மாறா காதலுடன் 4

Mk-ac2f21b0

மாறா காதலுடன் 4

  • Kadha
  • March 8, 2022
  • 0 comments

பெரிய வீடு, உடல்நலக் குறைவால் இன்று நடந்த கூட்டத்தில் ராஜநாயகம் பங்கெடுக்க வில்லை. அவருக்கு துணையாக பேச்சியம்மாள் இருந்தார். 

அனைவரும் வீடு திரும்பியதும் ராஜநாயகம் “என்னபா கூட்டம் எல்லாம் நல்லப்படியா முடிஞ்சிதா…. எல்லா வேலைக்கும் நீயே அலையாதே. பொறுப்பா யாரையாவது ஆள் நியமித்துக்கோ” என

காந்திமதி “அட போங்க மாமா… முதல் முறையா பெரிய மச்சான் பேச்சே கூட்டத்தில் எடுப்படலை. இதில் நீங்க வேற” என “என்ன நடந்தது” என்று கேட்டதும் அனைத்தையும் புட்டு புட்டு வைக்க, 

“பொட்ட புள்ளை பேச விட்டு, எல்லாரும் வேடிக்கை பார்த்தீங்களா” என்றதும், 

மாதவன் தன் மனைவி சித்தாரா காதில் “ஏன்டி உங்க தாத்தா பொண்ணு பையன்னு பிரிச்சி பேசறார். அந்த பொண்ணு கரெக்டா தானே சொல்லுச்சு” என்று தன் பிடித்தமின்மையை சொல்ல,  

சதீஷ் “மாம்ஸ் கொஞ்சம் சத்தமா சொன்னா தாத்தா காதில் கேட்கும்ல எதுக்கு அமைதியா சொல்லிட்டு தைரியமா உங்கள் கருத்தை முன் வைங்க” என்று அவனை உற்சாகப்படுத்த, நிரஞ்சனா அவன் கையை கிள்ளி “அண்ணா இவர் சொல்ற மாதிரி மட்டும் நீங்க தாத்தா கிட்ட பேசனிங்க நாளைக்கு தலைப்பு செய்தியே நீங்க தான்” என்றதும், 

அர்ச்சனா “என்ன மதனி வரும்” என்று சிரிப்பை அடக்கி கொண்டு கேட்க, அவளோ “மதுரையில் கத்தி குத்து. தன்னை எதிர்த்து பேசிய பேத்தியின் கணவனை கோபத்தால் குத்திய கொடூர தாத்தா” என

சித்தாரா “அட ச்சீ சும்மா இருங்க… அங்க பாருங்க நம்ம வீட்டு பெரியவங்க எல்லாம் கப்பல் முழுகிய மாதிரி பேசிட்டு இருக்காங்க. நீ சிரிக்கிறதை பார்த்தாங்க தண்டனை நம்ம எல்லாருக்கும் தான். ஆனா பாவம் டி சித்தப்பாவை பருங்களேன் அந்த பொண்ணுக்கு ஆதரவா பேசவும் முடியாமல் இவங்க பேசறதை தடுக்கவும் முடியாமல் சிக்கி தவிக்கிறார். சித்தி மட்டும் இருந்து இருந்தாங்க ஒருத்தரையும் பேச விட மாட்டாங்க” என, 

“உங்க குடும்பத்திலே இவங்க இரண்டு பேர் மட்டும் தான் கொஞ்சம் நல்லவர். இந்த குடும்பத்தில் இப்படி ஒரு மனிதனா என்று நானே வியந்து இருக்கேன்” என்ற மாதவனை முறைத்த சித்தாரா “கிண்டல் பண்றதை நிறுத்திட்டு அவங்களை சும்மா இருக்க எதாவது பண்ணுங்க” என்றாள். 

சதீஷும் “உங்க பவரை காட்டுங்க மாம்ஸ்” என “நம்ம குடும்பத்தை பற்றி உங்களுக்கே தெரியலை என்ன அவங்களே முடிச்சா தான் உண்டு. நம்ம தலையை கொடுத்தோம் இருக்கிற கடுப்பில் நம்ம உயிருக்கு உத்திரவாதம் கிடையாது” என்று அவர்கள் எப்போ முடிப்பார்கள் என்று சிறியவர்கள் காத்திருக்க, 

வானதி மேகநாதனின் மனைவி “அந்த பெண்ணை வீட்டில் எல்லாம் அடக்கி வைக்க மாட்டாங்களா…. எங்க இருந்தோ வந்துட்டா நமக்கு அறிவுரை கூற, உடம்பு முழுக்க திமிரு… ஆம்பளைங்களே சும்மா இருக்க அதுக்கு என்ன அக்கறை நம்ம ஊரில் மேல. ச்சை திமிரு அடங்காபிடாரி” என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேச, அர்ச்சனா விற்கு கண் கலங்கி விட்டது. 

அந்த நேரத்தில் அங்கே வந்த சத்ரேஷ் “அதுக்கு பெயர் திமிர் இல்ல பெரியம்மா தன்மானம் தன் நம்பிக்கை. என்ன நடந்திடுச்சுனு நீங்க எல்லாம் கோபப்படுறீங்க. நல்லது பொண்ணு சொன்னா என்ன பையன் சொன்னா என்ன நல்லது நல்லது தானே. அவங்க சொன்னதை செய்யறதை விட்டு சும்மா பேசனும்னு பேசாதீங்க” என்று அவனது அறைக்குள் செல்ல, கோபிநாத் திற்கு பெருமையை இருந்தது.  

அவன் பேசிவிட்டு சென்றதும் பெரியவர்கள் அமைதியாக அவரவர் அறைக்குள் செல்ல, மாதவன் “சின்ன மச்சான் அப்படியே அவங்க அப்பா மாதிரில. நீ ஏன் மச்சான் அவன் பேசன டயலாக்க பேசி அப்பவே இந்த மாநாட்டை முடிச்சி இருக்க கூடாது” என, 

“இவரா… கோபமா பேச சொன்னா சிரிச்சிட்டே பேசுவார். நான் எதாவது தப்பு பண்ணா திட்டுவார்னு பார்த்தா சிரிச்சிட்டே பரவாயில்லை விடுமா அடுத்த முறை சரி பண்ணிக்கலாம்னு சொல்வார்” என்று நக்கலாக சொல்ல, 

“அக்கா… இந்த மேடம் தான் என் பின்னாடியே வந்து என்னை இந்த குணத்திற்கு தான் காதலிப்பதாக சொல்லி, நான் மாட்டேன் சொன்னதும் அவங்க அப்பா மூலம் வீட்டில் பேசி கட்டிக்கிட்டாங்க. இப்ப பார்த்தியா… உலகத்தில் யாரையும் நம்ப கூடாது” என்று சதீஷ் சித்தாராவிடம் சொல்ல, 

“அய்யோ… சும்மா இருங்க வீட்டில் யாருக்காவது தெரிஞ்சிட போகுது” என்று சிரிப்பும் அரட்டையுமாக இருக்க இவர்களை இதழில் தவழும் புன்னகையோடு மாடியில் இருந்து பார்த்து கொண்டு இருந்தான் சத்ரேஷ். 

ஆத்ரேயா வீட்டில், மோனல் “திதீ…. ரொம்ப வருசம் கிட்டத்தட்ட நான்கு வருடம் கழித்து என் பழைய திதீயை பார்த்த மாதிரியே இருக்கு….. இந்த தீ யை நான் எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா” என்று கண்ணில் நீரொடு அவளை அனைத்து கொள்ள, ஆது “நானும் தான் மிஸ் பண்றேன் எல்லாத்தையும்” என்று பழைய விசயத்தை நினைத்த அவளது மனமோ ஊமையாக கதறியது. 

மறுநாள், கௌதம் ‘எப்பவும் இல்லாத அதிசயமாக அதிகாலையே வீட்டுக்கு வாடா என்றால் என் தூக்கம் என்ன ஆகிறது. கஷ்டப்பட்டு கனவில் அப்ப தான் என் தேவதையை கட்டி பிடிக்க போனேன். அது எப்படி தான் இவனுக்கு தெரிந்ததோ’ என்று பலமாக புலம்பித் தள்ளி கொண்டு வண்டியை பெரிய வீடு முன் விட்டு உள்ளே செல்ல வேகமாக காலடி எடுத்து வைக்க, தன் மேல் மோதிய புயலில் சீக்கி கொண்டான். 

கனவில் கேட்ட விசயம் நிஜத்தில் நடக்க இன்பமாக அதிர்ந்து தான் போனான். “பிடி பிடி…. அடேய் ஒழுங்கா பிடிச்சு தாக்கு…. முன்னாடி மனிசன் வரது கூட தெரியாமல் எந்த லோகத்தில் இருக்க எருமைமாடே” என்று அர்ச்சனா கத்த, அவன் எங்கே இவள் கத்தியதை எல்லாம் கேட்டான். அவன் தான் எப்போதோ சொர்க்கத்திற்கு சென்று விட்டானே. 

தான் பேசுவதை அவன் கவனிக்க வில்லை என்பதை உணர்ந்து ஆசையாக வளர்த்த நகத்தில் அரை கிலோ சதையை கிள்ளி எடுத்து விட்டாள். “ஆ!!!!!!” என்று அலறி அவளை நகர்த்தி வைத்து முறைக்க, “என்ன முறைப்பு… கேட்க மறந்துட்டேன் என் கிளாஸ்மேட் கௌரி உன்னை லவ் பண்றதை சொன்னால், நீ என்னமோ மன்மதன் ரெஞ்சுக்கு பேசி அவளை என்ன சொன்ன டா எருமை. அப்ப இருந்து அவ என்னை கண்டுக்கவேல்லை நானா பேசினாலும் முறைச்சிட்டே போய்டுறா” என்று அவன் தலையில் கொட்ட, 

‘அதை மட்டும் நீ தெரிஞ்சிக்கிட்ட நான் சமாதியாகி இருப்பேன் டி என் செல்லாகுட்டி’ என்று அன்று நடந்ததை நினைத்தான். 

வழக்கம் போல் அர்ச்சனாவை தூரத்தில் இருந்து சைட் அடிக்க அவள் கல்லூரியில் இருந்து கொஞ்சம் தொலைவில் இருக்கும் பேக்கரியில் அமர்ந்து இருக்க, அதிசயாமாக அவளே அழைத்து கல்லூரி அருகே வர சொன்னாள். 

பல கற்பனையோடு அவள் முன்னே நிற்க, அவளோ “எரும…. அங்க நிற்கிறா பாரு அவ என் ப்ரெண்ட் கௌரி” என “சரி அதை விடு என்னை எதுக்கு வர சொன்ன” என்று பிரகாசமாக கேட்க, “இருடா நாயே சொல்றதை முழுசா கேட்காமல், அவளுக்கு இந்த இத்து போன முஞ்சை தான் பிடிச்சு இருக்காம். உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பாளாம். போய் அவ கூட பேசி சிங்கிள் ல இருந்து மிங்கிள் ஆகிடு” என்று சாதாரணமாக கூற, 

ஒட்டி வைத்த இதயம் தூள் தூளா சிதறி போச்சு. ‘அடிபாவி… மீசை முளைக்கும் முன்ன இருந்து ஆசை ஆசையா காதலிச்சா… நல்லா பண்ற மேன் நீ!! கடவுளே இந்த மரமண்டையை… ச்சை ஒன்றும் சொல்ல கூட மனசு வர மாட்டேன்து’ என்று கதறிய மனதை சமாளித்து கொண்டு “நான் அவங்க கிட்ட பேசிட்டு வரேன். வெயிட் பண்ணு வீட்டில் விட்டு நான் போறேன்” என்றதும் அவளும் வெளியே சென்று இவனுக்காக காத்திருக்க, 

கௌதம் “ஹலோ கௌரி…. நீங்க என்னை லவ் பண்றீங்கனு அச்சு சொன்னால் பட் ஐ அம் ஸாரி. உங்களை நான் எப்படி டிஸ்டப் பண்ணேன்னு தெரியலை. நானும் அச்சுவும் ரொம்ப நாளா லவ் பண்றோம். அவ படிப்பை முடிக்க தான் வீட்டில் வெயிட் பண்றாங்க. அவ கிட்ட இனி இதை பற்றி பேசாதே. உன்னால எங்க உறவில் பாதிப்பு வர நான் விரும்பலை” என்று கடுமையாக சொல்ல, அவளோ ஏமாற்றத்துடன் “ஸாரி” என்று அவள் சொன்னதும் போனதோடு சரி அதன் பின் கல்லூரி பக்கமே அவன் செல்வது இல்லை. 

“டேய் கௌதம் வா வா…” என்று சதீஷ் அழைத்ததும் இருவரும் உள்ளே சென்றனர். 

தயாராகி வந்த சத்ரேஷ் “அச்சு… நான் காலேஜ் பக்கமா தான் போக போறேன் வா நான் விடுறேன்… டேய் வா டா கிளம்பலாம்” என்று கௌதமை இழுத்து கொண்டு காரிடம் செல்ல, “சாப்பிடாமல் கிளம்பற… இருடா சாப்பிட்டு கிளம்பு” என்று கத்தும் தாயை கவனித்தால் தானே. 

காரை வேகமாக ஓட்டி வந்து கல்லூரிக்கு சில தூரம் முன் நிறுத்தி “அச்சு…. இறங்கி இங்க இருந்து நடந்து போய்டு” என்றதும் கொலைவெறியுடன் அவனை முறைத்து விட்டு பக்கத்தில் தூங்கி வழிந்த கௌதம் மண்டையை கொட்டி விட்டு சென்றாள். 

“ஆ… பைத்தியம்…. நீ ஏன்டா வண்டியை இங்கவே நிறுத்தி இருக்க” என்ற இவனின் கேள்வியை கிடப்பில் போட்டு கண்ணை சாலையில் அலைய விட்டான். ‘என்ன பண்றான் இவன்’ என்று புரியாமல் கௌதம் முழிக்க, முகம் முழுக்க புன்னகையுடன் “மாமா அங்க பாரு” என்று கையை காட்ட, அவன் காட்டிய திசையை நோக்கியவன் அதிர்ந்தே விட்டான். 

“அடேய்… நீ சும்மா சொல்றனு தான் நான் நேற்று நினைத்தேன். என்னடா அந்த பெண்ணை பார்க்கவா நாம இங்க வந்திருக்கோம்” என்று கேள்வியுடன் அவனை பார்க்க, 

அவள் கல்லூரி உள்ளே சென்று மறையும் வரை கௌதமை அவன் கண்டுகொள்ளவில்லை. ஏக கடுப்பில் அமர்ந்து இருக்கும் கௌதமை பார்த்து “அவ என்னை என்னமோ பண்றா டா மாமா. அவளை பார்த்ததில் இருந்து வேற பெண்ணை சும்மா கூட பார்க்க கண்ணு போகலை” என்று இதயத்தை தட்டி கொண்டு சொல்ல, 

“பார்த்து ஒரு வாரம் கூட முழுசாக முடிந்து இருக்காது பேச்சை பாரு… இவன் இத்தனை வருசமா வெளிநாட்டில் இருக்கான். இதை எல்லாம் என்னை நம்ப சொல்றான். இன்னும் என்னை பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இரு” என்று கொஞ்சம் சத்தமாக முணுமுணுக்க, 

“மாமா அதோ என் பர்ஸ் இருக்கே எடு” என்றதும் கௌதம் மனதில் ‘நம்ம பேசனதில் கோபப்பட்டு பாவம் பார்த்து காசை கொடுத்து வெளியே தள்ள போறானா’ என்று அவனை புரியாமல் பார்க்க, 

பர்ஸ் சில் இருந்து மெல்லிய சங்கிலியை எடுத்து “இது யாருடையதுனு தெரியுமா” என்று சிறு புன்னகையை இதழில் தவழ விட்டு கேட்க, ஒரு நிமிடம் புரியவில்லை தான் அடுத்த நிமிடமே “டேய் மச்சான் இந்த பெண்ணோட செயினா…. டேய் தங்கம் டா… தங்கம் விற்கிற விலையில் எடுத்து வைக்க உனக்கு வேற பொருளே கிடைக்கலையா” என்று விழி விரித்து கேட்க, 

“அவளுடையது தான் செயின் இல்ல கொலுசு. அதை விட முக்கியமான விஷயம் இது என் கிட்ட வந்து ஐந்து வருசம் ஆகுது” என்று கொலுசை வருடிய படி சொல்ல, 

“அட கிரகம் பிடிச்சவனே… உன் கூடவே தானே நானும் சுற்றினேன். எனக்கு தெரியாமல் எப்படா” என்று கேள்வியாக பார்க்க, 

“ஐந்து வருடம் முன்னாடி நம்ம சீனியர் அப்துல் அண்ணா கல்யாணத்திற்கு அந்த எருமமாடு என் அண்ணா கல்யாணம் னு என்னை இழுத்துட்டு போனானே நீ கூட உங்க அம்மா பக்கம் யார் கல்யாணத்துகோ போனியே அப்ப” என்று ஐந்து வருடம் முன் அவனுக்கு இந்த கொலுசு கிடைத்த நிகழ்வை மனம் நினைத்து பார்த்தது. 

ஊட்டி, உதகை என்று அழைக்கப்படும் உதகமண்டலம், கொளுத்தும் வெயில் காலத்திலும் தேகம் சிலிர்க்க வைக்கும் தட்பவெப்பநிலையுடன் வருவோருக்கு மகிழ்ச்சியை வாரி வழங்கும் டூரெட்ஸ் பிளேஸ். 

சத்ரேஷ் “ஒரு பிரியாணிக்கு ஆசைப்பட்டு இவ்வளவு தூரம் வந்தா கூட்டிட்டு வந்த லூசு எங்க போச்சுனு தெரியலை… அதை விட இங்க யாரையும் தெரியலை. இவனை நம்பி வந்ததுக்கு என் புத்தியை செருப்பாலே அடிக்கனும்” என்று போனும் கையுமாக புலம்பி தள்ள, அவனை தாக்கியது ஒரு தென்றல். 

கீழே தரையில் மட்ட மல்லாக்க அவன் படுத்து கிடக்க, அவனின் மேல் சகல அலங்காரத்துடன் ஒவிய பாவையாக விழுந்து “நான் வர மாட்டேன் மாட்டேன்…. நீங்கள் எல்லாம் போய்ட்டு வாங்க” என்று அவனின் சட்டையை இறுக்க பற்ற, 

“பாயல் குட்டி ப்ளீஸ் டா இந்த அப்பாக்காக மூக்கு குத்திக்கோ டா…. உனக்கு மூக்குத்தி போட்டால் நல்லா அழகா இருக்கும். அதுக்கு முன்ன பாவம் மா அந்த மனுசன் எவ்வளவு நேரம் தான் உன்னை சுமப்பார்” என்று அவள் எழ கையை கொடுக்க, 

எழுந்த அடுத்த நொடி அவர் கையை உதறி விட்டு “கையை கொடுத்த உடனே நேராக நீங்க எங்க இழுத்துட்டு போவீங்கனு எனக்கு தெரியும். என்னை யாராலும் ஏமாற்ற முடியாது. என் மூக்கை பஞ்சராக எல்லாருக்கும் எவ்வளவு ஆர்வம். எல்லாத்துக்கும் காரணம் கல்யாண பொண்ணு தானே. அடியே ஷாகின் சைத்தான் வரேன் டி வரேன்” என்று தகப்பனையும் பார்க்க வில்லை. தன்னை பூமிக்கு காவு கொடுக்காமல் காத்த நபரையும் பார்க்க வில்லை. வேகமாக ஒடி விட்டாள். 

அவள் தந்தையோ “ஸாரி தம்பி” என்று அவள் பின்னே சென்று விட்டார். ஆனால் அவர் அழைத்த பாயலோ அவளது பாயலை (கொலுசை) இங்கவே தவற விட்டு சென்றாள். 

“அவங்க கொலுசு விழுந்து விட்டது போல” என்று அதை கொடுக்க அவர்களை தேடும் சமயம் அவனது கைபேசி அலறியது. தாத்தாவை ஹாஸ்பிடலில் சேர்த்து இருப்பதாக தகவல் வந்ததும் பறந்து விட்டான். 

“ஐந்து நிமிடங்கள் கூட இல்ல… ஆனால் இந்த ஐந்து வருசமா அவளை நான் தேடாத இடமே இல்லை. பாயல் என்ற பெயரில் இந்தியாவில் மட்டும் அல்ல நான் போன ஆஸ்திரேலியா வில் கூட தேடி பார்த்தேன். கிடைக்கவே இல்லை. நீங்கள் எல்லாரும் கேட்டிங்க எதுக்கு சென்னை போய்ட்டு வர நேராக மதுரை வர வேண்டியது தானே னு…. என் மனசு சொல்லுச்சு அங்க போனால் அவ கிடைப்பானு சென்னை முழுக்க தேடி மனசு வெறுத்து மதுரை விமானத்தில் ஏறினேன். 

கடவுள் என்னோட கஷ்டத்தை பார்த்து இந்தா பிடிச்சிக்கோனு அவளை என் பக்கத்து சீட்டில் கொண்டு வந்து இருந்தார்” என்று அவனை தாண்டி இந்நாள் வரை யாரும் அறியாத விசயத்தை சொல்ல, 

“அட பக்கி நம்ம மச்சானுக்கு தெரிந்து இருக்குமே அவன் கிட்ட கேட்டு இருக்கலாம் தானே” என்று அவர்களின் மற்ற ஒரு நண்பனை சொல்ல, 

“அவனை நான் கடைசியாக எப்ப, அந்த கல்யாணம் முடிச்சு ஒரு வாரத்தில் டிசி வாங்கி நமக்கு ஷாக் கொடுத்தானே அப்ப பார்த்தது. அதுக்கு அப்புறம் எங்க பேசினான் எங்க போனான் எதுவுமே தெரியலையே ஒரு நாள் என் கையில் மாட்ட போறான் அன்றைக்கு இருக்கு அவனுக்கு. சரி இதை விடு. நான் பார்த்த பாயல் வேற டா…. அவ முகத்தில் அழியாத புன்னகை இருக்கும். சர்வ அலங்காரத்துடன் இருந்தவ இப்ப இருக்கிற ஆத்ரேயா சின்ன பொட்டு கூட இல்லாமல் எதோ போல இருக்கா டா. கஷ்டமா இருக்கு. என்னமோ நடந்து இருக்கு மாமா. முதலில் அதை கண்டு பிடிக்கனும். என்ன கஷ்டமா இருந்தாலும் நான் அவளை தேற்றுவேன் டா” என்று அவளுக்காக வருத்தப்பட்டவனுக்கு தெரியவில்லை. காரணத்தை அறிந்தால் உடைய போவது அவன் தான். அவனையும் தேற்றி அவனவளையும் தேற்றுவானா? 

Leave a Reply

error: Content is protected !!