பூவிதழ் – 5

பூவிதழ் – 5
அத்தியாயம் – 5
கதிரவன் கிழக்கே உதயமாகி உச்சியை நோக்கி தன் பயணத்தை மேற்கொள்ள, படுக்கையைவிட்டு எழாமல் உறங்கும் தேன்மொழியைப் பார்த்து தங்கைகள் இருவருக்கும் கோபம் வர, “அம்மா மணி பதினோன்னுக்கு மேல் ஆகிடுச்சு. ஆனால் அக்கா இன்னும் எழுதிரிக்கவே இல்ல” என்றாள் மலர்விழி.
“ஏய் அவ வாரம் முழுக்க வேலைக்கு ஓடுற. ஏதோ இன்னைக்கு ஒருநாள் வீட்டில் இருக்கிறாளே என்று கொஞ்சநேரம் தூங்க விட்டேன். அது உன்னோட கண்ணை உறுத்திடுச்சா?” என்றார் செந்தாமரை.
அந்த வீட்டில் விடுமுறை நாள் என்றாலே மலர்விழியும், மான்விழியும் சீக்கிரம் எழ வேண்டும் என்பது எழுதபடாத சட்டம். ஆனால் தேன்மொழிக்கு மட்டும் விதிவிலக்கு
பெரியவளின் பின்னோடு சமையலறைக்குள் நுழைந்த மான்விழி, “என்னம்மா தேனு அக்காவை மட்டும் தான் பெத்தாயா? நாங்க இருவரும் தவுட்டுக்கு வாங்குன பிள்ளைகளா என்ன? எங்களுக்கு மட்டும் ஓரவஞ்சனை காட்டுறீங்க” என்றாள் மான்விழி எரிச்சலோடு.
அவள் சொன்னதைக்கேட்டு சட்டுகத்தைக் கையில் எடுத்தவர், “என்ன கேட்டே, இப்போ கேளு?” என்ற கேள்வியுடன் அவள் அருகே செல்ல, மகள்கள் இருவரும் பயத்தில் இரண்டடி பின்வாங்கினர்.
“அவ நம்மளுக்காக ஓடியோடி உழைக்கிறா! அவ கொஞ்சநேரம் தூங்கியதற்கு என்னவெல்லாம் பேசறீங்க? உங்க இருவரையும் நான் நேரத்தில் எழுப்பிவிட காரணம் நீங்க காலேஜ் போற பொண்ணுங்க. ஒருநாள் தூங்கவிட்டால் மறுநாள் எழுதிருக்க சலுப்பாக இருக்கும். ஆனால் அவ அப்படி கிடையாது” என்று அந்த கோபத்திலும் விளக்கம் சொல்ல, மகள்கள் முகம் மெல்ல தெளிவடைந்தது.
அவர் போட்ட போடில் கப்சிப்பென்று வந்து ஹாலில் அமர்ந்த இருவரும் சவுண்டைக் குறைத்து வைத்து பாடல்களைக் கேட்க, அதே நேரத்தில் உறக்கம் கலைந்து எழுந்து வெளியே வந்த தேன்மொழியின் பார்வை தங்கைகளின் மீது படிந்தது.
அவர்கள் அமைதியாக இருக்க, “என்ன வானரங்கள் இரண்டும் வாலை சுருட்டிட்டு உட்கார்ந்து இருக்கு” என்றபடி இருவருக்கும் நடுவே சென்று அமர்ந்தாள்.
“அக்கா நீ தூங்கினால் மட்டும் அம்மா எதுவுமே சொல்ல மாட்டேங்கறாங்க. அதே நாங்க தூங்கினால் திட்டி தீர்க்கிறாங்க” இருவரும் தாயின் மீது குற்றப்பத்திரிகை வாசிக்க, அவளின் உதடுகளில் புன்னகை அரும்பியது.
“அம்மா அப்படித்தான் திட்டுவாங்க. அதை எல்லாம் காதில் வாங்காதீங்க. உங்களுக்குத் தூக்கம் வந்தால் தூங்குங்க” என்று சொல்லிவிட்டு நேராக சமையலறைக்குச் சென்றாள்.
அங்கே கறிக்குழம்பு அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்க, “அம்மா அவங்களை சும்மா தீட்டாதீங்க. பாவம் சின்னப்பொண்ணுங்க புரியாமல் பேசறாங்க” என்று தங்கைகளுக்காக சப்போர்ட் போட்டாள்.
மற்றொரு கடாய் வைத்து எண்ணெயை ஊற்றியவர், “ம்ஹும் இனிமேல் உன் தங்கச்சிங்களை நான் எதுவும் சொல்லல போதுமா, இப்போ போய் குளிச்சிட்டு வா! நம்ம நால்வரும் உட்கார்ந்து சாப்பிடலாம்” என்று சொல்ல அவளும் சரியென்று தலையசைத்துவிட்டு குளிக்க சென்றாள்.
தன்னுடைய வேலையை முடித்துவிட்டு செந்தாமரை சமையலறையைவிட்டு வெளியே வர, “தாமரை” என்ற குரல்கேட்க, “யாரு?” என்றபடி வாசலுக்கு விரைந்தார்.
வீட்டின் வாசலில் நின்றிருந்த ராமாத்தாள் பாட்டியைப் பார்த்தும் முகம் மலர, “வாங்கம்மா! உங்களைப் பார்த்தே ரெண்டு மாசத்துக்கு மேல இருக்கும். ஆமா மகனுக்கு பேரனா? பெத்தியா?” அவரை வரவேற்றபடி படபடவென்று விசாரித்தாள்.
“நான் நல்லா இருக்கேன்! பேரன்தான் பிறந்திருக்கான். அந்த புள்ளக்கு தாய் – தகப்பன் யாரும் இல்ல. அதனால தான் நான் அங்கேயே தங்க வேண்டியதாப் போச்சு” என்றவர் சோபாவில் அமர, மான்விழி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
அதை வாங்கி பருகிய ராமாத்தாள், “ரெண்டு பேரோட படிப்பு எப்படி போகுது? ஆமா நம்ம தேனு எங்கே ஆளையே காணோம்” என்று அவர் ஆர்வமாக விசாரிக்க, “அக்கா குளிக்க போயிக்காங்க பாட்டி” என்றாள் மலர்விழி.
“அப்புறம் என்னம்மா விஷயம்?” என்று செந்தாமரை விசாரிக்க,
“நான் பழையபடி பூ விற்கலாம்னு இருக்கேன். நீதானே எல்லாப்பூவும் நல்லா கட்டுவே அதுதான் மார்கெட்டில் உதிரிப்பூ வாங்கிய கையோடு உங்க வீட்டுக்கு வந்தேன்” என்று அவர் வீட்டிற்கு வந்த விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் தேன்மொழி.
நடுஹாலில் அமர்ந்திருந்த ராமாத்தாள் பாட்டியைப் பார்த்தும், “என்ன பாட்டி எங்களை எல்லாம் ஞாபகம் இருக்கா? இல்ல பேரனைப் பார்த்தும் பேத்திகளை எல்லாம் மறந்துட்டீங்களா?” என்றாள் புன்னகையுடன்.
அவளின் கையைப்பிடித்து இழுத்து அருகே அமர வைத்தவர், “நான் எங்க போனாலும் மனசு எல்லாம் என் பேத்திகள் மேலதான் இருக்கும். பசங்களும், பிள்ளைகளும் தங்களோட தேவைக்கு பெத்தவங்களைத் தேடும் காலம் இது. என் பேத்தி அந்த ரகம் இல்ல என்பதால் உன்மீது மட்டும் தனி பாசம்” என்றவர் அவளின் கன்னம் கிள்ளி முத்தமிட, தேன்மொழி முகம் பூவாய் மலர்ந்தது.
பிறகு அவளிடம் கூறி வாங்கி வந்த பூவைக் கொடுத்துவிட்டு, “சாயங்காலம் பூ வேணும் தாமரை. முடிந்தவரை நாலுமணிக்குள் கட்டிடுங்க. இன்னைக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை” என்றார் தயக்கத்துடன்.
“விடுங்க பாட்டி நானும் இன்னைக்கு வீட்டில்தானே இருக்கேன். நாங்க நாலுபேரும் சேர்ந்து கட்டிக் கொடுக்கிறோம்” என்ற தேன்மொழி கூற, அவரின் முகம் பிரகாசமானது.
“சரி அப்போ கிளம்பறேன். நீங்க பூவைக் கட்டிவிட்டால் நேராக வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்திடு தேனு” என்று சொல்லிவிட்டு அவர் விடைபெற நினைக்க, “அம்மா இருங்க சாப்பிட்டு போங்க” என்று உபசரித்தார் தாமரை.
“நீ கேட்டதே போதும் தாமரை. முதலில் பிள்ளைகளுக்கு சொத்தைப் போடு. நான் மீதம் இருக்கும் சுண்டலைக் கொண்டுபோய் நம்ம இந்துமதி அம்மாவிடம் கோர்க்க சொல்லி கொடுத்திட்டு போறேன்” என்றவர் அங்கிருந்து கிளம்ப, மற்ற நால்வரும் வாசல்வரை சென்று வழியனுப்பி வைத்தனர்.
அவரை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்த செந்தாமரை, “இந்த பூக்கட்டும் வேலை இல்லாமல் எனக்கு பைத்தியமே பிடிச்சிடுச்சு தேனு. அதுமட்டும் இல்லாமல் பாட்டி கொடுக்கும் காசு அவசரத் தேவைகளைக் கவனிக்கப் பயன்பட்டது. இந்த இரண்டு மாதமும் வீட்டு செலவுகளில் இருந்து கையிருப்பு பிடிக்கவே முடியல” என்றவர் அவர் கொண்டு வந்த பூக்களை ஆராய்ந்தார்.
மல்லிகை, முல்லை, செவ்வரளி மற்றும் துளசி கட்டும் இருக்க, “தேனு நீ மல்லிகைப்பூவைக் கட்டிடு. மலரு முல்லையைக் காட்டிடுவாள். சாமி பூவை நானும் மானுவும் காட்டிவிடுகிறோம்” என்று அவரவருக்கு தனியாக வேலையைப் பிரித்துக் கொடுத்துவிட்டு திரும்பும்போது மணி ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.
“சரி வாங்க எல்லோரும் சாப்பிட்டு வேலையைப் பார்க்கலாம்” என்று செந்தாமரை மகள்களுக்கு உணவைப் பரிமாறிட, அதை உண்டு முடித்த கையோடு ஆளுக்கொரு திசையில் அமர்ந்து பூவைத் தொடுக்க தொடங்கினர்.
வீட்டிற்குள் நிலவிய அசாத்தியமான அமைதியைக் கவனித்த மலர்விழி செல்லில் பாடல் ஒலிக்கவிட, ஆட்டோ கிராப் படத்தில் இருந்து ஒவ்வொரு பூக்களுமே பாடல் பாடியது. அது தேன்மொழியின் மனதிற்கு மிகவும் நெருக்கமான பாடல்.
“உளிதாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்…
வலிதாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்…
யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்…
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்” என்று தன்னை மறந்து பாடியவளின் விழிகள் அவளையும் அறியாமல் விழிகளில் கண்ணீர் பெருகியது.
ஏனோ அந்த பாடல்வரிகள் கேட்கும்போது துவண்டுபோன உள்ளம் கூட புத்துயிர் பெறும். அதனால் அந்த பாடலை சலிக்காமல் பலமுறை கேட்பாள். திடீரென்று அவள் அழுவதைக் கவனித்த மான்விழி ஏதோ கேட்க வாய்திறக்க, வேண்டாம் என்று சைகை செய்துவிட்டாள் மலர்விழி.
செந்தாமரை சட்டென்று நிமிர்ந்து தேன்மொழியைப் பார்த்து, “நடுத்தர வாழ்க்கையில் சில அடிகளையும், வலிகளையும் தாங்கித்தான் ஆகணும். அதனால் நடந்ததை நினைத்து வருத்தப்படாமல் வேலையைக் கவனிம்மா” என்று கனிவாக கூற, சட்டென்று விழிகளைத் துடைத்துக்கொண்டு புன்னகைக்க முயன்றாள்.
அவள் மனதில் என்ன இருக்கிறது என்பது அந்த ஆண்டவனுக்கு மட்டும்தான் தெரியும். அவளை வெளியிருந்து பார்க்கும் அனைவரும், ‘இவளுக்கென்ன அம்மா நல்லா சமைத்துப் போடுற. இவ கட்டுன துணி அழுக்காமல் வேலைக்குப் போயிட்டு வருகிறாள்’ என்று நினைப்பார்கள்.
எந்தவொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உள்ளது. அதுபோலவே தேன்மொழியின் சந்தோசமான ஒருபக்கம் மட்டுமே நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவளின் மறுப்பக்கத்தில் மறைந்து கிடக்கும் வலியும், அதன் வீரியமும் மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
“காலம் ஒரு சிறந்த ஆசான்” என்பதற்கு மிகச்சரியான உதாரணம் தான் தேன்மொழி. உளிதாங்கும் கற்கள் போல அடிவாங்கிய அவள் மனம் பக்குவபட்ட சமயத்தில், விதி மீண்டும் அவள் வாழ்க்கையில் விளையாட நினைத்தது கலைச்செல்வன் ரூபத்தில்!
சூரியன் தன்னுடைய பணியினை இனிதாக முடிக்க, மாலைநேரம் மெல்ல மயங்கிக் கொண்டிருந்தது. பறவைகள் அனைத்தும் கூடுகள் நோக்கி பறந்து செல்ல, அந்த ரம்மியமான மாலைப்பொழுதை ரசித்தபடி டிராக்டரில் ஏறி அமர்ந்தான்.
இந்துமதியின் வீட்டில் கட்டிட வேலைகள் முடிந்திருக்க, அங்கே உடைக்கப்பட்ட கற்களை அள்ளிச்செல்ல டிராக்டரை ஓட்டிக்கொண்டு வந்தான் கலை.
அவன் வண்டியை நிறுத்தி கீழே இறங்கிட, “தம்பி உடைக்கப்பட்ட கான்கிரீட் கற்கள் எல்லாமே எடுத்துக்கோங்க” என்று சொல்ல அவனும் சரியென்று தலையசைத்து, உடன் வந்திருந்த வேலையாட்களிடம் அவற்றை வண்டியில் ஏற்றும்படி பார்வையால் கட்டளையிட்டான்.
அவனது பார்வையைப் புரிந்துகொண்டு அவர்கள் வேலையில் ஈடுபட, “இந்துமதி தம்பிக்கு டீ போட்டு கொண்டு வந்து கொடும்மா” என்று சொல்லிவிட்டு, தன் வேலையைக் கவனிக்க சென்றார்.
அவர் உள்ளே சென்ற கொஞ்சநேரத்தில் கையில் கிளாஸுடன் வந்த இந்துமதி, “என்ன மாமா எப்படி இருக்கிற? கோவில் திருவிழாவில் ஒரு பொண்ணு கையால் அடிவாங்கியதாக கேள்விப்பட்டேனே? உண்மையா?” என்றாள் குறும்புடன்.
அவள் கொடுத்த டீயை வாங்கிப் பருகிய கலைச்செல்வன் திடுக்கிட்டு, “ஏய் இந்த விஷயம் உனக்கு எப்படி தெரியும்?” என்றான்.
‘கோவிலில் தனக்கு நடந்த விஷயம் இவளுக்கு எப்படி தெரிந்தது’ என்றவன் தீவிரமாக சிந்திக்க, “நான்தான் இரண்டு கண்ணால் பார்த்தேனே! அந்த அக்காவிடம் அடிவாங்கிட்டு நீ திருதிருவென்று விழித்ததையும் கவனிச்சேனே” அவன் மனநிலை அறியாமல் பேசிக்கொண்டு இருந்தாள் இந்துமதி.
அவளிடம் எப்படியும் உண்மையை வாங்கிவிடும் நோக்கத்துடன், “நீ அந்த பெண்ணை நேரில் பார்த்து இருக்கிறாயா?” என்றவன் நயமாக விசாரிக்க, சட்டென்று சுதாரித்தாள் சின்னவள்.
தேன்மொழி மிரட்டியது திடீரென்று ஞாபகம் வர, “அந்த அக்காவை எனக்கு தெரியும். ஆனால் உன்னிடம் உண்மையைச் சொன்னால் நான் தமிழை லவ் பண்ற விஷயத்தை வீட்டில் சொல்லிடுவேன்னு சொல்லுச்சு. இப்போ நான் அந்த அக்காவை மாட்டிவிட்டால், அந்த அக்கா என்னை எங்கப்பாகிட்ட போட்டு கொடுத்திடும்” தன்னைப் பற்றிய உண்மையை உளறுவதைக் கேட்டு கலைச்செல்வன் உதடுகளில் புன்முறுவல் பூத்தது.
“இப்போ நீ உண்மையைச் சொல்லல. நான் உங்க அப்பாவிடம் உண்மையைச் சொல்லிவிடுவேன்” என்றவன் மிரட்ட, சட்டென்று நிமிர்ந்து அவனை நோக்கினாள் இந்துமதி.
தன் காதல் விவகாரம் வெட்டவெளிச்சமானத்தை உணராமல், “நான் லவ் பண்றது யாரைன்னு உங்களுக்கே தெரியாதே” என்றாள் நக்கலாக சிரித்தபடி.
“இப்போதானே சொன்னே தமிழை லவ் பண்றேன்னு. அதை நான் உங்க அப்பாவிடம் சொல்றேன்” என்றவன் வீட்டை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தான்.
சட்டென்று அவனை திசைமாற்ற நினைத்து, “அந்த அக்காவைத் திருப்பியடிக்க துப்பில்ல. இதில் என் காதல் விவகாரத்தைப் பற்றி எங்கப்பாவிடம் சொல்ல வந்துட்டாரு” என்று கேலி செய்துவிட்டு அங்கிருந்து ஓட்டமெடுக்க, அவனுக்கு சுர்ரென்று கோபம் தலைகேறியது.
“அடிக் கழுதை என்னையே இந்தப் பேச்சு பேசறீயா? இருடி மகளே வரேன்!” என்றபடி அவளின் பின்னோடு ஓடினான்.
அதே சமயம், “அம்மா இதை கொடுத்துட்டு வரும்போது கடையில் மாவு வாங்கிட்டு வந்துவிடுகிறேன்” என்று ராமாத்தாள் வீட்டில் கட்டிய பூவைக் கொடுக்க கிளம்பினாள் தேன்மொழி.
அப்போது அந்த வழியாக ஓடிவந்த இந்துமதி, “மாமா நீ தேவை இல்லாமல் என்னை விரட்டிட்டு வந்து கன்னத்தை புண்ணாக்கிக்காதே சொல்லிட்டேன்” என்று அவள் பொய்யாக மிரட்டினாள்.
“இன்னைக்கு நீ கையில் சிக்கின மகளே கைமாதான்” என்றவன் அவளை விரட்டிகொண்டு பின்னோடு ஓடிவர, திடீரென்று பக்கத்தில் இருந்த குறுக்குத்தெருவிற்குள் புகுந்து ஓடியவள் நொடியில் அங்கிருந்து மாயமாக மறைந்தாள்.
ஓரிடத்தில் ஒளிந்து நின்றிருந்த இந்துமதி மெல்ல எட்டிப்பார்க்க, அவளைக் கண்டுகொண்ட கலைச்செல்வன், “இருடி மகளே வரேன்” என்று மீண்டும் அவளைத் துரத்த பதட்டத்தில் எதிரே வந்த யாரும் மீதோ மோதியவள், “சாரிக்கா” என்று கத்திவிட்டு முன்னே ஓடினாள்.
“இவ எதுக்காக இப்படி ஓடுற?” என்ற கேள்வியுடன் தேன்மொழி நடக்க, இந்துமதியை விரட்டிக்கொண்டு ஓடிவந்த கலைச்செல்வன் அவள் கையில் இருந்த பூக்கூடையைக் கவனிக்காமல், “நில்லுன்னு சொல்றேன்” என்றபடி அவளின் இடதுகையைப் பிடித்து இழுத்தான்.
அடுத்த நிமிடமே, “ஏய்” என்றபடி துள்ளி திரும்பியவளின் கரங்கள் அவன் கன்னத்தைப் பதம் பார்த்தது. அவள் அடித்த அதிர்ச்சியில் கலைச்செல்வன் நிமிர்ந்து அவளின் முகம் பார்க்க, அதே நேரத்தில் அவளும் அவனைத்தான் பார்த்தான்.
‘இவதான் உன்னை அடிச்சது’ என்று உள்ளம் கத்தி கூச்சலிட, “அது எப்படி மாமா தேனு அக்கா கையில் மட்டும் அடிவாங்குறீங்க. அன்னைக்கு கோவிலில் இன்னைக்கு இங்கே…” என்றவள் உண்மையைப் போட்டு உடைத்தாள்.
தேன்மொழி அதிர்ச்சியில் சிலையென உறைந்துவிட, ‘என்னிடம் இதைப்பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லாமல் இருந்திருக்கிறாளே, இவளுக்கு எம்பூட்டு நெஞ்சழுத்தம் இருக்கும்” விழிகள் இரத்தமென சிவக்க அவளை ஏறிட்டான் கலைச்செல்வன்.