பூந்தளிர்-5
பூந்தளிர்-5
பூந்தளிர்-5
நான் சின்னப்பொண்ணு செவ்வாழைக் கண்ணு
நீ கல்யாண வேலி கட்டு…
என் செந்தாமரை கைசேரும் வரை
நான் நின்றேனே தூக்கம் கேட்டு…
உன் ஆசை என்ன
உன் தேவை என்ன
நீ லேசாக காத கடி…
என் எண்ணங்களை நான் சொல்லாமலே
நீ இந்நேரம் கண்டுபிடி…
குதூகலக் குரலும் துள்ளல் இசையும் ரம்மியமான மாலை நேரத்தை மகிழ்ச்சியில் தள்ளாட வைக்க, அந்தப் பெரிய திருமண மண்டபத்தில் ஊரே கூடியிருந்தது.
உறவினர்கள், வியாபார நண்பர்கள் என அத்தனை ஜனத்திரளும் ஒன்றாகச் சேர்ந்திருந்தனர். மேடையில் அரவிந்தலோசனனும் விசாலகிருஷ்ணாக்ஷியும் மணமக்களாய் நிற்க, மறுபக்கம் மெல்லிசைக் கச்சேரி அமர்களப்பட்டது.
கதிரவனின் தலைமையில் முகிலன், சுதாகரன் மற்றும் கோவர்த்தனன் திருமண விழாவின் ஏற்பாடுகளை பொறுப்பெடுத்துக் கொள்ள, அனைத்தும் நிகழ்வுகளும் வெகு சிறப்பாகவே நடந்தேறிக் கொண்டிருந்தன.
முன்தினம் மாலை நிச்சயத்தில் தொடங்கிய திருமண விழா, இன்று காலை கோவிலில் முகூர்த்தம் முடித்து, இப்போது வரவேற்பின் கோலாகலங்களில் அனைவரையும் மூழ்கடித்துக் கொண்டிருந்தது.
நிச்சயத்தின் போது வஸ்திரகலாவில் மிளிர்ந்து, முகூர்த்தத்திற்கு காஞ்சிப்பட்டுடன் அழகாய் அமர்ந்து, வரவேற்புக்கு சமுத்திரிகா பட்டுடுத்தி மிதமான ஒப்பனையில் நின்று கொண்டிருந்தாள் கிருஷ்ணா.
இவளது அலங்காரத்தை பார்த்து பூரிக்காமல் நிகழ்வுகளை நிழற்படங்களாக மாற்றிக் கொள்வதில் தீவிரம் காட்டிக் கொண்டிருந்தான் அரவிந்தன். அதில் மணமகளோடு ஏனையோருக்கும் சற்றே மனக்குறைதான்!
“அட… செத்த நேரம் அண்ணியதான் பாரேண்ணே… ஃபோட்டோ அண்ணேன் கொஞ்சம் மூச்சு விட்டுக்கட்டும்!” பொய்க்கோபத்தில் சுமதி கண்டிக்க,
“காலத்துக்கும் ரசிச்சு பார்த்துட்டே இருக்க நான் பிளான் பண்றேன்! அது பொறுக்கலையா குட்டி?” அரவிந்தன் பதிலளித்த தினுசில் தன்னால் வாய் பொத்திக் கொண்டாள் சுமதி.
“கேட்டீகளா அண்ணி… இப்படியே போனா, எங்க அண்ணேன் சேதாரமா கழிஞ்சு கூலிக்காரரா உங்க வீட்டுக்காரர்தான் தேறி வருவாரு போலருக்கு!” சலிக்காமல் வாரிவிட
“நான் எப்பவும் முழுசாதான் இருப்பேன் சுமதி… ரெண்டு பேருல ஒருத்தர் இருந்தாலே நாங்க ரெண்டு பேரும் வந்து நின்னதுக்கு சமானம்!” அசராமல் பதில் கூறிவிட்டு புது கணவனை இமைக்காமல் பார்த்தாள் கிருஷ்ணா.
முன்தினம் ஷெர்வானியில் ஆணழகனாய் சிரித்து, முகூர்த்தத்திற்கு பட்டு வேட்டியில் மாப்பிள்ளையாக தாலி முடித்து, வரவேற்பிற்கு கோட்-சூட்டில் தன்னை கச்சிதமாக பொருத்திக் கொண்டு நிமிர்வான புன்னகையுடன் நிற்பவனை காணக்காண கண்கள் இரண்டும் போதவில்லை.
புது மனைவியின் அகலாத பார்வையை கண்டு, ‘என்ன?’ என புருவம் உயர்த்தி அரவிந்தன் ஜாடையில் கேட்க,
“ரொம்ப அழகா இருக்கீங்க மாஸ்டர்…. இது உண்மையா? இல்ல, என் கிறுக்கு பிடிச்ச மனசுக்குதான் இப்படித் தோணுதான்னு தெரியல!” கிருஷ்ணா அறியாமையுடன் முகம் சுருக்க,
“கிறுக்கு பிடிக்காத என் தெளிவான மனசே சொல்லுது, நீ அழகின்னு…” உணர்ந்தவனாய் கூறிவிட, காதல் பெண்ணாய் நாணிச் சிவந்தாள்.
“நமக்கு ரொம்ப முத்திடுச்சு… வழக்கம் போல சின்னப் பொண்ணாவே என்னை மாத்தி வைக்கிறீங்க!” காதோரத்தில் கிசுகிசுக்க அரவிந்தனின் முகம் கர்வச் சிரிப்பில் அழகாய் மலர்ந்தது.
கண்கொட்டாமல் அதையும் தன் மனப்பெட்டகத்தில் சேமித்துக் கொண்டு விழாவில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள் கிருஷ்ணா.
நேற்று மாலையில் இருந்தே நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் அரவிந்தனின் ‘மாஸ் மசாலா யூ-டியூப் சேனல்’-லில் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இந்த ஏற்பாட்டை வற்புறுத்தி செய்ய வைத்தது அரவிந்தனின் ஆசைத்தம்பி ராம்சங்கர். சுமதியின் இரட்டைச் சகோதரன்.
தற்சமயம் வேலை நிமித்தம் ஆஸ்திரேலியாவில் வசிப்பவன். இவன் இந்தியாவிற்கு வந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாகி விட்டது. அண்ணன் திருமணத்தை பார்த்தே ஆகவேண்டும் என்கிற முனைப்புடன் கதிரவனின் மகன்களைக் கொண்டே, இணையவழி நேரலை ஏற்பாட்டினைச் செய்திருந்தான்.
“அண்ணே.. நானும் உன் கல்யாணம் பார்க்க ரெண்டுநாள் முழுசா லீவெடுத்துட்டேன்! எங்க அண்ணேன் கல்யாணத்துல நடக்கிற ஈவென்ட்ஸ் ஒன்னு கூட மிஸ் பண்ணாம பார்த்தே ஆகணும்!” தம்பியின் ஆசைக்கு ஏற்ப துரிதமாய் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
“சீக்கிரம் ஊருக்கு வாடா சின்னவனே… உனக்கும் பொண்ணு பார்த்து, கல்யாணம் முடிச்சிடலாம்!” அரவிந்தனின் அன்பாக அழைப்பிற்கு சிரித்தபடி மழுப்பினான் ராம்.
பக்கத்தில் இருந்த சுதாகரன், “என்னை நல்லா பார்த்தும் உங்களுக்கு கல்யாண ஆசை வந்தா, நான் தடுக்கல சின்ன மச்சான்!” கேலி பேச,
“ஒன்னுந்தெரியாம சிக்கினவருக்குதான் இம்புட்டு வாயி வளர்ந்திருக்கு!” நொடித்துப் பேசி அனைவரின் முன்னிலையிலும் கணவனின் காதைத் திருகினாள் சுமதி.
“எங்க வீட்டுப் பொண்ணுகிட்ட வாயை கொடுத்து வம்பா மாட்டுறீகளே மாமா!” வெடித்துச் சிரித்த ராம், மேலும் கொட்டமடித்துக் கொண்டே நடப்பவைகளை ரசித்துக் கொண்டிருந்தான்.
அலட்டல் பார்வையுடன் தற்பெருமை பேசுபவனாய் இருந்தாலும் தனது குடும்பத்தினரின் மீதான பாசத்தை நொடிக்கொரு முறை பறைசாற்றுபவனாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். பார்ப்பவர் மனதை மிக எளிதில் தன்வசப்படுத்தி விடுவான் ராம்சங்கர்.
கிருஷ்ணாவிற்கும் அவனது தோரணை மிகவும் பிடித்துப் போனது. அவனோடு சேர்ந்து இளையவர்கள் அனைவரும் மணமக்களை கலாய்த்துத் தள்ளினர்.
பெண் வீட்டாருடன் இனிமையான அறிமுகம் நடக்கும் பொழுதே சாத்விகாவுடன் ராம் சிநேகமாக பேச ஆரம்பிக்க, அந்த சகஜப்பேச்சில் கிருஷ்ணாவும் சேர்ந்து கொண்டாள். மொத்தத்தில் எந்தவித குறையுமில்லாமல் திருமணவிழா இனிதாக நடந்து கொண்டிருந்தது.
“தங்கச்சி முகம் வாடி போச்சு… ஜூஸ் குடிக்கிறாயா ம்மா?” கனிவுடன் கதிரவன் கேட்க,
“வேண்டாம் ண்ணே… கொஞ்சநேரம் உக்காந்து இருந்தா சரியாகிடும்!” தாரளமாகப் பேசிய கிருஷ்ணாவை அனைவரும் விழியுயர்த்திப் பார்த்தனர்.
“ஏன் மாமா? என் முகம் வாட்டமா தெரியலையா… என்னை கவனிக்க மாட்டீகளா!” அரவிந்தன் போட்டிக்கு நிற்க,
“உனக்குத்தான் கோட்டைசாமியா உன் உடன்பிறப்புகள் எல்லாம் காவலுக்கு நிக்குதே மாப்புள… அவுக கூட நான் என்னத்துக்கு போட்டிக்கு வரப்போறேன்!” சொல்லிவிட்டு மீசை முறுக்க, அந்த இடமே கலகலத்தது.
“ஆமாமா… எங்களைப் பாத்து எங்க மீசைமாமா பயந்துதான் போறாரு!” கலகலத்துப் பேசிய சுமதி, “கண்ணு ரெண்டும் பூத்து போகுது மாமோய்! மொத சுத்தி போடச் சொல்லணும்!” மனம் நிறைந்து கூறினாள்.
கதிரவன் தேனிக்கு சென்று விட்டு வந்த ஒரு மாதத்தில் நடைபெறும் நிகழ்வு இது. அவரின் எண்ணப்படியே திருமணத்திற்கு அனைவரும் ஒரு மனதாக சம்மதிக்க, ஏற்பாடுகள் அதே வேகத்துடன் நடந்து இன்று நிறைவினை காண்கின்றன.
இவை அனைத்தையும் சாத்தியமாக்கியவன் அரவிந்தலோசனன். பதினைந்து வயது முதலே வாழ்வியலின் நிதர்சனங்களை கற்றுக் கொண்டவனுக்கு யாரிடம், எங்கே, எப்படிப் பேசி காய் நகர்த்த வேண்டுமென்று மிக நன்றாகவே தெரிந்திருந்தது.
பணம் என்பது ஒரு பொருட்டாக இல்லாத பட்சத்தில் திருமணத்தை உடனே நடத்தி விடலாமே என்பதுதான் இரு வீட்டாரின் விருப்பமாக இருந்தது. ஆனால் கதிரவனின் பிடிவாத வாதங்களும் கிருஷ்ணாவின் அவசரப் பேச்சும் திருமண ஏற்பாட்டிற்கே உலை வைக்கும் அபாயத்தை உண்டாக்கி இருக்க, அனைவருமே பெரும் யோசனைக்கு உள்ளாயினர்.
“நான் சொல்லுறத சொல்லிட்டு வந்துட்டேன் மாப்புள… இனிமேட்டு அவுகளா வரட்டும், பேசுவோம்!” என்றதோடு அன்றைய நாளின் பேச்சினை முடித்து கொண்டார் கதிரவன்.
அவரளவில், ‘தான் நடந்து கொண்டது, பேசியது எல்லாம் மிகச் சரியே!’ என்பதாக எண்ணம். அதையே மாமனார் வீட்டில் சொல்லிவிட, இப்பொழுது முடிவு காண்பது அரவிந்தனின் வசமாகி இருந்தது.
“மாமா பேச்சை மீறி வேற முடிவெடுத்து குடும்பத்துக்குள்ள பிரச்னையை உண்டு பண்ணிடாதே தம்பி… எனக்கு அது சரியா படல!” அக்கா சுதாமதியும் கணவனின் பக்கம் சாய்ந்துவிட, சாருமதியும் அதற்கு ‘ஆமாம்சாமி!’ போட்டாள்.
“இவர் பேசிட்டு வந்த முறைக்கு அந்த பொண்ணு வேண்டாம்னு சொல்லிடுமோ, அரவிந்தா!” கலக்கத்தோடு தாய் பரிமளம் கேட்க,
“படிச்ச பொண்ணு, வேலைக்கு போறவக…. அப்படி சொல்லவும் சான்ஸ் இருக்கு!” சுமதியும் அதையே பற்றிக்கொண்டு பேசினாள்.
“இங்கன கூடிப் பேசுறதுல எந்த பிரயோசனமும் இல்ல அரவிந்தா… நீ ஒரு ஃபோன் போட்டு அந்த புள்ளகிட்ட பேசிடு! குழப்பம் தீரும்!” மனோன்மணி தீர்வாகச் சொல்ல அதுவே அவனுக்கும் சரியென்று பட்டது.
தேனியில் பெண்ணின் வீட்டிலும் இப்படியான குழப்பங்களே நீடித்துக் கொண்டிருந்தன. எதைப் பற்றியும் ஸ்திரமாக பேச முடியாத சூழ்நிலையில் கலக்கத்துடன் குடும்பமே யோசனையாக அமர்ந்திருந்தது.
“கல்யாணப் பேச்சை கொஞ்சம் ஆறப்போடுவோமா அச்சு?” பங்கஜம் மகளிடம் அனுசரணையாக கேட்க,
“எனக்கு என்னமோ, இப்பவே சுதாரிப்பா விலகிக்கிறது நல்லதுன்னு தோணுது!” கோமளவல்லியும் தனது எண்ணத்தை முன்வைக்க,
“வாயக் கழுவுங்க ரெண்டுபேரும்… அசட்டுத்தனமா உளறிக் கொட்டி சின்னப்பொண்ணு மனசுல குழப்பத்தை உண்டு பண்ணாதீக!” கடிந்து கொண்டார் விசாலம் பாட்டி.
கோவர்தனனுக்கும் இவர்களின் பேச்சில் வெகுவாக கோபம் எட்டிப் பார்த்தது. “கல்யாணம் பண்ணிக்க போறவளை தவிர்த்து மத்த எல்லாரும் பேசிட்டு இருக்கோம்!” என சலித்தவர்,
“உன் அபிப்பிராயம் என்னன்னு சொல்லு கிருஷ்ணா!” பெண்ணிடம் தன்மையாகவே கேட்டார்
“என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல மாமா! நான் வாழப்போறது அரவிந்தனோட… அப்பப்ப வந்து போறவங்களைக் காரணக் காட்டி என் விருப்பத்தை முறிச்சுக்க நான் விருப்பபடல” தெளிவாகக் கூறியவள்,
“ஆனா இப்பவே பிரச்சனையில ஆரம்பிச்சா பின்னாடி எல்லா காரணத்துக்கும் இதே மாதிரி பேசி தர்க்கத்த உண்டு பண்ணுவாங்களோன்னு யோசிக்கிறேன். அதுவுமில்லாம மன்னிப்பு அதுஇதுன்னு பத்தாம்பசலியா அடுத்தவங்க முன்னாடி நிக்க எனக்கு சுத்தமா விருப்பமில்ல மாமா… எந்த இடத்துலயும் என் சுயம் அடிபடாம இருக்கணும் அதை மட்டுமே நான் எதிர்பார்க்கறேன்!” இறுதியாக முடித்தவளை மெச்சிக் கொண்டார் விசாலம்.
அதே நேரத்தில் கிருஷ்ணாவின் அலைபேசிக்கு அரவிந்தன் அழைக்க, ‘பேசு’ என அனைவருமே ஜாடை காண்பிக்க, லவுட் ஸ்பீக்கரில் பேசத் தொடங்கினாள்.
‘என்னென்ன சொல்லி குதிக்கப் போகிறானோ? எந்த மாதிரியான வாதத்தை இவன் வைப்பனோ!’ என்ற யோசனையில் கலக்கத்துடன் இவள் அழைப்பை ஏற்க,
“ரொம்ப பிசியா இருக்கியா சாலா?” மிகச் சாதாரணமாகவே கேட்டான் அரவிந்தன்.
அவனது அந்த பேச்சே கிருஷ்ணா வீட்டில் இருந்த அனைவருக்கும் அப்படியொரு நிம்மதியைத் தந்தது. ‘நாம் நினைத்த அளவிற்கு மோசமில்லை!’ என்கிற பெருமூச்சு அனைவரிடம் இருந்தும் வெளிவந்தது.
“சொல்லுங்க மாஸ்டர்!” கிருஷ்ணாவின் பதிலில்,
“யார் பக்கத்துல இருக்காங்க?” தயங்காமல் கேட்டான் அரவிந்தன்.
“யாரும் இல்லையே… ஏன் கேக்குறீங்க?”
“இல்ல… நீ ரவின்னு தானே கூப்பிடுவ… மாஸ்டர் வருதே, இப்ப!” காரணத்தை கூறவும், ‘இவ்வளவிற்கு தன்னை உள்வாங்கி இருக்கின்றானா?’ எனப் பூரித்தவள், உண்மையை ஒப்பித்து விட்டாள்.
“கதிர் அண்ணே வந்துட்டு போனதைப் பத்தி பேசிட்டு இருந்தோம் மாஸ்டர். எல்லாரும் என் பக்கத்துல தான் உக்காந்திருக்காங்க! என அனைவரயும் பார்க்க, இப்பொழுது அவளை தனிமைபடுத்தி விட்டு அனைவரும் நகன்றனர்.
“நான் அப்புறமா பேசவா?”
“எல்லாரும் போயிட்டாங்க… இப்ப பேசலாம் ரவி!”
“என்னன்னு சொல்ல… என்ன முடிவு பண்ணிருக்கீங்க?” அரவிந்தன் பொதுவாக கேட்க,
“என்ன முடிவு பண்ணனும்?” அவனுக்கே கேள்வியை திருப்பினாள் கிருஷ்ணா. நொடிநேர மௌனம் நீடித்து விலகியது.
“எல்லா வழக்கத்துக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும் சாலா… அவங்கவங்க பேச்சு அவங்களுக்கு நியாயம். எதையும் ஆராய வேண்டாம்னு தோணுது. என்ன சொல்ற நீ?”
“நீங்க சொல்றது ஒன்னும் புரியல!”
“உன் புரபசனுக்கு பிளாக் மார்க் வராத அளவுக்கு ஏற்பாட்டை பண்ணிக்கலாம். நிச்சயமும் கல்யாணமும் சேர்த்தே அடுத்த மாச கடைசியில முடிச்சிடலாம்னு தோணுது. நீ சரின்னு சொன்னா மட்டுமே நடக்கும்!” தடாலடியாக முடிவினை கூறிவிட்டு, அவளது பதிலுக்காக காத்திருந்தான் அரவிந்தன்.
“வீட்டுல கேட்டுட்டு சொல்லட்டுமா ரவி?”
“நம்ம விருப்பம் மட்டுமே நடக்கட்டும் சாலா… ரெண்டு பேரு வீட்டுலயும் எப்போன்னாலும் சரின்னு சொல்ற முடிவுலதான் இருக்காங்க!” தயக்கமின்றி கூறியதும்
“அப்போ சரி!” என்று யோசிக்காமல் சம்மதித்தாள் கிருஷ்ணா.
‘என் மேல் நம்பிக்கை இருந்தால் நான் சொல்வதை ஒத்துக்கொள்!’ என அவனும் கூறவில்லை.
‘நீ சொன்னவாறு நடப்பது சாத்தியமா?’ என இவளும் கேட்கவில்லை.
மாறாக, ‘எனக்காக இதை செய்வாள்’ எனக்காக நடத்திக் கொடுப்பான்!’ என்ற பரஸ்பர புரிதல் இருவருக்கும் இடையே தளிர் விட ஆரம்பித்திருந்தது. திருமண வாழ்வின் நல்லதொரு துவக்கம் இனிதாக தொடங்கியது.
மறுநாளே நல்லநாள் குறித்துக் கொண்டு மீண்டும் தேனிக்கு பயணப்பட்டார் கதிரவன். இம்முறை மனைவி சுதாமதியை உடனழைத்துச் சென்றார்.
“அதென்னமோ கோவர்த்தன்? சொல்றவங்க சொன்னாதான்இந்தகாலத்துக் பிள்ளைகளுக்கு புரியுது!” நமட்டுச் சிரிப்போடு பேச ஆரம்பித்த கதிரவன் எந்தவித விகல்பமும் இல்லாமல் கிருஷ்ணாவைப் பார்த்து, நலம் விசாரிக்க அவளுமே தயக்கமின்றி பதிலளித்தாள்.
பெண் வீட்டிற்கு செல்லும் பொழுதே மூன்றுகிலோ இனிப்பும் காரமும், பூ, பழம் என கொடுத்து அசத்தி விட்டார். அதிலேயே அவரின் மகிழ்ச்சியும் தெரிந்து போனது.
அடுத்த வந்த முப்பது நாட்களும் இருவரது வீட்டிலும் திருமண ஏற்பாடுகளுக்காக குடும்பமாக சென்று அனைத்தையும் நிறைவாகச் செய்து, இன்று திருமணத்தையும் மனநிறைவோடு முடித்து வைத்து விட்டனர்.
மறுநாள் மறுவீட்டிற்கு அழைத்து செல்வதேற்கென கோமளவல்லி கோவர்த்தன் மதுரையில் அரவிந்தன் வீட்டிலேயே தங்கி விட்டனர்.
திருமண இரவின் சடங்கு அரவிந்தனின் வீட்டில் ஏற்பாடானது. அத்தனையும் முடிய இரவு பின்புறம் தம்பதிகளை நிற்க வைத்து, ‘வந்திருந்த அத்தனை பேரின் கண் திருஷ்டியும பொசுங்கி விட வேண்டும்.’ எனச் சுற்றிப் போட்டார் சுதாமதி.
“இந்த கால புள்ளைங்க போல குழந்தைய தள்ளிப் போட்டுடாதே தாயி!” இறங்கிய குரலில் கிருஷ்ணாவிடம் கோரிக்கை வைத்தார் மனோன்மணி.
“கல்யாண நாளே இன்னும் முடியல அதுக்குள்ள என்ன அத்தே இது?” கேட்ட அரவிந்தனை பேசாமல் இருக்கும்படி சைகை செய்தார்.
“ஆம்பளைக்கு எத்தன வயசானாலும் விவரம் பத்தாது தங்கம்! உனக்கும் அவனுக்கும் ஒன்னும் சின்ன வயசு இல்ல… என் அரவிந்தனோட புள்ளைய கையில வாங்கணுன்னு எம் மனசு தவியா தவிச்சு கெடக்கு! எத்தனை பேரப் பசங்க வந்தாலும் இவனோட புள்ளதான் இந்த வீட்டுக்கு மொத வாரிசு! அவனை சீக்கிரமா பெத்தெடுத்து என் கையில குடுத்துடு ராசாத்தி!” தனது ஆசைகளை விளக்கி இருவருக்கும் விபூதி பூசி ஆசீர்வதித்தார்.
“அத்தை எப்பவும் அந்தக் காலம்தான்… நீங்க உங்க சவுகரியத்தை பார்த்துக்கோங்க!” கூடுதலாக மல்லிகை சரத்தை கிருஷ்ணாவின் தலையில் வைத்துக் கொண்டே சாருமதி சொல்ல, பதில் சொல்ல புதுபெண்ணிற்கு சங்கோஜம் தடுத்தது. இவர்களின் அலட்டலை பார்க்க முடியாமல் எப்போதோ அரவிந்தன் தனதறையில் தஞ்சம் அடைந்திருந்தான்.
“அடியே… மனோரஞ்சிதம் கொண்டுட்டு வாரதுக்குள்ள பூ வச்சு முடிச்சுட்டியா?” அதட்டலை போட்ட சுதாமதியின் கையில், ஆங்காங்கே கோர்த்து தொடுத்த மனோரஞ்சிதத்தோடு இணைந்து நெருக்கி கட்டிய மல்லிகைப் பந்து ஒன்று இருந்தது.
“அதனால என்னக்கா? இதையும் சேர்த்து வச்சு விடு! அண்ணேன் ரூமு மணக்கட்டும்!” சுமதி விளையாட்டாக பேச, புதுப்பெண் அரண்டு விட்டாள்.
“ப்ளீஸ் அண்ணி… கோச்சுக்காதீங்க இப்பவே கூடை சுமக்கறாப்ல தலை கனத்து கெடக்கு. இதுக்கும் மேல வச்சுவிட்டா நான் இங்கேயே மயக்கம் போட்டு விழுந்துடுவேன்!” கிருஷ்ணாவின் மறுப்பில் கோமளவல்லி முறைத்தார்.
“பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும் அச்சு! இன்னைக்கு மட்டும் இப்படிதான்! அப்புறம் யாரும் உன்னை கம்பெல் பண்ண மாட்டாங்க… எனக்கெல்லாம் இப்படி அனுப்பி வைக்க சீந்துவாரில்லாம போனேன்!”
“உங்களையும் அலங்காரம் பண்ணி அனுப்ப நாங்க ரெடி அண்ணி!” வழக்கம் போல சுமதி கேலி பேச, மனோன்மணி போட்ட சத்தத்தில் விரைவாக, தலையில் மனோரஞ்சிதப் பந்தோடு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள் கிருஷ்ணா.
வெளியில் முளைத்த சங்கோஜம் அறைக்குள் நுழைந்ததும் பன்மடங்காகி இருந்தது கிருஷ்ணாவிற்கு. பயந்து பின்வாங்கும் பேதையல்ல அவள். ஆனாலும் இந்தச் சூழ்நிலையும் இடமும் புதிது தானே!
உள்ளுக்குள் ஒரு பய அதிர்வு, மெல்லிய நடுக்கம் அதை வெளிப்படுத்தி விடக்கூடாது என்ற உறுதியுடன் மென்சிரிப்போடு கட்டிலில் வந்து அமர்ந்தாள்.
“அம்மாடி என்ன வாசனை… பூவாசம் ஆளை கிறங்கடிக்குது சாலா! பூந்தோட்டம் நடந்து வாரத நானும் நேருல பார்த்துட்டேன்!” அரவிந்தன் சிலாகிப்பில் இறங்க,
“இங்கே தொங்க விட்டுருக்கிற சம்பங்கி தோட்டத்தை விடவா என் பூந்தோட்டம்?” என்றவளின் பார்வை அந்த கட்டிலை சுற்றி வந்தது.
வண்ண வண்ண பலூன்களும் நறுமணப் பூச்சரங்களும் நெருக்கமாக தொங்க, ஆங்காங்கே ஜிகினா தூவி விடப்பட்டு வண்ணக் காகிதங்களும் தோரணங்களாய் அறையை நிறைத்து இருந்தது.
“இதெல்லாம் யார் ஏற்பாடு ரவி?”
“வேற யாரு? நம்ம வீட்டு சின்னக்குட்டிதான்!”
“சுமதிக்கே ஒரு குட்டி இருக்கு. இன்னும் அவ உங்களுக்கு சின்னகுட்டியா? வீட்டுக்கு அத்தனை செல்லமா?”
“ம்ம்… சின்ன வயசுல இவளும் ராமும் சேர்ந்து அடிக்கிற கொட்டத்தை யாராலயும் அடக்க முடியாது. இவங்க சேட்டைதான் எங்களுக்கு பலநேரம் ஆகாரமா இருந்திருக்கு!” என்றவனின் பேச்சில் அன்றையநாளின் தாக்கம் தெரிந்தது.
இதைக் கேட்ட கிருஷ்ணாவின் மனமும் சட்டென்று கலக்கம் கொண்டது. ஒருகாலத்தில் வறுமையில் தத்தளித்த குடும்பம் இவர்களுடையது என்று தெரிந்து வைத்திருந்தாள்தான். ஆனால் உணவுப் பற்றாகுறை கொண்ட கஷ்டஜீவனம் என்பதை அரவிந்தன் சொல்லித்தான் கேட்கிறாள்.
“சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்பட்டீங்களா ரவி?” வருத்தமாகக் கேட்க,
“அதெல்லாம் அந்தக்காலம் சாலா! இந்த நேரத்துல அதை ஏன் நினைச்சு பார்க்கணும்?” இயல்பிற்கு திரும்பியவன், அங்கு வைக்கப்பட்டிருந்த சொம்பில் இருந்த பாலை டம்ளரில் ஊற்றிக் கொடுத்தான்.
“இதெல்லாம் நான் செய்யணும்னு சொல்லி விட்டாங்க!” என்று அவசரகதியில் கூறியவள் முதலில் அங்கிருந்த தேங்காயை எடுத்து கணவனின் கையில் கொடுத்தாள்.
“மொதல்ல தேங்கா உடைக்கணும்னு சொன்னாங்க ரவி!”
“சமைக்கவா போறோம்?”
“நானும் இப்படி கேட்டுட்டு திட்டு வாங்கிட்டு வந்துருக்கேன். இந்தாங்க தேங்கா கீரி… கோணல் விழாம, சிதறாம, அழகா அரை வட்டமா உடைக்கணும். அப்போதான் பொறக்கிற புள்ளை அழகா, குண்டா பொறக்குமாம்!”
“அன்னைக்கே சொல்லிட்டேன் டீச்சர், இந்த பாடம் எடுக்குற வேலை வேண்டாம்னு…” அரவிந்தன் முறுக்கிக் கொள்ள
“இன்னும் பத்து நிமிசத்துல தேங்கா உடைக்கற சத்தம் கேக்கலன்னா கதவை தட்டிடுவாங்க! எப்படி வசதி?”
“அடிங்… யாரது கதவுக்கு பின்னாடி ஒளிஞ்சு நிக்கிறது?” பரபரத்தான் அரவிந்தன்
“ஒளிஞ்சு எல்லாம் நிக்கல… அவங்களுக்கு சத்தம் கேக்கணும் அவ்ளோதான்! ஒரு தேங்கா உடைக்க எத்தனை கேள்வி கேப்பீங்க மாஸ்டர்?” இடுப்பில் கைவைத்து முறைக்க, அரவிந்தனின் கை தன்னால் தேங்காயை அதிக சத்தத்துடன் உடைத்து திருமண நாளின் சடங்கினை நிறைவு செய்தது.
அவள் அருகே வந்தமர்ந்தவன் மெல்ல அவள் கன்னம் தடவ, கூச்சத்தோடு நிமிர்ந்தவளும், ‘ஏன் இந்த அவசரம்?’ என்பதைப் போல பொய்யாய் முறைத்தாள்.
“டீச்சர், இன்னைக்கு நீங்க செம அழகு… எங்க அத்தை சொல்ற மாயமோகினி, மந்தாகினி அழகி எல்லாம் உங்க ரூபத்துல வந்த மாதிரி இருக்கு!” ஆர்வக்கோளாறில் பேசியவன் நாக்கைக் கடித்துக் கொண்டான்.
“நமக்குதான் வர்ணிக்கிறது வரலன்னு தெரியுதுல்ல… எதுக்கு உளறிக் கொட்டணும்?”
“ஆனாலும் இன்னைக்கு உன்னோட அழகு ஓவர் டோஸ்தானே? எல்லாம் மேக்கப் செய்யும் மாயம்!” என கிண்டல் அடிக்க, கையில் கிடந்த பூவை அவன்மேல் வீசி கோபம் காட்டினாள் கிருஷ்ணா.
அழகு நிலையத்தாரின் அலங்காரம் எல்லாம் வரவேற்பு நிகழ்ச்சியோடு முடிந்து போயிருந்தது. இயல்பாக இருக்க வேண்டுமென்றே எதையும் அதிகப்படியாக எடுத்துக் கொள்ளாமல் வந்திருந்தாள்.
இயற்கையாகவே அவள் முகத்தில் குடியிருக்கும் பொலிவும் பளபளப்பும், திருமண பெண்ணிற்கே உரிய சிருங்காரத்துடன் இன்னும் மெருகேறி இருந்ததை இவள் அறியாமல் போக, இவனுக்கோ புதிதாகப் தோன்றியது.
“என்னமோ தெனமும் என்னைப் பார்த்து அலுத்துகிறவர் மாதிரி பேசுறீங்க மாஸ்டர்!”
“எப்பவும் யூனிஃபார்ம் சேலையும், கிளிப் மாட்டின கொண்டையோடயும் பார்த்தவனுக்கு இது ஸ்பெசல் தானே?” கள்ளத்தனமாய் சிரித்தவனை பார்த்து உதடு சுழித்தாள்.
“சரிசரி… அப்புறம் கோபபட்டுக்கலாம் டீச்சர்! இப்ப தூங்குவோம்… செம டயர்டா இருக்கு!” சாதாரணமாக கூறிவிட்டு தலையணை தட்டிப் போட்டவனை இமைக்காமல் பார்த்தாள்.
இவன் கன்னம் தொட்ட வேகத்திற்கு பெண்ணின் மனம் கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு எங்கேங்கோ ஓடிக் கொண்டிருந்தது. அதை கடிவாளம் போட்டு நிறுத்த முடியாத அவஸ்தையில், இயல்பாய் தனக்குண்டான ஏமற்றத்தை அவளது பார்வையும் காண்பித்து விட, நன்றாகவே புரிந்து கொண்டான் அரவிந்தன்.
“பெரியவங்க சொன்னாங்க… நல்லநாள் கிழமைன்னு சொல்லி இந்த விசயத்துக்கு கம்பெல்சன் இருக்கக்கூடாது சாலா! எல்லாம் தானா நடக்கணும், சொல்றது புரிஞ்சுதா?” அமைதியாக கேட்க, புரிந்ததாக தலையசைத்துக் கொண்டாள்.
எந்த உறுத்தலும் இல்லாமல் அருகருகில் படுத்தும் சரியாக உறக்கம் வந்தபாடில்லை. ஏதோ ஒரு இடையூறை இருவருமே அனுபவித்தனர்.
“ரவி… தப்பா எடுத்துக்காம வெளியே போறீங்களா எனக்கு டிரெஸ் சேஞ்ச் பண்ணிகிட்டதான் தூக்கம் வரும்.” என்றவள், அவனை பால்கனியில் அனுப்பி வைத்து பத்து நிமிடத்தில் உள்ளே அழைத்தாள்.
இவன் உள்ளே வந்த சமயத்தில் கட்டிலில் தொங்கிக் கொண்டிருந்த பூச்சரங்களும் எடுக்கப்பட்டு அறையின் ஒரு ஓரத்தில் ஒதுக்கப்பட்டு கிடந்தன.
“ரொம்ப டிஸ்டர்பென்சா இருக்கு. அதான் ரிமூவ் பண்ணிட்டேன்!” மெதுவாக சொல்லும் போதே கிருஷ்ணாவிற்கு கண்கள் சொக்க ஆரம்பித்திருந்தது
முன்தினம் தொடங்கிய அலங்காரம், ஆர்ப்பாட்டங்கள் நொடியும் நிற்காமல் ஒய்வு கொள்ளாமல் வரவேற்பு வரை இழுத்து பிடித்துக் கொண்டு வந்தாகிவிட்டது. அதீத அலைகழிப்பில் இருநாட்களின் தூக்கத்தை ஒன்றாய் தூங்கி விடும் முனைப்பில் இறங்கி விட்டாள் கிருஷ்ணா.
“நீங்க சொன்னது ரொம்ப சரிதான் ரவி! பாருங்க… எனக்கும் இப்பதான் அசதி தெரியுது!” என்றவள் படுத்துக்கொண்டு மறுநொடி உறங்கிப் போயிருந்தாள்.
அலங்காரத்துடன் இருந்தபோது பார்வைக்கு தென்படாத ஆர்பாட்டமில்லாத கிருஷ்ணாவின் அழகில் மெய்மறந்தவனாக சற்றுநேரம் தன்னை மறந்து அவளருகில் அமர்ந்து ரசித்தான். அவனுக்குள் இருந்த சோர்வு இப்போது பாதியாக கரைந்திருந்தது.
‘அவசரப்பட்டு தூங்கச் சொல்லிட்டோமோ?’
‘இப்ப எழுப்பினா என்ன நினைப்பா?’ என்ற யோசனைகள் உள்ளுக்குள் ஓடிய சமயத்தில் நித்திராதேவி அவனை அணைத்திருந்தாள்.
நள்ளிரவிற்கு மேல் அலைபேசி சத்தத்தில் விழித்தான் அரவிந்தன். திருமண வாழ்த்துகளை இரவில் சொல்லி கேலி பேசியது நண்பர்கள் குழுமம். அதன்பிறகு தூக்கம் தூரப்போனது.
பாதி உறக்க நிலையில் விழித்த கிருஷ்ணா, “என்ன ஆச்சு ரவி? இந்த நேரத்துல மொபைல் பார்த்துட்டு இருக்கீங்க? பேட் ஹாபிட் இது!” அவன் கையில் இருந்த அலைபேசியை பிடுங்கிக் கொள்ள முயன்றவளை கைகளால் தடுக்க, மிக அருகில் மனைவியின் அழகு அவனை தடுமாற வைத்தது.
“நீ என்னை தூங்க விட மாட்டேங்குற சாலா!” மயக்க குரலில் கூற வெட்கச் சிரிப்பில் கணவனைக் கண்டு கொண்டாள் கிருஷ்ணா.
“கைகால் மேல போட்டு தூங்கிப் பழக்கமோ?” விளையாட்டாக கேட்டாள். மின்மினி வெளிச்சத்தில் தன்னுடன் வம்பளத்துக் கொண்டிருக்கும் மனைவியின் முகம் தங்கநிறத் தாமரையாக மலர்ந்து, புன்னகை பேசிய முரல்கள் வைரமாய் ஜொலித்தன.
சற்று களைந்த தலையும் பாதி உறக்கம் சுமந்த விழிகளும் அவளை அழகோவியமாக காட்டியது. இளமையின் ஆர்பரிப்பும் உறவு தந்த உரிமையும் சேர்ந்து, அவளை அள்ளி அணைக்கும் ஆவலை அதிகப்படுத்தியது.
அவளது தளிர் கரங்களைப் பற்றிக் கொண்டவன், “பெரியவங்க பேச்சை கேக்கலாம்னு தோணுது சாலா! உனக்கு எப்படி?” என்றவன் அவளின் பிஞ்சு விரல்களுக்கு இதழ் ஒற்றியபடியே சம்மதம் வேண்டி நின்றான்.
கிருஷ்ணாவிற்கு குப்பென்று கன்னக் கதுப்புளில் கனல் பரவி நின்றது! அவனது வார்த்தைகளோடு, விரலில் இட்ட முத்தமும் பெண்ணவளின் உணர்வுகளை தட்டி எழுப்பியது.
வார்த்தைகளால் மயக்கும் மந்திரக்காரன், வசியப்பார்வையில் மென் தீண்டலில் மாயங்களை நிகழ்த்தும் வித்தைகாரனாய் நொடியில் மாறிப்போனான்.
கிருஷ்ணாவிற்கும் மறுக்கும் உணரவில்லை. எதிர்பார்த்திருந்த நிலைதான் என்றாலும் இயல்பாய் எழுந்த பெண்ணின் நாணத்தினால் அதை வெளிக்காட்டாமல் இருந்து விட்டாள்.
மெல்லிய தலைசைப்போடு, “ம்” என்ற இவளின் முனங்கலும் அவன் இதழ்களுக்குள் சிறைபட்டு சிக்கித் தவித்தது.
வன்மையில் அடித்தளமிட்டு, மென்மையில் தடம் பதித்து பெண்மையை மலர வைத்தான் கணவன். மெல்லிய ஆதரவோடு மெல்லியலாளும் இசைந்தாள்… இழைந்தாள்… நெகிழ்ந்தாள்!
முடிவில் சக்கரைத் தேவனில் பாகாய் உருகி கரைந்து கலந்திருந்தாள் சாலா! மெல்லிய சிணுங்கலும் இறுதியில் ஒலி வடிவத்தை இழந்து ஒசையற்று அடங்கிப் போனது
இளமையின் தேடல் இருவருக்கும் இருந்தது. மோகங்களை தணித்துக் கொள்ள நேரங்கள் போதவில்லை. இருவரும் விழித்தே விடியலை வரவேற்றனர். இன்பங்கள் நுகர்ந்த நேரத்தை கணித்தே ஆதவனும் துரிதமாய் இறங்கினான்.
***