மெல்லினமல்ல மேலினம்–01

eiOK3PH501-a49d7419

மெல்லினம் 01

விடிந்தும் விடியாத அந்த காலை பொழுதினில் அவ்வூரில் இருக்கும் நான்காவது தெருவில் வசிக்கும் ஒரு ஓட்டு வீட்டின் முன்பு கூட்டம் கூட்டமாக மக்கள் நின்றனர். பலரும் வருகை தந்தபடியும் , செல்வதுமாகவே இருந்தனர் .

ஒவ்வொருவரின் மனநிலையும் சொல்வதற்கு இல்லை என்ற நிலையில் தான் இருந்தது.

அந்த வீட்டில் இருந்த ஒரு குட்டி அறையில் இருந்து ‘அம்மா’ என்ற அழைப்போடு வெளி வந்தாள் அவள் .

“அம்மா” தவிப்போடு அழைத்த அக்குழந்தைக்கு அங்கு நடந்த நடக்கின்றன எந்தவிதமான நிகழ்வுகளையும் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அனைவரது அழுகுரல் மட்டுமே அவளின் செவியில் கேட்டபடி இருந்தது.

ஆனால் எதற்காக அழுகிறார்கள் என்று கூட அப்பிள்ளைக்கு புரியவில்லை. புரிந்து கொள்ளும் வயதும் இல்லை அப்பேதைக்கு.

‘அய்யோ! என் ராசாவே இப்படியா எல்லாரையும் விட்டுட்டு இவ்ளோ சீக்கிரமா போகணும்’ கதறிய குரல்கள் அங்கு பல வகித்தனர்.

ஒரு மூலையில் அமர்ந்திருந்த தாயை நோக்கி நடையிட்ட பேதை ,” அம்மா…அம்மா…எதாவது பேசு மா. எனக்கு பயமா இருக்கு மா ” அசையாது சிலைப்போல் திகைத்த நிலையில் அமர்ந்திருந்த தாயின் தோளை பிடித்து ஆட்டியது பேதையின் கைகள்.

அப்பேதையின் தாயோ பித்து பிடித்தார் போல் வெளிறிய முகத்துடனே சுவற்றை நோக்கியவாறே அமர்ந்திருந்தார்.

“ம்மா! எனக்கு பசிக்குது” தாயிடம் அழுக,

அவரின் செவிக்கு,’சுந்தரி பாப்பாக்கு நேரத்துக்கு சாப்பாடு குடுத்திடுமா. அவளுக்காக தான் நம்ம’ என்ற கணவரின் குரல் ஏதோ ஒரு திசையில் ஒலிக்க, மெதுவாக குட்டியை பக்கவாட்டில் திரும்பி பார்த்த அந்த அன்னைக்கு அழுகை பீறிட்டது.

அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகையை, அவரின் மகளை பார்த்ததும் வெடித்து அழுதார்.

“ஏங்க எங்களை விட்டுட்டு போனீங்க. பாருங்க நம்ம பாப்பா அழுகிறா ” குட்டியை கட்டிக்கொண்டு கதறினார் சுந்தரி.

“ம்மா பசிக்குது ” மீண்டும் அவள் கேட்கவே மகளை விட்டு எழுந்த சுந்தரி சமைலறை நோக்கி ஓடிச் சென்று இரவு சமைத்து வைத்திருந்த இட்லியை கொண்டு வந்து மகளுக்கு கொடுத்தார்.

“அம்மா! அப்பா எங்க மா? அவரை இன்னும் காணோமே. அவருக்காக நான் ரொம்ப நேரமா காத்திட்டு இருக்கேன் மா. நேத்து நைட்டே வரேன்னு சொல்லி இருந்தாரு ” என்ற மகளை பார்த்து அவரால் ஒன்றும் பேச முடியவில்லை அழுகை தான் வந்தது.

முந்தானையை கொண்டு வாயில் வைத்து அழுதார்.

“சொல்லு மா. அப்பா ஏன் இன்னும் வீட்டுக்கு வரல, அப்புறம் இங்க இருக்கிறவங்க எல்லாரும் எதுக்கு அழுகிறாங்க?” கேள்வியாய் கேட்டு கொண்டிருப்பவள் தான் சுந்தரி சங்கரின் தவப்புதல்வி ரோஜா.

“அம்மா ! அப்பாவை வர சொல்லு மா ” மகளின் கேள்விக்கு அவருக்கு அழுகை பீறிட்டது.

“எந்த நேரத்துல இது பொறந்ததோ ,அப்பனையே முழுங்கிடுச்சி. அய்யோ ராசா இந்த ஆத்தாவை விட்டு போய்ட்டியே டா ” கண்ணீர் விட்டவாரே பேத்தியிடம் தன் ஆத்திரத்தை காட்டினார் பேச்சி .

“அத்தை” அதிர்ந்து போய் கண்ணீரோடு ஏறிட்டார் சுந்தரி.

“என்னத்தை இல்லாததை சொல்லிட்டேன் . உண்மையை தானே சொல்றேன் இந்த விளங்காதவ பொறந்ததனால தானே என் மவன் டவுனுக்கு போய் வேலை பார்த்தான் “முடியை வாரிக் கொண்டை போட்டவர் சண்டைக்கு தயாரானார் .

“இவளால தான் எனக்கு மவன் இன்னைக்கு இல்லாம போய்ட்டான் ” நொறுங்கி போய் இருந்த சுந்தரியின் மனதை மேலும் வதைத்தார் அவர் அத்தை .

“அத்தை , இப்படி எல்லாம் பேசாதீங்க ” மாமியாரிடம் அந்த நேரத்திலும் மகளுக்காய் கெஞ்சினார்.

“இப்போ எதுக்கு சண்டை போட்டுட்டு இருக்கீங்க? இன்னும் கொஞ்ச நேரத்துல சங்கரன் பாடிய கொண்டு வந்திடுவாங்க ” என்றதும் கதறி கதறி அழுதார் சுந்தரி .

ரோஜா அமைதியாய் ஆத்தாவுக்கு பயந்து அன்னையிடம் ஒட்டிக்கொண்டாள்.

ரோஜாவை பார்க்க பார்க்க , சுந்தரிக்கு அழுகையின் சத்தம் கூடியது .

அந்த பதினான்கு வயது பேதைக்கு இங்கு நடப்பது எதுவும் புரியவில்லை .அன்னை அழுவதால், அன்னையோடு சேர்ந்து அவளும் கண்ணீர் சிந்தினாள் .

அடுத்த மூன்று மணிநேரத்திலே சங்கரனது உடல் முழுவதுமாக மூடி ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது .

அழுது அழுது ஓய்ந்து போயிருந்த சுந்தரி , கணவனின் உடலை கண்டு தலை தலையாய் அடித்துக்கொண்டு கண்ணீர் சிந்தினார் .

“என்னங்க,இப்படி எங்களை எல்லாம் விட்டுட்டு எப்படிங்க உங்களுக்கு போக மனசு வந்தது .இப்படி என்னையும் நம்ம பொண்ணையும் அனாதையா விட்டுட்டு போய்ட்டீங்களே “அழுகையின் ஊடே கதறினார் சுந்தரி .

“அச்சிடேன்ட் ஆனா பாடிய, ரொம்ப நேரம் வச்சிருக்க வேணாம் .சீக்கிரமா ஆக வேண்டியதை பாருங்க ” பெரியவர் ஒருவர் சொல்ல , மற்ற கிழவிகள் எல்லாம் பேச்சியோடு சேர்ந்து ஒப்பாரி வைத்தது .

“அய்யோ ! அய்யோ ” அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்தது கிழவிகள் .

சங்கரின் உடலை வீட்டின் முன்பு வைத்து செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்ய தொடங்கினர்.

தந்தை படுத்திருப்பதை கண்டு தாயை நோக்கிய ரோஜா ,” ஏன் மா அப்பாவ இப்படி துணி மூடி கூட்டிட்டு வந்துருக்காங்க ?”

அந்த நேரம் பார்த்து வருகை புரிந்த சுந்தரியின் தம்பியான முத்தையன் ரோஜாவின் அருகில் சென்று ,” உங்க அப்பா இப்போ சாமிகிட்ட போய்ட்டாரு பாப்பா .அவரால இனி உன்கூட இருக்க முடியாது “அவளுக்கு புரியும் வகையில் எடுத்து கூற முயன்றான் .

“வேணாம் மாமா அப்பா என்கூடவே இருக்கட்டுமே “

“சாமியா இருந்தா தான் ரோஜா அவரால உன்னைய எல்லா நேரமும் பார்க்க முடியும்” என்று கூறும்போதே அவனின் மகளும் மனைவியும் அங்கே வருகை தந்தனர் .அவர்களிடம் ரோஜாவை ஒப்படைத்துவிட்டு காரியத்தில் இறங்கினான் .அடுத்த ஒருமணிநேரத்தில் செய்ய வேண்டிய அனைத்து சாங்கியங்களையும் செய்து முடித்து சங்கரனின் உடல் பாடையில் ஏற்றப்பட்டது.

ஒரே குழந்தை அதுவும் பெண் குழந்தையாக போக, வேறு வழி இல்லாமல் அவளையே கொல்லிவைக்க சொல்லி ,பானையை அவளிடம் கொடுத்து சங்கரனது உடலுக்கு முன்னே நடக்கவைத்தனர்.

சிறு பெண் என்பதால், அவளின் துணைக்கு முத்தையனின் மனைவி கௌரி அவளோடு சென்றாள்.

“அத்தை! அப்பா ஏன் எழுதிரிக்காம படுத்தே இருக்காரு?” அழுகையின் ஊடே கேள்வி கேட்க, பதில் சொல்ல முடியாமல் திணறினாள் கௌரி.

அதன் பிறகு ரோஜா பொம்மை போல் அங்கிருந்தவர்கள் சொன்னப்படி செய்தவள், திரும்பி பாராது நடந்து சென்றாள்.

அவளும் கௌரியும் வீட்டிற்கு வரும்போது, வீட்டை கழுவி சுத்தம் செய்து பாதி பேர் குளித்தும், மற்றவர்கள் குளிப்பதற்காக காத்திருக்கவும் செய்தனர்.

பிள்ளையின் கண்கள் அன்னையை தேட, அவரோ ஒரு மூலையில் அமர்ந்து தேம்பி கொண்டிருந்தார்.

அவரை நோக்கி அடியெடுத்தவளை தடுத்த கௌரி,”அம்மா குளிச்சுட்டாங்க ரோஜா. நீயும் போய் குளிச்சுட்டு வா” சொல்லி அவளை அனுப்பி வைத்தாள்.

பேதைக்கு இங்கு நடப்பது இப்போது சிறிது புரிந்து கொள்ள முடிந்தது. இனி தந்தை தன்னுடன் இருக்க மாட்டார் என்று புரிந்து கொண்டாள்.

அந்த நாள் அப்படியே சோகத்துடனும் அழுகையுடனுமே அடுத்தநாள் பாலுக்கான வேலையில் இறங்கினர்.

****

திருச்சி- காஜாமலை

அரசு சட்டக் கல்லூரி

மதிய நேரத்தில் வெயில் கொளுத்திய போதிலும் மாணவ மாணவிகள் அனைவரும் கல்லூரி வளாகத்தினுள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

கடந்த இரண்டு நாட்களாக இந்த போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அவர்களது கோரிக்கைக்கு அங்குள்ள யாரும் செவிசாய்க்க வில்லை.

முதல் நாள் ஆரம்பத்தில் செய்தியாளர்களுக்கு இவ்விடயம் பகிரப்பட, உடனே அவ்விடத்தை நோக்கி படையெடுத்துவிட்டனர்.

போராட்டத்திற்கான காரணம்…

போராட்டத்தின் முதல் நாள் மாலை பொழுது பெண்கள் விடுதியில் வந்து சோதனை செய்திருக்க, இந்த கல்லூரியை பொறுத்தவரை மாணவ மாணவிகளுக்கு அலைப்பேசி உபயோகப்படுத்த அனுமதி இல்லை. அதை கொண்டு இங்கு சோதனைகள் நடத்தப்பட, அந்த சோதனையில் அங்கு இருந்த மாணவிகளிடம் வரைமுறையின்றி பேசி திட்டி சென்றிருக்க, அடுத்தநாள் காலையிலே கல்லூரி தலைமையானவரிடம் புகார் கொடுக்க, அவரோ அதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

அதிலும் பெண்களால் என்ன கிழித்திட முடியும் என்று அவர்களை உதாசினப்படுத்தினார்கள்.

அவரின் செயலில் மாணவிகளுக்கு கோபம் அதிகரிக்க, உடனே உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். மாணவிகளுக்கு துணையாக தூணாக மாணவர்களும் அதில் பங்கு கொண்டனர்.

இதோ அதோ என்று போராட்டம் இரண்டு நாளை கடந்து விட்டது. ஆனால் அவர்கள் எதிர் பார்த்தது போலான பதில் மட்டும் கிடைத்தபாடில்லை.

மேலாண்மையோ இவர்களுக்கு எதிராக செய்தியை திருப்பி விட்டபடி இருக்க, முதல்வரே இவர்களுக்கு அழைத்து விட்டார் என்றால் கல்வி அமைச்சரான தீனதயாளன் நேரவே வந்துவிட்டார்.

பலத்த பாதுகாப்புடன் அவர் வருகை தந்திருக்க, அவரை பார்த்தவர்களுக்கு இதற்கு ஒரு முடிவு கிடைக்குமா என்று எதிர்பார்ப்போடு பார்த்தனர்.

வந்ததும் கல்லூரி முதல்வரை காணச்சென்றவர், “என்னயா இங்க நடந்துச்சு? இப்போது எதுக்கு இந்த போராட்டம்?” கேள்வியாக கேட்டாலும் அவர் ஒரு வித பதற்றத்துடனே காணப்பட்டார்.

“அது சார்….” அவரோ இழுக்க,

“எங்களுக்கு என்ன வேற வேலை இல்லனு நினைசீங்களா, சும்மா இழுக்கமா என்ன நடந்துச்சின்னு சொல்லி தொலை” அவரின் கடுப்பை அப்படியே காட்டினார்.

கல்லூரி முதல்வருக்கு தான் வியர்த்து கொட்டியது.கல்வி அமைச்சரை பற்றி நிறையா கேள்வி பட்டிருக்கிறாரே… தவறு என்று தெரிந்தால் அதற்கான தக்க தண்டனை வழங்கப்படும். இதுவே தவறில்லை என்ற பட்சத்தில் எங்கு தவறு இருக்கோ அதை கண்டுபிடித்து அதற்கான தண்டனையை கொடுத்துவிடுவார். அரசியலில் நேர்மையான மனிதர் இவர் என்ற பேச்சு எங்கிலும் பேசப்படும்.

“நீயா சொன்னா தண்டனை குறையும், இல்லன்னா என்ன பத்தி உனக்கே தெரிஞ்சிருக்கும்” சொல்லியவர் முகத்தில் முத்துக்களாய் வேர்வை துளிகள் வியர்க்க, ஏசியை கூட்டி வைத்தனர்.

“கேர்ள்ஸ் ஹாஸ்டல்ல இங்க ஸ்டாப்ஸ் விசிட்டிங் போகியிருக்க, அங்க ஏதோ பேச்சு தடித்து ஒரு பொண்ணை அடிச்சிட்டாங்க சார். அடிச்சது பெரிய இடத்து ஆளு அதனால…” அடுத்து சொல்ல தயங்கி அவர் நிறுத்த, படாரென்று எழுந்து கொண்ட தயாளன், அவரை தீயாய் முறைத்தார்.

“ஸ்டுடென்ட்ஸ் கிட்ட பேசிட்டு உனக்கு இருக்கு” அழுத்தமாய் கூறி எச்சரிக்கை விடுத்து மாணவர்களை காணச்சென்றார்.

கல்வி அமைச்சர் வரவும் மாணவர்கள் எழுந்து நிற்க , “இங்க ஸ்டுடென்ட் சேர்மென் யாரு அவங்க மட்டும் கொஞ்சம் முன்ன வாங்க” என்று பாடிகார்ட் ஒருவன் கூற, கூட்டத்தை விலக்கி விட்டு ஒருவன் முன்னே வந்தான்.

அவனை கண்டதும் தீனதயாளன் அதிர்ந்து தான் போனார்.

வெயிலிலே இருந்ததால் என்னவோ கொஞ்சம் முகம் கலை இழந்து காணப்பட்டாலும், திடகாத்திரமான தேகம், ஆளை அசரடிக்கும் காந்த விழிகள், கருப்பும் இல்லாது வெளுப்பும் இல்லாது மாநிறமான நிறம், அவனது ஒவ்வொரு அடிக்கும் எதிர்த்தவரின் நெஞ்சத்தை பதற வைக்கும் விதமான அழுத்தமான நேர்பட பார்வையோடு அவர் முன்பு நெஞ்சை நிமிர்த்தி நின்றான்… அவன் இருபது வயதே ஆனா ஆண் அழகன்…அனைவரலாம் அழைக்கப்படும் சிம்மன்…நரசிம்மன்.

“சொல்லுங்க சார்?”மார்போடு கையை கட்டி நின்றான்.

“நான் பிரின்சிபால் கிட்ட பேசிட்டேன். ஆனா உங்க கிட்ட பேசுறது தான் முறை” என்றவர்,” சொல்லுங்க உங்களோட குறைய?”சொன்னவர் அவருக்கான இருக்கையை விடுத்து மாணவர்கள் அமர்ந்திருப்பது போல் அவரும் கீழே அமர்ந்தார்.

“சார்…”பதறி போய் அவரின் பாடிகார்ட்ஸ் வருகை தர,

“இவங்களுக்காக தான் நான். இவங்களே கீழ உட்காந்து இருக்கும்போது நான் மேல உட்காந்தா நல்லா இருக்குமா” சொல்லவும் அவரின் மீது அங்கிருந்த பலரின் நன்மதிப்பை பெற்றிருந்தார்.

முழு விவரத்தையும் கூறிய சிம்மம்,” எங்க கிட்ட மன்னிப்பு கேட்டு, அவங்களை வேலைய விட்டு நீக்கினா போதும் சார்” அமைதியான குரலில் அழுத்ததுடன் சொன்னவன் அவரின் பதிலுக்காய் காத்திருந்தான்.

“இது தான் உங்க கோரிக்கைனா அத செய்ய நாங்க கடமைபட்டிருக்கோம்” கூறியவர் அடுத்த அரைமணி நேரத்தில் மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றியிருந்தார்.

கூட்டம் கலைந்து செல்ல, அவருமே எழுந்து காருக்கு போக நடக்கையில் பின்னாலிருந்து ஒரு குரல் அவரை தடுத்து நிறுத்தியது.

“பரவாலையே குடும்பத்துக்கு துரோகம் செய்தாலும் அரசியல் வாழ்க்கைக்கு உண்மையா தான் இருக்கீங்க” புகழ்வது போல் புகழ்ந்து இகழ்ச்சியாய் கூறி செல்ல, போகும் மகனை விழியாகலாது பார்த்திருந்தவரால் அவனை அழைத்து பேசும் தைரியம் சுத்தமாக இல்லை.

சிம்மனுக்கு அழைப்பு வந்திருக்கு என ஒரு மாணவன் வந்து கூறி செல்ல, தன் அன்னையாக தான் இருக்கும் என ஓடி போய் பிசியூவை காதில் வைத்தவனுக்கு அடுத்து சொன்ன விஷயத்தில் அந்த பிசியூ அந்தரத்தில் தொங்கியது.