ஜீவநதியாக நீ…
அத்தியாயம் – 8
மாலை மயங்கி இருள் கவ்வி இருந்தது.
ஜீவா தாரிணி திருமணம் நண்பர்கள் உதவியால் சிறப்பாக முடிந்திருந்தது.
ஜீவா கண்களில் கொஞ்சம் நிம்மதி விரவி இருந்தது.
‘தாலியையும் கட்டிட்டேன். கல்யாணத்தை ரெஜிஸ்டெரும் பண்ணிட்டேன். இனி பயந்து ஒளிந்து வாழ வேண்டாம்.’ மாடியில் சமையலறையோடு ஒற்றை அறை கொண்ட வீட்டில் பாய் விரித்து படுத்தபடி யோசித்து கொண்டிருந்தான் ஜீவா.
நண்பன் ஒருவன் மூலம் சில ஆயிரம் கடன் வாங்கி, சிறியதாக ஒரு வீட்டில் குடியேறியுள்ளார்கள் ஜீவாவும் தாரிணியும். சின்ன வீடு தான். தண்ணீரை வெளியிருந்து தான் எடுத்து வர வேண்டும். ஆனால், வீட்டிற்குள்ளே குளியலறை இருந்தது. தாரிணி மிகவும் வசதியாக வளர்ந்தவள். இந்த தேவையையாவது பூர்த்தி செய்ய வேண்டும் என்று சில நூறு ரூபாய் அதிகமாக இருந்தாலும், இந்த வீட்டில் குடியேற முடிவு செய்தான் ஜீவா.
அத்தியாவசியமான பொருட்களை வாங்கி கொண்டார்கள்.
‘இன்னும் சில நூறு ரூபாய் மீதி இருக்கு. ஒரு வேலை பார்க்கணும்.’ அவன் தன் சட்டை பையில் இருந்த சில நூறு ரூபாய் தாள்களை தடவிக் கொண்டான்.
காதல் சோறு போடாது. காதல் கஞ்சி ஊத்தாது. காதல் குடியிருக்க மனம் தருமேயொழிய குடியிருக்க வீடு தராது போன்ற நிதர்சனத்தை ஜீவா உணர்ந்திருந்தாலும், அந்த நிஜம் அவன் முகத்தில் அறையும் பொழுது அவனுள் மெல்லிய பயம் எட்டி பார்த்தது.
‘நான் மெட்ராஸில் வேலை தேடணும். அதுக்கு முன்னாடி நான் அம்மா, அப்பா, கீதாவை பார்க்கணும். எல்லாரும் எப்படி இருக்காங்கன்னு தெரியலை.’ அவன் சிந்தையை கலைத்தது அவளின் கொலுசின் ஓசை.
அவன் கண்கள் அவள் பக்கம் திரும்பியது. அவள் பாத விரல்களில் சில நாட்களுக்கு முன் பூசிய நகப்பூச்சு. திருமணத்திற்கு என்று எந்தவித சிறப்பு அலங்காரமுமில்லை. இருந்தும், அந்த வழவழப்பான கால்கள் மென்னடையாய் அவன் அருகே வந்தது. அவள் அசைவுக்கு ஏற்ப, அந்த கொலுசொலியும் அவன் அருகே வந்தது.
அவன் சட்டென்று எழுந்து நின்றான். அவன் எழுந்ததும், அவள் சுவரோடு சாய்ந்து நின்று கொண்டாள். அவன் வேலை, பணம் அவர்கள் குடித்தனம் நடத்த வேண்டிய முறை, அவர்கள் வாழ வேண்டிய முறை என்று ஏதேதோ பேச நினைத்த ஜீவாவின் அத்தனை எண்ணங்களும் அவளை அருகாமையில் பார்த்ததும் மாயமாய் மறைந்து போயின.
சேலை அணிந்து நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்திருந்தாள். அவன் பார்வை பல மொழி பேசியது. அவன் எதுவும் பேசவில்லை. அவன் காலடியோசை அவளை நெருங்கியது. அவன் காலடியோசையில், அவள் பாதங்கள் தரையோடு பொதிந்து கொண்டன. நெருக்கம் காட்டிய அவன் காலடியோசையில், அவள் கொலுசொலி மௌனித்து கொண்டன.
அவன் தன் ஆள் காட்டி விரலால் அவள் முகத்தை நிமிர்த்தினான். அவள் பேச வேண்டும் என்று எண்ணினாள். அவனும் பேசத்தான் எண்ணினான்.
ஆனால், அவர்கள் வார்த்தைகள் மற்றொருவர் அருகாமையில் மயங்கி நின்றன.
அவள் விழிகள் அவனது அருகாமையில் படபடத்தன. அவள் அணிந்திருந்த கம்மலின் தொங்கட்டான் அஞ்சுவது போல் அவன் மூச்சு காற்றில் கிடுகிடுவென ஆடியது.
அவள் அச்சத்தை அறிந்தவன் போல், அவள் நெற்றியில், ‘நான் இருக்கிறேன்…’ என்பது போல் அவன் இதழ் பதிக்க, அவள் அவனிடம் பல விஷயங்கள் பேசவே துடித்தாள்.
பேச துடித்த அவள் அதரங்கள் வார்த்தைகள் வரமால் தடுமாற, அவன் அவை பேசவே வாய்ப்பு கொடுக்கவில்லை.
அவன் இதழின் தீண்டலில், அவள் வேறு உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தாள்.
காதல் அவர்களுக்கு நிதர்சனத்தை காட்ட தாமதிக்க ஆரம்பித்தது. அவள் இடையை சுற்றி வளைத்த அவன் கைகள் அவனுக்கு பெண்மையை காட்ட விழைய, அவன் கைகளின் தீண்டல், அவன் சுவாச காற்று அவளுக்கு இளமை பாடத்தை காட்ட விழைய முதலில் சுதாரித்துக் கொண்டாள் தாரிணி.
“நான்… நான்…” அவள் தடுமாறியபடி வேகமாக விலக, எதையோ இழந்த அவன் முகத்தில் கோபம். சட்டென்று அவன் இன்னும் விலகி நின்று கொண்டான்.
அவன் முகத்தில் தெரிந்த கோபத்தில் தாரிணி பயந்தே போனாள். “லவ் யூ ஜீவா…” ஓடி சென்று அவனை கட்டிக்கொண்டாள்.
“நான் உன்னவள்” என்பது போல் இருந்தது அவள் செய்கை.
அவளின் செய்கையில் அவன் கோபம் அடங்கியது. அவனும் அடங்கி போனான்.
“சாரி…” அவன் வார்த்தைகளும், மனமும் ஒரு சேர மன்னிப்பு கோரியது.
“என்ன ஜீவா சாரி எல்லாம் சொல்ற? உனக்கு இல்லாத உரிமையா? நம்ம காதல் விஷயம் வீட்டுக்கு தெரிய போக, எங்க வீட்டில் என் படிப்பை நிறுத்திட்டு அவசர கலயாணம் பண்ண போனாங்க. அதை தடுக்க தானே நாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நான் என் படிப்பை முடிக்கணும். நான் அதை தான் சொல்ல வந்தேன்” அவள் முழுதாக சொல்ல முடியாமல் மென்று விழுங்கி முடித்தாள்.
“புரியுது தாரிணி. நீ படிக்கணும். நானும் ஒரு வேலை தேடணும்.” அவன் யதார்த்தத்திற்கு திரும்பி இருந்தான்.
அவள் அவனை விட்டு விலகவில்லை. எந்த விலகளும் அவர்களுக்கு இடையில் சிறிய இடைவெளியை கூட உருவாக்கி விட கூடாது என்ற அச்சம் அவள் செய்கையில் இருந்தது.
அவள் உள்ளுணர்வை உணர்ந்தவன் போல், அவளை தன் பிடிமானத்தில் நிறுத்திக் கொண்டான்.
அவளை தோளோடு நட்பாக அணைத்து தன் பிடிக்குள் வைத்துக் கொண்டான். ‘நான் என்றும் உனக்கு ஆதரவு…’ என்று சொல்லாமல் சொல்லியது அவன் செய்கை.
ஆதரவான அருகாமையில் இளமைக்கும் காதலுக்கும் இடையில் அவர்கள் வாழ்வின் எதிர்காலத்தை பற்றி பேச ஆரம்பித்தார்கள்.
* * *
கீதா ரவியின் வீட்டின் பிரம்மாண்டத்தில் மிரண்டிருந்தாள். ‘இவங்களுக்கு ஊர்ல தான் பெரிய வீடு இருக்குனு தெரியும். இங்கையும் இவ்வளவு பெரிய வீடா?’ அவள் கண்களை சுழலவிட்டாள்.
கீதாவின் வீட்டில் கஷ்டம் என்று கிடையாது. ஆனால், இந்த செழிப்பு துளி கூட கிடையாது.
அவள் வீட்டின் அளவை, பொருட்களை, செழிப்பை அளவிட ரவியின் கண்கள் அவளை கூர்மையாக பார்த்தன.
‘இந்த வீட்டில் வாழ்ந்த தாரிணி எப்படி அண்ணன் கூட சமாளிப்பா?’ என்ற சந்தேகம் அவளுள் எழ, அதை படித்து விட்டான் அவள் கணவன்.
“என்ன கீதா? தாரிணி எப்படி உங்க அண்ணன் கூட வாழ போறான்னு யோசிக்குறியா? இதுல ஒரு துளி கூட உங்க அண்ணனால கொடுக்க முடியாதுன்னு யோசிக்குறியா?” அவள் அருகே வந்து அவள் காதில் ரகசியமாய் ஏளனம் பேசினான் ரவி.
தன்னை ரவி கண்டுகொண்டதில் ஒரு நொடி தடுமாறினாள் கீதா. சட்டென்று சுதாரித்துக் கொண்டு மறுப்பாக தலை அசைத்தாள்.
“இவ்வளவு இருக்கிற வீட்டில் நீங்க கொடுக்க முடியாத ஏதோவொன்றை என் அண்ணன் கொடுத்திருக்கானே. என் அண்ணன் கெட்டிக்காரன்னு தான் யோசிச்சேன். ” அவள் நமட்டு சிரிப்போடு கூற, ரவி கோபமாக மடமடவென்று வீட்டிற்குள் இருக்கும் படியில் ஏறி அவன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
புஷ்பவல்லி கீதா அருகே வந்தார். தன் மருமகளை மேலும் கீழும் பார்த்தார்.
‘கெட்டிக்காரியாகத்தான் இருக்கனும்’ அவள் மனம் தன் மருமகளை மெச்சிக்கொண்டாலும் அவளை பாவமாக பார்த்தது.
“பல சடங்குகள், ரிசெப்ஷன் தொடர்ந்து நின்னு ரொம்ப சோர்வா இருப்பீங்க. போய் ரெஸ்ட் எடு கீதா” அவர் பரிவாக கூற, அவள் தன் மாமியாரை புன்னகையோடு பார்த்து தலை அசைத்தாள்.
கீதா முன்னே நடக்க, “கீதா…” அவர் இப்பொழுது தயக்கமாக அழைத்தார்.
அவள் திரும்பி பார்க்க, “ரவி நல்லவன் தான். இப்ப கொஞ்சம் கோபத்தில் இருக்கலாம். ஆனால்…” அவர் தடுமாற, “நான் பார்த்துகிறேன் அத்தை” அவர் தடுமாற்றத்தை காண சகியாமல் முற்றுப்புள்ளி வைத்தாள் கீதா.
இப்பொழுது அவர் புன்னகைத்து கொண்டு கிளம்பினார்.
கீதா, ரவி சென்ற அறைக்குள் நுழைய சுவரில் சாய்ந்தபடி சிகரட்டை பிடித்தபடி சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.
“அம்மா என்ன சொன்னாங்க?” அவன் கேள்வி கூர்மையாக வந்து விழுந்தது.
“என் மகன் ரொம்ப மோசமானவன். உன் நிலைமை ரொம்ப பாவம். உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பாவமாவும் கவலையாவும் இருக்குனு சொன்னாங்க” கீதா அவனுக்கு எதிரே இருந்த சுவரில் அவனை போலவே சாய்ந்து நின்று கொண்டு கூறினாள்.
அவள் கூறிய பதிலில் அவனுக்கு புன்னகை தோன்றியது. மீசைக்கு கீழே இருந்த அவன் உதட்டை அழுந்த கடித்து தன் சிரிப்பை மறைத்துக் கொண்டான்.
“ம்…” அவன் தலையை மேலும் கீழும் அசைத்தான்.
“அதுக்கு மேடம் என்ன சொன்னீங்க?” அவன் அவளை அளவிட்டபடி கேட்டான்.
அவன் இன்று கட்டிய புதுத்தாலி. அவன் உரிமையாய் இட்ட குங்குமம். அவன் அழுந்த பற்றி அணிந்த மெட்டி.
‘இவள் என்னவள்’ அவன் அறிவு மனம் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்துவந்து உறுதியாக அவனிடம் கூறியது.
மருதாணியிட்ட அவள் பாதத்தில் அவன் கண்கள் நிலைத்து நின்றது. அழுத்தமாக நின்று கொண்டிருந்தாள். அவள் உறுதியை அவள் நின்ற விதம் கூற, அவன் அழுத்தமான காலடிகளோடு அவள் அருகே வந்தான்.
சிகரெட் வாசனையில் அவள் முகம் சுளித்தாள். அவள் முகம் அஷ்டகோணலாக மாறியது.
அவன் அவள் அருகே அசையாமல் நின்று கொண்டிருந்தான்.
“எனக்கு சிகரெட் வாடை பிடிக்காது” அவள் குரலில் இப்பொழுது கண்டிப்பும், அதிகாரமும் இருந்தது.
அவன் விலகி நின்று கொண்டு அவளை ஒரு நொடி பார்த்தான். இப்பொழுது அவன் முகத்தில் புன்னகை வந்தமர்ந்து. ரவி அந்த புன்னகையை மறைக்கவில்லை.
‘இப்ப எதுக்கு சிரிக்கிறான்?’ கீதா அவனை கூர்மையாக பார்த்தாள்.
தன் சிகரெட்டை பட்டென்று அருகே இருந்த அஷ் ட்ரையில் அணைத்து அதில் தூக்கி எறிந்தான்.
அவர்கள் அறையில் இருந்த குளியலறையில் முகத்தை கழுவிக்கொண்டு, அவன் மேஜையில் இருந்த வாசனை நிறைந்த பப்பில்காமை சுவைத்தான்.
‘இவன் இத்தனை நல்லவனா?’ அவள் விழிகள் அவனை சந்தேக பார்வை பார்த்தது.
அவன் மென்றபடியே அவள் முன்… இல்லை அவளின் அருகாமையில் இரு பக்கமும் தன் கைகளை அவள் தோள்கள் மேல் வைத்தபடி, “இப்ப ஓகேவா?” அவன் புருவம் உயர்த்தினான்.
“என்ன?” கீதா கேட்க, “நீ தானே சிகரெட் வாடை பிடிக்காது இல்லைனா என்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்னு சொன்னியே” அவள் சொல்லாததையும் அவன் சேர்த்தே சொன்னான்.
அவன் அருகாமையில் அவள் இதயம் சற்று வேகமாக துடித்தது. இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு, “உங்களுக்கு காது சரியா கேட்காதுன்னு உங்க அம்மா அப்பா சொல்லவே இல்லையே?” அசராமல் பதில் கூறினாள் கீதா.
அவன் இப்பொழுது அவன் தைரியத்தை அவள் பேசும் விதத்தை சற்று தள்ளி நின்று ரசித்து சிரித்தான். இன்று பிடிக்காத மனைவியாக இருந்தாலும், அவன் காதலியாயிற்றே!
“அம்மா கிட்ட நீ என்ன சொன்ன?” அவள் விட்ட பேச்சை அவன் தொடர்ந்தான். அவனுக்கு அவளிடம் பேச பிடித்திருந்தது.
“உங்க பையன் எல்லாம் எனக்கு ஜுஜுபி. நான் பார்த்திக்குறேன். நீங்க கவலை படாதீங்கன்னு சொன்னேன்” அவன் விலகி நின்றதில் கூடுதல் தைரியம் பெற்றவளாக அவள் அசட்டையாக கூற,
அவன் அவர்கள் கதவின் அறையை தாளிட்டு, அதன் மீது சாய்ந்து நின்றான்.
“உன் பேச்சு உனக்கே ரொம்ப அதிகமா தெரியலை?” அவன் கேட்டுக்கொண்டே அவள் முகத்தை ஒற்றை விரலில் தூக்கினான்.
அவளிடம் மௌனம். “நான் உன்னை…” அவன் அவளை நெருங்க, “உங்கள் முன்னாள் காதலி என்ன ஆனாள்?” அவள் குரல் குத்தலாக ஒலித்தது.
அவன் விலுக்கென்று நிமிர்ந்தான். ‘நீ தானே அந்த காதலி.’ அவன் மனம் அவளை ஆசையாக தழுவி கொள்ள விழைய, ‘இவன் என் தங்கையின் வாழ்க்கையை அழித்த ஜீவாவின் தங்கை.’ எண்ணம் மேலோங்க அவன் அதிர்ந்து விலகி நின்று கொண்டான்.
“உண்மை சுடுதோ?” அவள் குரலில் ஏளனம்.
“இல்லை நிதர்சனம் புரியுது. நீ தான், முன்னாள் காதலின்னு சொல்லிட்டியே” அவன் மீண்டும் அவள் அருகே வர, அவளுள் இப்பொழுது பதட்டம்.
அவன் விரல் இப்பொழுது அவள் முகத்தை வருடியது. “காதலி யாரா இருந்தால் என்ன? மனைவி நீ தானே?” அவன் தீண்டலில் இப்பொழுது அழுத்தம் கூடி இருந்தது.
அவன் விரல்கள் அவள் இதழ்களை தீண்ட, அவள் முகம் அசூயை காட்டியது.
‘இருளில் ஆண்களுக்கு எல்லா பெண்களும் ஒன்று தான்’ என்று எங்கோ படித்த வரிகள் அவள் நினைவுக்கு வர, அதை அவள் கூற, அவன் படக்கென்று விலகினான்.
‘இவள் என் காதலி…’ மற்ற எல்லாம் பின்னுக்கு சென்றன.
‘இவள் என் மனைவி. திருமணம் கோணலாக நடந்திருக்கலாம். ஆனால், என் வாழ்வு கோணலாக ஆரம்பிக்கவே கூடாது’ கண்மூடி அமர்ந்தான்.
அவன் விலகியதால் அவளிடம் நிம்மதி பெருமூச்சு.
“நான் கெட்டவன் இல்லை. உன் அண்ணனை விட நான் நல்லவன்னு நீ சொல்ற காலம் வரும்.” அவன் கூறிவிட்டு அந்த அறையோடு ஒட்டி இருந்த அறைக்குள் அவன் செல்ல எத்தனிக்க,
“என் அண்ணனை நான் உங்க கிட்ட குறை சொல்லும் நாள் வரும்முன்னா, அன்னைக்கு இந்த கீதா செத்துட்டான்னு அர்த்தம்” கூறிக்கொண்டு மெத்தையில் சட்டமாக அமர்ந்தாள்.
அவள் பேச்சில் ரவியின் நெற்றி சுருங்கியது. ‘திருமணம் முடிந்தாகிவிட்டது. இவளும் அஞ்சி நடப்பவள் போல தெரியவில்லை. அடுத்து என்ன?’ என்ற கேள்வி ரவிக்கு எழும்பியது.
நதி பாயும்…