Kaalangalil aval vasantham 17 (2)

காலை உணவில், இட்லி ஒரு ரூபாய், தோசை மூன்று ரூபாய். இந்த விலைக்கு யாருமே உணவு தர முடியாது என்பதுதான் உண்மை. அவர்களது கேண்டீன் என்பது மக்களுக்கு சேவையாகத்தான் இயங்கி வந்தது. அந்த ஒரு ரூபாய் கூட யாராவது கொடுக்க முடியவில்லை என்றால், அதையும் கேட்கக் கூடாது என்று சொல்லிவிடுவார் மாதேஸ்வரன்.

கல்வி, மருத்துவம், உணவு… இவை மூன்றுக்கும் கணக்கு பார்த்து உதவக் கூடாது என்பது காலம் காலமாக அவர்களது குடும்பத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் பழக்கம்!

அதுவும் கொடுத்துக் குறைந்து விடவில்லை. பெருகித்தான் இருக்கிறது என்பதால், எப்போதும் கணக்கு பார்த்ததில்லை!

ஆக அப்படிப்பட்ட ட்ரஸ்ட் வழியாகத்தான் ஏதோ நடக்கிறது என்பது புரிந்தது.

உள்ளுக்குள் ரத்தம் கொதித்தது ஷானுக்கு. வேறு எதில் கைவைத்து கொள்ளையடித்து இருந்தாலும் அவன் இந்தளவு கொதிக்க மாட்டான். ஆனால், பாரம்பரியமாக மக்களுக்காக இயங்கிக் கொண்டிருந்த ஒன்றை பயன்படுத்தி இருக்கிறானே என்பதை நினைத்தபோது அவனால் அந்த கொதிப்பை தாள முடியவில்லை.

“வைஷ்ணவிக்கு கால் பண்ணு ப்ரீத்.”

“அன்டைம் ஷான். நாளைக்கு பேசிக்கலாம்.”

“பரவால்ல. கால் பண்ணு…” சற்று உறுதியாக அவன் கூற, நாயரையும் அவனையும் மாற்றி மாற்றி பார்த்தவள், “ம்ம்ம்..” என்றபடி வைஷ்ணவிக்கு அழைத்தாள்.

இரண்டு ரிங்கிலேயே எடுத்த வைஷ்ணவி, “சொல்லு ப்ரீத்தி…” என்றாள். நல்ல வேலையாக விழித்துதான் இருந்தாள் போல!

“ஒன் மினிட் மேடம். சர் பேசறார்…” என்று போனை ஷானிடம் கொடுத்தாள்.

“வைஷு…”

“சொல்லுடா…”

“ட்ரஸ்ட் அக்கௌன்ட்ஸ் நீ தான் பாக்கறியா?” எடுத்தவுடனே விஷயத்துக்கு வந்தான் ஷான்.

“ம்ம்ம். நான் தான் பார்க்கணும். ஆனா மாமாவே பார்த்துடறாங்க. ஏன்டா கேக்கற?” என்ற வைஷ்ணவியின் தொனி, அவள் உண்மையைத்தான் சொல்கிறாள் என்பதை சொன்னது.

“சரி வைஷு. நாளைக்கு நான் மாமா கிட்ட கேட்டுக்கறேன்…” என்றவன், பேசியை வைத்துவிட்டான்.

சற்று நேர யோசனைக்குப் பின், “நாயர்… நீங்க கிளம்புங்க…” என்றுவிட்டு, “நீயும் வா ப்ரீத். கொஞ்ச நேரம் வெளிய போயிட்டு வரலாம்…” என்று அவளையும் எழுப்பினான்.

“கொஞ்ச நேரம் இரு ஷான். முடிச்சுட்டு வரேன்.” என்று அவள் மறுக்க,

“தலை வலிக்குது. போதும் எந்திரி…” என்று அவளை வலுகட்டாயமாக எழுப்பினான். எரிச்சல் உச்சபட்சத்தில் இருந்தது.

உண்மையில் அவனால் அந்த கனத்தை தாள முடியவில்லை. எந்தளவு ஆழமாக ரவி ஊடுவிருவி இருக்கிறான் என்பதை முழுவதுமாக அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த அறையிலேயே இருந்தால் இன்னும் கொஞ்சம் அழுத்தம் அதிகமாகக் கூடும் என்று தோன்றியது. அதனால் தான் அந்த இடத்தை விட்டு சற்று நகர்ந்தால் தேவலாம் என்று அவளையும் அழைத்தான்.

ஆனால் ப்ரீத்திக்கு அந்த ஆழத்தை தெரிந்து கொண்டேயாக வேண்டும். எவ்வளவு தைரியமிருந்தால், இந்தளவு ரவி செயல்பட்டிருக்க முடியும் என்ற கோபம். அதையெல்லாம் விட, இத்தனை நாட்களாக இந்த பக்கம் தலை வைத்துக் கூட படுக்காத ஷான் மீதுதான் இன்னும் கோபம் பொங்கியது.

“ம்ம்ம். மொதல்லையே பார்த்து இருந்தா எவன் எவனோ கை வைக்க முடியுமா? எல்லாத்தையும் அப்ப விட்டுட்டு, இப்ப தலை வலிக்குதா?” அவனுக்கு மட்டும் கேட்குமாறு பல்லைக் கடித்துக் கொண்டு அவள் கேட்க,

“சரி பண்ணலாம். நீ வா… இப்ப கொஞ்சம் வெளிய போயிட்டு வரலாம். இங்க எனக்கு மூச்சு விடவே முடியாத மாதிரி இருக்கு…” அவளுக்கு மட்டுமே கேட்குமாறு அவன் கூற, லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு எழுந்தாள்.

லேப்டாப் பையையும் அவரது மற்ற பொருட்களையும் எடுத்துக் கொண்ட நாயர், அவர்கள் இருவரையும் பார்த்து,

“கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கங்க ரெண்டு பேரும். நிதானமா எல்லாத்தையும் சரி பண்ணலாம்…” என்றவர், “பட்…” என்று இடைவெளி விட்டு, “யூ ஆர் மேட் ஃபார் ஈச் அதர் கைஸ்…” என்று சிரித்தார்.

இருவரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டனர். அவர்கள் நினைத்தே பார்த்திராத ஒன்றை இன்னொருவர் கூறுகையில் ஏற்படும் அதிர்ச்சி தான் அது!

“ஜோக் பண்ணாதீங்க சர்… கிளம்புங்க…” வலிய சிரித்தபடி சூழ்நிலையை சரி செய்ய முயன்றாள் ப்ரீத்தி.

ஆனால் ஷான் எதுவும் பேசவில்லை. அவனது முகம் யோசனையிலேயே இறுக்கமாக இருந்தது. நாயர் கிளம்பிப் போக, அவனது அறையை மூடிக் கொண்டு இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

நேரம் நள்ளிரவை கடந்து கொண்டிருந்தது.

“இந்நேரத்துக்கு மேல ஒரு கடையும் இருக்காதே ஷான்…”

“ம்ம்ம்…”

கைகளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள். ஜுபிடர் ஸ்கொயரை விட்டு இருவரும் வெளியே வந்த போது, போக்குவரத்து முற்றிலுமாக இல்லாமலிருந்தது.

சில்லென்ற காற்று இதமாய் உடலைத் தீண்ட, அவள் இன்னும் கொஞ்சம் இறுக்கமாக கையைக் கட்டிக் கொண்டாள்.

“செம குளிர்…” என்றவள், இடைவெளி விட்டு அவனைப் பார்த்து, “இல்லையா?” என்று கேட்க,

“ம்ம்ம்…” என்றான்.

“என்னாச்சு ஷான்?”

“ம்ம்ம்… ஒண்ணுமில்லயே…”

“இல்லையே… சரியில்லையே…”

“நான் சொன்னதை தப்பா எடுத்துகிட்டீங்களா பாஸ்?” மெல்லிய குரலில் கேட்டவளை திரும்பிப் பார்த்தவன்,

“ரெண்டு பேர் மட்டும் இருக்கும் போது தயவு செஞ்சு இப்படி ஃபார்மலா பேசாத ப்ரீத். எனக்கு கம்ஃபர்ட்டபிளா இல்ல…”

“அதுவா வந்துடுது… என்ன பண்ண?” தலைகுனிந்தபடி மெல்லிய குரலில் கூறியவள், நிமிர்ந்து, “பர்ஸ்ட் எனக்கு ஆன்சர் பண்ணுங்க… அப்புறமா இதை சொல்லலாம்…” என்று விடாப்பிடியாக கேட்டாள்.

“ம்ம்ம்… எனக்கு கொஞ்சம் பொறுப்பு இருந்திருக்கலாம். என்னோட தப்பான முடிவால இன்னும் என்னென்ன காத்திருக்கோ…” என்றவன், சற்று நேரம் கழித்து, “ஐ ஃபீல் கில்ட்டி…” என்று முடிக்க, அவனது கையை மென்மையாக பற்றிக் கொண்டாள் ப்ரீத்தி.

“எல்லாம் சரி பண்ணிடலாம். எனக்கு நீ பண்ணலையா? கண்ணை மூடி முழிக்கறதுக்குள்ள எவ்வளவோ பண்ண. இதையும் மேனேஜ் பண்ணிருவ ஷான்.” என்றவளின் மென்மையான இறுக்கம், அவனது உளக்குமுறலுக்கு ஆறுதலாக இருந்தது. அவனுக்கு வலிமையை கொடுத்தது.

“நான் உனக்கு பண்ணேன். நீ எனக்கு பண்றங்கறது எனக்கு சரியா படல. அப்படி யோசிக்காத…”

“ம்ம்… சரி… யோசிக்கல… ஆனா தயவு செஞ்சு இப்படி இருக்காத. சியர் அப் மேன்… உன்னோட சிரிப்பு தான் எனக்கு டானிக். நைட்டெல்லாம் உட்கார்ந்து வேலை பார்க்கணும்னா அந்த டானிக் வேணும். இப்படி உர்ருன்னு இருந்தா நான் பேசாம ஹாஸ்டலுக்கு கிளம்பி போய்டுவேன்… என்ன சொல்ற?” என்றவள், அவன் புறம் திரும்பி, ரிவர்சில் நடந்தபடி பேச ஆரம்பிக்க,

“ஈஈஈ…” என்று வேண்டுமென்றே பற்களை காட்டியவன், “போதுமா?” என்று கேட்க,

“ம்ஹூம் பத்தல…”

“ஈஈஈஈஈஈ…” இன்னும் கொஞ்சம் அதிகமாக பற்களை ஈஈ என காட்ட,

“இதுவும் பத்தல…” என்று சிரித்தாள் ப்ரீத்தி.

“உனக்கு கொழுப்பு கூடிப் போச்சு…” என்று அவளது மண்டையில் தட்டியவன், அங்கிருந்த டீக்கடையில் நின்றான்.

வெகு அமைதியாக இருந்தது அந்த சூழ்நிலை. கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க அந்த ஒரு டீக்கடை மட்டும் தான் திறந்திருந்தது.

“டீயா காபியா?” அவளைப் பார்த்து கேட்க,

“அது போதுமா உனக்கு? பசிக்குதுன்னு சொன்னியே ஷான்?”

“ரவி பண்ணி வெச்சுருக்க காரியத்தை நினைச்சா ஏதாவது சாப்பிட முடியுமா? இதுவே போதும்… கூட எதாவது சொல்லிக்க ப்ரீத்…”

“உனக்கென்ன சொல்றியோ, அதையே எனக்கும் சொல்லிடு…” என்றவளை அவன் முறைக்க, “அன்டைம்… டைஜஸ்ட் ஆகாது…” என்றாள்.

“ரெண்டு டீ ப்ரோ…” என்றவன், சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். இருவரின் உடையையும் தோற்றத்தையும் பார்த்த அந்த கடைக்காரன், பவ்யமாக, “சரிங்க…” என்று டீ போட ஆரம்பித்தான்.

அவனை முறைத்தபடி சற்றுத் தள்ளி நின்று கொண்டாள் ப்ரீத்தி. இது ஒன்று தான் அவனிடம் சுத்தமாக பிடிக்காத பழக்கம். மது அருந்துவதை கூட ஒரு வகையில் தேவலாம் என்று சொல்லலாம். ஆனால் ஒரு சிகரெட் என்றாலும் அது ஆயுளை குறைக்கும் ஒரு கருவி என்பதை புரியாதவனா இவன்? எல்லாம் புரியும், தெரியும். ஆனாலும் அந்த பழக்கம் தனது இஷ்டம் என்றிருக்கிறான். இவனை என்ன சொல்லி மாற்ற? மண்டைக்குள் தேள் ஊறியது அவளுக்கு!

“சாரி ப்ரீத். ஐ நீட் டு ஸ்மோக் நவ். ரொம்ப டென்ஷனா இருக்கு…”

“எனக்கும் தான் டென்ஷனா இருக்கு. எனக்கும் ஒன்னு தாயேன்…” வேண்டுமென்றே தான் கேட்டாள்.

“லூசு… சும்மா இருக்க மாட்ட?” அவளது வேண்டுதலில் ஜெர்க்கானான் ஷான்.

“எதுக்கு? நீ பிடிக்கலாம். நான் கூடாதா?” எதிர்கேள்வி கேட்டவளை பார்த்து சிரித்தவன், அவளது மண்டையில் தட்டி,

“கண்டதையும் பழகாத பைத்தியமே…” என்றவனைப் பார்த்து முறைத்தாள்.

“அதெல்லாம் முடியாது. எப்பப்பாரு ஊதி தள்றல்ல. எனக்கும் ஒன்னு தா. அது எப்படித்தான் இருக்குன்னு பார்க்கலாம்…”

“சொன்னா கேட்க மாட்ட…” என்றவன், அவனது சிகரெட் கேஸிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்தவன், அவளுக்கு கொடுக்க, அதை வாங்கும் போது அவளது கைகள் நடுங்கியது. அந்த நடுக்கத்தை பார்த்தவனுக்கு சிரிப்பு பீறிட்டது. ஆனாலும் ‘இவளுக்கு இவ்வளவு கொழுப்பு ஆகாது’ என்று நினைத்துக் கொண்டே, “ஆர் யூ சியூர்?” என்று கேட்க, அந்த சிகரெட்டை ஸ்டைலாக வாயில் வைத்தபடி, “அப்கோர்ஸ்…” என்றாள்.

டீக்கடைக்காரன் ‘பே’ என்று விழித்தபடி பார்த்தவன், ‘பெரிய இடத்துல இதெல்லாம் சகஜம் போல’ என்று நினைத்துக் கொண்டான்.

அவனது லைட்டரை எடுத்து, சிகரெட்டை பற்ற வைக்கும் முன், “ஓகே வா? அப்புறம் நான் தான் பழக்கி விட்டேன்னு சொல்லக் கூடாது…” என்று சிரிக்க,

“ப்ச்… எப்படி பிடிக்கறதுன்னு சொல்லிக் கொடுத்துட்டு அப்புறமா இந்த கதையெல்லாம் பேசு மேன்…” என்றவளை ‘ஓஹோ’ என்று புன்னகையோடு பார்த்தான்.

“சிகரெட்டை பத்த வெச்சவுடனே, டீப்பா ஒரு ப்ரீத் எடுத்துக்க. ரிலாக்ஸா மூச்சை வெளிய விடு. அவசரப்படாம செய்யனும்… ஓகே வா?” என்று வரலாற்று முக்கியத்துவமிக்க பாடத்தை எடுத்தான் ஷான்.

அவள் தலையாட்ட, இவன் பற்ற வைக்க, அவன் கூறியபடியே மூச்சை ஆழமாக உள்ளிழுக்க முயன்றாள்.

அவ்வளவுதான் தெரியும் அவளுக்கு!

அந்த சிகரெட் புகை, உள்ளுக்குள் போனதும், நடுமண்டைக்கு ஏறி சுர்ரென்று அடித்து, நுரையீரலில் பரவி நெஞ்சு முழுவதும் காந்தி எரிந்தது. கண்களுக்குள் மிளகாய் பொடியை தூவியது போன்ற எரிச்சல். மூக்கு வாய் என்று அனைத்தும் எரிந்தது.

பிடித்திருந்த சிகரெட்டை தூக்கி எறிந்தவள், நெஞ்சை பிடித்துக் கொண்டு இரும ஆரம்பித்தாள்.

அவனது சிகரெட்டை தூக்கி எறிந்தவன், “சொன்னேனே… கேட்டியா?” என்று, அவளது நெற்றியை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.

மண்டையில் சம்மட்டியால் அடித்தது போன்ற வலி வேறு! இடைவிடாமல் அவள் இரும, அவனுக்கே ஒரு மாதிரியாக போய்விட்டது. அவள் தான் விளையாட்டுத்தனமாக கேட்கிறாள் என்றால் தனக்கு எங்கு போனது புத்தி என்று அவன் தலையிலடித்துக் கொள்ளாத குறை.

“ஹய்… யோ… எப்… படி.. டா… இதை.. யெல்லாம்… பிடிக்கறீங்க?” அவளால் பேசவே முடியவில்லை.

“லூசு பிசாசே… உனக்கெதுக்கு இந்த வேலை? நான் தான் சொன்னேன்ல…” என்றவன், அவளது மேல்நெஞ்சை நீவி விட, அவனது கையை தட்டி விட்டாள் ப்ரீத்தி.

“டீ சார்…” என்று டீக்கடைக்காரன் அழைக்க, அவளை விட்டுவிட்டு, இரண்டு டீயையும் எடுத்துக் கொண்டு வந்தான். தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த அவளிடம் ஒரு டீயைக் கொடுத்தவன், தனக்கொன்றை எடுத்துக் கொண்டான்.

சூடாக டீ உள்ளே போன போதுதான் அவளுக்கு போன உயிர் திரும்பி வந்தது. கண்களுக்குள் நீர் நிறைந்து கொண்டது.

“என்னடா? ஏன் இப்படி? சொன்னா கேக்கறியா? இதென்ன விளையாட்டா?” அவள் பக்கத்தில் உட்கார்ந்து அவளது கையை எடுத்து தன் கைக்குள் வைத்து அடக்கியபடி கேட்க,

“நீ பிடிக்கறல்ல. அதான் ட்ரை பண்ணி பார்க்கலாம்ன்னு…” என்று அவள் மெல்லிய குரலில் ஆரம்பிக்க,

“லூசா நீ? நான் கிணத்துல குதிச்சா, நீயும் குதிப்பியா?” என்று கத்த முயல,

“நீ சொன்னா குதிப்பேன்…” அதே மெல்லிய குரல். உச்சஸ்தாயில் எழுந்த அவனது குரல் அப்படியே அடங்கிப் போனது. அவனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. இந்த உயிர் தோழமைக்கு தான் தகுதியா என்று கூட தெரியவில்லை.

கண்களில் நீர் சூழ பார்த்தது. இருக்குமிடம் கருதி அதை அப்படியே அடக்கிக் கொண்டான். பிடித்திருந்த அந்த கையை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.

“இட்ஸ் எ ப்ராமிஸ் ப்ரீத்தி. இனிமே சிகரெட் பிடிக்க மாட்டேன்.”

உறுதியான குரலில் அவன் கூற, நிமிர்ந்து அவனது கண்களை பார்த்தாள். அதில் உண்மை மட்டுமே தெரிந்தது. இன்னொரு தடவை அவன் கூறியதை கேட்க வேண்டும் போல தோன்றியது.

“ஒன்ஸ் மோர்…”

“இனிமே சிகரெட் பிடிக்க மாட்டேன். இது அம்மா மேல ப்ராமிஸ்…”

“ஒன்ஸ் மோர்…” கண்களில் நீரோடும், இதழ்களில் ஆத்மார்த்தமான சிறு புன்னகையோடும் நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியோடும் மீண்டும் அவள் கேட்க, அவளை பார்த்து புன்னகைத்தவன்,

“இனிமே சிகரெட் பிடிக்க மாட்டேன். என்னை வெச்சு எனக்கும் ஒன்னு தான்னு உன்னை கேட்க வைக்க மாட்டேன். புரியுதா?” என்று கேட்க, அவள் தலையாட்டினாள்,

“தேங்க்ஸ்…” புன்முறுவலோடு!

இந்த உறவுக்கு என்ன பெயர்?