பூவுக்குள் பூகம்பம் – 6
முதுகு காட்டியவாறு நின்று பேசிக்கொண்டிருப்பவளைக் காண எவ்வளவோ முயன்றும் அவளின் முகத்தைக் காண முடியாத சிபி நண்பர்களுடனான பேச்சில் கவனத்தைக் குறைத்து நின்றிருந்தவளின்மீது குவித்திருந்தான் ஆவலை.
அவளுடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் இவனுக்கு முகம் காட்டியிருக்க அவர்களின் அந்த சந்தோசமான தருணத்தை ஏக்கத்தோடு பார்த்தபடியே நின்றிருந்தான்.
நெருங்க நினைத்து செல்ல முனைபவனை இழுத்து வைத்து பேசும் நண்பர்களை எண்ணி உள்ளுக்குள் எரிச்சல் தோன்றினாலும் அதனைக் காட்டாமல் இருந்தவன் தன் கரம் பற்றிக் குலுக்கியவனிடம், “ஒரு நிமிசம்” என்றபடி அங்கிருந்து அகன்றான். அவள் அங்கிருந்து அகலுவதைப் பார்த்தபடியே…
வாயிலை நோக்கி விரைபவளை நோக்கி வாயு வேகத்தில் வந்தாலும் முகத்தை சிபிக்கு காட்டாமலேயே அங்கு வந்து நின்றிருந்த பென்ஸில் ஏறியிருந்தாள்.
சிபிக்கு அவளைக் காண முடியாத வருத்தத்தில் ச்சேய் என்றபடியே தன் இரு கரங்களைக்கொண்டு தலைமுடியை மேலிருந்து கீழாக கோதியபடி கண்களை மூடித் திறந்தான்.
திறந்தவனுக்கு தான் இருந்த நிலை உணர சற்று நேரம் பிடித்தது.
படுக்கையில் தானிருப்பதை உணர்ந்தவன், ‘ச்சேய்… எல்லாம் கனவா…’ நினைத்தபடியே எழுந்தவன் நேரத்தைப் பார்த்துவிட்டு அவசரமாக கிளம்ப ஆயத்தமானவனுக்குள் நிறைய கேள்விகள்.
இந்தக் கனவிற்கு என்ன அர்த்தம் என்று எண்ணுமளவிற்கு யோசிக்க அவனது கல்வி தடுக்க… ஆனால் அதனை அப்படி ஒன்றுமே இல்லை என்று ஒதுக்க முடியாதவனாக தனது வேலைகளில் கவனம் செலுத்த முயன்றான்.
விரைவில் தன்னவளைச் சந்திக்க போவதை அறியாதவனாக எங்கு துவங்க வேண்டும் என்று புரியாதநிலையில் மருத்துவமனையை நோக்கி விரைந்தான் சிபி.
***
ப்ருத்வி அத்தனை எளிதில் கவி சௌமியாவை விட்டுக்கொடுத்திட முனையவில்லை. முதல் முறை தானாகவே வந்து செழியனிடம் பேசிச் சென்றவன், அத்தோடு விடாமல் தனது சார்பாக செழியன் கணக்கு வைத்திருக்கும் தனது வங்கியின் இராமேஸ்வரம் கிளையில் பணிபுரிவோர் வாயிலாக தனக்காக கவி சௌமியாவை மணமுடித்துக் கொடுக்க உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டிருந்தான்.
இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் என்பதால் ப்ருத்விக்கு நல்ல பழக்கம். மேலும் ஒரே வங்கியின் கிளைகளில் பணிபுரிவதால் பணி கிட்டியது முதலே ப்ருத்வியை அனைவருக்கும் தெரிந்திருந்தது.
இதுவரை எதற்காகவும் தங்களிடம் வந்து நிற்காதவன்… முதன்முறையாக வந்து… திருமணத்திற்கு பெண் தேடுவதாகவும், செழியனைப் பற்றிக் கூறி அவரின் பெண்ணை தனக்கு திருமணத்திற்குக் கேட்டுச் சொல்லுங்கள் என்று தனது விருப்பத்தைக் கூறியிருந்தான்.
தனது காதலை யாரிடமும் கூறாமல், பொதுவாக பெண்ணை பேசி முடிக்கக் கேட்குமாறு அவர்களிடம் பேசியிருந்தான் ப்ருத்வி.
அப்படி அவன் கேட்டுக்கொண்டதற்கிணங்க செழியனிடம் பேசியவர்கள், “என்ன செழியன்… அந்தப் பையன் ப்ருத்வி ரொம்ப ஈகரா உங்க பொண்ணை கல்யாணம் செய்துக்க கேக்கறான். நல்லபடிய பேசி முடிச்சுத்தாங்கன்னு வந்து ஒத்தக் கால்ல நிக்கறான்!
உங்க பொண்ணு அவன் வாழ்க்கையில வந்தா நல்லா இருக்கும்னு பிரியபடறவனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கறதைப் பத்தி நீங்களும் யோசிக்கலாமே!
வேறு எதையும் அவன் எதிர்பாக்கலை! நீங்க பொண்ணை அவனுக்குக் கொடுத்தா போதும் சாருங்கறான்.
அங்க இராம்நாடு போயித்தான்… பொண்ணு படிச்சிட்டு வருதாமே!
காலேஜ்கு வேலையாப் போனப்போ பாத்துட்டு… ரொம்பப் பிடிச்சுப் போயித்தான்… எம்மூலமா பொண்ணு கேட்டு வந்தா நல்லாயிருக்கும்னு யோசிச்சு எங்கிட்ட வந்து சொன்னான்.”
வங்கிகளில் தற்காலிக வேலையிலிருக்கும் நபர்களை மாதந்தோறும் இத்தனை புதிய சந்தாதாரர்களைச் சேர்க்கச் சொல்லிக் கூறும்போது, அவர்கள் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணாக்கர்களை அதன்பொருட்டு அங்கு சென்று சந்திப்பது வழமையே.
“நல்ல பையன். இந்தக் காலத்துல இப்டி ஒரு பையனை நீங்க பாக்கறது கஷ்டம். கடுமையான உழைப்பாளி. சிக்கனமான பையனும்கூட. எந்தக் கெட்ட பழக்கமும் இருக்கற மாதிரித் தெரியலை…
என்கிட்ட வந்து”, ‘அவங்க பொண்ணை எனக்குக் குடுக்க சொல்லுங்க சார். ராணி மாதிரி வச்சிக்குவேன். வெளியூறு ஆளுங்க யாரு, எப்டினு தெரியாதுல்ல சார்.
என்னைப் பத்தி இராம்நாட்ல மட்டுமில்ல, இப்ப இராமேஸ்வரம் பிரான்ஜ்ல இருக்கற நம்ம பேங்க் ஸ்டாஃப் எல்லாத்துக்குமே என்னை நல்லாத் தெரியும்ல சார்.
என்னைப்பத்தி அக்கம் பக்கத்துல மட்டுமில்லாம பேங்க்ல வந்துகூட விசாரிச்சுப் பாத்துக்கச் சொல்லுங்க சார்.
அவங்களுக்கு என்னை ஓகேன்னா இந்த நம்பருக்கு காண்டாக்ட் பண்ணச் சொல்லுங்க சார்’ என்றதோடு தனது தகப்பனாரின் எண்ணையும் அவர் மூலமாகவே செழியனிடம் கொடுக்கும்படி செய்திருந்தான் ப்ருத்வி.
மறுக்க முடியாத நிலை செழியனுக்கு. தினசரி வரவு செலவுகள் அனைத்தும் அவர்களின் வங்கியில்தான். அதனால் அமைதியாக அவர் கொடுத்த எண்ணைக் குறித்துக் கொண்டார் செழியன்.
“எனக்காக பேசி அவங்க பொண்ணை கல்யாணம் பண்ணித் தரச் சொல்லுங்க சாருனு கெஞ்சுறான்… செழியன்.
பையனைப் பத்தி குறையே சொல்ல முடியாது. வேலையில ரொம்ப சுத்தம். யோசிச்சு சொல்லுங்க! உங்களுக்கு பொண்ணைக் குடுக்க விருப்பமிருந்தா… பையனோட வீட்டுல வந்து பேசச் சொல்லலாம்!
இல்ல… நீங்களே காண்டாக்ட் பண்ணிக்கறதா இருந்தாலும் அவங்க அப்பா நம்பர்தான் உங்கட்ட இருக்கே…” என ஒரே மாதிரியான விசயத்தை தங்களது தனிப்பட்ட பண்பேற்றத்தில் கூறியிருந்தனர்.
செழியனுக்கு தான் ரொம்ப அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்ற, மனம் ஒரு நிலையில் இல்லை.
குழப்பமாகவும் இருந்தது. தனது மாமனார் இனம், கிளை, அந்தஸ்து எனக்கூறி தன்னைக் குழப்பியிராவிட்டால் ப்ருத்வியை கவனத்தில் கொண்டிருப்பேனோ எனும்படியாக இருந்தது செழியனது மனநிலை.
மகளின் நிலையையும் பார்த்தவருக்கு வலித்தது. எப்படி இருந்த மகள் இன்று இப்படி ஒதுங்கி, ஒட்டி, வறண்ட பாலைவனத்தில் நீரில்லாமல் காய்ந்து சருகாகி நிற்கும் மரத்தைப்போல, மெருகு குறைந்திருக்கிறாள் என்பதைக் கண்கூடாகக் காணத்தானே செய்கிறார்!
ஆனால் அவசரப்பட்டு திண்டுக்கல் டீலரிடம் பேசியாயிற்று. இனி பின்வாங்கினால் அது தனது தொழிலிலும் பின்னடைவைக் கொடுக்கும் என்பதைச் சிந்தித்தவர், “வீட்லயும் கலந்துகிட்டு… பிடிச்சிருந்தா நானே அந்த நம்பருக்கு காண்டாக்ட் பண்றேன் சார்” விடைபெற்றிருந்தார் செழியன்.
இன்றைய நிலையை பரவலாக செழியனும் பார்க்கத்தானே செய்கிறார். பிள்ளைகள் வீட்டில் வந்து தங்களின் காதலைக் கூறியதும் பெற்றோர்கள் ஆரம்பத்தில் அதனை எதிர்த்தாலும், பிறகு பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை, சந்தோசம் இவற்றைக் கருத்தில்கொண்டு, வேற்று இனம், மதம் என்பதை பிறருக்கு தெரிவிக்காமலேயே தாங்களே முன்னின்று திருமணத்தை நடத்தி வைப்பதை.
அதனால் விசயமே வெளியில் தெரியாமல் போய்விடுகிறது. மேலும் சாதாரணமாக வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் போன்ற நிலையை இலகுவாக மற்றவர்களின் முன்பு ஏற்படுத்திக் கடந்து விடுகின்றனர்.
பிள்ளைகளைப் பற்றிய விமர்சனங்கள் அங்கு தவிர்க்கப்படுகிறது. யார் எந்த இனத்தில் திருமணம் செய்து குடுத்தது என்பது போன்ற விசயங்களை விசாரித்து தெரிந்த கொண்டாலும் கண்டுகொள்வதில்லை. விசயமும் மூன்றாம் நபர்களின் பார்வைக்கு உடனே செல்வதில்லை.
வைத்திருப்பது பெரும்பாலும் ஒன்றோ இரண்டு பிள்ளைகள்தான். அதில் அதற்குமேல் என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது என ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றனரே!
காலம் கடந்து யோசித்து இனி ஒன்றுமாகப் போவதில்லை என்பதும் புரிய, நடப்பதை எதிர்கொள்வோம் என்கிற மனநிலைக்கு வந்திருந்தார் செழியன்.
மதிக்கு முதலில் சற்று விசயத்தை ஆரப்போட்டு நிதானமாக திருமணத்தைச் செய்யலாம் என்கிற எண்ணம்தான்.
செழியனின் அவசரத்தைப் பார்த்தபின் தனது மகளை நல்ல இடத்தில் மணமுடித்துக் கொடுத்துவிட்டால் தங்களுக்கு கடமை முடிந்துவிடும் என்று மட்டுந்தான் தோன்றியது.
இன்னும் சௌமியாவை வீட்டில் வைத்திருந்தால் தனது நிம்மதி முற்றிலும் பறிபோய்விடும் என்கிற பயம்தான் அவரை அவ்வாறு யோசிக்க வைத்திருந்தது.
மகளின் பயத்தை உணர்ந்தே அவளுக்கு ஆறுதலாக பிரபாவதியும், கதிரவனும் இங்கேயே தங்கியிருந்தனர்.
சென்னையில் மாமியார் வீட்டிலிருக்கும் கனி சௌமியாவிற்கு தாங்கள் கூறினால்தான் விசயம் தெரியவரும். ஆனால், உள்ளூரில் இருக்கும் தேன்மொழிக்கே விசயம் எதுவும் தெரியாமல் பார்த்துக் கொண்டனர்.
கனிக்கு தெரிந்தால் அது அவள் கணவன் காமேஸ்வரனிற்கு தெரியவரும். அப்படித் தெரியவந்தால், உடனே விசயம் அவனது சித்தியான தேன்மொழிக்குச் சென்றுவிடும் என்பதால்தான் இத்தனை கமுக்கமாக விசயத்தை வெளியே விடாமல் மொத்தக் குடும்பமும் அமைதி காத்தது.
***
திண்டுக்கல்லில் இருந்து கவி சௌமியாவைப் பெண் பார்க்க வந்து சென்றிருந்தனர். சௌமியா பிறர் ஆட்டுவிக்கும் பொம்மையாக மாறிப் போயிருந்தாள்.
மறுத்து அடம்பிடிக்கும் வேளைகளில் அடித்து அடிபணிய வைத்தனர்.
அவர்கள் வந்து சென்றதை அறிந்த பிறகும் ப்ருத்வி விடாமல் செழியனிடம் ஆள் அனுப்பி பெண் கேட்டவாறு இருந்தான்.
சௌமியாவின் எதிர்ப்புகள் எடுபடாததால் அமைதியாக நடப்பதை பார்த்து மனதிற்குள் விரக்தி நிலைக்குச் சென்று கொண்டிருந்தாள்.
வந்தவர்களுக்கு பேரழகியாக தெரிந்த சௌமியாவைக் கண்டதும் பிடித்துப் போயிருந்தது.
சோகமே உருவாக இருந்தவளிடமே அத்தனை வனப்பு!. நல்ல நிறம்! கருமையான அடர்ந்த புருவம்! நேரான நாசி! செதுக்கிய வதனம்! செந்தாமரைக் கன்னங்கள்! வெண்சங்கு கழுத்து! ஸ்ட்ராபெர்ரி உதடுகள்!
ஐந்தடி மூன்றங்குலத்தில் போதிய எடையோடு பிரம்மனின் அதி சிரத்தையோடுடனான அழகிய வார்ப்பாய் நேர்த்தியாக இருந்தவளை யாருக்குத்தான் பிடிக்காது!
மணமகனான ரமணனும் பெண் பார்க்க உடன் வந்திருந்தான். தீர்த்தபதியைப்போல படு மோசமில்லை. அதற்காக ப்ருத்விக்கு நிகராகவும் இல்லை.
மாப்பிள்ளை பற்றி கருத்துக் கணிப்பு நமக்காக மட்டுமே. ஏனெனில் சௌமியா யாரையும் கவனத்தில் கொள்ளவேயில்லை. அவள் நினைவுகள் முழுவதிலும் ப்ருத்வி மட்டுமே இருந்தான்.
மிளகாய் சிவப்பு நிற சாமுத்திரிகா பட்டுப் புடவையில் கரும்பச்சையில் சிறு பார்டர், அதே நிறத்தில் பிளவுஸ் அணிந்து பாந்தமாக வந்தவளை இமைக்க மறந்துபோய் பார்த்திருந்தனர் வந்தவர்கள்.
அலங்காரம் எதுவுமின்றி அப்சரஸ்ஸாக வந்து நின்றவளை ஆவென பார்த்திருந்தவர்களை நடப்பிற்கு கொண்டு வர எண்ணி, “வந்தவங்களுக்கு குடிக்கக் குடு” கையிலிருந்த தாம்பாளத்தை பேத்தியிடம் நீட்டினார் பிரபாவதி.
சோபாவில் அமர்ந்திருந்த ரமணனனின் தாய் எழுந்து வந்து சௌமியின் கைகளில் இருந்ததை டீப்பாயின் மீது வாங்கி வைத்துவிட்டு, அவளின் கைப் பிடித்து தனதருகே அமர வைத்து வருங்கால மருமகளை அழகு பார்த்தார்.
“எங்களுக்குப் பொண்ணை ரொம்பப் புடிச்சிருக்கு. எப்ப கல்யாணம் வச்சிக்கலாம்னு சொன்னா, அதற்கேத்த மாதிரி மற்ற ஏற்பாடுகளைப் பார்க்க ஆரம்பிச்சிரலாம்” மணமகனின் தாய் பேச,
“பையனோட தாத்தா முடியாம இருக்கறதால… எவ்வளவு சீக்கிரம் கல்யாணத்தை வச்சிக்கலாம்னு பொண்ணு வீட்ல சொல்றீங்களோ… அவ்ளோ சீக்கிரமா செய்திரலாம்” வரனின் வீட்டார் சார்பாக அவனது அத்தை பேச, செழியனது வீட்டாருக்கு அவர்களின் முடிவில் சந்தோசமே!
அன்றே… பூ வைப்பது, திருமண ஓலை ஒப்பந்தம், பந்தகால் நடுவது, பொன் உருக்கி விடுவது, ஆடைகள் எடுப்பது, பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பு, நிச்சயம், முகூர்த்தம், சாந்தி மூகூர்த்தம் மற்றும் வரவேற்பு என்று அனைத்திற்கும் நேரம், காலம் அனைத்தும் முடிவு செய்யப்பட்டது.
தங்களின் மனச் சுணக்கமறிந்து கடவுளாகவே அருகாமையில் திருமண நாளைக் கொணர்ந்ததாக நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர் சௌமியின் பெற்றோர்.
மணப்பெண்ணோ அதற்கு முற்றிலும் மாறான மனநிலையில் இருந்தாள்.
இன்னும் இருபதே நாளில் திருமணம்! அதற்குமுன் சில வைபவங்கள். அனைத்திற்கும் இருபக்கமும் முழுமனதோடு… ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை இனிதாகச் செய்ய முன்வந்ததோடு அன்று முதலே அதற்கான பணிகளை இருபக்க வீட்டாரும் துவங்கிவிட்டனர்.
உள்ளம் அழ, வெளியில் நடப்பதை ஏற்றுக்கொள்ளா மனம் வெதும்ப வெறுத்துப்போன நிலையில் அனைத்தையும் ஒட்டாத் தன்மையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் சௌமி.
தோழிகள் வீட்டிற்கு வந்து செல்வதற்குகூட தடை விதிக்கப்பட்டிருந்தது. ஓரளவிற்கு கணித்தார்கள். ஆனால் தெளிவாக விசயம் இதுதான் என்று தெரிந்திருக்கவில்லை.
சிரித்த முகம் அவளுக்கு! கேட்டதற்கு பதில் என்றளவில் இருந்தவளை… மற்றவர்கள் அதற்குமேல் சந்தேகம் கொள்ள வாய்ப்பே இல்லாமல் போயிருந்தது.
***
பெண் பார்க்கும் படலத்தைப்போல மற்ற விசேஷங்களில் சொந்தங்கள் இல்லாமல் போனால் அது கேள்வியாகும். அப்படிச் செய்வது முறையுமல்ல.
நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும் பூ வைக்கும் வைபவத்திற்கு செழியன் மதி தம்பதியினர் அலைபேசியில் கூறினார்கள்.
முறையாக முதலில் மாமான்(தாய்மாமா) முறைக்கு, அதன்பின் அத்தைகளுக்கு அடுத்து சம்பந்த முறைகளுக்கு என்று கூறத் துவங்கியதுமே, விசயம் கேள்விப்பட்ட பதினைந்தாவது நிமிடம் தேன்மொழி செழியனின் வீட்டை முற்றுகையிட்டிருந்தார்.
வீட்டில் அனைவரும் தேன்மொழியுடன் கிளம்பியபோது மறுத்துவிட்டு,
“நம்மை மதிச்சு ஒரு விசயம் செய்யலைன்னா… அப்ப அங்க நிலவரம் ஏதோ சரியில்லாமக்கூட போயிருக்கலாம். அதனால… நாம்போயி என்னானு பாத்துட்டு வந்திறேன்.
விசயம் பாதகம்னா நாமளும் விட்டுக் கொடுத்துத்தான் போகணும். பொண்ணு விசயம். அதனால எடுத்தோம் கவுத்தோம்னு எதையாவது செய்யப்போக காலம் முழுக்க அவங்க வீட்டாளுக முகத்தைப் பாக்க முடியாமக்கூடப் போகலாம்.
நிதானமா முடிவெடுப்போம். இன்னும் கல்யாணத்துக்கு எவ்ளோ நாளிருக்குன்னு பாத்துட்டு அதுக்கு ஏத்தமாதிரி செய்துக்குவோம்.
இல்லை… நமக்கு குடுக்கக் கூடாதுன்னு வீம்புக்கு பண்ணியிருந்தா… என்ன செய்யணுமோ… அதை வந்து கலந்து பேசி மேற்கொண்டு செய்துக்கலாம்” என்றுவிட்டு நேக்காகத் தனியே கிளம்பி தம்பி வீட்டிற்கு வந்திருந்தார் தேன்மொழி.
தம்பி செழியனை அவர் நன்கறிவார். எந்த நல்லது கெட்டது ஆனாலும், மனைவிக்கு சொல்கிறாரோ இல்லையோ, மூத்த தமக்கைக்குச் சொல்கிறாரோ இல்லையோ கண்டிப்பாக தேன்மொழியிடம் மறைக்காமல் உரைப்பார்.
அப்படிப்பட்ட தம்பிக்கு தன்னை, தன் வீட்டு சம்பந்தத்தை… அதுவும் பேசி வைத்திருந்த சம்பந்தத்தை… எப்படி மறுக்க முடியும்?
என்ன காரணமாக இருந்தாலும், தன்னிடம் கலந்து கொண்டிருக்க வேண்டுமல்லவா? இப்படிச் செய்துவிட்டானே! இப்டியான சிந்தனையோடு வந்திருந்தார் தேன்மொழி.
இதுவரை தீர்த்தபதிக்குப் பெண் தரமாட்டேன் என்றோ, அதற்கு மாறான கருத்து வரும்படியான பேச்சோ செழியன் வீட்டாரிடமிருந்து எழாமலிருந்த நிலையில் சட்டென இப்படி ஒரு முடிவை தன்னிடம் கலந்துகொள்ளாமல் தனது தம்பி எடுக்க வாய்ப்பேயில்லை என திடமாக நம்பினார் தேன்மொழி.
அதாவது தவிர்க்க இயலாத காரணம் எதுவோ ஒன்று இருப்பதை அறிந்து உடனே கொள்ளும் உத்வேகத்தில் தேன்மொழி இருந்தார்.
தேன்மொழி உள்ளே நுழைந்ததுமே, “செழியா… என்ன காரியம் பண்ணிட்ட…! அந்த வீட்ல இனி எப்டி என்னையும், நம்ம குடும்பத்தையும் நடத்துவாங்கன்னு ஒரு நிமிசம் யோசிச்சுப் பாத்துதான்… இப்டி ஒரு முடிவு எடுத்தியா?” கண்ணகிபோல வந்து நின்ற தமக்கையை சுரத்தின்றி பார்த்திருந்தார் செழியன்.
தமக்கையை எப்போதும் ஆர்ப்பாட்டமான சந்தோச முகத்தோடு வாவென அழைப்பவர் இன்று அவரைக் கண்டதும் தலையைக் குனிந்துகொண்டார்.
அதிலேயே அவர் சொல்லாத பல விசயங்கள் தமக்கைக்குப் புரிய வந்திருந்தது. அருகே வந்தவர் செழியனின் அருகே அமர்ந்து அவனது கையை மெல்ல ஆதரவாகத் தொட்டு, “என்ன தம்பி… என்ன ஆச்சு…” என்றபடியே சுற்றிலும் பார்வையைச் செலுத்தினார் தேன்மொழி.
மதியும் அடுக்களை வாசலில் நின்றபடி கண்களிலிருந்து நீர் திரண்டு கன்னங்களில் வழிய தலை குனிந்து நிற்க, தேன்மொழிக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது.
சௌமி கண்ணில்படவில்லை. பிரபாவதியும், கதிரவனும் ஆளுக்கொரு புறமாய் அமர்ந்திருந்தார்கள். கதிரவன் தனது வாயில் துண்டை வைத்துப் பொத்தியவாறு அமர்ந்திருந்தார்.
“தம்பீ… எதுனாலும் இந்த அக்காகிட்டத்தானப்பா ஓடி வந்து முதல்ல சொல்லுவ…! இந்தச் சிறுக்கி உசிரோட இருக்கும்போது… எப்டிப்பா மறந்த?” தமக்கையின் பேச்சைக் கேட்டு அழுகையில் குலுங்கிவிட்டார் செழியன்.
தனியொருவராக கரையெது என்றே தெரியாமல் தத்தளித்த தன்னை கரைசேர்க்கும் தோணியாக தமக்கை வந்துவிட்ட நிம்மதியில் தனது பாரம் இறக்கிடும் விதமாக அழுதுவிட்டார்.
இதை மனைவி முன் செய்ய அவரால் நிச்சயமாக முடியாது.
செழியனை அந்த நிலையில் பார்க்க தேன்மொழிக்கு ஈரக்குலையே நடுங்கியது. எதற்கும் அஞ்சாது எதிர்கொள்பவனுக்கு என்ன ஆயிற்று?
“எதுனாலும் இந்த அக்கா இருக்கேன் உனக்கு. உம் மனச்சுக்குள்ள போட்டுக் குமையாத… என்ன நடந்துச்சுனு சொல்லு எங்கிட்ட…” என்று கேட்டவரிடம் எப்படிச் சொல்வது என்று புரியாமல் மௌனம் காத்தார்.
யாரை யாரிடம் விட்டுக் குடுப்பது? ஒரு பக்கம் மகள். மற்றொரு பக்கம் உடன் பிறந்தவள். இருவரில் யாரையும் யாருக்காகவும் விட்டுக் குடுக்க முடியுமா?
செழியனுக்கு அத்தனை வேதனை! இப்படியொரு நாள் தன் வாழ்வில் வந்திருக்கத்தான் வேண்டுமா என்கிற வேதனை! உள்ளமெங்கும் எழுந்த வேதனை அரித்தது!
“எது நடந்திருந்தாலும் எங்கிட்டச் சொல்லு… என்ன செய்யணும்னு யோசிப்போம். அதவிட்டுட்டு இப்டி உடைஞ்சி போனா…
அதப் பாத்திட்டு இந்த உசிரு இருக்காதுப்பா…! அக்கா கேக்குறேன்ல…! சொல்லுப்பா…!” தேன்மொழியின் கண்களும் கலங்கியிருந்தது.
விசயத்தை செழியன் தயக்கமாக உரைக்க, தேன்மொழிக்கோ, ‘இதுக்குத்தானா’ என்பது போன்ற உடல்மொழியில் தம்பி கூறுவதை இடையுறாது பொறுமையாகக் கேட்டறிந்தார்.
செழியன் முடித்ததும், “வயசுல இது எல்லாம் கடந்து வரதுதான… செழியா… அதுக்கு இப்படி ஒரு முடிவை எதுக்கு அவசரப்பட்டு எடுத்த…
எங்கிட்டச் சொல்லியிருந்தா… தீர்த்தாவை வரச்சொல்லி இதே முகூர்த்தத்துல தாலியக் கட்டுடாண்ணா… கட்டாம… பய எங்க போயிருவான்!
அவசரப்பட்டுட்டியே தம்பி!” விசயம் ஒன்றுமேயில்லை என்று கூறிய தமக்கையை நிமிர்ந்து பார்த்தவர்,
“தீர்த்தாவுக்கு ஒரு மாமானா (தாய்மாமன் – மாமான்) நான் செய்யற துரோகமில்லையாக்கா அது. அதனாலதான் உம்முகத்துல முழிக்க அசிங்கப்பட்டு இந்த முடிவை எடுத்தேன்” தனது மனநிலையை தமக்கையிடம் உரைத்தார்.
மேலும், “தீர்த்தா கல்யாணம் பண்ணி விட்டுட்டு திரும்பவும் வெளிநாடு போயிருவான். அப்ப எதாவது தலைகுனிவா ஆகறமாதிரி நடந்திறக் கூடாதேன்னுதான்கா தூர தொலைவில இருந்தாலும் மாப்பிள்ளைகூட இருக்கற மாதிரி இடமாப் பாத்து பேசி முடிச்சேன்” என்ற செய்தியைக் கூறி முடித்ததும்,
தனது அறைக்குள்ளிருந்தபடி தந்தை கூறிய செய்தியை கேட்டவளுக்கு, தந்தை தன்னை எவ்வளவு தரக்குறைவாக எடைபோட்டிருக்கிறார் தனது செயலைக் கொண்டு என்று எண்ணி… அழுகை பீறிட்டு வர வெடித்துவிட்டாள் சௌமி.
சௌமியாவை அப்படிக் கூறியதும், “ச்சேய்… யாரப்போயி என்னனு நினைச்சடா? அது நம்ம ரத்தம். அப்டி பண்ணும்னு… எப்டி நீ சொல்லலாம்?
நீ பயந்து போயிட்டேன்னு வேணா சொல்லிக்கோ. அதுக்காக நீயா எதாவது பேசறதை எல்லாம் நான் கேட்டுக்கிட்டு சும்மா இருக்கமாட்டேன்” தேன்மொழி சௌமியாவின் வெடித்து அழும் சத்தம் கேட்டு தம்பியை அதட்டினார்.
மதிக்குமே செழியன் அவ்வாறு சௌமியை எடைபோட்டதை எண்ணி வருத்தமே உண்டாகியிருந்தது.
ஆனாலும் சௌமியா அழும் சத்தம் வெளியே வரை கேட்டது. யாரும் அவளின் அழுகையை கண்டுகொண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை.
தேன்மொழி… தம்பியின் பேச்சைக் கேட்டு சற்று நேரம் அமைதியாக யோசித்தார்.
நிறுத்துவதற்கான வாய்ப்புகளைப் பற்றி தம்பியிடம் பேச, தொழில் முறை பின்னடைவுகளைக் கூறினார் செழியன்.
“ரொம்ப இக்கட்டான நிலையில கொண்டு போயி நிறுத்திட்டியே தம்பி. முடிவெடுக்கறதுக்கு முன்ன எங்கூட கலந்திருந்திருக்கலாம்.” தேன்மொழி தனது வருத்தத்தை தம்பியிடம் தெரிவித்தார்.
மேலும் செழியன் தனது மகளை இத்தனை தூரம் யோசித்து எடுத்த முடிவை இனி மாற்றக்கூடாது என்று முடிவு செய்தவராக, “அதையே நினைச்சிட்டு இருக்காம மேற்கொண்டு வேலைகளைப் பாப்போம். எதுனாலும் உனக்கு தொணையா அக்கா இருக்கேன்.
தீர்த்தாவுக்குத் தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவான். அவனைத்தான் எப்டி சமாளிக்கப் போறேனோ தெரியலை…” சற்றுநேரம் திருமணம் சார்ந்த விசயங்களைப் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்ப, அந்த நேரம் தேன்மொழியின் அலைபேசிக்கு அழைப்பு வந்தது.
கனியின் மாமியாரும் தேன்மொழியின் தமக்கையான வானதிதான் அழைத்துக் கொண்டிருந்தார்.
“ஹலோ… என்ன தேனு? அங்க என்னாச்சு? நம்ம தீர்த்தாவுக்கு சௌமியப் பேசி வச்சிட்டு வேற எங்கையோ போயிக் குடுக்கறானாம்.
உனக்கு விசயம் தெரியுமா? இல்லை என்னை மாதிரித்தான் நீயும் இருக்கியா?” அவசரகதியில் வானதி கேட்டதும்,
தேன்மொழி சிரித்தவாறே, “அது ஒன்னுமில்லக்கா. நம்ம சௌமிக்கு சாதகத்துல தோசம்னு தம்பிக்கு(தீர்த்தபதிக்கு) வேணாம்னு சொன்னான் செழியன்.
சரி… அவஞ் சொல்றதும் சரிதான்னுட்டு வேற தோச சாதகமாப் பாத்து எல்லாரும் கலந்து பேசித்தான் முடிவெடுத்தோம்.
அப்டியெல்லாம் நம்மளை விட்டுக் குடுத்துருவானா? சேச்சே… அப்டியெல்லாம் இல்லைக்கா” என்று பேசியபடியே சென்ற தேன்மொழியைக் பார்த்த அந்த வீட்டினருக்கு, உள்ளே வந்தபோது இருந்த மிடுக்கென்ன… கோபமென்ன… தற்போது பிறரிடம் என்பதைவிட தன் சொந்த அக்காவிடமே தம்பியை விட்டுக்கொடுக்காத அவரின் சமாளிப்பென்ன…
தேன்மொழியின் செயலால் இறுக்கம் தளர்ந்து சௌமியைத் தவிர அனைவரின் முகத்திலும் சிறு புன்னகை மலர்ந்திருந்தது.
அழுகையை நிறுத்திவிட்டு அத்தை செல்வதையே தனது அறை சாளரம் வழியே பார்த்திருந்த சௌமி… இன்னும் நம்பிக்கையோடு ப்ருத்வி எப்படியாவது தன்னை மீட்டுவிடுவான் எனக் காத்திருக்கிறாள்!
***