நேச தொற்று
நேச தொற்று
மேகங்களை கிழித்துக் கொண்டு தன் இறக்கைகளை விரித்து பறந்த அந்த வானூர்தி ஓய்வெடுக்க தற்காலிகமாக தரையிறங்கியது.
கண்களில் கூலர்ஸ் மின்ன, ஒரு கையில் கோட்டைப் பிடித்துக் கொண்டு மறு கையால் கேசத்தை ஒதுக்கியபடி படிகளில் இறங்கி வந்தான் அவன்.
ஆதி!
இறங்கியவனது கைப்பேசி ஒலிக்க எடுத்து காதில் வைத்தான்.
“சொல்லு மா… yeah மா… கொச்சி வந்துட்டேன்… இன்னும் கொஞ்ச நேரத்துல அங்கே போயிடுவேன்மா… இன்னைக்கு நைட் ப்ளைட்க்கே மறுபடி சிங்கப்பூர் கிளம்பி வந்துடுவேன்.” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தவனது தோளை உரசியது ஒரு மங்கையின் தோள்.
அவள் தடுமாறி விழப் போன நேரம் இவன் அவளை தாங்கிப் பிடித்தான்.
முடிக்கற்றைகள் அவள் முகத்தில் விழுந்து இருக்க மேகங்களின் ஊடே மறைந்து இருக்கும் நிலவாய் அவள் முகம் ஜொலித்தது.
“வாவ் வாட் எ பியூட்டி ” இவன் தன்னை மறந்து சொல்ல
“தேங்க்ஸ் handsome ” என்று சொன்னவள் கண்ணடித்தபடி அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
உதட்டில் சிந்திய மௌனசிரிப்புடன் ஏர்போர்ட்டுக்கு வெளியே வந்தவன் அங்கிருந்து டாக்ஸி பிடித்தான்.
செல்லும் இடம் சொல்லிவிட்டு சீட்டில் வசதியாக சாய்ந்து கொண்டவன் பார்வை வெளியே பதிந்தது.
கேரளா…
இயற்கையின் எழில் கொஞ்சி விளையாடியது.
காற்றில் வீசிய ஈரப்பதம் அவன் இதயத்தை ஈரம் ஆக்கியது.
ஜன்னலில் வீசிய காற்றை ரசித்தபடி வந்து கொண்டு இருந்தவனின் கவனத்தை கலைத்தது டாக்ஸி டிரைவரின் குரல்.
“சார் willingdon island எத்தி…இதனடுத்து வண்டி போகான் பட்டில்லா. ” மலையாளத்தில் சொல்லிய ட்ரைவர் எதிரே இருந்த படகை சுட்டிக் காண்பித்தார்.
வண்டியில் இருந்து இறங்கியவன் பணத்தை கொடுத்துவிட்டு முன்னே திரும்பி பார்த்தான்.
ஏரி விரிந்து பரந்து இருந்தது.
சுற்றிலும் பச்சை வண்ணப் போர்வையை பூசி இருந்தது அந்த ஏரிக்கரை.
எல்லாரையும் ஏற்றிக் கொண்டு
கிளம்ப தயாராக இருந்த அந்த படகில் இவனும் ஏறிக் கொண்டான்.
அவன் நாசியில் இப்போது கேரள வாசம்!
ஹா ஹா கேரளா கேரளா தான்யா!
என்னா அழகு! என்னா குளிர்ச்சி!
ரசித்து கொண்டே வந்து கொண்டு இருந்தவன் தன் போனில் அனுப்பப்பட்டு இருந்த விலாசத்தை மீண்டும் ஒரு முறை பார்த்த நேரம் படகு லேசாக தடுமாற தொடங்கியது.
முன் சென்று பின் வந்த படகின் ஆட்டத்தில் அதில் இருந்தவர்கள் தடுமாறியபடி இவன் மீது மோத, இவன் கையில் இருந்த அலைபேசியோ தடுமாறி தண்ணீரில் விழுந்தது.
“அடக்கடவுளே!” என்று தலையின் மீது கைவைத்துக் கொண்டவனின் மனமோ ‘நல்ல வேளை அந்த விலாசத்தை திரும்ப பார்த்தோம்’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்டது.
படகு நின்றதும் அதில் இருந்து இறங்கியவனின் கால்களோ அந்த விலாசத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தது.
💐💐💐💐💐💐💐💐💐
வானளவு உயர்ந்து இருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பில் எட்டாவது தளத்தில் இருந்த 24 ஏ ப்ளாக்கில் ஓடிக் கொண்டு இருந்தது அந்த டிவி.
“கொரோனா தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து உள்நாட்டு வெளிநாட்டு சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது” என தொலைக்காட்சியில் பேசிக் கொண்டு இருந்த அந்த தொகுப்பாளினியின் குரலைக் கேட்டுக் கொண்டு உள் அறையில் தயாராகிக் கொண்டு இருந்தாள் அவள்.
கண்களில் மைத்தீட்டிவிட்டு காதுகளில் தொங்காட்டானை தொங்கவிட்டவள் நெற்றியில் பொட்டு வைத்து தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து திருப்தியுற்ற நேரம் அலைப்பேசி ஒலி எழுப்பி அடங்கியது.
எடுத்துப் பார்த்தாள்.
அவள் அம்மா.
“ஹலோ சொல்லு மா… ஆமாம் மா புடவை தான் கட்டி இருக்கேன்… சரி மா… இந்த மாப்பிள்ளை எனக்கு பிடிச்சு இருந்தா, நான் கண்டிப்பா ஓகே சொல்லிடுறேன்… இனி மேலே உங்களை டென்ஷன் பண்ண மாட்டேன்.. ஆனால் எனக்கு பிடிச்சா மட்டும் தான் ஓகே சொல்லுவேன் ” என்று அவள் அழுத்தி சொல்லவும் அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.
அழைப்பை துண்டித்தவள் வாயிலை நோக்கி சென்றாள்.
அவள் கதவை திறந்த நேரம் ஆறடி உயரத்தில் ஒரு கையில் கோர்ட்டை தாங்கியபடி மறுகையை கதவில் சாய்த்தபடி மயக்கும் சிரிப்பை வீசிய அவனைக் கண்டு அவள் புன்னகை பூத்தாள்.
“உள்ளே வாங்க.. ” என்று அழைத்தவள் உட்கார சொல்லி சோபாவை கண்ணில் காட்டினாள்.
அவளது கண்களைப் பார்த்துக் கொண்டே அமர்ந்தவன் ” உங்களுக்கு இந்த சாரி ரொம்ப அழகா இருக்கு… எப்பவும் சாரி தான் கட்டுவீங்களா ” என்று கேட்டான்.
“எப்பவும் இல்லை, இன்னைக்கு மட்டும் தான்… எனக்கு குர்தி தான் comfortable ” என்று சொல்ல அவன் ஓ என்று மட்டும் பதிலளித்தான்.
அவளை பார்வையாலே அளந்து கொண்டு இருந்தவன் தீடிரென அவளைப் பார்த்து அந்த கேள்வியைக் கேட்டான்.
“கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று.
திகைத்துப் போய் அவனைத் திரும்பி பார்த்தவள் “இப்போ தானே பார்த்து இருக்கோம்.. பேசி பார்த்துட்டு முடிவு பண்ணலாமே” என இழுத்தாள்.
“பேசுறதுக்கு இதுல என்ன இருக்கு ஆருஷா? ஒரு handsome ஆன well settled பையன்… அதுவும் சிங்கப்பூர்ல வேலைப் பார்க்கிற பையன்… கல்யாணம் பண்ணிக்க கேட்கும் போது பதில் சொல்ல என்ன யோசனை? யோசிக்காம தலையாட்டிட வேண்டியது தானே.. ” என அவன் கேட்க அவனை கோபமாக முறைத்தாள்.
சரியான தலைக்கணம் பிடித்தவன், இவன் தலைக்கணத்தை தவிடு பொடியாக்க வேண்டும் என்பதற்காகவே அவனை நோக்கி, “உங்களை எனக்கு பிடிக்கலையே” என்றாள் கோபமாக.
“ஏன்?” என்றான் இறங்கிப் போன குரலில்.
“எனக்கு உங்க மூஞ்சை சுத்தமா பிடிக்கல… அப்புறம் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக இங்கே பார்க்கிற வேலையை விட்டுட்டு என்னாலே வர முடியாது. எனக்கு என் career தான் முக்கியம்.” தீர்க்கமாக விழுந்தது வார்த்தைகள்.
“நாம எதுக்கு வேலை பார்க்கிறோம்? நம்ம life settle ஆகுறதுக்கு தானே… அதனாலே அந்த வேலையை விட்டுட்டு என்னை கல்யாணம் பண்ணிட்டு லைப்ல settle ஆகிடு ஆருஷா”
“மிஸ்டர் அதே தான் நானும் சொல்றேன். உங்க வேலையை விட்டுட்டு என்னை கல்யாணம் பண்ணி லைப்ல செட்டில் ஆகுங்க. நான் உங்களுக்கு காலம் முழுக்க சாப்பாடு போடுறேன். “
“உன் சம்பாதியத்துல நான் வாழணும்னு எனக்கு அவசியம் இல்லை. “
“அதே தான் உன் சம்பாதியத்துல வாழணும்னு எனக்கும் எந்த அவசியமும் இல்லை ஆதி…. get out now ” என்று பன்மையில் இருந்து ஒருமைக்கு மாறி கத்தியவள் கதவருகே சென்று போகும் படி செய்கை செய்தாள்.
“உனக்கு இதுநாள் வரை ஏன் கல்யாணம் ஆகலணு இப்போ தான் புரியுது.. “
“வாயை மூடிட்டு போடா குரங்கு.. “
“போடி பன்னி “என அவன் காட்டுக் கத்தலைக் கேட்க பிடிக்காமல் அறையின் கதவை வேகமாக அடித்து சாத்த முயலும் போது போன் மீண்டும் அலறியது.
அவள் அன்னை தான் அழைத்து இருந்தார். கோபமாக உயிர்ப்பித்து காதுகளில் வைத்தாள்.
“அம்மா நீ உன்னோட க்ளோஸ் ஃப்ரெண்டோட பையன்னு சொன்னதாலே தான் அவனை நேர்ல பார்க்க சம்மதம் சொன்னேன். ஆனால் அவன் பேசின பேச்சுல எனக்கு மூளை சூடாகிடுச்சு. அவன் மேலே இருக்கிற கடுப்புல உன்னை திட்டிட போறேன். ஒழுங்கா போனை வெச்சிடு மா” என்று கோபமாக கத்திவிட்டு போனை துண்டித்தாள்.
“ஹே ஆரு, நீ மட்டும் தான் உன் அம்மாவுக்கு போன் பண்ணி என்னை வேண்டாம்னு சொல்லுவியா? நானும் என் அம்மாவுக்கு போன் பண்ணி சொல்றேன் பாரு. ” என்று சொன்னவன் வேகமாக அழைப்பதற்காக தன் ஃபோனை பாக்கெட்டினில் தேடினான்.
அது அங்கே வீற்று இருக்கவில்லை என்பதை உணர்ந்ததும் தான் தண்ணீரில் விழுந்த நியாபகமே வந்தது.
சட்டென எட்டித் தாவி ஆருவின் கைகளில் இருந்த போனைப் பிடிங்கியவன் அவளின் அன்னையின் எண்ணிற்கு அழைத்தான்.
“அம்மா எனக்கு பொண்ணு பார்க்க சொன்னா, ஒரு பஜாரியைப் பார்த்து வெச்சு இருக்க. நீ எனக்கு ஒரு குரங்கு கட்டி வெச்சா கூட நான் குடும்பம் நடத்திடுவேன். ஆனால் இவள் கூட குப்பைக் கொட்ட முடியாது.எனக்கு இவளைப் பிடிக்கவே இல்லைமா. சரியான ராட்சஷி.” படபடவென பேசினான் அவன்.
“என்னையாடா நீ ராட்சஷினி சொன்ன? இரு உன்னை என்ன பண்றேன் பாரு. ” என்று சொல்லி அங்கிருந்த தண்ணீரை எடுத்து அவன் மீது ஊற்றினாள்.
அது அவனை மட்டுமல்லாது பைக்குள் பத்திரமாக வைத்து இருந்த ரிட்டர்ன் டிக்கெட்டையும் சேர்த்து நனைத்துவிட்டது.
அதை அறியாத அவனோ நனைந்த பையோடும் சட்டையோடும் மீண்டும் விமான நிலையத்திற்கு விரைந்தான்.
அங்கே செக் இன் பகுதியில் நனைந்த டிக்கெட்டை எடுத்து வைக்க எல்லோரும் திகைத்துப் பார்த்தனர், அவன் உட்பட.
” சாரி சார். வீ கான்ட் ப்ராசஸ்.” என்று சொல்ல அவனோ சோகமாக அடுத்த ப்ளைட்டிற்கு டிக்கெட் கேட்டான்.
அவர்களோ ” கொரானா காரணமாக எல்லா பொது போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டு இருக்கு. ” என்று சொல்ல அவனிடம் திகைப்பு.
“எப்போ அடுத்த விமானம் சிங்கப்பூர்க்கு?” என்றுக் கேட்க அவர்கள் அதற்கும் கையை விரித்தனர்.
சரி அடுத்த ப்ளைட் கிடைக்கும் வரை ஹோட்டலில் தங்கலாம் என நினைத்தால் எல்லா ஹோட்டல்களையும் வரிசையாக மூடிக் கொண்டு இருந்தனர்.
சாலையே வெறிச்சோடிவிட்டது.
எல்லா மக்களும் வேகவேகமாக தன் ஆதிக் கூட்டிற்குள்ளேயே சென்று மீண்டும் அடைந்துக் கொண்டனர்.
கொரானாவின் கோர கைகளில் சிக்காமல் இருப்பதற்காக பல முன்னேற்பாடுகள்,ஆயத்தங்கள்.
அதில் முதல் முன்னெடுப்பாக ஒரு நாள், நாடு முழுவதும் பொது முடக்கம்.
அந்த ஒரே ஒரு நாள் பொது முடக்கம் ஆதியின் வாழ்க்கையில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருந்தது.
உறைவிடம் இல்லாமல் தனித்து நிற்கும் தனக்கு ஆருஷாவால் மட்டும் தான் அடைக்கலம் தர முடியும் என்ற கசப்பான உண்மை புரிய மீண்டும் அவனை ஆருவின் வீட்டிற்கு முன்பு கொண்டு சென்று நிறுத்தியது.
இங்கோ ஆருஷா குட்டிப் போட்ட பூனையைப் போல நடந்துக் கொண்டு இருந்தாள். அவனின் பேச்சு அவள் மனதை உலைக்களமாக கொதிக்க வைத்தது.
“என்ன திமிர் இருக்கும் அவனுக்கு? அவன் பேசிய பேச்சிற்கு இன்னும் அவனை புரட்டி எடுத்து இருந்து இருக்க வேண்டும். வெறும் தண்ணீர் அபிஷேகம் மட்டும் அவனிற்கு செய்து அனுப்பிவிட்டோமே” என்று அவள் குறைப்பட்டுக் கொண்டு இருக்கும் போது பலியாடு தானாக வந்து அழைப்பு மணியை அழுத்தியது.
யார் என்ற யோசனையுடன் இவள் கதவைத் திறக்க எதிரே அவள் கனவிலும் பார்த்திடக்கூடாது என சிறிது நேரத்திற்கு முன்பு நினைத்த அதே முகம்.
“ஹே மேன்… எதுக்கு திரும்ப வந்து இருக்க? வாங்கினது பத்தாதா? திரும்பவும் தண்ணீர் அபிஷேகம் வேணுமா?” என்று அவள் கேட்க அவனோ அவளை பயங்கர கடுப்புடன் முறைத்தான்.
“நீ பண்ண தண்ணீர் அபிஷேகம் தான் மறுபடியும் என்னை உன் முன்னாடி நிற்க வெச்சு இருக்கு. அநியாயமா என் ப்ளைட் டிக்கெட்டை நாசம் பண்ணிட்டியே ஆரு. இப்போ என்னாலே சிங்கப்பூருக்கு போக முடியாது. நீ பண்ண தண்டனைக்கு நீ தான் பரிகாரம் பண்ணனும்.” என்று சொல்லியபடி அவள் அனுமதி இல்லாமலேயே சோபாவில் அமர்ந்தான்.
அது அவளுக்கு இன்னும் கோபத்தை உண்டு பண்ணியது.
“சரி… பரிகாரமா, நான் வேணும்னா அடுத்த ப்ளைட் கிடைக்கிற வரை ஹோட்டலிலே நீ தங்குற செலவை ஏத்துக்கிறேன். பணத்தை வாங்கிட்டு முதலிலே இங்கிருந்து கிளம்பு ” என்றவளின் வார்த்தைகளில் அவனைத் துரத்துவதற்கான வேகம் தெரிந்தது.
அவனோ இன்னும் சோபாவில் சாவதானமாக அமர்ந்தபடி கால்களில் அணிந்து இருந்த சாக்ஸை கழட்டியபடியே,
“ஹோட்டல் ஓபன்ல இருந்து இருந்தா
நான் ஏன் இங்கே வந்து இருந்து இருக்க போறேன்.” என்றவனது சொற்களோ
அடுத்த விமானம் கிடைக்கும் வரை தான் இங்கே தான் தங்கப் போகிறேன் என்ற தகவலை மறைமுகமாக தாங்கி இருந்தது.
“நோ வே… நீ இங்கே தங்க நான் ஒத்துக்கவே மாட்டேன்.” என்றவள் கத்த
“நோ வே ன்றதாலே தான், நான் இங்கே வந்தேன். இல்லைனா இந்த ராட்சஷி வீட்டுல தங்க எனக்கு என்ன ஆசையா என்ன?” என்று சொன்னவனை இயலாமையோடு பார்த்தாள்.
ஐயோ கொரோனா முடியுற வரைக்கும் இவன் கூட தான் இருக்கணுமா? என்று மனதில் நினைத்தபடி அவள் கடுப்புடன் பார்க்க அவனோ ஆமாம் என்று சோகமாக தலையசைத்தான்.
“முடிஞ்சுது ஜோலி. இனி என்ன என்னலாம் நடக்கப் போகுதோ?” என்று இருவரது குரலும் ஒரேத் தொனியில் ஒரே டெசிபெலில் ஒலித்தது.
எதிரே தன் உருவத்தை வெளிப்படுத்தாத அந்த கொரானா வைரஸ்ஸோ இருவரையும் உக்கிரமாகப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.
பார்க்கலாம் இந்த எலிக்கும் பூனைக்கும் காதல் நோய் தொற்றுமா என்று…
—– தொடரும்…