PMV.17
கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதிலொரு அமைதி
நீயோ கிளிப் பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைப்பேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
கைகளைக் கட்டிக் கொண்டு இறுகிப்போய் தரையையே வெறித்துக் கொண்டிருந்தான் சக்தி.
இதுவரைக்குமே அவளது முகமும் பாறையாய் எந்த ஒரு உணர்ச்சியையும் பிரதிபலிக்கவில்லை. ஆனால் கொல்லன் பட்டறையாய் அவள் உள்ளத்தில் அனல் தகிப்பதை உணரமுடிந்தது அவனால். அதற்கு சற்றும் குறைவில்லாமல் அலைகடலென கொந்தளிப்பு அவனுக்குள்ளும். கடந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டாலும், பச்சை ரணமாய் வலித்தது தன்னவளுக்காக இவனுக்குள்ளும்.
உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருப்பவளை தென்றலாய் வருடி, மழையாய்த்தழுவி அவளைக் குளிர்விக்கும் ஆவல் புயலாய் எழுந்தது அவனுக்குள். அவளை மடியில் கிடத்தி தலைகோத எழுந்த ஆவலை தனக்குள்ளே அடக்கிக் கொண்டான். தோள்சாய்த்து கன்னம் தடவி உச்சிமுகர ஆசைதான். இடமறிந்து இதயத் தவிப்பை இளைப்பாறவிட்டான் சற்று.
பள்ளிசீருடையில் சிறுதவறுக்காகத் தனக்குத்தானே தலையில் குட்டிக்கொண்ட குட்டிப்பெண் கண்முன் வந்து சென்றாள். அம்மாவிடம் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் மானாய் மிரண்ட விழிகளில் சிறிது நேரத்திலேயே, சிறுவலியும் பொறுக்கமாட்டாமல் முழங்கை வலியில் முகம்சுழித்து புருவம் சுருக்கி கண்மூடிய கண்களும்… வெள்ளந்தியாய் சிரித்து, வெகுளியாய் பதில் பேசியவளும் நினைவிற்குவர அந்த வயதில் அவள் பட்ட துன்பமும் கூடவே வந்து நெருஞ்சிமுள்ளாய் குத்திவிட்டு சென்றது. சிறிது நேரபழக்கத்திலேயே அவள் ஒரு குழந்தை என்பதை தன்னால் அன்று உணர முடிந்ததே. அது ஏன் பெற்றவர்களுக்கும், கட்டினவனுக்கும் உரைக்கவில்லை என ஆத்திரம் எழுந்தது.
அன்று… அத்தனை பாவனைகளையும் காட்டிச்சென்ற, கோழிக்குண்டு கண்களில், இன்று… எழுதப்படாத வெற்றுக் காகிதம் போல எந்த உணர்வையும் படிக்க முடியவில்லை அவனால்.
“அப்ப இருந்து தான் இப்படி ஆயிட்டேன்.” என்றாள்.
“எப்படி?” என்றவாறு கேள்வியாய் சக்திமாறன் பார்க்க,
“இதோ… இப்படிதான். எந்த உணர்ச்சியும் சட்டுனு மண்டைக்குள்ள ஏறாது. சந்தோஷமோ, துக்கமோ மெதுவாத்தான் உணர்வுக்கு வரும். ஆனா அகுக்குப்பின்னாடி அதுல இருந்து லேசுல வெளிவரமுடியாது. பாறாங்கல்லா மனசுல போட்டு அழுத்திட்டே கெடக்கும். அதனால் தான் துக்கம்னா உடனே அழுது வெளியேத்தணும்னு சொல்றது. இல்லைனா இப்படித்தான் அம்மா இறந்த அன்னைக்கும் கதைபேசிட்டு இருப்போம்.” வேம்பாய்க் கசந்துவந்த உயிர்ப்பில்லாத அவள் வார்த்தைகளில் இவன்தான் ஜீவனற்றுப் போனான். மூளை தன்னை தற்காத்துக் கொள்ள செய்யும் உத்தி இது. தன்னால் ஒரு விஷயத்தை கிரகிக்க முடியவில்லை எனில் உச்சபட்சநிலையில் வேலைநிறுத்தும் செய்து விடுகிறது. அதன் விளைவு இப்பொழுதும் அவளுக்குள்.
இளங்குறுத்து கருக்கப்பட்டு விட்டது. அதில் உணர்ச்சிகளைக் கொண்டு வரவேண்டும். எப்படி என்று தான் தெரியவில்லை.
“கொஞ்ச நாள் ட்ரீட்மென்ட் எடுத்த பின்னாடிதான் என்னால எங்கப்பாகிட்டயே சகஜமாக முடிந்தது. அவங்க என்னைய அத்துவிட சாதகமா இருந்ததும், எனக்கு விடுதலை வாங்கிக் கொடுத்ததுமே அந்த ட்ரீட்மென்ட் தான்.” என்றவளை நெஞ்சம் கசங்க, வேதனையோடு பார்த்து வைத்தான்.
**********************
“இப்ப நானே உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைக்க முடியும். ஆனா இந்த பொண்ணோட மனநிலைய யோசிச்சு அமைதியா இருக்கே. மேல மேல பிரச்சினை கொடுக்க வேண்டாமேன்னு பாக்குறே.”
டாக்டர் சற்று குரலை உயர்த்தி கடினமாககக் கூற, அவர் முன் சொர்ணமும், சிதம்பரமும் அமைதியாக அமர்ந்திருந்தனர். மூன்றாவது முறையாக இங்கு வந்திருக்கின்றனர்… பொம்மியை அழைத்துக் கொண்டு. மகளின் கவலையில் கௌரி மிகவும் உழண்டு விட்டார். வெளியே எங்கும் செல்வதில்லை.
இப்பொழுதுதான் பொம்மியும் கொஞ்சம் சகஜமாகி இருக்கிறாள். மூன்று மாதங்கள் கடந்துவிட்டது.
வீட்டிற்கு அழைத்து வந்த புதிதில் ஆண்கள் யாரிடமும் முகம் கொடுத்துப் பேசவில்லை. அத்தை மகன்கள் அனைவரும் கிட்டத்தட்ட அவளுக்கு தந்தை வயது இருக்கும். அவர்களைப் பார்த்தாலே எழுந்து உள்ளே சென்று விடுவாள். தந்தையிடமும் நெருங்கவில்லை. அவர் அருகில் வந்தாலே கால்களைக் குறுக்கிக் கட்டிகொண்டு அமர்ந்து விடுவாள். மனதால் மரித்துப் போவார் சிதம்பரம். வயதிற்கு வந்தபிறகும் கூட தந்தையைக் கண்டாலே, ஓடிவந்து தோளில் தொங்கிக்கொண்டு பள்ளியில் நடந்தது முதல், தாயை புகார் அளித்து வம்பிழுப்பது என வாய்ஓயாமல் பேசுபவள், இப்பொழுதெல்லாம் கேட்டதற்கு மட்டும் பதில் சொல்கிறாள். அதுவும் எங்கோ வெறித்துக் கொண்டு. அன்னையை விட்டு விலகுவதில்லை.
காய்ச்சலுக்கு வைத்தியம் பார்க்க அழைத்துச் சென்ற இடத்தில் இவளது நிலையைப்பார்த்து, பொதுமருத்துவர்தான் சைக்யாட்ரிஸ்ட்டை பார்க்குமாறு ஆலோசனை கூறினார்.
“டாக்டர் நீங்க சொல்றதப் பாத்தா எம்மகளுக்கு மனக்கோளாறா?” என சிதம்பரம் பதற,
“அதெல்லாம் இல்லைங்க. கைகால் மாதிரி தாங்க மூளையும். கைகாலுக்கு ஒரு பிரச்சினைனா பாக்க மாட்டோமா? அது மாதிரி தான் இதுவும். உடனே ஏன் வேறமாதிரி நினைக்கணும்.” என ஆலோசனை கூறியவர் அவருக்குத் தெரிந்த பெண் சைக்யாட்ரிஸ்டை பரிந்துரைத்தார். மூளையும்… இரத்தமும் சதையுமாலான ஒரு உடல்உறுப்புதான். மற்ற உறுப்புகள் பாதிக்கப்படுவது போலத்தான் மூளையும் பாதிக்கப்படும் என்பதை அவ்வளவு இலகுவாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
சைக்கியாட்ரிஸ்ட் தான் பொம்மியின் மனநிலையை விளக்கிக் கூறினார்.
அவர் அனுபவத்தில் இது மாதிரி பல கண்டிருப்பார். முதல் முறை வந்தபொழுது யாரிடமும் பேசாதவள், மருத்துவரிடமும் பேசவில்லை.
அதிர்ச்சியில் இறுகிப்போன மூளைத்தசைகளை இலகுவாக்கும் மருந்துகளை மட்டும் கொடுத்து அனுப்பி வைத்தார். மறுமுறை வந்தபொழுது கொஞ்சம் பேசினாள். அவளிடம் பேசியதைக் கொண்டு அவளது நிலையை ஊகித்தவர் தான் சிம்பரத்தையும், அத்தையையும் பிடித்து காய்ச்சிக் கொண்டிருக்கிறார்.
“மைனர் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க. அவ மனசளவுல குழந்தையா இருந்திருக்கா. கணவன் மனைவி உறவுன்னா என்னானே தெரியல.” எனக் கூற,
“ஐயோ டாக்டர்… அவ சின்னப்புள்ள இல்ல. வயசுக்கு வந்துட்டா.” என சொர்ணம் வேகமாக பதில் கூற,
“ஏம்மா, வயசுக்கு வந்துட்டா எல்லாம் தெரிஞ்சுறுமா? இன்னைக்கும் பொண்ணுகளுக்கு கர்பப்பை துவாரம் வேற, சிறுநீர்ப்பை துவாரம் வேறன்னு தெரியாமலே செத்துப்போனவங்க ரொம்பபேர் மா. அதுக்காக எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்க சொல்லல. அந்த அளவுக்கு இன்னும் நாம வளறவும் இல்ல. வெளிநாட்டுல மாதிரி நம்ம பிள்ளைகளுக்கு இன்னும் பாய்ஃபிரன்ட் இல்ல… கேர்ள்ஃப்ரெண்ட் இல்லைனு கவலைப்பட வேண்டாம். ஆனா அவளுக்கு விவரம் வந்த பின்னாடி கட்டிக் கொடுக்கலாம்ல.” எனக் கேட்க
‘ஐயே!! இந்த டாக்டரம்மா என்ன அண்ணே முன்னாடியே இப்படிப்பேசுது.’ என அப்பொழுதும் சொர்ணத்தால் சங்கோஜப்பட மட்டுமே முடிந்தது. அவர்கள் பக்கமிருந்த தவறை சுட்டிக் காட்டியவர் பொம்மிக்கான சிகிச்சை ஆறு மாதங்கள் போதும். சின்ன அதிர்ச்சி தான். அவளை அமைதியாக இருக்க விடாமல் வேறு வேலைகளில் ஈடுபடுத்துங்கள் என மேலும் சிற்சில அறிவுரைகளை வழங்கினார்.
இவர்கள் சிகிச்சைக்கு சென்று வருவது முருகேசன் குடும்பத்திற்கும் எட்டியது. எதைக் கொண்டு இவளை வெட்டிவிடுவது என யோசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இது ஒரு முக்கிய காரணமாகப் போயிற்று.
ஆறுமாதங்கள் கடந்த நிலையில்…
ஊர்ப்பெரியவர்களை வைத்து தனது வீட்டிலேயே பஞ்சாயத்து கூட்டிவிட்டு, சிதம்பரத்திற்கு தாக்கல் அனுப்பி வைத்தார் முருகேசன்.
இவள் பெற்றோருடன் சென்றபிறகு ஒருநாள் கூட சென்று பார்க்கவில்லை தாலி கட்டியவன். பஞ்சாயத்து செய்திதான் வந்தது.
தோப்பு வீட்டிலிருந்து பொம்மியை அழைத்து சென்ற அடுத்த வாரமே நாகராஜ் போதையில் வண்டியில் சென்று விபத்தாகிப் படுத்துவிட்டான். விபத்து விபத்தாக நடந்ததா… இல்லை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதா என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம். அடுத்த அடி முருகேசனுக்கு வியாபாரத்தில் ஏற்பட்டது. அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக மண் எடுத்து செங்கல்சூளை நடத்தியதால் சூளை சீல் வைக்கப்பட்டது. காக்காய் உட்கார பணம்பழம் விழுந்த கதையாக, இவை அனைத்தும் மருமகள் வந்தநேரம் சரியில்லை என இட்டுக்கட்டப்பட்டது. கிராமங்களில் சொல்லவா வேண்டும்… இவர்கள் இருகுடும்ப விவகாரமே கண்காது மூக்கு வைத்து நல்ல பொழுதுபோக்காக அமைந்தது ஊர்க்காரர்களுக்கு. பொம்மியின் பாதிப்பு, புருஷன்பொண்டாட்டி சமாச்சாரம் என இயல்பாகிப்போக, ராசிகெட்டவள் என்பதே விஸ்வரூபம் கண்டது.
இதற்குள் இளையவன் ஜெயக்குமாரும் கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவித்திருந்தான். “இவளைவிட சின்னப்பிள்ளைக்கே கல்யாணம் ஆயிடுச்சு. வயசுப்புள்ளய எத்தனை நாளைக்கு வீட்ல வச்சுட்டு இருக்கமுடியும். சீக்கிரம் நாள் பாருங்க.” என காளியம்மா அடிக்கடி அண்ணனிடம் கேட்க ஆரம்பித்தார்.
“வீட்ல எத்தன பிரச்சினை போய்க்கிட்டு இருக்கு. தன்னோட காரியம்தான் பெருசுங்கற மாதிரி பேசுறாளே?” என சுப்புலட்சுமி ஆதங்கப்பட, அது எங்கே சபை ஏறியது. அதற்கு காரணம் சுப்புலட்சுமியின் அண்ணனின் நடவடிக்கைதான். பெண்ணெடுத்து பெண் கொடுப்பது தான் பேச்சுவார்த்தை இருகுடும்பத்திற்கும். ஆனால் முதலில் சுப்புலட்சுமி திருமணம் முடிய, அவரது அண்ணன் யாருக்கும் தெரியாமல் அவர் விரும்பியபெண்ணை மணமுடித்து வந்து நின்றார். அதனாலே காளியம்மாவிற்கு, அதைவிட பெரிய இடமாகப் பார்க்க வேண்டுமென முருகேசன் குடும்பத்தார் மாப்பிள்ளை பார்த்து மணம் முடித்தனர். அவரும் அல்ப ஆயுசில் சென்றுவிட, பெண்குழந்தையோடு அண்ணன் வீடு வந்துவிட்டார் காளியம்மா.
சுப்புலட்சுமியின் அண்ணனோ… மனைவி, குழந்தைகள் என வாழ… அது தான் வாழவேண்டிய வாழ்க்கையாயிற்றே என்ற வன்மம் தான் சுப்புலட்சுமியை காளியம்மா பாம்பாய் கொத்துவதும், தேளாய் கொட்டுவதும். முருகேசனும் அதைக் கொண்டே தங்கைக்கு ஆதரவாக இருப்பதும். இப்பொழுது ஜெயக்குமாரும், கவிதாவை திருமணம் செய்ய மறுப்பு தெரிவிக்க, பெயரளவில் மட்டும் காளியாக இல்லாமல் நிஜத்திலும் காளி அவதாரம் எடுத்துவிட்டார்.
“எல்லாம் ஊமையா இருந்து இவ பண்ணின வேலையாத்தான் இருக்கும். இவங்க குடும்பத்துக்கே நம்ப வச்சு கழுத்தறுக்கறது தான் பழக்கமாச்சே. அதேமாதிரி தான் சின்னவனையும் வளத்து வச்சுருக்கா. என்ன பண்ணுவியோ ஏதுபண்ணுவியோ தெரியாது. ஏம்மக தான் இந்தவீட்டு மருமக.” என அண்ணியை மட்டுமரியாதை இல்லாமல் பேசித்தீர்த்தார். இது எல்லாமே புது மருமக வந்த நேரம் என அண்ணனின் காதில் போட, முருகேசனும் அதைத்தான் நம்பினார்.
இரண்டுமே பெருங்குடும்பங்கள் என்பதால், இருவருக்கும் பொதுவாக ஊர்ப்பெரியவர் வீட்டிலேயே பஞ்சாயத்து கூட்டப்பட்டது. இருகுடும்பங்களும் கூடியது நாகராஜனைத் தவிர.
“என்ன நேரம்னு காலடி எடுத்து வச்சாளோ, எங்க அண்ணே குடும்பமே அந்தலசிந்தலயாப் போச்சு.” என வராத கண்ணீரை வம்படியாக வரவைத்து, வந்திருந்த ஊர்ப்பெரியவர்கள் முன் காளியம்மா பேச,
“நல்லா யோசிச்சு பேசு காளியம்மா… உன் அண்ணே மகன் குடிச்சுட்டுப் போயி வண்டில விழுந்து எந்திரிச்சு வந்தா எங்கவீட்டுப் புள்ளயா பொறுப்பு?” என சொர்ணமும் எகிற,
“ஏன்… அன்னைக்குதான் புதுசா குடிச்சானா? என்னைக்குமில்லாம அன்னைக்கி விழுகணும்னா என்ன அர்த்தம். மகராசி வந்த நேரம் தான.” என்க,
“அப்ப ஏற்கனவே அவன் குடிகாரனா?” என இவர்கள் தரப்பில் அதிர்ச்சி காட்ட,
“உள்ளூர்க்குள்ளயே இருந்துட்டு தெரியாத மாதிரி கேக்குறீங்க? அதனால தானே பைத்தியம் புடுச்ச பொண்ண எங்க தலையில கட்டிட்டீங்க?”
“காளியம்மா… வாய் புளிச்சதோ மாங்கா புளிச்சதோனு பேசாத. உன் மருமகன் பண்ணின காரியாத்தால தான் அவ அப்படி ஆயிட்டா.” சொர்ணமும் பதிலுக்கு பொங்க,
“மருமகன் பண்ணின காரியம்னா என்ன அர்த்தம்? வந்தவங்க எல்லாம் நல்லா கேட்டுக்கோங்க. புருஷன் தொட்டான்னு ஒரு பொண்ணுக்கு பைத்தியம் புடிக்குமா? அவ ஏற்கனவே சிதம்பரம் மாமாவுக்கு காலம் போன கடைசில, கொறமாசத்துல பொறந்தவ தான. மூளவளர்ச்சி சரியா இல்ல போல. அதுதான் முக்கால்வாசி நாளு களத்து வீட்லயே வச்சுருந்திருக்காங்க. உள்ளூர்லயே இருந்தா சாயம் வெளுத்துரும்ல.”
பெண்கள் இருவரும் வரம்பு மீறுவதைப் பார்த்த ஊர்ப் பெரியவர்கள், பெண்களை பேசவிட்டால் நிலமை இன்னும் மோசமாகிவிடும் என்றெண்ணி,
“உன் முடிவு என்ன முருகேசா?” எனக் கேட்க,
“எங்க வீட்டுக்கு இந்தப் பொண்ணு வேண்டாங்க. வந்து ஒருவாரம் தங்கினதுக்கே இவ்வளவு நடந்து போச்சு. இன்னும் கொண்டு வந்து வச்சா என்ன என்ன நடக்குமோ தெரியல. எங்க பேச்சுக்கு மறுவார்த்தை பேசாத சின்னவன் கூட மனசுமாறிப்பேசுறான். இந்தப்புள்ள வந்த நேரம்தான்.” என, தன் தங்கையின் நடவடிக்கைதான் மகன் மனம்மாறக் காரணம் என்றும், தன் நடவடிக்கைதான் சூளைமூடப்படுவதற்கான காரணம் என்றும், மகன் குடித்துவிட்டு வண்டி ஓட்டித்தான் விழுந்தான் என்றும் உணராமல் அனைத்தும் மருமகள் வந்த நேரம் என்று முடிக்கப்பட்டது.
“முருகேசா!!! நீ சொல்றத வச்செல்லாம் அத்துவிட முடியாது. குடும்பம்னா நாலும் நடக்கும். அதுக்கெல்லாம் வந்த மருமகள காரணம் சொல்லுவியா? உன் மகன் எங்க? அவன் இல்லாம பேசமுடியாது.” என்க,
“அவன் தான் எந்திரிக்க முடியாமக் கெடக்கானே?” என காளியம்மா பதில்கூற,
“பொம்பள்புள்ளயவே கூட்டிட்டு வந்திருக்காங்க. அவனுக்கென்ன? எந்திரிக்க தானே முடியாது. வாய்பேசும்ல. அவன் முடிவும் என்னானு தெரியணும்.” என ஊரார் கூறிவிட, ஆட்களை விட்டு மகனை அழைத்து வரச் சொன்னார் முருகேசன். மெதுவாக வாக்கர் வைத்து நடந்து வந்தவனைப் பார்த்தவர்கள், ‘இவனைப் பார்த்தால் இன்னும் குணமாகாதவன் போல இல்லியே. நல்லா நடப்பான் போலியே?’ என நினைத்துக் கொண்டனர்.
அவனும் முடியாதவன் போலவே அவர்கள் முன் வந்து அமர்ந்தான். அவனைப் பார்க்கவே அசூயையாக உணர்ந்தாள் பொம்மி. அருவருப்பாய் எதையோ மிதித்த உணர்வில் அத்தையின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“நீ என்னப்பா சொல்ற. உனக்கு உன்மனைவிகூட வாழணும்னு ஆசை இருக்கா? இல்லியா?” எனக்கேட்க,
“எனக்கு அந்த ஆசையெல்லாம் இல்லீங்க. எவனாவது மரக்கட்டை கூட வாழ ஆசப்படுவானா. இவளும் அந்த மாதிரிதான்.” என கூறினான். எள் எனும் முன் எண்ணெயாய் நின்ற பெண்களைப் பார்த்தவனுக்கு, இவள் ஜடமாகத் தெரிந்தாள்.
“ஒருவேள இவ அம்மாவும் இப்படிதான் இருந்திருப்பா போல. அதனால்தான் இவ பொறக்கவே அத்தனை வருஷமாயிருக்கு.” என காளியம்மா கூச்சமே இல்லாமல் தாயையும் இழுத்துவைத்துப் பேச, அதைக்கேட்டு ஓரமாக நின்றிருந்த கவிதா நமட்டுச்சிரிப்பு சிரிக்க, சொர்ணத்திற்கு காளியம்மா அளவிற்கு தரம் இறங்கிப் பேச வரவில்லை. ச்சே என்றாகிவிட்டது அவருக்கு.
அத்தையோடு நின்று கொண்டிருந்த பொம்மிக்கு அன்று கவிதா சிரித்ததன் அர்த்தம் கூட விளங்கவில்லை. அர்த்தம் விளங்கியபோது ஏதோ தன்மேல் அசிங்கமாய் தெரித்த உணர்வில் இப்பொழுதும் அதை நினைத்து அருவருத்துப் போவாள் பொம்மி. தனது அந்தரங்கம் எந்த அளவிற்கு நடுகூடத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது என நினைப்பு வரும் பொழுதெல்லாம் கூனிக்குறுகிப்போவாள். அப்பொழுதெல்லாம், எதை ஒன்றையும் ஸ்போட்டிவா எடுத்துக்க. ஒரு விஷயம் நடந்தா அதுல இருக்கிற நல்லதை மட்டும் பாரு. பிராக்டிகலா திங்க் பண்ணு என மருத்துவர் கூறியதைக் கொண்டு மனதை மாற்றிக் கொள்வாள். எதொன்றிற்கும் உணர்ச்சிவயப்படமாட்டாள். இதுவே அவள் உள்ளுக்குள்ளேயே அமிழ்ந்து போக காரணமாயிற்று.
இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சிதம்பரமும் ஒரு முடிவிற்கு வந்துவிட்டார். இனிமேல் இந்த குடும்பத்தில் தன்மகள் சந்தோஷமாக வாழமுடியாதென்பது கண்கூடாகக் தெரிந்தது. இவர்கள் வீட்டில் இனி எதுநடந்தாலும், தன் மகள் தலையைத் தான் உருட்டுவார்கள். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது நன்கு புலப்பட்டது. ஏற்கனவே செய்த தவறு தெரியாமல் செய்தது. மீண்டும் ஒரு தவறை தெரிந்தே செய்ய முற்படவில்லை சிதம்பரம்.
“ஊர்ப்பெரியவங்க எல்லாரும் சேர்ந்து எழுதி வாங்கிடுங்க. என்மக என்வீட்ல வாழாவெட்டியா இருந்தாலும் பரவாயில்ல. இங்கவிட்டு சீரழிய விடமாட்டேன்.” என உறுதியாகக் கூறிவிட,
“பொம்பளப்புள்ள விவகாரம் சிதம்பரம். எடுத்தோம் கவுத்தோம்னு பேசமுடியாது. பாத்து பேசி முடிக்கலாம்.” என ஊர்ப்பெரியவர்களாக தங்களது பொறுப்பிலிருந்து கூற,
“இல்லீங்க… ஒருசோறு பதம் போதுங்க. எம்புள்ள காலம்முச்சுடும் என்வீட்ல இருந்தாக்கூடப் பரவாயில்ல. இங்க விட்டுப்போனா என்ன பாடுபடும்னு தெரிஞ்சு போச்சு.” என உறுதியாக மறுத்துவிட ஊரார்களும் இரு வீட்டார் சம்மதத்தோடு எழுதிமுடித்து விவாகம் ரத்து செய்யப்பட்டது.
சொர்ணத்தின் மகன்கள் மூவரும் துள்ளினர்.
“அதெப்படி மாமா? விருந்துக்கு கூட்டிபோனமாதிரி ஒருவாரம் வச்சிருந்துட்டு புள்ளய அனுப்புவானுகளாம். நாம வேடிக்கை பாக்கணுமா? போலீஸூக்கு போலாம். நாமலா அவனுகளான்னு ஒருகை பாப்போம் மாமா.” என சண்டைக்குத் தயாராக, அவர்களை அடக்குவதே பெரும்பாடாக போய்விட்டது.
“போலீஸ்க்கு போனா நாமலும் தான் ஜெயிலுக்கு போகணும். மைனர் பொண்ணக்கட்டிக் கொடுத்திருக்கோம். விவரமில்லாம கல்யாணம்பண்ணிவச்சது நம்ம தப்பு. சட்டப்படி போனா கோர்ட்டு கேஸுன்னு நம்ம புள்ள மனசுதான் இன்னும் பாதிக்கும். இதோட விட்ருங்க டா. எனக்கு எம்புள்ள பழைய மாதிரி ஆனாப்போதும்.” என மாமன் கூறிவிட ஆற்றவில்லை சொர்ணத்தின் மகன்களுக்கு. ஏதோ முருகேசன் குடும்பம் ஜெயித்தவிட்டமாதிரியும், இத்தனை பேர் இருந்தும் தாங்கள் அவர்கள் முன் தோற்றுவிட்டதாக எண்ணம். இதனாலேயே மாமன் மீது சற்று மனத்தாங்கல் கூட.
உலைவாய மூடலாம். ஊர்வாய மூடமுடியுமா? அவல் கிடைத்தது போல் ஆனது ஊர்மக்களுக்கு. மனக்கோளாறு, ராசிகெட்டவள், வாழாவெட்டி என அத்தனை பட்டங்ளும் வழங்கப்பட்டது, பொம்மிக்கு, நடந்த பொம்மைக்கல்யாணத்தால்.
“எங்கேயாவது வெளிய போகலாம் ப்பா. இங்க இருக்கவே பிடிக்கல. எல்லாரும் என்னைய ஒருமாதிரியா பாக்குற மாதிரி இருக்கு.” என மகள் கூறிவிட,
எதைக் காரணமாகக் கொண்டு உள்ளூர் சம்பந்தம் மகளுக்குப் பார்த்தாரோ அந்த சொத்துசுகங்களை விட்டுவிட்டு, மகளுக்காக திருச்சி சென்றனர். அவளுக்கு மாற்றம் வேண்டும் என்பதற்காகவே கல்லூரியில் சேர்த்துவிட்டார். அந்தக்கட்டாயத்திலேயே, மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் மகளை வேலைக்கு அனுப்பினார்.
*******************
அறையின் ஜன்னலுக்கருகில் இருந்த மரத்திலிருந்து கேட்ட பறவைகளின் சிறகடிக்கும் சத்தத்தோடு, கீச்கீச் சத்தத்திலும் சுயம் பெற்றவள் மெதுவாக எழுந்து வெளியே வந்தாள்.
மனைவியை இறுதி வழியனுப்பி வைத்துவிட்டு ஈரவேட்டியுடன் வந்து சேரில் அமர்ந்திருந்த தந்தையைப் பார்த்தவள், அப்பாவிடம் சென்று மடியில் தலை வைத்துப் படுத்துக் கொள்ள, அவரது நடுங்கிய கைகள் மகளின் தலையை வருடியது. தங்கள் குருவிக்கூட்டிலிருந்து வழக்கத்திற்கு மாறாக தாய்க்குருவி பறந்து சென்றுவிட்டது. கண்களில் கண்ணீர் நிற்க மறுத்தது பெண்ணவளுக்கு, அன்னையின் இழப்பிலும், பழைய நினைப்பிலும்.
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
சுடரி சுடரி உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தொடராதே
அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே
குழந்தை நடை பழகுதே
மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே
பறவை திசை அமைக்குதே
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்.