மயங்கினேன் பொன்மானிலே – 7

பொன்மானிலே-a42d2d0a
மயங்கினேன் பொன்மானிலே

அத்தியாயம் – 7

“மாப்பிள்ளை வாங்க… வாங்க…” மிருதுளாவின் பெற்றோரின் முகத்தில் அத்தனை உற்சாகம்.

அவன் தலை தன் மாமியார் மாமனார் அழைப்புக்கு இணங்கி அசைய, அவன் கண்களோ தன் மனையாளை மேலிருந்து கீழ் வரை தழுவிக் கொண்டது.

ஒரு நாள் இரவில் அவளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை அவன் மனம் உறுதி செய்து கொள்ள, அவன் கண்கள் ஒரு நொடி நிம்மதியை வெளிப்படுத்தி அவள் முகத்தை காதலோடு ஏக்கத்ததோடு தழுவியது.

மிருதுளா தன்னை சுதாரித்து கொள்ள நேரம் எடுத்துக் கொண்டாள். அவள் கால் அருகே கீழே ஒரு பெரிய கல் இருந்தது.

‘இந்த கல்லை எடுத்து போட்டு இவன் மண்டையை உடைத்தால் என்ன தவறு?’ என்ற கோபம் அவளுள் ஏற, அவள் அவனை உக்கிரமாக பார்த்தாள்.

“பங்காரு…” அவன் ஆசையாக அவள் அருகே வந்தான்.

தன் மகளின் மனநிலை அறிந்தவர்கள் போல், “மாப்பிள்ளை நீங்க வீட்டுக்குள்ள வாங்க” அவள் பெற்றோர் முந்திக் கொண்டனர்.

மிருதுளாவின் கண்கள் அவனை அளவிட ஆரம்பித்தது.

‘இவன் என்னை விட மாட்டான். இவனை நான் அலறி அடித்து ஓட வைக்க வேண்டும்’ அவள் முகத்தில்அவனுக்கு சவால் விடும் விதமாக புன்னகை.

“அம்மா, நான் உங்க மாப்பிள்ளையை உள்ள கூட்டிட்டு வரேன்” அவள் புன்னகையோடு கூற, அவர் முகத்தில் பரம திருப்தி. மிருதுளாவின் தாய், தந்தை இருவரும் உள்ளே சென்று விட்டனர்.

ஆனால், வம்சி கண்களில் சந்தேக வித்து.

“பாவா…” அவள் உரிமையோடு அழைத்து கொண்டு அவன் அருகே செல்ல, அவன் கண்கள் சுருங்கியது.

“உங்களை நான் இனி பாவான்னு கூப்பிடலாமுன்னு தான் இருக்கேன்.” என்றாள் உதட்டை பெரிதாக்கி புன்னகையோடு.

அவன் பேசவில்லை. ‘இது என்ன புது மாற்றம்?’ அவனுக்கு புரியவில்லை.

“இந்த பாவாக்கு என்ன அர்த்தம்முனு யோசிக்குறீங்களா?” நீட்டி முழக்கினாள் மிருதுளா.

“அந்த… ‘பா…’ வின் உச்சரிப்பை மாத்துங்க. ‘அடப்பாவி’ மாதிரி ‘அடப்பாவா…’ என் குழந்தையை கொலை செய்த கொலைகார பாவான்னு அர்த்தம். பாவா” அவள் இனிமையாக கூற, “ஏய்…” அவன் கர்ஜித்தான்.

“ஷ்… இந்த ஏய், ஒய் அப்படின்னு மிரட்டுற வேலை எல்லாம் இனி என்கிட்டே வேண்டாம்” அவள் அவனை மிரட்டினாள்.

“நான் உன் வீட்டில் வாழ வரலை. நீ என் வீட்டில் நான் வேணுமுன்னு வந்து நிக்குற.” அவள் பேச்சு கோபத்தில் ஒருமைக்கு மாறி இருந்தது.

“பங்காரு, நீ கோபத்தில் இருக்கிற.” அவன் கூற, “கொலை செய்யும் அளவுக்கு கடுங்கோபத்தில் இருக்கேன் பாவா” அவள் அவனை திருத்தினாள்.

“என்னை நீ பாவான்னு கூப்பிடு நான் கேட்கலை” அவன் எறிந்து விழ, “எனக்கு உங்களை அப்படித்தான் கூப்பிட பிடிச்சிருக்கு.” அவள் அவனை கடந்து காரை சுற்றி வந்தாள்.

“உங்க அக்கா, அக்கா பொண்ணு வரலையா? ஐயையோ” அவள் சோகம் போல் “உச்…” கொட்டினாள்.

“சனிமூன்… சாரி… சாரி… ஹனிமூனுக்கு கூட வருவாங்களே… இன்னைக்கு ஏன் வரலை?” அவள் புருவங்களை உயர்த்த, அவன் இவளை மௌனமாக பார்த்தான்.

“நீங்க இப்படி வந்தா, உங்களை வெள்ளை காக்கா தூக்கிட்டு போய்டுமே. உங்க அக்கா, தம்பி இல்லாமல் என்ன பண்ணுவாங்க?” அவள் அப்பாவியாக கண்ணை சிம்மிட்ட,

“மிருதுளா, என்ன பேச்சே ஒரு தினுசா இருக்கு” அவன் குரல் கோபத்தை வெளிப்படுத்த, “பாவா…” அவள் ஆரம்பிக்க, “அப்படி என்னை கூப்பிடாதன்னு சொன்னேனிலை” அவன் எரிந்து விழ,

“சரி… கூப்பிடலை…” அவள் கைகளை அசட்டையாக அசைத்தாள்.

“என் குழந்தையை அழிச்ச கொலைகார பாவியே…” அவள் நீட்டி முழக்கி, மூச்செடுத்துக் கொண்டாள்.

 “எனக்கு தொண்டை வலிக்குது. இவ்வளவு பெரிய பேரை நான் எப்படி கூப்பிடறது? ‘பாவா’ சிம்பிளா நீட்டா ஈஸியா அதை விட உங்களுக்கு பொருத்தமா இருக்கு. நான் அப்படித்தான் கூப்பிடுவேன்” அவள் நிறுத்த,

“எனக்கு பிடிக்கலை” அவன் கூற, “எனக்கு பிடிச்சிருக்கு. இனி என் வாழ்க்கை என் பிடித்தம் போல் தான் இருக்கும்.” அவள் முடித்துவிட்டாள்.

அவன் எதுவும் பேசவில்லை.

“ம்… பாவா… என் பேச்சு ஏன் ஒரு தினுசா இருக்குனு கேட்டீங்களே?” அவள் பேச, “ரொம்ப அதிகமாகவும் இருக்கு.” அவன் அழுத்தமாக கூறினான்.

“ம்… கரெக்ட். இது தான் நான். இப்படி தான் நான் இருந்தேன். பல பொண்ணுங்க பிறந்த வீட்டில் இப்படி தான் இருப்பாங்க. அப்புறம் தான் மாமியார் நாத்தனார் அப்படின்னு சுண்டக்காய் விஷயத்துக்கெல்லாம் பயப்பட ஆரம்பிச்சிடுறாங்க. ஏன் தெரியுமா?” கோபமாக ஆரம்பித்தாலும், அவள் குரல் வருத்தமாக அவனிடம் கேள்வியை எழுப்பியது.

அவள் வருத்தத்தின் குரல் அவனை தீண்ட, “பங்காரு…” அவன் குழைவோடு அழைக்க, ‘இல்லை, மிருதுளா… நீ மிருதுளா வம்சி இல்லை. மிருதுளா… மிருதுளா மட்டுந்தான்’ தன்னை தானே திடப்படுத்திக் கொண்டாள்.

“குடிகாரனா இருந்தாலும் புருஷன் வேணும். அம்மா கொடுக்கா இருந்தாலும் புருஷன் வேணும், அக்கா கொடுக்கா இருந்தாலும் தங்கை கொடுக்கா இருந்தாலும் புருஷன் வேணும்… கோபக்காரனா இருந்தாலும் புருஷன் வேணும்… அவளுக்காக வேணுமிங்கறது ரெண்டாம் பட்ச்சமா இருந்தாலும் இந்த சமுதாயத்துக்காக வேணுமுன்னு நினைக்குறா பாருங்க அங்க தான் அந்த பொண்ணு தன் சுயத்தை இழக்குறா…” அவள் நிறுத்தி, மறுப்பாக தலை அசைத்தாள்.

“இழக்கலை… மறச்சி வச்சி… வச்சி… அதுவே அவ குணமா மாறிடுது. உங்களுக்கு அடங்கி போறது என் குணமா மாறதுக்குள்ள நான் விழிச்சிட்டேன்” அவள் கூற, அவனிடம் மௌனம்.

“மாப்பிள்ளையை உள்ள கூட்டிகிட்டு வாம்மா” உள்ளே இருந்து குரல் கொடுக்க, “பாவா… உள்ள வாங்க.” அவள் அழைக்க, அவன் கடுப்பாக பார்த்தபடி தன் காலடியை வீட்டுக்குள்ளே வைக்க எத்தனித்தான்.

“உங்க குழந்தையை அழிச்சி சாதனை எல்லாம் பண்ணிருக்கீங்க. அதுக்கு விருந்து வைக்க வேண்டாமா? உள்ள வாங்க” அவன் உள்ளே நுழையும் பொழுது அவள் அவனை வார்த்தைகளால் குத்தினாள்.

“மாப்பிளை… குளிச்சிட்டு வாங்க. சாப்பாடு எடுத்து வைக்குறேன்” மிருதுளாவின் தாயார் கூற, அவன் அவர்களுக்கான அறையில் குளிக்க சென்றான்.

மிருதுளா வேறொரு அறையில் குளித்துவிட்டு ஹாலில் அமர, “உன் ரூமுக்கு போ.” அவள் தாயார் அவளை விரட்டினார்.

அவள் அவர்கள் அறைக்குள் சென்று, தீவிரமான யோசனையில் இருந்தாள்.

‘அம்மா, அப்பா உடல் நிலை நினைத்து நான் இப்படி அமைதியா இருக்கிறது நல்லதில்லை. அப்பா, அம்மா கிட்ட பக்குவமா பேசி அவங்களுக்கு நடந்ததை கூறி நான் விவாகரத்து வாங்கணும்.’ அவள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.

‘விவாகரத்து பெரிய முடிவு. இதை எப்படி பேசி எப்படி புரிய வைப்பது’ அவள் தீவிர சிந்தனையில் உலகத்தை மறந்தாள்.

அவன் குளித்து முடித்து துண்டை தன் தோள்களில் போட்டபடி அவள் பின்பக்கத்தில் நின்றான். அவள் அவனை கவனிக்கவில்லை.

அவள் தலைக்கு குளித்திருந்தாள். அவள் கூந்தல் இடை வரை தொங்கி கொண்டிருந்தது.

அவன் அவளை ஆழமாக பார்த்தான். அவன் கண்கள் அவள் தேகவடிவை ரசித்துக் கொண்டது.

மெல்ல மென்மையாக நடந்து அவள் அருகே வந்தான். அவள் தலை முடியிலிருந்து வழிந்த நீர் துளி, அவள் கழுத்தில் தவழ்ந்து, அவள் முதுகை தீண்டி அவள் இடையை தொட்டது.

நீர்த்துளி தழுவிய இடத்தை அவன் கண்கள் தழுவ பார்வை தீண்டிய இடத்தை அவன் விரல்களும் தீண்ட விழைந்தது.

விரலின் ஆசைக்கு ஏற்ப, அவன் அவளை தீண்டாமல் நீர்துளியை தீண்டி விளையாடினான்.  

‘தொட்டா ராட்சசி ஆகிருவா?’ அவன் பெருமூச்சு விட, அவன் சுவாச காற்றில் அவள் சட்டென்று திரும்பினாள்.

நீர்த்துளியில் மயங்கி நின்ற அவன், அவள் முகமென்னும் முழுமதியில் முழுதாய் மயங்கி போனான்.

சட்டென்று, அவளை இழுத்து தன்னோடு அணைத்து ஆசையோடு ஆரத்தழுவினான்.

“பங்காரு… பங்காரு…” அவன் அழைப்பு அவன் தேடலை, அவள் பிரிந்து விடுவாளோ என்ற ஏக்கத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

அவள் இறுகி நின்றாள்.

“நீங்களா விலகிடுங்க. இல்லை உங்களை அடிச்சிருவேன்.” அவள் குரல் ஆணையாக வெளிவந்தது.

அவன் அவளை தள்ளி நிறுத்தினான். அவள் முன் தன் கன்னத்தை நீட்டினான்.

“அன்னைக்கும் நீ என்னை அடிச்ச. நான் வாங்கிக்கத்தானே செஞ்சேன் பங்காரு. என் மனசறிந்து நான் எந்த தப்பும் பண்ணலை. ஆனால், உனக்கு என் மேல் கோபம். என்னை அடிச்சா உன் கோபம் குறையுமுன்னா அடி. என்னை அடி…” அவன் அவள் கைகளை எடுத்து அவன் கன்னத்தில் அறைந்து கொண்டான்.

அவள் கைகளை உறுவிக்கொள்ள முயன்று தோற்று போனாள். அவன் பிடிமானம் இறுகி இருந்தது.

“நான் என்ன செய்தால் உன் கோபம் குறையும்?” அவன் கேட்க, “எனக்கு டைவர்ஸ் கொடுங்க. நான் உங்க முகத்தை பார்க்கவே கூடாது” அவள் அழுத்தமாக கூறினாள்.

“பங்காரு… அது ஒரு நாளும் நடக்காது. உன் கோபத்தை நான் தாங்கிப்பேன். ஆனால், உன் பிரிவை இல்லை. எனக்கு உன்னை பிடிக்கும். உன்னை மட்டும்தான் பிடிக்கும். நீ இல்லைனா, நான் இல்லை. நான் உன் மேல் வைத்திருக்கும் பாசம் நிஜம். நீ தான் எனக்கு எல்லாம்” அவன் கூற, “அப்ப உங்க அக்கா?” அவள் கேட்க,

“இது என்ன கேள்வி பங்காரு. அவங்க என் அக்கா அவ்வளவு தான்” அவன் கூற,

“இது சரிப்பட்டு வராது. நான் இப்பவே அம்மா, அப்பா கிட்ட பேசி இந்த விஷயத்துக்கு ஒரு முடிவு கட்டறேன்” அவள் மடமடவென்று கதவருகே செல்ல,

“மிருதுளா… மிருதுளா…” அவள் அறையின் கதவை வேகமாக தட்டினார் மிருதுளாவின் தாயார்.

இருவரும் பதறிக்கொண்டு வெளியே வர, “மிருதுளா உங்க அப்பா மூச்சு பேச்சில்லாமல் கிடக்குறாங்க” அவர் தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.

சட்டென்று அவரை தூக்கிக்கொண்டு காரில் ஏறினான் வம்சி. “அத்தை, அழாதீங்க. மாமாவுக்கு ஒன்னும் ஆகாது.” அவன் தைரியம் கூறிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.

மிருதுளா அங்குமிங்கும் அலைய, “நீயே ரெஸ்ட் எடுக்கத்தான் இங்க வந்திருக்க. ஓர் இடத்தில பேசாம உட்காரு” அவன் அதிகாரமாக கூறினான்.

“இதை சாக்கா வச்சிக்கிட்டு என்கிட்டே ஒட்டிக்கலாமுன்னு பார்க்கறீங்களா?” அவள் பற்களை நறநறக்க,

” உன்கிட்ட ஒட்டிக்க எனக்கு சாக்கு போக்கெலாம் வேண்டாம் டீ. நீ என் மனைவி. என் பங்காரு” அவன் கர்வமாக கூறினான்.

“அம்மா, அப்பா முகம் தெரியாமல் வளர்ந்தவன் நான். என் அக்கா, அவ தான் என் அக்கா… என் அம்மா… என் அப்பா… அவ மனசே கோண கூடாதுன்னு நினைக்குறவ நான். உங்க அம்மா, அப்பாவை நான் நம்ம கல்யாணம் முடிந்த நாளிலிருந்து என் அம்மா அப்பாவா தான் பார்க்குறேன். அது உனக்கும் தெரியும். அவங்களுக்கு எதுவும் ஆகணுமுன்னு நான் நினைக்க மாட்டேன்.” அவன் வார்த்தைகள் கடினமாக வந்து விழுந்தன.

“அதுவும் உன் கூட சேரதுக்கு. என் அனுமதியில் தான் நீ இங்க வந்திருக்க. என் பங்காரு சந்தோஷத்துக்கு தான் நானா உன்னை இங்க அனுப்பிருக்கேன்” அவன் சிரிப்பில் நக்கல் இருந்தது.

“நான் அக்கா இருந்தாலும், யாரும் இல்லாத அநாதை தான். அந்த சொல் கேட்டு வளர்ந்தவன் நான். என் பொண்டாட்டி அந்த நிலைமைக்கு வரணுமுன்னு நினைக்குற அளவுக்கு நான் கேவலமானவன் கிடையாது. அதே மாதிரி, என் பொண்டாட்டியை எப்படி என் கூட கூட்டிட்டு போகணுமுன்னு எனக்கு தெரியும். இந்த மாதிரி ஒரு அல்பத்தனமான காரணம் எல்லாம் எனக்கு வேண்டாம்” அவன் மடமடவென்று அவளிடமிருந்து விலகி சென்றான்.

‘இந்த பேச்செல்லாம் நல்ல வக்கணையா பேசுவான்’ அவள் முறுக்கி கொண்டு அவள் தாயருகே வந்து அமர்ந்தாள்.

கொஞ்சம் நேரத்தில் அவன் இவர்கள் அருகே வந்தான்.

“மாமாவை நார்மல் வார்டுக்கு மாத்திட்டாங்க. எதையோ நினைச்சி கவலை பட்டு ரொம்ப பீபி ஏறிடுச்சு போல. அது தான் மயங்கிட்டாங்க. நாம கொஞ்ச நேரத்தில் மாமாவை பார்க்கலாம் அத்தை. கவலை படாதீங்க” அவன் ஆறுதலாக கூறினான்.

“ஐயோ, நான் தான் பிரச்சனை மாப்பிள்ளை. சும்மா இருந்த மனுஷன் கிட்ட போய், உங்க அக்காவுக்கு குழந்தை பிறந்த பிறகு நீங்க பெத்துக்கலாமுன்னு நினைக்கறீங்களோ. அது தான் ரெண்டு பெரும் குழந்தையை கலைச்சிடீன்களோன்னு அவர் கிட்ட புலம்பினேன்.” அவர் கண்ணீர் மல்க கூறினார்.

“நீங்க சொன்னாலும், மிருதுளா உங்க பேச்சை கேட்டிருக்க கூடாதுனு நான் என் மனசில் உள்ளதை உளறி, அவரை குழப்பிட்டேன்.” அவர் பேச்சில் மிருதுளாவும், வம்சியும் அமைதியாக நின்றனர்.

“என் மனசில் உள்ளதை எல்லாம் புலம்பி நான் நல்லாருக்கேன். உங்க அப்பாவுக்கு தான்…”அவர் மீண்டும் அழ,

“அத்தை எல்லாம் சரியாகும். நீங்க போய் முதலில் மாமாவை பாருங்க.” அவன் அவரை மிருதுளா அப்பா இருக்கும் அறைக்குள்ளே அனுப்பிவிட்டு வெளியே நின்றான்.

மிருதுளா எதுவும் பேசவில்லை.

‘அப்பாவுக்கு பெருசா எந்த ஆபத்தும் இல்லை.’ அவள் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தது.

ஆனால், அவள் மீது அவளுக்கே பரிதாபமும், கோபமும் வந்தது.

‘அம்மா, அப்பாவை பார்த்ததும் எல்லாத்தையும் போட்டு உடைச்சிருக்கணுமோ?’ அவள் மீது கோபம் கொண்டாள்.

‘சொல்லிருந்தா அப்பாவுக்கு இப்படி ஆகியிருக்கும்’ அவள் மீதே பரிதாபம் கொண்டாள்.

‘எல்லா பெண்களின் நிலைமையும் இது தானா? பல வேதனைகளையும், சோகத்தையும் சுமந்து வாழ வேண்டியது தான் பெண்ணின் தலை எழுத்தா?’ அவள் கண்கள் குளமாக, தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

‘என்னால் அப்படி வாழ முடியாது. எனக்கு இந்த வம்சி வேண்டாம். இவனுக்கு அடிமையாக, இவன் அக்காவுக்கு எடுபிடியாக நான் வாழ மாட்டேன்.’ அவள் மனம் உறுதி பூண்டது.

‘இவனை எப்படி கையாளுவது? பல பெண்கள் வாழ்க்கையில் தோற்றுப்போவது பிரச்சனைகளை கையாள தெரியாமல் தான். ஒன்று அடங்கிவிடுகிறார்கள். இல்லை, பதட்டப்பட்டு எடுத்தோம் கவுத்தோமுனு சொதப்பிடுறாங்க. நான் இரண்டும் பண்ண கூடாது நின்னு அடிக்கணும்.’ அவள் தன்னை தானே திடப்படுத்திக் கொண்டாள்.

‘எனக்கு யார் தயவும் வேண்டாம். என் பிரச்சனையை நானே சமாளிப்பேன்.’ அவள் சுய சிந்தையில் மூழ்கி இருக்க,

“பங்காரு…” அவன் அழைப்பில் அவன் நிமிர்ந்தாள்.

“அத்தை, மாமா கிட்ட நான் எல்லாத்தையும் சொல்ல போறேன். உன் மேல எந்த தப்புமில்லை. நான் தான் பண்ணேன் அப்படின்னு. நான் அவங்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்யுறேன். நீ தான் என்னை புரிஞ்சிக்கலை. அவங்க என்னை புரிஞ்சிக்கிறாங்களான்னு பார்ப்போம். இல்லைனா, நான் அவங்க காலில் விழுந்தாவது மன்னிப்பு கேட்குறேன். நீ ஏன் பங்காரு என்னால் கெட்ட பெயர் வாங்கனும்?” அவன் கேட்க, அவள் அதிர்ந்து நின்றாள்.

‘இவன் மன்னிப்பு கேட்டு, அம்மா அப்பா மன்னிச்சிட்டா? நான் இவன் கூட சேர்ந்து வாழணுமா? முடியாது.’ அவள் தீர்க்கமாக அவனை பார்த்தாள்.

“என் பங்காரு யார்கிட்டையும் கெட்ட பெயர் வாங்க கூடாது. நான் உன்னை யார்கிட்டையும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.” அவன் குரலில் அத்தனை உறுதி.

அவன் உறுதியில் அவள் அசந்து போனாள். 

“உங்களை உள்ள கூப்பிடுறாங்க” செவிலியர் ஒருவர் கூற, இருவரும் உள்ளே சென்றனர்.

“அப்பா…” அவர் அருகே அமர்ந்தாள் மிருதுளா.

“அம்மா ஏதாவது சொன்னா நீங்களும் நம்பிடுவீங்களா?” தன் தந்தையை பார்த்து கண்டிப்போடு கேட்டாள்.

“ஒரு குழந்தையை அழிக்கிற அளவுக்கு, நாங்க என்ன முட்டாளா? இல்லை சைக்கோவா? இல்லை லூசா?” என்று வம்சியை பார்த்தபடி கேட்டாள்.

“அதெல்லாம் நாங்க பண்ணலை அப்பா.” அவர் கூற, “இல்லை, எனக்கும் உன்னையும் தெரியும். மாப்பிள்ளையும் தெரியும். அவர் நல்ல மனசுக்கு அப்படி எல்லாம் பண்ண மாட்டார். ரொம்ப தங்கமான மனிதர்.” அவர் தன் மகளுக்கு இசை பாட்டு பாட, வம்சி தர்மசங்கடமாக நெளிந்தான்.

‘இவள் ஏன் இப்படி செய்கிறாள். காலையிலிருந்து அனைத்தும் வினோதம் தான்.’ அவன் மௌனம் காத்தான்.

மிருதுளாவின் தந்தை ஒருநாள் மருத்துவமனையில் இருப்பதாக ஏற்பாடு. வம்சியும் மிருதுளாவும் வீட்டிற்கு கிளம்ப காரில் வந்து அமர்ந்தனர்.

அப்பொழுது அவன் அலைபேசி ஒலிக்க, அதில் வம்சியின் அக்காவின் பெயர் மின்ன மிருதுளாவின் முகத்தில் ஏளன புன்னகை வந்தமர்ந்து.

அவன் அலைபேசியை எடுக்க, அவனிடமிருந்து அதை பிடுங்கினாள் மிருதுளா.

“ஹலோ, மிருதுளா வம்சி ஸ்பீக்கிங்…” என்றாள் அவனை பார்த்து கண்ணடித்தபடி.

“தம்பி இல்லையா?” எதிர்முனை கேட்க,

“உங்க தம்பி ரொம்ப பிசியா இருக்காங்க. சென்னை வர பத்து நாள் ஆகும். அப்புறம் பேசுங்க” மிருதுளா அலைபேசி பேச்சை துண்டிக்க, எதிர்முனை அதிர்ச்சி அடைந்திருந்தது.

அதைவிட வம்சி கோபத்தின் உச்சியில் இருந்தான்.

“என் கிட்ட கேட்காம, நீ என்ன பதில் சொல்ற?” அவன் சிடுசிடுக்க, “பாவா, நீங்க என்கிட்டே கேட்காம குழந்தையை…” அவள் பேசுகையில், “மிருதுளா…” அவன் காதுகளை மூடினான்.

“உன் மனசில் நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க? உனக்கு என்ன வேணும்?” அவன் கடுப்பாக கேட்க,

“ஸோ சிம்பிள். நான் உங்க முகத்தை பார்க்க கூடாது. ஐ வாண்ட் டைவர்ஸ். நீங்க என்னை வேண்டாமுன்னு சொல்லணும். மன்னிப்பு கேட்குறேன் பேர்வழின்னு அவங்களை குழப்ப கூடாது. என் வீட்டில், என்னை உங்க கூட வாழணும்முனு கட்டாயப்படுத்த கூடாது. என் கூட வாழ பிடிக்காமல் நீங்க குழந்தையை அழிச்சிட்டிங்கன்னு நான் சொல்லிப்பேன்” அவள் அசட்டையாக கூறினாள்.

“ஓ… அதுக்கு தான் நீ என்னை உங்க அம்மா அப்பா கிட்ட விஷயத்தை சொல்ல விடலை.” அவன் கண்களை இடுக்கி அவளை பார்த்தான்.

“…” அவளிடம் மௌனம்.

“உங்க அம்மா, அப்பா கிட்ட சொல்ல எனக்கு எவ்வளவு நேரமாகும்? ஆனால், நான் சொல்ல மாட்டேன். அவங்க உடல் நிலை எனக்கு முக்கியம்.” அவன் கூற,

“எனக்கு அதை விட முக்கியம். அது தான் அமைதியா இந்த விஷயத்தை நானே டீல் பண்ணறேன்.” அவள் நிதானமாக கூறினாள்.

“என்னை விட்டு போய்டுங்க” அவள் அதிகாரமாக கூற, “அது ஒருநாளும் நடக்காது” அவன் அவளை முறைத்தான்.

“நீயா கண்காணாத இடத்துக்கு ஓடினாலும், நான் உன்னை தேடி வருவேன். எனக்கு என் பங்காரு வேணும்.” அவன் உறுதியாக கூற,

“நான் உங்களுக்கு பயந்து கோழை மாதிரி ஓடணுமா?” அவள் எதிர்கேள்வி கேட்டாள்.

“நீங்க செய்தது தப்புனு உங்களை என் முன்னாடி மண்டியிட்டு கதற வைப்பேன். மனைவியை காதலிச்சா மட்டும் போதாதது. அவளை மதிக்கணுமுன்னு உங்களை கதற வைப்பேன்.” அவள் கூற,

“நான் அப்படி தான் இருக்கிறேன்.” அவன் கூறினான்.

“நீங்க அப்படி இல்லைனு உங்களுக்கு புரியும் நாள் வரும். அன்னைக்கு உங்க வாயால் இந்த பங்காரு வேண்டாமுன்னு சொல்ல வைப்பேன்.” அவள் எகிற, “உன்னால் முடியாது” அவன் சவால் விட, அவள் பார்வை அவனுக்கு சவால் விட்டது.

மயங்கும்…