உதிரத்தின்… காதலதிகாரம்! 1

UKA-95e27c8c

உதிரத்தின்… காதலதிகாரம்! 1

உதிரத்தின்… காதலதிகாரம்!

காதலதிகாரம் 1

‘அக்கறை மெடிக்கல்’ மூன்று வேலையாட்களோடு, முதலாளியும் உடனிருக்க காலை எட்டரை மணி முதலே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

இருபத்து ஆறு வயதேயான இளம் முதலாளி கௌதம். அன்றைக்கு போடவேண்டிய ஸ்டாக்கை எடுத்து, அதற்கான பணிகளில் கணினி முன் மும்முரமாக அச்சடித்துக் கொண்டிருந்தான்.

ஐந்தடி ஏழு அங்குலம் ஒல்லியான மாநிற தேகம்.  வசீகரத் தோற்றமிருந்தாலும், வலையில் தானாக வந்து விழும் தையலை கண்டும் காணாமல் கடக்கும் ரகம்.

வலிய வந்து பேசுபவர்களை அலட்சியம் செய்யாமல், இரண்டொரு வார்த்தைகள் பேசி கடந்து செல்வான்.  அதற்குமேல் அவனிடம் பெண்களின் எண்ணம் பலிக்காத வகையில் நடந்து கொள்வான்.

ஜெகவசியத் தோற்றத்தினைப் பெற்றிருப்பதால், ஆண் பெண் என பாகுபாடின்றி அவனைக் கடந்து செல்லும் எவருக்கும் இதழில் மென்னகை வந்து குடியேறும் வகையில் அமைந்த ஆளுமையான ஆகர்ஷிக்கும் வதனத்திற்குச் சொந்தக்காரன்.

பணி நேரத்திலும் மென்னகையோடு பணியில் ஆழ்ந்திருந்தான்.  அவனது அருகாமையில் இருப்பவர்களும் அவனைப் பின்பற்றத் துவங்கிவிடுவர்.

தனித்தோ, இணைந்தோ பணி புரிந்தாலும் முதலாளியின் பாணியைப் பின்பற்றத் துவங்கி, அவனது வழியில் பயணிக்கும் தொழிலாளிகள்.

நேரம் கடந்தாலும் ஓய்வின்றி, பதினோரு மணியளவில் வந்த தேநீரைக் குடிக்க நேரமின்றி நால்வரும் பணியில் கவனம் செலுத்தியவாறு, அவ்வப்போது இரண்டு மிடறு எடுத்து அருந்தியவாறு வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.

கூட்டம் குறைந்தபோது, வந்திருந்த சரக்குகளை சரிபார்க்கவும், அதனை சரியான பிளாஸ்டிக் பெட்டிகளிலும், சிலவற்றை அங்கிருந்த ரேக்குகளிலும் எடுத்து அடுக்கி வைத்தனர்.

நன்பகல் பன்னிரெண்டு மணிக்கு புயல்போல நுழைந்தவளைக் கண்ட நின்றிருந்த பணியாளர்கள், எழுந்த சிரிப்பை பிரயாசத்தோடு அடக்கிக் கொண்டு, மருந்து வாங்க நின்றிருந்தவர்களை கவனித்தவாறே, “வாங்க மேடம்! ஹேப்பி விமன்ஸ் டே!” வாழ்த்தோடு செயற்கையாக ஒட்டவைத்த புன்னகையோடு வந்தவளை வரவேற்க, வந்தவளும் இன்முகத்தோடு பதில் கூறியபடி உள்ளே நுழைந்தாள்.

சர்வதேச பெண்கள் தினத்தை காரணம் காட்டி புது ஆடை அணிந்திருந்தாள்.  அதனை கொண்டாடும் பெயரில் வீட்டிலிருந்து வெளியில் குறிப்பாக அங்கு வந்திருப்பது அவளின் தோற்றப் பொலிவிலும், அழகுபடுத்திக் கொண்ட மெனக்கெடலிலும் கூறாமலேயே தெரிந்தது.

அவளை பின்தொடர்ந்த நபர்களையெல்லாம் ஒதுக்கி, கௌதமை நம்பி இருந்தவளுக்கு இன்றுவரை எந்த முன்னேற்றமும் இன்றி இருப்பதை எண்ணி, பிரகதிக்குமே வருத்தம்தான்.

‘என்னைப் புடிச்சிருக்குனு வந்தவனுகளை எனக்குப் புடிக்கலை.  எனக்குப் புடிச்ச உனக்கு, என்னைப் புடிக்கலை!’ என அவ்வப்போது கௌதமிடம் புலம்பியும் எந்த பிரயோசனமும் இல்லை.

அவள் அணிந்திருந்த புது ஆடையை தன்னவனிடம் காண்பித்துவிடும் ஆசையில் வந்திருப்பது அவனுக்குப் புரிந்தாலும், புரியாவிட்டாலும் அவனது பார்வை தன்மீது விழுந்தால்போதும் என்றே கிளம்பி வந்திருந்தாள். அவனைக் காண வேண்டும் என்கிற தீவிர எண்ணத்தில் எதையேனும் சாக்கிட்டு அடிக்கடி அங்கு வந்து செல்வாள்.

வேலையாட்களின் வரவேற்பிலேயே திரும்பிப் பார்க்காமல், வந்தது யாராக இருக்கும் என்பதை தனி கண்ணாடி கேபினுக்குள் அமர்ந்திருந்த கௌதம் உணர்ந்தான்.

இளநகையோடு வேலை பார்த்துக் கொண்டிருந்தவனுக்குள், அவளின் வருகையை அறிந்ததும் இனிமையும் சேர்ந்திட இதயத்தின் இதமான ஓசையை தனக்குள் மறைத்தபடியே, அதுவரை இருந்த இயல்பான முகம் தொலைத்து, கடுமையை பூசிக் கொண்டான் வந்தவளின் கடுவன் பூனை.

முகமன்களை ஏற்றுக் கொண்டவள், “விமன்ஸ் டே ஸ்பெசல் என்ன?” அங்கிருந்த பெண்களிடம் வினவ,

“நீங்க வந்ததுதான் மேடம் ஸ்பெசல்” என்று ஒருத்தி கூற அவளை செல்லமாக முறைத்துப் பார்த்து, பிறகு அவளின் முதுகில் தட்டி சிரித்தவள்,

“என்ன செய்யலாம்னு சொல்லுங்க மேடம்?” என மற்றொருத்தியும் கேட்க, ‘உள்ளே போயிட்டு வந்து என்ன செய்யலாம்னு டிசைட் பண்ணலாம்’ என்பதுபோல அவளிடம் சைகையில் காட்டிவிட்டு,  நேராக கௌதம் இருக்கும் கண்ணாடி கேபின் நோக்கி நகர்ந்தாள்.

ஒருவர் அமர்ந்திருந்தால், மற்றொருவர் நிற்க மட்டுமே முடியும் என்ற வகையிலான சிறு கேபின் அது.  ஆனால் அந்த குறுகிய இடத்திற்குள் அங்கிருந்த நாற்காலி ஒன்றை அவனருகே இழுத்துப் போட்டு நெருக்கடியான நிலையில் அவனருகே சென்று உரிமையோடு அமர்ந்தாள்.

அவன் சம்மதித்தால் மடியில் அமரக்கூட தயங்க மாட்டாள்.  கௌதமின் கண்டிப்பிற்கு பயந்தே இந்த இடைவெளி.

அவள் பிரகதி! இருபத்து மூன்று வயது நிறைவுறப் போகிறது. காணும்போது பதினெட்டு வயது மதிக்கத்தக்க வகையில் இருந்தாள்.

‘இப்ப எதுக்கு இங்க வந்த?’ எனும் பார்வையோடு அருகில் வந்தவமர்ந்தவளை அலட்சியமாக எதிர்கொண்டான் கௌதம்.

கௌதமின் தீப்பார்வையை கருத்தில் கொள்ளாமல், சிறு முகவாட்டமும் இன்றி இதழில் புன்முறுவலோடு தன்னவனைப் பார்த்தபடியே, “இந்த ட்ரெஸ்ல நான் எப்டி இருக்கேன்?” வினவ,

“ஏன், உங்க வீட்டுல கண்ணாடி இல்லையா?” கௌதமின் இந்த குதர்க்க ரீதியிலான கேள்வி பழக்கப்பட்டவளாக,

“ஆமா!  அதனாலதான் உன் கண்ணுக்குள்ள இந்த ட்ரெஸ்ல நான் எப்டி இருக்கேன்னு பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்” கள்ளச் சிரிப்போடு மெல்லிய குரலில் அவனிடம் பதில் கூறினாள்.

கௌதமிற்கு அவள் எந்த ஆடையை உடுத்தினாலும் அழகாக இருப்பதாகவே தோன்றும்.  ஆனால் இன்று அவளின் பிரத்தியேக கவனிப்பில் மேலும் மெருகேறிய நிலையில் காணப்பட்டவளைக் கண்டவனுக்குள் திண்டாட்டம். தனது திக்குமுக்காடிய நிலையினை அவளிடம் மறைக்க வேண்டி அதிக பிரயாசப்பட்டான்.

அது அவனை மேலும் கோபத்தோடு அவளை எதிர்கொள்ளச் செய்திருந்தது. அதனை தவறாக எண்ணிக் கொண்டாள் பிரகதி.

கௌதமின் கூடுதலான சிடுசிடுப்பு பிரகதியைச் சிந்திக்கச் செய்தது.

எப்பொழுதும் இந்த அளவு தன்னை தள்ளி நிறுத்த மாட்டானே என்கிற யோசனை வர, அதற்கான காரணத்தை தானாகவே தேடி, ஒரு முடிவுக்கு அவளை வரச் செய்திருந்தது.

கடந்து சென்ற வாரத்தில் நண்பரின் திருமணத்திற்குச் சென்றபோது நடந்த நிகழ்வினை எண்ணியவளுக்கு, அன்று தான் பேசியது தற்போது நினைவில் வந்தது.

ஃபார்மஸியில் அவர்களோடு படித்த சீனியரின் திருமணத்திற்கு சென்றிருந்தபோது தோழி ஒருத்தி, “என்னடீ பண்ணிட்டு இருக்க?” என்றதும்,

“நம்ம சீனியரை நேரம் கிடைக்கும்போது நேருல போயி சைட்டடிச்சிட்டு, வீட்டுல பொங்கிப் போடறதை திங்கவும், தூக்கத்துல சீனியரோட குடும்பம் நடத்த ஒத்திகை பாத்திட்டும் ஹேப்பியா இருக்கேன்” என்று பகீரங்கமாக நண்பர்களோடு நின்றிருந்த கௌதமை நாணத்தோடு பார்த்தபடியே தனது செயலை மறையாது கூறியிருந்தாள்.

அவளோடு படித்தவர்களுக்கு அவளின் கௌதமோடுடனான ஒருதலைக் காதல் தெரிந்தாலும், அது இன்னும் அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கும் என்றே நினைத்திருந்தார்கள்.

ஆனால் அவள் அப்படிக் கூறியதும், இருவருக்கிடையேயான உண்மை நிலையினை கேட்டறிந்தனர்.  இன்னும் அவளின் ஒரு தலைக் காதல் அப்படியே இருப்பதை அறிந்துகொண்டனர்.  

நிகழ்ச்சி நிறைவு பெற்று கிளம்பும்போது கௌதமிடம் விடைபெற வந்தவர்கள் அனைவருமே, “எதுக்கு அந்தப் பொண்ணை இப்படி அலைக்கழிக்கிற?  சீக்கிரமா ரெண்டு பேரும் மனசு விட்டுப் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வாங்க.  இல்லை ஒத்து வராதுன்னா… அந்தப் பொண்ணுகிட்ட நேரடியாச் சொல்லிரு” என ஒன்றுபோல நண்பர்குழாம் மொத்தமும் அவனிடம் அதையே கூறிவிட்டுச் சென்றிருந்தனர்.

கௌதம் அவர்களிடம், “சொல்லியாச்சு.  ஆனா, அந்தப் பொண்ணுக்கு புரிய மாட்டேங்குது” என்றாலும், அதற்கும் சில தீர்வுகளை கூறிவிட்டு விடைபெற்றிருந்தனர்.

அதனால் கௌதமிற்கு தன்மீது கோபம் என நினைத்துக் கொண்டவள், “என்ன தம்மு கோவமா? நீ கோவப்படலைன்னாதான் ஆச்சரியம்” என நிறுத்திவிட்டு,

“நீ வாயவே திறக்க மாட்டுற.  இப்டியே இருந்தா, உன்னோட எனக்கு கல்யாணம்னு ஒன்னு கனவாவே போயிருமோன்னு பயந்துதான், அடுத்த கட்டத்துக்கு போகலாமேன்னு அவங்கட்ட அப்டிச் சொன்னேன்” என்றாள்.

“அப்டிச் சொன்னா கல்யாணம் நடந்துரும்னு உனக்கு எந்த முட்டாள் சொன்னான்” வெடுக்கெனக் கேட்டவன்,

“அந்தப் பேச்சை விடு. அதுக்கான பதிலத்தான் நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன்ல!” என்றான்.

அவள் பதில் கூற வந்ததை கையைக் காட்டி நிறுத்தும்படி கூறியவன்,  “எதுக்கு முடிஞ்சு போனதை திரும்ப திரும்ப பேசிட்டு…?” என்றவன்,

“வந்தாச்சு. பாத்தாச்சு… இன்னும் இங்க என்ன?” வந்த வேலை முடிந்துவிட்டால் கிளம்பு என்பதை மறைமுகமாகக் கூறினான்.

“ஆரம்பிக்கறதுக்கு முன்னயே முடிஞ்சு போச்சுன்னு சொல்ற?” அப்போதும் தனது மனச் சுணக்கத்தை மறைத்தபடியே மலர்ந்த வதனத்தோடு தன்னவனிடம் கேட்டாள்.

“உங்கூட எதையும் ஆரம்பிக்கற ஐடியா எனக்கில்லை.  தேவையில்லாம வெட்டியா நேரத்தைப் போக்காம கிளம்பற வழியப் பாரு!” தீர்மானமாக உரைத்திட,

“எனக்கு… உன்னைப் பாக்கணும்போல இருந்தது. அத்தோட இந்த சாரி புதுசா…!” தான் உடுத்தியிருந்ததை தொட்டுக் காட்டிக் கூறியவள், “அதைக் கட்டி, உங்கிட்ட காட்டிட்டுப் போகலாமேன்னு…  வந்தேன்!” அவன் கேளாமலேயே தனது எண்ணத்தைக் கூறினாள்.

“பாத்துட்டல்ல… கிளம்பு!”, மெல்லிய குரலில் பல்லைக் கடித்து வார்த்தைகளைக் கூறுபோட்டவாறு கூறினான்.

“நான் பாத்துட்டேன்.  ஆனா… என்னோட இந்த ட்ரெஸ், எனக்கு எப்டி இருக்குன்னு நீ சொல்லவே இல்லை!” கௌதமின் பதிலுக்காக தான் காத்திருப்பதை தனது கொஞ்சலான பேச்சின் மூலம் நேரடியாகவே உரைத்தாள் பிரகதி.

இதே நிலை நீடித்தால் தான் அவளின் கைப் பொம்மையாகிவிடுவோம் என எண்ணியவன், தன்னைக் காட்டிக் கொள்ளாதிருக்க, “நல்லாயில்லைன்னு சொன்னா என்ன செய்யறதா இருக்க?” பிரகதியின் மனதைக் காயப்படுத்திட வேண்டிப் பேசினான்.

கௌதமின் கேள்வியினை இலகுவாக எதிர்கொண்டவள், “இனி இந்த சாரிய உடுத்தவே மாட்டேன்” தீர்மானமாகக் கூறினாள்.

“பாப்போம்” என்றவன், “அவ்ளோதானே. கிளம்பு” அவளைக் கிளப்பும் நோக்கத்திலேயே பேச,

“அதெல்லாம் முடியாது.  இன்னிக்கு ஃபுல்லா இங்கதான்னு நேத்தே ஃபிக்ஸ் ஆகிட்டேன்!” உறுதியாகக் கூறினாள் பிரகதி.

“எனக்கு வெளிய வேலை இருக்கு!” பிரகதி கிளம்பமாட்டாள் என்பது புரிந்ததும், அவளோடு தர்க்கத்தில் ஈடுபட விரும்பாமல், தானே வெளியில் கிளம்ப உத்தேசித்தான்.

“இருந்தா போ!” அசட்டையாகக் கூறியவள், “இன்னைக்கு நாங்க விமன்ஸ் டே செலபரேட் பண்ணப் போறோம்” என்றாள்.

அவளின் பதிலைக் கேட்டவன், “உங்கிட்ட எத்தனை தடவை சொல்றது?  இப்டி இங்க அடிக்கடி வராதன்னு! எதாவது ஒரு காரணத்தை வச்சிட்டு இனி இங்க வந்தா, உங்கப்பாகிட்ட நேரடியாப் பேசுற மாதிரி இருக்கும்” சிடுசிடுப்பாக கூறினான்.

இதுபோல கௌதம் பிரகதியிடம் வெறுப்போடு பேசினாலும், இதுவரை தனது பிடித்தமின்மையை, வெறுப்பை மற்ற ஊழியர்கள் முன் காட்டிக் கொள்ளாமல் கடந்து செல்வான்.

அந்த ஒரு விசயத்தில்தான் பிரகதி அவனை நம்பி, அவனை தனக்கு சாதமாக்கிக் கொள்ள எண்ணி விடாமுயற்சியாக அவனிருக்கும் பகுதியை முற்றுகை இடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறாள்.

“வராத, பாக்காத, பேசாத, நினைக்காத, வேற எவனையாவது கல்யாணம் பண்ணிக்கோ, இதைத்தவிர நீ வேற என்னனாலும் சொல்லு! கேக்கறேன்!” மறையாத சிரிப்போடு பேசியவள்,

“எங்கப்பாவும் உன்னைப் பாக்கணும்னுதான் சொன்னார்.” என்றதும், யோசனையோடு அவளைப் பார்த்தவன், “சரி எங்கன்னு கேட்டு சொல்லு.  நான் போயி அவரைப் பாக்கறேன்” என்றான்.

“அப்போ அடுத்த முகூர்த்தத்திலேயே நமக்குக் கல்யாணமா?” என்று ஆனந்தமாகக் கேட்டவளிடம்,

“நமக்கு இல்ல.  உனக்கு!” என அழுத்தமாக வார்த்தைகளை நிறுத்தி நிதானமாக உச்சரித்தான்.

“அப்டி ஒன்னு நடக்கவே நடக்காது” என்றவள், “எங்கப்பா நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டார்.  அதனால, உங்க அம்மா நம்பர் குடுத்துட்டேன்.” மிகவும் கூலாகக் கூறியவள், இருவருக்குமே திருமணம் நிச்சயமானாற் போன்ற மகிழ்ச்சியில் இருந்தாள்.

அவனே சரணாகதி என்றிருப்பவள் அல்லவா! அவனுக்காக, அவன் தன் வாழ்க்கைத் துணையாக வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதமெல்லாம் இருந்தல்லவா தந்தையிடம் தனது எதிர்பார்ப்பைக் கூறி சம்மதம் வாங்கியிருக்கிறாள்.

அதற்குமேல் இவளிடம் பேசுவது வீண் என நினைத்தவன், முகத்தை கவனத்தோடு இறுக்கமாக வைத்தபடியே, எழுந்து பைக் சாவியை எடுத்துக் கொண்டு, பணியாட்களிடம் சில விசயங்களைக் கூறிவிட்டு, வெளியில் கிளம்பிவிட்டான் கௌதம்.

கௌதம் வெளியில் சென்றதை எண்ணி வருத்தமிருந்தாலும் அதனைக் காட்டிக்கொள்ளாது, அங்கிருந்தவர்களோடு இனிப்பு வாங்கி மகளிர் தினத்தைக் கொண்டாடினாள். சிறிது நேரம் அவர்களோடு நின்று மருந்தகத்திற்கு வந்தவர்களைக் கவனித்தாள்.

பிறகு, கௌதம் வேலை செய்து கொண்டிருந்த சிஸ்டத்தின் முன்பு சென்று அமர்ந்தாள்.  தெரிந்த சில புதிய மருந்துகளை யோசனையோடு பார்த்தாள்.

‘படிச்சு முடிச்சு ஒன்றரை வருசந்தான ஆச்சு! எல்லாம் புதுசா தெரிது’ என கூர்ந்து பார்த்தாள்.

‘இது என்ன காம்பினேசன்’ யோசித்தபடியே அமர்ந்திருந்தவள், ‘யோசிச்சு நேரத்தை எதுக்கு வீண் பண்ணிகிட்டு, நம்ம டக்டக்கோகிட்ட கேப்போம்’ மனதிற்குள் நினைத்தவள், குறிப்பிட்ட சில மருந்துகள் என்ன மாதிரியான காம்பினேசனில் எந்த நிறுவனம் சப்ளை செய்கிறது என்பதை டக்டக்கோவின் உதவியுடன் தேடி எடுத்துப் பார்த்தபடியே நேரத்தைக் கடத்தினாள்.

எவ்வளவு நேரம் சிஸ்டத்தில் அமர்ந்தபடியே செலவளித்தாள் என்பது அவளுக்குத் தெரியவில்லை.

பசி வயிற்றைக் கிள்ளியது. 

‘இன்னும் தம்மு (கௌதம்மை, தம்மு என செல்லமாக அழைக்கிறாள் பெண்) வரலையா?’ என எண்ணியவாறு நிமிர்ந்து மணி பார்த்தாள். இரண்டு மணியை கடிகார முள் நெருங்குவதைக் கண்டு, கௌதமின் தாய் அவனுக்கு கொடுத்துவிட்ட உணவுப் பையை உரிமையோடு எடுத்துச் சென்றவள் உணவருந்த, ஓய்வெடுக்க இருந்த தடுப்பிற்குள் வந்து அமர்ந்தாள்.

‘மாமியார் குடுத்து விட்டது எதனா தேறுதானு பாப்போம்.  தேறுனா, இன்னிக்கு அவன் பட்டினி கிடக்கட்டும்!’ என்று எண்ணியபடியே டிஃபன் பாக்ஸை எடுத்து திறந்து பார்த்தாள்.

அதிலிருந்ததைப் பார்த்தவளுக்கு வருத்தம் வந்தது.  ‘எப்ப பாரு கீரை, கூட்டு, பொரியல்… ஒரு நடக்கிறது, நீந்துறதுன்னு அத்தம்மாவுக்கு சமைக்கவே வராதுபோல’ மனதில் சலித்தவள், சலிப்பின்றி உச்சுக் கொட்டியவாறே உண்டு முடித்திருந்தாள்.

கௌதமிற்கு பிரகதி மீது அளவு கடந்த காதல் இருந்தாலும், தனது உடல் நலக் குறைபாட்டை எண்ணி, ஆரம்பம் முதலே பெண்ணைத் தவிர்த்தான்.

இருவருக்கும் ஃபார்மஸி படிக்கும்போதிருந்தே அறிமுகம்.  பெண் கௌதமைவிட இரண்டரை வயது சிறியவள்.

இருவருக்கும் சொல்லிக் கொள்ளாமலேயே மனதில் காதல் வளர்ந்தாலும், பெண்ணைப்போல கௌதம் வெளிப்படையாகக் காட்டிக் கொண்டதில்லை.

பிரகதி பலமுறை தனது மனதைத் திறந்து கேட்டாலும், மௌனமே பதில். பிரகதியின் செயலில் கல்லூரியில் அனைவருக்குமே விசயம் தெரிந்திருந்தது.  ஆனாலும் கண்டும் காணாததுபோல, அவளுக்கும் எனக்கும் எந்த ஒட்டும், உறவும் இல்லை என்பதுபோல இருந்து கொள்வான் கௌதம்.

கல்வி சார்ந்த எந்த உதவியென்றாலும் பிரகதிக்கு செய்து கொடுப்பவன், மற்ற விசயங்களை காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டான்.

நான்கு மணிவரை கௌதமிற்காக பொறுத்திருந்தாள்., அதன்பிறகே அங்கு வந்தவன், அப்போதும் அங்கிருந்தவளைக் கண்டவன், ‘இன்னும் இவ கிளம்பலையா?’ யோசித்தபடியே, வந்ததும் நேராக ரெஸ்ட் ரூம் சென்றான்.

மருந்தகத்திற்கு பின்னால் அதனோடு அட்டாச்டு ரெஸ்ட் ரூம், அத்தோடு இணைந்த குளியல் மற்றும் கழிப்பறை. ரெஸ்ட் ரூமில் சிங்கிள் காட் ஒன்று போடப்பட்டிருந்தது. அந்த அறையை எப்போதும் பூட்டியே வைத்திருப்பான் கௌதம்.

கௌதமிற்கு திடீரென்று உடல்நலக் குறைபாடு உண்டானால், உடனே வீட்டிற்கு போக இயலாத நிலையெனில் அங்கே தங்கிக் கொள்ளும் வகையில் அந்த ஏற்பாடுகளை அந்த அறையில் செய்திருந்தான்.

வந்ததும், பின்னிருந்த அறைக்குள் நுழைந்தவனையே பார்த்திருந்தவள், ‘என்னை அவாய்ட் பண்ண இன்னும் என்னெல்லாம் பண்ணுவ?’ மனதோடு எண்ணிக்கொண்டே அவன் பின்னேயே சென்றாள்.

உண்மையில் அவன் ரெஸ்ட் ரூமுடன் இருந்த குளியல் அறையைப் பயன்படுத்த நுழைந்ததும், சற்று நேரம் அங்கேயே காத்திருந்தாள்.

கௌதம் வெளியே வந்ததும், “இப்போ சொல்லு தம்மு, இந்த ட்ரெஸ் உண்மையிலேயே எனக்கு எப்டி இருக்கு!” எனக் கேட்டாள்.

அவளின் கேள்வியில் அலுத்தவன், “உன்னை வீட்டுல தேடவே மாட்டாங்களா?” என்றான் பிரகதியை நோக்கி.

“நான் கேட்டதுக்கு இதுதான் பதிலா?” சிடுசிடுத்தவனை கண்டுகொள்ளாமல் அவனை நோக்கி புன்முறுவலோடு முன்னேறியவளைக் கண்டவனுக்குள், வரவிருக்கும் சங்கடத்தை நினைத்து, ‘ச்சேய்… இவ இருக்கான்னு தெரிஞ்சும் எப்டி மறந்தேன்?’ தனக்குள் வருந்தியபடி நின்றிருந்தவன் என்ன பதில் கூறினான்?

அடுத்த அத்தியாயத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!