மயங்கினேன் பொன்மானிலே – 20

பொன்மானிலே _BG-ced9c0fe

மயங்கினேன் பொன்மானிலே – 20

அத்தியாயம் – 20

வம்சியின் பார்வை அவள் பதிலுக்காக காத்து நிற்க, ‘இவங்க முழுசா மாறி இருக்க மாட்டாங்க. ஆனால், கொஞ்சம் கூட மாறவேயில்லைனா? இவங்க கூட எனக்கு என்ன வாழ்க்கை வேண்டிக்கிடக்கு?’ மிருதுளாவின் மனதில் இப்படி ஒரு கேள்வி தோன்ற, அவள் சட்டென்று குதித்து இறங்கினாள்.

“என்ன ஆச்சு பங்காரு?” அவன் அவளை பார்த்து கேட்க, “நான் விஷயத்தை சொன்னதும் நீங்க அப்படியே என்னை கீழ போட்டுடீங்கன்னா?” கேள்வியாய் கண்களை உயர்த்தி, “அது தான் நானே இறங்கிட்டேன்” சோகமாக அவள் வாக்கியத்தை முடிக்க, தன் மனைவியின் பீடிகையில் அவன் புருவங்கள் நெரிந்தது.

அவள் அலைபேசியை அவனிடம் நீட்டிவிட்டு, அங்கிருந்த மெத்தையில் ஆயாசமாக அமர்ந்தாள். அவன் அந்த குறுஞ்செய்தியை படிக்கும் பொழுதே அவன் உடலில் பல பாவனைகள். அவன் முகம் எங்கும் வியர்த்தது. அவன் கைகள் படபடப்பை காட்டின. தன் வியர்வை துளிகளை துடைத்துக் கொண்டான். அவன் மார்பு, அவன் இதயத்துடிப்பை அப்பட்டமாக வெளி காட்டியது. இதய ஓசை அதன் சத்தத்தை கூட்டி, எப்பொழுது வெளிவந்து விழுமோ என்பது போல் வேகவேகமாக எம்பி துடித்தது.

 அவள் கண்கள் அவனை கூர்மையாக பார்த்தன.  

‘என்ன நடந்திருச்சு? ஏதோ உடம்பு சரி இல்லை. ஹாஸ்பிடல்ல இருந்தாங்க. வீட்டுக்கு வந்துட்டாங்க. அதுக்கு எதுக்கு இவ்வளவு பதட்டம். அக்கா, அப்படின்னா நரம்பு இரத்தம் நாடி இதயம் எல்லாமே துடிக்குது… நடுங்குது… வேண்டாம் மிருதுளா… இதுக்கு மேல நீ வம்சியை பார்த்த, நீ டென்ஷன் ஆகி ஹாஸ்ப்பிட்டல்ல போய் சேர்ந்திருவ. குளிச்சிட்டு வருவோம். சண்டை வளர்க்காம பேசாம படுத்து தூங்குவோம்’ மிருதுளா வெளியே சுற்றி வந்த களைப்பு தீர சுடுதண்ணீரில் குளித்துவிட்டு இரவு உடைக்கு மாறினாள்.

அவன் பால்கனிக்கு சென்று அலைபேசியில் பேச்சை முடித்துவிட்டு, அறைக்குள் நுழைந்தான்.

“பங்காரு…” அவன் நிதானமாக அழைத்தான்.

‘வந்தாச்சு… பத்மப்ரியாவின் தம்பி வர போறான்… வர போறான்…’ மிருதுளா, அவன் சொல்லுக்காக காத்திருந்தாள். அவனின் கோபம், சண்டை இதை எல்லாம் எதிர்பார்த்து அவள் விழிகள் அவனை உற்று நோக்கின.

‘பேசட்டும்… இவங்க பேசட்டும்… நான் வைக்கிறேன் கச்சேரி. நானா கேட்டேன் ஹனிமூன். என்னை ஏதாவது சொல்லட்டும். அப்புறம் கிழிக்குறேன் கிழி எல்லாரையும்’ அவள் அவனை கூர்மையாக பார்த்தாள்.

அவள் பார்வையில், அவன் அவளை கண்டுகொண்டான். “நான் மோசமானவனா பங்காரு? நான் கெட்டவனா பங்காரு? நான் என்ன தப்பு பண்ணேன் பங்காரு?” மிக தன்மையாக வெளிவந்தது அவன் குரல்.

‘இது என்ன கோபமா பேசாம, இப்படி அப்பாவி மாதிரி புரியாத கேள்வியில் ஆரம்பிச்சா நான் என்ன பண்ணுவேன்?’ அவள் விழிக்க, அவன் அவளை தன் அணைப்பிற்குள் கொண்டு வந்தான்.

“நான் அக்கா மேல பாசமா இருக்கிறது நிஜம். சராசரி தம்பியை விட என் பாசம் அதிகம் தான் நான் ஒத்துக்குறேன். நான் வளர்ந்த சூழ்நிலை அப்படி. ஆனால், அதுக்காக நான் உன்னை விட்டு போகிற ஆளா? இல்லை, நான் உன்கிட்ட சண்டை போடுற ஆளா?” அவன் கேட்க, ‘இப்ப என்ன சொல்ல வராங்க?’ அவள் இடை அவன் அணைப்பில் இருக்க அவள் முகம் நிமிர்த்தி, அவனை மெளனமாக பார்த்தாள்.

“நான் ஏதோ குழந்தை விஷயத்தில் தெரியாம ஒரு தப்பு பண்ணிட்டேன். அதில் கூட, உன் வருத்தம் பார்த்து, ரொம்ப வருத்தப்படுறேன். அதை தவிர நான் என்ன தப்பு பண்ணேன்? முன்னாடியாவது, கோபத்தில் நான் கை நீட்டுவேன். இப்ப அது கூட நான் பண்றதில்லை…” அவன் கண்கள் காதல் பேச அவன் விரல்கள் அவள் தேகத்தில் மென்மை காட்டியது. ‘வேண்டாம் மிருதுளா… இப்படி பேசி பேசி உன்னை குற்றவாளி ஆக்கிருவாங்க… நான் செய்த தப்பு ஒரு சின்ன புள்ளின்னு சொல்லுவாங்க. கேட்குற நமக்கு பீபி ஏறிடும். செய்த தப்பையே இன்னும் உணரலை. அந்த காலம் எல்லாம் எப்ப வருமுன்னு எனக்கு தெரியலை…’ அவள் சிந்தனையை கலைத்தது, அவன் “பங்காரு” என்ற அழைப்பு.

சட்டென்று நனவுக்கு வந்தவள், “நீங்க சொல்ல வந்ததை நேரடியா சொன்னால் நல்லாருக்கும்” அவள் அவனிடமிருந்து விலகி செல்ல முயன்று பட்டென்று கூறினாள். ‘அக்கா, என்ற சொல்லில் நான் இவளிடமிருந்து விலகவில்லை. ஆனால், அக்கா என்ற சொல்லில் இவள் என்னிடமிருந்து விலகி செல்கிறாள்’ அவன் எண்ணம் மேலோங்க, அவன் பிடி இறுகி, அவளை தன் அருகாமையில் நிறுத்திக் கொண்டது.  

“என்னவோ எங்க அக்கா விஷயம் தெரிந்தால், நான் உன்னை கீழ போட்டிருவேன்னு நாசுக்காக சொல்ற?” அவன் கேட்க, “உங்களை என்னால் நம்ப முடியாது” அவன் கைகள் அவளிடம் காட்டிய அழுத்தத்தில் அவள் விலகும் எண்ணத்தை கைவிட்டு நேரடியாக கூறினாள். அவன் முகத்தில் அடிபட்ட வலி. அவன் வலி அவளை ஏதோ செய்ய, “அக்காவுக்கு எப்படி இருக்கு?” அவள் அவன் முகம் பார்த்து கேட்டாள்.

 “இப்ப, அக்கா நல்லாருக்காங்க. ஒன்னும் பிரச்சனை இல்லை. மாமா கிட்ட பேசிட்டேன். அக்கா என் கிட்ட பேசலை” அவன் நிறுத்த, அவளிடம் மௌனம். “அன்னைக்கு அக்கா கிட்ட இருந்து ஃபோன் வந்ததை நீ சொல்லிருக்கலாம்” அவன் மென்மையாக, தன்மையாக சற்று வலியோடு கூறினான். அவன் கோபப்பட்டிருந்தால், அவளும் கோபப்பட்டிருப்பாள். ஆனால், அவன் பேசிய விதம் அவளை பொறுமை கொள்ள செய்தது.    

“முக்கியமான அழைப்பானு நீங்க கேட்டீங்க. எனக்கு உங்க அக்கா அழைப்பு முக்கியமான அழைப்பா தெரியலை. உங்க அக்கா, ஒரு நாளைக்கு ஒரு தடவை உங்களை அழைத்தா அது முக்கியமான அழைப்பு. ஒரு மணி நேரத்திற்கு ஏழு தடவை கூப்பிட்டா, அது முக்கியமான அழைப்பா” அவள் கேட்க, அவன் எதுவும் பேசவில்லை.

“அக்காவுக்கு பெருசா எதுவும் நடக்கலை, அப்படி நடந்திருந்தா?” அவன் சற்று அழுத்தமாக கேட்க, அவள் அவனிடமிருந்து முழுதாக விலகி நின்றாள். அவனும் அவளை கட்டாயப்படுத்தவில்லை. “நீங்க என்ன டாக்டரா? உங்க அக்காவை போய் காப்பாற்ற?” அவள் நறுக்கென்று கேட்டாள்.

“அந்த அழைப்பை நான் உங்க கிட்ட சொல்லிருந்தா என்ன நடந்திருக்கும்?” அவள் இப்பொழுது கேள்வியாக நிறுத்தினாள். “இந்த ட்ரிப்பை கான்செல் பண்ணிட்டு நீங்க ஹாஸ்பிடல் போயிருப்பீங்க? சரி தானே?” அவள் கேட்க, “பங்காரு…” அவன் தடுமாறினான்.

“அங்க ஹாஸ்பிடலில் ஒண்ணுமில்லைனு சொல்லிருப்பாங்க. நாம வீட்டுக்கு போயிருப்போம். உங்களுக்கும் எனக்கும் சண்டை வந்திருக்கும். இந்த ட்ரிப் எனக்கு முக்கியமில்லை. நீங்க தான் கூப்பிட்டு வந்தீங்க. ஆனால், உங்க அக்கா தடுத்து நிறுத்தி, இந்த ட்ரிப் நின்றுருந்தா நான் ரொம்ப காயப்பட்டிருப்பேன்.” அவள் நிறுத்த,  “பங்காரு…” அவன் மீண்டும் தடுமாறினான். “அது தான் உங்க அக்கா திட்டமா?” அவள் இப்பொழுது கேட்க, “மிருதுளா…” அவன் குரலில் இப்பொழுது கோபம் வந்து அமர்ந்தது.

“எனக்கு வேற மாதிரி யோசிக்க தெரியலைங்க. அன்னைக்கு உங்க கிட்ட சாதாரணமா தான் நான் உங்க அக்கா அழைப்பை சொல்லலை. ஆனால், ஹாஸ்பிடல் விஷயம் தெரிந்தாலும் சொல்லிருப்பேன்னானு எனக்கு இப்ப தெரியலை. அது எப்படி இவ்வளவு நாள் வராத படபடப்பு, நான் என் புருஷன் கூட போறேன்னு தெரிந்தவுடன் வருது? நான் போக கூடாதுனு வருதுன்னு தான் நான் நினைப்பேன்.” அவள் பேச, அவள் அவனிடம் காட்டிய உரிமை அவனை ஏதோ செய்தது. அதே நேரம் தன் தமக்கை பற்றிய பேச்சு அவனை வருத்த, “பங்காரு…” அவன் குழைவாக அழைத்தான்.

“அக்கா, அப்படி எல்லாம் நினைச்சிருக்க மாட்டாங்க பங்காரு. நான் ரொம்ப தூரம் போறேன்னு பயமா இருக்கும்” அவன் விளக்க முற்பட, “அப்படி தம்பியை அவங்க பக்கத்துலயே வச்சிக்கணும்னு நினைக்குறவங்க, எதுக்கு என்னை கல்யாணம் பண்ணி வச்சு உங்க அக்கா என் வாழ்க்கையை கெடுத்தாங்க?” அவள் வெடுக்கென்று கேட்க, “என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது, உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கா பங்காரு?” அவன் மற்றதை ஒதுக்கி கண்கள் கலங்க கேட்க, அவள் ஒரு நொடி ஆடிவிட்டாள்.

அவன் அவளிடமிருந்து விலகி சுவர் மீது சாய்ந்து நின்று, அவன் மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு, “சொல்லு பங்காரு, என்னை பார்த்தா உனக்கு அவ்வளவு வெறுப்பா இருக்கா?” அவன் குரல் உடையும் விதமாக கேட்க, அவள் அவன் அருகே சென்றாள். அவள் கண்கள் கலங்கியது. ‘இல்லை…’ என்பது போல் அவள் முகம் இருபக்கமும் அசைந்தது.

அவள் கண்ணீர் அவன் கைகளை தொட்டது. “அழாத பங்காரு. எனக்கு தாங்கலை” வருத்தத்திலும் அவன் அவளை சமாதானம் செய்தான். “எனக்கு அழுகை அழுகையா வருது” அவள் உதட்டை பிதுக்கி பாவமாக சொன்னாள். அவள் குழந்தைத்தனத்தில், அவன் முகத்தில் புன்னகை.  

“என்னால் உங்களை வெறுக்க முடியாது. ஆனால், நீங்க தப்பு பண்ணறீங்க. அதை என்னால், ஏத்துக்க முடியலை” அவள் தலை சரித்து கூற, “என்ன தப்பு பங்காரு?” அவன் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்ற முடிவோடு கேட்டான். ‘அக்கா…’ என்ற சொல்லில் அவள் விலக கூடாது என்ற தீர்மானத்தை அவன் குரலின் உறுதி காட்டியது. அவளும் பேசிவிட வேண்டும். என்ன நடந்தாலும் சரி என்ற முடிவோடு பேச ஆரம்பித்தாள்.

“உங்க அக்காவை பத்தி நான் பேசலை. உங்களை பத்தியே சொல்றேன். நீங்க உங்க அக்காவை அவங்க வாழ்க்கையை வாழ விடறீங்களா?” அவள் கேட்க, “பங்காரு…” அவன் பதறிப்போனான். “அக்காவுக்கு உடம்பு சரி இல்லைனா, கூட்டிகிட்டு போக உங்க மாமா இருக்காங்க. பார்த்துக்க அவங்க மாமியார் இருக்காங்க. வளர்ந்த அவங்க பொண்ணு இருக்கா. உங்க அக்கா ஏன் தம்பி தம்பின்னு உங்களை தேடணும்?” மிருதுளா கேட்க, அவன் அவளை புரியாமல் பார்த்தான்.

“அது உங்க மாமாவுக்கு எவ்வளவு வலிக்கும்? நான் எனக்கு உடம்பு முடியாம இருக்கும் பொழுது உங்க கிட்ட சொல்லாம, எங்க அம்மா அப்பாவை தேடினா உங்களுக்கு எவ்வளவு வலிக்கும்? அதுவும் நாம புதுசா கல்யாணமானவங்க. உங்க அக்கா கல்யாணமாகி, இத்தனை வருஷமா இப்படியே தம்பி தம்பின்னு இருந்தா என்ன அர்த்தம்? நீங்களும், அக்காவுக்கு ஒண்ணுன்னா நான் இருக்கேன்… அக்காவுக்கு ஒண்ணுன்னா நான் இருக்கேன்… அங்க போய் நிக்கறீங்க” மிருதுளா கூற, இது அவன் சிந்தித்து பார்க்காத கோணம். அவன் அவளை மௌனமாக பார்த்தான்.

“உங்க மாமா ஆரம்பத்தில் ஏதோ தப்பு பண்ணிருக்கலாம். நான் அதை என்னனு கூட இப்ப கேட்க விரும்பலை. ஆனால், உங்க மாமாவுக்கும் என்னை மாதிரி வலி இருக்கும். என்ன என் அளவுக்கு பாதிப்பு இருந்திருக்காது. உங்க கை வியாபாரத்தில், வருமானத்தில் ஓங்கி இருக்கிறதால அமைதியா இருக்காங்க.” பிரச்சனையை கையாளும் விதத்தை மாற்றி முயன்றாள் மிருதுளா.

“எனக்கும் தான் பிரச்சனை இருக்கு. நான் என்ன எங்க அம்மா அப்பாவையா எதுக்கு எடுத்தாலும் கூப்பிடுறேன். என் பிரச்னையை உங்க கிட்ட தானே சொல்றேன். உங்க அக்கா, உங்க மாமா கிட்ட தானே சொல்லணும். நான் உங்க கிட்ட சொல்றதை தானே நீங்க விரும்புவீங்க. உங்க மாமாவும் அப்படி தானே ஆசைப்படுவாங்க?” அவள் கேள்வியாக நிறுத்த, ‘மாமாவின் குரலில் என் மேல் கோபம் இல்லையே. சிந்து தான் கோபப்பட்டாள். அக்காவுக்கு கோபம் என்று கூறினாள்.’ அவன் மிருதுளா சொன்ன கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்தான்.

“நான் இதை பலமுறை உங்க கிட்ட சொல்ல முயற்சி பண்ணிருக்கேன். நான் சொன்னதை நீங்க சரியா புரிஞ்சிக்க மாட்டீங்க. என்னவோ நீங்க உங்க அக்கா குடும்பத்துக்கு செய்றது எனக்கு பிடிக்காத மாதிரி நீங்க நினச்சீப்பீங்க” அவள் தாழ்ந்த குரலில் கூற, “பங்காரு…” அவன் தடுமாறினான்.

“உங்களை நான் உங்க அக்காவை விட்டுட்டு வரச்சொல்லலை. தள்ளி நிற்க சொல்றேன். அவங்க வாழக்கையை அவங்க வாழட்டுமுன்னு சொல்றேன். நான் சொன்னது என்னை பொறுத்தவரை தப்பில்லை” கூறிவிட்டு பால்கனிக்கு சென்றுவிட்டாள் மிருதுளா.

அவள் நிம்மதியாக மூச்சு விட்டாள். ‘ஹப்பா, கொஞ்சம் பேசிட்டோம். எத்தனை நாள் இப்படி கண்ணாம்பூச்சி ஆடுவது?’ இன்று அவள் பாரம் இறங்கியது போல் உணர்ந்தாள். இருண்டிருந்த வானத்தை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். வம்சி தன் தலைக்கு அண்டை கொடுத்து தரையில் படுத்துவிட்டான். ‘பங்காரு சொல்றதெல்லாம் சரி மாதிரி தான் இருக்கு. அக்கா எதுவும் வேணுமின்னு பண்ணலை. ஆனால், என்னையே சார்ந்து தான் இருக்காங்க. நான், அவங்க குடும்பத்திற்கு இடைஞ்சலா?’ அவனால் முழுதாக சிந்திக்க முடியவில்லை. இருந்தாலும் எங்கோ பிசகு இருக்கிறதை அவனால் உணர முடிந்தது. அக்கா என்ற இடத்தில் சிந்திக்க முடியாத விஷயங்கள், மிருதுளாவை வைத்து சிந்திக்கும் பொழுது அவனுக்கு கொஞ்சம் புரிந்தது.  அவன் எண்ணங்கள் நடந்த விஷங்களை அசைப்போட ஆரம்பித்தது.

“தட்… தட்…” என்ற மழைத்துளி சத்தத்தில் நனவுக்கு திரும்பினான் வம்சி. சாரல் விழுந்து கொண்டிருக்க, அதில் கைகளை விரித்து நனைந்து கொண்டிருந்தாள் மிருதுளா.

“பங்காரு…” அவன் அழைக்க, “காலையில் வெயில். இப்ப மழை பாருங்களேன்” அவள் மழையில் நனைந்தபடி கூற, “உடம்புக்கு ஏதாவது வந்திரும் பங்காரு. உள்ள வா” அவன் அவள் கைகளை பிடித்து இழுக்க, “ம்… கூம்…” அவள் குறும்போடு மறுப்பு தெரிவித்தாள். “எனக்கு மழை பிடிக்கும். மழையில் நின்னோமுன்னா, நம்ம மனசில் உள்ள பாரம் எல்லாம் இறங்கிரும். நீங்களும் நின்னு பாருங்களேன்.” அவள் அவன் கைகளை பிடித்து இழுத்தாள்.

“அப்படி என்ன பாரம் உனக்கு பங்காரு.” அவன் அவள் தோள் மீது கைபோட்டு அவளோடு மழையில் நனைந்தபடி கேட்க, “வேற என்ன பாரம்? நீங்க தான்…” அவள் கண்சிமிட்ட, “உன்னை…” அவன் அவளை மிரட்ட, அவள் அவன் கைகளுக்கு சிக்காமல் தப்பி ஓட ஆரம்பித்தாள். அவன் கால்கள் தான் அவளை விரட்டியதேயொழிய, அவன் கண்கள் அவளை ரசித்தன.

மழையில் நனைந்த பிங்க் நிற சாட்டின் இரவு உடை, அவள் அங்க வடிவை அழகாக எடுத்து காட்ட, அவள் அவன் கண்களுக்கு விருந்தாகிப் போனாள். “பங்காரு, கொஞ்சம் கூட நடக்க முடியலைன்னு சொன்ன?” அவன் கேள்வியாக நிறுத்த, “அது அப்ப…” அவள் தலை அசைத்து கூற, மழைத்துளி அவள் தேகத்தை உரசி தரையை தொட்டது.

“அதாவது நான் தூக்கிட்டு போகணும்னு சொல்லிருக்க?” அவன் வம்பிழுக்க, அகப்பட்டவள் போல் அவள் ஒரு நொடி ஸ்தம்பித்து நிற்க, அவன் அவளை எட்டிப்பிடித்தான். அவள் அவன் கைகளுக்குள்ளும் அகப்பட்டுக்கொண்டாள். “பங்காரு, சிக்கிட்டியா?” அவன் தன் கன்னத்தை அவள் கன்னத்தோடு இழைத்து அவள் செவியோரம் கிசுகிசுக்க, “இதெல்லாம் போங்கு” அவள் திமிற, அவன் சரிய, அவளும் அவன் மீது சரிந்து விழுந்தாள்.

அவன் கைகள் அவளை தன்னோடு சேர்த்துக்கொள்ள, அவள் அவன் தோள்களை பிடிமானமாக பிடிக்க, அவள் இதழ்களை தொட்டு சென்ற நீர்த்துளி அவன் இதழை தீண்ட, அதில் மயங்கி அவள் கண்களை பார்த்தான். அதில் அன்பும் காதலும் வழிய அவன் முகத்தில் கர்வம் வந்தது. தான் தவறு செய்திருந்தாலும், தன் மேல் அன்பும் காதலும் கொண்ட மனைவியை காதலோடு பார்த்தான்.

மழைநீரின் குளிரும், அவன் தேகஸ்பரிசத்தின் வெப்பமும் அவளை சூழ அவள் முகம் நாணம் கொண்டு, நாணத்தை பரிசளித்தவனிடமே மறைத்துக்கொள்ள, அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டாள். “பங்காரு…” அவன் அவள் செவியோரம் அன்பாக அழைத்தான். “…” அவள் வெட்கம் அவள் வார்த்தைகளை முழுங்கி கொண்டன.

“பங்காரு…” அவன் அழைப்பு அவளுக்கான அவன் புரிதலை எங்கோ சொல்லியது. “…” அந்த புரிதலான அழைப்பில், அவள் அவனை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். தன் மேல் காதல் கொண்ட, தன் மேல் அன்பு கொண்ட மனைவியை அவனுக்கு பிடித்திருந்தது. மிகவும் மிகவும் பிடித்திருந்தது. அவளை இன்னும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அவனை சூழ்ந்தது.

“பங்காரு…” அவன் எதையோ பேச விழைபன் போல் அழைத்தான். அவள் சுவாசக்காற்று மட்டுமே அவனை தீண்டியது. அவள் குரல் மௌனத்தை மட்டுமே வெளிப்படுத்த, “நான் மாறிட்டேன்னு சொல்ல மாட்டேன் பங்காரு. ஆனால், நிச்சயமா என்னை மாத்திக்குறேன் பங்காரு.” அவன் பேச, அவள் விழுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். மழைநீரில் நீர் முத்துக்களோடு பளபளத்த அவள் இதழ்கள் அவன் வசமாக அவன் அன்பில் அவள் கரைய, அவள் நெகிழ்வில் அவன் மகிழ்ந்து போனான்.

அவள் விழிகள் அவனை பார்க்க, இரு விழிகளும் ஒன்றோடு ஒன்று காதலும் அன்பும் பரிமாறிக்கொள்ள, அவள் விழிகளில் நீர்த்துளி. ‘இனி உன்னை அழ விடவே மாட்டேன் பங்காரு…’ அவன் இதழ்கள் அவளுக்கு பரிசுகொடுத்து வாக்கு கொடுக்க, அவன் பரிசில் அவள் அவனுக்கு பரிசானாள்.

அவன் செய்த தவறுகள், அவளுக்கு நெருஞ்சி முள் தான். அவள் வலி அவனுக்கு புரிந்தது. அந்த வலியை தாண்டிய அன்பில் தன் மனைவியை பாதுக்காக்க விரும்பினான் அந்த அன்பு கணவன்.

“பங்காரு…” என்ற அன்பான அழைப்பு. “பங்காரு…” என்று காதலோடு அழைப்பு. “பங்காரு…” என்ற உரிமையான அழைப்பு. “பங்காரு…” என்று கொஞ்சும் அழைப்பு. “பங்காரு…” என்று கெஞ்சலான அழைப்பு. “பங்காரு… பங்காரு… பங்காரு… பங்காரு… பங்காரு… பங்காரு…” என்று அந்த அறை முழுதும் அவன் அழைப்புகள் மட்டுமே. அவன் அன்பு மட்டுமே. அவன் அன்பில் அவள் கரைந்து கொண்டிருந்தாள்.

‘பாவா…’ என்று அழைக்க வேண்டும் என்ற ஆசை அவள் மனதில் எழுந்தாலும், அவளால் அவனை அழைக்க முடியவில்லை. ஏதோவொன்று அவளை தடுத்தது. அவள் தன்னை, ‘பாவா…’ என்று அழைக்க மாட்டாளா என்று அவன் மனம் ஏங்கத்தான் செய்தது. சிறு விஷயத்தை கூட கேட்டு, அவளை அவன் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. காலம் கனியும் என்று காத்திருந்தான்.

காலம்! தவறு செய்தவன் திருந்தத்தான் விழைவான். ஆனால், செய்த பாவம்? காலம் கனியுமா?

விதி இப்பொழுது இருவரையும் பார்த்து மழையோடு மின்னி மின்னி சிரித்தது. 

மயங்கும்…                                            

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!