1
பூமிப் பந்தானது ஜீவராசிகளுக்குத் தேவையான சூரியனின் ஒளிக் கீற்றுகள் அன்றைய தினத்திற்குப் போதுமென தோன்ற, நிலவின் குளிர்ச்சிக்கும், அன்றைய வேலைகளில் இருந்தும் ஓய்வுக்கு நேரமாவதை உணர்த்தும் வகையில், தனது சுழற்சியில் மூலம் சூரியனிடம் இருந்து அன்றைய தினத்திற்கு விடப்பெற்று நிலா மகளிடம் பூமி சென்று சேரும் நேரமது..
வேலை முடிந்து பறவைகளும், மக்களும் தங்களது கூட்டிற்குள் அடைந்துக் கொண்டிருந்த நேரத்திலும், அந்த வீடு மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.. அது ஒரு திருமண வீடு என்பதே அங்கு எடுத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களிலும், பரபரப்பிலும் நன்றாகவே விளங்கும்.. அதிகக் கூட்டம் இல்லாமல், வீட்டு மனிதர்கள் மட்டுமே இருந்தாலும், அந்த வீட்டில் பரபரப்பிற்கு குறைவில்லாமல் இருந்தது என்பது தான் உண்மை..
அந்த வீட்டின் பெண்கள் இருவரும் ஆளுக்கு ஒன்றாக பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.. ‘விஷ்ணு.. பொண்ணுக்கு கொடுக்க வேண்டிய புடவை, நகை எல்லாம் எடுத்து வச்சிட்டியா?’ என்ற குரல் கேட்க,
“வச்சிட்டேன்மா.. எல்லாமே இந்தக் குட்டிப் பெட்டியில தனியா எடுத்து வச்சிருக்கேன்.. ஆர்யன் ஹேர்கட்டுக்கு போயிட்டானா? நாளைக்குக் காலையிலேயே நலங்கு வைக்கணும்.. அப்பறம் அவன் வெளிய எல்லாம் போகவே முடியாது.. காலையில எல்லாரும் வந்திருவாங்க.. அதனால அதுக்குத் தேவையானது எல்லாம் எடுத்து வைம்மா.. உங்க தம்பி எங்க போனாரு? அவனை கூட்டிட்டு போகச் சொன்னா.. இவரையும் ஆளைக் காணும்.. இவரை வேற நான் எப்போப் பாரு கட்டி இழுக்க வேண்டி இருக்கு.. உங்க தம்பியை நீங்க என்ன தான் வளர்த்து வச்சிருக்கீங்களோ?” விஷ்ணு என்று அழைக்கப்படும் விஷ்ணுப்ரியா சொல்லவும்,
“ஆமாடி.. நான் தான் அவனை வளர்த்தேன்.. அதுக்கு இப்போ என்னங்கற? உன்னை வச்சு அவன் சமாளிக்கிற கஷ்டம் எனக்குத் தெரியும்.. அதை விடு.. ஆர்யன கொஞ்சம் கிளப்பி விடு.. இதுக்கு எல்லாம் ஒரு டைம் ஒதுக்கிட்டு இருக்க முடியாது..” எனவும்,
“நீங்க தான் என்னைப் பெத்தீங்களா? உங்க தம்பிக்காக என்னை இப்படி விட்டுக் கொடுக்கறீங்க?” விஷ்ணுவின் கேள்வியில்,
“எனக்கு அவனை முப்பத்தஞ்சு வருஷமா தெரியும்.. உன்னை எனக்கு இருபத்தி ஒன்பது வருஷமா தான் தெரியும்.. அதனால நான் அவனுக்குத் தான் சப்போர்ட் பண்ணுவேன்.. நீ முதல்ல நான் சொல்ற வேலையைச் செய்.. ஆர்யன கிளப்பி அனுப்பு..” அவளது தாய் பிருந்தா மறுபடியும் சொல்லவும்,
“அதெல்லாம்.. அவன்..” என்று சொல்லிக் கொண்டே திரும்பியவள் திகைத்து நின்றாள்.
அவர்களின் பேச்சுப் பொருளாக இருந்த ஆர்யன் தான் அவளது திகைப்பிற்கு காரணம். அவர்கள் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள், யாருக்கு வந்த விருந்தோ என்பது போல அமர்ந்து, தனது மகனுடன் ப்ளே ஸ்டேஷனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தவனைப் பார்த்தவள் திகைத்தே போனாள்..
“ஆரி.. என்னடா பண்ணிட்டு இருக்க?” விஷ்ணுப்ரியாவின் திகைப்பில்,
“என்ன? நான் என்ன பண்ணினேன்? கவின் கூட விளையாடிட்டு இருக்கேன்.. அவனுக்கு ரொம்ப போர் அடிக்குதுன்னு சொன்னான்.. எனக்கும் போர் அடிக்குது.. அது தான் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து விளையாடறோம்.. அதுக்கு ஏன் ஷாக் ஆகற? போ.. போய் வேலையைப் பாரு..” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு, மீண்டும் கேமில் மூழ்க,
அவனது தோளில் ஒரு அடி வைத்தவள், “உனக்கு நாளைக்கு காலையில அம்மா நலங்கு வைக்கணும்ன்னு சொல்லிட்டு இருக்காங்க.. ஹேர்கட் எல்லாம் பண்ணிட்டு நாளைக்குக்கு ரெடி ஆக சொன்னாங்க இல்ல.. இன்னும் அதைச் செய்யாம இப்படி அவன் கூட விளையாடிட்டு இருக்க? முதல்ல வெளிய கிளம்பு.. இப்போவே மணி ஆச்சு.. எங்க உங்க மாமாவைக் காணும்?” என்று சத்தமிட்டு கண்களைச் சுழற்ற,
அவர்கள் அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து தனது மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தவரைப் பார்த்து, கடுப்புடன் பல்லைக் கடித்தாள்.
“டேய் மரியாதையா எழுந்து கிளம்புடா.. முகத்தைப் பாரு.. இப்படியேவா கல்யாண மண்டபத்துல போய் நிப்ப?” என்று அவள் சத்தமிட, தனது கேமை அப்படியே நிறுத்தியவன்,
“கவின்.. ஒரு அஞ்சு நிமிஷம்.. நாம மறுபடியும் கேமை கண்டின்யூ செய்யலாம்.. நான் ஹைர்கட்டுக்கு போயிட்டு வரேன்.. இல்ல இங்க ரெண்டு பேரும் என்னை ஒரு வழி செஞ்சிடுவாங்க..” என்றவன், எழுந்துக் கொள்ள, கோபமாக டிவியை அனைத்து, ப்ளேஸ்டேஷனின் வயர்களை பிடுங்கி விட்டவள்,
“எழுந்து போடா.. நாளனிக்கு விடிஞ்சா கல்யாணம்.. சின்னப் பையன கூட சேர்த்துக்கிட்டு விளையாடிட்டு இருக்கான்.. அந்தப் பொண்ணு இதை எல்லாம் பார்த்தா சிரிக்கப் போகுது..” என்று பல்லைக் கடித்தவளைப் பார்த்து பழிப்புக் காட்டியவன்,
“இப்படியே இருந்தா என்னவாம்? நல்லா தானே இருக்கு? எதுக்கு இப்போ இருக்கற செலவுல அனாவசியமா இந்த தண்டச் செலவு வேற..” தனது தாடியைத் தடவிக் கொண்டே, கண்ணாடியில் பார்க்க, விஷ்ணுப்பிரியா தனது தலையில் அடித்துக் கொண்டாள்.
“உனக்கு தாண்டா நாளை மறுநாள் கல்யாணம்.. அதுக்குத் தான் இங்க நாங்க எல்லாம் ஓடிக்கிட்டு இருக்கோம்.. நீ என்னடான்னா இப்படி ஷேவ் செய்யறதுக்கு இத்தனை கேள்வி கேட்டுட்டு இருக்க? என்னவோ எவனுக்கோ கல்யாணம் போல இங்க கேம் விளையாடிக்கிட்டு இருக்க? காடு போல தாடி வளர்த்து வச்சிருக்கான்.. அந்தப் பொண்ணு உன்னைப் இப்படிப் பார்த்தா பயந்தே போயிடுவா.. இல்ல ஓடிப் போயிடுவா..” என்று பல்லைக் கடித்தவள், ஒரு பெருமூச்சுடன் தனது கணவரின் கையில் இருந்த செல்லைப் பிடுங்கினாள்..
“ஒழுங்கா இங்க அவனைக் கூட்டிட்டு போயிட்டு வாங்க.. ரெண்டு பேரையும் வச்சிக்கிட்டு எனக்கு முடியல..” என்று சத்தமிடவும், இருவரும் அங்கிருந்து நழுவிச் சென்றனர்..
சலூனிற்குச் சென்ற அந்த நேரத்திலும், ஆர்யன் சாதாரணமாகவே அமர்ந்திருக்க, சேகர் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஏண்டா ஜீவிதா கிட்ட பேசினயா? கல்யாணத்துக்கு எல்லாம் ரெடியா இருக்காளா? கையில மருதாணி எல்லாம் போட்டுட்டாளா?” சேகரின் கேள்விக்கு, தோளைக் குலுக்கியவன்,
“அதெல்லாம் அவளுக்கா செஞ்சிக்கத் தெரியாதா? இங்க என்னை விரட்டற போல அவங்க வீட்டுல யாராவது செய்வாங்க.. அதைப் போய் நான் ஏன் கேட்டுக்கிட்டு இருக்கணும்? சரி.. நான் கேட்டு அவ பதில் சொல்லிட கில்லிடப் போறா.. அதெல்லாம் செஞ்சிருப்பா..” என்றவன், தனது முகத்தை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்க்க,
“ஏண்டா? ஏதாவது சண்டையா?” சேகர் கேட்க,
“ச்சே.. ச்சே.. அதெல்லாம் இல்ல.. பேசினா தானே சண்டை வரத்துக்கு.. எனக்கு இதெல்லாம் சரி வருமான்னே யோசிக்க முடியல.. இப்படியே எங்கயாவது போயிடலாம் போல இருக்கு.. பேசாம இந்த கல்யாணத்தை நிறுத்திட்டு வீட்டுலயே இருந்திடலாமா?” என்ற ஆர்யனை, கவலையுடன் சேகர் பார்க்க, தோளை குலுக்கி, அவரைப் பார்த்து உதட்டைப் பிதுக்கியவன், தனது தலையை கோதிக் கொண்டே, வீட்டிற்கு வந்து குளித்து விட்டு வர, சேகர் யோசனையுடனே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மீண்டும் ஆர்யன் கவினுடன் அமரவும், “இதோ பாரு ஆரி.. என்னைக் கொலைகாரி ஆக்கிடாதே.. மொதல்ல எழுந்து சாப்பிட வாங்க ரெண்டு பேரும்.. எனக்கு வேலை நிறைய இருக்கு..” விஷ்ணுவின் சத்தத்தில், சேகர் ஆர்யனின் முகத்தைப் பார்க்க,
“சாப்பாடு வேலை எல்லாம் முடிச்சிட்டு அடுத்து நான் அவனுக்கு தேவையான எல்லாமே எடுத்து வைக்கணும்.. இந்த எரும இன்னும் எதுவுமே செய்யாம கேம் விளையாடிட்டு இருக்கான்.. காலையில சொந்தக்காரங்க எல்லாம் வரத் தொடங்கிட்டா எனக்கு அவங்களை கவனிக்கத் தான் நேரம் சரியா இருக்கும்.. சீக்கிரம்.. மணி இப்போவே எட்டுக்கு மேல ஆகுது..” என்றபடி பிருந்தா வரவும், இருவரும் எழுந்து உணவுண்ணச் சென்றனர்..
“ஆரி.. இந்த ரூம் அலமாரில இருந்த உன்னோட லொட்டு லொசுக்கு பொருளை எல்லாம் எடுத்து உன்னோட ரூம்ல இருக்கற பரனைல வச்சிட்டேன்.. நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு ஜீவிதா வந்தா அவளோட பொருட்களை எல்லாம் வைக்க இடம் வேணும் இல்ல.. உன்னோட ரூம்ல இருக்கற செல்ஃப்ல உன்னோட துணிமணியே சரியா இருக்கு.. அதனால அவளோட டிரஸ் எல்லாம் அந்த ரூம்ல வசிக்கட்டும்.. ஒரே ஒரு கட்டில் மட்டும் இருக்கறதுனால அங்க பீரோ வேணும்னாலும் போட்டுக்கலாம்..” என்று சொல்லிக் கொண்டே அவனுக்கு பரிமாற,
அவரை ஒருமாதிரிப் பார்த்துக் கொண்டே, “நல்லவேளை என்னையும் பரணுல வச்சிருவீங்கன்னு நினைச்சேன்.. நான் தப்பிச்சேன்.. இல்லைன்னாலும் அவ வந்து என்னை வாச்சிருவான்னு நினைக்கிறேன்.. எதுக்கும் அடிக்கடி என்னை வந்து கவனிச்சிக்கோங்க..” என்றவன், உணவை முடித்துக் கொண்டு, தனது மாமனுக்கு சைகைக் காட்டிவிட்டு, கவினுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, தனது அறைக்குச் செல்ல, விஷ்ணுப்ரியா அவன் பின்னோடு வந்தாள்..
“ஆரி.. உனக்கு என்ன என்ன டிரஸ் வேணும்ன்னு சொல்லு.. நாளைக்கு நைட் தான் நாம மண்டபத்துக்கு போறோம்.. மாப்பிள்ளை அழைப்பு முடிஞ்சதும் அதோட அவ்வளவு தான்.. ரெஸ்ட் எடுக்கப் போறோம்.. அப்பறம் கல்யாணம் முடிஞ்சு பத்து மணிக்கு ரிசப்ஷன்.. அதுக்கு கோட் சூட் இங்க இருக்கு.. பட்டுவேட்டி எல்லாம் அங்க அவங்க தருவாங்க.. வேற உனக்கு தேவையான லொட்டு லொசுக்கு எல்லாம் எடுத்து வச்சிக்கோ.. அப்பறம் அங்க வந்து அது இல்ல.. இது இல்லன்னு சொல்லாதே.. உன்னோட டவல்.. அதை மறக்காம எடுத்து வச்சிக்கோ தெய்வமே.. அப்பறம் அங்க யாரு டவலும் யூஸ் பண்ண மாட்டேன்.. எனக்கு என்னோட டவல் தான் வேணும்.. அதை வீட்டுக்கு போய் கொண்டு வான்னு எங்களை எல்லாம் விரட்டுவ..” என்று சொல்லிக் கொண்டிருக்க, பெட்டின் மீது ஏறி குதித்தவன்,
“குட் நைட் டி அக்கா.. அப்படியே போகும்போது லைட்டை ஆஃப் பண்ணிட்டு போ..” என்று சொல்லவும், தலையில் அடித்துக் கொண்டவள்,
“சீக்கிரம் தூங்கு.. காலையில வேலை இருக்கு.. இப்போ தூங்கினா தான் உண்டு.. அப்பறம் நாளைக்கு எல்லாம் கல்யாண அசதி தொடங்கிடும்.. சரியா தூங்க முடியாது.. உனக்கு வேற இடம் மாத்திப் படுத்தா தூக்கம் வராது.. உன்னை எல்லாம் வச்சிக்கிட்டு நாங்க படற பாடு இருக்கே.. அந்த ஜீவிதா என்ன பாடுபடப் போறாளோ?” என்று அலுத்துக் கொண்டவள், அவனுக்குத் தேவையானதை எடுத்து வைத்து விட்டே வெளியில் செல்ல, சேகர், அவளுக்காக காத்திருந்தான்..
கவினும் உறங்கி விடவும், அவனை மற்றொரு அறையில் இருந்த பெட்டில் கிடத்திய சேகர், “ப்ரியா.. இங்க என் கூட வாயேன்..” என்று அழைத்தவன், அவளை இழுத்துக் கொண்டு பால்கனிக்குச் சென்றான்..
“இப்போ எதுக்கு என்னை தனியா தள்ளிட்டு போறீங்க?” விஷ்ணுப்ரியாவின் கேள்வியில்,
“ஹான்.. உன் கூட ரொமான்ஸ் பண்ணத் தான்.. எவடி இவ..” என்று அவளிடம் கடுப்படித்தவன்,
“ப்ரியா.. ஆரிக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஏதாவது கருத்து வேறுபாடு இருக்கா? உனக்கு ஏதாவது தெரியுமா?” படபடப்பாக அவன் கேட்க,
“ஏன் நீங்க ஏதாவது விசாரிச்சீங்களா? அவன் ஏதாவது சொன்னானா?” விஷ்ணுப்ரியா கவலையாக,
“இல்ல.. அவன் முகத்துல கல்யாணத்துக்கு உரிய எந்த வித இதுவுமே இல்லையே.. என்னவோ யாருக்கோ கல்யாணம் போல உட்கார்ந்து இருக்கான்.. என்னவோ இஷ்டமே இல்லாம இருக்கறது போல இருக்கு.. அவன் அந்தப் பொண்ணுகிட்ட பேசறானான்னு கவனிச்சயா? கேட்டா ஏதோ போல பதில் சொல்றான்.. நீங்க யாராவது அந்தப் பொண்ணு கிட்ட பேசினீங்களா?” அக்கறையாக அவன் கேட்க, ப்ரியா அவனை ஏளனமாகப் பார்த்தாள்..
“அவனுக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லித் தானே நாம நிச்சயம் செய்துட்டு வந்தோம்.. இப்போ வந்து இந்தக் கேள்வியைக் கேட்கறீங்க? அந்தப் பொண்ணு கல்யாணத்துக்கு மெஹந்தி எல்லாம் போட்டுட்டு பிசியா இருக்கும்.. அதனால காலையில இருந்து பேசி இருக்க மாட்டா.. அதுனால இவனும் இப்படி இருக்கானா இருக்கும்.. நீங்க வேற நேரம் கெட்ட நேரத்துல தேவை இல்லாததை எல்லாம் யோசிக்காதீங்க.. போய் பேசாம தூங்குங்க.. நாளைக்கு நமக்கு வேலை நிறைய இருக்கு..” என்றவள்,
“அம்மா.. சும்மா அங்கயும் இங்கயும் போயிட்டே இருந்தா ஒண்ணும் வேலை ஆகாது.. எல்லாம் எடுத்து வச்சாச்சு.. நீங்க வந்து படுங்க.. மணியாகுது..” என்று சொல்லவும், பிருந்தா வந்து படுத்துக் கொள்ள, அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல், சேகரும் சென்று படுத்துக் கொண்டான்..
மறுநாள் அதிகாலையிலேயே அந்த இல்லத்தில் பரபரப்பு தொடங்கியது. உறவினர்கள் வரத் துவங்க, பிருந்தாவும் விஷ்ணுப்பிரியாவும் பம்பரம் போலச் சுற்றிக் கொண்டிருந்தனர்.
அதற்கு சம்பந்தமே இல்லாதது போல ஆர்யன், தனது மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டு, படுத்திருக்க, உள்ளே சென்றுப் பார்த்த விஷ்ணுப்ரியாவிற்கு பிபி எகிறியது..
இரவு தனது கணவர் கூறியது வேறு நினைவில் ஆட, தனது தலையை உலுக்கிக் கொண்டவள், தனது கணவரிடம் சென்று நின்றாள்.. அவன் வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருக்க, “அங்க நலங்குக்கு ரெடி பண்ணிட்டு இருக்கு.. அவனை கொஞ்சம் பாருங்க.. என்னவோ ரொம்ப ரிலாக்ஸ்ட்டா மொபைல்ல உட்கார்ந்து இருக்கான்..” என்று சத்தமிட, பிருந்தா தேவையான அனைத்து பொருட்களையும் கொண்டு வைத்தார்..
உள்ளே சென்ற சேகர், “டேய்.. எழுந்து குளிச்சிட்டு வா.. எல்லாரும் வந்துட்டு இருக்காங்க.. நீ படுத்து இப்படி விட்டத்தைப் பார்த்துட்டு இருக்க?” என்று கேட்கவும்,
“மல்லாக்க படுத்து விட்டதை பார்க்கறது என்ன சுகம் தெரியுமா மாமா? நீங்களும் வந்து கம்பனி கொடுங்களேன்.. ரெண்டு பேரும் ரசிப்போம்..” என்றவனை சேகர் முறைக்க,
“ஹையோ இங்க இந்த சாமியும் மலையேறினா கடவுள் கூட உன்னைக் காப்பாத்த முடியாது ஆரி.. பேசாம ஓடிரு..” என்று கேலியாகச் சொன்னவன், வேகமாக குளித்துவிட்டு தனது ஷார்ட்சை மாட்டிக் கொள்ள, சேகர் தலையில் அடித்துக் கொண்டார்..
“வேஷ்டி கட்டுடா.. ஏண்டா இப்படி படுத்தற?” பாவமாகக் கேட்க,
“ஏன் இப்படியே உட்கார்ந்தா நீங்க நலங்கு வைக்க மாட்டீங்களா என்ன? டிரஸ் போட்டு இருக்கேனேன்னு சந்தோஷப்படுங்க..” என்ற அவனது கேள்வியைக் கேட்டுக் கொண்டே வந்த விஷ்ணு,
“டேய் வேஷ்டியைக் கட்டுடா.. இப்படியே நேத்து இருந்து உயிரை வாங்கறான்.. இவன் கல்யாணம் முடியறதுக்குள்ள எனக்கு நாக்கு தள்ளிரும் போல இருக்கு..” என்று அவள் சத்தமிட,
“இப்போ எதுக்கு டென்ஷன் ஆகற பேபி.. கொஞ்சம் கூலா இரேன்.. ஏன் நான் இல்ல..” என்று கேட்டவனை அவள் முறைக்க, அவளைப் பார்த்து ‘ஈ’ என்று இளித்தவன், அருகில் இருந்த ‘ஒட்டிக்கோ கட்டிக்கோ’ வேஷ்டியை எடுத்து, தான் அணிந்துக் கொண்டிருக்கும் ஷார்ட்சின் மேல் அப்படியே இடுப்பில் வைத்து ஒட்டிக்கொள்ள,
“ஆரி.. அங்க அந்த சேர்ல உட்காரு.. உன்னோட சேர்த்து ஏண்டா என்னைத் திட்டு வாங்க வைக்கிற? நேத்து இருந்து நானும் திட்டு வாங்கேறேன்..” சேகர் சொல்லவும், ஆர்யன் எழுந்து அங்கு அவன் காட்டிய சேரில் அமர்ந்தான்..
“இந்தாங்க.. சீக்கிரம் அவனுக்கு நலங்கு வைங்க..” பிருந்தா சொல்லவும், சேகர் அவனுக்கு நலங்கு வைக்கத் தயாரானார்..
“கொஞ்சம் தான் முகத்தை சிரிச்சது போலவே வைச்சிக்கோயேன்டா..” அவனது கழுத்தில் நெற்றியில் என்று சந்தனத்தை பூசிக் கொண்டே சேகர் சொல்லவும், தனது உதட்டை இழுத்து சிரிப்பது போல வைத்துக் கொண்டவன்,
“போதுமா” எனவும், அவனது கன்னத்தில் தட்டியவன், யோசனையுனும், கவலையுடனும் அவனது முகத்தைப் பார்த்தான்.. விஷ்ணுப்ரியாவும் அவனுக்கு நலங்கு வைத்து முடிக்கவும், அவனது கழுத்தில் ஒரு சங்கிலியை அணிவித்த சேகர்,
“இது உன்னோட தாய் மாமாவோட சீர்..” என்று சொல்லிக் கொண்டே அடுத்து அவனது விரலைப் பிடித்து மோதிரம் போட்டவன்,
“இது உன்னோட அக்கா புருஷனோட சீர்..” என்று சொல்லவும், ஆரியன் சிரிக்கத் துவங்கினான்..
“இப்படி தாய் மாமனே அக்கா புருஷனா இருந்தா நல்லா இருக்கு இல்ல..” என்று கேலி செய்யவும், அவனது சிரிப்பைப் பார்த்த பிருந்தா அவனது கன்னத்தைத் தட்டி விட்டு,
“சீக்கிரம் எல்லாரும் அவனுக்கு நலங்கு வச்சிட்டு வாங்க.. சாப்பிடலாம்.. அப்பறம் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு, வேன் வந்தா மண்டபத்துக்கு கிளம்ப நேரம் சரியா இருக்கும்..” பிருந்தா அங்கிருந்த வந்தவர்களிடம் சொல்லவும், அனைவருமே ஆர்யனுக்கு நலங்கு வைக்க, பிருந்தாவின் கண்களில் கண்ணீர் நிரம்பியது..
தனது ஆசை மகனை மணக்கோலத்தில் காண தனது கணவர் இல்லையே என்று எண்ணியவர், ஒரு பெருமூச்சுடன், “சரிடா.. சாமிக்கு எல்லாம் கும்பிட்டு ரெஸ்ட் எடு.. அப்போ தான் நாம கிளம்ப சரியா இருக்கும்..” தனது ஆசை மகனை மணக்கோலத்தில் காணும் நேரத்திற்காக ஆவலுடன் காத்திருக்கத் துவங்கினார்.. திருமணமே வேண்டாம்… வேண்டாம் என்றவனை ஒருவழியாக சம்மதிக்க வைத்து, இதோ நாளை அவனது மணநாள் என்கிற அளவுக்கு வந்திருப்பதை எண்ணி, மனம் பூரித்துப் போனவர், அடுத்த வேலைகளை கவனிக்கத் துவங்கினார்..