அத்தியாயம் – 10
மறுநாள் காலை ஆறு மணிக்கு வம்சி திரும்பி படுத்தான். அவன் கைகள் அருகே இருக்கும் தன் மனைவியை தேடியது.
பிரச்சனைக்கு பின் மிருதுளா சற்று இடைவெளி விட்டு தான் படுக்கிறாள். இவனை அறைக்குள் வரக்கூடாது என்றெல்லாம் சொல்லி பார்த்தாள் தான். இவன் கேட்டால் தானே?
‘இன்னும் தள்ளி படுத்திருப்பாளோ?’ என்ற எண்ணத்தோடு தூக்க கலக்கத்தில் சற்று உருண்டு படுத்து அவளை தேடினான்.
வெறும் மெத்தை மட்டுமே கையில் சிக்க, “பங்காரு…” பதட்டத்தோடு எழுந்து அமர்ந்தான்.
“பங்காரு…” அறை முழுக்க தேடினான். அவளை காணவில்லை.
“பங்காரு… பங்காரு… பங்காரு…” அவன் அலறல் சத்தம் வீடெங்கும் ஒலித்தது.
அவன் வாசல், தோட்டம் என எங்கும் தேடினான். அவளை காணவில்லை என்றதும் அவன் இதயத்துடிப்பு எகிறியது.
“பங்காரு… பங்காரு…” அவன் உதடும், இதயமும் ஒரு சேர வேகமாக அழைக்க ஆரம்பித்தது.
கடைசியில், சமையலறையில் சத்தம் கேட்க, ‘காலங்காத்தால கிச்சேன்ல என்ன பண்றா? இவளை நான் ரெஸ்ட் எடுக்க சொன்னேன். நான் சொல்றதை கேட்கறது கிடையாது. என்னை புரிஞ்சிக்கிறது கிடையாது. என்னவோ நான் தப்பானவன் மாதிரி என்னை எப்பப்பாரு திட்ட வேண்டியது’ கடுப்பாக சமையலறை நோக்கி நடந்தான்.
“பங்காரு…” அவன் கோபமாக அழைத்தான்.
அவள் பேசவில்லை. தீவிரமாக பணியாரம் சுட்டுக் கொண்டிருந்தாள்.
“கூப்பிட்டா என்னன்னு கேட்க மாட்டியா?” அவன் அவளை தோள் தொட்டு கோபமாக திருப்ப,
“நீங்க கூப்பிட்ட நான் ஏன் என்னனு கேட்கணும்?” அவள் கேட்க, “பங்காரு…” அவன் தன் பொறுமையை இழுத்து பிடித்துக்கொண்டு அழைத்தான்.
“ஏன் பங்காரு இப்படி எல்லாம் பண்ற? நான் பயந்து போய்ட்டேன்” அவன் கரங்கள் அவள் தோளில் அழுத்தம் காட்ட அவள் முகம் பார்த்து கண்களில் காதல் வழிய கூறினான்.
“ஏன் பயந்தீங்க? நான் உங்க கிட்ட சொல்லாமல் எங்கையாவது ஓடி போய்டுவேன்னு பயந்தீங்களா?” அவள் தலை சரித்து, புருவங்களை கேள்வியாக உயர்த்தினாள்.
அவன் பேசவில்லை. “நீங்க அக்கா அக்கான்னு சொல்லும் பொழுது எனக்கு வருத்தம் தான். ஆனால், விட்டுட்டு போகணும்னு நான் ஒருநாளும் யோசிச்சதில்லை. ஏன் தெரியுமா? இந்த வம்சிக்கு…” தன் ஆள் காட்டி விரலால், அவன் நெஞ்சை அழுத்தினாள்.
“இந்த வம்சிக்கு பங்காரு வேணுமுன்னு நான் நம்பினேன். ஒரு குடும்பம் வேணுமுன்னு நான் நம்பினேன்.” அவன் நெஞ்சை விரலால் அழுத்தி நிதானமாக கூறினாள்.
“பங்காரு… அது உண்மை தானே? இந்த வம்சிக்கு பங்காரு வேணும். குடும்பம் வேணும்.” அவன் பதட்டத்தோடு அவள் கைகளை பிடித்து கொண்டு பரிதவித்தான்.
“போதும் இந்த நடிப்பு” அவள் குரல் இறுகி இருந்தது.
“இந்த வம்சிக்கு குடும்பம் இருக்கு. அது அவங்க அக்கா குடும்பம். உங்களுக்கு தேவை வேலைக்காரி. அது இந்த மிருதுளா இல்லை” அவள் கூற, “பங்காரு..” அவன் அழைக்க,
“வேலைக்காரிக்கு ஆயிரம் பெயர் உண்டு. அதுல ஒன்னு இந்த பங்காரு” அவள் கூற, “பங்காரு…” அவன் அவளை வேகமாக உலுக்கினான்.
“தப்புத்தான்… எல்லாம் என் தப்புத்தான். நான் ஓடி ஒளிந்திருப்பேனே. என் குழந்தையை நீங்க இப்படி எல்லாம் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா, நான் உங்க கிட்ட சொல்லாமலே ஓடி இருப்பேனே?” அவள் தலையிலும் வயிற்றிலும் அடித்து கொண்டு சுவரோடு சாய்ந்து கொண்டு கதறினாள்.
“பங்காரு… அழாத பங்காரு… என்னால் பார்க்க முடியலை.” அவன் அவள் முன் மண்டியிட்டு அவள் தலை கோதி, அவளை சமாதானம் செய்யவே முயற்சித்தான்.
அவன் கைகளை வெடுக்கென்று தட்டிவிட்டாள் மிருதுளா.
“ஓட வேண்டிய காலத்தில் ஓடாமல், இனி ஓடி என்ன ஆகப்போகுது. பயப்படாதீங்க. சொல்லாமல் ஓட மாட்டேன். சொல்லிட்டுதான் போவேன். ஆனால், அக்கா குடும்பம் உங்க குடும்பம் இல்லைனு புரிய வைத்து உங்க கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கிட்டு உங்களை தனியாளா நிக்க வச்சிட்டு தான் நான் போவேன்.” அவள் கூற,
“எல்லாம் புரிய வச்சிட்டு ஏன் பங்காரு என்னை விட்டுட்டு போகணும். என் கூடவே இருக்கலாமில்லை?” அவன் அவள் அருகே சமையலறையில் அமர்ந்து கொண்டு கேட்டான்.
“ம்… எனக்கு உங்களை பிடிக்கலை. அதுக்கு தான் விட்டுட்டு போறேன்.” அவள் வெடுக்கென்று கூறிவிட்டு, பணியாரத்தை சுட ஆரம்பித்தாள்.
அவள் எழுந்து கொண்டு, அவளை பின்னோடு அணைத்தான்.
“பங்காரு…” அவன் அவள் கன்னத்தை உரச, “என்னை விடுங்க…” அவள் சீறினாள்.
“நேத்து உன்னை அடிச்சிருக்க கூடாது. சாரி…” அவன் அவளை அறைந்த இடத்தில இதழ் பதித்து மன்னிப்பு கேட்டான்.
“நீங்க அடிக்குறதெல்லாம் எனக்கு புதுசில்லை. உங்க அக்காவை சொன்னால் நீங்க அடிக்க போறீங்க? இதுக்கு எதுக்கு மன்னிப்பெல்லாம்?” அவனை விலக்க முயற்சித்துக் கொண்டே அவள் கைகள் பணியாரத்தை வெந்தெடுத்தது.
“அது தான் மன்னிப்பு கேட்குறேனில்லை பங்காரு.” அவன் அவள் தோளில் தன் தாடையை பதித்து அவளை இடையோடு அணைத்து அவளிடம் மன்னிப்பை யாசித்தான்.
அவள் படக்கென்று திரும்பினாள். “சரி மன்னிச்சிட்டேன்” எந்தவித உணர்ச்சியுமின்றி கூறினாள்.
“என்ன பங்காரு… இப்படி பேசுற?” அவன் இழைய, “இப்ப நான் என்ன பண்ணனும்?” அவள் கடுப்பாக கேட்டாள்.
“உனக்கு என்ன தான் வேணும்?” அவனும் இப்பொழுது கடுப்பாக கேட்டான்.
“எனக்கு என்னுடைய குழந்தை வேணும்” அவள் கறாராக கேட்க, “சரி வா… பெத்துக்கலாம்” அவன் இப்பொழுது அசராமல் கூறினான். அவளை அணைத்திருந்த அவன் கைகள் நெருக்கத்தை கூட்டியது
அவன் கூற்றில் இப்பொழுது அவள் திடுக்கிட்டு போனாள்.
“ஏய், என்ன ரொம்ப தான் பண்ற? நான் தான் மன்னிப்பு கேட்குறேனில்லை. உன்கிட்ட சொல்லாம பண்ணது தப்புத்தான். ஏதோ தெரியாம பண்ணிட்டேன். நான் தப்பெல்லாம் பண்ணலை. உனக்கு நல்லதுன்னு நினைச்சி பண்ணேன்.” அவன் பேச, அவள் அவனை அமைதியாக பார்த்தாள்.
“உனக்கு அதை புரிஞ்சிக்குற அறிவில்லை. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? அது எனக்கும் குழந்தை தான். அது இல்லாமல் போனதுக்கு என்னை டைவர்ஸ் பண்ணுவியா? லூசா நீ” அவன் நியாயம் கேட்டான்.
“உனக்கு தேவை என் குழந்தை. ஆனால், நான் இல்லையா?” அவன் கோபமாக கேட்க, “ஓ…” என்றாள் அவள் நிதானமாக. அவன் பிடியிலிருந்தாலும், அவள் விலகி நிற்கவே முயன்று தோற்று கொண்டிருந்தாள்.
“என்ன ஓ?” அவன் கோபமாக கேட்க, “நீங்க கேட்டா பிள்ளை பெத்து கொடுக்கணும்? அதாவது நான் பிள்ளை பெத்து கொடுக்கிற மெஷின்?” அவள் கேட்க,
“நான் அப்படி நினைக்கலை பங்காரு. என் மனைவியை கர்ப்ப காலத்தில் நான் பூ மாதிரி பார்த்துக்கனுமுனு நினச்சேன். அதுக்கு என் அக்கா கூட இடைஞ்சலா இருக்க கூடாதுனு நினச்சேன்.” அவன் விளக்க,
“அப்ப உங்க அக்கா…” அவள் ஆரம்பிக்க, “பங்காரு… திரும்ப திரும்ப எனக்கு இந்த விஷயத்தை பேச பிடிக்கலை. நாம நிறைய பேசிட்டோம்” அவன் கூற,
“அதுவும் சரி தான். வாங்க இந்த பணியாரத்தை உங்க அக்காவுக்கு கொண்டு போவோம்” அவள் தற்பொழுது வெந்த பணியாரத்தை பெரிய ஹாட் பாக்ஸை திறந்து வைக்க, இடைவெளி இல்லாமல் அவள் அருகே நின்றவன் அரண்டே போனான்.
“எவ்வளவு பணியாரம்? என்ன டீ இவ்வளவு பணியாரம் பண்ணிருக்க?” அவன் பணியாரத்தை எண்ண ஆரம்பித்து அதிர்ச்சியோடு கேட்க, “ம்… உங்க அக்காவுக்கு தான்” அவள் கூற,
“இவ்வளவு பணியாரமா? எங்க அக்கா பணியாரம் மட்டும் தான் பத்து மாசமும் சாப்பிடுவாளா?” அவன் கண்களை இமைக்காமல் பணியாரத்தை பார்த்தபடி கேட்டான்.
“வா… குழந்தை பெத்துக்கலாம்னு சாதரணமா கூப்பிடறீங்க? உங்க அக்காவுக்கு பணியாரம் கொடுக்க போகலாமுன்னா இவ்வளவு கேள்வி கேட்கறீங்க? குழந்தை பெத்துக்கறதை விடவா பணியாரம் கொண்டு போறது கஷ்டமா?” மிருதுளா இப்பொழுது அப்பாவியாக கேட்க,
அந்த குண்டுகுண்டு பணியாரம் தன் கண்களை உருட்டி உருட்டி, ‘இவர்கள் என்னை சாப்பிடுவார்களா?’ என்பது போல் பார்த்தது.
“பங்காரு… நீ வேணுமுன்னே செய்யற” அவன் இப்பொழுது இத்தனை நேரம் அவள் கேட்ட விலகலை கொடுத்து இடைவெளி விட்டு நின்று கேட்டான்.
“இல்லை பாவா… வேண்டாமுன்னா பண்ணுவாங்க. வேணுமுன்னு தான் பண்ணுவாங்க… என்னோட பாவாக்கு அவங்க அக்கா வேணுமுன்னு ஆசை ஆசையா ஒரு ஐந்நூறு பணியாரம் பண்ணிருக்கேன். அவ்வுளவு தான். ஐநூறுக்கு கொஞ்சம் கூட இருக்கும் பாவா. ஆனால், குறைய வாய்ப்பே இல்லை.” அவள் கண்களை சிமிட்டி கூறினாள்.
அந்த பணியாரத்தை எடுத்து வாயில் போட்டான்.
“நல்லாருக்கு. சரி கொடு. நான் கொண்டு போறேன்” அவன் கைகளை நீட்ட, “ம்… அது தான் இல்லை. நானும் கூட வருவேன். இனி நீங்க உங்க அக்கா வீட்டுக்கு தனியா போகவே கூடாது.” அவள் அவன் முன் இரு கைகளை விரித்தபடி நின்றாள்.
“நான் நல்லாருக்கேனா? காலையிலையே குளித்து உங்க அக்காவை பார்க்க ஆசையா கிளம்பி நிக்குறேன்” அவள் உறுதியாக கூறினாள்.
‘இவளிடம் இப்பொழுது பேசி பயனில்லை’ அவன் முகத்தில் மென்னகை பரவியது. அவள் கன்னம் தட்டி குளிக்க சென்றான்.
குளியலோடு தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.
“பங்காரு… இங்க வாயேன்” அவளை அன்பாக அழைத்தான்.
அவளை அவன் அருகே அமர வைத்தான். அவள் தோள் மீது கைபோட்டான்.
“பங்காரு… நான் பண்ணது தப்பு…” அவன் பொறுமையாக பேச, “இல்லை பாவா… நீங்க பண்ணது தப்பே இல்லை. எனக்கு உங்க நியாயம் இப்ப தான் புரியுது. உங்க அக்கா ரொம்ப முக்கியம்.” அவள் சிரித்தபடி கூற,
“பங்காரு…” அவன் இப்பொழுது பொறுமையை இழுத்து பிடிக்க ஆரம்பித்தான்.
“பாருங்க நீங்க தான் இப்ப டென்ஷன் ஆகுறீங்க. நான் நீங்க செய்ததெல்லாம் சரின்னு தானே சொல்றேன். ஒரு முகம் தெரியா புள்ளி. உங்க அக்கா முன்னாடி ஜுஜுபி. அதை அழிக்கறேதெல்லாம் ஒரு பாவமா?” அவள் பேச, அவன் மௌனித்தான்.
“உங்க அக்கா ஆசை முக்கியமில்லையா? உங்க அக்காவுக்கு நான் பணியாரம் செய்றது முக்கியமில்லையா? நான் பணியாரம் செய்யாம உங்க அக்கா குழந்தைக்கு ஏதாவது…” சட்டென்று தன் பேச்சை நிறுத்திக்கொண்டாள் மிருதுளா.
“அச்சோ தப்பு…அச்சோ தப்பு…வாயில் போட்டுக்கறேன்… ஏதாவது நான் பேசினா கூட அபசகுனம் தானே. அவங்களுக்கு பணியாரம் தான் முக்கியம். வாங்க போகலாம்” அவள் கூற,
“பங்காரு…” அவளை அவன் பரிதாபமாக பார்த்தான்.
“நீ புரிஞ்சி செய்யறீயா? இல்லை புரியாமல் செய்யறீயான்னு எனக்கு தெரியலை பங்காரு” அவன் தன் உதட்டை மடித்து, அவளை கூர்மையாக பார்த்து கேட்டான்.
“எனக்கு கூடத்தான் நீங்க புரிஞ்சி பண்ணறீங்களா இல்லை புரியாமல் பண்ணறீங்களான்னு தெரியலை. அதுவா இப்ப முக்கியம். உங்க அக்கா தான் முக்கியம். வாங்க” அவள் அவன் கைகளை பிடித்தாள்.
அவன் அவள் கைகளை தன் கைகளோடு சேர்த்து பொதித்து கொண்டான்.
“என்ன உரிமையில் என்னை தொடுற பங்காரு?” அவன் கேட்க, அவள் ஒரு நொடி தடுமாறி நின்றாள்.
“நான் யார் உனக்கு?” அவன் அவள் முகம் நிமிர்த்தி, அவள் கண்களை பார்த்து ஆழமான குரலில் கேட்டான்.
“எனக்கு பங்காரு வேணும். உனக்கு நான் வேண்டாமா? நமக்குள் நடந்த விஷயத்தை ஒதுக்கி பதில் சொல்லு. உனக்கு நான் வேண்டாமா?” அவன் சுவாசக்காற்று அவளை தீண்ட, அவன் கண்கள் ஏக்கமாய் அவளை பார்த்தது.
அவன் பார்வையின் வீரியத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல், அவள் தன் கண்களை மூட, அவன் அவள் நெற்றியை தன் நெற்றியால் முட்டி, “சொல்லு பங்காரு… ஏன் பேசாம இருக்க பங்காரு? பேசு?” அவன் இதழ்கள் அவள் முகத்தை தீண்டி தீண்டி வார்த்தைகளை உதித்தன.
“பேசுனு சொல்றேனில்லை…” அவன் குரல் அழுத்தத்தை கூட்ட, “உங்க அக்காவுக்கு பணியாரம் கொண்டு போவோமா?” அவள் அவன் முகம் பார்த்து கேட்டாள்.
“அக்கா… அக்கா… எப்பப்பாரு உனக்கு அக்கா தானா?” அவன் எகிற,
“எனக்கில்லை… உங்களுக்கு தான்… முதன்முதலில் நான் குழந்தை கேட்டப்ப, அக்காவுக்காக வாங்கின கடன் அதிகமா இருக்கு. கடனை அடச்சிட்டு குழந்தை பெத்துக்கலாமுன்னு சொன்னீங்க. அப்புறம், உங்க அக்கா பொண்ணு சடங்கு… அந்த செலவு வேலை எல்லாம் முடிக்கணுமுன்னு சொன்னீங்க… நான் சரின்னு தான் சொன்னேன்.” அவள் நிறுத்தினாள்.
“அப்புறம் தானே குழந்தை வந்தது…” அவள் பேச ஆரம்பிக்க, “போதும் பேச வேண்டாம்” அவன் விலகி நின்றான்.
“நீ என்னை புரிஞ்சிக்கரியான்னு தெரியலை பங்காரு. எனக்கு நீ முக்கியம். நீ அக்கா வீட்டுக்கு வர வேண்டாம். உன்னை யாரவது ஏதாவது சொல்லிட்டா என்னால் ஏத்துக்க முடியாது.” அவன் காரியத்தில் கண்ணாக நின்றான்.
“எனக்கு என்ன தோணுது தெரியுமா? உங்க அக்காவை நான் பார்த்தா அவங்களுக்கு ஏதாவது ஆகிருமுன்னு நீங்களும் நினைக்கறீங்களோன்னு தோணுது” மிருதுளா சந்தேகமாக கூறினாள்.
“உங்களை போக வேண்டாமுன்னு நான் சொல்லலை. என்னை கூட்டிட்டு போங்கன்னு தான் சொல்றேன்” அவள் பிடிவாதமாக நிற்க, “நான் போகலை பங்காரு. எனக்கு உன் மரியாதை முக்கியம். உன்னை ஒரு வார்த்தை சொல்லிட்டா என்னால் தாங்கிக்க முடியாது. நாம அக்கா வீட்டுக்கு போக வேண்டாம்” அவன் அமைதியாக அமர்ந்துவிட்டான்.
“அப்ப, பணியாரம்?” அவள் சோகமாக கேட்க,
“காலையில், மதியம், சாயங்காலம், இராத்திரி பணியாரமே சாப்பிடுவோம்.” அவன் புன்னகையோடு கூற, அவள் சிரித்துவிட்டாள்.
“இப்படியே நீ சிரிச்சிகிட்டே இருக்குமுன்னு தான் நினைக்குறேன் பங்காரு.” அவன் கூற, அவள் தன் சிரிப்பை நிறுத்திக் கொண்டாள்.
அவனிடம் அவள் இளக தயாராகயில்லை என்பது போல் இருந்தது அவள் செய்கை. அவள் மௌனித்துக் கொண்டாள்.
காலையில் பணியாரம் தேங்காய் சட்னி. மதியம் பணியாரம் தக்காளி சட்னி. மாலையில் பணியாரம் கொத்தமல்லி சட்னி. இராத்திரி அதை உதிர்த்து போட்டு உப்புமா என்று ஒருவாறு அந்த பணியாரத்தை காலி செய்தனர்.
அன்று பணியாரம் முடிந்த பாத்திரத்தை கழுவ போடுகையில்,
“என் பொண்டாட்டி கையால் பணியாரம் கொடுத்தாலும், அது எனக்கு தேவாமிர்தம் தான். தேவாமிர்தமா இருந்தாலும் அளவு தான் பங்காரு. இனி கொஞ்சம் பார்த்து பதமா பண்ணு பங்காரு…” அவன் பெரிதாக புன்னகைக்க, அவன் நயமான பேச்சில் மயங்கி எழுந்த புன்னகையை தனக்குள் அடக்கி கொண்டு அவனை முறைத்து பார்த்தாள்.
இரு நாட்கள் பெரிதான வாக்குவாதம் இல்லாமல் அவர்கள் நேரம் அமைதியாக கழிந்தது.
அன்று காலை அலைபேசியின் ஒலியில் வம்சி முழித்தான்.
மிருதுளாவும் திரும்பி படுத்தாள்.
“என்ன தம்பி… அக்காவை நீ பார்க்க வந்து இரண்டு நாள் ஆகுது” என்று பீடிகையோடு பத்மப்ரியா ஆரம்பித்தாள்.
மிருதுளாவின் தூக்கம் முழுதாக கலைந்தது. “இன்னைக்கு எனக்கு பிறந்தநாள். அதுவாது நியாபகம் இருக்கா?” அவர் கேட்க, “அக்கா நான் எப்படி மறப்பேன்?” அவன் பதறிக்கொண்டு எழுந்து அமர்ந்தான்.
“இன்னைக்கு கேக் கட் பண்ணனும்னு சொன்னாங்க. நீ வந்திரு. மிருதுளா வர வேண்டாம்.” அக்கா கூறியதில், அவன் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றான்.
“யாரும் மிருதுளாவை தப்பா சொல்லிட கூடாதில்லையா தம்பி? அப்புறம் மிருதுளாவுக்கு கஷ்டமா இருக்கும். நீயும் தாங்க மாட்ட. அதுவும் குழந்தை விஷயம் வேற…” மேலும் பேசிவிட்டு பத்மப்ரியா தன் அலைபேசி பேச்சை முடித்துவிட்டாள்.
வம்சி எதுவும் பேசவில்லை. அலைபேசியில் பேசினது மிருதுளாவுக்கும் தெளிவாக கேட்டிருந்தது.
“நான் உங்க அக்காவை பார்க்க போகக் கூடாதுனு சொல்லவே இல்லை. என்னையும் கூட்டிட்டு போங்கன்னு தான் சொல்றேன். நீங்க என்னை பங்காருனு கூப்பிடறது நிஜமுன்னா என்னையும் கூட்டிட்டு போங்க.” கூறிவிட்டு மடமடவென்று அறையை விட்டு வெளியேறினாள் மிருதுளா.
‘நான் ஏன் என் உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும்?’ வீரப்பான கேள்வி அவள் மனதில் வந்தமர, ‘அக்கா சொல்றதெல்லாம் சரி தான். ஆனால், பங்காரு இல்லாமல் நான் மட்டுமா? அவளும் நானும் ஒன்றல்லவா?’ என்ற கேள்வி அவன் மனதில் வந்தமர்ந்தது
மயங்கும்…