MMOIP 15.1

1650508912096-e331f3c5

அத்தியாயம் – 15.1

 

கதிரை ஹாஸ்பிடலுக்கு ஒற்றை காலில் நின்று அவன் அன்னை அழைத்தே சென்றுவிட்டார்.

அவனுக்கு நெற்றியில் இரண்டு தையல் போடப்பட்டது. அந்த இரவில் கடையில் வாங்கி வந்த தோசையை உண்டவன், சற்று நேரம் கழித்து கொடுத்த மாத்திரையையும் போட்டுக் கொண்டான்.

இல்லாவிட்டால் அன்னை அதற்கும் கண்ணீர் விடுவாரே!

ஆனால் அவன் அடித்தவர்கள் இன்னும் சில நாட்களாவது நன்றாக ரெஸ்ட் எடுக்க வேண்டும். அவர்களை அந்த அடி அடுத்துவிட்டு, சாவகாசமாக மருத்துவமனை கட்டிலில் படுத்திருந்தான்.

அன்னை கவலையான முகம் கண்டு, திரும்பி பிரபாவை முறைக்க, அவனோ சட்டென முகத்தை திருப்பிக் கொண்டான்.

அவன்தானே வண்டியில் போகும்போதே எதிரே வரும் அன்னையிடம் சொன்னான். அதானாலே இப்படி.

கதிருக்கு அடிபட்டிருப்பது வருத்தமாக இருந்தாலும், அவர்கள் பார்வை, முகத்திருப்பல் எல்லாம் கண்டு மீனாட்சி அருகிலிருந்த காவ்யாவிற்கு சிரிப்பாக வந்தது.

மாணிக்கம், சுந்தரம், தர்மா, கனகம் மருத்துவமனை வர, தேன்மொழியும் வந்தாள்.

மகளை வீட்டில் தனியே விட்டு செல்ல நம்பிக்கை இல்லாததால் அவளையும் இழுத்து வந்திருந்தார்.

என்னவோ ஏதோ என்று  அக்கறையாக வந்தவர்கள் அவனுக்கு பெரிதாக ஒன்றுமில்லை என சொல்லிவிட நிம்மதியானர்.

பிரபா அவன் வீட்டுக்கு சென்றுவிட, மற்ற அனைவரும் ஒன்றாகவே கதிர் வீட்டுக்கு வந்தனர்.

அவர்கள் அனைவரும் பேச ஆரம்பிக்கும்போதே குடும்ப விவகாரம் என நாகரிகம் கருதி காவ்யா உள்ளே சென்றுவிட்டாள்.

மாணிக்கம், சுந்தரம் என்ன நடந்தது என கேள்விப்பட்டு உள்ளே கொதித்து போனார்கள்.

‘அவன் எப்படி நம்ம பையன அடிக்கலாம்?’ என்ற கேள்வியே மீண்டும் மீண்டும் அவர்கள் மனதுக்குள்.

‘ஒரு பஞ்சாயத்த இப்போதான் முடிச்சிட்டு வரோம். அதுக்குள்ள இன்னொன்னா?’ பெருமூச்சு விட்டவன் சோபாவில் வசதியாக உட்கார்ந்து கொண்டான்.

“அவன் எப்படி நம்ம கதிர அடிக்கலாம்?” என சுந்தரம் ஒரு பக்கம் குதிக்க,

மாணிக்கமும் கோபத்தில்தான் இருந்தார். இது அவருக்கு பிடிக்கவில்லை. எப்போதும்போல அவன் ஒதுங்கியே இருக்க வேண்டுமென நினைத்தது அவரின் பச்சையான சுயநல மனம்.

கதிரிடம் வந்த அவன் மாமன், “நீ ஏன் கதிரு அவன சும்மா விட்ட? நீ சொல்றத நான் ஏன் கேக்கணும் உன் வேலைய பாருனு சொல்ல வேண்டியதுதான.” என்றார்.

புரிந்து போனது தன்னை ஏற்றி விடத்தான் முக்கியமாக வந்துள்ளாரென. ஆனால் பாவம் அவர்கள் அறியவில்லை அவன் அடித்ததே அவனுக்காகவும், அவன் அன்னைக்காகவும் என!

சுந்தரமும் அதையே சொன்னார். வேறு போல…

“ஆமா… அவன் யாரு உன்ன அடிக்க? என்ன உரிமை இருக்கு?” என்று கேட்டவரை தீயாக முறைத்தான்.

இன்னும் அவர்கள் பேசியது அவன் காதில் கேட்டுக்கொண்டேதான் இருந்தது. அதற்கு காரணம் இந்த மனிதர்தானே?

வெற்றி அவர்கள் பேசியதை கேட்டிருந்தால் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்திருப்பான் என்பதுதான் உண்மை. ஒருநாள் இருக்கு அவனுங்களுக்கு என நினைத்துக் கொண்டான்.

அவன் அடித்ததில் கதிருக்கு கோபமே இல்லை. உண்மையை சொன்னால் அவன் உரிமையாக பேசியது, அடித்தது அவனுக்கு மகிழ்ச்சியைத்தான் கொடுத்தது.

அன்று அடிக்கும்போது வலித்தது. ஆனால் இன்று இனிக்கிறதே!

அப்படியிருக்க இவர்கள் என்னை தூண்டிவிட்டால் பொங்கிருவேனா என உதட்டை இகழ்ச்சியாக வளைத்தான்.

அவர்கள் மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்க, பொறுமையிழந்தவன், “ஏன் உங்களுக்குத் தெரியாதா அவர் யாருனு?” நிதானமான தொணியில் அழுத்தமாக கேட்டான்.

அதில் சற்றே பதற்றம் வந்தாலும், “அவன் எப்படி உன்ன அடிக்கலாம்?” என்றார் சுந்தரம்.

அவர் பக்கம் திரும்பியவன், “அடிச்சது என்ன, எனக்கே கோவம் வரல. உங்களுக்கு எதுக்கு மாமா கோபம்?” எனக் கேட்க,

“உன்ன அடிச்சா எனக்கு கோபம் வரும் கதிரு. நீ என் தங்கச்சி பையன். அவன் யாரு உன்ன அடிக்க?”

‘மீண்டுமா… எத்தனவாட்டி இதே டயலாக்க கேக்குறது? இது சரிவராது பேசுடா.’ மனசு சொல்ல,

“அவர் யாரா… எதுக்கு இப்போ ரெண்டு பேரும் மாத்தி மாத்தி இதையே கேக்கறீங்க? ஏன் ஞாபகம் மறந்துபோச்சா அவர் யாருனு?”

“சரி உங்க பேச்சுக்கே வரேன்… உங்களுக்கு அவர் யாரோவாவே இருந்துட்டு போகட்டும். எனக்கு அப்படியில்ல.” அழுத்தம் திருத்தமாக சொன்னான்.

அவன் மனதில் என்னதான் இருக்கிறது என தெரிந்து கொள்ள,

மாணிக்கம், “எனக்கே அவன் யாருமில்லைனும் போது… உனக்கும் அப்டிதான?” எனக் கேட்க அவனுக்கு சினம் ஏறியது.

“அப்பறோம் என்ன உரிமைல உன்ன அவன் அடிச்சான்?” என,

‘பொறுத்தது போதும் பேசு.’ என்ற மனக்குரலுக்கு,

“அவரு என் பெரியம்மாவோட…” என ஆரம்பித்தவன் அன்னையை பார்க்க, “அவங்களும் என் அம்மாதான். அவங்க பையன் ன்ற உரிமையில… என் அண்ணன்ற உரிமையில…” என்று சொல்ல, மீனாட்சியின் முகத்தில் ஒருவித நிம்மதி.

“என் அண்ணனுக்கு என்ன அடிக்க எல்லா உரிமையும் இருக்கு.” பட்டென சொல்லியேவிட்டான். 

இதையே வெற்றியிடம் சொல்லுவானா என்றால் சந்தேகம் தான். ஆனால் இங்கு மனமார சொன்னான்.

அதேபோல ‘உங்க முதல் சம்சாரத்தோட பையன்ற உரிமைனும்.’ சொன்னால் நன்றாக இருக்காது எனவும், மேலும் அப்படியும் ‘உங்க மூத்த பையன்ற உரிமைனும்’ கூறிக்கொள்ள அவருக்கு எந்த தகுதியும் இல்லை என்பதாலும் விட்டுவிட்டான்.

அவன் பதில் சுந்தரம், மாணிக்கம் தலையில் பேரிடியை இறக்கியதுயென்றால், மீனாட்சி, தேனிற்கு வயிற்றில் பாலை வார்த்தது.

தேனுக்கு ஒருபுறம் கதிர் கூறியதை கேட்டு ஷாக்காகி நிற்பவர்களைக் கண்டும், அவன் பேச்சின் தொணியிலும் மனக்கவலை மறந்து சிரிப்பே வந்துவிட்டது. முடிந்தளவு கட்டுப்படுத்திக்கொண்டு நின்றாள்.

அவனின் இந்த மாதிரியான தைரியம்… அவளுக்கு பிடிக்கும்.

‘நமக்கும் இதுபோலாம் தைரியம் இருந்துருக்கலாம்.’ நினைத்துக் கொண்டாள்.

தர்மாவும் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சிதான் ஆனாலும் அவன் அப்பா அளவிற்கு அல்ல. கனகமும் மகன் மனநிலை போலதான் உணர்ந்தார்.

அதன்பின் அவர்கள் என்ன பேச, அண்ணன் என்றுவிட்டானே!

எதிர்பார்க்கவே இல்லை. இத்தனை வருடங்களாக ஒருமுறையேனும் இருவரும் பேசிக் கண்டதில்லை.

அதைவைத்து ஒருவருக்கு ஒருவர் பிடிக்காது என தப்பு கணக்கு போட்டுவிட்டனர்.

மேலும் பல கணக்குகள் தப்பாகதான் போக போகிறது.

சுந்தரம் மனம் ஒரு பக்கம் எச்சரிக்க, மாணிக்கம் எப்படி உணர்கிறார் என்றே அவருக்கு தெரியவில்லை.

அவர்களின் பேயறைந்தது போன்ற முகத்தை திருப்தியாக பார்த்தவன், “எனக்கு தூக்கம் வருது. நான் ரூமுக்கு போறேன்.” என அவன் அறைக்கு சென்றுவிட்டான்.

அதிர்ச்சி விலகாமல் சுந்தரம் அவர் குடும்பத்துடன் வீட்டிற்கு செல்ல, மாணிக்கமுமே அதே போலதான் அறைக்கு சென்றார்.

அதை பார்த்து ஏனோ மீனாட்சிக்கு அத்தனை சந்தோசமாக இருந்தது.

வாழ்க்கை பண்ணிய தப்புகளுக்கு திருப்பி தருகிறது போலும் என நினைத்துக் கொண்டார்.

இன்னும் என்ன அதிர்ச்சி யாரையெல்லாம் தாக்க காத்திருக்கோ!

 

(புரிதா ப்பா… வெற்றி, கதிர் அண்ணன் – தம்பி… மாணிக்கம் 1st wife பையன் – வெற்றி, 2nd wife பையன் கதிர்)