மிரட்டும் அமானுஷ்யம் 11

 

மிரட்டல் 11

 

நிஷாவின் டைரியில் முதல் பக்கத்தில் ‘அர்ஜுனிஷா’ என்று எழுதியிருந்ததைக் கண்டு தோழியர் இருவரும் வர்ஷாவை பார்த்தனர். 

 

“அவ லவர் பேரு அர்ஜுன்னு நெனைக்கிறேன்… அடிக்கடி ‘அர்ஜு’ன்னு போன்ல பேசுறத கேட்டிருக்கேன்…” என்றார் வர்ஷா.

 

“மத்த பேஜ்ஜஸ் ஓபன் பண்ணு ஜானு… அவங்க வேற ஏதாவது எழுதிருக்காங்களான்னு பார்ப்போம்…” என்றாள் சாக்ஷி.

 

ஆனால் அந்த டைரியில் மற்ற தாள்கள் எல்லாம் வெற்று காகிதங்களாகவே இருந்தன. 

 

“என்ன ஜானு வேற எதுவுமே இல்ல…” என்று சோர்வுடன் கூறினாள் சாக்ஷி.

 

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, வர்ஷாவோ இவர்களின் பின்னே எதையோ கண்டு பயந்தவாறு, “நா… நான் கிளம்புறேன்…” என்றார்.

 

அதில் இருவரும் அவரைப் பார்க்க, அவரின் முகமோ அப்பட்டமாக பயத்தை எடுத்துக் காட்டியது.  

 

“நீங்க ஓனர் பார்க்கணும்னு தான வந்தீங்க… அவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க… அவங்கள பார்த்துட்டே போங்க…” என்றாள் ஜான்வி.

 

“இல்ல இல்ல… நான் இன்னொரு நாள் வந்து பார்த்துக்குறேன்… இப்போ எனக்கு வேலை இருக்கு…” என்று படபடப்பாக பேசியவர் ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து சென்றார்.

 

“எதுக்கு இவங்கஇவ்ளோ வேகமா போறாங்க… இவ்ளோ நேரம் நல்லா தான இருந்தாங்க…” என்றாள் சாக்ஷி.

 

“தெரியல சாக்ஷி… இப்போ இந்த டைரிலயிருந்தும் நம்மளால பெருசா ஒண்ணும் கண்டுபிடிக்க முடியல…” என்றாள் ஜான்வி.

 

“ஹ்ம்ம்… நமக்கு இன்னைக்கு தெரிஞ்சுக்கணும்னு இருந்தது இந்த ‘அர்ஜுனிஷா’வா தான் இருக்கும்… ஹே இன்னும் அந்த ரெண்டு பேரும் நமக்கு கால் பண்ணாம இருக்குதுங்க… இந்நேரம் கால் வந்துருக்கணுமே…” என்று சாக்ஷி கூறும்போதே விஷ்வாவிடமிருந்து அழைப்பு வந்தது.

 

சாக்ஷி அழைப்பை ஏற்றதும் அவளை பேசக் கூட இடைவெளி விடாமல் பேசிக்கொண்டே இருந்தான். “ஹே சாக்ஸ் உயிரோட தான் இருக்கீங்களா…”

 

இப்படி அவன் கேட்டதும், ‘இவன் நைட் நடந்தத தெரிஞ்சு கேக்குறானா, தெரியாம கேக்குறானான்னு தெரியலையே…’ என்று மனதிற்குள் புலம்பினாள்.

 

‘எவ்ளோ நேரமா கால் பண்றது… ஜானு எங்க…? அவ ஏன் போன் அட்டெண்ட் பண்ண மாட்டிங்குறா…?” என்று கேள்வி மேல் கேள்வி அடுக்கிக் கொண்டே சென்றான்.

 

‘அடேய் என்ன கொஞ்சம் பேச விடுடா…’

 

“ஓய் எப்பவும் லொடலொடன்னு பேசிட்டே இருப்ப… இப்போ என்ன கேட்ட கேள்விக்கு கூட பதில் சொல்லாம இருக்க…” என்றான்.

 

“ஹே நீ என்ன பேச விட்டா தான நான் பேச முடியும்… கேப்பே விடாம நான்-ஸ்டாப்பா பேசிட்டே இருந்தா, நான் எப்படி பேசுறது… லூசு…” என்று ஆரம்பித்து அவனைத் திட்டிக் கொண்டிருக்க, அதற்குள் ஜான்வியும் சாக்ஷியும் அவர்களின் அறைக்கு வந்திருந்தனர்.

 

தன் அலைபேசியில், ஆதர்ஷிடமிருந்து வந்திருந்த அழைப்புகளைக் கண்ட ஜான்வி, அவனிற்கு அழைத்து பேசிக் கொண்டிருந்தாள்.

 

அடுத்த ஐந்து நிமிடங்களில் சாக்ஷியும் விஷ்வாவும் ஒருவரையொருவர் திட்டி முடித்திருந்தனர். “இப்போ எதுக்கு டா கால் பண்ண…?” என்று கோபப் குரலில் வினவினாள் சாக்ஷி.

 

“ச்சே உங்கிட்ட பேசி எனர்ஜிய தேவையில்லாம வேஸ்ட் பண்ணிட்டேன்… நான் ஒண்ணும் உங்கிட்ட பேச கூப்பிடல… ஜானு கிட்ட போன் குடு… ஆதர்ஷ் பேசணும்னு சொன்னான்…” என்றான் விஷ்வா.

 

ஜானுவை திரும்பிப் பார்த்த சாக்ஷி, அவள் ஆதர்ஷுடன் அலைபேசியில் உரையாடுவதைக் கண்டவள், “அவ ஏற்கனவே ஆதர்ஷ் கூட பேசிட்டு தான் இருக்கா…” என்றாள்.

 

“இது எப்போ நடந்துச்சு…” என்று புலம்பியவாறே ஆதர்ஷைக் கண்டான் விஷ்வா.

 

அங்கு ஆதர்ஷோ, சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் தெரிந்த ஒளியில், ‘அட லூசுப் பயலே…. உனக்காக தான டா இவ கூட இவ்ளோ நேரம் மூச்சு விடாம சண்டை போட்டேன்…’ என்று தலையில் அடித்துக் கொண்டான்.

 

சாக்ஷியிடம் ஏதோ சொல்லி சமாளித்து அழைப்பைத் துண்டித்தான். பின் பொறுத்து பொறுத்து பார்த்தவனிற்கு, ஆதர்ஷ் அந்த அழைப்பை இப்போதைக்கு துண்டிக்குமாறு தெரியவில்லை.

 

‘ஹ்ம்ம் இப்படியே இவன பார்த்துட்டு இருக்குறதுக்கு, வெளிய போய் யாருக்கிட்டயாவது பேசிட்டு இருக்கலாம்…’ என்று நினைத்து வெளியே சென்றான்.

 

இது எதையும் கவனிக்காதவனாக, ஜான்வியிடம் பேசிக் கொண்டிருந்தான் ஆதர்ஷ். இல்லை இல்லை… ஜான்வி பேசிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டிருந்தான். அப்படி இருவரும் பேசியது, பாடத்தைப் பற்றி… ஆம் இன்று ஜான்வியை பார்க்க முடியாததால், அவள் குரலையாவது கேட்கலாம் என்று பாடத்தில் சந்தேகம் என்ற சாக்கை வைத்துக் கொண்டு அவளிற்கு அழைத்திருந்தான் ஆதர்ஷ். இதை அறியாத ஜான்வியோ,  அவனின் சந்தேகத்திற்கான விடையை விளக்கிக் கொண்டிருந்தாள்.

 

சுமார் ஒரு மணி நேரத்திற்கு விளக்கியவள், “ஆதர்ஷ் டவுட் கிளியராச்சா..?” என்று ஜான்வி கேட்கவும், அதுவரை அலைபேசியில் ஏதோ செய்து கொண்டிருந்த சாக்ஷி, ‘அடலூஸுங்களா… ஆது நீ ரொம்பவே பாவம்…’ என்று தலையிலடித்துக் கொண்டாள்.

 

இவ்வளவு நேரம் அவளின் குரலைக் கேட்டு மயங்கியனின் மூளைக்குள் அவள் உதிர்த்த வார்த்தைகள் சென்றால் அல்லவா சந்தேகம் தீர்ந்ததா என்று சொல்ல முடியும். அவளிடம் பேசுவதற்காகத் தானே இல்லாத சந்தேகத்தை உருவாக்கியிருந்தான்.

 

“ஹான் எல்லாம் ஓகே ஜானு….” என்று கூறி சமாளித்தான்.

 

“ஓகே ஆதர்ஷ். எனக்கும் கொஞ்சம் டவுட்ஸ் இருக்கு அத கிளியர் பண்றீயா…?” என்று ஜான்வி கேட்க…

 

அவளிடம் பேசுவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்க, அதை வேண்டாம் என்று சொல்வானா… இதோ மறுபடியும் அவர்களின் சந்தேகம் தீர்க்கும் உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது.

 

இப்படியே ஒருமணி நேரம் கடந்திருக்க, “தேங்க்ஸ் ஆதர்ஷ்…” என்று கூறி அந்த அழைப்பைத் துண்டித்து, அலைபேசிக்கு ஓய்வு தந்தாள் ஜான்வி.

 

“என்னடி உங்க டவுட் கிளாரிஃபிகேஷன் கிளாஸ் முடிஞ்சுதா…?” என்று கிண்டலாகக் கேட்டாள் சாக்ஷி.

 

அவளின் கேலியை உணராத ஜானுவோ, “ஹான்… முடிஞ்சுது டி…” என்று கூறினாள்.

 

அங்கு ஆதர்ஷின் நிலையோ வேறாக இருந்தது. முகத்தில் சிரிப்புடன் அலைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தான். விஷ்வா வரும்வரை இது தொடர்ந்தது.

 

அவனின் நிலையைக் கண்ட விஷ்வா, “என்ன மச்சான் முகமே ஒளிருது…” என்று கேட்டான்.

 

சிறிது வெட்கம் எட்டிப் பார்க்க, “அதெல்லாம் ஒண்ணும் இல்ல டா…” என்றான்.

 

“நீ நடத்து மச்சான்…” என்று தொப்பென்று கட்டிலில் விழுந்தான்.

 

பின் இருவரும் அவரவர்களின் அலைபேசியில் மூழ்கியிருந்தனர். அப்போது விஷ்வா, “ஹே ஆது இங்க பாரேன்…” என்று அவனின் அலைபேசியைக் காட்டினான்.

 

அதில் அந்த ‘மரவீடு’ பற்றிய காணொளி… அன்று சதீஷ் அர்ஜுனிடம் காட்டிய அதே காணொளி. 

 

“இந்த வீடு திடீர்னு மேல எழும்புதாம், திடீர்னு உள்ள போயிருதாம் டா… அங்கயிருக்குறவங்க எல்லாம் இத ‘பேய் வீடு’ன்னு சொல்றாங்களாம்…” என்று கூறினான்.

 

அதைப் பார்த்த ஆதர்ஷ், “ஓ…” என்று கூறினான்.

 

“ஹே என்ன இவ்ளோ தானா உன் ரியாக்ஷன்…”

 

“வேற என்ன சொல்லணும்னு நினைக்கிற விஷு…”

 

“ஆது… நம்ம இப்போ பாரானார்மல் கோர்ஸ் படிச்சுருக்கோம்… இந்த மாதிரி ஒரு வீட்ட நம்ம ஏன் ஆராய்ச்சி பண்ணக் கூடாது…”

 

“லூசா டா நீ… அன்னிக்கே சார் என்ன சொன்னாரு… இதெல்லாம் தனியா நம்ம ஹாண்டில் பண்ணக் கூடாது… ஒரு ப்ரோஃபெஸனல் இருந்து கைட் பண்ணா தான் இது மாதிரி ரிஸ்க் எடுக்கணும்னு சொன்னாருல…”

 

“ஹ்ம்ம் சரி உள்ள போய் பார்க்க வேணாம்… சும்மா வெளிய இருந்தே பார்த்துட்டு வந்துடலாம் டா… எனக்கென்னமோ அந்த கிராமத்து மேல அட்டென்ஷன் விழுகணும்னு தான் இந்த மாதிரி நியூஸ் பரப்புறாங்கன்னு தோணுது… இது மாதிரி வீடெல்லாம் இருக்காது டா… எதுக்கும் போய் பார்த்துட்டு வரலாம்ல… டெஸ்ட் முடிச்சு கொஞ்சம் ரிலாக்சேஷனுக்காக போன மாதிரி இருக்கும்… அப்படியே சார் அவரு லவ்வ சொன்ன மாதிரியும் இருக்கும்…” என்று சொல்லிவிட்டு கண்ணடித்தான்.

 

“டேய் இப்போ எதுக்கு டா என்ன இழுக்குற…” என்று கேட்ட ஆதர்ஷ் முகத்திலும் புன்னகையின் சாயல்…

 

“என்னமோ சாருக்கு பிடிக்காத மாதிரியே ரியாக்ஷன் குடுக்குறது… வில்லேஜ் லொகேஷேன் வேற… அங்க போறோம்… லவ் சொல்லுறதுக்கு நல்ல பிளேஸா பாக்குறோம்… லவ்வ சொல்லுறோம்…” 

 

“என்னாது…” என்று எகிறினான் ஆதர்ஷ்.

 

“ஹிஹி… டங்க் ஸ்லிப்பாகிடுச்சு டா… லவ்வ சொல்லுற… எப்பா என்ன கோபம் விட்டா அடிச்சிருப்பான் போலயே..” என்று தனக்குள் சொல்வதைப் போல வெளியில் சொன்னான் விஷ்வா.

 

“ஹ்ம்ம்… அவங்க ரெண்டு பேரு கிட்டயும் கேக்க வேணாமா…”

 

“உண்மைய சொன்னா எப்படியும் உன் ஆளு வர மாட்டா… சோ ஜஸ்ட் ஒரு சின்ன டூர்னு சொல்லுவோம்… அதுவும் இப்போ வேணா… நாளைக்கு டெஸ்ட் முடிச்சதும் சொல்லுவோம்..”

 

“அடேய் என்ன டா ஏதோ உண்மைன்னுலா சொல்ற… நீ சொல்றத பார்த்தா வேறெதோ பிளான் போடுற போல… அந்த வீட்டுக்குள்ள போறதா இருந்தா ட்ரிப்ப கேன்செல் பண்ணிடுறேன்…”

 

“டேய் டேய்… ஒரு ஃப்ளோல வந்துருச்சு டா… அந்த வீட்டு பக்கமே போக வேண்டாம்… அந்த கிராமத்துக்கு போய் அவங்கட்ட விசாரிச்சுட்டு வந்துடுவோம்… ஓகேவா… இதுக்காக ட்ரிப்ல எதுவும் கை வச்சுடாத ராசா…”

 

“ஹ்ம்ம் ஏதோ சொல்லுற… பார்ப்போம்…”

 

விஷ்வா. “ஹப்பா உன்ன சம்மதிக்க வைக்குறதுக்குள்ள எனக்கு எனர்ஜியே குறைஞ்சு போச்சு… நீ என்ன பண்ற… அங்க போறதுக்கு கேப் புக் பண்ற… நான் போய் ஒரு டீ குடிச்சுட்டு வரேன்…” என்று வெளியே சென்றான் விஷ்வா.

 

ஆதர்ஷ் அங்கு செல்ல வேண்டிய வேலைகளை கவனித்தாலும், அவன் மனதிற்குள் ஏதோ சரியில்லை என தோன்றியது.

 

அடுத்த பத்து நிமிடங்களில் விஷ்வா வந்தான். “ச்சே… ஒரு தடவ வெளிய போயிட்டு வரதுக்குள்ள உடம்பே டையர்ட்டாகிடுது…” என்று அலுத்துக் கொண்டவனைக் கண்ட ஆதர்ஷ், “ஹே என்ன டா அதுக்குள்ள வந்துட்ட…” என்றான் ஆச்சர்யமாக…

 

‘என்னாது அதுக்குள்ள வந்துட்டேன்னா… நான் வெளிய போய் ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆச்சே… ரைட்டு பயபுள்ள அவன் ஆளு கூட மணிக்கணக்கா பேசுனதுல, மணிய பார்க்கவே இல்ல போல…’

 

“ஹான் ஆமா மச்சான்… எங்க அம்மா தான் வெளிய தனியா ரொம்ப நேரம் சுத்தக் கூடாது… அப்படி சுத்துனா காத்து கருப்பு அடிச்சுடும்னு சொன்னாங்க…” என்றான் கேலியாக….

 

‘எதுக்கு இவன் லூசு மாதிரி ஒளறிட்டு இருக்கான்…’ என்று மனதிற்குள் நினைத்த ஆதர்ஷ், “சரி சரி… அந்த கிராமத்துக்கு கேப் புக் பண்ணிட்டேன்… ஆனா அவங்க ரெண்டு பேரு கிட்டயும் நீ தான் சொல்லணும்…” என்றான்.

 

விஷ்வாவோ முழித்தப்படி, “என்ன கேப்… என்ன கிராமம்…” என்றான்.

 

‘என்ன இப்படி கேக்குறான்… ஒரு வேள என்ன கலாய்க்க ஊருக்கு போலாம்னு சொல்லிருப்பானோ… இவன நம்பி கேப் புக் பண்ணிட்டேனே…’ என்று மனதிற்குள் புலம்பிய ஆதர்ஷ், “அடேய் என்ன டென்ஷன் ஆக்காத டா…” என்று பல்லை கடித்தபடி கூறினான்.

 

‘அய்யயோ… இவன் ஏதோ டூர் பிளான் பண்ணிருப்பான் போலயே… நம்ம நேத்து நைட் ஸ்வீட்டி கிட்ட பேசுற ஆர்வத்துல என்ன சொன்னான்னு கவனிக்கல போலயே… சரி சமாளிப்போம்…’

 

“க்கும்… அது சும்மா உன்ன கடுப்பேத்துறதுக்காக தெரியாத மாதிரி கேட்டேன் டா… இப்போ என்ன அவங்கள கூப்பிடனும்… அவ்ளோ தான கூப்பிட்டுடுவோம்… சரி அந்த ஊரு பேரு என்ன… மறந்துருச்சு…” என்றான் விஷ்வா இளித்தவாறு…

 

“பிம்ப்ரிவாடி…” என்றான் ஆதர்ஷ் அவனை முறைத்துக் கொண்டே…

 

“ஓகே டன்… கூல் மச்சான்…” என்றான் விஷ்வா.

 

‘எப்படியோ இவன சமாளிச்சாச்சு…’ என்று உள்ளுக்குள் கூறிக் கொண்டான் விஷ்வா…

 

இவர்களின் உரையாடலை வெளியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த இன்னொரு விஷ்வா, தன் உருவிற்கு மாறி சிரித்துக் கொண்டது.

 

********

 

“ப்பா… அர்ஜு… அர்ஜு எங்க ப்பா… அவன் எப்படி இருக்கான்…” என்று சதீஷ் கேட்பதற்கும், அவர்களின் அறைக்குள்ளே ஒருவர் நுழைவதற்கும் சரியாக இருந்தது.

 

“தம்பி இப்போ எப்படி இருக்கு…?” என்று கேட்டார் அவர்.

 

சதீஷிற்கு அவரை எங்கோ கண்ட நியாபகம். 

 

கேள்வியாக அவன் அப்பாவை பார்த்தான்.

 

“இவரு நம்ம அர்ஜுன் தம்பியோட தாய்மாமா… இவரு தான் உன்ன இந்த ஆஸ்பத்தரில சேர்த்து விட்டாருய்யா…” என்றார்.

 

அவரை நன்றியுடன் பார்த்த சதீஷ், “அங்கிள், அர்ஜு எங்க…? அவன் நல்லா தான இருக்கான்…”என்று கேட்டான்.

 

“ஐ’ம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட் டா…” என்றவாறே அறைக்குள் நுழைந்தான் அர்ஜுன்.

 

**********

 

அடுத்த நாள் அழகாக விடிந்திருக்க, நால்வரும் கல்லூரிக்குச் சென்றனர். இதுவே அவர்கள் அந்த கல்லூரிக்கு செல்லும் கடைசி நாள் என்பதால் கொஞ்சம் கவலையுடன் இருந்தனர். இந்த மூன்று மாதங்களில், எப்போதும் கலகலவென இருக்கும் அவர்களைக் கண்டிருந்த அந்த பேருந்தின் வழக்கமான பயணிகளுக்கு அவர்களின் இன்றைய நிலை சற்று ஆச்சரியம் அளித்தது.

 

பேருந்து பயணம் முடியும் வரை அமைதியாக இருந்த விஷ்வா, “ம்ம்ம் சரியா ஒரு மணிநேர மௌன விரதம் முடிஞ்சுருச்சு… இப்போவாவது நார்மல் மோடுக்கு வாங்க…” என்று சாக்ஷியின் தலையை லேசாக தட்டினான்.

 

“கொரங்கு… கொஞ்ச நேரம் அமைதியா இருக்கீயா…” என்று கத்தினாள்.

 

பின் ஐந்து நிமிடங்கள் நீடித்த அவர்களின் சண்டையை அவர்களே முடிவிற்கு கொண்டு வந்தனர்.

 

தேர்வு எழுதப் போகும் முன், “ரெண்டு பேரும் நல்லா டெஸ்ட் எழுதிட்டு வாங்க… உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு…” என்று கூறிய விஷ்வா முதல் ஆளாய் தேர்வறைக்குள் சென்றான்.

 

பெண்கள் இருவரும், ‘என்ன சர்ப்ரைஸா இருக்கும்…’ என்று யோசித்துக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்தனர்.

 

இரண்டு மணி நேரத் தேர்வை, ஒண்ணேகால் மணி நேரத்திலேயே முடித்த விஷ்வா, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், விடைத்தாளை கொடுத்துவிட்டு, முதல் ஆளாய் தேர்வறையை விட்டு வெளியேறினான். செல்லும்முன் கேன்டீனில் இருப்பதாக தன் நண்பர்களிடம் கூறிச் சென்றான்.

 

அடுத்த பத்து நிமிட இடைவெளிகளில் சாக்ஷி மற்றும் ஆதர்ஷ் முறையே வெளியே செல்ல, அந்த தேர்வறையில் ஜான்வி மற்றும் ஒன்றிரண்டு மாணவர்களே தேர்வெழுதிக் கொண்டிருந்தனர்.

 

இரண்டு மணி நேரத்தை முழுமையாக உபயோகித்து தேர்வினை எழுதி முடித்த ஜான்வி விடைத்தாளை கங்காதரிடம் கொடுக்கச் சென்றாள்.

 

அவரிடம் கொடுத்துவிட்டு திரும்ப முயன்றவளை தடுத்தவர், “எப்போ ஊருக்கு கிளம்புற ஜான்வி…” என்று கேட்டார்.

 

ஜான்வியோ புரியாமல், “சார்…” என்றாள்.

 

“எப்போ உன் ஊருக்கு போறேன்னு கேட்டேன்…” என்றார்.

 

“அத… இன்னும் யோசிக்கல சார்… நாளைக்கு இல்ல நாளான்னைக்கு கிளம்பணும்…” என்றாள் ஜான்வி.

 

“ஹ்ம்ம் சீக்கிரம் இங்க இருந்து போயிடு…” என்றவரின் வார்த்தைகளில் ஜான்விக்கு தான் அதிர்ச்சி….

 

‘எதுக்கு சீக்கிரம் கிளம்பணும்… என்ன சொல்றாரு…’ என்று குழம்பியவள் அவரிடமே கேட்கலாம் என்று அவரைத் தேட, அவர் அங்கில்லை…

 

அப்போது அவளின் தோளில் ஒரு கை விழ, பதறிப் போய் திரும்பினாள்.

 

அங்கு நின்ற சாக்ஷி, “ஹே இவ்ளோ நேரம் என்ன டி பண்ண…” என்று கேட்டுக் கொண்டிருந்தவள், அங்கு வந்த விஷ்வாவை கவனித்து, “டிஸ்டிங்க்ஷன்ல பாஸ் பண்ணுவேன்னு சொன்னவங்களே ஃபர்ஸ்ட் ஆளா வெளிய வந்துட்டாங்க… நீ எதுக்கு இப்படி மாங்கு மாங்குன்னு எழுதிட்டு இருக்க…” என்றாள்.

 

“ஓய்… நானே சும்மா இருந்தாலும், நீ என்ன சும்மா விடமாட்ட…” என்று அங்கு மீண்டும் ஒரு சண்டை நடக்க, அதில் கங்காதரைக் காண வேண்டும் என்பதை மறந்திருந்தாள் ஜான்வி.

 

“ஆமா ஏதோ சர்ப்ரைஸ்ன்னு சொன்னீங்களே… அது என்ன…?” என்று கேட்டாள் ஜான்வி.

 

விஷ்வாவும், அவர்கள் அருகிலுள்ள கிராமத்திற்கு சுற்றுலா செல்ல திட்டம் போட்டதை சொன்னான். முதலில் மறுத்தவர்கள், பின் அவன் சொன்ன, “மூணு மாசம் ஒண்ணா இருந்துருக்கோம்… பிரிய போறதுக்கு முன்னாடி ஒரு சின்ன கெட்-டுகேதர் மாதிரி… திரும்ப எப்போ மீட் பண்ணுவோம்னு தெரியாது…” என்ற காரணத்தினால் சம்மதித்தார்கள்.

 

ஜான்வி மனதிலோ, கங்காதர் கூறியது நினைவிற்கு வந்தாலும், ‘அவரு இங்க தான இருக்கக் கூடாதுன்னு சொன்னாரு… நாங்க இங்கேயிருந்து வேற இடத்துக்கு தான டூர் போறோம்…’ என்று கூறிக் கொண்டாள்.

 

அவள் செல்லவிருக்கும் கிராமம் இவ்வூருக்கு அருகாமையில் இருப்பதாலேயே அவளை இங்கிருந்து செல்லுமாறு கங்காதர் கூறினார் என்பதை ஜான்வி அறியவில்லை. ஒருவேளை அதை கங்காதர் சரியான முறையில் காரண காரியத்தோடு விளக்கியிருந்தால், அங்கு செல்லும் முடிவை கைவிட்டிருப்பாளோ… 

 

********

 

அர்ஜூனை நேரில் கண்டதும் தான் சதீஷிற்கு மனம் ஆறுதல் அடைந்தது. அவன் கோமாவிலிருந்து எழுந்ததிலிருந்தே, தன்னால் தான் அர்ஜுன் அந்த வீட்டிற்குள் சென்றான் என்ற எண்ணமே அவனைக் கவலையில் ஆழ்த்தியது. அவனிற்கு ஏதாவது ஆகியிருந்தால், அவனையே அவனால் மன்னிக்க முடியாது என்ற நிலைமையில் இருந்தான்.

 

அப்படி இருந்தவனிற்கு, அர்ஜுன் அவளருகே வந்து கைகளைப் பற்றி, “எப்படி இருக்க டா…?” என்று கேட்டதும் கண்ணீரே வந்து விட்டது.

 

நண்பர்கள் இருவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்தனர். பின், அவனிடம் மன்னிப்பு கேட்கும் பொருட்டு, “சாரி டா… என்னால தான் நீ அந்த வீட்டு…” என்று சதீஷ் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவனை இடைமறித்த அர்ஜுனின் மாமா, “அர்ஜுன், சதீஷ் முழிச்சு ரொம்ப நேரம் ஆச்சு… டாக்டர்ட எப்போ டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு கேட்டுட்டு வரீயா… வேற ஏதாவது ஃபார்மாலிட்டிஸ் இருக்கான்னும்  கேட்டுட்டு வா…” என்று அர்ஜுனை அனுப்பி வைத்தார்.

 

அவரின் செய்கையை புருவம் சுருக்கி பார்த்துக் கொண்டிருந்த சதீஷின் அருகே வந்தவர், “சதீஷ், அர்ஜுனுக்கு அங்க நடந்த சம்பவம் எதுவும் நியாபகம் இல்ல… கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முற்பட்ட நிகழ்வுகள் அவனுக்கு மறந்துருச்சு…” என்றார்.

 

அதைக் கேட்ட சதீஷிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

 

“என்ன அங்கிள் சொல்றீங்க… அர்ஜுன எங்க பார்த்தீங்க…? எனக்கு நியாபகம் இருந்த வர அவன் அந்த வீட்டுக்குள்ள தான் இருந்தான்…” என்று கேட்டான் சதீஷ்.

 

“அர்ஜுன நாங்க கண்டுபிடிச்சது, அந்த கிராமத்துக்கு பக்கத்துல இருந்த கிராமத்துல தான்… உங்களோட விஷயம் கேள்விப்பட்டு அங்க வந்தப்போ, உன்ன ஹாஸ்பிடல்ல சேர்த்துருந்தாங்க… அர்ஜுன் எங்க தேடியும் கிடைக்கலன்னு சொன்னாங்க… அந்த வீட்டுக்கு போய் பார்க்கலாம்ன்னு போனா, அதுக்குள்ள அந்த வீடு உள்ள போயிடுச்சுன்னு சொன்னாங்க… அவங்க எல்லாரும் அர்ஜுன் அந்த வீட்டுக்குள்ள தான் இருந்தான்… அந்த வீடு உள்ள போயிட்டதால, அவன் உயிரோட இருக்க மாட்டான்னு சொல்லிட்டாங்க… ஆனா எனக்கு தான் மனசுக்குள்ள அர்ஜுன் உயிரோட தான் இருக்கான்னு தோணுச்சு…”

 

“அதுக்கப்பறம் எல்லா இடத்துலயும் தேட ஆரம்பிச்சோம்… ஆறு மாசமா அவன பத்தி எந்த செய்தியும் இல்ல… நம்பிக்கையே இல்லாம இருந்தப்போ தான், அந்த கிராமத்துல ரொம்ப அடிபட்ட ஒருத்தன் அந்த ஊரு ஹாஸ்பிடல்ல இருக்கான்னு தெரிஞ்சுது… அங்க போய் பார்த்தப்போ அது அர்ஜுன்னு தெரிஞ்சுது… உடம்பு முழுசும் அடிபட்டு இருந்தால, கிட்டத்தட்ட ஆறு மாசம் மயக்கத்தில தான் இருந்தானாம்…”

 

“ஒரு நிமிஷம் கூட தாமதிக்காம அங்கயிருந்து உன்னையும் அவனையும் இங்க கூட்டிட்டு வந்துட்டோம்… அந்த ஊரப் பொறுத்த வரை அர்ஜுன் இறந்துட்டான்… இங்க வந்த பிறகு தான் அர்ஜுனுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடி நடந்தது எதுவும் நியாபகம் இல்லன்னு கண்டுபிடிச்சோம்… அதுக்குப்பறம் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமா பயிற்சி குடுத்து பழையபடி மாத்துனோம்… ஆனா பழைய நியாபகங்கள மட்டும் அவனுக்கு கொண்டு வர முயற்சி செய்யல… அந்த ஒரு வருஷத்துக்கான நியாபகம் அவனுக்கு இல்லாமையே போகட்டும்னு விட்டுட்டோம்…” என்றார்.

 

அவரின் மனநிலையை புரிந்தவன், “கவலப்படாதீங்க அங்கிள்… அவனுக்கு பழசு எதுவும் நியாபகம் வர மாதிரி எதுவும் பேச மாட்டேன்…” என்று உறுதியுடன் கூறினான் சதீஷ்.

 

“ஆனா அங்கிள், அவன் இந்தியா போகணும்னு சொல்லவே இல்லயா… ஏன்னா அவனோட கனவே சொந்தமா சினிமா இயக்கணும்ங்கிறது தான…” என்று வினவினான்.

 

“எனக்கும் தெரியும் சதீஷ்… ஆனா கனவுக்காக அவன் உயிர பணயம் வைக்க நான் விரும்பல… அதான் அவங்க அம்மாவோட கடைசி ஆச, இங்க இருக்க என் பிசினஸ பார்த்துக்கணும்னு சொல்லி, அவன இங்கயே இருக்க வச்சுட்டோம்…” என்றார் கவலையுடன்.

 

“அங்கிள்… அப்போ அர்ஜுனோட அம்மா….”

 

“ஹ்ம்ம் இப்போ உயிரோட இல்ல… உங்களுக்கு அந்த வீட்டுல நடந்தது தெரிஞ்சதுலயே அவ உயிர விட்டுட்டா…”

 

தான் செய்த ஒரு செயல் எத்தனை உயிரைக் காவு வாங்கியிருக்கிறது என்பதை நினைத்து நொந்து போனான் சதீஷ்.

 

அவனின் பாவனையிலேயே அவனின் எண்ணத்தை அறிந்த அர்ஜுனின் மாமா, “சதீஷ், நீ தேவையில்லாம கவலப்படுற… நீ அந்த வீட்டுக்கு போறதுக்கான ஐடியா குடுக்காம இருந்தாலும், ‘அது’ அர்ஜுன கண்டிப்பா அங்க வர வச்சுருக்கும்…” என்றார் விரக்தியுடன்.

 

அவர் கூறுவதிலிருந்தே, அர்ஜுனுக்கும் அந்த வீட்டிற்கு ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்பதை அறிந்த சதீஷ் அவரைப் பார்க்க, அவர் இருபது வருடங்களுக்கு முன் நடந்ததைக் கூறினார்.

 

அதைக் கேட்ட சதீஷிற்கு, இப்படி கூட நடக்குமா என்று தான் தோன்றியது.

 

“இதுக்கு தான் அர்ஜுன் மறுபடியும் இந்தியா போகக் கூடாதுன்னு சொல்றேன்…” என்றார் அர்ஜுனின் மாமா.

 

“கவலப்படாதீங்க அங்கிள்… இங்க இருக்க வரை அர்ஜுனுக்கு எந்த ஆபத்தும் இல்ல… அதுவும் அவனுக்கு பழைய நியாபகங்கள் இல்லாததால, இந்தியா போகணும்ங்கிற எண்ணமும் அவனுக்கு இருக்காது…” என்று சொன்னவனிற்கு அப்போது தான் அவள் நியாபகத்திற்கு வந்தாள்.

 

“நிஷா….” என்று அவனின் உதடு முணுமுணுத்தது.

 

 

அமானுஷ்யம் தொடரும்….

 

 

இன்றைய. அமானுஷ்ய இடம்….

 

முகேஷ் மில்ஸ் (Mukesh Mills, Mumbai)

 

 

நாம் அடுத்து பார்க்கப்போவது பல பாலிவுட் படங்களுக்கும், ஹிந்தி தொலைக்காட்சி நிகழ்சிகளுக்கும் படப்பிடிப்புத்  தளமாக இருக்கும் முகேஷ் மில்ஸ். மும்பையியுள்ள  கோலாபாவில் உள்ள இந்த ஆலை, பாழடைந்த கிடங்கு போல் காட்சி தருவதால், இங்கு செல்லும்போது இயல்பாகவே விசித்திரமான உணர்வுகள் எழுகின்றன.

 

1870களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆலை 1980 வரை வெற்றிகரமாகவே சென்று கொண்டிருந்தது. 1980ல் நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், சிறிது காலம் தற்காலிகமாக ஆலை மூடப்பட்டது. பின் நடந்த தீவிபத்தால், இப்போது இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

 

அதன் பின் ஆலை மீட்டெடுக்கப்படாமல் இருந்தாலும், அதன் வெளிப்புறத் தோற்றத்தின் காரணமாக, பல பாலிவுட் படங்களின் படப்பிடிப்பு இடமாக மாறியது.

 

ஆனால் அங்கு நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகளால், படப்பிடிப்பை சூரிய அஸ்தமனத்திற்குப் முன்பே முடித்துவிட்டு அனைவரும் கிளம்பிவிடுவார்களாம். சிலர் அங்கு வித்தியாசமான குரல்களை கேட்டிருக்கின்றனராம். பல சமயங்களில் அவர்களின் பொருட்கள் காணாமல் போகும் சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றனவாம். இதனாலேயே இரவில் இங்கு யாரும் இருப்பதில்லையாம்.

 

இங்கு நடந்த ஒரு அமானுஷ்ய நிகழ்வு… பிபாஷா பாசு, இங்கு அவரின் படம் ஒன்று படபிடிக்கப்பட்ட போது நிகழ்ந்ததை பகிர்ந்து கொண்டார்… அங்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அவரால் வசனங்களை சரியாக வழங்க முடியவில்லையாம். மற்ற இடங்களில் அந்த பிரச்சனை ஏற்படவில்லை என்று கூறுகிறார்.  யாரோ அவரை வசனங்களைக் கூற விடாமல் தடுப்பதைப் போன்று உணர்ந்ததாக கூறுகிறார்.

 

இதே போல் சிலர், தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று மற்றவர் வேறு ஒருவரின் குரலில் பேசியதாகவும், குறிப்பிட்டுச் சொன்னால், ஒரு பெண் ஆண் குரலில் பேசியதாகவும் கூறுகின்றனர்.

 

இப்போது அந்த ஆலை, விழாக்களுக்காக முன்பதிவு (!!!) செய்யப்படுவதாகக் கூறுகின்றனர். மேலும் அங்கு சீரமைப்புப் பணி நடக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.