பல்லவன் கவிதை

பல்லவன் கவிதை

கவிதை 20

காஞ்சி மாநகரம் வழமைபோல அன்றும் கலகலவென்றிருந்தது.
 
அந்த காலைப்பொழுதிற்கு இனிமைச் சேர்ப்பது போல நகர மாந்தரின் நானாவித பேச்சொலிகளும் சிரிப்புகளும் அமைந்திருந்தன.
 
எத்தனைக் குதூகலம் இருந்த போதிலும் நகரின் அன்றைய சூடான விவாதமாக வாதாபி புலிகேசியின் படையெடுப்பே அமைந்து இருந்தது. 
 
“வாதாபி மன்னர் பெரும் படையோடு காஞ்சியை நோக்கி வரப்போகிறாராமே?”
 
“வாதாபி மன்னர் கொஞ்சம் மூர்க்கத்தனமான மனிதராமே?”
 
“வைஜெயந்தி பட்டணத்தை அழித்தது போல காஞ்சியையும் அழிக்க திட்டம் போட்டிருக்கிறாராமே?”
இப்படி பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்தாலும், அதைப் பேசி தங்கள் மன கிலேசங்களைத் தீர்த்துக்கொண்டாலும்… எல்லோரின் ஏகோபித்த முடிவும்,
 
“மகேந்திர வர்மர் இருக்கும்போது நாமெதற்குக் கவலைப்பட வேண்டும்? இது போல இன்னும் எத்தனை புலிகேசி வந்தாலும் அதைச் சமாளிக்கும் திறன் பல்லவேந்திரருக்கு உண்டு.” என்பதுதான்.
 
அதனால் போரைப் பற்றிய எந்த கவலையுமின்றி மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார்கள். 
 
ஆனால், இந்த மக்களின் இத்தகைய அசையாத நம்பிக்கையைச் சம்பாதித்திருந்த மகேந்திர வர்மரின் ஆலோசனை மண்டபம் அன்று மிகுந்த அமைதியில் இருந்தது.
 
மந்திரி பிரதானிகள் அனைவரும் மிகுந்த அமைதியோடு மன்னரின் வாய் வார்த்தைகளுக்காக காத்திருந்தார்கள். மன்னர், சேனாதிபதி, உப சேனாதிபதி, படைத்தலைவர்கள் என அனைவரும் குழுமியிருக்க இப்போது ஒவ்வொருவராக தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்க ஆரம்பித்தார்கள்.
 
“பல்லவேந்திரா, மூன்று திக்குகளிலிருந்து மூன்று பெரும் சைனியங்கள் காஞ்சியைத் தாக்க சித்தமாகியுள்ளன, வரலாறு காணாத இந்த பெரும் படையெடுப்பை காஞ்சி எப்படி முறையடிக்க போகின்றது என்பதுதான் தற்போது நம்மீது வைக்கப்பட்டுள்ள சவால்.” சேனாதிபதி கலிப்பகையார் சொல்லி முடித்த போது மகேந்திர வர்மரின் தலை ஆமென்பதற்கு அடையாளமாக மேலும் கீழுமாக ஆடியது.
 
“வாதாபி சைனியம் போல வேங்கி சைனியமும் கங்க சைனியமும் அத்தனைப் பெரிதல்ல.” பொதிகை மாறன் சொல்லவும் அவரைத் திரும்பி பார்த்த சேனாதிபதி கலிப்பகையார்,
 
“சைனியம் பெரிதில்லாமல் இருக்கலாம், ஆனால் நம்மிடம் இல்லாத பெரிய யானைப்படை அவர்களிடம் இருக்கிறது, அது அவர்களின் பலம் உப சேனாதிபதி.” என்றார்.
 
“உண்மை சேனாதிபதி அவர்களே, நானும் அதை ஏற்றுக்கொள்கிறேன், இருந்தாலும் யானைப்படையால் எத்தனைக்கு எத்தனை அனுகூலம் இருக்கிறதோ… அதேயளவு எதிர்விளைவுகளும் உண்டு.”
 
“நிச்சயமாக, அதற்கான ஏற்பாடுகளை நாம் இப்போதே ஆரம்பிக்க வேண்டும்.”
 
“யானைப்படையை முறியடித்து விட்டாலே பாதி போர் முடிந்த மாதிரித்தான்.”
 
“உண்மை.”
சேனாதிபதியும் உப சேனாதிபதியும் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவே மற்றைய யாவரும் அமைதியாக அதைச் செவிமடுத்த வண்ணம் இருந்தார்கள்.
 
“யானைப்படையைச் சமாளிக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் சேனாதிபதி?” மகேந்திர வர்மரின் கேள்விக்கு உப சேனாதிபதியே பதில் சொன்னார்.
 
“வாதாபி சைனியத்தில் பதினைந்தாயிரம் யானைகள் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது மன்னவா, மற்றைய இரு சைனியங்களிலும் யானைகளின் எண்ணிக்கை அதிகமில்லை, ஆகையால் ஒட்டுமொத்தமாக இருபதாயிரம் யானைகளை நாம் சமாளிக்க வேண்டியிருக்கும்.”
 
“ஓஹோ…”
 
“போர் வியூகத்தில் யானைப்படை முன்னிறுத்தப்படுமானால் அவற்றைப் பின்வாங்க செய்ய நமது ஐயாயிரம் வீரர்கள் தயாராக இருக்கிறார்கள் மன்னவா.”
 
“அவர்கள் எவ்வாறு யானைகளைப் பின்வாங்க செய்ய போகிறார்கள்?”
 
“இந்த ஐயாயிரம் வீரர்களும் சாதாரண வீரர்களல்ல மன்னா, பொறுக்கி எடுக்கப்பட்டு வேலெறிவதற்காக விசேட பயிற்சி அளிக்கப்பட்ட திறமையான வீரர்கள்.”
 
“மிக்க நல்லது!”
 
“காட்டு முகப்புகளைத் தாண்டி கோட்டையை நோக்கி யானைகள் ஒரு அடி எடுத்து வைக்கும் முன்னமே நமது கூரிய வேல்கள் அந்த யானைகளின் உடம்பைப் பதம் பார்க்கும்.”
 
“ம்… வேல்களின் முனைகளை நன்கு கூர்மையாக்க கட்டளையிடுங்கள்.”
 
“பல்லவேந்திரா, விஷம் தோய்ந்த அம்புகளைப் போல வேல்களுக்கும் விஷம் தடவும் முறையொன்று இப்போது புழக்கத்தில் உள்ளதாமே?” படைத்தலைவர் ஒருவர் கேட்கவும் அவசரமாக அதை மறுத்தார் மகேந்திர வர்மர்.
 
“வேண்டாம் வேண்டாம், போர் தர்மமான முறையிலேயே நடக்கட்டும்!”
 
“எதிரி அதர்மமான முறையில் போரிட ஆரம்பித்தால்…” அந்த படைத்தலைவர் தனது பேச்சை பாதியிலேயே நிறுத்தினார்.
 
“பாதகமில்லை, நமக்கு ஆண்டவன் துணை இருக்கிறது, அதர்மம் என்றைக்கும் வென்றதாக சரித்திரமில்லை.” அத்தோடு அந்த படைத்தலைவர் அமைதியாகி விட விவாதம் தொடர்ந்தது.
 
“பல்லவேந்திரா, கோட்டைக்கும் காட்டிற்குமான இடைவெளி இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.”
 
“எதற்காக சேனாதிபதி?”
 
“எதிரி எப்படியும் தன் படையைக் காட்டு முகப்பில் தான் நிறுத்துவான், எந்தப்படை முன்னணியில் இருந்தாலும் இடைவெளி அதிகமாக இருக்கும் பட்சத்தில் நம் வீரர்கள் எதிரிகளைத் தாக்குவது இலகுவாக இருக்கும்.”
 
“நல்லது, காட்டு மரங்களை சிறிது வெட்ட உத்தரவிடுங்கள், அத்தோடு கோட்டையைச் சுற்றி இருக்கும் அகழியிலுள்ள முதலைகளை நாளை முதல் சுதந்திரமாக அகழியில் உலவவிட சொல்லுங்கள், மக்கள் யாரையும் அகழிக்கு அருகில் வரவேண்டாம் என்றும் அறிவிக்க சொல்லுங்கள்.”
 
“ஆகட்டும் மன்னா.”
 
“இன்றைக்கு இரவு மீண்டும் மந்திராலோசனைத் தொடரும், இப்போது அனைவரும் கலைந்து செல்லலாம்.” சக்கரவர்த்தி சொல்லிவிட்டு தனது அரியாசனத்திலிருந்து எழுந்து நடக்க அவரைப் பின்தொடர்ந்தார் பொதிகை மாறன்.
மன்னர் அவரது அந்தரங்க அறைக்கு வந்த பிற்பாடும் பொதிகை மாறன் பேச்சைத் தொடங்காமல் அமைதியாக நிற்கவே அவரை ஆச்சரியமாக பார்த்தார் மகேந்திர வர்மர்.
 
“மாறா, இது என்ன புதிதாக இருக்கிறது?‌ என்னிடம் எதைப் பேச உனக்கு இத்தனைத் தயக்கம்?”
 
“மன்னவா… பாண்டிய மன்னரின் ஓலையைப் பற்றி சபையில் பிரஸ்தாபிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்… ஆனால் நீங்கள் எதுவும் அதைப்பற்றி பேசவில்லையே?”
இப்போது மகேந்திர பல்லவர் சிந்தனை வசப்பட்டார். உடனடியாக எந்த பதிலும் சொல்லாமல் சற்று நேரம் மௌனமாக அறையில் உலாவினார்.
 
“இந்த இக்கட்டான நிலையில் பாண்டிய மன்னன் நம் உதவிக்கு வருவது மகிழ்ச்சிதான் மாறா…”
 
“அது வெறும் உதவியாக இருக்காது என்று நினைக்கிறீர்களா மன்னவா?” சட்டென்று பொதிகை மாறன் கேட்கவும் தன் நண்பனைப் பார்த்து புன்னகைப் பூத்தார் மன்னர். அந்த சிரிப்பு,
 
‘உன்னை விட என்னை அதிகமாக யாராலும் அறிந்து கொள்ள முடியாது மாறா!’ என்று சொல்வதைப் போல இருந்தது.
 
“ஆமாம் மாறா, பாண்டியன் தன் மகளுக்கு நம் நரசிம்ம வர்மனை எதிர்பார்ப்பது போல தெரிகிறது.”
 
“நல்லதுதானே மன்னவா, பாண்டிய குலத்தோடு பல்லவ குலமும் சேர்ந்தால் அது நம் நாட்டிற்கு இன்னும் பலமல்லவா?”
 
“ஆமாம், ஆனால் எந்த வகையிலும் நரசிம்மனை அவன் திருமணத்தில் வற்புறுத்த கூடாது என்று நான் நினைக்கிறேன்.”
 
“பல்லவேந்திரா, வரலாறு காணாத பெரும் போர் நம் முன் நிற்கிறது!”
 
“அதைச் சமாளிக்க வேண்டியது என் பொறுப்பு, கடமை… அதற்காக என் பிள்ளையின் வாழ்வைப் பலியிட எனக்கு என்ன உரிமை இருக்கிறது மாறா?”
 
“மன்னர் மரபில் பிறந்தவர்…”
 
“போதும் நிறுத்து மாறா! நீயும் இப்படி பேச எப்போது கற்றுக்கொண்டாய்? மன்னர் மரபில் பிறந்துவிட்டால் ஆசாபாசங்களை அழித்துவிட வேண்டுமா? நீ ஆசைப்பட்டவளை மணந்து கொள்ளலாம், அதையே நான் செய்தால் பாவமா?” பொதிகை மாறனை பேச விடாமல் பாதியிலேயே நிறுத்தி ஆவேசமாக பேசினார் மன்னர்.
 
“நான் அப்படி சொல்லவில்லை பல்லவேந்திரா, இந்த யோசனையை நீங்கள் நரசிம்மனிடமே சொல்லி ஆலோசிக்கலாம், அவனுக்கு இதில் ஆட்சேபனை இல்லாத பட்சத்தில் மேற்கொண்டு பேசுவது தவறில்லையே!”
 
“இப்போது இதைப்பற்றிய பேச்சு வந்தால் நாட்டிற்காக, எனக்காக நரசிம்மன் இந்த ஏற்பாட்டை ஏற்றுக்கொள்வான், அதில் எனக்கு உடன்பாடில்லை மாறா.” திட்டவட்டமாக மன்னர் மறுக்கவும் அதற்கு மேல் என்ன பேசுவது என்று பொதிகை மாறனுக்கும் புரியவில்லை.
 
இவர்கள் தர்க்கத்தை நிறைவுக்குக் கொண்டு வருவது போல வாசலிலே ஒரு வீரன் வந்து நின்றான்.
 
“பல்லவேந்திரா, தங்களைக் காண உபாத்தியாயர் வந்திருக்கிறார்.”
 
“வரச்சொல்.” வீரனின் வாயிலிருந்து உபாத்தியாயர் என்ற வார்த்தையைக் கேட்டதும் மகேந்திர வர்மரின் முகம் மலர்ந்து போனது. உபாத்தியாயர் தன் குடும்பத்தோடு காஞ்சிக்கே வந்துவிட்டதில் அத்தனை நிம்மதி அவருக்கு.
 
சிறிது நேரத்தில் உபாத்தியாயர் மெதுவாக நடந்த படி அந்த அறைக்குள் நுழைந்தார். நடை, உடை, பாவனை அனைத்திலும் இப்போது வயோதிகம் தெரிந்தது. வீரன் அறையின் கதவை மூடிவிட்டு சென்று விட்டான்.
 
“வாரும் உபாத்தியாயரே! ஏது இத்தனைத் தூரம்? சொல்லி அனுப்பி இருந்தால் நானே வந்திருப்பேனே!”
 
“பல்லவேந்திரா… நான் கேள்விப்படுவது உண்மைதானா?” தடுமாறினார் உபாத்தியாயர்.
 
“நீர் என்ன கேள்விப்பட்டீர்?”
 
“பெரும் போர் வர இருக்கின்றதாமே?”
 
“ஆமாம்… மகேந்திர வர்மருக்கு கலைகளில் எத்தனைத் தேர்ச்சி உள்ளதோ அதேயளவு போரிலும் உண்டு என்று காட்டும் நேரம் வந்திருக்கிறது!”
 
“மன்னவா…‌ வாதாபி… வாதாபி…” பேச்சு வராமல் திணறினார் உபாத்தியாயர்.
 
“வாதாபிக்கு என்ன உபாத்தியாயரே?”
 
“வாதாபியின் பெரும்படை காஞ்சியை நோக்கி வருகிறதாமே, உண்மைதானா?”
 
“உண்மைதான்.” மன்னரின் அந்த ஒற்றை பதிலில் உபாத்தியாயரின் கண்கள் கலங்கிப்போயின.
 
“உபாத்தியாயரே! என்ன இது? எதற்காக உமது கண்கள் கலங்குகின்றன?”
 
“பல்லவேந்திரா! புலிகேசியை நான் நன்கு அறிவேன், அந்த மூர்க்கனிடமா இந்த அழகிய காஞ்சி சிக்க வேண்டும்?”
 
“சிக்கிவிட்டதாக நீர் ஏன் நினைக்கிறீர் உபாத்தியாயரே? இந்த மகேந்திர வர்மனுக்கு சொந்தமானதைத் தொட அத்தனைச் சுலபத்தில் யாருக்கும் தைரியம் வராது, அது உமக்குக்தானே நன்றாக தெரிந்திருக்க வேண்டும்?” 
 
“மன்னவா…”
 
“என்னிடம் என்ன தயக்கம்? சொல்லும் உபாத்தியாயரே.”
 
“மைத்ரேயி…”
 
“மைத்ரேயிக்கு என்ன?” அந்த கேள்வியில் பொதிகை மாறன் கூட சிறிது சங்கடப்பட்டார். தனக்கொரு பெண் இருக்கிறாள் என்று அறிந்தவுடன் மகேந்திர பல்லவர் அடைந்த பரபரப்பு, அவள் காணாமல் போய்விட்டாள் என்று தெரிந்த போது மறைந்து போயிருந்தது.
 
“மைத்ரேயி பற்றி எந்த தகவலும் இல்லை…”
 
“அந்த கவலைக் கூட உங்களுக்கும் உங்கள் மகளுக்கும் இருக்கிறதா? அவளைக் கைது செய்த போது இந்த அக்கறை எங்கே போனது உபாத்தியாயரே?”
 
“பல்லவேந்திரா!”
 
“உண்மைச் சுடத்தான் செய்யும், உங்கள் பெண்ணிற்கு அவள் பெற்ற பெண்ணை விட எங்கே எனக்கு உண்மைத் தெரிந்து விடுமோ என்ற எண்ணம்தான் பெரிதாக இருந்தது, அதற்கு நீங்களும் தாளம் போட்டீர்கள்.” மகேந்திரரின் பேச்சில் அப்பட்டமான குற்றச்சாட்டு இருந்தது. உபாத்தியாயரின் தலைத் தானாக குனிந்தது.
 
“ஆனால் நான் அப்படியல்ல உபாத்தியாயரே… எனக்கு என் பெண் முக்கியம், அது என் இரத்தம்!”
 
“ஏதாவது தகவல் கிடைத்ததா மன்னவா?” ஆர்வமாக கேட்டார் பொதிகை மாறன்.
 
“ஆமாம் மாறா, கொற்கையில் நடந்த குளறுபடிகளை ஆராய்ந்த போது ஒரு சில தகவல்கள் கிடைத்தன… பல்லவ சாம்ராஜ்யத்திற்குள் தற்போது கலகம் விளைவிக்க நினைப்பவர்கள் வாதாபியரைத் தவிர வேறு யாருமல்ல.”
 
“நிச்சயமாக.”
 
“ஒற்றர்களின் தகவல்படி புலிகேசியின் மக்களுக்கு அத்தனைத் திறமை இருப்பதாக தெரியவில்லை, மீதமிருப்பது வேங்கிதானே?”
 
“ஆமாம் மன்னவா, வேங்கி இளவலின் சாமர்த்தியம்தான் உலகமறிந்ததே!”
 
“ம்… நானும் அதைத்தான் நினைத்தேன் மாறா, ஆக கொற்கைக்கு வந்தது வேங்கியின் இளவரசன்தான், தற்போது மைத்ரேயி இருப்பதுவும் அவனோடுதான்.”
 
“நிச்சயமாக தெரியுமா மன்னவா?”
 
“ஆமாம் மாறா, அன்றைக்கு நாம் பேசும்போது மகிழினியை நீ கவனித்தாயா? வாதாபியில் பெரும் படைத் தயாராகிறது என்று ஒற்றன் சொன்னபோது பதறி வாயைத் திறவாத மகிழினி, வேங்கியும் போருக்குத் தயாராகிறது என்று சொன்னபோது வாயைத் திறந்தாளே… அப்போதே எனக்குச் சந்தேகமாக இருந்தது.”
 
“ஓ…”
 
“அந்த சந்தேகத்தின் அடிப்படையில்தான் எனது அந்தரங்க ஒற்றர்களை வேங்கியை நோக்கி அனுப்பினேன்.”
 
“பல்லவேந்திரா! அப்படியென்றால் மைத்ரேயியின் உயிருக்கு ஆபத்தாயிற்றே?” இப்போது பதறினார் உபாத்தியாயர்.
 
“மைத்ரேயியின் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்திருந்தால் மகிழினி வேங்கி இளவலோடு அவளை அனுப்பி இருப்பாளா உபாத்தியாயரே? நிச்சயமாக இல்லை.”
 
“வேங்கியில்தான் மைத்ரேயி இருக்கிறாளா மன்னவா?”
 
“இல்லை மாறா, நானும் அப்படி நினைத்துத்தான் ஒற்றர்களை வேங்கிக்கு அனுப்பினேன், ஆனால் நாம் நினைப்பதை விட வேங்கி இளவல் படு சாமர்த்தியசாலியாக இருக்கிறான்.”
 
“ஆஹா! ஏது… வருங்கால உறவை வெகுவாக புகழ்வது போல தெரிகிறது!” பொதிகை மாறன் கேலி செய்ய தன் பெரிய மீசையை நீவிக்கொண்டே சிரித்தார் மகேந்திர பல்லவர். இவர்களின் பாஷைப் புரியாமல் திருதிருவென முழித்தபடி நின்றிருந்தார் உபாத்தியாயர்.
 
“ஆமாம் மாறா, வீரர்களை நான் எப்போதும் விரும்புகிறேன், மதிக்கிறேன்… என் ரத்தம் புலியைத்தான் நாடும், பூனையை அல்ல!” அன்றொரு நாள் மார்த்தாண்டன் மகிழினியிடம் சொன்ன அதே வார்த்தைகளை இப்போது பொதிகை மாறனிடம் சொல்லிக்கொண்டிருந்தார் மகேந்திர வர்மர்.
 
“அப்படியென்றால் மைத்ரேயி வேங்கியில் இல்லையா மன்னவா?” உபாத்தியாயரின் பொறுமைப் பறந்தது.
 
“இல்லை உபாத்தியாயரே, வேங்கி இளவலுக்கு பழைய சரித்திரம் எதுவோ தெரிந்திருக்கிறது, அதனால் மைத்ரேயியை இப்போது கங்க நாட்டில் வைத்திருக்கிறான், அதை என் ஒற்றர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.”
 
“அவள் அங்கு நலமாக இருக்கிறாளா?”
 
“நலத்திற்கு எந்த குறைவும் இல்லை, அப்படி ஏதாவது நடந்திருந்தால் இந்நேரம் பல்லவ சைனியம் கங்க நாட்டை நோக்கி நகர்திருக்கும்!”
 
“……………” உபாத்தியாயர் அமைதியாக இருக்க இப்போது மகேந்திர வர்மர் இடிஇடியென்று சிரித்தார்.
 
“மாறா, இதில் விசித்திரம் என்ன தெரியுமா?”
 
“சொல்லுங்கள் மன்னவா.”
 
“இத்தனை நாளும் நான் காணாத என் அருமை மகளைப் போர்க்களத்தில்தான் காணப்போகின்றேனா என்று சந்தேகமாக இருக்கிறது.”
 
“நடந்தாலும்… நான்… ஆச்சரியப்பட மாட்டேன்.” வார்த்தைகளை மென்று முழுங்கினார் உபாத்தியாயர்.
 
“ஹா… ஹா… அப்படியா சொல்கிறீர் உபாத்தியாயரே?” வெளி வேஷமாக சிரித்தாலும் அந்த சிரிப்பிற்குப் பின்னே லேசாக மறைத்திருந்த சோகத்தைப் புரிந்து கொண்ட பொதிகை மாறன் மௌனமாகிவிட்டார்.
 
“வீரத்தில் எத்தனை இணையற்றவளோ அதேயளவு பிடிவாதத்திலும் இணையற்றவள்!”
 
“ம்… இத்தனைக்கும் காரணம் யார் உபாத்தியாயரே?!” முதன்முறையாக சேந்தனை நோக்கி கர்ஜித்தது மகேந்திர வர்மரின் குரல். இதற்குக் காலம்தானே பதில் சொல்ல வேண்டும்!
 
***
 
கங்க நாடு கடந்த இரண்டு நாட்களாக திமிலோகப்பட்டு கொண்டிருந்தது. தலைநகரைச் சுற்றி கங்க நாட்டு சைனியம் தண்டு இறங்கியிருந்தது.
 
எங்கு பார்த்தாலும் வீரர்களின் ஆரவாரம், நீண்ட நாட்களுக்குப் பிறகு உறைகளில் அடைந்து கிடந்த அவர்களின் வாட்களுக்கு வேலை வந்துவிட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அவர்கட்கு!
 
மார்த்தாண்டன் தலைநகரை விட்டு எங்கும் நகராமல் கங்க நாட்டைப் போருக்கு ஆயத்தமாக்கி கொண்டிருந்தான்.
 
வாதாபிக்கும் வேங்கிக்கும் அவன் தூதர்கள் ஓலையோடு பறந்தார்கள். தன் பெரிய தந்தையின் ஆணையை அவனால் நிறைவேற்ற முடியாமல் போனதில் வருத்தமிருந்தாலும் போருக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கி இருந்தான்.
 
கொற்கைக்கு அவன் சென்ற காரியம் நிறைவேறாமல் பாதியிலேயே நின்று போயிருந்தது. அதில் புலிகேசி மன்னருக்கு சிறிது மனச்சுணக்கம் இருந்தாலும் மார்த்தாண்டனின் திறமை மீதிருந்த நம்பிக்கையின் காரணமாக புரட்சியைப் பெரிது படுத்தவில்லை அவர்.
 
அதற்குத் தகுந்தாற்போல மார்த்தாண்டனும் தங்கள் சூழ்ச்சியை மகேந்திர பல்லவர் அறிந்து கொண்டு தன் படைத்தலைவரை கொற்கைக்கு அனுப்பி வைத்திருந்தார் என்று கூறி சமாளித்திருந்தான். மறந்தும் மைத்ரேயி பற்றி அவன் தன் பெரிய தந்தையிடம் மூச்சு விடவில்லை.
 
தன் பெற்றோரிடம் மைத்ரேயி பற்றி பேச மலையளவு ஆசை இருந்த போதிலும் அதற்கான நேரம் இதுவல்ல என்று அந்த ஆசையை அப்போதைக்கு ஒதுக்கி வைத்திருந்தான்.
 
மார்த்தாண்டனின் இப்போதைய மனநிறைவு தன் தாத்தா கங்க மகாராஜாவிற்கு மைத்ரேயி யாரென்பது தெரிந்ததோடு தன் மனதிலிருக்கும் ஆசையும் தெரியும். அதுவே அப்போதைக்குப் போதுமானதாக இருக்க போர் ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கினான்.
 
அந்த பயிற்சி மண்டபத்தில் வாட்பயிற்சி மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்தது. பாசறைகளைப் பார்வையிட்டுவிட்டு அப்போதுதான் மண்டபத்தின் வாசலுக்கு வந்தான் மார்த்தாண்டன்.
 
“மார்த்தாண்டா!” அந்த குரலில் திரும்பினான் இளையவன். அவன் தாத்தா துர்வீதன மகாராஜா அங்கே நின்றிருந்தார்.
 
“தாத்தா…” ஆவலாக அழைத்தபடி மகாராஜாவின் அருகில் வந்தான் மார்த்தாண்டன்.
 
“படைப் பிரிவுகளைப் பார்வையிட்டு விட்டாயா?”
 
“ஆமாம், எல்லாம் கனகச்சிதமாக இருக்கின்றது.”
 
“நல்லது, நாளைப் புறப்பட ஆயத்தம்தானே?”
 
“நாளை விஜயதசமி என்பதால் அனைத்தும் ஆயத்தமாக இருக்கின்றன தாத்தா.” உற்சாகமாக சொல்லிவிட்டு தாத்தாவின் முகத்தைப் பார்த்தான் மார்த்தாண்டன். அங்கே மிதமிஞ்சிய சிந்தனைத் தெரியவும் மார்த்தாண்டனின் விழிகளில் ஆச்சரியம் தெரிந்தது.
 
“தாத்தா! போர் ஆயத்தங்களில் ஏதாவது குறை இருக்கிறதா? அப்படி ஏதாவது இருந்தால் தாராளமாக சொல்லுங்கள்.”
 
“பொறுப்புகளை உன்வசம் ஒப்படைத்த பிறகு அதில் எந்த குறையும் வராது என்பதை நான் நன்கறிவேன் மார்த்தாண்டா.”
 
“பிறகு ஏன் உங்கள் முகத்தில் இத்தனைக் கலவரம் தெரிகிறது?”
 
“எல்லாம் மைத்ரேயியை பற்றித்தான்.”
 
“மைத்ரேயியை பற்றியா?! மைத்ரையியை பற்றி கவலைப்பட என்ன இருக்கிறது தாத்தா?!”
 
“நிறைய இருக்கிறது மார்த்தாண்டா… அந்த பெண் விடயத்தில் நீ எடுத்திருக்கும் முடிவுகளை என் மனம் அத்தனை எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை.”
 
“எதைச் சொல்கிறீர்கள் தாத்தா? அப்படி என்ன தவறான முடிவை இப்போது நான் எடுத்துவிட்டேன்?”
 
“மைத்ரேயியை இப்போது நீ போருக்கு அழைத்து செல்வதே தவறான முடவுதானே?”
 
“அதில் என்ன தவறு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?”
 
“தந்தைக்கு எதிராக மகளை நிறுத்துவது பாவமல்லவா?”
 
“தந்தைக்கு எதிராக மகளை நான் நிறுத்தவில்லையே? அந்த சந்தர்ப்பத்தைத் தடுக்க நான் எத்தனைப் பாடுபட்டேன் என்று உங்களுக்குக் தெரியாது.”
 
“நீ ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் என் வயதும் அனுபவமும் இது எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.”
 
“மறுப்பவளை நான் என்னதான் செய்வது?”
 
“புரிய வைத்திருக்க வேண்டாமா?”
 
“எவ்வளவோ முயற்சி செய்தேன், பலன்தான் கிடைக்கவில்லை.”
 
“உன்மேல் இருக்கும் கண்மூடித்தனமான காதல், பெற்றவர்கள் மீதிருக்கும் இனம்புரியாத வெறுப்பு, எல்லாமுமாக சேர்ந்து அந்த சிறு பெண்ணை இந்த முடிவிற்குத் தள்ளி இருக்கிறது.”
 
“…………….”
 
“உன் மீதிருக்கும் காதல் நிலைத்திருக்கலாம், ஆனால்… பெற்றவர்கள் மீதிருக்கும் வெறுப்பு நிலைத்திருக்காது.”
 
“புரிகிறது தாத்தா…”
 
“அந்த பெண் மீது உனக்கு உண்மையான அன்பிருந்தால் அந்த அன்பிற்கு நீ நியாயம் செய்ய வேண்டும் மார்த்தாண்டா.”
 
“என்னை என்னதான் செய்ய சொல்கிறீர்கள் தாத்தா?”
 
“அதை நீதான் முடிவு செய்ய வேண்டும், வழிகாட்டுவது மட்டும்தான் என் வேலை.”
 
“போருக்கு வருவேன் என்று அடம்பிடிப்பவளை என்ன செய்வது? போரின் முன்னணியில் அவளை நிறுத்துவதில்லை என்று ஏற்கனவே முடிவெடுத்திருந்தேன், ஒரு அனுபவத்திற்காக மட்டும் அவளும் போர்க்களத்திற்கு வரட்டும் தாத்தா.”
 
“உன் இஷ்டம் மார்த்தாண்டா, ஆனால் மைத்ரேயியை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்.”
 
“ஆகட்டும் தாத்தா.” சம்மதித்த மார்த்தாண்டனின் தலைச் சுழன்றது. மைத்ரேயியை எவ்வளவோ தடுத்து பார்த்தும் பெண் அவன் பேச்சைக் கேட்கவில்லை. நடப்பது நடக்கட்டும் என்று எண்ணிவிட்டு அமைதியாக வாட்பயிற்சியைப் பார்வையிட ஆரம்பித்தான்.
 
 

Leave a Reply

error: Content is protected !!