மது பிரியன் 18(ஆ)
மது பிரியன் 18(ஆ)
மது பிரியன் 18(ஆ)
உண்மையில், அஞ்சனாவை சட்டென அடையாளம் காண முடியவில்லை விஜய்யால். பளிங்கென இருந்தவள், பாதரசம் போன கண்ணாடிபோல இருந்தாள். ஆனால், அஞ்சனா விஜய்யை அடையாளம் கண்டு கொண்டு, “நல்லாருக்கீங்களா” என சிரிப்போடு விஜய்யைத் தேடி அருகாமையில் வந்திருந்தாள்.
பார்க்கிற்குள் நுழைந்தவன், தேடலோடு உள்ளே வந்தான். அவளாகவே வந்து தன்னிடம் பேசியதும், அதிர்ச்சியாகியிருந்தான் விஜய். அஞ்சனாவிற்கு உடல்நலக் குறைபாடு இருப்பது தெரிந்தாலும், இத்தனை மாற்றத்தினை நிச்சயம் அவளிடம் எதிர்பார்த்திருக்கவில்லை.
உட்கார்ந்து பேசலாம் எனக் கூறியவளிடம் மறுத்தவன், நின்று கொண்டே பேசத் துவங்கியிருந்தான் விஜய்.
பழைய நிறம் தற்போது இல்லை. முன்புபோல அல்லாமல் மிகவும் மெலிந்து களையிழந்து காணப்பட்டாள். தடுமாறியவன், “நல்லாருக்கேன். நீ எப்டி இருக்க?” விஜய்
“எப்டி இருக்கேன்னு நீங்களே சொல்லுங்க” என்றவள், “ஏன் உங்க போனுக்கு போட்டா, போகவே மாட்டுது” விஜய்யிடம் கேட்டாள்.
“டவர் இல்லாத இடத்தில இருந்திருப்பேன். அந்நேரத்தில கூப்பிட்டதால வந்திருக்காது. இப்போ போடு, போகும்” சமாளித்தான் விஜய்.
உடனே, அஞ்சனாவும் விஜய்யின் எண்ணுக்கு அழைத்துப் பார்க்க, விஜய்யின் அலைபேசி ஒலியெழுப்ப, “நான் இதுக்கு முன்ன போட்டப்பல்லாம் போகலை. அதனால, நேருலயே போயிப் பாப்போம்னுதான் வந்தேன்” என்றாள்.
“என்ன விசயமா வீட்டுக்கு, அப்புறம் இன்னைக்கு ஆபிஸ்ஸுக்கு போன?” விஜய்
“உங்களைப் பாக்கத்தான் வந்தேன்” என இலகுவாகக் கூறியவளிடம், “என்னை எதுக்குப் பாக்கணும். பாத்து, என்னாகப் போகுது” சலிப்பாகக் கூறினான் விஜய்.
“வீட்டுக்குள்ளயே எவ்வளவு நேரந்தான் இருக்கறது. எதாவது வேலை கிடைக்குமான்னு தேடிட்டு இருக்கேன். உங்கட்டயும் சொல்லி வைக்கலாம்னு நினைச்சேன். ஆனா போனு போகலை. அதான்” அஞ்சனா.
“எந்த ஆதரவும் இல்லாம இருக்கறன்னு, நீ கேட்ட ஹெல்ப் எல்லாம் பண்ணிக் குடுத்தேனே. இனிமே, உன்னோட சம்பந்தப்பட்ட வேலைகளை நீயே பாத்துக்கோ அஞ்சனா.
இனி வீட்டுக்கோ, ஆபிசுக்கோ என்னைப் பாக்க வர வேணாம். இல்லை, போனுலகூட பேச வேணாம். தேவையில்லாத பிரச்சனைகளுக்கு இடம் குடுக்காம இருந்தாதான், நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது” என அஞ்சனாவிடம், தனது விருப்பமின்மையை கூறியதுமே, அஞ்சனாவின் முகம் மாறியது. அதையும் கவனித்துவிட்டான் விஜய்.
விஜய்யின் தற்போதைய தோற்றம் கண்டு, அஞ்சனாவே பிரமித்துப் போயிருந்தாள். ‘அப்ப வேற மாதிரியிருந்தாரு. இப்ப பாக்க வேற மாதிரி, நல்ல ஹேண்ட்சம்மா மாறியிருக்காரு’ என மனதிற்குள் ஓடியது.
விஜய் தன்னிடம் கூறிய அறிவுரைகள் அனைத்தும் அந்நேரத்தில் நினைவிற்கு வந்தது அஞ்சனாவிற்கு. இவன் கூறியதைக் கேட்டிருந்தால், மது இருக்குமிடத்தில் தான் இன்று அமோக வாழ்வு வாழ்ந்திருந்திருக்கலாம் என அஞ்சனாவால், அவனைப் பார்த்தது முதலே நினைக்காமல் இருக்க முடியவில்லை.
“ஏன்? உங்க வீட்ல சண்டை போடுதா?” வெடுக்கெனக் கேட்டாள் அஞ்சனா.
“சண்டை அவ போடுறா, போடலை. அது இப்ப பிரச்சனையில்லை. ஆனா இது அவசியமில்லைனு நினைக்கிறேன்” தனது மனதில் உள்ளதை, அஞ்சனாவிடம் தயக்கமின்றி உரைத்தான் விஜய்.
“நான் என்ன மூனாவது ஆளா உங்களுக்கு. உங்ககூட ஒரே வீட்டுல வாழ்ந்தவதான. நீங்களே இப்டிச் சொன்னா, நான் எங்க போவேன். எனக்குன்னு யாருமில்லைங்க.” பரிதாபமாகவே கூறினாள் அஞ்சனா.
“இப்போ, நீ எனக்கு மூனாவது ஆளுதான் அஞ்சனா. எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு.” விஜய்.
“நானும் உங்க குடும்பத்துல ஒருத்தியா இருந்தவதான. இப்ப வந்து ஒதுக்கினா நான் எங்க போவேன்” என்றாள் அஞ்சனா.
“என்னை வேணானு ஒதுக்கிட்டுப் போனவதானே நீ. இப்ப வந்து நான் எங்க போவேன்னு கேட்டா, அதுக்கு நான் எதுக்கு பதில் சொல்லணும்”, விஜய்யும் காரசாரமாகவே பேசினான்.
முகம் சற்று விஜய்யின் பேச்சில் சுருங்கினாலும், “இதை நான் உங்கட்ட எதிர்பாக்கலைங்க” கண்ணில் நீரோடு கூறினாள் அஞ்சனா.
அஞ்சனாவின் அழுகையைப் பார்த்தவன், “தேவையில்லாம சீன் போடாம, முதல்ல கண்ணைத் துடை. பாக்கறவங்க ஏதோ நான் உன்னை ஏமாத்திட்டதா நினைக்கப் போறாங்க” என சட்டென முகத்திலடித்தாற்போலக் கூறியவன், அடுத்து பேச முனைய
விஜய் பேசும்முன் குறுக்கிட்டவள், “யாரு என்ன நினைச்சா நமக்கென்ன வந்தது?” பொறுப்பற்ற முறையில் பேசினாள் அஞ்சனா.
“அது உனக்கு ஓகே. பட், எனக்கு இதெல்லாம் செட்டாகாது” விஜய் பட்டென முகத்திலடித்தாற்போல பேசியிருந்தான்.
“நான் உங்களைத்தான் மலைபோல நம்பி காரைக்குடிக்கு வந்தேன்” அஞ்சனா தான் நினைத்து வந்ததை விஜய்யிடம் கூறிவிட்டாள்.
“மேடம், வேற என்னெல்லாம் எதிர்பார்த்து இங்க வந்திருக்கீங்க?” நக்கலாகவே கேட்டான் விஜய்.
அமைதியாக விஜய்யை பார்த்தவள், “எனக்குன்னு யாருமில்லாம தனியா அகதி மாதிரி அங்க இருந்தேன். நான் பண்ண துரோகத்துக்கு மன்னிப்புக் கேட்டதோட, உங்க காலடியிலேயே ஒரு ஓரமா வாழ்ந்துட்டுச் சாகலாம்னுதான் நான் இங்க வந்தேன்” தனது மனதில் உள்ளதை அஞ்சனா, மதுவிடம் கூறியதுபோல அல்லாமல், விஜய்யிடம் இதமான தொனியில் உரைத்தாள்.
அஞ்சனாவிற்குமே விஜய்யிடம் எப்படிப் பேசினால் காரியம் ஆகும் என யூகித்தே, இதமான தொனியில் அணுகினாள். ஆனால் அவன் பிடிகொடுக்காமல் இருப்பது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.
“மன்னிப்புதான் முன்னாடியே கேட்டுட்டீயே! அப்புறமென்ன! எங்காலடியில வந்து வாழற கதையெல்லாம் கேட்க நல்லாருந்தாலும், நிசத்துல நல்லாருக்காது.
வேணுனா உங்க வீட்டுக்குக் கிளம்பிப் போ. அதவிட்டுட்டு, இனி எனக்கு போன் பண்ணவோ, பாக்கவோ வராத” பட்டென எடுத்தெறிந்தாற்போல பேசியவாறு, அங்கிருந்து நகர முயன்றான் விஜய்.
இடையில் ஏதோ நினைப்பு வந்தாற்போல நின்றவன், “அன்னைக்கு வீட்டுக்கு வந்து மதுகிட்ட என்ன சொன்ன?” புருவம் சுருக்கிக் கேட்டான்.
“இப்ப அதை எதுக்கு கேக்குறீங்க?” தற்போதும் தனது நடிப்பைத் தொடர்ந்தாள் அஞ்சனா.
“இல்ல, சும்மா சொல்லுவேன்” விஜய்
“நாய விரட்டுறமாதிரி எடுத்தெறிஞ்சி பேசுனா. அதான் இப்டிப் பேசாதன்னு பக்குவா எடுத்துச் சொன்னேன்” என்றவள்,
“அப்டியொன்னும் பெரிய அழகியில்லை அவ. ஆனா, என்னைவிட அவளை நீங்க நல்லா வச்சிருக்கீங்க” தன் மனதில் தோன்றிய ஆதங்கத்தை விஜய்யிடம் மறைக்காமல் பேசினாள் அஞ்சனா.
அஞ்சனாவின் பேச்சில் சட்டென மூண்ட கோபத்தை இடம்பொருள் கருதி தனக்குள் கட்டுப்படுத்தியவன், “நீ வேற ஒருத்தனை நினைச்சிட்டு, என்னைப்பத்தி கொஞ்சங்கூட யோசிக்காம, உன்னோட விரும்பம்போல, ஊரைச் சுத்திட்டு, என்னை அசிங்கப்படுத்திட்டு எங்கூட இருந்த.
ஆனா அவ எம்பொண்டாட்டியா, எனக்காகவே யோசிச்சு, அவளை மாத்திக்கிட்டு, எது எனக்கு சந்தோசமா இருக்குமோ, அப்டி வாழறா. என்னோட நல்லது, கெட்டது எல்லாத்திலயும் நான் சொல்லாமலேயே பங்கெடுத்துக்கறா.
உன்னை மாதிரி வேற எவங்கூடவோ போயி, என்னை கேவலப்படுத்திப் பாக்காம, நாலு பேரு முன்ன, எங்களை மத்தவங்க மதிக்கற அளவுக்கு நடந்துக்கறா.
எங்க வீட்டு ஆளுங்களை, சுத்தியிருக்கறவங்களை நீ மதிக்காம, எடுத்தெறிஞ்சு பேசுவ. யாரையும் கிட்ட அண்ட விடமாட்ட. மது அப்டியில்ல. எல்லாத்தையும் அன்போட அரவணைச்சுப் போறா.
இப்படி இன்னும் அவளைப் பத்திச் சொல்ல நிறைய இருக்கு. அப்ப அவளை நான் அதுக்கு ஏத்த மாதிரி நல்லா வச்சிருக்கணும்ல. அதனால என்னால முடிஞ்ச அளவுக்கு நல்லா வச்சிருக்கேன், இனியும் நல்லாப் பாத்துக்கணும் அவளை” அஞ்சனாவிற்கு உரைக்குமாறு விஜய்யும் பதிலுரைத்தான்.
“ம்” என பெருமூச்செரிந்தவள், “ஓ அப்டி சொல்ல வர்றீங்களாக்கும்” மனதிற்குள் விஜய்யின் பேச்சைக் கேட்டு, குமுறினாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் கவனமாகப் பேசினாள்.
“கொஞ்சம் யோசிச்சுட்டு சொல்லுங்களேன். வேற எந்தத் தொந்திரவும் பண்ணாம, நாம்பாட்டுக்கு நான் உண்டு, என் வேலையுண்டுன்னு உங்க வீட்ல ஒரு ஓரமா வந்து இருந்துக்கறேன்” என மீண்டும் அஞ்சனா கூற
“இதுக்குமேல எங்கிட்ட இதப்பத்தி பேசணும்னு நினைக்காத, யாரு எங்க இருந்தா நல்லதுன்னு உனக்குத் தெரியாம இருக்கலாம். ஆனா எனக்கு, யாரை, எங்க வைக்கணும்னு புத்தி வந்து ரொம்ப வருசமாச்சு” என கிளம்பியவனிடம், “ஒரு நிமிசம்” என்றிட
நின்றவன், “என்ன?” வெறுப்பாகவே கேட்டான் விஜய்.
“வெளியில எல்லாம் நமக்குள்ள எதாவதுனு நான் சொல்லிட்டா, எனக்கு ஒன்னுமில்லை. ஆனா நீங்கதான் அசிங்கம்னு நினைப்பீங்க. பாத்துக்கங்க” மிரட்டுவதுபோல, ஆனால் அத்தொனியில்லாமல் கூறினாள் விஜய்யிடம்.
விஜய்யைப் பற்றி ஓரளவு கணிப்பு அஞ்சனாவிற்கு இருந்தது. அடங்கியிருப்பதுபோல தன்மையாகப் பேசிப் பார்ப்பது. அது சரி வந்தால் நல்லது. இல்லையெனில், மானம், மரியாதை என புலம்பியவனை நன்கு அறிந்தவள் ஆயிற்றே. அதனால், அதனைச் சாக்கிட்டு மிரட்டுவது.
முதலில் தான் திட்டமிட்டதுபோல பேசிப் பார்த்தாள். விஜய் இளகவில்லை. ஆகையினால், அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்திருந்தாள் அஞ்சனா.
“உங்க பொண்டாட்டியப் பாத்து நமக்குள்ள எதாவதுன்னு பேசுனாலே எல்லாம் முடிவுக்கு வந்திரும். அப்புறம் உங்க நிலைமை வேற மாதிரியாகிரும். அதனால, யோசிச்சுச் சொல்லுங்க” அதே தொனியில் பேசினாள் அஞ்சனா.
மௌனமாக திரும்பி நின்று அஞ்சனாவையே பார்த்தவன், “ச்சீய். உன்னைப் போயி நம்புனேன் பாரு. என்னைச் சொல்லணும். மது அப்பவே சொன்னா. நாந்தான் அப்டியிருக்காதுன்னு நினைச்சேன்” என தனது தலையில் அடித்துக் கொண்டவன்,
“நீ எப்பவுமே இப்படித்தானா?” என்றான் விஜய்.
“ஒருத்திக்கு, ரெண்டு பேரா வச்சு வாழ்ந்திட்டுப் போங்கன்னு நானே வந்து ஐடியா சொல்றேன். உங்களுக்கு கசக்குதாக்கும்” இகற்பமான பார்வையொன்றை விஜய்யை நோக்கி வீசியவள்,
“இல்லை முடியாதா?” என நக்கலாகச் சிரித்தாள்.
பின் அவளே தொடர்ந்திட, “நீங்க அந்த விசயத்துக்கு சரிபட்டு வரமாட்டீங்களோ? ஏன்னா, நான் இங்க அவ்ளோ நாள் இருந்தப்ப, ஒதுங்கியேதான இருந்தீங்க. அதான் சின்னதா டவுட். வேணுனா அதுக்கு லேகியம்லாம் வாங்கித் தரேன். எல்லாம் சரி பண்ணிரலாம்” என்றவளைக் கண்டு எழுந்த சினத்தோடு
“இதுக்கு மேல பேசின. அவ்ளோதான்” என ஆட்காட்டி விரலை நீட்டி பத்திரம் காட்டி அவளின் பேச்சை நிறுத்துமாறு செய்கையில் கூறியவன், “ச்சீய்.. நீயெல்லாம்..” அதற்குமேல் சில கெட்ட வார்த்தைகளால் பேசிவிட்டு நகர முனைய,
“ரொம்பத்தான் பிகு பண்றீங்க. ஒன்னும் அவசரமில்லை. நிதானமாப் போயி நல்லா யோசிங்க. லட்டு மாதிரி ரெண்டு பேரை வச்சிட்டு, அழகா வாழற வழியப் பாருங்க. மெதுவா, நல்ல முடிவாச் சொல்லுங்க” சிரித்தபடியே கூறினாள் அஞ்சனா.
“நீ எல்லாம் வாழவே அருகதை இல்லாதவ. இதுக்குமேல எதாவது பேசுன.. அவ்ளோதான் பாத்துக்கோ. இன்னொரு தடவை என்னை தேவையில்லாம அப்ரோச் பண்ணா, என்ன நடக்கும்னே தெரியாது.
உங்க வீட்ல இன்னும் உன்னைத் தேடிட்டுத்தான் இருக்காங்க. நானே போனைப் போட்டு உங்கண்ணங்கிட்டச் சொல்லிருவேன் பாத்துக்கோ. கிடைச்சா உன்னை கொன்னு புதைக்கிற ஐடியாவோடதான் தெரியறான்.” என மிரட்டிவிட்டு, சட்டென அங்கிருந்து அகன்றிருந்தான் விஜய்.
செல்பவனையே இகழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தவளுக்குள், அத்தனை வன்மம்.
‘என்னை வேணானு சொல்லிட்டா போற! போ! எல்லாம் அவமேல இருக்கற மயக்கத்துல இப்டிச் சொல்ற. எங்கிட்ட இல்லாதது, அப்டியென்ன அவகிட்ட இருக்குன்னு இப்டி மயக்கத்தில இருக்க.’ என யோசித்தவள், ‘அவளே உன்னை வேணானு சொல்ற மாதிரிப் பண்றேனா இல்லையானு பாரு?’ என யோசித்தபடியே அஞ்சனா அங்கிருந்து அகன்றாள்.
***
மறுநாள் காலையில் கணவனைக் காணப்போகும் சந்தோசத்தில், முன்பைக் காட்டிலும் தெளிந்து காணப்பட்ட மதுவிற்கு, தனது கைகளால் கண்ணூறு கழித்தார் பிரேமா.
“ஊருக்குப் போயிட்டு மறந்துறாமப் போனைப் போடு” என பிரேமாவும் மதுவிடம் விடைபெற்றிருந்தார். பேருந்து கிளம்பும்போது, பிரேமா நிறைய பத்திரம் கூறி மதுவை வண்டியில் ஏற்றி விட்டிருந்தார்.
பேருந்தில் ஏறிய மது பிரேமாவிடம் விடைபெற்று வந்து சீட்டில் அமர, அவளை இரண்டு கண்கள் ஆராய்ச்சியோடு பார்த்தபடி இருந்தது.
மதுதானா இல்லை வேறு யாருமோ என்ற ஆராய்ச்சியின் முடிவில், பிரேமாவைப் பார்த்ததும் மதுவேதான் எனும் சந்தேகம் தீர்ந்திட, ‘ம், தனியா வந்து போற அளவுக்கு இவ மாறிட்டாளா? இவ புருசன் எங்கே?’ என்றபடி, மதுவோடு பேசும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார், கண்களுக்குச் சொந்தமானவர்.
மதுவோ, கணவன் அலுவலகத்திற்கு செல்லுமுன், வீட்டிற்கு வந்துவிடும் நோக்கத்தில் பயணத்தைத் துவங்கியிருந்தாள்.
***