள் உயரத்திற்கு குனிய வைத்தாள்.

பிறகு நங்கு நங்கென்று கொட்டினாள்.

அவள் கொட்டிய கொட்டில் அவனது தலை பிரமிடு போல மேடு தூக்கிவிட்டது.

வலித்த தலையைத் தடவியபடி,
“ஆரு இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை. நான் ஒன்னும் அவ்வளவு பெரிய தப்புலாம் பண்ணல. அதுக்கு ஏன் இப்படி சின்னக்குழந்தை தலையை இப்படி வீங்க வைக்கிறே?”

“என்ன தப்பு இல்லை. இல்லை என்ன தப்பு இல்லைனு கேட்கிறேன். நீ பாட்டுக்கு எனக்கு காதல் வர வைக்கிறதுக்காக அந்த பொண்ணு கிட்டே நெருக்கமா பேசுவீங்களாம். இது தெரியாம அந்த பொண்ணு உன் மேலே ஆசையை வளர்த்துக்கிட்டா என்ன பண்றது?” எனக் கேட்க அவன் இதழ்களில் மௌனகோடு.

“உன் காதலை அடைய அவளை துருப்பு சீட்டா யூஸ் பண்ணிக்கலாமா? இது சரியா ஆதி? அவள் ஏன் இடையிலே வருத்தப்படணும்.” என்றவள் கேட்க அவனிடம் மீண்டும் மௌனம் தொடர்ந்தது.

“ஆமாம் நீங்கலாம் ஏன் இவ்வளவு சுயநலமா இருக்கீங்க… உங்களுக்கு உங்க காதல் தான் முக்கியம்ல. அதுக்காக யாரோட மனசை எப்படி வேணாலும் காயப்படுத்தலாம்ல. சே ஏன்டா இப்படி இருக்கீங்க. மத்தவங்களை வேதனைப்படுத்திட்டு அதுல உண்டாகிற காதல் எப்படி சந்தோஷமானதா அமையும்?” என்றவளின் வார்த்தையைக் கேட்டவனோ மௌனத்தைக் கலைத்து பேச துவங்கினான்.

“அம்மா ஆருஷா… பரதேவதை… இதை தானே மா எல்லா கதைல வர ஹீரோவும் பண்றாங்க. சினிமாவுல கூட இதை தானே மா பண்றாங்க. நான் பண்ணா மட்டும் தப்பா?”

“தப்பு தான்… அவங்க படம் நல்லா ஓடனும்ன்றதுக்காகவும் கதை சுவாராஸ்யாமா போறதுக்காகவும் அப்படி தான் எடுப்பாங்க. அது எல்லாம் ரியல் லைஃப்க்கு செட் ஆகாது. இந்த பொறாமை கொஞ்ச நாளுக்கு மட்டும் நீடிச்சா அமிர்தம். அதுவே ரொம்ப நாள் நீடிச்சா அமிலம். ஒருத்தர் மேலே பொறாமைப்பட வைக்கிறதுக்காக காரணமே இல்லாம ஒரு மூன்றாவது ஆளு காயப்படுறது என்ன விதத்துல நியாயம் நீயே சொல்லு? “

“நியாயம் இல்லை தான். அதே மாதிரி நீ என்னை இப்படி மிதிக்கிறதும் நியாயம் இல்லை தான். ஹீரோனா எவ்வளவு கெத்தா இருப்பாங்க. ஆனால் என்னை பாரு நீ எப்படி ஆக்கி வெச்சு இருக்கே. கோவை சரளா கிட்டே மாட்டிக்கிட்ட வடிவேலு கணக்கா உன் கிட்டே மாட்டிக்கிட்டேன். “

“என்னது நீ ஹீரோவா?” என்று அவனை ஏற இறங்க பார்த்தவள்

“இதுவரை நீ ஹீரோ கெத்து காட்டி தானே பார்த்து இருக்க ஹீரோயின் கெத்து காட்டி பார்த்தது இல்லையே… இனிமேல் பார்ப்ப… ரெடியா இருங்க மிஸ்டர் ஆதி. “

“ஹான் எதுக்கு ரெடியாகணும்?”

“என் கிட்டே மிதி வாங்க தான்” என்று ஹீரோ பிஜிஎம் பின்னே ஒலிக்க காற்றில் கலைந்த கேசத்தை கோதியபடி கெத்தாக நடந்து போனாள் ஆருஷா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!