மீள்வாயோ கனவே 💜1💜

உதகமண்டலம்!

மலைகளின் இளவரசி…

சுகமான ஊசியாய் உடம்பை துளைக்கும் குளிர் காற்று.

காட்டுப்பூக்களின் இனிய நறுமணம்.

அந்த சுகந்தத்தை ரசித்தபடி தன் இமையைப் பிரித்தான் அவன்.

பவன் நந்தன்!

இருபத்தைந்துகளின் இளமை ஊஞ்சலில் ஊடாடிக் கொண்டிருப்பவன்.

குறுந்தொகை போல குறுந்தாடி.

சிறுத்த கண்களில் சிறுத்தை பார்வை.

அலையாடிக் கொண்டிருந்த கேசத்தை கோதியபடி எழுந்தவன் உடலை வளைத்து சடவு முறித்தான்.

அடுத்த நொடி அவன் முகத்தில் வலியின் சுணக்கம். இப்படி தான் இந்த வலி சில நாட்களாய் அவனைப் பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த வலியோடே தனது வேலையின் முதல் நாளை எப்படி துவங்க போகிறோமோ என்ற ஆயாசத்தோடு எழுந்தமர்ந்தான்.

“என்னடா முதள் நாள் வேலைக்கு போறது நினைச்சு இப்பவே இவ்வளவு அலுப்பா?” நறுக்கிய காய்களை அருகிலிருந்த பாத்திரத்தில் அலசி கொண்டிருந்த அன்னம்மாள் அவனையும் வார்த்தைகளால் அலசினார்.

“உன் புள்ளை அதுக்கு எல்லாம் அசருற ஆளா மா? ஆனாலும் இந்த உடம்பு வலி தான் மனுஷனை படுத்தி எடுக்குது” என்று சொன்னபடி கீழே விரித்திருந்த போர்வையை மடித்து வைத்துவிட்டு நிமிர்ந்தான்.

“சரி குளிச்சுட்டு வா. முதல் நாளே வேலைக்கு லேட்டா போகாதே” என்றவரின் குரலில் துரிதமடைந்தவன் பத்து நிமிடத்தில் தயாராகி வெளியே வந்தான்.

காக்கி சட்டையில் வெளியே வந்த மகனைக் கண்டு தாயின் கண்களில் தானாய் கண்ணீர் உருண்டு திரண்டது.

தன் கண்களை துடைத்துக் கொண்டவர், அவன் கன்னத்தை வருடி “என் ராசா” என்றார் வாஞ்சையாக.

“எதுக்குமா அழற… கவர்மென்ட் உத்தியோகம் வாங்கியாச்சு. இனி நமக்கு விடிவுகாலம் தான்”  நம்பிக்கையின் மின்னல் அவன் குரலில்.

தன் தாயிடம் முதல் நாளைய துவக்கத்திற்கான ஆசிர்வாதம் வாங்கிவிட்டு  வெளியே வந்தவனின் பார்வை திரும்பி தன் வீட்டைப் பார்த்தது.

ஒரு ஹால், கிச்சன், ஒரு தனியறை என கீழ்த்தட்டு நடுத்தர குடும்பத்தின் சட்டகத்துக்குள் அம்சமாய் பொருந்திப் போய் இருந்தது அந்த வீடு.

அதை கண்டு நிறைவாய் ஒரு புன்னகை பூத்தவன் தான் அணிந்திருந்த காக்கி சட்டையின் மீது மென்மையாய் தடவினான்.  அது தான் கடந்து வந்த பாதையை வருடிவிட்டது போல் இருக்க அவன் முகத்தில் எதையோ சாதித்த உணர்வு.

சிறு வயதிலேயே தந்தையை இழந்தவன் அவன். தாயின் கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்தவனுக்குள் எப்படியாவது தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் அடியாழத்தில் வேரோடி கிடந்தது.

பத்தாவது வரை படித்திருந்தவனால் குடும்ப சூழல் காரணமாக மேலும் படிப்பை தொடர முடியவில்லை. அருகிலிருக்கும் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்தவன் கிடைக்கும் சொற்ப நேரத்தை வீணாக்காமல் படிக்க ஆரம்பித்தான்.

குறுகிய கால கட்டத்தில் கிடைக்கும் அரசு படிப்புகளில் தபால் துறை, போக்குவரத்து துறை முன்னே இருக்க அதில் கவனம் செலுத்தியவன் தற்போது அரசு துறையில் வேலையையும் வாங்கிவிட்டான்.

இன்று அவன் வேலையில் சேரப் போகும் முதல் நாள். ஆனாலும் அவன் கைகளில் அப்பாயின்மெண்ட் ஆர்டர் வந்திருக்கவில்லை.

குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து நேற்று இரவு அலைப்பேசியில் அழைத்து, இன்று வந்து வேலையில் சேர சொல்லி இருந்தார்கள்.

அப்பாயின்மென்ட் ஆர்டர் இல்லாமல் அங்கு சென்றால் நிராகரித்துவிடுவார்களோ என்ற பயத்தை அவன் வெளிப்படையாய் கேட்க அவர்களோ அதெல்லாம் தேவையில்லை வந்தால் மட்டும் போதும் என்ற பதிலோடு வைத்துவிட்டனர்.

ஆனாலும் உள்ளுக்குள் ஏதோ ஒரு நெருடல் ஏதோ ஒரு இடறல்.

ஒருவேளை வேண்டாம் என்று சொல்லிவிட்டால்!

அவன் முகத்தில் வருத்த மேகங்கள் சூழ்ந்த அந்த கணம் க்ளிங் க்ளிங் என்ற சைக்களின் பெல் சப்தத்தோடு எதிர்ப்பட்டார் தபால்காரர்.

அவரை கண்டதும் முகம் மலர்ந்தவன், “அண்ணா எனக்கு ஏதாவது லெட்டர் வந்து இருக்கா?” என்றான் கேள்வியாக.

கையிலிருந்த லெட்டரை எல்லாம் ஆராய்ந்து பார்த்தவரின் முகம் இறுதியாக இல்லையென்ற தலையாட்டலை சுமந்து இருந்தது.

அந்த பதில் அவனிடம் ஒரு பெருமூச்சை வர வைக்க மௌனமாய் இறங்கி சாலையோரம் நடந்தான்.

செடி கொடிகள் சிகரெட் பிடிப்பது போல் சுற்றிலும் எங்கும் பனி.

சாலையின் இருமருங்கிலும் நிழல் கம்பளத்தை விரித்து வைத்திருந்தது நெடிதுயர்ந்த மரங்கள். பள்ளத்தாக்கு முழுக்க பூத்து குலுங்கியது பல வண்ண பூக்கள்.

ஊட்டியின் அழகே அழகு தான்!

ரசித்தபடியே அந்த சாலையின் வளைவில் திரும்ப முனைய அவன் முன்னே மின்னல் வேகத்தில் பிரேக் அடித்தபடி நின்றது அந்த பைக்.

அவன் மட்டும் ஒரு அடி பின்னே எடுத்து வைக்காமலிருந்தால் இல்லை எதிரிலிருந்தவன் ஒரு கணம் தாமதித்து ப்ரேக்கை அழுத்தியிருந்தால்  இந்நேரம் அவன் எமனின் அருகே அமர்ந்து எள்ளு சோறு சாப்பிட்டு இருப்பான்.

உள்ளுக்குள் கோபம் துளிர்விட பவன் நந்தன் வேகமாய் நிமிர்ந்தான்.

நீல நிற குதிரை ஒன்று ஓடி முடித்த களைப்பில் முச்சிரைத்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி கம்பீரமாய் நின்றிருந்தது அந்த 220சிசி பல்சர்.

அந்த வாகனத்திற்கு சொந்தமானவனிடமோ அதை விட கம்பீரம்.

தட்சினேஷ்!

கோபத்தின் கருவில் பிறந்தவன்.

குட்டி கண்கள் இரண்டிலும் குத்தீட்டியின் கூர்மை.

உருக்கு மீசை.

ஆஜானுபாவான அந்த உருவத்தில் ஏக்கர் கணக்கில் அலட்சியம் வழிந்தோடி கிடக்க, குரலிலும் அதே அலட்சியத்தின் சிதறல்.

“கண்ணை என்ன, கடனுக்கு வட்டியா வெச்சுட்டு வந்துட்டியா? பார்த்து வர தெரியாது…” எதிரிலிருந்தவனிடம் அலட்டலில்லாத அதட்டல்.

அந்த கேள்வி பவன்நந்தனின் முகத்தில் கோபத்தை வர வைத்தது.

‘தவறாக வந்தது மட்டுமில்லாமல் தவறாகவும் பேசுவதைப் பார்…
வண்டியை ரோட்டில் ஓட்ட சொன்னால் வாயில் நன்றாக ஓட்டுகின்றான்…’  அடக்கப்பட்ட கோபத்துடன் நிமிர்ந்தான் பவன்.

“அதே கேள்வியை தான் நானும் கேட்கிறேன். கண்ணு தெரியலைனா கண்ணாடி போடணும்னு கூட தெரியாதா? இப்படி தான் வண்டியை ஊடாலே விடுவியா?” என்றான் கோபமாக.

அந்த கேள்வி எதிரிலிருந்தவனை கோபப்படுத்தி இருக்க வேண்டும். இல்லையென்றால் வேகமாக பைக்கை அந்த மலைப்பாதையின் விளிம்பில் ஸ்டாண்ட் போட்டுவிட்டு பவன் நந்தனின் முன்பு வந்திருப்பானா!

“ஹே! பராக்கு பார்த்துட்டே வண்டிக்கு குறுக்காலே வந்தது மட்டுமில்லாமல் கூட கூட பேசுறியா நீ…” என கேட்டபடி பவனின் சட்டைகாலரை வேகமாய் பிடித்தான்.

வாய் தகராறு கொஞ்சம் கொஞ்சமாய் வாய்க்கால் தகராறாக மாறிக் கொண்டிருந்தது.

“மேலே இருந்து கையை எடுடா…” பொறுமையை இழுத்துப் பிடித்து சொல்ல
“எடுக்க முடியாதுனு சொன்னா என்ன பண்ணுவே” என்று தட்சினேஷ் கேட்கவும் அவன் பொறுமை குமிழியாய் உடைந்தது.

தனது சட்டைக்காலரில் இருந்து அவன் கையை பிரித்தெடுக்க முயன்று கொண்டிருக்க தட்சினேஷோ ஒற்றை கையால் அவனை தூசிப் போல் தட்டிவிட்டான்.

அவ்வளவு தான் அதுவரை பவனிடம் இருந்த சொற்ப நிதானமும் துறவறம் வாங்கி சென்றுவிட எதிரிலிருந்தவனை எட்டிவிட முயன்றான்.

தட்சினேஷ் சுதாரித்து விலகிவிட்டான், ஆனால் மிதிப்பட்டது என்னவோ அவன் சவாரி செய்து வந்திருந்த வாகனம்.

பவனின் வேகத்தின் விசையில் அந்த வண்டி ஆட்டம் கண்டுவிட, பிடிமானமின்றி அந்த மலையின் விளிம்பிலிருந்து தவறி துண்டு துண்டாய் சிதறிப் போனது.

எதையோ அடிக்க போய் எதுவோ விழ தடுமாற்றமாய் பவன் நிமிர்ந்தான்.

வண்டியை சுக்கல் சுக்கலாக நொறுக்கியதற்கு எதிரிலிருப்பவனிடம் நியாயப்படி மன்னிப்பு கேட்கத் தான்  வேண்டும். ஆனால் எதுவோ ஒன்று தடுக்க தயக்கத்தோடு அவனைப் பார்த்தான்.

தான் உயிருக்கு உயிராய் நேசித்த அந்த வாகனம்  மலையிலிருந்து தற்கொலை செய்து கொண்டதை தட்சினேஷின் மனதால் சில கணங்கள் வரை உட்கிரக்கவே முடியவில்லை.

ஆனால் உணர்ந்த அடுத்த கணத்திலேயே பள்ளத்தாக்கை பார்த்திருந்தவனின் பார்வை பவனின் மீது கடூரமாக விழுந்தது.

ஆசை ஆசையாய் வாங்கிய வாகனம் அது. துண்டு துண்டு மேகங்களை சேகரித்து மழையைப் பொழியும் வானத்தைப் போல அவன் சிறுக சிறுக சேர்த்து வைத்த சேமிப்பில் வாங்கியது அது.

அதை உருகுலைத்துவிட்டானே!

பவன் நந்தன் மெல்லிய குரலில், “பைக்குக்கு இன்சூரன்ஸ் பண்ணிட்டியா?” என்று கேட்கவும் தட்சினேஷின் கோபம் பலமடங்காகிப் போனது.

“என் பைக்குக்கு இன்சூரன்ஸ் பண்றது இருக்கட்டும், மவனே முதலிலே உனக்கு நீ இன்சூரன்ஸ் பண்ணியாடா? இன்னைக்கு உன்னோட கருமாதி என் கையாலே தான்டா” என்றவன் கோபத்தோடு பாய பவனும் பதிலுக்கு பாய்ந்தான்.

இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் களத்தில் ஒன்றுடன் ஒன்று முறைத்து நின்றால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது இருவரின் தோரணையும்.

“உசுருக்கு உசுரா நேசிச்ச என் பைக்கை உருகுலைச்சுட்டலே. உன்னோட குடலை உருவி என் வீட்டுக்கு தோரணம் கட்டலை நான் தாட்சினேஷ் இல்லைடா” வன்மத்தோடு மார் தட்டியவன் பவனின் மீது ஏறி ஒரு மிதித்தான்.

அதில் இரண்டடி தூரம் பின்னே நகர்ந்துப் போன பவன்நந்தன், ரப்பரை போல சென்ற வேகத்தில் மீட்சியடைந்து தாட்சினேஷின் தாடையிலேயே ஒரு குத்துவிட்டான்.

“ஒழுங்கா ஓட்ட தெரியாம மேலே வந்து இடிக்க பார்த்ததும் இல்லாமல் என் மேலே கையை வெச்சுட்டேலே… இனி பவன் நந்தனா யாருனு பார்ப்படா” என்றான் பதிலுக்கு சளைக்காத குரலில்.

இருவரும் மீண்டும் மோதிக் கொள்ள முனைந்த நேரம் சைரன் ஒலியோடு வந்து நின்றது ஒரு காவல் வாகனம்.

அதை கண்டு இருவரும் பதற்றமாக விலக, அந்த வாகனத்திலிருந்து இறங்கிய காவலரின் பார்வை சுற்றியிருந்த கூட்டத்தையே ஒரு தினுசாகப் பார்த்தது.

“இங்கே என்ன மாநாடா நடக்குது… எதுக்கு இந்த கூட்டம்?” என்றவரின் பார்வை எதிரில் நின்று கொண்டிருந்த தட்சினேஷின் மீது கேள்வியாய் விழுந்தது.

“இந்த பொறுக்கி பையன் எதையாவது பண்ணி தொலைச்சானா?” என்று கேட்கவும் தீயாய் காவலரை முறைத்தான் தட்சினேஷ்.

“அதெல்லாம் ஒன்னுமில்லை நீங்க கிளம்பலாம். நாங்க பேசிட்டு தான் இருந்தோம்” என்றான் தட்சினேஷ் எங்கோ பார்வையை பதித்தபடி.

“தம்பி உங்க பைக்கை அந்த பையன் கீழே தள்ளிவிட்டதை போலீஸ் கிட்டே சொல்லுங்க” என்று சுற்றியிருப்பவர்களில் ஒருவர் எடுத்து கொடுக்க பவனின் முகம் வெளிறியது.

“அது என் கை பட்டு தான் விழுந்தது இவன் தள்ளிவிடலையே அப்புறம் எதுக்கு கம்பைண்ட் கொடுக்கணும்” அசட்டையாக  கேட்ட தட்சினேஷை  திகைத்துப் போய் எல்லாரும் பார்க்க பவனின் முகமோ அதிர்ச்சியின் உச்சத்தை காட்டியது.

நியாயப்படி அவன் புகார் கொடுத்து என்னை உள்ளே தள்ளியிருக்க வேண்டும்.
ஆனால் செய்யவில்லை. ஏன்?

கேள்வியோடு பவன் நிமிர்ந்த நேரம் “தப்பிச்சுட்டதா நினைக்காதே. உன் முடிவு என் கையாலே தான்” அடிக்குரலில் தட்சினேஷ் சீறிவிட்டு நகர்ந்தான்.

“யார் முடிவு யாரோட கையிலேனு பார்த்துடலாம்” பவன்நந்தன் முறுக்கிக் கொண்டு சொல்ல இருவரின் பார்வையும் ஒரே நேர்க்கோட்டில் வெட்டிக் கொண்டது.

முறைத்தபடியே எதிரெதிர் திசையை நோக்கி நடந்தது அந்த இரு துருவங்களும்.

💐💐💐💐💐💐

பவன் பேருந்து நிலையத்திற்கு வரும் போது பதினைந்து நிமிடங்கள் தாமதமாகியிருந்தது.

பெருமூச்சோடு அந்த பேருந்து டிப்போவுக்குள் நுழைந்தவன் தாமதமாக வந்ததற்கு மேலாளர்களிடம் மன்னிப்பு கோரிவிட்டு தான் செல்ல வேண்டிய பேருந்து எண்ணை குறித்துக் கொண்டு வெளியில் வந்தான்.

ஊட்டி – குன்னூர் வழித்தடத்தில் செல்லும் பேருந்து முன்பே அலை அலையாய் மக்கள் கூட்டம் புரண்டபடி பேருந்தை எடுக்க சொல்லி கத்திக் கொண்டிருக்க சங்கடமாய் தலை குனிந்தான்.

அவனை மட்டும் சந்தித்து இருக்காமல் இருந்திருந்தால் இந்நேரத்திற்கு இந்த பேருந்து கிளம்பியிருக்கும்.

எல்லாம் அந்த பல்சரில் வந்த காட்டுபல்லியால் வந்தது!

பாக்கெட்டில் வைத்திருந்த விசிலை கையில் எடுத்துக் கொண்டவன் வேகமாய் தான் கையில் வைத்திருந்த டிக்கெட் கட்டுகளை ஒற்றை விரலால் புரட்டினான்.

பல நாட்கள் பழகிய வேலை போல அத்தனை நேர்த்தியாய் இருந்தது அவன் செயல்.

வெளியில் நின்றிருந்த அத்தனை பேருக்கும் டிக்கெட்டை மடமடவென்று கிழித்து கொடுத்துவிட்டு நிமிர இன்னும் அந்த பேருந்தின் ட்ரைவர் வரவில்லை.

“இந்த  எடுப்பட்ட கன்டக்டர் ஆடிக்கு வந்தா, பாழாப் போனா ட்ரைவர் அமாவாசைக்கு வருவான் போல…” கூட்டத்திலிருந்தவர்கள் ஆளுக்கு ஒருபுறமாய் கத்தி கொண்டிருந்தனர்.

தன் கைக்கடிகாரத்தை திருப்பி பவன் சங்கடமாய் பார்த்துவிட்டு நிமிர்ந்த போது  அவன் கண்கள் தெறித்து விழுந்தது.

யாரிடம் காலையில் மல்லு கட்டி நின்றானோ அவனே தான் அணிந்திருந்த சட்டைக்கு மேலாக காக்கி சட்டையை அணிந்தபடியே வேக எட்டு வைத்து வந்து கொண்டிருந்தான்.

அதிர்ச்சியில் பவன் நந்தன் வாயில் வைத்திருந்த விசில், நழுவி விழ எதிரிலிருந்தவனிடமோ எளக்கார புன்னகை.

“ஆட்டுக்குட்டி தானா கசாப்பு கடை தேடி வந்துடுச்சு இனி கைமா பண்ணிட வேண்டியது மட்டும் தான் பாக்கி” என்று விசிலடித்தபடி தட்சினேஷ் ஏற பவன்நந்தனோ விதியின் இந்த விசித்திர விளையாட்டை எண்ணி தலையில் அடித்தபடி ஸ்தம்பித்து நின்றான்.

பேருந்தில் இருந்தவர்களின் பொறுமை பறந்து போக, “யோவ் கண்டக்டரு அதான் ட்ரைவர் வந்தாச்சுலே. விசிலடிச்சு ரைட் ரைட்னு சொல்லாமல் பராக்கு பார்த்துட்டு நிற்கிறியே” என கத்தவும் பவன் நந்தன் முகத்தில் அப்பட்டமான அயர்ச்சி.

எல்லாமே ராங் ராங்காக சென்று கொண்டிருக்க எப்படி ரைட் ரைட் என்பான்.

ஆனால் அணிந்திருந்த அவன் நடத்துனர் உடை அவனை “ரைட் ரைட்” என்று சொல்ல வைக்க திரும்பி பார்த்த தட்சினேஷ் வஞ்சமாய் பவனைப் பார்த்தான்.

“சிறப்பா பயணத்தை தொடங்கிடலாமா” எனக் கேட்டபடி தட்சினேஷ் ஆக்ஸிலேட்டரை மிதிக்க பெரும் குலுக்கலுடன் அசுர வேகத்தில் கிளம்பியது அந்த அரசு பேருந்து.