மகிஷவர்த்தினி 7

20211105_085322-42dd3e4f

மகிஷவர்த்தினி 7

சிரிப்பு சத்தம் மட்டுமே கேட்கும் அந்த வீட்டில் அன்று ஓரே அழு குரல் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. அந்த அழு குரலைக் கேட்க யாருக்கும் சக்தி இல்லை அதே போல் அந்த அழுகையை யாராலும் நிறுத்தவும் இயலவில்லை. பெரும் சத்தத்துடன் அழுது கொண்டிருந்தாள் மகிஷா. அவளது அருகிலே ஸ்ரீயும் அழுதுக் கொண்டிருந்தது. மகிஷாவின் அம்மா நந்தினி இரண்டு பேரையும் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் இருவரும் அழுகையை நிறுத்தவில்லை. அன்றோடு ஸ்ரீயின் பெற்றோர் விபத்தில் இறந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. ஸ்ரீயை ஸ்ரீயின் தாத்தா பாட்டி தங்களோடு இந்தியா அழைத்துக் கொண்டு போக முடிவு செய்துவிட்டனர். ஏற்கனவே பெற்றவர்களை இழந்துவிட்ட ஸ்ரீயால் மகிஷாவையும் பிரிய முடியவில்லை. அதே போல் இரண்டு வயது முதல் பதினைந்து வயது வரை கூடவே இருந்த ஸ்ரீ இப்பொழுது தன்னை விட்டுப் பிரிந்து செல்வதைத் தாங்காமல் மகிஷாவும் அழுது கொண்டிருக்கிறாள்.

சிறிது நேரம் பொருத்து பார்த்த ஸ்ரீயின் தாத்தாவும் பாட்டியும் விமானத்துக்கு நேரமாவதை உணர்ந்து ஸ்ரீயை அழைக்க, ஸ்ரீயோ மகிஷாவின் கையைப் பிடித்துக் கொண்டு வர மாட்டேன் என்று அழுக, வேறு வழியின்றி ஸ்ரீயை இழுத்துச் செல்ல வேண்டியதாகி விட்டது.

“ஸ்ரீ போகாத போகாத.” என்று மகிஷா கூற கூற அவர்கள் இழுத்துச் செல்ல, அவள் மீண்டும் மீண்டும் போகாத போகாத என்று கத்த, அவளின் அறையைக் கடந்து சென்ற விஷ்வா அவளின் சத்தம் கேட்டு உள்ளே வர, மகிஷாவோ தூக்கத்திலே போகாத போகாத என்று கூறிக் கொண்டே இருந்தாள். விஷ்வாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பக்கத்தில் சென்று அவளது பெயரைச் சொல்லி அழைக்க மகிஷா முழிக்கவே இல்லை. அவளது தோளைத் தட்டி எழுப்ப அப்பொழுதும் எழுந்திருக்கவில்லை. பின் மகிஷாவை உலுக்கப் பதறி அடித்துக் கொண்டு எழுந்தாள் மகிஷா. பக்கத்தில் விஷ்வாவை பார்த்ததும் தான் மகிஷா உணர்ந்தாள் அவள் இது நேரம் வரை கண்டது கனவு என்று.

“என்னாச்சு மகிஷா?”

“ஒன்னுமில்லை ஏதோ கனவு அவ்ளோ தான்.” என்று மகிஷா விஷ்வா முகத்தைப் பார்க்காமலே கூற, விஷ்வாவிற்கு புரிந்தது அவள் ஏதோ மறைக்கிறாள் என்று. சரியாக அதே நேரம் ஆதி உள்ளே வர இருவரையும் பார்த்து அதிர்ச்சியடைந்தான்.

“விஷ்வா நீ இங்க என்ன பண்ற?”

“ஏதோ சத்தம் கேட்டுச்சு. உள்ளே வந்து பார்த்தால் மகிஷா ஏதோ தூக்கத்துல கத்திட்டு இருந்தா. அதான் என்னனு பார்க்க வந்தேன்.”

“மிஸ்டர். விஷ்வேஷ்வரன் நான் ஒன்னும் கத்திட்டு இருக்கலை. நம்ம மனசுக்குப் பிடிச்சவங்க, நெருக்கமானவங்க நம்மளை விட்டுப் பிரியும் போது சொல்ல முடியாது அளவுக்கு வலிக்கும். அது எல்லாம் உனக்குத் தெரிய வாய்ப்பு இல்லை.” காட்டமாக மகிஷா கூற,

“ஏய் கூல் கூல் எதுக்கு இவ்ளோ கோபம். ஆதி கேட்டதுக்கு நான் பதில் சொன்னேன். அப்புறம் அவன் நம்மளை தப்பா நினைச்சுக்கக் கூடாதுல. அந்த நல்ல எண்ணத்துல தான் சொன்னேன்.”

“ஆதி எதுக்கு தப்பா எடுத்துக்கனும்? நீ சொல்றது எனக்குப் புரியலை.”

“அப்புறம் இரண்டு பேரும் சண்டை கோழியா இருந்துட்டு இப்படி ஓரே அறைல இருந்தா யாருக்கா இருந்தாலும் சந்தேகம் வரத் தான் செய்யும்.” விஷ்வா அவ்வாறு கூறவும் மகிஷா அவனை முறைத்துப் பார்த்துவிட்டு ஆதியிடம் திரும்பி,”ஆதி நீ அப்படி நினைக்கிறாயா?”

“ச ச அப்படிலாம் நான் நினைக்கலை மகி. நான் எப்படி உங்களைப் போய் தப்பா நினைப்பேன்.”

“எனக்குத் தெரியும் ஆதி உன்னைப் பத்தி. உன் அண்ணனுக்குத் தான் உன்னைப் பத்தி எதுவும் தெரியலை. இல்லை தெரிஞ்சும் தெரியாத மாதிரி கண்டுக்காத மாதிரி இருக்காரானு தெரியலை.” என்று மகிஷா கூற,

“அப்படிலாம் இல்லை மகி. விஷ்வாவுக்கு என்னைப் பத்தி நல்லா தெரியும்.”சாதாரணமாக ஆதி கூறினான். ஆனால் விஷ்வாவிற்கு மகிஷா ஏதோ உள் நோக்கத்துடன் கூறியது போல் இருந்தது. ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

“என்னாச்சு மகி?”

“ஒன்னுமில்லை ஆதி. நான் சொல்லிருக்கேன்ல என்னுடைய ப்ரண்ட். அவங்க ஞாபகம் வந்துருச்சு அவ்ளோ தான்.” என்று மகிஷா கூற, ஆதியோ ஓ அப்படியா என்று அதோடு நிறுத்திவிட்டான். ஆனால் விஷ்வாவுக்கு தான் ஒரே யோசனையாக இருந்தது. அதை வெளியில் காட்டாமல் அங்கிருந்து தன் அறைக்கு வந்துவிட்டான்.

தனது அறைக்கு வந்த விஷ்வாவுக்கு ஓரே யோசனையாக இருந்தது. தான் கேட்டது உண்மை தானா என்று மூளையைப் போட்டு கசக்காத குறையாக யோசித்துக் கொண்டிருந்தான்.

“இல்லை கண்டிப்பா மகிஷா ஸ்ரீனு தான் சொன்னாள். அதுல எந்த சந்தேகமும் இல்லை. என் ஸ்ரீயை தான் அவளும் சொல்றாளா! இல்லை இது வேற எதாவது ஸ்ரீயா? ஒரு வேளை ஸ்ரீக்காக தான் மகிஷா இங்க வந்தாளா? இதை எப்படித் தெரிஞ்சுக்கிறது? மகிஷாகிட்டயே கேட்கலாமா? வேண்டாம் அப்படி இல்லாட்டி தேவையில்லாத சந்தேகம் வரும். பொறுமையா இருப்போம். அவள் என்ன பண்றானு பார்ப்போம்.” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு அவனது வேலையைப் பார்க்கச் சென்றான்.

இங்கு மகிஷாவின் அறையில் ஆதி அவளுக்கு அருகில் அமர்ந்து அவளது கையைப் பிடித்துக் கொண்டு,”என்னாச்சு மகி? எதுவும் பிரச்சனையா? விஷ்வா எதுவும் உன்னைச் சொன்னானா?”

“அதலாம் ஒன்னுமில்லை ஆதி. நீ வொர்ரி பண்ற அளவுக்கு எதுவுமில்லை.”

“நிஜமா எதுவுமில்லையா?”

“நான் எதுக்கு மறைக்கனும்? அதலாம் எதுவுமில்லை. சரி வா இன்னைக்காவது நாம ஜாக்கிங் போகலாம்.” என்று மகிஷா கூற, ஆதியும் சிரித்துக் கொண்டே தலையாட்ட மகிஷா போய் ரெடியாகி வந்தாள்.

மயூரா தூங்கி எழுந்து அவள் வீட்டு பால்கனியில் சோகமே உருவாக அமர்ந்திருக்க, ஆதியும் மகிஷாவும் சிரித்துப் பேசிக் கொண்டே வெளியே வருவதைப் பார்த்து அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அழுது கொண்டே உள்ளே சென்றுவிட்டாள். அவளுக்கு வேதனை ஒரு பக்கமும் ஆற்றாமை மறு பக்கமுமாக இரு வேறு உணர்வுகளில் சுழன்று தவித்தாள். ஆனால் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. மகிஷா ஏதோ காரணத்தோடு தான் இங்கு வந்திருக்கிறாள் என்று புரிகிறது. ஆனால் அவள் எது செய்தாலும் அது அவளுக்கு பாதகமாகவே முடிகிறது. தன்னுடைய காதல் கண்டிப்பாக ஆதியை தன்னிடம் கொண்டு வரும் என்ற நம்பிக்கையுடன் இருந்தாள்.

சூரியனும் சந்திரனும் தன் கடமைகளை அழகாக நிறைவேற்ற நாட்களும் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. அன்றோடு மகிஷா இந்தியா வந்து நாற்பது நாட்கள் ஆகி இருந்தது. மயூரா நினைத்த எதுவும் நடக்கவில்லை. ஆனால் அவள் நினைக்காத ஒன்று ஐந்து நாட்கள் முன்பு நடந்தது. அதில் அவள் மொத்தமாக உடைந்து போய்விட்டாள். தன்னுடைய ஆதி இவ்வாறு நடந்துப்பான் என்று கனவிலும் நினைக்கவில்லை.

ஐந்து நாட்கள் முன்பு,

நன்றாகப் பேசிக் கொண்டிருந்த மயூரா திடீரென மயங்கி கீழே விழுக கிரிஜாவிற்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. வேகமாக தன் கைப்பேசி எடுத்து வெங்கடேஷிற்கு அழைத்து விவரத்தைக் கூறி வரச் சொன்னார். அவர் வருவதற்குள் தண்ணீர் எடுத்து மயூரா முகத்தில் தெளிக்க அவள் அசைவற்று கிடந்தாள். கிரிஜா எவ்ளோ முயன்றும் மயூரா எழுந்திருக்கவே இல்லை. சிறிது நேரத்திலே வெங்கடேஷ் அங்கே வர அவர் மயூராவை தூக்கி காரில் பின் சீட்டில் படுக்க வைக்க, கிரிஜா மயூராவின் தலைப் பக்கம் வந்து அவளது தலையை எடுத்து தன் மடி மீது வைத்துக் கொண்டார். வெங்கடேஷ் காரை வேகமாக மருத்துவமனைக்கு விட்டார்.

மகிஷா பொழுது போகாமல் வெளியே வந்தவள் வெங்கடேஷ் மயூராவை தூக்கிக் கொண்டு செல்வதைப் பார்த்தாள். என்னவாக இருக்கும் என்று பரபரப்பாக இருக்க, உடனே தன் கைப்பேசியை எடுத்து,”வெங்கடேஷ் எங்கேயோ போறார். அவர் எங்க போறாரானு பார்த்துட்டு எனக்குக் கூப்பிடுங்க.” என்று கூறிவிட்டு வைத்துவிட்டாள்.

சிறிது நேரத்திலே அவளுக்கு அழைப்பு வர, முகத்தில் ஒரு அலட்சிய சிரிப்புடன் சில விவரங்களை அந்த ஆளிடம் சொல்லிவிட்டு பாட்டுப் பாடிக் கொண்டே உள்ளே சென்றாள்.

மருத்துவமனைக்கு வந்த வெங்கடேஷூம் கிரிஜாவும் மயூராவிற்கு என்ன என்று தெரியாமல் பதட்டத்துடன் காத்திருந்தனர். உள்ளே மயூராவை செக் செய்த மருத்துவர் வெளியே வந்து இருவரிடமும்,”உள்ளே வாங்க.” என்று தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.

“என்னாச்சு டாக்டர்?”

“வெங்கடேஷ் சார் இதை எப்படி சொல்றதுனு எனக்குத் தெரியலை. ஆனால் சொல்லித் தான் ஆகனும். உங்க ஃபேமிலி டாக்டரான முறையில நான் எதையும் உங்ககிட்ட இருந்து மறைக்க விரும்பலை.”

“டாக்டர் எதுனாலும் சொல்லுங்க. நீங்க இப்படிப் பேசுறது தான் எனக்குப் பயமா இருக்கு.”

“உங்க பொண்ணு கர்ப்பமா இருக்கா. அதுவும் கரு உருவாகி எட்டு வாரம் ஆகிடுச்சி.” என்று மருத்துவர் கூற வெங்கடேஷூம் கிரிஜாவும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்தனர்.

“எனக்கு உங்களோட நிலை புரியுது. ஆனால் இப்போ இருக்கிற பிள்ளைங்க எங்க நம்ம பேச்சை கேட்கிறாங்க. சரி அதை விடுங்க. உங்க பொண்ணுகிட்ட பக்குவமா பேசி யாருனு கேட்டு சட்டுனு கல்யாணத்தை முடிச்சு வைங்க. அப்புறம் இன்னொரு விஷயம் உங்க பொண்ணு கொஞ்சம் அனீமிக்கா இருக்கா. நான் அதுக்கும் சேர்த்து டேப்ளட்ஸ் தரேன். பத்திரமா பார்த்துக்குங்க உங்க பொண்ணை.” என்று மருத்துவர் அவர்கள் இருவருக்கும் ஆறுதல் கூற, வெங்கடேஷிற்கும் கிரிஜாவுக்கும் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக மயூரா இருந்த அறைக்கு வந்தனர். அவளோ எதுவும் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தாள்.

“என்னங்க டாக்டர் இப்படி சொல்லிட்டு போறார். இவளை நாம எவ்ளோ நம்புனோம்! ஆனால் இப்படி பண்ணிட்டாளே. யாருங்க காரணமாக இருப்பா?”

“கிரி என்ன பேச்சு பேசுற? இதுக்கு கண்டிப்பாக ஆதித்யா தான் காரணமா இருப்பான். நம்ம பொண்ணு ஒன்னும் தப்பு பண்றவ இல்லை. அது உனக்குத் தெரியாதா?”

“தெரியலையே நமக்கு எதுவுமே தெரியலை. அதுவும் அவ இப்போ இரண்டு மாசம் கர்ப்பம்னு சொல்றது தான் என்னால தாங்கவே முடியலை. இரண்டு மாசம் அவளுக்கு எதுவும் தெரியாமலா இருந்துருக்கும். நம்மகிட்டயே இப்படி மறச்சுட்டாளே!”

“கிரிஜா நீயே எல்லாத்தையும் முடிவு பண்ணி பேசாத. முதல்ல மயூ கண்ணை முழிக்கட்டும். அப்புறம் பேசிக்கலாம்.”

“உங்களுக்குக் கோபமே வரலையா அவ மேல?”

“அவ என் பொண்ணு. எனக்கு எப்படி கோபம் வரும். ஏதோ நடந்துருச்சு. இனி இதை எப்படி சரி பண்ணனும்னு தான் யோசிக்கனும்.”

“அது சரி உங்களுக்கு எப்படி கோபம் வரும்? நீங்..” என்று ஏதோ பேச வந்த கிரிஜாவை,”வாயை மூடு. நீ மட்டும் என்ன ஒழுங்கா? தேவையில்லாததைப் பேசாத சொல்லிட்டேன்.” என்று இவரும் கத்த, கிரிஜா பதில் கூறும் முன் மயூராவிடம் முனங்கல் சத்தம் கேட்க வெங்கடேஷின் பார்வை அவளிடம் சென்றது.

மெல்ல கண் திறந்து பார்த்த மயூரா மருத்துவமனையில் இருப்பதைப் பார்த்து தன் அப்பாவிடம்,”அப்பா என்னாச்சு? நான் ஏன் ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்?” பாவமாகக் கேட்க, அதுவரை கோபமாக இருந்த கிரிஜாவால் கூட மகளை இந்த நிலைமையில் பார்க்க முடியவில்லை. அவளைக் கட்டிக் கொண்டு அழுக ஆரம்பித்துவிட்டார். அவரது அழுகை மயூராவை கலவரப்படுத்தியது.

“அம்மா என்னாச்சு ஏன் அழுகுறீங்க? எனக்கு எதுவும் பெரிய வியாதி இருக்குனு டாக்டர் எதுவும் சொன்னாங்களா?”

“அதலாம் ஒன்னுமில்லை டா. உனக்கு ஒன்னுமில்லை நீ நல்லா தான் இருக்க. தீடீர்னு நீ மயங்கி விழவும் அம்மா பயந்துட்டா அவ்ளோதான்.” என்று வெங்கடேஷ் கூற, மீண்டும் கிரிஜாவிற்கு கோபம் வந்துவிட்டது.

“ஆமா ஒன்னுமில்லை. இன்னும் எத்தனை நாளுக்கு நீங்க இதை மறைக்க முடியும்?” என்று கிரிஜா கோபமாகக் கேட்க,

“கிரிஜா எதுவா இருந்தாலும் நாம வீட்டுக்குப் போய் பேசலாம். நான் போய் டாக்டரை பார்த்துட்டு வரேன்.” என்று கூறிவிட்டு வெளியே சென்றார் வெங்கடேஷ். மயூரா கிரிஜாவையே தான் பார்த்து கொண்டிருந்தாள். ஆனால் கிரிஜா கோபமாக இருந்ததால் அவளைப் பார்க்கவில்லை. எங்கே அவளது முகத்தைப் பார்த்தால் கோபம் போய்விடுமோ இல்லை கோபம் அதிகமாகி அவளை வார்த்தையால் துன்புறுத்திவிடுமோ என்று பயந்து அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தார்.

வெங்கடேஷ் டாக்டரிடம் பேசிவிட்டு மயூரா இருந்த அறைக்கு வந்தார். டாக்டர் மயூராவை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறியதைக் கூறி அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்.

வீட்டுக்கு வந்தவர்களிடம் மயூரா,”அம்மா அப்பா எனக்கு என்னாச்சு. ப்ளீஸ் சொல்லுங்க. அம்மா நீ ஏன் என் மேல கோபமா இருக்க?”

“அப்புறம் நீ பண்ணக் காரியத்துக்கு கோபப்படாமல் கொஞ்சுவாங்களா?”

“அம்மா நான் அப்படி என்ன பண்ணேன்?”

“ம் அதைத் தான் நாங்களும் கேட்கிறோம். என்ன டி பண்ண?”

“கிரிஜா அமைதியா இரு.”

“எப்படிங்க அமைதியா இருக்க முடியும்? நாளைக்கு இவ வயித்தை தள்ளிட்டு இருந்தா கேட்கிறவங்களுக்கு நாம என்ன பதில் சொல்றது?” என்று கிரிஜா கேட்க, மயூராவிற்கு அதிர்ச்சி. சத்தியமாக அவள் இப்படி நினைக்கவே இல்லை.

“சொல்லு டி யாரு இதுக்கு காரணம்?” என்று கிரிஜா மயூராவை உலுக்கிக் கேட்க, மயூராவால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.

“மயூரா சொல்லு டா அது ஆதித்யா தான? நான் அவங்க வீட்டுல போய் பேசுறேன். உங்களுக்குக் கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சுட்டா யாரும் எதுவும் பேச முடியாது.”

“ஆமா முதல்ல அதைப் பண்ணுங்க. என் பொண்ணை யாரும் கஷ்டப்படுத்துற மாதிரி பேசுனா என்னால தாங்கிக்க முடியாது.”

“கிரிஜா என்ன நீ இப்படி மாத்தி மாத்தி பேசுற?”

“ம்ச் எனக்கு மயூரா மேல கோபம் இருக்கிறது உண்மை தான். அதுக்காக மத்தவங்க அவளை எதுவும் பேசுறதை என்னால தாங்கிக்க முடியாது.” என்று கிரிஜா கூற, மயூரா அவளது அம்மாவைக் கட்டிக் கொண்டாள்.

“மயூ ஆதிகிட்ட போய் நான் பேசட்டுமா மா?” தயங்கி தயங்கி வெங்கடேஷ் கேட்க, மயூரா அழுகையுடன் தலையசைத்தாள்.

வெங்கடேஷ் நேரத்தைக் கடத்தாமல் உடனே ஆதியின் இல்லத்திற்குச் சென்றார். அவரை அங்கு எதிர்பார்க்காத சம்பத் சந்தோஷத்துடன்,”வா வெங்கடேஷ். எங்க கோபத்தோடயே இருந்துருவியோனு நினைச்சேன்.” என்று அவர் கூற, வெங்கடேஷ் அமைதியாக அமர்ந்தார்.

“என்னாச்சு வெங்கடேஷ் எதுவும் பிரச்சனையா?”

“ஆதி எங்க சம்பத்? ஆஃபிஸ்கு போய்ட்டானா?”

“இல்லை கிளம்பிட்டு இருக்கான். ஏன் என்னாச்சு வெங்கி? உன் முகமே சரியில்லை?”

“மயூரா காலைல மயங்கி விழுந்துட்டா. நாங்க ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனப்போ….” என்று ஆரம்பிக்கும் போது அங்கே வந்தனர் ஆதியும் மகிஷாவும். ஆதி அவரைக் கண்டுக் கொள்ளாமல் டைனிங் டேபிளுக்கு செல்ல சம்பத்,”ஆதி உன்னைப் பார்க்கத் தான் வெங்கி வந்துருக்கான். எதுவும் பேசாமல் நீ போனா என்ன அர்த்தம் ஆதி?” கோபமாக சம்பத் கேட்க, சலிப்புடன் ஆதி அங்கு வந்து,”வாங்க.” என்று மட்டும் கூறிவிட்டு மீண்டும் போக முயல, சம்பத் அவனைப் பார்த்து முறைக்க அமைதியாக வந்து உட்கார்ந்துவிட்டான். மகிஷாவும் அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

“சொல்லு வெங்கி அதான் ஆதி வந்துட்டான்ல. ஏதோ மயூரா வேற மயங்கி விழுந்துட்டான்னு சொன்ன.”

“ஆமா சம்பத். எனக்கு உயிரே போச்சு. ஹாஸ்பிட்டல் போனப்போ டாக்டர் சொன்ன விஷயம் உண்மையிலே ரொம்ப ஷாக்கிங்கா இருந்துச்சு.”

“வெங்கி விஷயத்தை நேரா சொல்லு. மயூராவுக்கு எதுவும் பிரச்சனையா?”

“ஆமா சம்பத். மயூரா கர்ப்பமா இருக்கா.” என்று வெங்கி கூற, மகிஷா தவிர்த்து அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

“என்ன சொல்ற வெங்கி?”

“ஆமா சம்பத் மயூரா கர்ப்பமா இருக்கா. அதான் ஆதியைப் பார்த்து பேசிட்டு போகலாம்னு வந்தேன்.”

“மயூரா கர்ப்பமா இருக்கிறதுக்கு நீங்க எதுக்கு என்கிட்ட பேசனும்?” என்று ஆதி கேட்க, வெங்கடேஷ்கு பயங்கர கோபம்.

“ஏனா அவளோட கர்ப்பத்துக்குக் காரணம் நீ தான். உன்கிட்ட பேசாம நான் யார்கிட்ட போய் பேசுறது?.” என்று வெங்கடேஷ் கேட்க அனைவருக்கும் அதிர்ச்சி.

“வெங்கி என்ன சொல்ற?” சம்பத் அதிர்ச்சியாக அவரைக் கேட்க,

“உங்க மகள் யாரோட போனாளோ! மத்தவன் குழந்தைக்கு என்னை அப்பாவாக்க பார்க்குறீங்களா?” என்று ஆதி கோபமாகக் கேட்க,

“ஆதி!” என்ற சத்தம் கேட்டு அனைவரும் வாசல் பக்கம் பார்க்க, மயூரா கோபத்துடன் அங்கே நின்றிருந்தாள்.

“ஆதி உன்னால எப்படி இப்படி பேச முடியுது? அந்த அளவுக்கு நான் உனக்கு வேண்டாதவளா போய்ட்டேனா?”

“சும்மா நடிக்காத. என்னைக் கல்யாணம் பண்ணிக்க நீ பண்ணிருக்க புது டிராமா தான இது?”

“அய்யோ சத்தியமா இல்லை ஆதி. நான் நிஜமாவே கர்ப்பமாக இருக்கேன்.”

“சரி அப்படியே இருந்தாலும் நான் தான் உன் கர்ப்பத்துக்கு காரணம்னு நான் எப்படி நம்புறது? நமக்குள்ள சமீபத்துல எதுவும் நடக்கலை. அப்புறம் எப்படி நான் காரணம் ஆக முடியும்?”

“ஆதி நீயா இப்படி பேசுற? அன்னைக்கு அஜய் பர்த்டேல நடந்தது உனக்கு மறந்து போச்சா?”

“அஜய் பர்த்டேல என்ன நடந்துச்சு? இது என்ன புதுக் கதை?”

“புதுக் கதையா? ஓ அன்னைக்கு குடிச்சுருந்தல அதான் உனக்கு எதுவும் ஞாபகம் வரலை. ஆனால் அன்னைக்கு நம்மகுள்ள நடந்தது ஆதி.”

“இங்கப் பார் நான் அன்னைக்கு ஸ்டெடியா இல்லைனு பொய் சொல்றியா? நமக்குள்ள நடந்ததுக்கு என்ன சாட்சி?”

“நான் எதுக்கு ஆதி பொய் சொல்லனும்? சரி சாட்சி தான என் வயித்துல இருக்க நம்ம குழந்தை தான் சாட்சி.”

“உன்னை நான் நம்பத் தயாரா இல்லை மயூரா. அப்புறம் என்ன சொன்ன நம்ம குழந்தையா? அதைத் தான் எனக்கும் அதுக்கும் சம்மதம் இல்லைனு சொன்னத்துக்கு அப்புறம் எப்படி அது சாட்சி ஆகும்?”

“சம்பத் என்ன இது? ஆதி இப்படி பேசுறான்? நீயும் பார்த்துட்டு இருக்க?”

“எனக்கு என்ன சொல்றதுனு சுத்தமா புரியலை. ஆதி அவனுக்கும் இதுக்கும் எந்த சம்மதமும் இல்லைனு சொல்றான். மயூரா ஆதி தான் காரணம்னு சொல்றா. எனக்கு யாரை நம்புறதுனு சுத்தமா புரியலை.”

“இதுக்கு ஓரே வழி டீ.என்.ஏ டெஸ்ட் தான். அப்போ தெரிஞ்சுடும் யார் உண்மை சொல்றாங்கனு.” என்று மகிஷா கூற, மயூரா அவளை முறைத்தாலும் அவள் கூறுவது சரியாகப் பட, அனைவரும் ஒத்துக் கொண்டனர்.

“மகி அதுக்கு பத்து மாசம் நாம வெயிட் பண்ணனும். அதுக்குள்ள இவங்க என்ன என்ன டிராமா பண்ணுவாங்களோ தெரியலையே!” நக்கலாக ஆதி கூற, மயூரா உடைந்து போனாள். சத்தியமாக ஆதி இப்படிப் பேசுவான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. மணம் ரணமாக வலித்தது. இதற்கு எல்லாம் காரணம் மகிஷா தான் என்று அவள் மேல் பயங்கர கோபத்துடன் இருந்தாள்.

“ஆதி டெக்னாலஜி எவ்ளோவோ முன்னேறிடிச்சு. இப்போலாம் குழந்தை உருவான இரண்டாவது மாசத்துலயே அம்மாவோட இரத்தத்தை வைச்சு அந்தக் குழந்தையோட அப்பாவை கண்டுபிடிச்சுடலாம்.” என்று மகிஷா கூறவும் நேரத் தாழ்த்தாமல் எல்லோரும் அப்பொழுதே மருத்துவமனை செல்லத் தயாராகினர்.

மகிஷாவும் ஆதியுடன் மருத்துவமனை வந்தாள். அவளைப் பார்க்க மயூராவிற்கு கோபம் வந்தது. ஆனால் ஒன்றும் செய்ய இயலாமல் அமைதியாக இருந்தாள்.

மருத்துவமனையில் டாக்டரிடம் விவரத்தைக் கூற, அவரோ இவர்களை ஒரு மாதிரி பார்த்துவிட்டு டெஸ்ட் எடுக்க ஒத்துக் கொண்டார். இருந்தும் அவர் இவர்களின் குடும்ப டாக்டர் தான்.

“டெஸ்ட் முடிஞ்சது சார். இன்னும் இரண்டு நாள்ள ரிசல்ட் வந்துரும். நீங்க அப்போ வந்து கலெக்ட் பண்ணிக்கோங்க.” என்று டாக்டர் கூற,

“ரொம்ப தாங்க்ஸ் மேடம். நாங்க இரண்டு நாள் அப்புறம் வந்து வாங்கிக்குறோம்.” என்று வெங்கடேஷ் கூற, அவரும் தலையசைத்தார். பின் அனைவரும் கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டனர்.

ஆதி மயூராவை பார்க்கக் கூட இல்லை. அவன் அவளிடம் எதுவும் பேசாமல் தன் வீட்டுக்குச் சென்றுவிட்டான்.

இரண்டு நாள் கழித்து வெங்கடேஷூம் ஆதியும் போய் ரிசல்ட் வாங்கப் போக அங்கே வெங்கடேஷ்கு பயங்கர அதிர்ச்சி. அந்த ரிசல்ட்டில் மயூராவின் கர்ப்பத்துக்கு ஆதி காரணம் இல்லை என்று வந்தது. அவருக்கு இனி என்ன செய்வது என்று புரியவில்லை. ஆதி அவரை நக்கலாகப் பார்த்து,”இப்போ என்ன சொல்றீங்க? நான் சொன்னது உண்மையாகிடுச்சா?” என்று கேட்க, அவரால் ஆதியின் முகத்தைப் பார்க்கக் கூட முடியவில்லை. எதுவும் பேசாமல் இருவரும் வீட்டுக்கு வந்தனர்.

அவர்கள் மருத்துவமனை சென்ற நேரம் மயூராவிடம் வந்த மகிஷா அவளை நக்கலாகப் பார்த்து,”உன்னோட நிலைமையை நினைச்சா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மயூரா. பாவம் நீ இனிமேல் என்ன பண்ணுவையோ!”

“இனிமேல் உன்னோட ஆட்டம் எதுவும் நடக்காது. ஆதியை நான் கல்யாணம் பண்ணிடுவேன். அப்புறம் உன்னோட முகமூடியை நான் கிழிச்சு ஆதி கையாலையே உன்னை வீட்டை விட்டு வெளில அனுப்புறேன்.” என்று மயூரா கூற,

“நல்ல பகல் கனவு காணு. ஆதி இப்போ ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்து உன்னைத் தான் அசிங்கம் அசிங்கமா திட்டப் போறான். அப்புறம் உன் பக்கம் கூடத் திரும்ப மாட்டான். நீ என்னை வீட்டை விட்டு வெளில அனுப்ப போறியா நல்ல ஜோக் பண்ற மயூரா.” என்று மகிஷா கூற, மயூரா அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தாள்.

“என்ன புரியலையா? உன்னோட டீ.என்.ஏ டெஸ்ட்ல ஆதி இதுக்கு காரணம் இல்லைனு தான் ரிப்போர்ட் வரும்.”

“ஏய் என்ன சொல்ற நீ?”

“ஹா ஹா நான் ரிப்போர்ட்டை மாத்தி வைச்சுட்டேன். ஸோ உன்னால ஆதியை கல்யாணம் பண்ணிக்க முடியாது. என்னையும் உன்னால ஒன்னும் பண்ண முடியாது.” என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டு சென்றுவிட்டாள். மயூரா அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்திருந்தாள்.

-தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!