பூவுக்குள் பூகம்பம் 12

பூவுக்குள் பூகம்பம் – 12

 

தனது வேலை முடிந்தது என்று கிளம்ப ஆயத்தமானவனை பரிதாபமாகப் பார்த்தபடி இருந்தவள், “மகி… கொஞ்சம் நில்லேன்” முதன் முறையாக தனக்காக அவனது உதவியை நாடிச் சென்று மறித்தாள்.

“நீ சொல்ற மாதிரிப் பண்ணா… பின்னாடி எதாவது பிரச்சனையெதுவும் வந்திராதுல்ல…” தயக்கத்தோடு கேட்டாள் சௌமி.

 “நான் வெளியாளுங்க போட்டோ உங்களுக்கு அனுப்ப நினைக்கல. பிக் நான் அனுப்பறதா இருந்தது என்னோட அண்ணாவோடதுதான்!  அவங்களால உங்களுக்கு… எப்பவும் எந்தப் பிரச்சனையும் கண்டிப்பா வராது.  போதுமா!” என்று உறுதி கூறிவிட்டு சிபியின் படத்தை சௌமியின் எண்ணுக்கு அனுப்பினான் மகி.

அவன் அனுப்பிய படத்தை ஒழுங்காகக்கூட சௌமி பார்க்கவில்லை.  சீனியரான ரஞ்சன் வந்து, “எல்லாம் எஸ்கேப்பிங்தான… அப்டி ஒருத்தவன் இருந்திருந்தா அவன் போட்டோவைக் காட்டியிருப்ப… இல்லைங்கற..தா..ல..” எனப் பேசிக் கொண்டிருந்தவனிடம்…

“என்னோட பர்சனல் யாருக்கும் அவசியமில்லாததுன்னுதான் இதுவரை காட்ட வேணானு வச்சிருந்தேன். ஆனா இப்ப வேற வழியில்லாம உங்கட்ட காட்டும்படி ஆகிருச்சு” என்று தனது அலைபேசி கேலரியில் இருந்த சிபியின் படத்தை எடுத்துக்காட்ட… என்னோட நம்பருக்கு அனுப்பு என்றவனிடம் எதற்கு என்று புருவம் சுருங்க யோசனையோடு கேட்டாள்.

“நீ பொய் சொல்றியா? இல்லை உண்மைதானானு விசாரிப்போம்ல” என்று அவளை தனது எண்ணுக்கு அனுப்பச் செய்துவிட்டே விட்டான் அந்தக் கிராதகன் ரஞ்சன்.

அவனது அலைபேசிக்கு வந்த சிபியின் படத்தைப் பார்த்த ரஞ்சனுக்கு, ‘ம்ஹ்ம்… இப்டி ஒருத்தனோட கமிட்டானவ நம்மை எப்டி ஏறெடுத்துப் பாப்பா… வாய்ப்பேயில்லை! 

கோலிவுட்ல லீடிங்ல இருக்கற அஜித், விஜய்னு தொடங்கி நேத்து முந்தானேத்து வந்த ஹீரோ பயலுகளையெல்லாம் தூக்கித் திங்கற அளவுக்கு இருக்கறான். 

ஏப்ப சாப்பையா இருந்தான்னா… அவனை விட்டுட்டு என்னை ஏத்துக்கோனு கெஞ்சிக் கூத்தாடியோ இல்லை அதிகாரம் பண்ணியோ அவகிட்ட கேட்டுப் பாக்கலாம்.

இவன் இருக்கற ரேஞ்சுக்கு எனக்காக இவகிட்ட போயி அவனை விட்டுட்டு என்னை ஏத்துக்கோனு பேசுறதே வேஸ்ட்டு’ தனக்குத்தானே எண்ணிக்கொண்டவன் அதன்பின் சௌமியைத் தொந்திரவு செய்ய முயலவில்லை.

எதிரில் செளமியைப் பார்க்க நேர்ந்தாலும் அதன்பின் அவளைக் கண்டுகொள்ளாமல் கடந்து போவதை வழக்கமாக்கியிருந்தான் ரஞ்சன்.

ரஞ்சனது மாறுதலைக் கண்டு ஒருவழியாக சீனியரிடமிருந்து தப்பித்ததாக எண்ணியிருந்தாள் சௌமி.

இரண்டொரு நாளில் விசயத்தை மேலோட்டமாக தாயிடம் கூற எதிர்முனையில் அமைதி.  “ம்மா… நீங்க என்னை இன்னும் நம்பலையாம்மா?”

“இல்லை சௌமி.  இந்த வயசுல இதையெல்லாம் கடந்து வரத்தான் வேணும்.  ஆனா… நீ ஏன் அப்டி பண்ண?” என்று கேட்டவர், “அந்த போட்டோவை எனக்கு அனுப்பி வை” என்றிருந்தார் மதி.

சௌமி அனுப்பிவிட்டதாகக் கூறியதும், “இதே மாதிரி இன்னும் பல பிரச்சனைகள் வரலாம் சௌமி.  அதுக்காக, இன்னொரு பிரச்சனையில போயி மாட்டிக்கற மாதிரி எந்த விசயமும் செய்திராத… அப்பவே எங்கிட்டச் சொல்லியிருந்தா… நானே உனக்கு என்ன செய்யலாம்னு சொல்லியிருப்பேன்” என்ற தாயிக்கு புரிந்தது.

பொய்யிக்காகக்கூட தீர்த்தாவை தனது எதிர்காலக் கணவன் என்று கூறுவதை சௌமி விரும்பவில்லை என்பதுதான் அது.

ஆனால் இந்தப் பையன்தான் தனது வருங்காலக் கணவன் என்பதுபோல மகள் ஒருத்தனிடம் இந்த படத்தைக் காட்டி தப்பியிருக்கிறாள் என்றால், ஒருவேளை அவளின் மனதில்… ‘ஒருவேளை அந்தப் பையனை அவளுக்குப் புடிச்சிருக்குமோ’ எனும் நெருடல் தாயிக்கு வந்தது.

பிறகு, இத்தனை விசயங்கள் நடந்த பிறகும் மகள் அப்படி ஒரு தவறை மீண்டும் செய்யத் துணியமாட்டாள் என்கிற வாதமும் எழுந்தது.

ஆனால் அதைப்பற்றி அவளாகக் கூறட்டும் என்று விட்டுவிட்டார்.  உண்மையில் அவனை ஒழுங்காகப் பார்க்கக்கூட இல்லை என்பது சௌமிக்கு மட்டுமே தெரியும்.

படத்தில் இருந்தது ஜெயமாலினியின் மூத்த மகன் என்பதுவரை வசுமதிக்கு விசயம் விளங்கியிருந்தது.  ஆனால் சிபியின் பெயர்கூட மகளுக்குத் தெரியாது என்பது தாயிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

ஆனால் தீர்த்தா சௌமிக்கு அழைத்து பேசுவது அனைவருக்குமே தெரியும்.  அப்படியிருக்க, மகளின் இந்த நடவடிக்கை சொன்ன செய்தி, ‘மேலும் சிக்கலை உண்டு பண்ணிக்கிறாளே’ என்பதாக இருந்தது.

தீர்த்தாவைப் பற்றியும், சிபியைப் பற்றியும் மகளிடம் கேட்டறிந்துகொள்ள உரிய சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார் வசுமதி.

தான் அறிந்த சிபியின் படத்தை சீனியருக்கு அனுப்பிவிட்ட விசயங்களைப் பற்றி கணவனிடம்கூட பகிர்ந்துகொள்ளவில்லை மதி.

***

     கல்லூரி, கல்லூரி விட்டால் வீடு.  அதற்குமேல் வேறு எங்கும் வெளியில் செல்வது கிடையாது.  இப்படியே ஒரு மாதம் சௌமிக்குக் சென்றது. 

     அவளால் முடிந்த வீட்டு வேலைகள் அக்காவிற்கு செய்து கொடுத்தாள்.  அக்காவின் பிள்ளையை தூக்கி வைத்திருப்பாள். படிப்பாள். அப்படித்தான் அவளின் பொழுதுகள் சென்றது.

     சிபிக்கு மனநல மருத்துவத்தில் பட்டயப்படிப்பு படிக்க விண்ணப்பித்து அதற்கான வாய்ப்பும் கிட்டி, வகுப்புகள் துவங்கியிருந்தது.

வகுப்புகள் போக மற்ற நேரங்களில் மருத்துவப் பணி என நேரம் போனது.  பெரும்பாலும் வீட்டில் தங்குவதே குறைந்து போனது.  அதனால் மிகவும் அரிதாகவே வீட்டிற்கு வந்து சென்றான்.

பெரும்பாலும் அவனுக்காக மருத்துவமனையில் ஒதுக்கித் தரப்படும் அறையிலோ அவனுக்காக வாங்கியிருந்த பிளாட்டிலோ தங்குவதையே வாடிக்கையாக்கி இருந்தான்.

பணிக்கு வந்து செல்லவும், படிக்கச் செல்லவும் வசதியாக இருப்பதால் பெரும்பாலும் அவனது பிளாட்டை உபயோகப்படுத்தினான்.

     ஓய்வு நேரங்களில் தனது பேசியில் இருக்கும் சௌமியாவின் படத்தை எடுத்துப் பார்ப்பான்.  அவனுக்குள் அதைப் பார்க்கும் நேரங்களிலெல்லாம் ஒரு அமைதி. ஒரு நிறைவு.

     தனக்கான அமைதி தனதருகே தன் வீட்டருகே குடிவந்ததையே அறியாதவன், நினைவுகள் தனிமையில் அகப்படும் வேலையில் சௌமியின் பெயர் தவிர அவளைப் பற்றி எதுவும் தெரியாமலேயே அவளைப்பற்றிய சிந்தனையோடு இருந்தான்.

     தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள் என்றால் என்ன நடந்திருக்கலாம் என்கிற வகையில் சில யூகங்கள் இருந்தது.

     பிடிக்காத வரன்! விருப்பமில்லா திருமணம்! விரும்பியவன் கிட்டாதது! குறிக்கோளில் தடை! இப்படி நீண்டது.

     அதில் எந்த விசயத்திற்காக அவள் தற்கொலை முடிவை எடுத்திருந்தாலும் சரி! அவளை ஏற்றுக்கொள்ளும் மனம் நிறைவாகவே இருந்தது சிபிக்கு.  இது இரக்கத்தால் வந்ததல்ல! அவளின்மேல் தன்னை அறியாமல் அவன் கொண்ட அன்பெனும் வேட்கையால் உருவானது!

     புகைப்படத்திலுள்ள அவளின் வதனமே அவனுக்குள் அத்தனை உணர்வுகளை புதிதாக அறிமுகம் செய்து அவனை அவஸ்தைக்குள்ளாக்கியது.

     தாய் கேட்டால், தயங்காமல் இவளை எனக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யும்படி கூற வேண்டும் என்கிற அளவில் கடந்த ஆறு மாதங்களில் முடிவெடுத்திருந்தான் சிபி.

     சிபியின் மனதில் பூ பாப்பா பற்றிய சிந்தனையை பின்னுக்குத் தள்ளியிருந்தாள் கவி சௌமியா.

     நீண்ட நாளுக்குப்பின் வீட்டிற்கு வந்திருந்தவனிடம், “சிபி… இந்த போட்டோவுல இருக்கற பொண்ணைப் பாரு” மாலினி வினவ,

     சிபிக்கு தாயின் மெனக்கெடல்களைக் கண்டு வருத்தம் வந்தது.  தனது எண்ணத்தை தாயிடம் பகிராததால் உண்டான இடர்பாடுகளைப் புரிந்துகொண்டவன், தாயை அருகே வந்து அணைத்துக் கொண்டான்.

“இப்போ உங்களுக்கு என்ன… நான் எதாவது ஒரு பொண்ணை சீக்கிரமே சரினு சொல்லணும் அப்டித்தானே!” கேட்டவனிடம், “இல்லை சிபி.  உனக்குப் புடிச்சிருக்குன்னா ஓக்கேன்னு சொல்லு.  இல்லையா இல்லைனு சொல்லு” என்றார் மாலினி.

“இனியும் நீங்க எனக்காக ரொம்ப கஷ்டப்பட வேணாம்.  சீக்கிரமே ஒரு நல்ல முடிவா சொல்லிறேன்” என்ற சிபியின் பேச்சைக் கேட்ட மாலினிக்கு எப்பொழுது திருமணப் பேச்செடுத்தாலும் எதையாவது சொல்லித் தட்டிக் கழிப்பவன் இன்று இப்படிக் கூறியது தாயிக்கு சந்தோசத்தையே தந்தது.

தாயின் நம்ப முடியாத பார்வையைக் கண்டு கொண்டவன், “உண்மைதான் பேசறேன்” அழுந்தச் சொன்னான்.

 “இன்னும் படிச்சிட்டே இருக்க… சரி அதுகூட ஒன்னும் பிரச்சனையில்லை.  ஆனா இன்னும் விளையாடாத சிபி… எனக்கும் மருமகளைப் பாக்கணும்னு ஆசையிருக்காதா… இல்ல… நீயா எந்தப் பொண்ணையும் பாத்து வச்சிருக்கேன்னாலும் சொல்லு… அந்தப் பொண்ணையே பேசி முடிப்போம்” சலிப்பாக தாய் கூற,

இதற்காகவே காத்திருந்தவன்போல, தந்தையையும் சாட்சிக்கு அழைத்தவன், “ப்பா… அம்மா சொன்னதைக் கேட்டீங்கள்ல…” தந்தை ஆமோதிப்பாய் சிரித்தபடி தலையை ஆட்ட,

     “என்னோட சாய்ஸ் நான் சொல்லுவேன்.  நீங்க அதுக்கு அப்போஸ் பண்ணாம மேரேஜ் பண்ணி வைப்பேன்னு பிராமிஸ் பண்ணா… சொல்றேன்” பீடிகை போட்டான் சிபி.

     மாலினிக்கு மகனது இந்த அவதாரம் புதிது. அதிர்ச்சியோடு சந்தோசமும் சேர்ந்துகொள்ள, “உண்மையாவா…!”

     “இதுலலாம் யாராவது பொய் சொல்வாங்களாம்மா?” என்றான் சிரியவன் மகி.

     “அதானே” என்று ஒத்து ஊதினான் சிறியவனான பல்லவனும்.

     மகிக்குமே தனது தமையனின் இந்தச் செய்தி கேட்டு இன்ப அதிர்ச்சி.  பல்லவனுக்கு திருமண வைபவங்களையெல்லாம் இதுவரை தூரத்தில் இருந்து பார்த்திருந்த அனுபவம் மட்டுமே.  ஆகையால் சிபியின் திருமணத்தை ஆவலோடு எதிர்நோக்கி இருந்தான்.  

மகி இமைக்காமல் அண்ணனின் வதனத்தில் வந்து போன உணர்வுகளைப் பார்த்து அவனும் மகிழ்ந்து போனவன், “தலைவா… வாழ்த்துகள்” என்று உற்சாக குரலெழுப்பியபடி அருகே வந்து தமையனைத் தழுவிக்கொண்டான்.

     “டேய்… நீ சும்மாயிரு…” மகேந்திரனை அடக்கிவிட்டு, “உண்மையிலேயேதான் சொல்றியா சிபி?” தன்னைக் கலாய்க்கிறான் மகன் என்றெண்ணி நம்பாமல் கேட்டார் மாலினி.

     “முதல்ல எனக்கு பிராமிஸ் பண்ணுங்க… அப்புறம் என்னை சமாதானப்படுத்தறதோ, வேற ஆப்சன்ஸ் கை காட்றதோ கூடாது.  முடிஞ்சா இந்தப் பொண்ணை பேசி முடிங்க… இல்லையா… இப்படியே என்னை விட்ருங்க” என அகன்றவனது பேச்சின் உறுதியில் உண்மை விளங்க,

     கணவனும், மனைவியும் முகம் இதம் தொலைத்து மாறி மாறி பார்த்துக் கொண்டனர். அதில், ‘பையன் இந்த விசயத்தை நம்மகிட்ட சொல்றதுக்கு யோசிச்சிட்டுதான் இத்தனை நாளா பிடிகொடுக்காம இருந்திருக்கான்’ எனும் செய்தி மறைந்திருந்தது.

     சிபிக்கு தான் இந்தப் பேச்சை எடுத்தால் குடும்பத்தில் எந்த மாதிரியான பேச்சுகள், சமாதானங்கள் வரும் என்பதை ஏற்கனவே யூகித்திருந்தமையால், “நீங்க எனக்கு அசூரன்ஸ் தந்தா… நான் சொல்றேன்.  இல்லைனா இப்டியே போகட்டும்” அகன்றான்.

     அதற்குமேல் பெற்றோர் எதுவும் தன்னை வற்புறுத்தாமல் அமைதியானதிலேயே அவர்களின் குழப்பம் புரிய, அதிலிருந்து அவர்கள் மீள நேரம் தந்துவிட்டு ஓய்வெடுக்க தனதறைக்குள் முடங்கியிருந்தான் சிபி.

     சௌமியின் படத்தைப் பார்க்கப் பார்க்க அவளோடு நெருங்கிப் பழகியது போன்ற உணர்வு அவனை ஆக்ரமித்திருந்தது. பெற்றோரிடம் விசயம் முழுமையாக பகிரப்படாதபோதும் அவனுக்குள் ஒரு நம்பிக்கை.  தனது வேண்டுதலைத் தட்டமாட்டார்கள் என்று.

     நீ… பெண் யாரென்று சொல்… என்று பெரியவர்கள் கேட்க, நீங்கள் எனது முடிவிற்கு சம்மதம் சொன்னால் மட்டுமே பெண் யாரென்று சொல்லுவேன் என்று திடமாக சிபியும் இருந்தான்.

     மகிக்குமே தனது சகோதரனின் செயலில் குழப்பமே.  எதையும் பட்டுனு பேசுற அண்ணன் எதற்காக இந்த விசயத்துல இவ்வளவு தயங்கணும் என்று.

     மகிக்கு என்ன குழப்பம் என்றால், அண்ணன் ஒரு வேளை அந்த சிறு வயது கிரஷ்ஷைக் கண்டுபிடித்து விட்டானோ என்று.

     பூ என அண்ணன் குறிப்பிடும் பெண் மேல் கொண்ட அதீத ஆர்வம், பிரியம், ஈர்ப்பு அனைத்தையும் அண்ணனது பேச்சில் ஒவ்வொரு முறையும் நேரில் கண்டிருந்தானே!

     நாட்கள் சென்றதே அன்றி, சிபி சற்றும் தனது முடிவில் தளராமல் இருந்தான்.  இறுதியில் பெற்றோர் இருவரும் பேசி, “எதுனாலும் அவனோட சந்தோசந்தான நமக்கு முக்கியம்.  குடும்பம் எப்டியிருந்தாலும், பொண்ணு எப்டியிருந்தாலும் ஓகேன்னு சொல்லுவோம்.  அப்புறம் அவன் விசயத்தைச் சொல்லிருவான்ல” இது மாலினி.

     “அதுல ஒரு விசயம் நீ கவனிக்க மறந்துட்ட மாலி.  அவன் சொல்ற பொண்ணை நாம மறுக்கறதுக்கான வாய்ப்பு அதிகம் இருக்கறதாலதான், முதல்ல நம்மகிட்ட டிமாண்ட் பண்றான்.  உனக்குப் புரியுதா… இல்லையா?” ஞானம் மனைவியிடம் மகனது உள்குத்தை புட்டு புட்டு வைத்தார்.

     மாலினிக்கு கணவரின் பேச்சைக் கேட்டதும், “அப்போ ஏதோ வில்லங்கமாத்தான் முடிவெடுத்திருக்கான்போல” தயக்கமும் வந்து ஒட்டிக் கொண்டது.

     ஒரு வழியாக இருவரும் பேசி சமாதானமாகி மறுமுறை வீட்டிற்கு வந்த மகனிடம், “நாங்க உன்னோட ஆசைக்கு குறுக்க நிக்க மாட்டோம் சிபி.  ஆனா… நீ நல்லா யோசிச்சு முடிவெடுத்துக்கோ.  எங்களுக்கோ… அல்லது உனக்கோ… இப்பவோ… இனி வரக்கூடிய காலங்களிலோ பிரச்சனை வராத வாழ்க்கைத் துணையா அவ இருப்பான்னு நீ முழுமையா நம்பினா… எங்களுக்கும் முழு சம்மதம்” சிபியிடம் தெரிவித்திருந்தனர்.

     சிபி உடனே பெண்ணைப் பற்றிக் கூறுவான் என பெற்றோர் எதிர்பார்த்திருக்க, “இந்தாங்க இந்த நம்பருக்கு காண்டாக்ட் பண்ணி, உங்க பொண்ணை நாங்க பொண்ணு கேட்டு வரணும்.  உங்களுக்கு எப்போ வசதிப்படும்னு கேட்டுச் சொல்லுங்கோ.  அன்னைக்கு நானும் உங்ககூட வரேன்” தாயிடம் கொடுத்துவிட்டு தனது வேலை முடிந்தது என்று அகன்றுவிட்டான்.

     பெற்றோர் இருவரும் மகனது இந்த அவதாரத்தில் யோசிக்க முடியாமல் அமர்ந்திருந்தனர்.

     இரண்டு தினங்கள் யோசித்து, ஒரு நல்ல நாளில், நல்ல நேரத்தில் அந்த எண்ணுக்கு அழைத்து, “நாங்க சென்னையில இருந்து பேசறோம்.  தரகர் உங்க நம்பர் தந்தாரு.  உங்க பொண்ணைப் பாக்க எப்ப நாங்க வந்தா உங்களுக்கு வசதிப்படும்?” என்று கேட்க,

     எதிர்முனையில் இருந்தவரோ, “வீட்டுல கலந்துகிட்டு இதே நம்பருக்கு கூப்பிட்டுச் சொல்லவா?” என்று கேட்க ஞானம் அதனை ஆமோதித்து அழைப்பைத் துண்டித்திருந்தார்.

     அந்த எண் கவி சௌமியாவின் திருமண அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த செழியனது அலைபேசி எண். அதைத்தான் தனது தந்தையிடம் கொடுத்து பேசச் செய்திருந்தான் சிபி.

     அன்று இரவே ஞானத்தின் எண்ணுக்கு அழைத்தவர், “வர்ற ஞாயித்துக்கிழமை போயி அடுத்த ஞாயித்துக் கிழமை வந்தா வசதிப்படும்.  உங்களுக்கும் வசதிப்படுமா?” என்று மறுமுனை கேட்க, ஞானம் சரியென்று ஒப்புதல் கூறி வைத்திருந்தார்.

     சிபியிடமும் அப்போதே விசயத்தைக் கூறியிருந்தார் அவனது தந்தை ஞானம்.

***

     பல்கலைக் கழகத் தேர்வுகள் நெருங்க அனைவரும் தேர்வுக்கான அப்ளிகேசனை கவனமாகப் பூர்த்தி செய்துகொண்டிருந்தனர்.

பூர்த்தி செய்து அதில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தினை ஒட்டி என அந்த பாடவேளை முழுவதையும் ஒப்பேற்றி இருந்தனர் அனைவரும்.

மொத்த அப்ளிகேசனையும் மாணவர்களிடமிருந்து வாங்கித் தருமாறு மகேந்திரனைப் பணிக்க, அனைத்தையும் சாதாரணமாக பெற்றுக்கொண்டே வந்தவன், சௌமியின் அப்ளிகேசனை வாங்க வரும்போது அவள் பூர்த்தி செய்திருந்தவற்றில் மேலோட்டமாக பார்வையைச் செலுத்தியவாறு கையை நீட்டினான்.

“ஒரு நிமிசம் மகி.  இன்னொரு முறை செக் பண்ணிட்டுத் தந்திறேன்” என அவளின் பெயர், பிறந்த தேதி இவற்றில் கைவிரலை வைத்து பார்த்தபடியே வர, அவளின் பிறந்த தேதியைப் பார்த்தவனுக்கு அத்தனை சந்தோசம்.

சந்தோச மிகுதியில், “ஏய்… என்னோட பிறந்த நாள் அன்னிக்கே நீங்க… இல்லை நீயும் பிறந்திருக்க? இனி உன்னை வா போன்னுதான் கூப்பிடுவேன்” என்றான் மகி.

சௌமிக்கு அது எல்லாம் பெரிய விசயமாகத் தோன்றவில்லை.  சாதாரணமாக நிமிர்ந்து பார்த்தவள், “இதுக்கு ஏன் இவ்ளோதூரம் நீ எக்சைட் ஆகற?” என்றபடியே அவனிடம் தனது அப்ளிகேசனை நீட்டினாள் சௌமி.

வாங்கிக்கொண்டபடியே, “நான் பிறந்த அன்னிக்கு, நீ, இன்னொரு ஆளு” மனதிற்குள் ‘எங்க அண்ணனோட கிரஷ்…’ “மூனு பேருக்கும் பிறந்த நாள்” என்றவனை, “அய்யே…” எனும்படியாக பார்த்திருந்தாள் சௌமி.

“உனக்கு இதைக்கேட்டு சந்தோசமா இல்லையா?” என்று மகி வினவ, “இல்லையென்று” தலையாட்டினாள் சௌமி.

மகிக்கு அத்தோடு இன்னொரு விசயமும் மனதில் வந்தது. இவள் இராமேஸ்வரத்தில் இதுவரை இருந்திருக்கிறாள்.  அண்ணன் கூறிய பூ பெண் இராமநாதபுரத்தில் மருத்துவமனையில் பிறந்திருக்கிறது என்பதுதான் அது.

அவனாகவே அது வேறு பெண், இவள் வேறு பெண் என்கிற முடிவோடு, ஆனால் ஒரே தேதியில் இருவருக்கும் பிறந்த தினம் என்பதை அன்று மாலையில் தாயோடு இயல்பாகப் பகிர்ந்து கொண்டிருந்தான் மகி.

     பெரியவர்களும் அதனை சாதாரணமாகவே எடுத்துக்கொண்டிருந்தனர்.

***

சௌமிக்கு கல்லூரியில் காதல் புரபோசல் விடுவித்த அவளின் சீனியர் ரஞ்சன் அன்று உடல்நிலைக் குறைபாடு காரணமாக மருத்துவமனைக்குச் சென்றிருந்தான்.

சளியும், இருமலுமாக மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான்.  இரண்டு நாட்கள் வெளி மருந்தகத்தில் மருந்து வாங்கி உபயோகித்தும் அது சரியாகாததால் இன்று மருத்துவமனைக்கு வந்திருந்தான்.

இவனது டோக்கன் முப்பத்து இரண்டு.  இன்னும் பதினைந்து நபர்களுக்குப்பின்தான் இவனது.  அதுவரை பொறுமையில்லாமல் கேண்டினுக்கு சென்று கோல்ட் ஃபிளாக் ஒன்றை வாங்கிப் பற்ற வைத்தான்.

நண்பர்களோடு வெளியில் சென்றிருந்தபோது மழையில் நனைந்தது, தொடர்ச்சியாக புகை பிடித்தது என அவனுக்கு இந்த நிலை ஏற்பட்டிருந்தது.

ஆனாலும் புகைப்பதை விடாமல் தொடர்ந்திருந்தான்.  அவனைப் பொறுத்தவரையில் கடந்த மூன்று தினங்களாக புகைப்பதை மிகவும் குறைத்திருப்பதாக எண்ணம்.

புகை பிடிக்கத் துவங்கியதும் நுரையீரலுக்குள் சூடான புகை போனது இதமாக இருந்ததுபோல உணர்ந்தான்.

அது முடிந்ததும் இருமல் தொடரும் என்பது புரிந்தாலும், இடையிடையே நேரங் கிடைக்கும் போதெல்லாம் புகைப்பதை விடுவதில்லை.

அவனது தாய் உடன் வருவதாகக் கூறியதை மறுத்துவிட்டு அவன் மட்டும் கிளம்பி வந்திருந்தான்.

அரைமணித் தியாலம் கடந்தபின் அவுட் பேஷண்ட்ஸ் வயிட்டிங் ரூமிற்கு விரைந்தான்.  இன்னும் பத்து பேர் இருந்தார்கள்.

பொறுமை போனது. 

ஆனாலும் வேறு வழியில்லை.  காத்திருந்து காண்பித்துச் செல்ல வேண்டிய நிலை. பொறுமையிழந்து போய் மீண்டுமொரு முறை வெளியில் சென்று தனது தேவையைத் தீர்த்துக்கொண்டு வந்தான்.

அதன்பின்பும் இருவர் அவனுக்கு முன்பாக செல்லக் காத்துக்கொண்டிருந்தனர்.

பொறுமை… பொறுமை… அத்தனை பொறுமை… ஒரு வழியாக ஜென்ரல் மெடிசன் எனும் பாதகை தாங்கிய பிளாக்கிற்குள் நுழைந்தான். அறை எண் ஏழில் டாக்டர் சிபி சக்கரவர்த்தி எனும் பெயர் தாங்கி இருந்தது. 

அதனுள் சென்றவனுக்கு மருத்துவர் இருக்கையில் இருந்தவனைப் பார்த்ததும், ‘எங்கயோ பாத்த மாதிரி இருக்கே… யாரது?’ எனும் நினைவுகள் அவனுக்குள் ஓட சட்டென நினைவிற்கு வரவில்லை.

கவி சௌமியா ரஞ்சனது மொபைலுக்கு அனுப்பிய படத்தில் வெள்ளை நிற அங்கி இல்லாமல் ஃபார்மல் உடையில் இருந்தான் சிபி.  தற்போது ஃபார்மல் உடையின் மேல் அணிந்திருந்த வெள்ளை கோட் அவனை வேறு மாதிரிக் காட்ட… சட்டென கண்டுபிடிக்க முடியவில்லை ரஞ்சனுக்கு.

“ப்ளீஸ் பி சீட்டட்” எதிரே இருந்த நாற்காலியைக் காட்டியவனை பார்த்தபடி கண்கள் மேலே நோக்கி யோசித்தபடியே அமர்ந்தான் ரஞ்சன்.

“என்ன செய்யுது?”

“ஒரே காஃப் அண்ட் கோல்ட் டாக்டர்” ரஞ்சன்.

“ஸ்மோக்கிங் ஹேபிட் இருக்குல்ல…” அவனது உதடுகள் கூறுவதற்கு முன்பு, உள்ளே நுழைந்தபோதே அதன் நாற்றம் சிபியின் நாசியைத் தீண்டியிருந்ததைக் கொண்டு கேட்டான்.

“லைட்டா…” என பதில் கூறினாலும், சிந்தையில் இந்த டாக்டரை இதுக்கு முன்ன எங்க பாத்திருக்கேன்.  இன்னைக்குத்தான் இங்க முதல் தடவை வந்திருக்கேன்.  ஆனா எங்கே… இப்படிச் சென்றது ரஞ்சனின் மனது.

அவ்வவ்போது சிந்தனையின் இடையில் சிபி கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தபடியே யோசித்தான் ரஞ்சன்.

“ஸ்மோக் பண்றதை படிப்படியா குறைங்க… மெடிசன் எழுதிருக்கேன்.  கண்ட்டினியஸ்ஸா த்ரீ டேஸ்கு எடுத்துக்கங்க… சரியாகிட்டா ஓகே.  இல்லைன்னா… ப்ளட் அண்ட் ஸ்பூட்டம் செக் பண்ணனும்” என்றபடியே கையில் இருந்த ப்ரிஸ்கிரிப்சன் பேடில் உள்ள பர்ப்ரேசன் போடப்பட்ட பேப்பரைக் கிழித்து ரஞ்சனிடம் நீட்டினான் சிபி.

சட்டென கவி சௌமியா அன்று காட்டிய படத்தில் இருந்தவன் இவன்தான் என்பது நினைப்பில் வர, ‘மாப்பிள்ளை… டாக்டரா…!’ என்பதும் புரிய வர, சிபியையே ஆராய்ந்தான் ரஞ்சன்.

“பீஜி படிக்கிறேன்னு சொன்னீங்களே… எந்த காலேஜ்” எம்எஸ்ஸி ஐட்டி என்று ரஞ்சன் கூறியதால்… மகியை யோசித்து சிபி கேட்க, “உங்க ஃபியான்சி படிக்கற அதே காலேஜ்தான் டாக்டர்!” எனச் சிரித்தபடியே விடைபெற்றான் ரஞ்சன்.

சிபி ஒன்று எதிர்பார்த்துப் பேச, எதிர்பாரா விசயம் அரங்கேறி குழப்பத்தைத் தந்திருந்தது. ‘யாருகிட்டயும் இதுவரை நான் சொல்லாத என்னோட ஃபியான்சிய இவனுக்கு எப்டித் தெரியும்? 

இவன்… இப்ப… யாரை என்னோட ஃபியான்சின்னு சொல்லிட்டுப் போறான். இப்படிக் குழப்பத்தோடு மருத்துவன் சிபி இருக்க, மருந்தை வாங்கிக்கொண்டு மீண்டும் சிபியைப் பார்க்க வந்த ரஞ்சனிடம், “என்னோட ஃபியான்சி பேரு என்ன?” என்று சிபியால் ரஞ்சனிடம் எப்படிக் கேட்க முடியும்.

எந்தவொரு நோயாளியும் மீண்டும் தன்னைத் தேடி எப்போது வருவான் என்று எதிர்பார்க்காத சிபி, முதன் முறையாக… தனது சிந்தனை செல்லும் பாதையையே மாற்றியிருந்தான்.

‘இவன் மறுமுறை வந்தால்… என்னவென்று கேட்டு, அவன் சொன்ன தனது ஃபியான்சி பற்றிய செய்திகளைத் தெரிந்த கொள்ளலாம்’ என்கிற சிந்தனைவயப்பட்டு இருந்தான் சிபி.

சிபிக்குத் தெரிந்த அவனது ஃபியான்சி யாருக்கும் அவனால் தெரிவிக்கப்படாமலேயே ஒருவனுக்கு தெரிந்திருந்தது எப்படி என்பதை சிபியால் அறிந்து கொள்ள முடிந்ததா?

***