மயங்கினேன் பொன்மானிலே – 3

பொன்மானிலே _BG-903a0095

மயங்கினேன் பொன்மானிலே – 3

அத்தியாயம் – 3

மிருதுளா அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க, “இன்னும் தூங்கலையா?” சில மணித் துளிகளுக்கு பின் அறைக்குள் நுழைந்த வம்சி கோபத்தை விடுத்து அக்கறையோடு கேட்டான்.

“தூங்கணும்” அவள் படுத்துக்கொள்ள, “சிந்து ஏதோ தெரியாம ப்ரொவ்சிங் ஹிஸ்டரி டெலீட் பண்ணிருப்பா. இதுக்கெல்லாம் இவ்வளவு யோசனை பண்ணுவாங்களா?” அவன் அவளை சமாதானம் செய்ய, “நம்ம கூட சிந்தவும் மூணார் வராலா?” மிருதுளா கேட்க,  

“ஏன் வரக்கூடாதா?” அவன் அவளை கூர்மையாக பார்த்தான்.

“நான் எதுவும் சொல்லலியே” அவள் அவனை பார்த்தபடி படுக்க, “எதுவும் சொல்லிராத” அவன் குரலில் கட்டளை இருந்தது.

“….” மிருதுளா எதுவும் பேசாமல் அவனை பார்க்க, “அவ சின்ன பொண்ணு” அவன் மீண்டும் சமாதானத்தில் இறங்கினான்.

“வயசு ஒரு ஒன்னு இல்லைனா இரெண்டு இருக்குமா?” மிருதுளா இப்பொழுது எழுந்து அமர்ந்து வினவ, அவள் கேலியில் அவன் முகத்தில் புன்னகை வந்தது.

“அவ்வளவு சின்ன இல்லை… கொஞ்சம் சின்ன பொண்ணு பன்னிரண்டு, பதிமூன்றுக்கு இடையில்…” அவனும் அவளை போலவே கேலியாகவே பதில் கூறினான்.

“அதாவது எல்லாம் புரியுற வயசு?” மிருதுளா புருவங்களை உயர்த்த, “எதுவும் முழுசா புரியாத வயசு” அவன் குரலில் இப்பொழுது கோபம்.

“அதைத்தான் நானும் சொல்றேன்.” அவள் கூற, அவன் புருவங்கள் இடுங்கியது.

“பக்கத்து வீட்டு குழந்தை நம்ம வீட்டுக்கு வரும் பொழுது நீங்க என் கிட்ட சகஜமா பேசுவீங்க. அதுவே உங்க அக்கா பொண்ணு வந்தா நீங்க என் கிட்ட பேசுற விதம், நடந்துக்குற விதத்தில் கூட ஒரு மாற்றம் வரும்” அவள் கூற, அவனிடம் மௌனம்.

“ஏன் தெரியுமா? அவளுக்கு பல விஷயங்கள் புரிந்தும் புரியாத வயசு. உங்க அக்காவுக்கு அறிவு வேணும். புதுசா கல்யாண முடிஞ்சவங்க இருக்கிற வீட்டுக்கு அவங்க பொண்ணை அனுப்பறது தப்பில்லை. ஆனால், நீங்க இருக்கிற மொத்த நேரமும் அவ இங்க தான் இருக்கா.” மிருதுளா கோபமாக கூறினாள்.

“மத்த நேரம் நீங்க அங்க இருக்கீங்க. இல்லை வேலை பார்க்க போயிடறீங்க” மிருதுளா வெடிக்க, “உண்மை தான். எனக்கு உன்னை பிடிக்கலை. உன்னை பார்க்க பிடிக்கலை. உன் கூட பேசப் பிடிக்கலை நீ இப்படி எப்ப பாரு சண்டை போட்டுக்கிட்டே இருந்தா?” அவன் எரிந்து விழ அவள் அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தாள்.  

அவள் கண்கள் கலங்கியது. எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டாள்.  

அவள் கண்கள் கலங்கியதை பார்த்ததும், “பங்காரு…” அவன் அழைக்க, அவள் அவனை தாழாத துக்கத்தோடு பார்த்தாள்.

அவள் அடிப்பட்ட பார்வையில் அவன் அடிபட்டுப் போனான். “பங்காரு…” அவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தினான்.

அவள் விழிநீர் அவள் உள்ளங்கை தொட, “எனக்கு உன்னை…” அவன் வார்த்தையை அவள் இடைமறித்தாள்.

“பிடிக்காது. அதனால், நீங்க உங்க அக்கா வீட்டிலே குடி இருக்கிறீங்க? அது தானே?” அவள் கேட்க, அவள் அவன் முகத்தை நிமிர்த்தினான்.

அவள் முறுக்கி கொண்டு தலை குனிந்தாள். அவன் அவள் நாடியை பிடித்து நிமிர்த்தினான்.

அவள் முரண்டு பிடித்து முகத்தை வேறுபக்கம் திருப்பினாள். ‘உன் விருப்பம் போல் நீ இருக்க முடியுமா?’ என்னும் வகையாக அவன் பிடி இறுகியது.

அவள் அவனை மீற, “என்னைப் பாரு பங்காரு” அவன் அழுத்தமாக கூற, அவள் அவனை கோபமாக பார்த்தாள்.

இப்பொழுது அவள் கண்களில் வலியை விட கோபம் மித மிஞ்சி இருந்தது.

‘எல்லாம் இவங்க விருப்படி தான் இருக்கணுமா?’ அவள் விழிகள் கோபம் கொள்ள, அதை எல்லாம் அவன் கண்டுகொள்ளவே இல்லை.

“என்னை பார்த்தா, எனக்கு உன்னை பிடிக்காத மாதிரியா இருக்கு?” அவன் குரல் அப்பாவியாக ஒலிக்க, அவள் தடுமாற்றத்தோடு அவனை பார்த்தாள்.

அவன் முகபாவத்தில் அவள் மனம் அவன் பக்கம் சரிய, “உனக்கு தான் என்னை பிடிக்காது” அவன் குரல் வருத்தத்தோடு ஒலித்தது.

“…” அவள் அதிர்ச்சியாக நோக்க, “நான் உன்னை எத்தனை தடவை ஆசையா பங்காரு… பங்காருன்னு கூப்பிடுறேன். நீ ஒரு தடவை… ஒரே ஒரு தடவையாது என்னை பாவான்னு கூப்பிடறியா?” அவன் ஆசையாக கேட்டான்.

‘எனக்கு உங்களை அப்படி எல்லாம் கூப்பிடவே தோணலை’ அவள் அவனை யோசனையோடு பார்த்தாள்.

‘எனக்கு ஏதோ அநியாயம் நடக்குற மாதிரி இருக்கு. எல்லாம் இருக்கு. உடுத்த உடை, சாப்பிட நல்ல சாப்பாடு… ஆனால், ஏதோ ஒன்னு மிஸ்ஸிங். அதை உங்க கிட்ட எனக்கு சொல்ல தெரியலை. சொன்னாலும் உங்களுக்கு புரியலை.’ அவள் அவனை ஏக்கமாக பார்க்க,  

“ஆசையா இல்லைனாலும், ஒரு பெயருக்காகவாது பாவான்னு கூப்பிடலாமில்லை?” அவன் அவளை குற்றம் சாட்ட,  

“நீங்க நான் தப்பு பண்ண மாதிரி பேசறீங்க?” அவள் குரலில் வலி இருக்க, அவன் ஒரு எட்டு முன்னே வந்து அவளை அணைத்துக் கொண்டான்.

அவளின் அருகாமை அவனுக்கு பிடித்திருந்தது. அவன் அவளை வாகாக தன் மார்போடு சேர்த்துக் கொண்டான்.

அவன் அருகாமை அவளுக்கு ஆறுதலாக இருந்தது.  

அவள் இதய துடிப்பை அவன் ரசித்தான். அவன் இதயத்துடிப்பு அவளுக்கு இனிய கானமாக இருந்தது. அவன் இதய துடிப்பின் “லப்டப்… லப்டப்…” என்னும் ஓசை அவள் செவிகளை தீண்ட,  

அவன் நெஞ்சோடு அவள் செவிகளை அழுத்திக்கொண்டாள். அந்த, ‘லப்டப்… லப்டப்…’ என்னும் ஓசைக்கிடையில், ‘அக்கா… அக்கா…’ என்ற சத்தம் எழுகிறதா? இல்லை, ‘பங்காரு… பங்காரு…’ என்ற சத்தம் எழுகிறதா என்ற ஐயம் அவளுள் எழ, அவள் தன்னை அடக்கி கொண்டு அந்த நொடியை ரசிக்க ஆரம்பித்தாள்.

அவனது இடது கை அவளை இடையோடு சுற்றி வளைக்க, அவன் வலது கை அவள் முகத்தை நிமிர்த்தியது.

அவள் முகத்தில் செம்மை பரவியது. “பங்காரு…” இப்பொழுது அவன் அழைப்பு முற்றிலும் மாறி இருந்தது.

அந்த அழைப்பில் அவள் முழுதும் கிறங்கி நின்றாள். அவள் முகம் இன்னும் இன்னும் சிவந்து போனது. அவள் காது மடல் சிவக்க, அவன் தன் ஆள் காட்டி விரலால் அதை தீண்ட, அவள் முகத்தில் வெட்க புன்னகை.

“அட, எந்த விதமான செயற்கை அலங்காரமும் இல்லாமல் சிவக்கும் பெண்கள் இன்னும் பூலோகத்தில் இருக்கிறார்களா?” போன்ற வழமையான அபத்தமான திரைப்பட, கதை வசனங்களை அவன் இதழ்கள் உதிர்த்தாலும், வருணனைகள் என்றும் பொய்கள் கலந்தது என்று அறிந்தாலும்,

அரிதாய் கிடைக்கும் அவன் அருகாமை, மென்மையான அவன் தீண்டல், அவன் காதல் பார்வை, உரிமையோடு அவன் மூச்சு காற்று அத்தோடு அவள் ரசித்து அவன் கூறும் வருணனைகள் மொத்தத்தில் அவள் முழுதாய் கிறங்கி போனாள். மயங்கி நின்றாள்!

அவள் மயக்கத்தை இன்னும் அழகாக்கியது, நெற்றியில் அவன் இதழ் தீண்டல். சின்ன சின்னதாய் மெல்ல மெல்ல அவள் முகமெங்கும் அவன் இதழ் தீண்டல். அவன் அந்த நேரத்தில் தன்னை மறந்தான். அவளே அவன் மனதை ஆட்கொண்டாள்.

சின்ன சின்ன நடை நடந்து, மெல்ல மெல்ல அசைந்து வந்த அவன் இதழ் தீண்டல் அவள் செவ்விதழ்களை ஆட்கொள்ள, அவளும் அவனும் உலகை மறக்க, அவன் கைகள் உரிமை கொண்டாட எத்தனிக்க, சட்டென்று அவனுள் மின்சாரம்.

சரேல் என்று விலகினான். “இதை தானே நீ எதிர்பார்த்த?” அவன் அவளை கடுங்கோபமாக கேட்க, அவள் விதிர்விதிர்த்து போனாள்.

‘என்ன மாதிரியான குற்றச்சாட்டு?’ அவள் அந்த நொடி அருவருப்பாக உணர்ந்தாள்.

 அவன் தன்னை மறந்ததை மறந்தே போனான். ‘நான் நிதானம் தவறவில்லை. இவள் என்னை தவற வைத்து விட்டாள்.’  

ஏதோ ஒன்று நிறைவேறாத கோபம் அவனுள் கிளம்பியது. அந்த கோபம் மொத்தமும் அவள் பக்கம் திரும்பியது.

‘அக்கா…’ அவன் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தான். தன் சகோதரியின் நினைப்பு அவனை முழுதாக ஆட்கொள்ள, அவள் மொத்த கோபமும் அவள் மீது பாய்ந்தது.

“நீ இதைத் தானே எதிர்பார்த்த?” அவன் விழிகள் கோபமாக இவளை பார்க்க,

‘பெண்ணை அடித்து துன்புறுத்தினால் மட்டுந்தான் கொடுமையா? இந்த செயலை என்னவென்று சொல்வது?’ அவன் செயலில் தன்னை மறந்து நின்ற அவள் ரத்த நாடிகள், அவன் சொல்லில் வெகுண்டு ருத்திர தாண்டவம் ஆட தயாரானது.

“நான் எதை எதிர்பார்த்தேன்?” அவள் அவனுக்கு சிறிதும் சளைக்காமல் எதிர்த்து கேட்டாள்.

‘எதை…’ என்ற சொல்லில் மிருதுளா கொடுத்த அழுத்தத்தில், அவன் சற்று நிதானத்திற்கு வந்தான்.

“எதை எதிர்பார்த்தேன்?” அவள் அவன் சட்டையை கொத்தாக பிடித்திருந்தாள்.

“பங்காரு…” அவன் அழைக்க, “அப்படி என்னை கூப்பிடாதீங்க” அவள் தன் காதுகளை இறுக மூடினாள்.

“இல்லை… நான்…” அவன் பேசிய வார்த்தைகளின் வீரியம் அவனுக்கு புரிந்தது.

“ப…” அவன் பேச ஆரம்பிக்க, “அப்படி நீங்க என்னை கூப்பிடாதீங்க” அவள் குரலில் உறுதி இருக்க, அவன் செய்வது அறியாது திகைத்து நின்றான்.

மின்விளக்கை அணைத்து விட்டு அவள் பேசாமல் படுத்துவிட்டாள்.

‘இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம்’ அவள் தீர்மானமாகத் தான் எண்ணினாள்.  

அவள் வேறு பக்கம் திரும்பி படுக்க, அவன் வேறு பக்கம் திரும்பி படுத்துக்கொண்டான்.

‘ஐயோ… நான் அவளை தப்பா சொல்லனுமுன்னு நினைக்கவே இல்லையே… என்னையும் மறந்து தானே அந்த வார்த்தையை சொன்னேன். அதுக்கு இப்படி பல வித அர்த்தம் வருமுன்னு நான் நினைக்கலை.’ அவன் கண்கள் கலங்கியது.

“பங்காரு…” அவன் குரல் ஏக்கமாக அழைத்தது.

“அப்படி கூப்பிடாதீங்கன்னு சொல்றேன்.” அவள் தன் அருகே இருந்த தலையணையை தூக்கி எறிந்தாள்.

அவன் மௌனமாக அந்த இருளில் தன் மனைவியை பார்த்தான். அவளின் இந்த கோபம் அவனை அச்சுறுத்தியது. அவன் நிதானித்தான்.

அவனின் இந்த நிதானம் அவளுக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது.

அவள் சொல் கேட்டு நடப்பவன் போல, “மிருதுளா, தப்புத்தான். நான் பேசினது…” அவன் பேச, “என்னை எங்க வீட்டுக்கு அனுப்பிடறீங்களா?” அவள் கேட்க, அவன் மிரண்டுவிட்டான்.

அவளை அழுத்தமாக பற்றி தன் பக்கம் இழுத்து அணைக்க முற்பட்டான். அவள் திமிறிக் கொண்டு விலகி அமர, “நான் நீ இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க மாட்டேன்.” அவன் குரலில் உறுதி இருக்க,  

அவள் அவனை யோசனையாக பார்த்தாள்.

“எனக்கு ஏதோ ஏமாற்றம்” அவன் தடுமாற, ‘என்ன ஏமாற்றம்?’ அறிந்து கொள்ள அவள் மனம் தவித்தது.

“அதை விடு…” தன் பேச்சை அங்கு நிறுத்திக் கொண்டான்.

“எனக்கு இப்படி எல்லாம் அர்த்தம் இருக்கும்னு தோணலை. நான் பேசினது தப்புன்னு உன் காலில் விழுந்துனாலும்…” அவன் கூற, அவன் உதட்டை கைக் கொண்டு மூடி, மறுப்பாக தலை அசைத்தாள்.

அவள் செய்கை அவன் யாசிக்க எத்தனித்த மன்னிப்பை தந்துவிட்டதை உணர்ந்த அவன் கண்களில் நிம்மதி.  

‘இவங்க நல்லவங்க தான். ஆனால், என்ன பிரச்சனை?’ அவள் குழம்பிப் போனாள். ‘இது வெறும் தொடக்கம் தான் என்று பாவம் அவள் அறியவில்லை!

****

மூணார் படகு சவாரி!

   அவர்கள் அந்த சண்டைக்கு பிறகு, சமாதானமாகி இதோ மூணாருக்கும் வந்து விட்டார்கள்.

  படக்கிற்கு கீழே நீர் தழும்பிக் கொண்டு இருந்தது. அந்த தழும்பலுக்கு ஏதுவாக, மேலே தென்றல் அசைந்து கொண்டு இருந்தது. அந்த தென்றல் காற்று அவளை தீண்ட, அவள் கேசம் அங்குமிங்கும் அசைந்தது.

 அந்த கேசம் அவள் முகத்தை தீண்ட அவள் ஒவ்வொவரு முறையும் அதை ஒதுக்கினாள்.

      அந்த படகு அசைய அசைய அவன் அவள் அருகே அமர்ந்து கொண்டு அவளை ரசித்து கொண்டிருந்தான். அவள் செய்கையையும் தான்.

 இம்முறை அவள் தன் கேசத்தை ஒதுக்க கை உயர்த்த, “இரண்டு பக்கமும் வீடு. நிறைய தென்னை மரங்கள். அவங்களே சின்ன சின்ன படகில் போறாங்க. ரொம்ப அழகா இருக்கில்ல?” அவன் அவள் கேசத்தை ஒதுக்கியபடி கேட்டான்.

“ம்…” அவள் தலையசைத்தாள். “இங்க சின்ன பசங்க கூட அழகா நீச்சலடிக்குறாங்க.” அவள் கூற,

“உனக்கு நீச்சல் தெரியுமா?” அவன் கேட்க, “தெரியாது…” அவள் உதட்டை பிதுக்கினாள்.

“நான் சொல்லித்தரேன்” அவன் கண்சிமிட்டி புன்னகைத்தான்.

அவள் அவனை கூர்மையாக பார்த்தாள். ‘ஆணழகன்! வசீகரமான புன்னகை. என் அருகாமையை ரசிக்கிறாங்க.’ அவள் அவனையோ, அவன் அருகாமையையோ ரசிக்காமல் அவனை அளவிட்டு கொண்டிருந்தாள்.

‘ஆனால், இது இவங்க இல்லை. நல்லவங்கத்தான். ஆனால்…’ அவள் எண்ணங்கள் பல கோணங்களில் சிந்தித்தது.  

‘அம்மா கிட்ட எல்லாத்தையும் சொல்ல முடியாது. நாசூக்கா அம்மா கிட்ட இவங்க அக்கா பத்தி சொன்னதுக்கு… ஒரு குழந்தை வந்தால் எல்லாம் சரியாகிரும்முனு சொல்றாங்க’ அவள் விழிகள் சுருங்கி சிந்தையை காட்ட,

“என்ன யோசனை பங்காரு?” அவன் அக்கறையோடு கேட்டான்.

‘எனக்கு ஒரு குழந்தை வந்தால், எல்லா பிரச்சனையையும் தீர்த்து விடுமோ?   இவங்க கிட்ட பேசணும். ஊரில் சண்டை தான் வருது. இங்க புது இடம். வெளியிடம் சண்டை போட மாட்டாங்க” அவள் மெதுவாக பேச எத்தனிக்க,  

“மாமா…” அவர்களுக்கு இடையில் வந்து அமர்ந்தாள் சிந்துஜா.

“சிந்து…” அவன் உலகம் குழந்தையோடு மாறி போனது.

மிருதுளா சிந்துவின் முகத்தை பார்த்தாள். அந்த சிறுமியின் முகத்தில் குழந்தைத்தனம்.  

‘சிந்து வேணும்ன்னு எதுவும் செய்யலை.’ அவள் தன் கணவனின் அக்கா மகளை தன் குழந்தையாக பாவித்து கணக்கிட்ட ஆரம்பித்தாள்.

‘இவங்க ஒரு அக்கா கொண்டு. இவங்க அக்கா தன் தம்பியை வைத்து, தன் மகளை எனக்கு இடைஞ்சல் கொடுக்கிறாங்க. இது என்ன நாத்தனார் குணமா?’ அவள் யோசனையோடு தன் மருமகளை பார்த்து புன்னகைத்தாள்.

தன் அத்தையின் புன்னகையில் சிந்துஜாவும் மிருதுளாவை பார்த்து புன்னகைத்தாள்.

அத்தையின் சிரிப்பில், மாமாவிடம் எடுத்துக்கொண்ட உரிமையை தன் அத்தையிடமும் எடுத்துக் கொண்டாள் சிந்துஜா.

மாமாவிடம் பேசினாலும், சிந்துஜாவின் கவனம் தன் அலைபேசியில் தான் இருந்தது.

‘எப்பப்பாரு இவ கவனம் முழுக்க ஃபோனில் தான் இருக்கு. அப்படி என்ன பார்ப்பா?’ என்ற எண்ணம் தோன்ற,  அதை பார்க்க முற்பட்டாள் மிருதுளா வாய்ப்பு கிடைக்கலை.

“நான் உன் மொபைலை பார்க்கட்டுமா சிந்து?” மிருதுளா கைகளை நீட்ட, தன் அலைபேசியை கொடுத்தாள் சிறுமி.  

“ஐ ஃபோன்” மிருதுளா கண்களை விரிக்க, “மாமா தான் வாங்கி கொடுத்தாங்க” சிறுமி கூற,

“ஓ…” என்று மிருதுளா தன் உதட்டை குவிக்க, “மாமா தான் எனக்கு லேப்டாப்… அப்புறம்…” என அப்புறம் என்ற சொல்லுக்கு பின் சிறுமியின் பட்டியல் நீண்டு கொண்டே போக,

‘இவங்க தான் இவர்கள் வீட்டு பணம் காய்க்கும் மரமா? ‘ அவளுள் சந்தேகம் கிளம்பியது.

மிருதுளா சிந்துஜாவின் அலைபேசியை பார்க்க முற்பட, “என் ஃபிங்கர் பிரிண்ட் தான் பாஸ்வேர்ட்” சிறுமி கூறினாலேயொழிய, சிந்து தன் அலைபேசியை அவள் அத்தை பார்க்க அவள் உதவி செய்யவில்லை. மேலும் எதுவும் கேட்க முடியாமல் அவள் அலைபேசியை கொடுத்துவிட்டாள் மிருதுளா.

அதன் பின் பொதுவான பேச்சுக்களே வம்சிக்கும் அவளுக்கும் இடையில் இருந்தது.

“ஸ்கூல் படிக்குற பொண்ணுக்கு, எதுக்கு இவ்வளவு காஸ்டலியான ஃபோன்? ஸ்மார்ட் ஃபோனே தேவை இல்லையே” மிருதுளா கருத்து கூறி, அவனிடம் முறைப்பை பெற்றுக்கொள்ள தவறவில்லை.

அதன் பின் மிருதுளா கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டாள்.  வாயை மூடிக்கொண்டாலும், ‘சிந்துவின் அலைபேசியில் என்ன தான் இருக்கோ, எப்பப்பாரு அதை நோண்டிகிட்டே இருக்கா’ என்ற எண்ணத்தை அவளால் தடுக்க முடியவில்லை.

அன்று தான் மூணாருக்கு வந்திருந்தார்கள். படகு சாரி முடிந்ததும், இருட்டியது. மலையோர இருட்டில், பயணக் களைப்பில் மிகவும் சுற்ற வேண்டாம் என்று அறைக்கு திரும்பினார்கள்.

அறைக்கு வந்த சில நிமிடங்களில், சிந்துஜா உறங்கிவிட்டாள். வம்சி குளிக்க செல்ல, சிந்துவின் கை ரேகையை வைத்து தன் மருமகளின் அலைபேசியை அன்லாக் செய்துவிட்டு அதை பார்க்க ஆரம்பித்தாள் மிருதுளா.

‘மற்றவர்கள் அலைபேசியை பார்ப்பது தப்போ?’ என்ற கேள்வி அவளுள் எழ, அவளிடம் மெல்லிய தடுமாற்றம்.

‘ஒரு சின்ன பொண்ணு. அதுவும் எப்பப்பாரு மொபைல் பார்க்குறா. அவங்க வீட்டில் யாரும் அவளை கண்டுக்குற மாதிரி தெரியலை. இவங்களும் நம்ம சொல்றதை காது கொடுத்து கேட்க மாட்டேங்குறாங்க. நான் பாக்குறதில் தப்பில்லை. ஏதாவது தப்பா இருந்தா பார்க்க வேண்டிய பொறுப்பும் எனக்கு இருக்கு தானே?’ தன்னை தானே சமாதானம் செய்து கொண்டு அவள் அலைபேசியை நோண்ட ஆரம்பித்தாள்

‘எவ்வளவு அப்ப்ஸ்!’ அவள் அதை திறக்க முற்படுகையில் அனைத்தும் பாஸ்வர்ட் கேட்க, ‘எதுக்கு இத்தனை பாஸ்வர்ட்?’ அவள் புருவம் நெரிந்தது.

அவள் அலைபேசியை பார்க்கும் முயற்சியில் தோற்று போக, அவள் முகம் வாடியது.

 “என்ன ஒரு மாதிரி இருக்க? என்ன வேணும்?” அவன் தன் முகத்தை துடைத்தபடி அவள் முன் நிற்க, பட்டென்று சிந்துவின் அலைபேசியை பின்னே மறைத்துக் கொண்டாள்.

‘கண்டு கொள்வானோ?’ அவளுள் பதட்டம் அதிகரிக்க, அவள் முகத்தில் வியர்வை முத்துக்கள்.

சட்டென்று அமர்ந்து அலைபேசியை மெத்தையில் வைத்தாள்.

“எதுவும் பிரச்சனையா? என்ன வேணும்ன்னு கேட்டேன்?” அவன் அக்கறையோடு கேட்க, ‘ம்… க்கும்… பிரச்னையை சொன்னால், புரிஞ்சிகிட்டு தான் மறுவேலை பார்ப்பீங்க’ எண்ணம் தோன்ற,  “என்ன வேணும்ன்னாலும் தருவீங்களா?” அவள் தன் தவறை மறைக்க சமரசம் பேசினாள்.

“என் பங்காருக்கு என்ன வேணும்? பங்காரு கேட்டு நான் இல்லைனு சொல்லுவேனா?” அவன் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.

அவள் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்தது. ‘குழந்தை வந்தால் எல்லாம் சரியாகிரும்.’ அவள் மனதில் ஆழப் பதிருந்திருந்த ஆசை, தீர்வு அந்த பதட்டத்தில் அவள் வார்த்தையாக வெளி வந்தது.

“குழந்தை…” அவள் கூற, அவன் அவளை திடுக்கிட்டு பார்த்தான்.

மயங்கும்…

Leave a Reply

error: Content is protected !!