மது பிரியன் 9அ
மது பிரியன் 9அ
மது பிரியன் 9A
“நான் வேற ஒருத்தரை மனசார விரும்பறேன். அதனால என்னை அவர்கூடவே சேத்து வச்சிருங்க” சட்டென அஞ்சனா கூறிமுடித்து, தலையை தரையைப் பார்த்துக் குனிந்து கொள்ள, பேசிவிட்டு தலைகுனிந்து நிற்பவளையே பார்த்திருந்தான் விஜய்.
சற்று நேரம் அந்த இடம் நிச்சலனமாக காட்சியளித்தது. விஜய்யிக்கு இன்னும் அஞ்சனாவின் வார்த்தைகளை உள்வாங்க முடியாமல், ஒருவித கூற முடியாத அவஸ்தை உணர்வோடு அமர்ந்திருந்தான்.
இரண்டு மாவட்ட மக்களில், ஊர் போற்றும் பலரை அழைத்து, அவர்கள் முன்னிலையில் அனைவரும் வியக்கும்வண்ணம் சிறப்பாக திருமணம் செய்திருக்க, திருமணம் என்பது விளையாட்டு காரியம்போல எண்ணிக் கொண்டு பேசிய அஞ்சனாவின்மீது கோபம் எழுந்தாலும், அதனைக் காட்டும் வழி தெரியாதவன், “நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவெடுத்தியா? யாருகிட்ட வந்து என்ன பேசறோம்கிற புத்தியோடதான் பேசுறியா?” எனக் கேட்டான் விஜய்.
“இதுல யோசிக்க எதுவும் இல்லை. என்னால உங்களை ஏத்துட்டு வாழ முடியும்னு தோணலை. அதான் யோசிச்சுப் பாத்து இந்த முடிவுக்கு வந்துட்டேன்” வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்பதுபோல அசட்டையாகப் பேசினாள் அஞ்சனா.
“இப்ப இவ்ளோ தூரம் யோசிச்சவ கல்யாணத்துக்கு முன்னாடியே உங்க வீட்டுப் பெரியவங்ககிட்ட பேசியிருக்கணும். அதவிட்டுட்டு, இரண்டு குடும்பமும் சம்பந்தப்பட்டு, ஊரறிய எல்லாத்தையும் கூட்டி, கல்யாணம் பண்ண பின்னாடி, எங்கிட்ட வந்து இப்டிச் சொல்றீயே, உனக்கே இது சரின்னு படுதா?”
“எங்க வீட்ல நான் சொன்னதைக் காது குடுத்துக் கேக்கலை. அதான் இப்ப உங்ககிட்ட வந்து நிக்கறேன்” இகழ்ச்சியாக வந்தது வார்த்தைகள்.
“நானும் காது குடுத்துக் கேக்காம எங்கூடதான் வாழணும்னு சொன்னா என்ன செய்வ?” விஜய் வினவ
“நாம்பாட்டுக்கு கிளம்பி சஞ்சய்கூட போயிட்டே இருப்பேன்” என சர்வசாதாரணமாகக் கூறியவளை வெறித்து நோக்கினான்.
“உன்னைவிட்டா வேற பொண்ணே கிடைக்கலைன்னு நானும் இல்லை அஞ்சனா. அதுக்காக பெரியவங்க பாத்து வச்சி, இப்டிக் கல்யாணம் பண்ணிட்டு, இஷ்டத்துக்கு மனம் போன போக்குல ஆளுக்கொரு பக்கமாப் போனா, நம்ம கல்சர் என்னாகிறது? நம்ம வீட்டுப் பெரியவங்களுக்குனு ஒரு மரியாதை இருக்குல்ல. அது என்னாகும்னு யோசிச்சியா?” விஜய் பொறுமையோடு கேட்டான்.
“கல்சர் கண்றாவின்னுலாம் என்னோட வாழ்க்கைய நான் இழக்க முடியாது” என்று கூறினாள் அஞ்சனா.
“கல்யாணம் அப்டிங்கறது விளையாட்டு காரியம் இல்லை அஞ்சனா. இரண்டு குடும்பத்து மானமும் இதுலதான் அடங்கியிருக்கு. இப்ப நீ எடுக்கற முடிவுனால, ஊருக்குள்ள ரெண்டு குடும்பத்துப் பெரியவங்களோட, என்னையும் அசிங்கமாப் பேசுவாங்க. அத்தோடு உன்னையும் கால முழுமைக்கும் பேசுவாங்க. இந்தப் பேச்சு, அசிங்கம் எல்லாம் அப்டியே தொடரும். அதை மாத்தறது அவ்ளோ ஈஸியான விசயம் கிடையாது” எடுத்துக் கூறி, எப்படியேனும் அஞ்சனாவின் முடிவில் இருந்து பின்வாங்கச் செய்யும் முயற்சியில் இறங்கினான் விஜய்.
“நீங்களும், எங்க வீட்டு ஆளுங்க மாதிரியே இப்டிப் பேசுனா, என்னால பொறுமையா இருக்க முடியாது” பட்டவர்த்தனமாகப் பேசினாள் அஞ்சனா.
“என்னால முடிஞ்சது ஒரே ஒரு விசயம்தான் அஞ்சனா. நீ எப்டி இதுவரை இருந்திருந்தாலும், உன்னை என்னோட மனைவியா, உனக்கு வேண்டிய எல்லாத்தையும் என் காலம் வரை செய்யறேன். பேருக்கு புருசன் பொண்டாட்டியா இப்படியே இருந்துட்டுப் போகலாம். என்ன சொல்ற?
இதை எதுக்குச் சொல்றேன்னா, உன்னோட இந்த திடீர் முடிவுனால, ரெண்டு வீட்டுப் பெரியவங்கள்ல யாருக்காவது, எதாவது ஆச்சுன்னா அதையும் கொஞ்சம் யோசிச்சுப் பாரு” தனது பக்கத் தோன்றதை எடுத்துக் கூறினான் விஜய்.
அமைதியாக இருந்தாள் அஞ்சனா. அதன்பின் ஒன்றுமே இதுபற்றி இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அஞ்சனா தனது முடிவில் இருந்து பின்வாங்கி, தனது முடிவிற்கு ஒப்புக் கொண்டாள் என நினைத்துக் கொண்டான் விஜய்.
அப்படியே மூன்று மாதங்கள் செல்ல, விஜய் வேலை பார்க்கும் அலுவலகத்தில் பணிபுரியும், அலுவலுக உதவியாளர் விஜய்யைப் பார்த்து, “சார் உங்ககிட்ட ஒரு விசயம் கேக்கணும்” தயங்கியவாறு உரைத்தான்.
“என்ன செல்லம். என்ன விசயம்?” என விஜய் சாதாரணமாக எண்ணிக் கொண்டு பேச, “அது தனியாப் பேசிக்கலாம் சார்” என்றபடிக் கடந்துவிட்டான்.
இரண்டு நாள்கள் அதற்கான வாய்ப்பு அமையாமல்போக, மூன்றாம் நாள் மாலையில், அவனது கையில் இருந்த மொபைலை விஜய்யிடம் காட்டி, “இது உங்க வீட்டுக்காரம்மா சாயல்ல இருந்தது சார்” எனக் காட்டினான்.
செல்லத்தால் அது சரியா தவறா என்று சரியாகத் தெரியாமல், தான் எதையும் தவறாகக் கூறிவிடக்கூடாதே என்கிற தயக்கம். அவ்வாறு பம்மியவாறு விஜய்யிடம் பேசச் செய்திருந்தது.
டூவீலரின் அருகே இருவர் நின்றிருக்க, அஞ்சனா அந்த நிழற்படத்தில் பளிச்செனத் தெரிந்தாள். சட்டென அக்கியைப் பிடித்த உணர்வு விஜய்யிக்கு. அவனால் அந்தப் படத்தைப் பார்த்து இலகுவாகக் கடக்க முடியவில்லை.
தாள முடியாதவன், “இது அவங்களை மாதிரியே வேற யாரோனு நினைக்கிறேன் செல்லம்” என்று சமாளித்தாலும், “இந்த ஃபோட்டோ எங்க வச்சி எடுத்தது?” என செல்லத்திடம் வினவினான்.
“அது” எனத் தயங்கியவன், “போன வாரம் செக்காலைத் தெரு பக்கமா ஒரு வேலைன்னு போனேன். அப்போ முத தபா, உங்களை மாதிரிதான் நினைச்சிட்டு வந்தேன். ஆனா அடுத்தடுத்த வாரத்துல, வேற வேற எடத்துல ரெண்டு நாளு ரெண்டு பேரையும் பாத்தேன் சார். அதான் டவுட்டு ஒன்னுபோல, ஏழுபேரு இருப்பாங்கன்னு உங்கட்ட காட்டத்தான் எடுத்தாந்தேன் சார்” என செல்லமும், மனதிற்குள் வேறு எண்ணமிருந்தாலும், அதை மறைத்து விஜய்யிடம் சமாளித்தான்.
தோளைத் தட்டிக் குடுத்தபடியே, நினைவுகள் எங்கோ செல்ல, “அதை அப்டியே எனக்கு அனுப்பி வைங்க செல்லம். நானும் வீட்ல காமிக்கறேன்” சிரிக்க முயன்று தோற்று நின்றிருந்தான் விஜய்.
“கல்யாணத்துல பாத்தது நல்லா நெனைப்புருந்தது சார். அதேமாதிரி இங்க இன்னொருத்தங்கன்னுதான் உங்கட்ட எடுத்துகாட்ட இந்த போட்டோவே புடிச்சேன் சார்” என்றபடியே, விஜய்யின் வாட்சப் எண்ணிற்கு அந்த புகைப்படத்தை அனுப்பியவன், “அனுப்பிட்டேன் சார்” என அங்கிருந்து அகன்றுவிட்டான் செல்லம்.
செல்லம் சற்றுதூரம் சென்றபின் நடப்பிற்கு வந்த விஜய், “செல்லம்” என செல்பவனை அழைத்து, அவன் திரும்பி அருகே வந்ததும், “இதைப்பத்தி வேற யாருகிட்டயும் சொல்லிக்க வேணாம்” விஜய் கூற, செல்லத்தின் நெற்றியில் சுருக்கம் விழுந்தது.
அன்று முழுவதும் பணியில் கவனம் செலுத்த முடியாமல், மனம் போன போக்கில் டூவீலரில் சென்றான் விஜய். வீட்டிற்கு வரவே வெறுப்பாக இருந்தது விஜய்யிக்கு.
முடிவாக, அவளை எப்படியேனும் இங்கிருந்து கிளப்பி, அவளின் தாய் வீட்டில் விட்டுவிட முடிவு செய்துவிட்டு, ‘இதப்பத்தி இன்னும் யாருகிட்டயும் சொல்லாம டிலே பண்றது நமக்குத்தான் நல்லது இல்லை. ஆனா யாருகிட்ட இதைப்போயி எப்டிச் சொல்றது?’ என மனதிற்குள் குழம்பியபடி இருந்தான்.
அடுத்த வார இறுதிக்குப்பின் வந்த திங்களன்று, மீண்டும் அதேபோல விசயத்தை செல்லம் விஜய்யிடம் கூறி, “இது சனிக்கிழமை வாக்குல எடுத்தது சார். உண்மையிலேயே இது வேற ஆளுதானா இல்லையானு நீங்க கண்டிப்பா கன்ஃபார்ம் பண்ணிக்கங்க சார்” என அழுத்தத்தோடு கூற, விஜய்யிக்கு மிகவும் தலை குனிவாய்ப் போனது.
ஆனால் அந்த வாரம் முழுமைக்கும் யோசித்து, ஒரு முடிவுக்கு வந்தவன், வாரயிறுதி நாளில், சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அஞ்சனாவின் அண்ணணுக்கு அழைத்தவன், பொதுவான நலம் விசாரிப்பிற்குப்பின், “நான் சென்னைல மீட்டிங்கு போறேன். எப்படியும் வர ரெண்டு மூனு நாள் ஆகும். அதுவரை உங்க தங்கச்சிய உங்க ஊருக்குக் கூட்டிட்டிப் போயி உங்க வீட்ல வச்சிக்கிறீங்களா?” எனக் கேட்டான்.
அஞ்சனாவின் மனதை அறிந்து வைத்திருந்தவர்கள், இனி அனைத்தும் விஜய் பொறுப்பு என தட்டிக் கழிக்கும் முயற்சியில் இருந்தனர். “மாப்பிள்ளை, வேலை ரொம்ப டைட்டா இருக்கு. முடிஞ்சா நீங்களே இங்க கொண்டு வந்து விட்டுட்டு, சென்னைக்கு போங்க. சென்னையில இருந்து வரும்போது அப்டியே நீங்களே வந்து கூட்டிட்டுப் போயிருங்களேன்” என முடித்திருந்தான் அவளின் அண்ணன்.
தனது எந்த ஒரு முடிவும் செயலாக்கம் பெறாமல், தனக்கே பிழையாக முடிவதை எண்ணிய வருத்தத்தோடு வீட்டிற்குத் திரும்பியவன், எதையும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளாமல், “அஞ்சனா, நான் சென்னைக்கு போறேன். நீ அதுவரை உங்க வீட்ல இரு. இன்னைக்கு சாயந்திரம் கிளம்பலாம்” முடிவாகக் கூறினான்.
“நான் எங்க ஊருக்கெல்லாம் போகலை. இங்கேயே இருந்துக்கறேன்” என முடித்தவளை என்ன கூறி இங்கிருந்து அவளின் பெற்றோர் வசம் ஒப்படைப்பது என்று புரியாமல் அமர்ந்திருந்தான் விஜய்.
அதற்குமேல் பொறுமையில்லாதவன், “ஏன் எல்லாருமே அம்மா வீட்டுக்குன்னா ஆசையாதான போவாங்க. நீ ஏன் போக மாட்டிங்கறே?” அஞ்சனாவிடம் விஜய் கேட்டான்.
“நாளைக்கு சஞ்சய் இங்க வரேன்னு சொல்லியிருக்கார்” எதையும் மறைக்கும் எண்ணம் இல்லாமல், தன்னிடம் அப்படியே கூறியவளை திகைப்போடு பார்த்திருந்தான் விஜய்.
“இது எவ்ளோ நாளா நடக்குது” கோபமாகக் கேட்டான் விஜய்.
“ஏன்?” முறைப்போடு பதிலுக்கு வினவினாள்.
“ஏன்னா? எல்லாரும் பாத்துட்டு வந்து சொல்ற அளவுக்கு ஏன் இப்டிப் பண்ற?” நொந்துபோய் கேட்டான் விஜய்.
“அதுக்கு நாங்க என்ன செய்யிறது?” தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமில்லாததுபோல பதில் கூறினாள் அஞ்சனா.
“இது தப்புன்னு தோணுதா இல்லையா?” விஜய்
“என்ன தப்பு. என் மனசுக்குப் பிடிச்சவர் அவர்தான. அப்ப அவர்கூடப் போகாம வேற யார்கூடப் போகறது?”
“இப்போ இந்த ஊரைப் பொறுத்தவரை, மற்றவங்களைப் பொறுத்தவரை நீ என்னோட வயிஃப்” புரிய வைத்திடும் முயற்சியில் தோற்றாலும், சொல்லிப் பார்ப்போம் என்று கூறினான்.
“அது ஊருக்குத்தான். எனக்கில்லை” என்றவள், “உண்மையிலேயே இப்போ உங்களோட தங்கியிருக்கறதுதான் என்னைப் பொறுத்தவரையில தப்பு” என்றுவிட்டு, அவளின் பணியைப் பார்க்கச் சென்றுவிட்டாள்.
இத்தனை நாள் தான் கூறியதை மதித்து நடந்துகொண்டிருக்கிறாள் என நினைத்துக் கொண்டிருந்தவனுக்குள், அஞ்சனாவின் செயலின் காரணமாக, மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானான் விஜய்.
இதனால் வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டான். கவனக்குறைவு காரணமாக எழுந்த சிக்கல்களைக் கண்ணுற்ற, அவனுடைய உயரதிகாரி, நேரில் அழைத்து எச்சரித்தார்.
இதனை கண்ணுற்றிருந்த, அவனது சக பொறியாளர், விஜய்யிடம் விசாரிக்க, விஜய் மழுப்பலான பதில்களைக் கூறி சமாளித்தான். ஆனால் அவரோ, “விஜய், வீடுன்னா, அங்க சில பிரச்சனை, ஆபீஸ்னா இங்கயும் சில பிரச்சனைனு இருக்கத்தான் செய்யும். அதுக்குப்போயி உணர்ச்சிவசப்பட்டுட்டு இருக்காம, ஸ்ட்ரெஸ் ஆகாம நாமபாட்டுக்கு எல்லாத்தையும் கடந்து போற மருந்து ஒன்னு கைவசம் இருக்கு. அதை ரெகுலரா எடுத்தா எல்லாம் சரியா வந்திரும்” என விஜய்யைப் பார்க்கும்போதெல்லாம் கூறத் துவங்கியிருந்தார்.
நீண்ட நாள் அவரின் வார்த்தைகளை ஒரு விசயமாகக் கருதாமல் கடந்து வந்தவன், தானே அஞ்சனாவையும், அவளின் அவனையும் எதிர்பாராமல் சேர்ந்து செல்லும்போது பார்க்க நேரிட, அத்தோடு மனம் விட்டுப் போயிருந்தது விஜய்யிக்கு.
அவனால், அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்பதைக்காட்டிலும், மிகவும் கீழிறக்கமாக உணர்ந்தான். மனஉளைச்சல் கூடியதில், அவனது இயல்பு நிலை மாறிப்போனது. எதிலும் இலயிப்பின்றி, ஏனோதானோவென்று செயல்புரியத் துவங்கியிருந்தான்.
சமாளிக்க இயலாமல் தனக்குள் வைத்துக் குமைந்தவனுக்குள், தெளிவில்லாமல் போயிருந்தது. பணியிலும் கவனமில்லாத காரணத்தினால், அடிக்கடி மேலதிகாரிகளால் அழைத்து எச்சரித்தது வேறு, அவனை மூர்க்கனாக்கியது.
இதற்கிடையே, அஞ்சனாவின் பேச்சு முறைமைகளும் அவனுக்குள் கோபம் மற்றும் மூர்க்கத்தனதை உண்டு செய்தது. அதனை எண்ணி அவனுக்குள்ளாகவே பயம் எழுந்தது. இதனால் அஞ்சனாவை தான் எதாவது செய்துவிடுவோமோ என்கிற உணர்வே அவனை தேவையில்லாததை சிந்திக்கத் தூண்டியது.
அதனால், தனது சக பொறியாளரைச் சந்தித்து, “சார், எப்பவும் ஏதோ ஒரு மெடிசன் ரெக்கமெண்ட் பண்ணுவீங்களே. அது என்னாது சார்” எனக் கேட்டான் விஜய்.
“அதுவா, இப்டியே நம்ம ஏரியால இருக்கற டாஸ்மார்க் போங்க. அங்க போயிக் கேட்டா, உங்களைப் பாத்ததுமே வேணுங்கறதை அவனே எடுத்துத் தருவானுங்க” என அவர்கூற, தயங்கினாலும், மருந்து என்ன என்பது தெரிந்தாலும், இதுவரை அதன்பக்கம்கூட செல்லாதவன், இன்று மறுக்காமல் அவர் கூறிய இடம் சென்று, மருந்தை வாங்கி உட்கொண்டான்.
செல்லும் வழியில் எழுந்த தயக்கம், வரிசையில் நிற்கும்போது இருந்த அழுத்தம், வாங்கிக் கொண்டு உள்ளே இருந்த பாரில் சென்று அமர்ந்ததும் சற்று குறைந்தாற்போல உணர்ந்தான் விஜய்.
முதன்முறை என்பதால் மிகவும் கஷ்டமாக இருந்தது. ‘ச்சேய். இது என்னடா இந்த நாத்தமா இருக்கு. இதைப் போயி எப்டிடா குடிக்கிறாய்ங்க’ என தயங்கியவன், கல்லாவில் நின்றவனிடம் சென்று, “இது வாடை நல்லால்ல. நல்ல ஃபிளேவர் வேற எதாவது இருந்தா குடுங்களேன்” எனக் கேட்க, குடிக்குப் புதுசு என்பதை உணர்ந்தவனோ, “இதுதான் கொஞ்சம் நல்லா ஸ்மெல்லோட இருக்கும் சார். ட்ரை பண்ணுங்க” என ஊக்கப்படுத்திக் கூற, ‘நல்ல ஸ்மெல்லே இவ்ளோ கேவலமா இருக்கே. இதவிட மத்ததெல்லாம் இன்னும் கேவலமா இருக்குமா’ என தனக்குள் யோசித்தபடியே வந்து பழைய இடத்தில் அமர்ந்தவன், அதன்பின் வாங்கியதை தடுமாற்றத்தோடு குடித்தான்.
அதன் சுவையில் ‘கண்றாவி. இது என்னடா இவ்ளோ கேவலமா இருக்கு. அய்யோ வாந்தியே வந்திரும்போலேயே. உவ்.வ்வ்வ்வே..’ என முடியாமல் விழுங்கியவன், அதை உட்கொண்ட சற்றுநேரத்தில், அதன் பின்விளைவால் சற்றே இலகுவான உள்ளம் பெற்றாற்போல, பறப்பதுபோல, எல்லாம் இலேசானதுபோல, பிரச்சனையெல்லாம் முடிவுக்கு வந்தாற்போல, எல்லாம் சுமுகமானதுபோல உணரப் பெற்றான்.
தற்போது எதனையும் எண்ணிக் கலக்கமோ, கவலையோ, கோபமோ, மூர்க்கத்தனமோ இன்றி, சாதாரணமாக இருப்பதுபோல உணர்ந்தான் விஜய்.
மருந்து உட்கொள்வது கசப்பான உணர்வாக இருந்தாலும், அதன் தாக்கம் எழுப்பிய உணர்வுகள் விஜய்யிக்குப் பிடித்திருந்தது. முற்பாதியில் மதுவின் பிடியில் சிக்கி, அதன் பிரியனாக மாறத் துவங்கியிருந்தான் விஜய்.
õõõõõ