பூந்தளிர் ஆட…19
பூந்தளிர் ஆட…19
பூந்தளிர்-19
மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கே தடாலடியாக அறைக்கதவு தட்டப்பட பதட்டத்துடன் எழுந்தாள் கிருஷ்ணாக்ஷி. முன்தினம் மாலை அப்பு அம்முவோடு, சுமதியின் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு அரவிந்தன் சென்றிருக்க, தனது மகளுடன் இவள் மட்டுமே அறையில் இருக்கிறாள்.
காலை ஆறு மணிக்கு கீழே சென்றால் போதும். கூடுதல் பணியாட்களோடு, வேலையை ஆரம்பிக்கும் பொழுதினையும் சற்றே தாமதமாக மாற்றியமைத்து விட்ட பிறகு இவளுக்கும் சற்று ஆசுவாசம். இதனை தொட்டே பெரியவர்களும் ஆறு மணிக்கு கண் முழிப்பர்.
‘இந்த நேரத்துல யாரு?’ யோசனையுடன் கிருஷ்ணா அறையின் ஒற்றைக் கதவினைத் திறக்க, ராம்சங்கர் நின்றிருந்தான்.
முன்தினம் அனைவரும் எச்சரித்து, காறித்துப்பிய கோபமும், அவனுக்குள் இருந்த ஈகோவும் நிதர்சனத்தை உணர்த்தாமல் அலைகழித்ததில், தான் நினைத்ததை செய்து முடிக்க விடியல் என்றும் பாராமல் வந்திருந்தான்.
‘ஐயோ மாஸ்டர் சொன்ன மாதிரியே, நேரம் காலமில்லாம வந்து நிக்கிறானே!’ மனதிற்குள் படபடத்தபடி, “என்ன ராம், இந்த நேரத்துல?” மெதுவாகக் கேட்டாள் கிருஷ்ணா.
“என் குழந்தைகள பாக்க வந்திருக்கேன்.” என்றவன் அவளை இடித்துக்கொண்டே திறந்திருந்த ஒற்றை கதவின் வழியாக அறைக்குள் நுழைந்தான்.
“உங்க அண்ணன் இங்கே இல்ல ராம்!” என்றவளுக்கும் அடுத்த கதவை திறக்க வேண்டுமென்று தோன்றவில்லை.
“எனக்கு, அவன் தேவையே இல்ல. நான் பசங்களை மட்டுந்தான் பாக்க வந்தேன்!” முன்தின பல்லவியையே பாடினான்.
‘மற்றவர் சொல்லி நான் அடங்குவதா?’ என்ற திமிரும், ‘எனக்கானதை நான் கைப்பற்றியே தீருவேன்.’ என்கிற பிடிவாதமும் உள்ளுக்குள் கனன்று கண்மூடித்தனமாக அவனை செயல்பட வைத்தது.
“கதவு யார் தொறந்து விட்டா?”
“வேலைக்காரி வாசல் கூட்டுற நேரத்துல நைசா உள்ளே வந்துட்டேன்!” சொன்னவனின் குரலில் பெருமை வேறு.
“குழந்தைங்க இங்கே இல்ல ராம்.”
“அப்ப எங்கே இருக்காங்க?” முடிவில்லாத தர்க்கத்திற்கு வழிபிடித்தே இவன் நிற்க, கிருஷ்ணாவிற்கு ஆயாசமாக இருந்தது.
வீட்டின் நிலவரத்தை நன்றாக தெரிந்து வைத்தே வந்திருக்கிறான். ‘அது சரி, அவன் வீட்டு நிலவரம், அவனுக்கு தெரியாமல் இருந்தால்தான் அதிசயம்.’
“உங்க அண்ணன் ஊருல இல்லாத நேரத்துல, நீங்க இந்த ரூம்ல இருக்கிறது நல்லதில்ல ராம்!” ‘இப்படியாவது அசருவானா!’ என்று பார்த்தாள்.
அவனோ அதையெல்லாம் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ‘என் கடமை பிள்ளைகளைப் பார்ப்பதே!’ எனும் ரீதியில் அறையை, கட்டிலை பார்த்துவிட்டு, மாடியின் பால்கனியை எல்லாம் பார்த்தவன் கிறுக்கு பிடித்தவனாக கட்டிலின் அடியிலும் குனிந்து பார்த்தான்.
சற்றே பொறுமையாக அண்ணாந்து பார்த்திருந்தால் இரண்டு வருடங்களாக பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களில் இருந்த பிள்ளைகளின் முகத்தை அழகாய் ரசித்து பார்த்திருக்கலாம். ‘ஆத்திரக்காரனுக்கு மட்டுமல்ல, அவசரக்காரனுக்கும் புத்தி மட்டு!’ என்பதை நிரூபித்தான்.
கிருஷ்ணாவால் இவனது செய்கைகளைப் பார்த்து சகித்துக்கொள்ள முடியவில்லை. “எதுவா இருந்தாலும் உங்கம்மா கிட்ட போயி பேசுங்களேன்!” முயன்று அனுப்பி வைக்க பார்த்தாள்.
“என்னை டைவர்ட் பண்ண நினைக்கிறீங்களா? நான் நேத்து நைட்டே திரும்ப இங்கே வந்து ஏரியா சுத்தி விசாரிச்சுட்டேன். என் பிள்ளைகளை நீங்கதான் அடாப்ட் பண்ணி இருக்கீங்களாம், இப்ப எங்கே வச்சுருக்கீங்க?” அவன் குரலை உயர்த்திக் கேட்க, பதறிப் போனாள்.
“பாப்பா முழிச்சுப்பா ராம்! நீங்க கீழே வாங்க, பேசுவோம்.” என அழைக்க, அவனது பார்வை தொட்டிலில் உறங்கியிருந்த குழந்தையின் மீது படிந்தது. தன்னால் எழுந்த ஆர்வத்துடன் மழலையை அள்ளிக்கொண்டான்.
“லட்டு பாப்பா அழகா தூங்குறாங்க இல்ல.” கனிவோடு சொல்பவனை எந்த ரகத்தில் சேர்ப்பது என்றே தெரியவில்லை.
“தூங்குற குழந்தயை ரசிக்கக்கூடாது தம்பி! கண்ணு பட்டுடும். தொட்டில்ல விடுங்க!” மிகவும் பொறுமையாகவே பேசினாள். சத்தம் போட்டு மாமியாரை அழைக்க நொடிநேரம் ஆகாது. அதிகாலைப் பொழுதில் வீணான சங்கடங்கள் வேண்டாமே என்று அமைதி காத்தாள்.
அதோடு இன்னும் சற்று நேரத்திற்கெல்லாம் வீட்டில் ஆள் நடமாட்டம் தொடங்கி விடும். அதற்குள் எந்த சச்சரவும் இல்லாமல் இவனை அனுப்பி விடவேண்டும் என்கிற அவசரமும் சேர்ந்து அவளை ஓரளவிற்கு மேல் சிந்திக்க விடாமல் செய்தது.
“உங்களுக்கும் எனக்கு என்ன பகை? ஏன் என் கண்ணுல குழந்தைகளை காமிக்க மாட்டேங்கிறீங்க? இப்ப என் கையில கொடுத்துடுங்க… யாருக்கும் தெரியாம கூட்டிட்டு போயிடுறேன். எல்லாரும் பெர்மிஷன் கொடுத்தப்புறம் அவங்களை அழைச்சிட்டுப் போகணும்னா, அது எப்பவுமே நடக்காது. ஓபன் டிக்கெட் கூட எடுத்து வச்சுட்டேன்!” தானாக பேசிக்கொண்டே சென்றவனை தடுக்க முடியவில்லை.
அவளது கவனமெல்லாம் ராமின் தோள்களில் தூங்கும் மகளின் மேல் மட்டுமே பதிந்திருந்தது. இவன் வந்ததுமே மாமியாரை அழைக்கத் தவறிய தனது மடத்தனத்தை நினைத்து மானசீகமாய் நிந்தித்துக் கொண்டாள். அவனது பேச்சு ஒவ்வொன்றும் அத்தனை அலுப்பை வரவைத்தது.
“குழந்தை வளக்கிறது அவ்வளவு ஈசி இல்ல ராம்!”
“சோ வாட்? தெரிஞ்சுக்கறேன். கூகுள் இருக்கு, கைட் பண்ண என் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க. அதையும் மீறி எதுவும் இஷ்யூஸ் வந்தா கவுன்சிலிங், யோகா, மெடிசன் இப்படி நிறைய இருக்கு. ஐ க்நோ அபவுட் தட்! என் ரெண்டு பிள்ளைங்க மட்டுமில்ல, இந்த லட்டுகுட்டியையும் என்கூட அனுப்பி வைங்க. நான் அழகா வளர்த்து காமிக்கிறேன்!” அதிரடியாக குண்டு ஒன்றை தூக்கிப் போட்டதும் கிருஷ்ணா உறைந்தே போனாள்.
“உங்களுக்கு பதில் சொல்ல என்னால முடியாது. வாங்க, கீழே போவோம்.” என அழைத்து குழந்தையை கேட்க, அவனோ தர மறுத்தான்.
“இல்ல, பாப்பா என்கிட்டே இருக்கட்டும்.”
“தூங்குற குழந்தையை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது, ப்ளீஸ்!” கிருஷ்ணா கெஞ்ச,
“இப்படித்தானே என் பிள்ளைகளை காட்டுங்கன்னு கெஞ்சுறேன். கண்ணுல காட்டுறீங்களா நீங்க?” அதிராமல் கேள்வி கேட்டு திகிலடைய வைத்தான் ராம்சங்கர். இவளுக்கும் பொறுமை தட்டிப் போனது.
“இது சரிபட்டு வராது. நான் அத்தைய கூப்பிடுறேன்!” என்றுவிட்டு, “அத்தே, பாட்டி…” என குரலை உயர்த்திய சமயத்தில், சட்டென்று அவளின் வாயைப் பொத்தினான்.
“நான் அமைதியா தானே பேசிட்டு இருக்கேன். நீங்க ஏன் பஞ்சாயத்தை கூட்டுறீங்க? என் பிள்ளைகளை என்கிட்டே கொடுத்துருங்க. நான் உங்க பாப்பாவை உங்ககிட்ட கொடுக்குறேன்.” என்றவன் அரைகுறையாக பிள்ளையை பிடித்துக் கொண்டு நிற்க, கிருஷ்ணாவால் அதிரடியாகக் கூட செயல்பட முடியவில்லை.
தனது கைகளால் அவனது கையை அகற்ற முயற்சி செய்தாள், முடியவில்லை. எமகாதகன், அத்தனை உடும்புப் பிடியாக வாயை அடைத்திருந்தான். மூச்சுக்கும் தவித்துப் போனாள் கிருஷ்ணா.
அதிர வைத்த இவனது அவசரச்செயல், பிள்ளையை கீழே போட்டு விடுவானோ என்கிற பயம், பரிதவிப்பு எல்லாம் சேர்ந்து நொடிநேரம் பேச்சற்று நின்றாள். பேச நினைத்தாலும் குரல் வெளி வந்திருக்குமே ஒழிய வார்த்தை வந்திருக்காது. ‘அவன்தான் கையால் வாயை அடைத்திருக்கிறானே, கடவுளே! என்ன செய்ய?’ மனதோடு அரற்றி விட்டாள் கிருஷ்ணா.
அவன் கைகளோடு போராடுவதை விட்டுவிட்டு தனது இரு கரங்களால் அவன் நெஞ்சில் பட்டென்று இருமுறை அடிக்க, சற்றே அவனது பிடி தளர்ந்து இறங்கியதில் சுதாரித்து விடுதலை அடைந்தாள்.
“குழந்தையை கொடு, பிரச்சனை பண்ணாதே ராம்!” கோபமாகவே பேச ஆரம்பித்தாள்.
“மாட்டேன், என் பிள்ளைங்க இருக்கிற இடத்தை சொல்லுங்க. அவங்களை கூட்டிட்டு போயிடுறேன். அப்புறம் பாப்பாவ கொடுக்குறேன்.” என்றபடி பின்னடைந்து கொண்டே அறையின் பால்கனியில் நின்றான்.
“உங்களால வளர்க்க முடியாது ராம். விவரம் தெரிஞ்ச புள்ளைங்க, அவ்வளவு சீக்கிரத்துல இடம் மாத்தி பொருத்திக்க மாட்டாங்க! அதுவும் பழக்கமில்லாதவங்க கூட, சான்சே இல்ல… உங்க அவசர ஆசையை எல்லாம் மூட்டை கட்டி வைங்க, குழந்தைய கொடுங்க!” தவிப்பும் பொறுமையுமாய் கலந்து சொல்லிக் கொண்டுவர, ‘அசருவேனா’ என அறையை சுற்றினான்.
“பிரச்சனை பண்ணி உங்க அண்ணனை கோபப்படுத்த பார்க்காதீங்க. பொறுமையா யோசனை பண்ணிட்டு வாங்க, உக்காந்து பேசலாம். உங்க பிள்ளைங்க எங்க குழந்தைகளா வளர்றாங்க ராம். ரொம்ப பத்திரமா அருமையா இருக்காங்க! அப்பா அம்மாவா எங்களை பார்த்துட்டு, எப்படி உங்களை சட்டுன்னு அப்பான்னு ஏத்துப்பாங்க? யோசிங்க, ப்ளீஸ்! வாங்க, கீழே போகலாம். உங்கம்மா சொல்லி புரிய வைப்பாங்க!” என்றழைக்க, நொடிநேரம் யோசிப்பவனாக அறை வாசலில் நின்றான்.
ஏற்கனவே திறந்திருந்த ஒற்றைக் கதவின் வாயிலில் இவன் நிற்க, மூடிய கதவில் ஒருக்களித்து சாய்ந்து கொண்டு இவனும், அதே கதவினை ஒட்டிக்கொண்டு அறைக்குள் கிருஷ்ணாவும் நின்றிருந்தாள். இவன் வழிவிட்டால் தான் அவளும் வெளியே வர முடியும்.
“என்னை பத்தி தப்பு தப்பா அனலைஸ் பண்ண உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்ல!” காட்டமாய் கூற,
“நான் சொல்றது உங்களுக்கு புரியல ராம்!”
“அப்படியென்ன மோசமான அபிப்பிராயம் என்மேல? சரி, நான் என்ன செஞ்சா என்னை நம்புவீங்க? இப்படி பண்ணுவோமா… பாப்பாவை இன்னைக்கு நாள் முழுக்க நான் பாத்துக்கறேன். அவளை சிரிக்க வைச்சு அழகா உங்ககிட்ட கொண்டு வந்து ஒப்படைச்சா, என் பிள்ளைகளை என்கிட்டே கொடுத்துடுவீங்கள்ல?” கேட்டபடி ஒற்றைக் கதவின் வாயிலில் அசையாமல் நின்றான்.
“இப்போதான் ரொம்ப தப்பான முடிவெடுக்கிறீங்க ராம்! பிள்ளை வளர்ப்பை வியாபாரமாக்காதீங்க… இனியொரு முறை இப்படி பேசினா, உங்க அண்ணன் கூட வேணாம், நானே உங்களை வெட்டிப் போட்டுருவேன்!” கிருஷ்ணாவின் குரலில் ஆக்ரோசம் எட்டிப் பார்த்தது.
“நீங்கதானே என் பிள்ளைகளை வளக்குறீங்க! உங்ககிட்ட என்னை நிரூபிச்சே, என் குட்டீஸ நான் கூட்டிட்டு போறேன். எனக்கு சப்போர்ட் பண்ணுங்க. அதுவரைக்கும் இந்த லட்டுகுட்டி என்கிட்டே இருக்கட்டும்.”
“வேண்டாம் ராம்!” என்றபடி குழந்தையை வாங்க வர, அவளை தனது இரும்புப் பிடியால் தடுத்து நிறுத்தினான்.
“உங்களுக்கு, உங்க ஒரு பிள்ளை வேணுமா? இல்ல, என்னோட ரெண்டு பிள்ளை வேணுமான்னு நீங்களே முடிவு பண்ணுங்க. இன்னைக்கு ஈவ்னிங் புறப்படறேன். அதுக்குள்ள எனக்கு கால் பண்ணி கூப்பிட்டா, அவங்களை கூட்டிட்டு இவளை கொண்டு வந்து கொடுக்குறேன். இல்லன்னா, லட்டுகுட்டியோட ஃபிளைட் ஏர்றேன்!” வேகவேகமாக பேசியவனை பார்த்து திகைத்து நின்ற நேரத்தில், அறையின் உள்ளே கிருஷ்ணாவை கீழே தள்ளிவிட்டு அறையை சாத்தி முன்பக்கம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு வேகமாக இறங்கிச் சென்றான்.
ராம்சங்கர் வேகமாக கீழே இறங்கி வந்த சமயத்தில் பரிமளமும் முன்னறைக்கு வந்து சேர்ந்தார்.
“என்னடா சின்னவனே… இந்த நேரத்துல?” ஆராய்ச்சியாக கேட்கும் போதே,
“அண்ணிகிட்ட விஷயம் சொல்லி இருக்கேன். கேட்டுக்கோ!” என்றபடியே வெளியேறி விட்டான்.
“என்னடா சொல்ற? குழந்தைய எங்கே கூட்டிட்டு போற?” அவனை இழுத்து பிடித்து கேட்கும் நேரத்தில் தாயின் பிடிக்குள் அடங்காமல் வெளியே சென்று விட்டான்.
அவன் வந்திறங்கிய வாடகைக்கார் வாசலுக்கு அருகேயே நிற்க, அவசரமாய் எடுக்கச் சொன்னவன் கண்ணிமைக்கும் நொடியில் சென்று விட்டிருந்தான். காரின் பின்னால் சிறிதுதூரம் ஓடிய பரிமளம் மூச்சு வாங்கிய பிறகே நின்றார்.
‘பிள்ளை இவன் கையில் இருக்கிறதென்றால், கிருஷ்ணா எங்கே?’ மருமகளின் நினைவில் வீட்டிற்குள் வந்து மாடிக்கு விரைந்து சென்று அறையை பார்க்க தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.
உள்ளே இருந்து கிருஷ்ணா தட்டிக் கொண்டிருப்பது கதவு அதிரும் ஓசையில் கேட்டது. சத்தம் கேட்டு அந்த நேரம் வீட்டிற்குள் நுழைந்த பணியாள் விரைவாக சென்று கதவை திறந்த நேரத்தில் பரிமளமும் அங்கே வந்து நின்று விட்டார். வேலைக்காரப் பெண்ணை கீழே அனுப்பி விட்டு பதட்டத்துடன் மருமகளின் அருகில் வந்தமர்ந்தார்.
“என்ன நடந்தது கிருஷ்ணா? எனக்கு ஒரு குரல் கொடுத்திருக்க கூடாதா?” கட்டிலில் சோர்வாய் பிரமை பிடித்து அமர்ந்திருந்தவளைப் பார்க்கும் போதே உள்ளம் பதைத்துப் போனார் பரிமளம்.
“ராம் வந்திருந்தான் அத்தே… என்னை தள்ளி விட்டுட்டு பாப்பாவை தூக்கிட்டு போயிட்டான்.” என்று ஆரம்பித்தவள், அவன் சொன்னதை கூறிவிட்டு அழ ஆரம்பிக்க, அந்த இடத்திலேயே தலையிலடித்துக் கொண்டு அவரும் வெடித்து அழத் தொடங்கினார்.
அதற்கடுத்த நொடிகள் எல்லாம் பரபரப்புடனே நகர ஆரம்பித்தன. இரண்டு பெண்களும் மாப்பிள்ளைகளும் வந்து சேர்ந்தனர். பெண்கள் கிருஷ்ணாவுடன் வீட்டில் துணைக்கு நிற்க, மற்றவர்கள் ராமை தேடும் முயற்சியில் இறங்கினர்.
அரவிந்தனுக்கும் நடந்த விஷயங்கள் தெரிவிக்கப்பட, தான் கொண்டு சென்ற வேனை அங்கேயே விட்டுட்டு விமானத்தில் கிளம்பி வந்தான். கதிரவனும் முகிலனும் சேர்ந்து மதுரையில் உள்ள ஹோட்டல், லாட்ஜுகளில் அவனைத் தேட ஆரம்பித்தனர்.
“ஓபன் டிக்கெட் வச்சிருந்ததா சொன்னான். ஒருவேளை இப்பவே ஃபிளைட் ஏறி இருப்பானோ?” கிருஷ்ணா யோசிக்க, தனது மகன்களை விமானநிலையம் அனுப்பி விசாரிக்க வைத்தார் கதிரவன்.
“எல்லா கோவில்லயும் கூட பார்க்க சொல்லி பசங்களை அனுப்பி வைச்சிருக்கேம்மா. பயப்படாதே!” முகிலன் ஆறுதல் கூறினாலும் நிமிடங்கள் வெகு கடுமையாக நகரத் தொடங்கின.
ஃபோன் நம்பர் ட்ரேஸ் பண்ணி எங்கே இருக்கான்னு பாக்கலாமேண்ணே!” அடுத்த கட்ட நடவடிக்கையை கிருஷ்ணா முன்வைத்தாள்.
அதற்கு காவல்துறையில் புகார் அளித்து, சைஃபர் கிரைம் மூலமாக செல்ல வேண்டும். குழந்தை கடத்தல், குடும்பப் பகை என விசயம் திரிந்து பெரிய அளவில் போய்விடும். குடும்பம் மட்டுமல்லாது தொழிலுக்கும் பெருத்த பின்னடவை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது என்ற சிந்தனையில் அந்த யோசனையை சற்றே ஒத்திப் போட்டனர்.
முன்பகல் பனிரெண்டு மணியளவில் வந்திறங்கிய அரவிந்தன் மனைவியை திட்டி ஓய்ந்தான். “அவன் வந்து நின்னதும் அம்மாக்கு குரல் கொடுக்கிறதுக்கு என்ன? இண்டர்கம் இருக்கிறது கூட மறந்து போச்சா அறிவுகெட்டவளே… அட்வைஸ் பண்ணினாளாம், சமாதானம் பேசினாளாம்! படிச்ச பொண்ணு சுதாரிப்பா இருக்க வேணாமா?” சுள்ளென எரிந்து விழுந்தான்.
அவனது கோபத்தை கட்டுப்படுத்த யாராலும் முடியவில்லை. அம்மாவை கூட விட்டு வைக்காமல் கரித்துக் கொட்டினான். “நீ பின்னாடி ஓடாம வீட்டுல இருக்கிறவங்கள குரல் கொடுத்து அனுப்பியிருந்தா இந்நேரேம் பிடிச்சிருக்கலாம்.” என காய்ந்தான்.
“கொஞ்சம் இறுக்கமா பிடிச்சாலே அழுவாளே குட்டி… அவன் எப்படி வச்சுருக்கனோ?” தகப்பனாய் புலம்பவும் செய்தான்.
“நான் ஒரு கூறுகெட்டவன். நேத்து உன்னையும் தேனில விட்டுட்டு போயிருக்கணும். அவன் பிள்ளைகளை மட்டுமே டார்கெட் பண்ணுவான்னு தப்பு கணக்கு போட்டுட்டேன். இப்படி ஒரு கேடித்தனம் பண்ணுவான்னு நினைச்சு கூட பார்க்கல!” தலையில் அடித்துக் கொண்டான்.
மதியம் ஒருமணி ஆன பொழுது கிருஷ்ணாவிற்கு மனம் விட்டுப் போனது. பால்குடி மறக்காத பிள்ளையின் நினைவில் நொந்தே சோர்வுற்றாள். குழந்தை பசியாறாத பாரமும் சேர்ந்து அவளுக்கு காய்ச்சலை இழுத்து வைத்தது.
“ரெண்டு பிள்ளையா, ஒத்த பிள்ளையான்னு முடிவு பண்ணிக்க சொன்னான். எனக்கு ரெண்டு பிள்ளைங்க போதும் ரவி. அவன் கையில ரெண்டு உசிரு சிக்கி லோல் படுறத விட, என் ஒத்த புள்ள, அவனோட வளரட்டும். அவனுக்கும் அதிக கஷ்டம் இருக்காது.” தன்னால் உளறிக் கொட்டத் தொடங்கினாள்.
“என்னடி பெரிய தியாகியா மாறிட்டியா? இப்படி ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணி வையி, இழுத்து வைச்சு கொடுத்துடுவேன்!” அதட்டி விட்டு வெளியே சென்றான்.
ராம்சங்கரின் செல்பேசிக்கு எத்தனை முறை அழைத்தாலும் ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது. ‘இவன் ஒருத்தன் எவ்வளவு நேரம்தான் ஃபோனை ஆப் பண்ணி வைப்பான். கோமாளின்னு நினைச்சா, வில்லனா ஆட்டம் காமிக்கிறான்.” கதிரவன் பல்லைக் கடித்தார்.
“இனிமேட்டு பொறுமையா இருக்க வேணாம் மாமா, கம்ப்ளைன்ட் ஃபைல் பண்ணுவோம். ஏரியாலயும் ஒன்னுக்கு பத்துபேர் பலமுறை அலசிப் பார்த்தாச்சு. ஒன்னும் தெரியாம முழிக்கிறதை விட டிபார்ட்மெண்ட்ல சொல்றது நல்லது.” அரவிந்தன் கூறியதும் சரியென்று பட, வேறு வழியின்றி காவல்நிலையத்திற்கு கிளம்பும் நேரத்தில் கம்பெனியில் இருந்து பணியாள் ஒருவன் விரைந்து வந்தான்.
“மாஸ்டர், ஆபீசுக்கு இப்ப ஒரு ஃபோன வந்துச்சு *** ஆஸ்பத்திரியில இருந்து பேசுறோம். உங்க பாப்பாவ இங்கே அட்மிட் பண்ணியிருக்கு. அட்டெண்டருக்கு ஃபர்ஸ்ட் எய்ட் நடக்குதுன்னு சொல்லி, வீட்டுல உள்ளவங்கள ஆஸ்பத்திரிக்கு வரச் சொன்னாங்க!” சொல்லி முடிக்கவும் தாமதிக்காமல் அந்த மருத்துவமனைக்கு விரைந்தனர்.