Kalangalil aval vasantham – 9(1)

9

‘முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ

முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள் போடுகின்றதே என்ன ஜாடைகள்

விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்’

அன்று ஞாயிற்றுக் கிழமை! ஓய்வாக படுத்தபடி ராஜாவின் இசையில் லயித்திருந்தாள் ப்ரீத்தி. பெரும்பாலும், இந்த கிழமைகளில் எந்த வேலையும் வைத்துக் கொள்வதில்லை அவள்! சஷாங்கனாக ஏதாவது வேலை கொடுத்தால் மட்டுமே அன்று வெளியே செல்வாள். அப்படியில்லையென்றால், முழு ஒய்வு மட்டுமே!

காலை பத்து மணிக்கு மேல் தான் பள்ளியறை எழுச்சி! அதன் பின் நிதானமாக பல் விளக்கி, அறையிலேயே க்ரீன் டீ குடித்து விட்டு, பொறுமையாக துவைக்க வேண்டிய துணிகளை ஹாஸ்டல் வாஷிங் மெஷினுக்குள் போட்டுவிட்டு, கையில் ஒரு ஓட்ஸ் கஞ்சியோடு வந்தாளென்றால், மீண்டும் எழுவதற்கு ஒருமணி நேரமாகிவிடும்.

அதன் பின் அறையை சுத்தப்படுத்திவிட்டு, அடுத்த வாரத்துக்கு தேவையானவற்றை எடுத்து அடுக்கி வைத்து விட்டு, துவைத்த துணிகளை உலர்த்திவிட்டு, உலர்ந்த துணிகளை தேய்த்து வைத்து, குளித்து முடிக்கும் போது மணி மாலை ஆறை கடந்துவிடும். அதற்கு பின் எங்கிருந்து மதிய உணவு? நேரடியாக இரவுணவுதான்!

சட்டென்று யாருடனும் பழகத் தெரியாததால், அவளுக்கு அங்கு பெரிதாக தோழிகள் கிடையாது. ஒன்றிரண்டு பேர். அவ்வளவுதான். அவ்வளவு எளிதாக யாருடனும் பழகி விட மாட்டாள். எங்கு போவதென்றாலும் தனியாகத்தான். எப்போதாவது அந்த ஒன்றிரண்டு பேருடன் ஏதாவது படத்துக்கு போவதுண்டு.

அதை தவிர அனாவசியமாக ஒரு பைசா கூட செலவு செய்ய மாட்டாள்.

ஆனால் ஒரு பழக்கமுண்டு!

அது கட்டிடங்களின் மீதானக் காதல்!

ஆறு மணிக்கு வெளியே போனால், இரவு எட்டு மணி வரை தெருக்களில் சுற்றியலைவாள். எந்த ஏரியா என்று கணக்கு வைத்துக் கொள்ள மாட்டாள். பிடித்த ஏதாவதொரு ஏரியா! வண்டியை நிறுத்திவிட்டு நிதானமாக நடப்பவளுக்கு அங்கிருக்கும் கட்டடங்கள் தான் உணவு.

ஒவ்வொரு கட்டிடங்களின் வடிவமைப்பையும் நிதானமாக பார்வையிடுவாள். அங்கிருக்கும் மக்களின் தன்மையை எடை போடுவாள். அந்த கட்டிடத்தை எப்படியெல்லாம் வடிவமைக்கலாம் என்று ரீவொர்க் செய்வாள்.

இவை அத்தனையும் கடமைக்காக அல்ல. மிக மிக விரும்பிச் செய்வாள்!

அவளது இந்த காதலை சஷாங்கனும் அறிவான். அதனாலேயே அவளது யோசனைகளை மிக முக்கியமாக அவன் கருதுவதுண்டு!

இருவரும் வெளியேப் போகையில் ஏதாவது காலி இடங்களைப் பார்த்தால் அதை எப்படியெல்லாம் வடிவமைக்கலாம் என்றுதான் தோன்றும், இருவருக்குமே!

அதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவளது கண்களில் தெரியும் ஆர்வமும், அவளது தொழில் மீதானக் காதலும் தான் தெரியும்!

ஒரு இடம் மிகவும் பிடித்துவிட்டதென்றால், இருவருமாக அதன் ப்ளானை பற்றி பேசி, அதை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றி, சிறு மாடலாக வடிமைத்ததும் கூட நடந்திருக்கிறது. அது முன்னேறி அடுத்தக் கட்டமாக கட்டிடமாக மாறுகிறதோ இல்லையோ, இந்த பிளானிங் இருவருக்குமே பிடிக்கும்.

தற்போது கட்டிக் கொண்டிருக்கும் நீலாங்கரை ப்ராஜக்ட்டின் எலிவேஷன் கூட இது போன்றதொரு ஊர் சுற்றலின் போது கிடைத்த டிசைன் தான். அந்த டிசைனை அவளது ரசனைக்கேற்றார் போல மாற்றி, அவளே செய்து தந்த மினியேச்சரை, இப்போது செயல் வடிவில் கொண்டு வந்திருந்தான் சஷாங்கன்.

மனதுக்குள் அசைப்போட்டபடியே, நடந்து கொண்டிருந்த ப்ரீத்தியை, அப்போது அவள் கண்ட காட்சி திகைப்பில் ஆழ்த்தியது.

அதுவொரு ஹோட்டலின் நுழைவு வாயில். பஞ்சாபி உணவுகளுக்கு பெயர் போனது அது. மிகப் பெரிய ஆட்கள் கூட காத்திருந்து சாப்பிட்டு விட்டு போவார்கள் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறாள். அதுவும் முக்கியமாக சென்னையிலிருக்கும் பஞ்சாபிகளின் மீட்டிங் பாயின்ட் அதுவென ஷான் சொல்லி இருக்கிறான். அதோடு அவ்வப்போது அவனோடு வந்த அனுபவம் வேறு.

அந்த ஹோட்டலினுள் நுழைந்தது, ரவிச்சந்திரன்! உடன் சரண் சிங் பாதல்! அவர் காவல் துறையின் உயரதிகாரி என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் அவர் பின்னால் இறங்கிய நபரைக் கண்டு தான் இன்னும் ஆச்சரியப்பட்டு போனாள்.

சைலேஷ்! ஸ்வேதாவின் தாய் மாயாவின் துணைவர்! அதாவது அவளது அங்கிள்! இவரோடு ரவி இருக்கிறானா? என்ன காரணம்? ஸ்வேதாவுக்கும் ரவிக்கும் ஆகவே ஆகாதே. அதுபோலத்தானே கேள்வியுற்று இருக்கிறாள்? ஆனால் சைலேஷையும் ரவியையும் பார்த்தால் அது போலவெல்லாம் தெரியவில்லையே! இதில் ஏதோ இருக்கிறது என்று மட்டும் அவளது மனது சொன்னது.

பிரீத்தியின் செல்பேசி அழைத்தது.

எடுத்துப் பார்த்தாள். சஷாங்கன் தான் அழைத்திருந்தான். ஞாயிற்று கிழமை பெரும்பாலும் அழைக்க மாட்டான். இப்போது அழைக்கிறான் என்றால் ஏதேனும் முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும்.

சைலேஷை பார்த்துக் கொண்டே அட்டென்ட் செய்தாள்.

“பாஸ்…”

“என்ன பண்ணிட்டு இருக்க ப்ரீத்?”

“ஜஸ்ட் ஒரு வாக் வந்தேன் பாஸ்…”

அவள் பார்த்ததை சொல்லவில்லை. என்னவென்று தெரியாமல் சொல்வது தேவையில்லாத பின்விளைவுகளை கொண்டு வரும் என்பதை அறியாதவளா அவள்?

“சரி…” என்று தயங்கியவன், “ஒரு ஹெல்ப்…” என்று இன்னமும் தயங்கியபடி கூற,

“சொல்லுங்க பாஸ்…”

“ஹாரிங்க்டன்ல இருக்கேன்…” என்று அவனது தயக்கம் இன்னும் அதிகமாகும் போதே தெரிந்தது, உடன் ஸ்வேதா இருக்கிறாள் என்பது. ஹாரிங்க்டனில் அவனது தனிப்பட்ட அப்பார்ட்மென்ட்டில், தந்தையுடன் கருத்து வேற்றுமை வந்த பிறகு, அவ்வப்போது தனிமையில் இருப்பது அவனது வழக்கம், அதாவது ஸ்வேதாவுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்த பின்பு!

எந்தவிதமான இடைஞ்சல்களையும் அங்கு அவன் விரும்புவதில்லை. மிக முக்கியமான சில விஷயங்களுக்காக தவிர, ப்ரீத்தியும் அங்கு சென்றதில்லை.

“ஓகே பாஸ்…”

“வைஷு அர்ஜண்ட்டா வீட்டுக்கு கூப்பிடறா…”

“நான் போகனுமா பாஸ்?”

“இல்ல… நீ இங்க வந்து என்னை பிக் அப் பண்ணிட்டு அங்க போகணும்…” என்று தலையை சுற்றி மூக்கைத் தொட, ‘ஏன் இப்படி?’ என்று யோசித்தாள். ஆனால் கேட்கவில்லை. ஏதேனும் காரணம் இல்லாமல் சஷாங்கன் கூற மாட்டான். அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவ்வளவு எளிதாக அழைக்க மாட்டான்.

“ஓகே பாஸ்…” என்று கூறியவள், அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவனது அப்பார்ட்மென்ட்டில் இருந்தாள்.

காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருந்த போது மனதுக்குள் ஏதோ படபடவென இருந்தது. ஏதோ பிடிக்காத உணர்வு. எப்போதாவது, தவறான விஷயம் நடக்கும் போது மட்டுமே அவள் அப்படி உணர்வாள்.

அவளது உள்ளுணர்வு எப்போதும் பொய்த்ததில்லை!

மிகவும் நவீனமான அடுக்கு மாடி குடியிருப்பு அது. பெரும்பாலும் விவிஐபிகளின் கெஸ்ட் ஹவுசாக இருக்கும். அப்படி இல்லையென்றால் வெளி மாநிலங்களை சேர்ந்த விவிஐபிகளின் குடியிருப்பாக இருக்கும். ஆக மொத்தத்தில் தமிழர்களை அங்கு பார்ப்பது அரிது.

ப்ரீத்தி அத்தனையும் பார்ப்பாளே தவிர, அவற்றை மண்டைக்குள் ஏற்றிக் கொண்டு இவர்கள் இப்படித்தான் என்று யூகிக்க மாட்டாள். அது அவளது குணமும் அல்ல.

சின்ன சிரிப்போடு கதவைத் திறந்தவள், ஸ்வேதா! குட்டி டாப்ஸ், அதைவிட குட்டி ஷார்ட்ஸ். தொடை முழுவதையும் திறந்து காட்டியபடி, அவளது மொத்த அழகையும் பறைசாற்றிக் கொண்டிருந்தவளை பார்த்தபோது திடுக்கென்றது. அழகான பெண்களை பார்க்காதவளல்ல ப்ரீத்தி. ஆனாலும் அதை தாண்டி, ஸ்வேதாவிடம் வேறு ஏதோவொன்று இருந்தது. ஏதோவொரு வசீகரம், ஆளை அடித்துப் போடுமளவு! அந்த வசீகரத்தையும் தாண்டி அவளது கண்களில் வேறு ஏதோவொன்றை பார்த்தாள்.

ஸ்வேதாவுக்கு அவளை பிடிக்காதென அவளுக்குத் தெரியும். அவளை வைத்து சஷாங்கனிடம் அவளிடும் சண்டைகளும் ஓரளவுத் தெரியும், அவன் சொல்லவில்லை என்றாலும் அவளால் ஊகிக்க முடியாதா?

எப்போதுமே ப்ரீத்தியை அவள் நேருக்கு நேராகத்தான் பார்ப்பாள். அதுவும் நீ எனக்கு அடிமை என்ற கண்ணோட்டத்துடன்!

இப்போது அது சற்று மாறியிருந்தது. அவளது கண்கள் அவளை நேராக பார்க்கத் தயங்கி,

“என்ன?” என்று கேட்டபடி நிலையில்லாமல் எங்கோ நோக்கியது!

“பாஸ் வர சொன்னாங்க…” என்று கூறியவளை, மேலும் கீழுமாக பார்த்தவள், மறுமொழி கூறாமல் நிதானிக்க, ஹாலில் அமர்ந்திருந்த சஷாங்கன், “உள்ள வா ப்ரீத்…” என்று குரல் கொடுக்க, வேறு வழியில்லாமல்,

“உள்ள வா…” என்று கூறியவள், சற்று வழிவிட, அவளை பாராமல் உள்ளே வந்தாள் ப்ரீத்தி.

வந்தவள், சஷாங்கனை குழப்பமாக பார்த்தாள்!

தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் அவன்!

என்னவாயிற்று என்று தெரியவில்லையே என்று நினைத்தபடி, “பாஸ்…” என்று அவனை நோக்கிப் போக,

“நத்திங்… கொஞ்சம் தலை சுத்தறதா சொன்னாங்க…” சற்று அசால்டாக கூறிய ஸ்வேதாவை நிமிர்ந்து பார்த்தாள். என்ன சொல்வதென்று ப்ரீத்திக்கு தெரியவில்லை.

ஸ்வேதாவின் கண்களில் அலட்சியம். சட்டென யாரும் அதை கண்டுகொள்ள முடியாது. ஆனால் அவளை நன்றாக தெரிந்தவர்களுக்கு அவளது அலட்சியம் நன்றாகவே புலப்படும். ப்ரீத்திக்கு அவள் கண்களில் புலப்பட்ட அலட்சியம் சஷாங்கனுக்கு புலப்படவில்லையா என்ன? மனதுக்குள் ஏனோ சுருக்கென்று தைத்தது.

அவன் முன்பு மண்டியிட்டு அமர்ந்து, அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு, “என்னாச்சு ஷான்?” என்று கேட்டவளை எரிப்பது போலப் பார்த்தாள் ஸ்வேதா.

“கொஞ்சம் கிடினஸ்…” என்றவன், “வீட்டுக்கு கொஞ்சம் அர்ஜண்ட்டா போகணும் ப்ரீத். என்னால டிரைவ் பண்ண முடியாது… அதான் உன்னை கூப்பிட்டேன்…” என்று கூற,

“ஓகே பாஸ்…”

“உன்னோட சண்டேவ ஸ்பாயில் பண்றேனா?” நிமிர்ந்து அவளைப் பார்த்து லேசாக புன்னகைத்தபடி கேட்டவனுக்கு,

“எஸ். அப்கோர்ஸ் பாஸ்…” என்று சிரித்தபடி பதில் கொடுத்தவள், எழுந்து கொண்டு, அவன் எழுந்து கொள்ள கைக் கொடுக்க, அவளது கையை சட்டென தட்டி விட்ட ஸ்வேதா, அவனது கையை அவள் பற்றிக் கொண்டு,

“அப்ப கூட இது உனக்கு வீடா தெரியல?” முகம் இறுக, கேட்டவளை,

“இப்ப என்னாச்சு ஸ்வேதா?” சற்று சோர்வாக கேட்டவனை எரிச்சலாக பார்த்தாள் ஸ்வேதா.

“அது தான் வீடுன்னா, இது என்ன?”

“ம்ம்ம்… இது கெஸ்ட் ஹவுஸ்…” என்றவனை முறைத்தாள். அவன் சொல்வது அவனைப் பொறுத்தவரையில் உண்மை. நிறுவனத்தின் கெஸ்ட் ஹவுஸ்களில் ஒன்று தான் அந்த வீடு!

“கெஸ்ட் ஹவுஸா?” அதிர்ந்து கேட்டவளை, சோர்வாகப் பார்த்தவன்,

“ஐ ஆம் டயர்ட் ஸ்வேதா. இன்னொரு நாள் சண்டை போடலாம்…” என்று அவளது கையை விலக்கி விட்டவன், நகரப் பார்க்க,

“இது நம்ம வீடு ஷான்…” ஸ்வேதாவால் ப்ரீத்தியின் முன் தலையிறக்கமாவதை ஒப்புக் கொள்ளவே முடியவில்லை.

“இப்போதைக்கு இது என்னோட வீடு ஸ்வேதா. உன்னோட வீடு கானத்தூர்ல இருக்கு. நமக்கு மேரேஜ் ஆனாத்தான் இது நம்ம வீடு…” சொல்வதை தெளிவாக, தீர்க்கமாக கூறியவனை கோபம் கொப்பளிக்கப் பார்த்தாள் ஸ்வேதா.

“அப்படீன்னா இப்போதைக்கு உனக்கும் எனக்கும் எந்த ரிலேஷன்ஷிப்பும் இல்லைன்னு சொல்ல வர்றியா?” விட்டால் அவனது சட்டையை பிடித்து உலுக்குமளவு ஆத்திரமாக இருந்தது ஸ்வேதாவுக்கு.

இருவரது சண்டையையும் பார்த்துக் கொண்டிருந்த ப்ரீத்திக்குத்தான் சங்கடமாக இருந்தது.

“அப்படி எப்ப நான் சொன்னேன்? நீ அதை பப்ளிக்கா அக்னாலட்ஜ் பண்ணுன்னுதான் கேக்கறேன். அதை நீ அக்செப்ட் பண்ணு, அப்புறமா சொந்தம் கொண்டாடு…” என்று நறுக்கென்று கூறியவன், ப்ரீத்தியை பார்த்து, “கிளம்பு ப்ரீத்… டைமாகுது…” என்று முடிக்க,

“எனக்கு பதில் சொல்லிட்டு போ ஷான்…”

“என்ன சொல்லணும்?”

“நான் ஸ்வேதா, இவ ப்ரீத்?” எள்ளலாக கேட்டவள், “அதுக்கு என்ன அர்த்தம்?” எப்போதும் போல ப்ரீத்தியோடு சேர்த்து வைத்து பேசப் போகிறாள் என்பதை உணர்ந்தவுடன், சஷாங்கனுக்கு பதறிவிட்டது.

ப்ரீத்தியின் காதுபட இதுவரை இந்த விஷயங்கள் வந்ததில்லை. ஆனால் இப்போது நேருக்கு நேராக அப்படியெதுவும் கேட்டுவிட்டால், அவளின் மனம் என்ன பாடுபடும் என்ற நினைப்போடு, அந்த சூழ்நிலையை தன்னால் எதிர்கொள்ள முடியுமா என்ற பயமும் வந்தது.

எவ்வளவு அநாகரீகமான வார்த்தைகள் அவை?

இதுவரை அது போல விஷத்தை கக்கியதெல்லாம் தனிமையில் தான். இப்போதோ, ப்ரீத்தியும் இருக்கும் போது?

ஆனால் ஸ்வேதா கேட்ட தொனியிலேயே, ப்ரீத்திக்கு சகலமும் நடுங்கி விட்டது.

“ஸ்வேதா… ஸ்டாப் இட்…” சோர்வை மீறி, கோபமாக கூறியவனை இன்னமும் பதற வைக்கும் ஆசை வந்தது அவளுக்கு!

“ரிலேஷன்ஷிப் உனக்கும் எனக்குமா? இல்ல… உனக்கும் இவளுக்குமா? உனக்கு நான் ஒருத்தி போதலல்ல…” கண்களில் திமிரைத் தேக்கி வைத்து, அலட்சியப் பார்வையோடு கேட்க,

“டோன்ட் பீ ஸ்டுபிட்…”

“உண்மை சுடுதா ஷான்?” என்றவள், இன்னமும் என்னவெல்லாம் இருவரையும் சேர்த்து வைத்து பேசி நோகடிக்க முடியுமோ, அத்தனையும் செய்தாள்.

அவளது கேள்வியிலிருந்த குத்தலில் வெகுண்டவன், ப்ரீத்தியை பார்த்து, “நீ கொஞ்சம் வெளிய இரு…” கண்களில் வலியோடு கூற, அதுவரை அதிர்ந்த பார்வையோடும், நடுங்கிய தேகத்தோடும் நின்றிருந்தவள்,

“இல்ல பாஸ்… நான் கிளம்பறேன்…” என்று வெளியேற முயன்றாள். அந்த வார்த்தைகளும் ஸ்வேதா அதற்கு கற்பித்த அர்த்தமும் வெகு மோசமானவை! அவற்றை அவளால் எதிர்கொள்ள முடியுமென்று தோன்றவில்லை. எப்படியாவது இருவரையும் காயப்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற அதீத ஆத்திரத்தில், இன்னமும் ஸ்வேதா வார்த்தைகளை விட முயல, அவற்றையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் ஷான் இல்லை.

அவனது பார்வை மொத்தமும் தலைகுனிந்து நின்றிருந்த அவனது தோழி மேல் மட்டுமே!

ஸ்வேதா கூறிய வார்த்தைகளில் அவள் திடுக்கிட்டு அவனை பார்த்தது, அவனது பார்வையை நேர்கொண்டு பார்க்க முடியாமல், தலை குனிந்தது, அவளது நடுங்கிய தோள்கள், எதுவும் பேச முடியாமல் துடித்த உதடுகள், அவளது கையறு நிலை, அந்த உணர்வுகளை சமாளிக்க முடியாமல் வெளியே போகத் துடித்த கால்கள் என்று ஒவ்வொரு துளியையும் அவனது கண்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தது.

அதிலும் வெளியேறுகிறேன் என்று அவள் சொல்கையில் அவனது கோபம், எல்லையை கடந்தது!

“உன்னை வெளிய இருன்னு மட்டும் தான் சொன்னேன் ப்ரீத்தி…” அழுத்தம்திருத்தமாக கூறியவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் அடிபட்ட பறவையின் பரிதவிப்பு!

சாதாரண நடுத்தர வர்க்கத்து பெண் அவள்! ஸ்ரீரங்கத்தில் வளர்ந்த சாமானியள். வேறு எதை வேண்டுமானாலும் அவளால் சமாளித்து விட முடியும். தூசியாக தட்டிவிட்டுப் போக முடியும். அவளது குணத்தை காவு வாங்குவது போல பேசிய ஸ்வேதாவின் வார்த்தைகள் மட்டும் தான் அவளை தைத்துப் பார்த்தது!

பதில் பேசாமல் அவள் வெளியேறி, சற்றுத் தள்ளி நின்று கொண்டாள்.

ஸ்வேதா கொடுத்த அதிர்ச்சியிலிருந்து அவள் இன்னமும் வெளிவரவில்லை. உடல் இன்னமும் நடுங்கியபடி!

“இப்ப உனக்கு என்ன வேணும் ஸ்வேதா?” நிமிர்ந்து நின்றவன், ஸ்வேதாவை நேராக பார்த்தபடி கேட்டான்.

“எனக்கு நீ வேணும் ஷான். எனக்கு மட்டும் தான் நீ…” அவனைப் போலவே அழுத்தந்திருத்தமாக ஸ்வேதா கூற,

“ப்ரீத்தி ஒரு வார்த்தை ம்ம்ம் ன்னு சொல்லிருந்தா…” என்று ஆரம்பித்தவன், “ப்ச்… ஆனா அவ தான் போட்டிக்கு வரலையே! ஏன் அந்த அப்பாவி பொண்ணை இவ்வளவு வதைக்கற?”

“அவளைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கல ஷான். அவளை நீ பக்கத்துல வெச்சுருக்கறது எனக்குப் பிடிக்கவே இல்ல. எனக்குப் பிடிக்கல… எனக்குப் பிடிக்கல… எனக்குப் பிடிக்கல…” அடித் தொண்டையிலிருந்து கத்திய ஸ்வேதாவை அவன் பார்த்த பார்வையில் என்ன இருந்தது? ஸ்வேதாவால் கணிக்க முடியவில்லை.

“அதனால என்ன சொல்ல வர்ற?” நிதானமாக அவன் கேட்க, அவனது நிதானம் அவளுக்கு சற்று வியப்பாக இருந்தது.

“ஒன்ஸ் ஃபார் ஆல், அவளை அனுப்பிடு. அவ இருந்தா என்னால என்னை கண்ட்ரோல் பண்ணிக்கவே முடியாது…” கொஞ்சமும் தயங்காமல் அவள் கூறியதெல்லாம் ப்ரீத்தியின் காதுகளிலும் விழுந்தது.

“சோ…” என்று நிறுத்தியவன், “உனக்கு ப்ரீத்தியை பிடிக்கல… ரைட்?”

“எஸ் ரைட்…”

“அவளை அனுப்பிடணும்? ரைட்?”

“எஸ்…”

“நான் உன் கூட மட்டும் தான் இருக்கணும்… இல்லையா?” அவளைக் கூர்மையாக பார்த்தபடி கேட்டவனை ஒருமாதிரியாகப் பார்த்தவள்,

“எஸ்…” என்று கூற,

கைகளைக் கட்டியபடி, நிமிர்ந்து நின்றவன்,

“நீ என் கூட மட்டும் தான் இருந்தியா?” வெகு அழுத்தமாக கேட்டான் சஷாங்கன். அதிர்ந்து அவனை நிமிர்ந்து நேராக பார்க்க முயன்றாள் ஸ்வேதா.

“வாட் டூ யூ மீன்?” இப்போது நடுக்கம் அவளது குரலில்!

“ஐ மீன் வாட் ஐ சே…”

“எல்லாம் தெரிஞ்சு தானே என்னோட ரிலேஷன்ஷிப்ல இருக்க?” குரல் இப்போது வெகுவாக கீழிறங்கி இருந்தது.

“எல்லாம் தெரிஞ்சுதான்னா? நீ என்ன பண்ணாலும் அதை நான் அக்செப்ட் பண்ணிட்டு இருந்துடுவேன்னு கனவுல கூட நினைச்சு பார்க்காத… ஐ டோன்ட் மைன்ட் யுவர் பாஸ்ட். இப்ப என் கிட்ட ஹானஸ்டா இருக்கியான்னு பார்க்கறேன். ஆனா ப்ரீத்தி பத்தி ஏதாவது பேசின…” என்று ஒற்றை விரலைக் காட்டி எச்சரித்தவன், “இப்படிதான் இருக்கணும்ன்னா இப்படிதான் இருக்கணும். அதை விட்டுட்டு என்னை நீ டாமினேட் பண்ணனும்ன்னு நினைச்சா குப்பைய தூக்கி போடற மாதிரி உன்னைத் தூக்கிப் போட்டுட்டு போயிட்டே இருப்பேன். மைன்ட் இட்…” குரலை உயர்த்தாமல், அலுங்காமல், குலுங்காமல், அவன் கூறிய தொனியில் சகலமும் ஆட்டம் கண்டது ஸ்வேதாவுக்கு!

சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டவள், குரலைத் தழைத்தபடி,

“இந்த பொம்பளைங்க எப்படியெல்லாம் ஆம்பிளைங்கள மயக்குவாங்கன்னு உனக்கு தெரியாது ஷான். உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்…” என்று மிழற்றியபடி, அவனருகில் வர,

“அந்த டெக்னிக் எல்லாம் உனக்குத்தான் தெரியும். ப்ரீத்திக்கு தெரியாது. விஷத்தை கொட்றது எல்லாம் வெளிய வெச்சுக்க, என்கிட்டையோ, ப்ரீத்தி கிட்டயோ கொட்டலாம்ன்னு நினைச்ச…” என்று நிறுத்தியவன், “தொலைச்சுடுவேன்…” என்று முடித்து விட்டு வெளியேற போக,

“உனக்கு என்னை விட அவ தான் முக்கியமா ஷான்?” பலவீனமான குரலில் கேட்டவளை உறுத்து விழித்தவன்,

“எத்தனை தடவை கேட்டாலும் ஒரே பதில் தான்… ஆமா… ஆமா… ஆமா… எனக்கு ப்ரீத்தி தான் முக்கியம்…” என்று முடித்தான்.

“அப்படீன்னா… அவ கூடவே…” என்று கண்ணீரோடு ஆரம்பித்தவளின் வார்த்தைகள் எங்கு சென்று முடியுமென்று தெரிந்ததில், அவனது கோபம் எல்லை மீறியது. சட்டென்று கையை ஓங்கி விட்டவன், சடுதியில், தன்னை சுதாரித்தான்.

பெண்ணை கை நீட்டி அடித்து அடக்குவதா ஆண்மை என்ற கேள்வி, அவன் முன் தோன்றியது!

அவனது நீட்டிய கையைப் பார்த்தவள், வாக்கியத்தை முடிக்காமல் அதிர்ந்து நிறுத்தினாள்!

இருவரின் வாக்குவாதத்தை கேட்டுக் கொண்டிருந்த ப்ரீத்தியின் கண்களில் கண்ணீர் வெள்ளம்!

துடைக்கத் தோன்றவில்லை!

அந்த இடத்தில் நிற்கவே கூசியது!

கதவை அறைந்து மூடியவன், வெளியில் நின்று கொண்டிருந்த ப்ரீத்தியின் கையைப் பற்றிக்கொண்டு வேக நடையிட்டு காருக்கு வந்துவிட்டான்.

உணர்வே இல்லாமல் அவன் இழுத்த இழுப்பிற்கு வந்தவள், காரினுள் ஏறுவதற்கும் தோன்றாமல் நின்று கொண்டிருந்தாள்.

“உட்கார் ப்ரீத்தி…” என்றவன், சீட் பெல்ட்டை போட்டுக் கொண்டு பின்னால் சாய்ந்து கொண்டான். ஓட்டுனர் இருக்கையை ப்ரீத்திக்கு விட்டு வைத்திருந்தான்.

அதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த சோர்வெல்லாம் மொத்தமாக அவனை ஆட்கொண்டு விட்டதைப் போலத் தோன்றியது அவனுக்கு!

கதவைத் திறந்துகொண்டு மெளனமாக அமர்ந்தவள், காரை ஸ்டார்ட் செய்யும் எண்ணமே இல்லாமல் அமர்ந்திருக்க,

“காரை எடு ப்ரீத்…” என்று சற்று பலவீனமான குரலில் கூற, அவன் பக்கம் திரும்பி, பரிதாபமாக அவனைப் பார்த்தாள்.

அவனாகத் தேடிக் கொண்ட வாழ்க்கைதான்! அவன் காயப்படுவதும் இல்லாமல், அவனைச் சார்ந்த அவளையுமல்லவா…

எதை நோக்கி இவன் போகிறான்… இவன் பின்னே எதை நோக்கி தான் போகிறோம் என்ற கேள்வி அவளுக்கு முன்னே பிரம்மாண்டமாக எழுந்தது.

பதில் பேசாமல் காரை ஸ்டார்ட் செய்தாள்!

“என்னை பார்த்தா கேவலவமான பிறவி மாதிரி தெரியுதுதானே?”

மெளனமாக காரை செலுத்திக் கொண்டிருந்தாள்.

“எனக்கு இருக்கு…”

கேட்டுக் கொண்டிருந்தவள், அதற்கும் பதில் கூறவில்லை.

“எனக்கு ஏன் இப்படியொரு பைத்தியம் பிடிச்சுதுன்னு அப்பப்ப கேட்டுக்கறேன்…” அதையும் கேட்டுக் கொண்டாள்.

“எதுக்குமே பதில் சொல்ல மாட்டல்ல ப்ரீத்தி. இப்படி ஒருத்தி கூட லிவ் இன்ல இருக்கானேன்னு கேவலமா இருக்கா?”