பூவுக்குள் பூகம்பம் – 9
சௌமி கூறாவிட்டாலும் அவளின் நிலை வசுமதிக்குத் தெளிவாகப் புரிந்தது.
வீட்டிற்கு வரும்வரை அமைதிகாத்தவள் அதன்பின் மகளிடம், “உன்னை வளத்து ஆளாக்குனது என்னோட கடமை! இனியும் அது இருக்கு…! அதையும் தட்டிக்கழிக்காம செய்வேன்!
என்னோட கடமையை ஓரளவு நான் சரிவர செஞ்சிட்டேன்னு இதுநாள் வரை பெருமையா நினைச்சிட்டு இருந்தேன்.
ஆனா அது அப்டியில்லனு… இப்போ நீ பண்ண செயல்ல தெரிஞ்சிக்க முடிஞ்சுது.
உனக்கு உன்னோட நியாயம்!
ஆனா… எங்கிட்ட மட்டுமாவது உன்னோட எதிர்பார்ப்பை… உன்னோட கஷ்டத்தைச் சொல்லியிருக்கலாம்!
ஆரம்பத்துல ஒரு ஆதங்கத்துல விசயம் தெரிஞ்சு அடிச்சேன்தான். இல்லைங்கலை!
அதை நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட…! குழந்தை தப்பு பண்ணிட்டா உடனே கண்டிக்கணும். அப்பத்தான் அந்தக் குழந்தை தன்னோட தப்பைத் திருத்திக்க நினைக்கும்.
இல்லைனா… அந்த விசயம் ஒரு தப்பான முன்னுதாரணமா அந்தப் புள்ளையோட வாழ்க்கையில போயிரும்னு நினைச்சு எல்லா பேரண்ட்ஸ்ஸும் பண்றதை நானும் பண்ணேன்.
ஆனா… நீ… நம்ம அம்மா… நமக்கு எதிரினு ஃபிக்ஸ் ஆகியிருந்திருக்க! எதையும் யோசிக்கலை! எங்களை நினைப்பிலயே கொண்டு வரலை!
அருமை பெருமையா சீராட்டிப் பாராட்டி வளத்தவங்களை ஒரு நொடி நினைச்சுப் பாக்காம முடிவெடுத்திட்ட!
நல்ல காலம் இத்தோட போச்சு… இதுவே… நிறைய பிரச்சனைகளோட நீ பிழைச்சிருந்தா…! காலம் முழுக்க ஒரு ஊனமான நோயாளியா எந்த மாதிரியான நிலையில இருந்திருப்ப…!
மொத்தமா போயிட்டா… யாருக்கு நஷ்டம்னு ஒரு நிமிசம் யோசிச்சுப் பாத்தியா?
இதுக்கா… ராப் பகலா கண்ணு முழிச்சி தூக்கம் கெட்டு, ஆசைப்பட்டதையெல்லாம் பால்குடி நிப்பாட்றவரை சாப்பிடாம… வளக்குறோம்!
உனக்கும் பிள்ளை குட்டினு வரும்போதுதான் நான் இப்ப சொல்றதெல்லாம் புரியும். அதுவரை நான் பேசுறது எல்லாம் கேக்க உனக்கு எரிச்சலாத்தான் இருக்கும்.
பொண்ணுக்கு பொறுமை… நிதானம்… வைராக்கியம் இது மூனும் கண்டிப்பா வேணும். அது இல்லைன்னா… இப்டித்தான்!
எல்லாத்துலயும் அவசரம்! வாழ… அனுபவிக்க… சாக… இப்டி… எல்லாத்துலயும் அவசரம்! இந்தக் காலப் புள்ளைங்க பெரும்பாலும் இப்டித்தான் வளருரீங்க…
உங்கப்பா எடுத்த முடிவையெல்லாம் நீ ஆமோதிக்கணும்னு நான் சொல்லலை. ஆனா… உன்னோட மனசுல இருக்கறதை எங்கிட்டயாவது இனி மறைக்காம சொல்லு…
இல்ல… இனியும் இப்டித்தான் எதாவது செய்வேன்னா… உயிரு ஊசலாடிக்கிட்டு கிடக்கிற மாதிரி இல்லாம… ஒரேடியாப் போயிச் சேந்திர மாதிரிப் பண்ணிரு…!” என்ற வசுமதிக்கு அவரையும் மீறி அழுகை வந்தது.
அழுகையோடு, “முடியலைடீ… பெத்த வயிறு… எதையெல்லாம் பாக்கக் கூடாதுன்னு நினைக்குமோ… அதையெல்லாம் என்னைப் பாக்க வச்சிட்ட…
வாழுங் காலத்துல பெத்தவங்களுக்கு வரவே கூடாதது ஒன்னே ஒன்னுதான். அது புத்திரசோகம்! புள்ளைங்களை காவு குடுத்துட்டு… பெத்தவ தவிக்கிற தவிப்பு உங்களுக்கெல்லாம் இப்பப் புரியாது.
இனிமேலாவது புத்தியோட இருப்பேன்னு நம்பறேன். உன்னைப் பாத்துக்கோ…” என்று எழுந்து செல்ல, தாயின் பின்னோடு சென்று தாயைக் கட்டிக் கொண்டு, “சாரிம்மா… நான் என்னோட கஷ்டத்தை மட்டுந்தான் நினைச்சுப் பாத்தேன். அதுதான் பெருசா தெரிஞ்சது.
உங்களை யோசிக்காதது தப்புதான்மா” மகளின் அழுகையில் தனது கண்களிலிருந்து கன்னங்களில் நீர் வழிய, மகளின் முதுகை ஆறுதலாகத் தடவிக் கொடுத்தார் வசுமதி.
அத்தோடு, “மனசுல ஒருத்தவங்களை நினைச்சிட்டு வேற ஒருத்தரோட என்னால வாழ முடியும்னு தோணலைம்மா. அதனாலதான் இப்டி அவசரப்பட்டுட்டேன். சாரிம்மா!” சௌமி விளக்க,
“நானும் உங்கப்பாகிட்ட உனக்காகப் பேசியிருக்கணும். நீ பேசாம இருக்கவும் உனக்கும் இந்த சம்பந்தத்துல விரும்பம்தான்னு நினைச்சிட்டேன். ஒரு வார்த்தை கேக்காம விட்டது என்னோட தப்புதான்!” மதி தான் நினைத்ததைக் கூற, சௌமிக்குத்தான் ‘அய்யோ’ என்றிருந்தது.
“கொஞ்ச நாள் போகட்டும். அப்புறம் இதைப்பத்தி யோசிக்கலாம். ஒழுங்கா காலேஜ் போயிட்டு வருவேன்னா… பாட்டி வீட்ல தங்கி… டிகிரிய முதல்ல முடிக்கப் பாரு…” தாய் கூறியதை ஆமோதித்து முதன் முறையாகத் தலையாட்டினாள் சௌமி.
***
சிபிக்கு நடந்த விசயங்களைக் கேட்டதும் முதலில் பதறிப் போயிருந்தான். ஒரு மருத்துவனாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் அடையும் துன்பங்களை அவ்வப்போது நேரில் பார்ப்பவன் அல்லவா.
சௌமி மருத்துவனையில் தீவிர சிசிச்சைப் பிரிவில் இருந்த மருத்துவரோடு பேசி அவளின் நிலையைத் தெரிந்து கொண்ட பின்புதான் சற்று ஆறுதலாக உணர்ந்தான்.
கவியை யாரென்று தெரியாமல் இத்தனை தூரம் அவன் அவள் உடல்நிலையைப் பற்றி அங்கிருந்த மருத்துவர்கள் வாயிலாகக் கேட்டது எதுவும் அவனது வீட்டினருக்குத் தவறாகத் தோன்றவில்லை.
“ஓரளவு சேஃப் ஷோன்ல கவனிச்சு சரியான நேரத்தில காப்பாத்தியாச்சு. இன்னும் நாலு செகண்ட் போயிருந்தாக்கூட கஷ்டந்தான்” என்று வீட்டினரிடம் சௌமியின் உடல் விசயத்தைத் தெளிவுபடுத்தினான் ஒரு மருத்துவனாக.
பொதுவாக அவனது நோயாளிகளின் உடல்நிலையில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்பவன் சிபி என்பதால், அதைபோலவே தனக்குத் தெரிந்த குடும்பத்துப் பெண் என்கிற நிலையில் விசாரித்து அறிந்துகொள்கிறான் என்று சாதாரணமாகவே எடுத்துக்கொண்டனர்.
சிபிக்கு அதன்பின் அடுத்தடுத்து பணிகள் இருந்தமையால் வேறு சிந்தனை எதுவுமின்றி அதில் கவனமாகியிருந்தான்.
அடுத்தடுத்த நாள்களிலும் அவ்வாறே சென்றிருக்க, சற்று ஓய்வாக வீட்டில் இருந்தவன் தனது மொபைல் கேலரியில் இருந்த படங்களைப் பார்வையிடும்போது கவி சௌமியாவைப் பார்க்க நேரிட்டது.
அப்போது, ‘இவளுக்கு என்ன பிரச்சனை? எதுக்கு சூயிசைட் அட்டெண்ட் பண்ணணும். சரியா அந்த நேரத்தில மகி எதுக்கு காப்பாத்தணும்? இந்த விசயம் எதனால என்னோட கவனத்துக்கு வரணும்? என்ன காரணம் இதற்குப் பின்னால இருக்கு’ இப்படிச் சிந்தனை நீண்டது சிபிக்கு.
ஜெயமாலினிக்கு விசயங்களை தோண்டித் துருவி அறிந்து கொள்வதிலெல்லாம் ஆர்வமில்லை. திருமணம் நின்றதும், ஏதோ பிரச்சனை அதற்குமேல் அங்கிருக்க மனம் ஒப்பவில்லை.
அனைவரும் மருத்துவமனையே தஞ்சமென்றிருக்க வானதி எவ்வளவோ கூறியும் தாமதியாது சௌமியின் உடலில் முன்னேற்றம் இருப்பதை உறுதி செய்துகொண்டதும், சென்னைக்கு மகனோடு ட்ரெயின் ஏறியிருந்தார்.
இடையில் இரண்டு முறை பல்லவன் பேசும்போது, “ம்மா நீங்க வர ரொம்ப நாளாகுமா” என்று கேட்டது வேறு மாலினிக்கு வருத்தமாகிப் போயிருந்தது.
கணவரிடம் தான் அன்று கிளம்பி நாளை வருகிறேன் என்று கூற அழைக்க… அவர்தான் பதறிப்போய் என்ன விசயம் என்று கேட்டார்.
“விசயத்தை நேருல வந்து சொல்றேன் சிபிப்பா. வைக்கிறேன்” வைத்திருந்தார் மாலினி.
அருகே இருந்த பல்லவன் என்னவென ஆவலோடு கேட்டதும், “உங்கம்மா நாளைக்கு காலையில வரலாம்” என்றதும், “நானும் நாளைக்கு உங்ககூட அம்மாவை கூப்பிட வரேன்” என்று அப்போதே ஆயத்தமாகியிருந்தான்.
சிபிக்கு தாய் அடுத்த நாள் வருவது எதுவும் தெரிந்திருக்கவில்லை. தாய் சென்னை வந்ததை தாமதமாகவே அறிந்துகொண்டிருந்தான் சிபி. அவனுக்கு அவர்கள் சொல்லிவிட்டுச் சென்ற தேதிக்குமுன் செனனை திரும்பியது ஆச்சர்யம்.
அதனால், “என்னம்மா? இவ்ளோ சீக்கிரம் ரிட்டர்ன்?” என்று சாதாரணமாகத்தான் வினவியிருந்தான்.
அப்போது மணப்பெண் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் இருப்பதை மட்டும் கூறிவிட்டு, அதற்குமேல் தனக்கு எதுவும் தெரியாது என்பதையும் கூறியிருந்தார் மாலினி.
அனைத்தையும் அப்போது அவசரகதியில் கேட்டுக்கொண்டு, உடனே மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து விசாரித்து சௌமியின் நலனில் குறைவருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்பதையும் கூறிவிட்டுச் சென்றிருந்தவன், இன்று அவளின் புகைப்படத்தைப் பார்த்தபடியே சிந்தனைகளில் மூழ்கியிருந்தான்.
எத்தனையோ பெண்களை எவ்வளவோ சந்தர்ப்பங்களில் மிகவும் நெருக்கமாக, அவர்களாகவே தன்மீது வந்து விழுந்தாலும் அதனைப் பொருட்படுத்தாது கடந்து சென்ற தான்… முதன் முறையாக ஒரு திருமணத் தேதி குறித்த பெண்ணின் படத்தை தனியே க்ளிக் செய்து தனது எதிர்பார்ப்பிற்காக சேமித்தது உறுத்தலைத் தந்தது.
‘ரெண்டு பேருமா இருந்த படத்துல அவளை மட்டும் தனியா எடுக்கணும்னு ஏன் தோணித்துன்னு இப்ப எனக்குப் புரியலை.
ஆனா… அவ உடல்நிலையை நினைச்சு வருத்தப்பட்ட அளவுக்கு, அவளோட மேரேஜ் நின்னதுல நிச்சயமா எனக்கு வருத்தமில்லை’ எனும் அவனது எண்ணமே அவனுக்குப் புரியாததாய்… விளங்காததாய்…
நிச்சயமாக இந்த நிகழ்விற்கும் தனக்கும் ஏதோ சம்பந்தம் பின்னாலில் உண்டாகக்கூடும் எனத் தெரியாதபோதும் அவனுக்குள் அதுசார்ந்த சிந்தனை உதயமாகியிருந்தது.
அதற்கான பதில் சிபிக்கு விரைவில் கிடைக்குமா?
***
இதற்கிடையில் தீர்த்தாவிற்கு சௌமியாவின் தற்கொலை முயற்சி அவனது நண்பர்கள் மூலம் தெரிய வந்திருக்க, தாயிக்கு அழைத்துக் கேட்டான்.
ஆரம்பத்தில் மழுப்பிய தேன்மொழி, மகனின் வற்புறுத்தலால் சில விசயங்களை மறைத்துவிட்டு மற்றதையெல்லாம் அப்படியே கூறியிருந்தார்.
“எனக்குன்னு பேசி வச்சிருக்க, என்ன தைரியம் இருந்தா வேற ஒருத்தங் கூடத் தெரிஞ்சா? வரேன் வந்து பேசிக்கறேன்” தாயிடம் நியாயம் கேட்டவன் வந்ததும் நாட்டாமையாகும் முயற்சியில் தீவிரமாக இருந்தான் தீர்த்தா.
தேன்மொழிக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. மகனிடம் மழுப்பலாகப் பேச, “உங்க தொம்பி மகன்னு விட்டுக் குடுக்காமப் பேசுறீங்களோ?
இதுக்கு முன்ன ஜாதகம் சரியில்லை… அது இதுன்னு எங்கிட்டயே பீலா விட்டவங்கதான… இனி உங்களையெல்லாம் நான் நம்பறதா இல்லை.
எதுனாலும் ஊருல வந்து மாமாகிட்டயே பேசிக்கறேன்” என்று தீர்மானமாகக் கூறியவன் அடுத்த ஒரு வாரத்தில் இராமேஸ்வரம் வருவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தான்.
தேன்மொழிக்கோ, ‘உண்மையச் சொன்னா விலகிப் போவான்னு நினைச்சு சொன்னா… சரியான கழிசடை வம்சங்கறதைக் காட்டிக் குடுக்குது பயபுள்ளை.
அந்தப் புள்ளையவே வேணுனு கேட்டு கட்டாயக் கல்யாணம் பண்ணி… வாழ்க்கையில கரையேற முடியுமா?
வேற ஒருத்தவனை நினைச்சிட்டு இருக்கறவளை நம்ம வீட்ல கூட்டியாந்து என்ன செய்ய முடியும்னு முட்டாப் பயலுக்குப் புரியலையே’ புலம்பித் தீர்த்தார்.
தேன்மொழி கவி சௌமியாவின் உண்மையான விசயத்தை மகனிடம் கூறியதை எண்ணி வருந்தியபடி, ‘வரட்டும். வந்தபின்ன நேருல எடுத்துச் சொல்லிப் புரிய வைப்போம்’ மகனின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தார் தேன்மொழி.
***
ப்ருத்வி வங்கி அதிகாரி மூலம் அளித்த எண்ணுக்கு அழைத்து செழியன் பேச, “சாரி ராங்க் நம்பர்” என்று எதிர்முனையில் வைத்திருந்தார் ப்ருத்வியின் தந்தை கேசவன்.
மகனிடம் உடனே அழைத்து, “இது அந்தப் பொண்ணு அப்பன் நம்பரு தான?” எனக் கேட்டு உறுதிசெய்தி கொண்டவர்,
மகனிடமே, “விசயம் என்னானு பாரு” உத்தரவிட்டிருந்தார். ப்ருத்வி விசாரித்ததில் சௌமி தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்திருந்தது.
இதனைக் கூறினால் தந்தை தனக்காகச் சென்று பெண் கேட்பார் என்று உடனடியாகக் கூற, அவரோ அதற்கு மாறாக மகனிடம் பேசினார்.
“என்னன்னாலும் இனி அந்தப் பொண்ணு உனக்கு வேணாம் ப்ருத்வி. ஒருத்தவனோட கல்யாணம் வரை போனவளை கட்டிக் கூட்டிட்டு வந்தா… நாளைக்கு நம்மைத்தான் முன்ன விட்ட பின்ன பேசுவானுங்க. அது காலத்துக்கும் அசிங்கம்!
அதனால அந்தப் பொண்ணை நீ இனி மறந்திரு… நம்ம இப்ப பாத்திருக்கறது அந்த இராமேஸ்வரம் பொண்ணை விட அழகு. அவங்க வீட்டைக் காட்டிலும் இப்ப நாம பாத்திருக்கறது நல்ல வசதியும்கூட.
வீட்டுக்கு ஒரே புள்ளை வேற. அதனால போனதை நினைச்சி வருத்தப்படாத. வரப்போறதை சந்தோசமா ஏத்துக்கிட்டு வாழப் பாரு” என்று திட்டவட்டமாகப் பேசியிருந்தார்.
ப்ருத்வியும் அரைமனதாக சரியென்று ஆமோதித்திருந்தான்.
நான்கைந்து முறை செழியன் முயற்சித்தும் ஒரே பதில்தான்.
மாமனாரிடம் பேசி, ப்ருத்வியை சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யும்படி கேட்க, முதலில் அந்தஸ்து கிளை என்று பேசிய கதிரவன், “சரி மாப்பிள்ளை. நான் பாத்துப் பேசிட்டு உங்களுக்கு கூப்பிடறேன்” பவ்வியமாகக் கூறிவிட்டு வைத்திருந்தார். செழியனுக்கு மாமனாரின் நிலையைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
ப்ருத்வியின் வீட்டிற்கு தான் நேரடியாகச் செல்ல தயக்கமாக இருந்ததால், தனது உறவினர் மூலம் தூது அனுப்பினார் கதிரவன்.
சரியான பதில் எதுவும் கிடைக்கப் பெறாத நிலையில், மற்றொரு நபரின் மூலமாகப் பேசினார். அதுவும் கிணற்றுக்குள் போட்ட கல்லாக போயிருக்க, நேரடியாக தானே சென்றுவர முடிவெடுத்துவிட்டார்.
இது பிறர் விசயமென்றால் இத்தனை ஈடுபாடு காட்டியிருக்கமாட்டார். இது பேத்தியின் வாழ்க்கை சார்ந்தது என்பதால் இத்தனை தூரம் மெனக்கெட விழைந்தார் கதிரவன்.
ப்ருத்வியின் தந்தையை அவரது வீட்டிலேயே சென்று சந்திக்க, “அப்போ ஒத்து வராதுன்னு சொன்ன கிளையெல்லாம் இனி ஒத்து வந்துருமா?” ஈஸி சேரில் சாய்ந்திருந்தவாறே இளக்காரமாக வந்தது குரல்.
கதிரவனுக்கு எதுவும் பதில் பேச முடியாத நிலை.
அமைதியாக இருந்தவர், “இந்தளவு ரெண்டும் மனசுல நினைச்சிட்டு இருந்திருக்கும்னு தெரியலை…” என இழுத்தார்.
“நீங்க ஒத்து வரலைன்னு சொன்னதால, நாங்க வேற எடத்துல பொண்ணு பாத்து பேசி முடிவு பண்ணிட்டோமே” செழியன் சொன்ன பதிலையே கதிரவனிடம் சொல்லி திருப்பி அனுப்பியிருந்தார் கேசவன்.
ஆனால் கதிரவன் அத்தோடு விடாமல், வங்கிப் பணியில் இருந்த ப்ருத்வியை நேரில் சந்தித்துப் பேசினார்.
“எதுனாலும் நீங்க அப்பாகிட்டப் பேசிக்கங்க” ஒற்றை வார்த்தையில் கூறிவிட்டு அகன்றவனைப் பின்தொடர்ந்த கதிரவன்,
“மாப்பிள்ளை…” என்றதும் முகத்தைச் சுருக்கியபடி ப்ருத்வி கதிரவனைத் திரும்பிப் பார்க்க, கையை பின்புறமாகக் காட்டி தான் செழியனைக் குறிப்பிடுவதை செய்கையால் காட்டியவர், “உங்களை நேருல பாக்கணும்னு சொன்னாப்ள. பாத்து அவருகிட்ட பேசினா நல்லாயிருக்கும்” இழுக்க,
“எங்கிட்டப் பேச இனி என்ன இருக்கு! எதுனாலும் அப்பாகிட்ட வந்து பேசச் சொல்லுங்க!” முடித்துவிட்டான் ப்ருத்வி.
மருமகனிடம் நடந்த விசயங்களை அப்படியே சொல்ல, “சரி மாமா. நான்னா வந்து பாக்கறேன்” என்றதோடு மறுநாளே இராமநாதபுரம் கிளை வங்கிக்கு ப்ருத்வியைச் சந்திக்க வந்திருந்தார் செழியன்.
வேலையாக இருந்தவன், “கொஞ்சம் வயிட் பண்ணுங்க சார். இதோ வந்திரேன்” எனக் கூறிவிட்டு பத்து நிமிடத்தில் செழியனிருக்கும் இடத்திற்கு வந்தவன்,
“காண்டீன்ல போயி டீ சாப்டுட்டே பேசலாம் சார்” செழியனை அழைத்துச் சென்றான்.
செழியன், “மாமா சொன்னாங்க. அப்பா உங்களுக்கு பொண்ணு பாத்து ஏற்பாடு பண்ணிட்டதா… ஆனா சௌமி உங்களை நினைச்சு… சூயிசைட் அட்டெண்ட் பண்ணி கல்யாணம் நின்னு போச்சு.” விசயம் பேசவே தர்மசங்கடமாக இருந்தாலும், தனக்கு மகளின் வாழ்க்கை முக்கியம் என்றெண்ணி ப்ருத்வியிடம் பேசிக் கொண்டிருந்தார் செழியன்.
செழியனின் பேச்சை மிகவும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான் ப்ருத்வி.
மகள் தற்கொலைக்கு முயன்றதைக் கேட்டதும் ப்ருத்வியின் கண்களில் அவனையும் மீறி நீர் திரண்டதைக் கண்டதும் நம்பிக்கை செழியனின் மனதில் துளிர்விட்டது.
அதே நம்பிக்கையோடு, “பேசி வச்சிட்டு கல்யாணத்துக்கு முன்ன நிச்சயம்னு முடிவு பண்ணியிருக்கீங்கன்னா…
உங்களுக்குப் பாத்திருக்க பொண்ணு வீட்ல வந்து நானே மன்னிப்புக் கேட்டு, அந்தப் பொண்ணோட கல்யாண செலவு முழுக்க நானே ஏத்துக்கறேன்னு சொல்லி பேசறேன் தம்பி.
ஆனா நாங்க பண்ணதை பெருசு பண்ணாம, எம்பொண்ணை நீங்க மனசார ஏத்துக்கணும்.
நீங்க வந்து என்னைப் பாத்தது, பேசினது எதுவுமே எம்பொண்ணுக்கு இதுவரை தெரியாது. உங்களையே நினச்சிட்டு இருந்த புள்ளையப் புரிஞ்சிக்கலை நான்.
அவசரப்பட்டு… கடைசியில வேதனை… வலின்னு… நிறைய அனுபவிச்சிருச்சு எம்பொண்ணு. இனி உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்கணும் அது.
காலங்கடந்து புரிஞ்சிக்கிட்டு உங்க ரெண்டு பேத்தையும் சேத்து வைக்கணும்னு விதி இருந்திருக்கு. இல்லைன்னா… இப்டியெல்லாம் நடந்திருக்குமா?” என்பதுபோல செழியன் ப்ருத்வியிடம் நிறைய பேசிக் கொண்டிருந்தார்.
அதில் எப்படியாவது ப்ருத்விக்கு கவி சௌமியாவை திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்கிற அவசரம் இருந்தது.
ப்ருத்விக்கு செழியனின் பேச்சின் திசையை வைத்தே, எதற்காக இவர் தன்னிடம் இப்படிப் பேசுகிறார் என்பது புரிந்தாலும் அதனால் எழுந்த தனது உணர்வை முகத்தில் காட்டாமல் கவனமாக கேட்டுக்கொண்டு இருந்தான்.
செழியன் ப்ருத்வியின் மறுப்பை விரும்பவில்லை என்பதை ப்ருத்வியும் கண்டுகொண்டான்.
இதுவரை எடுத்துக்கொண்ட ப்ருத்வியின் முயற்சியைக் கொண்டும், சற்றுமுன் தன் மகளுக்காக கண்களில் நீர்த் திரையிட இருந்தவனது தோற்றத்தினையும் தனக்குச் சாதகமாகக் கணக்குப் போட்டு நம்பிக்கையோடு ப்ருத்வியின் முகத்தை நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்போடு பார்த்திருந்தார் செழியன்.
செழியனுக்கு ப்ருத்வி ஆமோதிப்பாக பதில் கூறினானா?
***