மிரட்டும் அமானுஷ்யம் 17

 

 

 

மிரட்டல் 17

 

தூரத்தில் கோட்டான்கள் அலறும் சத்தம், அந்த மயான அமைதியை கிழித்துக் கொண்டு வர, அந்த சின்ன அறையில் மூச்சு விட்டால் கூட ‘அது’ தங்களை கண்டுபிடித்து விடுமோ என்று பயந்து போய் அமர்ந்திருந்தனர் அம்மூவரும். 

 

“என்ன ஓடி ஒளிஞ்சுகிட்டீங்களா… அவ்ளோ சீக்கிரம் உங்கள தப்பிக்க விடுவேனா… ஹ்ம்ம் எனக்கும் இது மாதிரி ஒளிஞ்சு விளையாடி ரொம்ப நாளாச்சு… இப்போ உங்க ஒவ்வொருத்தரையா கண்டுபிடிக்க போறேன்… கண்டுபிடிச்சு கொல்ல போறேன்…” என்று பேய் சிரிப்பு சிரித்தது ‘அது’.

 

அதன் பின் எந்தவொரு சத்தமும் கேட்கவில்லை… நொடிகள் நீண்டு கொண்டிருக்க, அதற்கு மேல் பொறுமை அற்றவனாக ஆதர்ஷ் அங்கிருந்து எழுந்து செல்ல முயன்றான்.

 

அவனை இழுத்து மீண்டும் அமரவைத்த விஷ்வா, “டேய் எங்க டா போற…” என்று மிக மெலிதான குரலில் முணுமுணுத்தான். அவ்வளவு நேரம் இருட்டாக இருந்த இடம், விஷ்வாவின் கையிலிருந்த லைட்டரினால் சற்று வெளிச்சம் பெற்றது. அந்த வெளிச்சம் அவர்கள் மூவரின் முகங்கள் தெரியும் அளவே இருந்தது.

 

“ப்ச்… எவ்ளோ நேரம் டா இப்படியே இருக்குறது… ஜானு வேற இப்போ எந்த நெலமைல இருக்கானு தெரியல…” என்று சற்றே எரிச்சலான குரலில் கூறினான்.

 

ஆதர்ஷின் மனமோ ஜான்விக்காக தவித்தது. அவனாலேயே அவளின் பிறப்பின் ரகசியத்தை இயல்பாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளால் எப்படி முடியும்… இப்படி அவளைக் கொல்வதையே தன் லட்சியமாக கொண்டிருக்கும் தாய்…. இதை அறிந்தால் அவளின் மனநிலை… இவையெல்லாம் அவனின் மனதில் தோன்ற, எப்படியாவது தன்னவளை இந்த சுயநல பிசாசிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தான்.

 

ஆதர்ஷின் மனம் உணர்ந்த விஷ்வாவும் அவன் தோளின் மீது கை வைத்து, “எனக்கு புரியுது டா… ஆனா இப்போ வெளிய போய் ‘அது’ கிட்ட மாட்டிக்கிட்டா, ஜானுவ எப்படி காப்பாத்துறது…” என்றான்.

 

“இப்போ நமக்கு இருக்க ஒரே வழி, யாராவது ஒருத்தர் அத டைவர்ட் பண்ணி, அதோட கவனம் மத்தவங்க மேல இல்லாம பார்த்துகிட்டா, ஜானுவ கண்டுபிடிச்சு வெளிய கூட்டிட்டு போயிடலாம்… எனக்கு தெரிஞ்சு அதால, இந்த வீட்டோட எல்லைய தாண்டி வர முடியாது… சோ இங்கயிருந்து வெளிய போயிட்டா நம்ம சேஃப் தான்…” என்றான்.

 

“ஆனா இது நீ சொல்ற மாதிரி அவ்ளோ ஈசியானது இல்ல ஆது… ரொம்ப ரிஸ்க்கானது…” என்று சாக்ஷி கூற, “தெரியும் சாக்ஷி… அதுக்காக இப்படியே எவ்ளோ நேரம் ஒளிஞ்சுகிட்டு இருக்குறது… எதுவும் பண்ணாம இருக்குறதுக்கு ஒரு முயற்சி பண்ணி பார்ப்போம்…” என்றான்.

 

“சரி டா உன் பிளான் என்ன…” என்று விஷ்வா கேட்க, “ஃபர்ஸ்ட் நான் வெளிய போய் பாக்குறேன்… அது அங்க இல்லனா எல்லாரும் சேர்ந்து ஜானுவ தேடலாம்… சப்போஸ் அது அங்க இருந்தா, நான் எப்படியாவது அத டைவர்ட் பண்ணுறேன்… நீங்க ரெண்டு பேரும் அது கண்ணுல மாட்டாம ஜானுவ தேடிப் போங்க…” என்றான்.

 

“ஹே என்ன விளையாடுறியா… உன்ன ‘அது’ கிட்ட விட்டுட்டு எப்படி டா…”

 

“விஷு… எனக்கு ஒன்னும் ஆகாது டா… அதோட டார்கெட் ஜானு தான்… சோ அவள தான் எப்படியாவது காப்பாத்தணும்…” என்று கூறிக் கொண்டிருக்கும்போதே, “அப்போ நான் என்ன செய்யணும்…” என்ற குரல் அவர்களின் அருகில் கேட்க, மூவரும் அதிர்ச்சியாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். விஷ்வா அவன் கையிலிருந்த லைட்டரை உயர்த்திப் பிடிக்க, அங்கு ரத்தக் கறையுடைய தன் பற்களைக் காட்டி சிரித்தது ‘அது’.

 

மூவரும் அந்த அறையிலிருந்து வெளியே ஓடி வந்தனர்.  “ச்சே இவ்ளோ நேரம் அது உள்ள தான் இருந்துருக்கு… அது தெரியாம நாம பிளான் போட்டுட்டு இருந்துருக்கோம்…” என்று விஷ்வா கூறினான்.

 

“விஷு இப்போ நமக்கு நேரம் இல்ல… எப்படியாவது ஜானுவ சீக்கிரம் கண்டுபிடிக்கணும்… சோ நாம இப்போ பிரிஞ்சு போய் தேடலாம்… நீயும் சாக்ஷியும் சேர்ந்து மாடிக்கு போய் தேடுங்க… நான் கீழ தேடுறேன்…” என்றான் ஆதர்ஷ்.

 

அவர்களோ அவனையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களை லேசாக அணைத்தவன், “எல்லாம் கொஞ்ச நேரம் தான்… நம்ம ஜானுவுக்காக… சீக்கிரமே இங்கயிருந்து போயிடலாம்…” என்று நம்பிக்கையாக பேசினான்.

 

அதன்பின் மூவரும் அவரவர்களின் திசைகளில் செல்ல, அதை உத்தரத்தில் தொங்கியபடி பார்த்துக் கொண்டிருந்த ‘அது’, ‘ம்ம்ம் நெனச்ச மாதிரியே பிரிஞ்சு போறாங்க…  இப்போ முதல யாருக்கிட்ட இருந்து தொடங்குறது…’ என்று நினைத்து சிரித்தது ‘அது’.

 

**********

 

மேல் மாடிக்கு சென்ற சாக்ஷியும் விஷ்வாவும் அங்குள்ள ஒவ்வொரு அறைகளையும் நோட்டமிட்டவாறே சென்றனர். வெளியே எதையும் காட்டிக்கொள்ளா விட்டாலும், உள்ளே பயத்துடனே சென்றனர். 

 

முதல் இரண்டு அறைகளை கண்டவர்கள், அங்கு ஒன்றுமில்லாததால், அடுத்தடுத்த அறைகளில் தங்களின் தேடுதலை துவங்கினர். அப்போது ஒரு இடத்தில் சொடுக்கியை (ஸ்விட்ச்) கண்ட விஷ்வா,  அதை அழுத்த அந்த நீளமான தாழ்வாரம் முழுவதும் ஒளிர்ந்தது.

 

“ஹே லூசா நீ… இப்போ எதுக்கு லைட்ட போட்ட… அது வந்துடப் போகுது…” என்று படபடத்தாள் சாக்ஷி.

 

“இருட்டுல இருந்தா மட்டும் அது கண்டுபிடிக்காதா… வெளிச்சமா இருந்தாலாவது சீக்கிரம் தேடி வேலைய முடிக்கலாம்… வா..” என்று அவளின் கையைப் பிடிக்க முயல, சட்டென்று கையை உருவியவள், “எனக்கு உண்ண பார்த்தா சந்தேகமா இருக்கு…” என்று கூறினாள்.

 

“அடிப்பாவி… உன்னோட வந்ததுக்கு தனியாவே வந்துருக்கலாம்…” என்று அவன் நடக்க ஆரம்பிக்க, “டேய் நில்லு டா…” என்று கத்திக் கொண்டு அவளும் பின்னாடியே ஓடினாள்.

 

ஆனால் இருவரும் ஒன்றை மறந்து விட்டனர்… பல காலமாக யாருடைய புழக்கத்திலும் இல்லாத இந்த அமானுஷ்ய வீட்டில், மின்சாரம் எவ்வாறு இருக்கும் என்பதை யோசிக்க மறந்தனர்.

 

**********

 

ஆதர்ஷோ கீழிருக்கும் அனைத்து அறைகளிலும் தேடி விட்டான், ஒன்றை தவிர… அதை அவனால் திறக்க முடியவில்லை… உள்ளே ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று காதை வைத்து கேட்க, உள்ளே எந்த சத்தமும் கேட்கவில்லை. 

 

மற்ற அறைகளையும் ஆராய்ந்தவன், அங்கு எதுவும் பயனுள்ளதாக கிடைக்காததால், யோசித்தவாறே நடு கூடத்தில் நின்றான். அப்போது அவனின் பார்வை அவர்கள் ஒளிந்திருந்த சிறிய அறையை நோக்கியது. அவனை அந்த அறைக்கு செல்ல யாரோ உந்துவதாக அவனிற்கு தோன்றியது. மெல்ல அந்த அறையை நோக்கி நடந்தான்.

 

***********

 

 “ஆமா, நாம வந்தப்போவே லைட்ட போட்டுருக்கலாமே…ஏன் தேவையில்லாம மொபைல்ல டார்ச்ச ஆன் பண்ணோம்…” என்று கேட்டுக் கொண்டே நடந்த சாக்ஷிக்கு சட்டென்று நினைவு வர, “ஹே நில்லு… இந்த இடத்துல எப்படி கரண்ட் இருக்கும்…” என்று விஷ்வாவைப் பார்த்து கேட்டாள்.

 

விஷ்வாவோ அவளை, ‘ஏன்’ என்ற ரீதியில் பார்த்து வைக்க, “ஹே லூசு.. இது ரொம்ப நாளா யாருமே இல்லாத அமானுஷ்ய இடம்… இங்க எப்படி கரண்ட் இருக்கும்…” என்று அவள் சொல்லவும், அங்கு ஏதோ சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.

 

அது என்ன சத்தம் என்று பயந்து கொண்டே பார்த்தவர்கள், அந்த தாழ்வாரத்தின் முடிவில் ஒரு கருப்பு உருவம் தெரிவதைக் கண்டனர். இவர்கள் அதைக் கண்டதும், இவர்களை நோக்கி அது ஓடி வந்தது. அது ஒவ்வொரு அறையைக் கடக்க கடக்க, அங்கிருந்த வெளிச்சம் மறைந்து இருட்டானது.

 

விஷ்வாவும் சாக்ஷியும், அது தங்களை நோக்கி வருவதை உணர்ந்தாலும், அடுத்து என்ன செய்வது, அதனிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசிக்கக் கூட முடியாதவாறு அவர்களின் மூளை மரத்து போயிருந்தது.

 

இதோ இன்னும் இரு நொடிகளில், அவர்களின் உயிர் போகப் போகிறது என்ற நேரத்தில், இருவரும் கண்களை இறுக்கி மூடிக் கொண்டனர். 

 

**********

 

இங்கு ஆதர்ஷோ, அந்த சிறிய அறையின் கதவை திறக்க முயல, “விஷு…” என்று சாக்ஷி அலறிய சத்தம் கேட்டு மாடிக்கு விரைந்தான்.

 

அந்த சத்தம் விஷ்வா மற்றும் சாக்ஷிக்கும் கேட்டது… ஆனால் அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு எதிர் திசையிலிருந்து கேட்டது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். 

 

சற்று நேரத்திற்கு முன் தங்களை நோக்கி வந்த அந்த உருவமும் அங்கு இல்லை. 

 

விஷ்வா சந்தேகமாக, “நீ எதுவும் இப்போ கத்துனியா…” என்று சாக்ஷியைப் பார்த்து கேட்டான்.

 

“லூசா நீ, நான் கத்துனா இங்கயிருந்து தான சத்தம் கேட்கும்… அங்கயிருந்து எப்படி சத்தம் கேட்கும்…” என்று எதிர் திசையைக் காட்டினாள். செவ்வக வடிவமைப்பிலிருந்த மாடியில், அவர்களின் எதிர் திசையிலிருந்தது,  அவர்கள் ஏறி வந்த படிக்கட்டுகள். அதில் யாரோ ஏறுவது தெரிந்தது. வெளிச்சத்தில் பார்த்தபோது அது ஆதர்ஷ் என்று தெரிந்தது.

 

“ஹே அது ஆது தான…” என்று சாக்ஷி வினவ, “ஆமா…” என்றான் விஷ்வா.

 

உற்று நோக்கியவர்கள், அவனின் பின்னால் ‘அது’ செல்வதையும் கவனித்தனர். ஆதர்ஷை எச்சரிக்க எண்ணி, இருவரும் கத்தினர். ஆனால் அது அவனின் செவிகளை ஏறினால் தானே…

 

இவர்களின் கத்தலுக்கு எதிரொலியாய், ‘அது’ இவர்களை திரும்பிப் பார்த்து கொடூரமாக சிரித்தது.

 

அதில் பயந்தவர்கள் பின்வாங்கினர். 

 

“டேய் ஆதுவ எப்படியாவது காப்பாத்தணும் டா…” என்று கவலையுடன் சாக்ஷி கூற, ஒரு பெருமூச்சை வெளியிட்டவன், “ம்ம்ம் ஆமா… இனி பயந்துட்டு  இருக்குறதுல அர்த்தம் இல்ல… நம்ம ஃபிரெண்ட்ஸுக்காக இந்த ரிஸ்க்க எடுத்து தான் ஆகணும்…” என்று கையை நீட்ட, சாக்ஷியும் ஆமோதிப்பாக தலையசைத்து அவனின் கைகளை கோர்த்துக் கொண்டாள். பின் தாமதிக்காமல், இருவரும் ஆதர்ஷ் ஏறிவந்த படிக்கட்டை நோக்கி ஓடினர்.

 

அங்கு ஆதர்ஷோ, சத்தம் வந்த இடத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான். அவன் நின்றிருந்த இடத்திற்கு சற்று தொலைவில், ஒரு பெண் அமர்ந்து அழுது கொண்டிருப்பது போல இருந்தது. முதலில் சாக்ஷி தான் என்று எண்ணி அவளை நோக்கி அடியெடுத்து வைத்தவன், நான்கு அடிகள் எடுத்து வைத்த பின்பே அதை கவனித்தான்.

 

அவள் அணிந்திருந்த உடை, சாக்ஷி அணிந்திருந்த உடை அல்ல… அவளை நோக்கி அடியெடுத்து வைக்கவும், அவளின் விசும்பல் ஒலியும் குறைந்து, பற்கள் நரநரவென கடிக்கப்படும் சத்தம் கேட்டது.

 

அப்போது தான் அவனிற்கு இது ‘அதன்’ வேலையோ என்று தோன்றியது. யோசிக்காமல் வந்து மாட்டிக் கொண்டோமோ என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், அது மெதுவாக எழுந்தது.

 

ஆதர்ஷ் மெல்ல தன் அடிகளை பின்னோக்கி எடுத்து வைக்க, “அதுக்குள்ள எங்க போற ஆது… இங்க பாரு விஷுவ…” என்று சாக்ஷியின் குரலில் பேசியது, கீழ் நோக்கி கையைக் காட்ட, அங்கு முகம் முழுக்க இரத்தமாய் கீழே விழுந்தது கிடந்தான் விஷ்வா.

 

நண்பனின் அந்த நிலையைக் கண்டவன், பதறி அவனருகே செல்ல நினைக்க, அது காட்சிப்பிழையாக இருக்கக் கூடுமோ என்று சந்தேகித்து அதைக் காண, அவ்வளவு நேரமும் அவனிற்கு எதிர்திசையில்  திரும்பியிருந்த ‘அது’, சட்டென்று திரும்பி, “என்ன உன் ஃபிரெண்ட காப்பாத்த வர மாட்டீயா…?” என்று கர்ஜித்தது.

 

அதில் சற்று பயந்தவன், மீண்டும் பின்னோக்கி செல்ல ஆரம்பிக்க, “அதுக்குள்ள எங்க போற…” என்று கேலியாக கேட்டதன் கை நீண்டு அவனின் கழுத்தைப் பற்றி தூக்கியது.

 

இந்த காட்சியைத் தான், ஓடிவந்த விஷ்வாவும் சாக்ஷியும் கண்டனர்.

 

“உன்ன அவ்ளோ சீக்கிரம் அவள பார்க்க விட்டுடுவேணா… ஓ அவ மேல உனக்கு எக்கச்சக்க காதல்ல… இப்படி தான் பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தி வந்தா.. கடைசில அவ இறந்தது தான் மிச்சம்… எங்க அவ காதலன நான் கொன்றுவேனோன்னு இப்போ உங்கள இங்க அனுப்பி வச்சதும் அவ தான்… பாவம் அவளுக்கு தெரியல, அவ யாருக்காக உயிர விட்டாளோ அவனும் இன்னிக்கு சாகப் போறான்னு…”

 

அது கூறியத்திலிருந்தே, நிஷா தான் அந்த பெண் என்பது புரிந்தது. நிஷாவின் இறப்பின் பின்னிருந்த மர்மமும், அவளின் காதலும் அறிந்த மூவரின் உள்ளமும் கனத்து தான் போனது… அவள் அவர்களை இங்கு அனுப்பி வைத்ததைக் கூட அவளின் காதலின் ஆழத்தை உணர்த்தும் செயலாகத் தான், அவர்களுக்கு தெரிந்தது. நிச்சயம் அவளின் மேல் கோபம் ஏதும் இல்லை… வருத்தம் மட்டுமே…

 

ஆதர்ஷ் அதையும் தாண்டி, ‘அது’ கூறிய முதல் வரியையே மனதிற்குள் ஓட்டிப் பார்த்தவன், ஏதோ முடிவெடுத்தவனாக நிமிர, அப்போது தான் அவனிற்கு எதிரில் சற்று தொலைவில் நின்றிருந்த விஷ்வாவைவும் சாக்ஷியையும் கவனித்தான். 

 

அதற்கு தெரியாமல் அவர்களிடம் கண்களால் ஜாடை செய்தான். முதலில் அவன் சொல்ல வருவதை புரியாதவர்கள், பின் அவன் கண்களால் சுட்டிக்காட்டிய திசையைக் கண்டவர்கள், அங்கிருந்த அந்த சிறிய அறையைக் கண்டு, அவன் தங்களை அங்கு போக சொல்வதாக எண்ணினர்.

 

“ஜானு அங்க இருப்பான்னு சொல்றானோ…” என்று சாக்ஷி விஷ்வாவிடம் முணுமுணுக்க, “அங்க தான் எதுவுமே இல்லயே… வெறும் குட்டி ரூம் மாதிரி தான இருந்துச்சு…” என்று அவனும் முணுமுணுத்தான்.

 

“அங்க தரைல சின்ன கேப் இருந்த மாதிரி இருந்துச்சு…” என்றாள் தயக்கத்துடன்.

 

“அட பக்கி… அத அங்கேயே சொல்லிருக்க வேண்டியது தான…”

 

“எனக்கு அப்போ அது பெருசா தோணல… இப்போ ஆது ஏதோ சொல்ல வரவும் தான், ஒருவேள கீழ ஏதாவது கராஜ் மாதிரி இருக்குமோன்னு தோணுது…” என்றாள் பாவமாக.

 

மேலும் தாமதப்படுத்த விரும்பாத விஷ்வாவும், “சரி வா அங்க போய் பார்க்கலாம்…” என்று அவளை அழைத்துச் செல்ல முயல, “ஆது…” என்று அதனிடம் சிக்கிக் கொண்டிருந்த ஆதர்ஷை காட்டினாள் சாக்ஷி.

 

“அவன் தான் சொன்னான்ல… இப்போ ஜானுவ காப்பாத்துறது தான் முக்கியம்… அவன் எப்படியாவது தப்பிச்சுடுவான்…” என்று நண்பனை அறிந்தவனாக கூறினான்.

 

இருவரும் அங்கிருந்து செல்ல எத்தனிக்க, “அதுக்குள்ள எங்க போறீங்க ரெண்டு பேரும்…” என்றது ‘அது’.

 

அதில் திடுக்கிட்டு திரும்பினர் இருவரும். அதுவோ, தலையை 180 டிகிரி திருப்பி இவர்களை பார்த்து சிரித்தது. உடல் எதிர்திசையில் திரும்பியிருக்க, தலை மட்டும் இவர்களை நோக்கி திரும்பியிருக்க, அந்த காட்சியைப் பார்த்த சாக்ஷிக்கு மயக்கமே வரும் போல இருந்தது.

 

அதன் மற்றொரு கை நீண்டு, விஷ்வாவையும் கழுத்தை இறுக்கிப் பிடித்து தூக்கியது. “என்ன ரெண்டு பேரும் உங்க ஃபிரெண்ட காப்பாத்த போறீங்களோ… முதல உங்கள யாரு காப்பாத்துவான்னு பாருங்க…” என்று சத்தமாக சிரித்தது. 

 

அப்போது, “வள்ளி…” என்ற சத்தம் அந்த வீட்டில் எதிரொலித்தது.

 

அந்த சத்தத்தில், அவர்களை கீழே போட்ட ‘அது’, “மாமா…” என்ற அழைப்போடு வீட்டின் நடுகூடத்தில் அவர் நின்றிருந்த இடத்திற்கு சென்றது. அங்கு நின்றிருந்தவர் விக்னேஸ்வரன்.

 

அவருடன் வந்த அர்ஜுன், பிபுல் இருவரும் அதன் ‘மாமா’ என்ற அழைப்பில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

அவரின் அருகில் வந்த ‘அது’, “இப்படின்னு பாசமா ஓடி வருவேன்னு நெனச்சியா…” என்று அதன் கையசைவில் அவரை கீழே தள்ளியது.

 

“விக்கிப்பா…” என்று கூவியபடி, அவரைத் தூக்கி கையணைவில் வைத்துக் கொண்டான் அர்ஜுன்.

 

“இவ்ளோ நாள் எனக்கு பயந்து, பைத்தியம் மாதிரி நடிச்சுட்டு இருந்தவன், இப்போ என்னயே அதட்டுறியா…” என்று கோபமாக வினவியது.

 

“இவ்ளோ நாள் உனக்கு பயந்துட்டு இருந்தது உண்மை தான்.. ஆனா அது என் பொண்ணுக்காக… எப்போ என் பொண்ணுக்கே ஆபத்துன்னு தெரிஞ்சுதோ, இனியும் பயந்துட்டு இருப்பேன்னு நெனச்சியா… என் உயிர குடுத்தாவது அவள காப்பாத்துவேன்….”

 

“ஹாஹா…” என்று பெருங்குரலில் சிரித்தது. “நீ சொன்னதுல பாதி நடக்கும்… அதான் நீ உயிர குடுக்குறேன்னு சொன்னீயே, அது நடக்கும்… நீ மட்டுமில்ல, இங்க வந்த எல்லாரும் சாகத் தான் போறீங்க… ஹாஹா…”என்று சிரித்தது. “அதுவும் எங்க தெரியுமா… எந்த வீட்ட எனக்கு தராம ஏமாத்தி சாகடிச்சீங்களோ, அதே வீட்டுல…” அதன் குரலில் பழிவெறி தாண்டவமாடியது.

 

“உங்களுக்கே நீங்க சொல்றது நியாயமா இருக்கா… எங்க தாத்தா கூட அந்த வீட்ட உங்க பேர்ல எழுதி வைக்குறதா சொன்னாரே… உங்கள அவங்க கொன்னாங்களா… அதுவும் ஏமாத்தி…” என்று அர்ஜுன் கேட்க, அவனை முறைத்தது ‘அது’.

 

********

 

இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க, ஆதர்ஷ், சாக்ஷி, விஷ்வா மூவரும் அந்த சிறிய அறைக்கு சென்றனர். சாக்ஷி தான் கண்ட இடத்தைக் காட்ட, அதன் கீழே மற்றொரு தளம் இருப்பது போல் தெரிந்தது. ஆதர்ஷும் விஷ்வாவும் அதை சத்தம் வராமல் திறக்க முயன்றனர். 

 

அவர்களின சில நிமிட முயற்சிகளுக்கு பின், அந்த கதவு திறந்தது. அவர்களை நினைத்தது போலவே கீழே செல்வதற்கான படிக்கட்டுகள் இருந்தன. அவர்கள் மூவரும் கீழே விரைந்தனர். 

 

கீழேயிருந்த அறையில் ஏற்கனவே மெல்லிய வெளிச்சம் பரவியிருந்ததால், அவர்களுக்கு அங்கு செல்வதற்கு பிரச்சனை ஏற்படவில்லை. ஆனால் அந்த வெளிச்சத்தில் அங்கு தெரிந்த காட்சிகள் பயமுறுத்துவதாகவும் அருவருப்பாகவும் இருந்தன.

 

பல எலும்புக்கூடுகள் சிதறியிருந்தன. சில உடல் உறுப்புகள் மக்கியும் மக்காத நிலையிலும் இருந்தன. மேலும் அதனால் ஏற்பட்ட துர்நாற்றமும் குடலை பிடுங்குமளவிற்கு இருந்தது. (முன்பு நிஷா இருந்த அதே இடம்…)

 

அதைக் கண்ட சாக்ஷி கத்தப்போக, விஷ்வா அவளின் வாயைப் பொத்தினான். ஆதர்ஷோ கண்களை மூடி சமநிலைக்கு வந்தவன், ஜானுவைத் தேட, ஒரு ஓரத்தில், ஒரு மரப்பெட்டிக்கு மேல் படுத்திருந்தாள், அவனவள்.

 

வேகமாக அவளின் அருகே சென்றவன், அவளின் கன்னத்தில் தட்டி, அவளை சுயநினைவிற்கு அழைத்து வர முயற்சித்தான். ஆனால் அவள் எழவே இல்லை. என்ன செய்வதென்று மூவரும் யோசிக்கும் வேளையில், சட்டென்று அங்கு உயரத்திலிருந்த ஜன்னல் கதவு திறந்து, வெளியில் லேசாக தூறிக் கொண்டிருந்த மழைத் துளிகள் ஜான்வியின் மேல் பட்டது.

 

மூவரும் அந்த ஜன்னலைத் திறந்தது யாரென்று யோசிக்க, அதற்கு விடையாய் ஜன்னலுக்கு அருகில் சுவரில், அவர்களை இவ்வீட்டிற்கு செல்லத் தூண்டிய நிழலைக் கண்டனர்.

 

சாக்ஷி அந்த ஜன்னலருகே சென்று கைகளில் மழை நீரைப் பிடித்து ஜான்வியின் முகத்தில் தெளிக்க, அவள் மயக்கத்திலிருந்து முழித்தாள்.

 

முழித்தவளிற்கு, சற்று முன் அவளிற்கு நிகழ்ந்த சம்பவங்கள் நினைவிற்கு வர, அவளின் உடல் நடுங்கியது.

 

அதைக் கண்ட ஆதர்ஷ், அவளை லேசாக அணைத்து, “ஒன்னுமில்ல ஜானு… யூ ஆர் சேஃப்…” என்று அவளிற்கு ஆறுதலளித்தான்.

 

“ஆது… நித்துமா… நித்துமா… இங்க…” என்று தேம்பினாள்.

 

அவளின் முகத்தை நிமிர்த்தியவன், அவளின் கண்ணீரை துடைத்து, “உன் நித்துமா எங்கயும் போகல ஜானு… எப்பவும் உங்கூட தான் இருப்பாங்க…” என்று சுவரில் தெரிந்த நிழலறுவத்தைக் காட்டினான்.

 

அதனருகே சென்றவள், “நித்துமா…” என்று தடவி கொடுக்க, சுவரின் தெரிந்த ஜான்வியின் நிழலை வருடினார் நிழலருவாய் இருந்த அவளின் ‘நித்துமா’…

 

********

 

இங்கு விக்னேஸ்வரன் – வள்ளி – அர்ஜுன் இவர்களின் சம்பாஷணை நடந்து கொண்டிருக்க,  பிபுல் அடிக்கடி வெளியே பார்த்துக் கொண்டிருந்தார்.அவரின் ஒவ்வொரு அசைவையும் கவனித்த ‘அது’ விக்னேஸ்வரனைப் பார்த்து, “என்ன உன் ஃபிரென்ட் இன்னும் வேலைய முடிக்கலையா…” என்று கேலியாக கேட்டது.

 

அதன் கேள்வியில் மூவரும் சற்று அதிர்ந்தது உண்மை தான்.

 

“என்ன கட்டுப்படுத்த, உன் ஃபிரென்ட் அவன் அறிவ உபயோகிச்சு கருவி உருவாக்கிருக்கானாம்… அவ்ளோ ஈசியா என்ன தடுத்துற முடியும்னு நம்புறானா அவன்…” என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தது. “பார்ப்போம்… இன்னிக்கு நானா இல்ல அவன் அறிவான்னு…”

 

அது கூறியது உண்மையே… வீட்டிற்கு வெளியே கங்காதர் தன் வெகு நாள் கண்டுபிடிப்பான அந்த கருவியை பொறுத்திக் கொண்டிருந்தார். அது ஒரு வகையான நியூட்ரலைசர், எதிர்மறை ஆற்றலை மட்டுப்படுத்தும் கருவி. அவர் இதுவரை அதை பெரிய அளவில் சோதித்து பார்க்கவில்லை. இந்த சூழ்நிலையில் அது எவ்வளவு தூரம் பயனளிக்கும் என்பதும் தெரியாது. ஆனால் ஏதோ ஒரு நம்பிக்கையில் அவர் அதை முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு துணையாக சதீஷ் உதவிக் கொண்டிருந்தான்.

 

அப்போது அங்குள்ள ஏதோவொரு அறையிலிருந்து சத்தம் கேட்க, நடுகூடத்திலிருந்த அனைவரும் அங்கே பார்த்தனர்.

 

“எல்லாரும் என்ன சுயநலம்னு சொல்றீங்களே… உங்க கூடவே இவ்ளோ நாள் இருந்துட்டு உங்கள ஏமாத்துன ஒருத்தன் இருக்கான் பாக்குறீங்களா…” என்ற ‘அது’, தன் கையசைவில் கதவைத் திறக்க, அறைக்குள்ளிருந்தவனைக் கண்டு அனைவரும் அதிர்ந்தனர்.

 

அங்கு இருந்தது அர்ஜுனின் மாமா, மணி என்று வீட்டில் அழைக்கப்படும் மஹேந்திரன்.

 

“மாமா…” என்று அதிர்ச்சியோடு அழைத்தான் அர்ஜுன்.

 

“அர்ஜு… என்ன காப்பாத்து… ‘அது’ என்ன கொன்னுடும்…” என்று புலம்பியவாறு அர்ஜுனின் அருகில் செல்ல போனவரின் முன் வந்து நின்றது ‘அது’.

 

“அதுக்குள்ள விட்டுட்டுடுவேணா…” என்று சிரித்தது. பின், விக்னேஸ்வரனிடம் திரும்பியவள், படிக்காத ஒருத்தி டெஸ்ட் டூயூப் பேபி பத்தி எப்படி தெரிஞ்சுகிட்டான்னு உங்களுக்கு தெரியவேணா… என்ன மிஸ்டர். மணி உண்மைய சொல்லிடலாமா…” என்றது.

 

“மணி, என்ன உண்மை…” என்று குழப்பமாக கேட்டார் விக்னேஸ்வரன். அவர் வள்ளி கூறியதிலிருந்து நடந்ததை யூகித்தாலும், மணியின் வாயிலேயே உண்மை வரவேண்டுமென்று கேட்டார்.

 

முதலில் தயங்கியவர், அதன் கோபப் பார்வையைக் கண்டு, உண்மையை கூற ஆரம்பித்தார். “இந்த வீட்ட உங்க அப்பா கிட்ட காமிக்கும்போது, அத வாங்கி மகன்களுக்கு தான் குடுப்பாருன்னு எனக்கு தெரியும்…. முன்னாடியே மகன்களுக்கு ஏதாவது நிலம் வாங்கணும்னு சொல்லிட்டு இருந்தாரு… எப்படியும் மூத்தவரு உங்க அண்ணனுக்கு தான் குடுப்பாருன்னு நெனச்சேன்… அதுவும் உங்க வீட்டுல எந்த சொத்து வாங்குனாலும் பொண்ணுங்க பேர்ல தான் வாங்குவீங்கன்னும் தெரியும்… அதான் இந்த வீடு என் தங்கச்சி பேர்ல இருந்தா, கொஞ்ச நாள்ல ஏதாவது காரணம் சொல்லி, என் தங்கச்சி கிட்டயிருந்து அத வாங்கிக்கலாம்னு நெனச்சேன்… ஆனா உங்க அப்பா இந்த வீட்ட உங்களுக்கு குடுக்கணும்னு சொல்லிட்டாரு… அதுல எனக்கு கொஞ்சம் வருத்தமாகிடுச்சு… அப்பறம் உங்க கல்யாணம் எப்படி நடந்ததுன்னு தெரிய வந்தது… நீங்க உங்க அண்ணனோட பேசுனத கேட்டேன்… இத உங்க வீட்டுல சொல்லப் போறேன்னு மிரட்டி இந்த வீட்ட வாங்கலாம்னு நெனச்சப்போ தான் வள்ளிக்கும் இந்த வீடு மேல ஆசைன்னு தெரிய வந்துச்சு… வள்ளி பேர்ல வீடு இருந்துச்சுன்னா, அவள ஈசியா ஏமாத்தி அத வாங்கிடலாம்னு நெனச்சு, அவளுக்கு உதவுற மாதிரி நடிச்சேன்… அந்த டெஸ்ட் டூயூப் பேபி பிளான் கூட நான் சொன்னது தான்…” என்று அவரின் குற்றங்களுக்கு வாக்குமூலம் கொடுக்க, அர்ஜுனிற்கு அவனின் மாமாவை காண்பதற்கே பிடிக்க வில்லை.

 

அவனின் முகத்தைக் கண்ட ‘அது’, “ச்சு ச்சு… இதுக்கே இப்படின்னா…  இனிமே தான இருக்கு…” என்றது கிண்டலாக…

 

“ஆனா அதுக்கப்பறம் நடந்தது எல்லாம் நானே எதிர்பார்க்காத விஷயங்கள். வரிசையா ஒவ்வொரு இழப்பு… இதுல தொழிலும் ரொம்ப நஷ்டமாகிடுச்சு… இனிமே உங்க குடும்பத்த நம்பி பிரயோஜனம் இல்லன்னு நெனச்சப்போ தான், உங்க குடும்ப வக்கீல், உங்களுக்கே தெரியாத சில சொத்துக்கள உங்க பேர்ல உங்க அப்பா வாங்கி போட்டதாகவும், அது உங்க வாரிசான அர்ஜுன் பேர்ல இருக்குறதாகவும் சொன்னாரு… அதான் அர்ஜுனோட பொறுப்ப நான் ஏத்துகிட்டா அந்த சொத்த என் பேர்ல மாத்திடலாம்னு யோசிச்சேன்… ஆனா அதுக்கும் ஆப்பு வைக்குற மாதிரி அர்ஜுன் கல்யாணம் பண்ணா தான் அந்த சொத்துக்கள அனுபவிக்க முடியும்னு உயில் எழுதி வச்சுருந்தாரு உங்க அப்பா… அவன் கல்யாணத்துக்காக காத்திட்டு இருந்தா, அவன் அந்த வீட்டுக்கு போய் இறந்துட்டாங்கிற செய்தி கிடைச்சது… நானும் சந்தோஷமா அங்க வந்து தேடுற மாதிரி ஸீன் போட்டு அப்பறம் அந்த சொத்த என் பேருக்கு மாத்திடலாம்னு நெனைக்குறப்போ அவன் கெடச்சுட்டான்… அத அந்த ஊர் மக்கள் வேற பாத்துட்டாங்க… வேற வழி இல்லன்னு அவனையும் என்னோட சிங்கப்பூருக்கு கூட்டிட்டு போனேன்…” என்று நிறுத்தினார்.

 

“மிஸ்டர். மணி உங்க விஷயம் வெளிய தெரிஞ்சுருச்சுன்னு உங்க சொந்த தங்கச்சியையும், அவங்க மாமியாரையும் விஷம் வச்சு கொன்னீ ங்களே அத சொல்லல…” என்று அது கூறியதும் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் மணியை பார்த்தனர்.

 

அவரின் பார்வையோ பயத்துடன் அர்ஜுனை நோக்கியது. “அர்ஜு அது வந்து… நா… நான் ஏன்… அப்படி…” என்று திக்க, அவரின் மீது வெறுப்பான பார்வையை வீசியவன், “சீ… நீங்களாம் ஒரு அண்ணனா… உங்களுக்கு சொத்து தான் வேணும்னா கேட்டுருக்கலாமே… எங்க தாத்தா குடுத்துருப்பாரே… அதை விட்டுட்டு இப்படி… ச்சே எத்தன கொலை… உங்களால எப்படி முடிஞ்சது… உங்க சொந்த தங்கச்சியவே கொல்ல எப்படி மனசு வந்துச்சு… மனசுன்னு ஒன்னு இருந்தா தான…” என்றான் வெறுப்பாக.

 

“என்ன மன்னிச்சுடு அர்ஜு… நான் பண்ணத மனசுல வச்சுக்காம என்ன ‘இது’ கிட்டயிருந்து காப்பாத்து…” என்றார்.

 

‘ச்சே என்ன மனுஷன் இவன்…’ என்று தான் எல்லாருக்கும் தோன்றியது.

 

ஒருவேளை இவர் வள்ளிக்கு துணை போயிருக்காவிடில் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்காதோ என்றும் அர்ஜுனிற்கு தோன்றியது.

 

அனைவரும் அவரவர் எண்ணங்களில் மூழ்கியிருக்க, ‘ஆஆ…’ என்ற அலறலில் நிகழ்விற்கு வந்தவர்கள், அங்கு கண்டது தலை தனியாக துண்டிக்கப்பட்டு இறந்திருந்த மணியைத் தான்.

 

“என்னயவே ஏமாத்த பாத்துருக்கேல…” என்று கோபத்துடன் கூறியது அது. மணியின் தவறிற்கு அவர் தண்டிக்கப்பட வேண்டுமென்றாலும், இத்தகைய கொடூர சாவை யாரும் எதிர்பார்த்திருக்க வில்லை. 

 

மற்றவர்களைப் பார்த்து, “இதோ இன்னைக்கான முதல் கொலை… அடுத்து வரிசையா வந்தா என்ன வேலை சுலபமா முடிஞ்சுடும்… உங்களையெல்லாம் முடிச்சுட்டு என் வயித்துல பொறந்தது கதைய முடிக்கணும்…” என்று கூறியது.  

 

அதைக் கேட்ட விக்னேஸ்வரன், “அவ உன் பொண்ணு தான… அவள கொல்லுறதுக்கு ஏன் இப்படி வெறிப்பிடிச்சு அலையுற…” என்றார் விக்னேஸ்வரன்.

 

“என்னாது என் பொண்ணா.. அவ என்ன கொன்ன சனியன்… அவளால தான் இந்த வீட்ட அனுபவிக்க கூட முடியாம செத்து போனேன்… அவள என் கையால கொன்னா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்…” என்றது.

 

மணியின் வாக்குமூலத்தில் போதே அங்கு வந்திருந்த ஜான்வியை இப்போது தான் அங்கிருந்தவர்கள் கவனித்தனர்.

 

ஜான்வியின் நிலையோ பரிதாபகரமாக இருந்தது. யாரை அன்னையாக எண்ணினாளோ அவர் இப்போது உயிருடன் இல்லை… யார் அவளை கொல்ல நினைக்கிறாரோ அவர் தான் அவளின் உண்மையான அன்னை… இப்படி அடுத்தடுத்த அதிர்ச்சிகளால் பாவையவள் துவண்டு தான் போனாள்.

 

இதில் ஒரே ஆறுதல், அவளின் ‘விக்கிப்பா’வையும் ‘அர்ஜுண்ணா’வையும் கண்டது தான். கண்களை கண்ணீர் மறைக்க, ‘விக்கிப்பா…’ என்று அழைத்தபடி அவரை நோக்கி சென்றாள்.

 

மகளின் அழைப்பை வெகு நாளுக்குப் பின் காது குளிர கேட்ட தந்தை, இத்தனை நாளாக தான் வாழ்ந்த தவவாழ்விற்கு பலன் கிட்டியதைப் போல் உணர்ந்தாரோ… தன் செல்ல மகளின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார். அவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

 

ஆனால் அந்த பாசப் பிணைப்பை காண சகிக்காத ‘அது’, ஜான்வியின் முடியைப் பற்றி தூக்கி, “உன் அப்பாவ பார்க்க அவ்ளோ வேகமா… ஹ்ம்ம்… முதல இந்த அம்மாவோட அன்ப வாங்கிட்டு செத்து போ, உங்க அப்பாவும் பின்னாடியே மேல வருவாரு…” என்றது.

 

ஜான்வி வலி தாங்க முடியாமல் அழுக, அதைப் பொறுக்காத விக்னேஸ்வரனோ, “வள்ளி, உண்ண கெஞ்சி கேக்குறேன்… என் பொண்ண விட்டுடு… என்ன என்னவேணும்னாலும் பண்ணிக்கோ… அவள விட்டுடு…” என்று கெஞ்சினார்.

 

“த்ச்சு ச்சு… என்னமோ இவ உங்களுக்கு பொறந்த மாதிரி இப்படி துள்ளுறீங்க…” என்று கேட்டதும், “வள்ளி…” என்று கோபத்துடன் அழைத்தார்.

 

“ஹ்ம்ம் உண்மை சில நேரம் கசக்கத் தான் செய்யும்…” என்று நக்கலாக கூறியது.

 

ஜான்வி அப்போது தான் பேச ஆரம்பித்தாள். “சீ நிறுத்து… நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ.. உன்ன மாதிரி சாக்கடை வயித்துல பொறந்திருந்தாலும், உன்னோட நிழல் கூட என்மேல விழாத மாதிரி பார்த்துக்கிட்டாரே இவரு தான் என் அப்பா… அவங்க வயித்துல பொறக்காட்டியும், என்ன அவங்க சொந்த பொண்ணு மாதிரி வளர்த்தாங்களே, அவங்க தான் என் அம்மா… உன்னயெல்லாம் அம்மான்னு இல்ல ஒரு பொண்ணுன்னு சொல்றதுக்கே எனக்கு அசிங்கமா இருக்கு… இந்த வீட்டுக்காக தான இவ்ளோ பண்ண… இப்போ எங்கள கொன்னுட்டா இந்த வீட்டுல உன்னால வாழ்ந்துட முடியுமா… இப்போ நான் சாகுறதுல எனக்கு கவலையில்ல… ஏன்னா எனக்காக உண்மையா வருத்தப்பட இத்தன பேரு இருக்காங்க… ஆனா உனக்கு யாரு இருக்கா… ஒன்னு சொல்லட்டுமா… பொண்ணா பொறந்த எல்லாருக்கும் அவங்க வாழ்க்கைல முக்கியமான ரெண்டு உறவுகள் – ஒன்னு அவங்கள பெத்தவங்க… இன்னொன்னு அவங்க பெத்தவங்க… இவங்க ரெண்டு பேருமே உனக்காக நிக்கலைனா, அப்பறம் நீ இந்த உலகத்துல வாழ்ந்ததே வேஸ்ட்…”

 

அவள் கூறியதைக் கேட்டு அதற்கு சிறு வலி ஏற்பட்டாலும், அதையெல்லாம் வெளியே காட்டிக்கொள்ளாமல், “என்ன டி ரொம்ப பேசுற… இத்தன வருஷமா இருட்ட பார்த்தாலே பயந்து போறவ, இன்னைக்கு என் முன்னாடி இவ்ளோ பேச்சு பேசுற… எல்லாம் அந்த ஃப்ரொஃபெசர் சொல்லிக் கொடுத்ததோ…” என்று தன் கூரிய நகங்களால் அவளின் மென்கழுத்தை அழுத்த, அங்கிருந்து கோடாக இரத்தம் வழிந்தது.

 

“ஜானு…” “ஜனனிமா..” “ஜானி…” என்று எல்லா இடங்களிலிலிருந்தும் அவளின் பெயரை உச்சரிக்க, அவர்களைப் பார்த்து கேலியாக உதட்டை வளைத்து சிரித்தது ‘அது’…

 

உள்ளே இவ்வளவு கலவரங்கள் நடக்க, வெளியில் கங்காதர், அவரின் கருவியை பொறுத்தி முடித்திருந்தவர், சிறிதும் தாமதிக்காமல் அதை உயிர்பித்தார்.

 

அந்த கருவி தன் வேலையை சரியாக செய்ததற்கு எடுத்துக்காட்டாக, அதன் சக்தியின் அளவு குறைந்தது. அதன் பிடி தளர, வேகமாக செயல்பட்ட ஆதர்ஷ், ஜான்வியை அதன் பிடியிலிருந்து இழுத்து தன்னுடன் வைத்துக் கொண்டான்.

 

அங்கிருப்பவர்களின் முகம் ஒளிர, பிபுல் வெளியே நின்றிருந்த இருவரை நோக்கி ஆமோதிப்பாக தலையசைத்தார்.

 

ஆனால் அவர்களின் சந்தோஷத்தின் ஆயுள் நொடி பொழுதே ஆகும்… அடுத்த நொடியே மிகவும் ஆக்ரோஷமாக எழுந்த ‘அது’, தன் சக்தியெல்லாம் ஒன்று கூட்டி அந்த கருவியை அழித்தது.

 

இங்க நிகழ்வைக் கண்ட, ஒவ்வொருவரின் மனதிலும் பயம் தோன்றியது. ஏனெனில், இதுவரை இல்லாத அளவிற்கு கோபமாக இருந்தது ’அது’. இனி அதனிடமிருந்து தப்பிக்க முடியாது என்பது அங்கிருந்தவர்களின் மனதில் தோன்றியது.

 

அதற்குள் உள்ளே வந்திருந்த கங்காதருக்கும் அவளின் கோபத்தைக் கண்டு, அவளை அடக்குவது அவரால் முடியாத காரியமாகவே தோன்றியது. என்ன செய்வது யோசித்தவருக்கு சட்டென்று அந்த சிந்தனை தோன்றியது.

 

“விக்கி, நான் உருவாக்கிருக்க கருவி, இயற்கையா இருக்க ஆற்றலை மாற்றி தான் குடுக்கும்… அப்படியான மாற்றங்கள்ல சிதறல்கள் ஏற்பட்டு அதோட சக்தி குறைய வாய்ப்பிருக்கு… அதனால தான் வள்ளியோட எதிர்மறை ஆற்றல ரொம்ப நேரம் அடக்குறதுக்கான சக்தி அந்த கருவில இல்ல…” என்றார் கங்காதர்.

 

“இப்போ என்ன பண்றது கங்கா…”

 

“சிதறல்கள் ஏற்படாத நேர்மறை ஆற்றல் நமக்கு வேணும்… அதன் மூலமா நம்மளால அத கட்டுபடுத்த இயலும்…”

 

“அந்த மாதிரி நேர்மறை ஆற்றலுக்கு இப்போ நாம எங்க போக…” என்றான் அர்ஜுன்.

 

“நாம எங்கயும் போய் தேட வேண்டிய அவசியமே இல்லை அர்ஜுன்… நெனச்சாலே போதும்…”

 

அவரின் பேச்சு அங்கிருந்த அனைவருக்கும் குழப்பத்தை தர, அவர் தொடர்ந்தார். “கணவனுக்காக, குழந்தைக்காக, காதலனுக்காக, குடும்பத்துக்காக உயிர குடுக்குறவங்கள விட வேற யாருக்கிட்ட நேர்மறை ஆற்றல் இருக்கப் போகுது… இவங்களாம் புனிதமான ஆத்மாக்கள்… நீங்க அவங்கள நெனச்சா தான் அவங்களால நமக்கு உதவ முடியும்… சோ எல்லாரும் அவங்களோட உதவிக்காக வேண்டுவோம்…” என்று அவர் கூறியதையடுத்து அனைவரும் கண்களை மூடி மனதை ஒருநிலை படுத்தி தங்களின் உயிரானவர்களை நினைத்தனர்.

 

இவர்களின் செயலை கிண்டலாக பார்த்த அது, “இன்னைக்கு நீங்க சாகுறத யாராலும் தடுக்க முடியாது…” என்று கூடியது.

 

அடுத்த நிமிடமே, அங்கு சூறாவளி போல காற்று வீச, வெள்ளை ஒளி அந்த இடத்தையே வெளிச்சமாக்கியது.

 

அங்கே தன்னவர்களுக்காக இன்னுயிரை கொடுத்த நல்லுள்ளங்கள் தோன்றினர். இவ்வளவு நாள் தான் மகளை நிழலாக தொடர்ந்த அவளின் ‘நித்துமா’ அவளின் கண்முன் விரிய, அவர்களை அணைக்க முயன்று தோற்றாள் ஜான்வி. அவளையும் தன் கணவனையும் கண்களில் நிரப்பிவிட்டு அந்த போருக்கு தயாரானாள் அவர்களின் நித்து…

 

அர்ஜுன் முன் தோன்றிய நிஷா, “இனி உங்களுக்கு எந்த கவலையும் வேணாம் அஜு… உங்க குடும்பத்த கூட்டிட்டு வெளிய போங்க, அத நாங்க பாத்துக்குறோம்…” என்று கூறி சிரித்தாள்.

 

இதே போல் விக்னேஸ்வரனின் தந்தை, தாய், அண்ணன், அண்ணி என்று அனைவரும் தோன்ற, “ஓ எல்லாரும் ஒன்னா வந்து இவங்கள காப்பாத்த போறீங்களா… இன்னைக்கு இவங்கள்ல ஒரு உயிராவது போகாம இருக்காது…” என்று கர்ஜித்தது அது.

 

“எல்லாரும் சீக்கிரம் வெளிய போங்க… எங்களால ரொம்ப நேரம் அத தடுக்க முடியாது…” என்று சிவனேஸ்வரன் கூறினார்.

 

அனைவரும் வெளியே செல்லும் சமயம், ‘அது’ தன் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி, ஜான்வியை வெளியே செல்ல விடாமல் தடுத்தது. ஜான்வியின் ஒரு கையை ஆதர்ஷ் பற்றிக் கொள்ள, மறுகையை  அர்ஜுன் பற்றிக் கொண்டான்.

 

அவர்கள் அவளை வெளியே இழுக்க, அது அவளை உள்ளே இழுக்க என்று ஒரு போராட்டம் அங்கு நிகழ்ந்தது. இவர்களுடன் சேர்ந்து அந்த தூய ஆத்மாக்களும் அதை தடுக்க, நிமிட நேரங்களில், அதன் சக்தி குறைய, சற்றும் தாமதிக்காமல், அவளை வெளியே இழுத்திருந்தனர்.

 

அப்போது அவர்களின் காதில் கேட்ட, “இது நிரந்தரம் இல்ல… நான் திரும்ப வருவேன்… அவள கொல்லுறகுக்காக வந்தே தீருவேன்…” என்ற அதன் குரல் கேட்க, டப்பென்று அந்த வீட்டின் கதவுகள் மூடிக் கொண்டன.

 

அங்கேயிருந்த அனைவரும் பெருமூச்சு விட்டு தங்களை ஆசவாசப் படுத்திக் கொண்டனர்.

 

பின் உறவுகளின் சங்கமம் அங்கு நிகழ, ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்து தங்கள் பாசத்தை உணர்த்தினர்… உணர்ந்தனர்…

 

அப்போது தான் ஆதர்ஷ் தங்களுடன் இல்லை என்பதை உணர்ந்த விஷ்வா, அவனைத் தேட, சற்று தொலைவில் அவன் நின்றிருப்பது தெரிந்தது.

 

அங்கு சென்று அவன் தோளில் கை வைக்க, திரும்பியவனின் முகம் சோகமாக இருக்க, “ஹே ஆது, அதான் எல்லாம் முடிஞ்சுருச்சுல… இன்னும் ஏன் ரெஸ்ட்லெசா இருக்க…” என்று கேட்டான் விஷ்வா.

 

“அது… அப்பா…க்கும்… அப்பாவ ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்காங்கன்னு போன் வந்துச்சு டா…”

 

“டேய் என்னாச்சு டா… எனிதிங் சீரியஸ்…” என்றான் விஷ்வா பதட்டமாக…

 

“இல்ல மச்சான்… லேசான மயக்கம் தானாம்… நான் இப்போ கிளம்பனும் டா..”

 

“நான் கூட வரவா டா…”

 

“இல்ல நீ இங்க பாரு…” என்றவனின் பார்வை அவனவளைத் தழுவியது. அவளோ தன் தந்தை மற்றும் அண்ணனிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள். அவன் பார்வையைக் கண்டு லேசாக சிரித்த விஷ்வா, “நான் பார்த்துக்குறேன்… நீ கவலப்படாம அப்பாவ போய் பாரு…” என்றான் நல்ல நண்பனாய்.

 

அவனை அணைத்து விடுவித்த ஆதர்ஷ், “பார்த்துக்கோ டா…” என்று கூறிவிட்டு திரும்பி நடந்தான், அவனின் கையிலுள்ள பொருளை கெட்டியாக பிடித்தபடி… மனதில் தான் செய்யப் போகும் காரியத்திற்கான தைரியத்தை வரவழைத்தபடி…

 

 

அமானுஷ்யம் முடிவை நோக்கி…