மது பிரியன் 12(ஆ)
மது பிரியன் 12(ஆ)
மது பிரியன் 12(ஆ)
மதுரா எப்படிக் கேட்டாலும், பெரும்பாலும் அமைதியையும், சில நேரங்களில் மழுப்பலான பதில்களைக் கூறி, அவ்விடத்தைவிட்டுக் கடந்திருந்தான் விஜய்.
பெரும்பாலான ஆண்களின் குணம் விஜய்யிக்கும் அப்படியே இருந்தது. பெண்களைப்போல, சிறு விசயங்களையும் விடாமல், தொணதொணக்கும் பழக்கம் ஆண்களிடம் பெரும்பாலும் இருப்பதில்லை.
விசயம் வெளியில் தெரிந்து, பாதிப்புகள் அப்பட்டமாகும்போதுதான், ஆண்கள், தனது வீட்டுப் பெண்களிடம் தலைகுனிந்தபடியே, நடந்ததை அரைகுறையாக உரைப்பது நடப்புதானே.
மிகச் சொற்பமான எண்ணிக்கையில், தாயிடமோ, சகோதரிகளிடமோ, மனைவியிடமோ தனது பிரச்சனைகளை, மனக்கிலேசத்தைப் பகிர்ந்து ஆறுதல் தேடுகின்றனர் ஆண்கள்.
அப்படி வீட்டுப் பெண்களின் தங்களின் பிரச்சனைகளை விலாவாரியாகக் கூறுவது, தீர்க்க இயலாமல் தான் தடுமாறுவதை பெண்கள் அறிய நேர்வது ஆண்மைக்கு இழுக்கு என்று நினைக்கின்றனர் சிலர்.
அனைத்தையும் யாருக்கும் தெரியாமல் சமாளித்து, தங்களின் நிலையை ஒரே நிலையில் தனது வீட்டாரிடம் காட்டிக் கொள்ளும் சாதூர்யம் அது. சில ஆண்கள் தனது நிலையில் வெற்றி பெறுகின்றனர். பலர், மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி குடும்பத்தையும் பாழுங்கிணற்றில் தள்ளிவிடுகின்றனர்.
தற்போது விஜய்யும் அதுபோல தான் கேட்ட விசயங்களை தனக்குள் போட்டு, உருட்டிக் கொண்டிருந்தானே அன்றி மனைவியிடம் கூற விரும்பவில்லை.
அஞ்சனாவிற்காக ஏற்றுக் கொண்டு பேசிய பெண்மணி அத்தோடு விடாமல், அடுத்த இரண்டு மூன்று தினங்கள் கழித்து மீண்டும் விஜய்யை சந்தித்தாள்.
“அய்யா, ஒரே ஒரு விசயத்தை மட்டும் சொல்லிட்டுப் போயிறேன். உங்ககிட்ட எந்த ஆதாயத்தையும் எதிர்பாத்து இதை நான் சொல்ல வரலை” எனும் பீடிகையோடு துவங்கிய பெண்மணி, அஞ்சனாவின் தற்போதைய நிலையைக் கூறினார்.
***
திடுதிப்பென சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கி தனக்கு அழைத்து விசயம் கூறியவளை, “எதுக்கு சொல்லாமக் கொள்ளாமக் கிளம்பி வந்தே” என சிடுசிடுத்தான் சஞ்சய்.
எப்போதும் தன்னிடம் சர்க்கரையாக உருகிக் கரைபவன் கத்தியதும், அதிர்ச்சியடைந்தவள், “உங்களை நம்பி எல்லாத்தையும் எடுத்துகிட்டு, வீட்டை விட்டு வந்தது தப்புதான். நீங்களும் விரட்டுனா இனி எனக்கு போக்கிடம் இல்லை. அதனால ஏரி, குளம் பாத்து விழுந்து செத்துப் போறேன்” என அழுகையோடு அஞ்சனா கூற
உடனே தன்னைச் சமாளித்துக் கொண்டு, “சரி அழுகாத” என்றவன், “எங்கேயும் போயிறாம, அங்கேயே வயிட் பண்ணு” என்றதோடு, இரண்டு மணி நேரம் சென்றபின், நேரில் அழைத்துச் செல்ல வந்திருந்தான் சஞ்சய்.
வந்தவன், “இப்ப உன்னைத் தங்க வைக்க இடம் வேணும். அதுனால இப்ப எதாவது ஹாஸ்டல்ல தங்கிக்கோ. வீடு கிடைச்சதும் அங்கே போயிக்கலாம்” என அஞ்சனாவிற்கு யோசனை கூறியவன், விடுதி ஒன்றில் விட்டுவிட்டு, அடுத்து வந்த பத்தாவது நாளில், “வீடு பாத்தாச்சு” என தன்னோடு அஞ்சனாவை அழைத்துச் சென்றிருந்தான் சஞ்சய்.
திருமணம் பற்றி பேச்செடுத்தவளிடம், “வீட்டுல பெரியவங்ககிட்ட பேசி, நல்ல நாளு பாத்துட்டு நீ சொல்ற மாதிரி பண்ணலாம்” என்று கூறி சமாளித்தான்.
ஆனால், வந்து வீட்டிற்குள் நுழைந்த சற்று நேரத்திலேயே அஞ்சனாவிடம் அத்துமீறத் துவங்க, “கல்யாணத்துக்குப் பின்னாடி எல்லாம் பாத்துக்கலாம்னு சொன்னா விட மாட்டீங்கறீங்க” என சிணுங்கினாள்.
“அப்ப எம்மேல உனக்கு நம்பிக்கையில்லையா?” என்றான் சஞ்சய்
திருமணம் எனும் பேச்சை எடுத்தாலே இதுபோலப் பேசியவன், அடுத்து நாள் செல்லச் செல்ல, எரிந்து விழத் துவங்கினான்.
“எத்தனை தடவை கல்யாணம் பண்ணுவ. அவங்கூட கல்யாணம் பண்ணி கழுத்துல தாலி போட்டுருக்கல்ல. அப்புறம் என்ன?” எனும்படியாக பேசத் துவங்கியவனிடம், விஜய்யிடம் பேசியதுபோல அஞ்சனாவால் எடுத்தெறிந்து பேச முடியவில்லை.
சஞ்சய்யின் வீட்டாரைப்பற்றிப் கேட்டாள் அஞ்சனா. அதற்கு, “எங்க வீட்ல உன்னை ஏத்துக்கற வரை இப்படியே இருப்போம். நானும் நல்ல சமயம் பாத்து எடுத்துச் சொல்லி உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டிப் போறேன்” என்று சஞ்சய் கூறியதையும் நம்பி ஏமாந்திருந்தாள் அஞ்சனா.
சஞ்சய், தன்னை நிராகரித்தாலோ, ஒதுக்கினாலோ, அவளால் அதனை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாதபடி, அவன்மீது உயிராய் இருந்தாள் அஞ்சனா.
அத்தோடு, சஞ்சய்யின் கோபத்திற்கோ, நிராகரிப்பிற்கோ ஆளாகி, தான் அவனால் ஒதுக்கப்பட்டால், தனக்கென எந்த ஆதரவும் இல்லாமல் நிர்கதியாக இருப்பதும் தற்போதுதான் உரைத்தது அஞ்சனாவிற்கு. ஆகையினால் இயன்றவரை, அமைதியாக சஞ்சய்யிடம் காரியம் சாதித்துக் கொள்ள எண்ணினாள்.
இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக அஞ்சனாவோடு இருந்தவன், நாள்கள் சென்றதே தெரியாமல் அஞ்சனாவைப் பார்த்துக் கொண்டான். இடையில் அவளின் நகையும், பணமும், பொருளும் அவ்வப்போது சஞ்சய்யின் வசமானது.
ஆரம்பத்தில் தயங்கியவளிடம், “இது எமெர்ஜென்சிக்குதான் கேக்கறேன் அஞ்சு. அடுத்த மாசம் சம்பளம் வாங்கினதும் திருப்பித் தரேன்” என்று கூறியே சிறிது சிறிதாக வாங்கி, மொத்தத்தையும் ஸ்வாகா செய்திருந்தான்.
அடுத்த மாதம் பிறந்ததும், நினைவுறுத்திய அஞ்சனாவிடம், “என்னை காதலிக்கறேன்னு சும்மாதான சொல்ற நீ. என்னை நம்புனா, இப்டிக் கேப்பியா. நீ வேற, நான் வேறன்னு நினைக்கிறதான.
உனக்கு செய்யிறதுக்கு நான் எப்போதாவது கணக்குப் பாத்திருக்கேனா அஞ்சு?” என காரைக்குடியில் அவனோடு வெளியில் சென்ற தருணங்களில் அவன் தனக்குச் செலவளித்ததைக் கூறிக் கேட்க, பதறிப்போனாள் அஞ்சனா.
அத்தோடு விடாதவன், “ஆனா நீ என்னை இவ்ளோ கேவலமானவன்னு நினைச்சிட்டுத்தான் பழகியிருக்க?” எனக் கேட்டதும், அஞ்சனா விக்கித்துப் போயிருக்க, அப்படியே அவளின் பேச்சிற்று அவளறியாமலேயே முற்றுப்புள்ளி வைத்திருந்தான் சஞ்சய்.
மாதங்கள் கடந்திட, வீட்டிற்கு வந்தவனிடம் அஞ்சனா, “சஞ்சய். சந்தோசமான நீயூஸ்” என்றிட
“குழந்தையா?” என்றான்.
ஆமோதித்தவளிடம், “அழிச்சிரு” ஒற்றை வார்த்தையில் முடித்திருந்தான் சஞ்சய்.
“நம்ம குழந்தை சஞ்சய்” எனத் தயங்கியவளிடம்
“சொன்னதைக் கேளு அஞ்சனா. இப்படிப் போயி நின்னா, எங்கப்பா என்னை செருப்பால அடிச்சே கொன்னுருவாரு. அதனால் நான் வேணுனா, இந்தக் குழந்தை இப்போ வேணாம்” என கண்டிப்புடன் கூற, அழுது பார்த்தாள்.
அதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. அடுத்து வந்த நாள்களில் அங்கு வருவதைத் தவிர்த்தான். பயந்துபோனவள், சஞ்சய்யிக்கு அழைத்து, “நீங்க சொன்ன மாதிரியே பண்ணுறேன். ஆனா நீங்க இங்க வராம இருக்காதீங்க” என அழ
அன்று மாலையே வந்து அஞ்சனாவை அழைத்துச் கொண்டு, கருக்கலைப்பு செய்திட மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துச் சென்றான் சஞ்சய்.
மருத்துவரோ, “இப்பலாம் பேபி ஃபார்ம் ஆகிறதுக்குன்னு எத்தனை ட்ரீட்மெண்ட் எடுக்கறாங்க. நீங்க ஏன் அபார்ட் பண்றீங்க” என்றிட,
ஏதேதோ கூறி சஞ்சய் சமாளிக்க முயல, “உண்மையிலேயே நீங்க ரெண்டு பேரும் ஹஸ்பெண்ட் அண்ட் வயிஃப்தான” என்று கேட்டிருந்தார் மருத்துவர்.
மருத்துவரிடம், “பெர்மனெட் இன்கம் சோர்ஸ் எதுவும் இல்லாததால, இப்போ பேபி வேணானு யோசிச்சோம். நீங்க சொல்றதை வச்சிப் பாக்கறப்போ, எப்டியாவது சமாளிச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்” என இதமாகப் பேசிவிட்டு, அவர் எழுதிக் கொடுத்த பிரிஸ்கிரிப்சனை வாங்கிக் கொண்டு வெளியேறியிருந்தான் சஞ்சய்.
அஞ்சனாவிற்கு சஞ்சய்யின் பேச்சு சற்று திகிலைத் தந்தது என்னவோ உண்மைதான். வெளியில் வந்த அஞ்சனாவும், சஞ்சய்யின் செயலை எண்ணியபடியே அமைதியாக வந்தாள். வீட்டில் கொண்டு வந்து அஞ்சனாவை விட்டவன், அதன்பின் எங்கிருந்தோ சில மாத்திரை மருந்துகளை வாங்கித் தந்தான்.
“இதைப் போடு. கண்டிப்பா அபார்ட் ஆகிரும்” என்று கூறிவிட்டுச் சென்றவன், அதன்பின் அவளின் வீட்டுப் பக்கமே வரவில்லை. அஞ்சனா அழைத்தாலும் அழைப்பை ஏற்கவில்லை.
அஞ்சனாவிற்கு கருக்கலைப்பு மாத்திரை எடுத்தபின்பு, கரு கலைந்தாலும் ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அதற்காக, பயந்துபோய் சஞ்சய்யிக்கு தொடர்ந்து அழைத்தாள்.
அடுத்தடுத்து சஞ்சய் அங்கு வருவது குறையத் துவங்கியது. அஞ்சனா அழைத்தாலும், “வெட்டியாவா இருக்கேன் உன்னை மாதிரி” என கடுப்படித்தான்.
தயக்கமும், பயமுமாக தனது நிலையை சஞ்சய்யிடம் பேசத் துவங்கியவளிடம், “அந்த மாத்திரையைத்தான் எல்லாரும் போடுறாளுக. எல்லாரும் நல்லாத்தானே இருக்காளுக” என்றிருந்தான்.
அதிர்ந்து சற்றுநேரம் தனது பேச்சைக் கேட்டு அமைதியாக இருந்தவளிடம், “அஞ்சு. நீ இப்ப என்ன ட்ரெஸ் போட்டுருக்க. உடனே அப்டியே ஒரு ஸ்னேப் அனுப்பு. பாத்து நாளானதால, ரொம்ப டல்லா ஃபீல் பண்றேன்” என்றிட
சஞ்சய்யின் வார்த்தைகளை உண்மையென நம்பி, அவன் கூறியதை அப்படியே செய்தாள் அஞ்சனா. அத்தோடு விடாமல், அவள் அனுப்பிய படத்தைப் பற்றி, மெச்சுதலானா வார்த்தைகள் கூறி அஞ்சனாவை வெட்கப்படச் செய்தான்.
ஒருவாறு அஞ்சனாவை சமாளித்தவன், நல்லவன்போல பேசி அவளின் மனநிலையை மாற்றும் முயற்சியில் இறங்கியது தெரியாமல், அவனை இன்னும் நல்லவன் என நம்பிக் கொண்டிருந்தாள் அஞ்சனா.
அதன்பின் வந்த நாள்களில், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி தயங்கியவளிடம், அதட்டி, மிரட்டி தனது தேவைகளுக்காக அடிபணிய வைத்தான்.
தொடர்ச்சியாக இருபத்தோரு நாள்கள் உண்ணும்படி கூறி, மாத்திரை அட்டையை அஞ்சனாவிடம் திணித்தான் சஞ்சய். ஏன்? எதற்கு எனக் கேள்வி கேட்டதும், கோபமாக வெளியேறியிருந்தான் சஞ்சய்.
பிறகு, அஞ்சனாவே மீண்டும் சஞ்சய்யை சமாதானம் செய்து, வீட்டிற்கு அழைத்தாள். சில வாரங்கள் எந்தப் பிரச்சனையின்றிச் சென்றது.
மூன்று மாதங்கள் கடந்த நிலையில் மீண்டும் கருவுற்றிருந்தாள் அஞ்சனா. விசயத்தைக் கூறியதும், மீண்டும் இருவருக்கிடையே முட்டிக் கொண்டது.
மீண்டும் ஒரு கருக்கலைப்பு. உடல்நிலையில் இன்னும் அசதியாக உணர்ந்தாள் அஞ்சனா. இதுபோல அடிக்கடி தொடர்ந்திட, அஞ்சனா முன்பைக் காட்டிலும் ஏதோ அசௌகர்யமாக உணரத் துவங்கினாள்.
அதன்பின் அவனது சட்டதிட்டங்களுக்கு உடனே அடிபணியாது, கேள்வி கேட்கத் துவங்கிய அஞ்சனாவின் கேள்விக்கு சில முறை பதில் கூறியவன், ஒரு நாள், “அச்சு அசல் தாலி கட்டுன பொண்டாட்டி மாதிரியே நல்லா நடிக்கற” என சஞ்சய் கூற
“நான் உங்க வயிஃப் தானங்க” அஞ்சியவாறு கேட்டாள் அஞ்சனா.
அஞ்சனா நகைச்சுவை கூறியதுபோல அடக்க மாட்டாது சிரித்த சஞ்சய், “வயிஃப்பா. நீயா?” என்றான். அதன்பின் வந்த நாள்களில் வார்த்தைகளால், அவளின் பழைய வாழ்க்கையைக் குதறிக் கூறுபோட்டான் அஞ்சனாவை.
சிறுகச் சிறுக அவளின் கையில் இருந்த அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டவன், அதன்பின் அங்கு வருவதைக் குறைத்துக் கொண்டான். அஞ்சனா அவனைக் காணாமல் அழைக்க, அழைப்பினை ஏற்காமல் இருக்கத் துவங்கினான்.
மாதம் ஒன்று கடந்தும் எந்த பதிலும் சஞ்சய்யிடம் இல்லை. அவனது அலைபேசி எண் எப்போதும் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் என வந்தது. பிறகு, அந்த எண்ணைச் சரிபார்க்கவும் என்று வந்தது.
சஞ்சய்யிக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாதவள், அவனைக் காண எண்ணி, அவன் கூறியிருந்த அலுவலக முகவரியில் சென்று நேரில் பார்த்தாள் அஞ்சனா.
அங்கு சஞ்சய் கூறியதுபோல எதுவுமே இல்லை. அவள் விசாரித்தபோது, அருகே இருந்தவர்கள் அவளை பார்த்த பார்வையே சரியில்லை.
அதன்பின் கையில் இருந்த சொற்ப பணத்தைக் கொண்டு, நாள்களைக் கடத்தினாள். வாடகை கேட்டு வந்தவர்களிடம் சமாளிக்க முடியாமல், கையில், காதில் இருந்தவற்றை விற்றுக் கொடுத்தாள்.
அதன்பின் வேலைக்கு அலைந்தாள். படிப்பு சார்ந்த சான்றிதழ் எதுவும் இல்லாததால், மரியாதையான எந்தப் பணிக்கும் அவளால் செல்ல இயலவில்லை.
இறுதியாக, வீட்டு வேலைகளுக்கு செல்லத் துவங்கியவாறு, சஞ்சய்யை சல்லடைபோட்டுத் தேடினாள். ஆனால் அவனைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
மனம் வெறுத்துப் போனவள், வீட்டு வேலை செய்தபடி, தனது தேவைகளைக் கவனித்துக் கொண்டு வாழப் பழகினாள். ஆனால் நடந்த விசயங்களை எண்ணிப் பார்த்தவளுக்கு, விதியை எண்ணிக் கசப்பாக உணர்ந்தாளே அன்றி, இன்னும் சஞ்சய் வருவான் என்கிற நம்பிக்கை இருந்தது.
சென்ற இடத்தில் அவனுக்கு ஏதேனும் பிரச்சனையோ என்று நினைத்து, காவல்நிலையத்தில் சென்று புகார் கொடுத்தாள். புகாரை எழுதி வாங்கிக் கொண்டவர்கள், விசாரிக்கிறேன் என்கிற போர்வையில், அவளின் வீட்டிற்கு வந்த சிலர் அடிக்கடி வந்து தொந்திரவு செய்திட, சமாளிக்க முடியாமல் திணறினாள்.
நடப்பு நிலையை சமாளிக்க முடியாமல், தனது பெற்றோரிடம் சென்றுவிடலாமா என யோசனை வந்தது. கண்டிப்பாக தன்னை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது அவள் வளர்ந்த விதத்திலேயே புரிந்திட, வேறு இடத்திற்கு இடம் மாற எண்ணி வீடு பார்த்தாள்.
அதன்பின் அங்கே குடியேறியவள், பணிக்குச் சென்றவாறு, சஞ்சய்யைத் தேட, ஒரு நாள் டூவீலரில் வேறொரு பெண்ணோடு ஏதேச்சையாக சஞ்சய்யைப் பார்க்க நேர்ந்தது.
பின்னோடு வண்டியின் பின்னே ‘சஞ்சய்’ என்றழைத்தபடியே சென்றவள், அவன் திரும்பிப் பார்த்துவிட்டு, பாராததுபோலக் கடந்து சென்றதைப் பார்த்த பிறகுதான், தான் ஏமாற்றப்பட்டதையே உணர்ந்தாள்.
சஞ்சய்யின் செயலை நினைத்துப் பார்த்தபோது, அவளால் அவனை வேறொருத்தியோடு இணைத்துப் பார்க்க முடியாமல், கதறித் தீர்த்தாள். வாரம் ஒன்று கடந்தும், அவளால் அதிலிருந்து மீள முடியாமல் இருந்தாள்.
அதற்கிடையே பணிபுரியும் இடத்தில் அழைத்துக் கேட்க, பணிக்குச் செல்லத் துவங்கினாள். இரண்டு மூன்று வீடுகளில் பணிக்குச் சென்று வந்தாள்.
சில இடங்களில் பிரச்சனையில்லாமல் இருந்தது. ஆனால் வருமானம் குறைவாக வந்தது. சில இடங்களில் நல்ல வருவாய் தந்தார்கள். ஆனால், அவளின் அழகை அனுபவித்திடும் எண்ணத்தில் ஆண்கள் நெருங்கினர். அனைத்தையும் சிக்கலின்றி சமயோசிதமாக சமாளிக்கக் கற்றுக் கொண்டாள்.
அடிக்கடி, அதனால் பணியிடத்தை மாற்றும்படி நேர்ந்தது அஞ்சனாவிற்கு. அத்தோடு மாதாந்திர தொந்திரவின்போது, அதிகமாக இரத்தப்போக்கு உண்டானதோடு, வலியும் தாங்க இயலாமல் தவித்தாள் அஞ்சனா.
அப்போது மட்டும் விடுப்பு எடுத்து, மீண்டும் பணிக்குச் செல்லத் துவங்கினாள். இதேபோல மேலும் ஆறு மாதங்கள் கடந்திருக்க, தொடர்ச்சியான இரத்தப்போக்கு உண்டாகி, வீட்டிற்குள்ளே மயங்கிக் கிடந்தாள் அஞ்சனா.
அருகில் உள்ள பெண்கள் பார்த்துவிட்டு, அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். அதன்பின் தொடர்ச்சியாக, அவ்வப்போது மருத்துமனையில் சென்று பார்ப்பதும், பிறகு பணிக்குச் செல்வதுமாகவே நாள்கள் சென்றது.
ஒருமுறை மயங்கி விழுந்தவள் மூச்சு பேச்சில்லாமல் இருக்கவே, அவள் பணியில் இருந்த வீட்டினர், தனியார் மருத்துவமனையில் அஞ்சனாவைக் கொண்டு சேர்த்திருந்தனர். பரிசோதனைகளைச் செய்திட, கர்ப்பப்பையை எடுத்தால்தான், அஞ்சனாவின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றிருந்தனர் மருத்துவர்கள்.
வசதியில்லாத காரணத்தினால், அரசு மருத்துவமனையில் அதற்கான சிகிச்சைக்காக தானாகவே சென்று சேர்ந்திருந்தாள் அஞ்சனா.
“உடம்புக்கு முடியாம பெரியாஸ்பத்திரியில அதுவா வந்து சேந்திருந்தப்பதான், என்னைப் பழக்கம். எம்மகளை ஆஸ்பத்திரியில வச்சிருக்கும்போது தனி ஒருத்தியா அந்தப் புள்ளை ரொம்பக் கஷ்டப்பட்டதைப் பாத்துட்டுத்தான் அதுகிட்டப் பேச ஆரம்பிச்சேன்.
அப்பத்தான் துணைக்கு யாருமில்லாம தனியா இருக்கியே, வீட்டுல யாரும் துணைக்கு வரலையான்னு கேட்டேன். அப்போத்தான் நடந்ததையெல்லாம் எங்கிட்டச் சொல்லிச்சு.
உங்களைப் பத்திதான் ரொம்பச் சொல்லும். ‘அவரு அவ்ளோ சொன்னாரு. நாந்தான் கேக்காம, இவனை நம்பி வந்து நாசமாப் போயிட்டேன். அவரைப் பாத்தா, நான் பண்ணிட்டு வந்த காரியத்தை மறந்து மன்னிக்கச் சொல்லிக் கேக்கணும்னு சொல்லிட்டே இருக்கும்.
அப்பத்தில இருந்து, எங்க வூட்டாண்டையே அதுவும் வந்து தங்கிகிச்சு. தனியா இருக்கறங்காட்டியும், எப்பவும் நிம்மதியில்லாத பொழப்புன்னு ரொம்பப் புலம்பும்.
இப்ப, இங்க காரைக்குடியில கும்பாபிசேகத்துக்கு வரும்போது, வாவேன்னு கூப்பிட்டேன். அதுக்கு அந்தப் புள்ளை, உங்க வீடு இருக்கற இடத்தைச் சொல்லி, உங்கிட்ட மன்னிப்பு கேக்கச் சொல்லி, சொல்லி விட்டுது.
அது என்ன தப்புப் பண்ணியிருந்தாலும், அதை மன்னிச்சிருங்க. அதைச் சொல்லத்தான் நீங்க இருக்கற இடத்தில சுத்தி சுத்தி வந்தேன்” என கையெடுத்துக் கும்பிட்ட பெண்மணி, “நாப்பது நாளுக்கு கோவில் வாசல்லதான் எங்கேயாச்சும் இருப்பேன். எதுவும் அஞ்சுகிட்ட சொல்லணும்னா எங்கிட்டச் சொல்லுங்க. நான் சென்னைக்குப் போவும்போது சொல்லிறேன்” என நடந்திருந்தாள் அந்தப் பெண்மணி.
இந்த விசயத்தைப் பற்றிக் கேட்டது முதலே அஞ்சனாவைப் பற்றியே எண்ணியவனுக்கு, அவள் மீது எவ்வளவு வெறுப்பு இருந்த போதிலும், அணுவளவிற்கு இரக்கமும் வந்தது. வேறு எந்த உணர்வும் அவள் மீது எழவில்லை விஜய்யிக்கு.
‘ரொம்பத்தான் கஷ்டப்பட்டுட்டாபோல. இது தேவையா? இதுக்குத்தான தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன். இப்பப் பாரு, எங்கேயும் போக, வர முடியாம, இப்படிப் போயி மாட்டிக்கிட்டு இருக்கா’ என்பதாக இருந்தது விஜய்யின் எண்ணம்.
அவளின் கஷ்டத்தைக் கேட்டதும், மகிழ்ச்சி எழவில்லை. மாறாக, எத்தனை வனப்போடும், வசதியோடும் வாழ்ந்தவள், இப்படித் துன்பத்தில் உழலுகிறாளே என்கிற வருத்தம்தான்.
நாற்பது நாள் நிறைவுறும் முன் தானாகவே சென்று அப்பெண்மணிக்கு பிச்சை போடுவதுபோலச் சென்று, “அஞ்சனாவுக்கு என்னால எதாவது உதவி ஆகணும்னா தாராளமா கேக்கச் சொல்லுங்க. என்னால முடிஞ்சதைச் செய்யறேன்” என்றிருந்தான் விஜய்.
இதைப்பற்றி எதுவும் தெரியாத மதுரா, கணவனது யோசனையான முகத்தையும், எதிலும் பிடிப்பின்றி வருவதும், போவதுமாக இருப்பதை, தனது மைத்துனியான பாரியிடம் பகிர்ந்து கொண்டிருந்தாள்.
“முன்னாடியெல்லாம் இப்டி இருக்க மாட்டாங்க உங்க தம்பி. இப்ப நான் என்ன கேட்டாலும், சமாளிக்கறாரே தவிர, சரியான பதில் சொல்ல மாட்டேங்கறாரு மதினி” எனக் கூறியதுமே,
“ரொம்பப் பயப்படாத மதுரா. அவன் தப்புலாம் எதுவும் செய்ய மாட்டான். அவனோட ஆஃபிஸ் வேலைல அப்பப்ப இந்த மாதிரி இருப்பான்” என சமாளித்தாள் பாரி.
ஆனால் அடுத்து வந்த ஒரு நாளில், விஜய் குளித்துக் கொண்டிருக்கும்போது அழைப்பு ஒன்று வர, எப்போதும் போல அலைபேசியை எடுத்துப் பார்த்தாள் மதுரா.
புதிய எண்ணாக இருந்தது. அதனை எடுத்து, “ஹலோ” என்றாள் மதுரா.
எதிரே அழைத்தவர் எதுவும் பேசாமல் வைத்துவிட, “ஹலோ.. ஹலோ “ என இருமுறை அழைத்துப் பார்த்துவிட்டு, அழைப்பை துண்டிக்கப்பட்டதை அறிந்ததும், அலைபேசியை பழையபடி வைத்துவிட்டு அடுக்களைக்குள் சென்றுவிட்டாள் மதுரா.
மதுரா கணவனுக்கு வேண்டிய உணவை எடுத்து வைக்க, அந்த நேரத்தில் மீண்டும் அழைப்பு வர, விஜய் அதனை ஏற்றுப் பேசத் துவங்கியவன், ஆரம்பத்தில் வழமையான குரலில், “ஹலோ யாரு பேசுறது?” துவங்கிட, எதிர் முனையில் பேச்சைக் கேட்ட சற்று நேரத்தில் விஜய்யின் பேசும் சத்தம் இன்னும் குறைந்ததோடு, அங்கிருந்து எழுந்து யாருமில்லாத இடத்திற்குச் சென்று பேசினான்.
நீண்ட நேரத்திற்குப்பின் உணவு உண்ண, வந்தவனையே யோசனையோடு பார்த்திருந்த மதுரா, “நீங்க குளிக்கப் போயிருக்கும்போதும் ஒரு போனு வந்துச்சுங்க. ஆனா பேசறதுக்கு முன்னாடியே கட்டாயிருச்சு” என்றிட
யோசனையோடு இருந்தவன் சமாளித்துக் கொண்டு, “அவங்களுக்குத் தேவைன்னா கூப்பிடுவாங்க. அப்போப் பாத்துக்கலாம்” என உண்டுவிட்டு, அலுவலகம் கிளம்பியிருந்தான் விஜய்.
அதன்பின் இதுபோன்ற அழைப்புகள் தொடர்ந்திட, விஜய்யின் செயல்பாடுகளும் மாற்றம் பெற, மதுரா இதனைக் கவனித்திருந்தாள். அது முதலே மதுராவிற்குள் குடைச்சல்.
‘ஆபிஸ் விசயத்தைக்கூட உக்காந்த இடத்தில இருந்தே எப்போவும் பேசுறவரு, இப்போலாம் ஏன் வெளியே போயி பேசிட்டு வராரு’ என்பதாக.
தான் எடுக்கும்போது பதில் பேசாமல் மௌனம் சாதிக்கும் பெயர் இதுவரை பதியாத புதிய எண்ணுக்குரிய நபரை, முதலில் கண்டுகொள்ளாது இருந்தவள், அதன்பின் அந்த எண்ணைக் குறித்து கொண்டதோடு கணவனிடம், “இந்த நம்பர்ல இருந்து யாரோ ஒருத்தங்க அடிக்கடி உங்களுக்கு கால் பண்றாங்க. நான் எடுத்தா ஏங்க எங்கிட்ட விசயத்தைச் சொல்லாம வச்சிராங்க” என்று விஜய்யிடமே நேரில் கேட்டிருந்தாள் மதுரா.
விஜய் என்ன கூறினான்?
***