மோகனங்கள் பேசுதடி!-24

eiL5KAD79398-b8282f96

மோகனம் 24

இன்றோடு விஷ்வாவும் அருவியும் ஊர் திரும்பி ஒருவாரமாகியிருந்தது.

 

ஊர் திரும்பியதுமே அவர்களுக்கான வேலை அவர்களை இழுத்துக்கொண்டாலும், குடும்பத்திற்கான நேரத்தை இவர்கள் ஒதுக்கவும் தவறவில்லை.

 

விஷ்வா அருவியின் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் போகவும், மஞ்சுளாவின் கவலை எல்லாம் இப்போது பெரிய மகன் மீது திரும்பியது. இருப்பினும் அமைதியாய் தான் இருந்தார்.

 

எதற்கும் காலம் ஒரு தீர்வினை தரும் என்று நம்பினார்.அந்த நாளும் வெகு தொலைவில் இல்லாமல் விரைவாகவே வந்து சேர்ந்தது.

 

மனைவியோடும் மகளோடும் பள்ளியை விட்டு வீடு திரும்பியவன், மனைவியை சைட்டடிக்க ஆரம்பித்தான்.

 

“என்ன பண்ணிட்டு இருக்க? உன்னோட ஒரே அக்கப்போறா இருக்கு ” சன்னக்குரலில் சலித்தபடி சொல்ல,

 

“பார்த்தா தெர்லையா… சைட்டடிக்கிறேன்” சொல்லி பட்டென்று கண்ணடிக்கவும், கணவனை முறைக்கலானாள் பெண்.

 

“நாம ஹால்ல இருக்கோம் விஷ்வா”

 

“இருந்தா என்ன, எங்க இருந்தாலும் என் அழகு பொண்டாட்டி நீங்க தானே” சொன்னவன் ஒருமுறை சுற்றி முற்றிலும் பார்வையால் அக்கம் பக்கம் அலச,

 

விஷ்வாவின் செயல் புரியாது கணவனையே பார்த்திருந்தவள், அவன் அடுத்து செய்த செயலில் சிலையாகிப்போனாள்.

 

அருவி அறியா நேரம் பச்சக்கென்று இதழில் அவசர முத்தமொன்றை பதித்தவன், மனைவி தெளிவதற்குள் மறைந்துவிட்டான்.

 

சில நொடிகள் திக்பிரமை பிடித்தவள் போல் நின்றிருக்க, சுயம் பெற்ற அருவி கணவனை தேடி போனாள்.

 

அறைக்கு வந்ததும் காச்மூச்சென கத்த, அவளை பேசவிடாது வார்த்தைகளை இதழ் கொண்டு வாங்கி கொண்டான்.

 

அத்தனை நேரம் திட்டிக்கொண்டிருந்த அருவி, இதழொற்றலில் அடங்கிவிட மோகன புன்னகையை உதிர்த்தான் விஷ்வா.

 

அவளை மெதுவாய் தன் மடியில் அமர்த்திய விஷ்வா, புடவையில் மெல்லமாய் தெரிந்த இடையில் தன் கைகளை ஊடுருவல் செய்தான்.

 

மன்னவனின் செய்கையில் மனைவிக்கு கூச்சம் வரவே, சிணுங்கினாள் மணவாட்டி.

 

அப்படியே கழுத்திடுக்கில் தன் முகத்தினை புதைத்து சொர்கம் சென்றவன், காதில் மெல்லமாய் முத்தம் வைக்க பெண்ணவளின் ரோமங்கள் சிலிர்த்தது.

 

“விஷ்…வா…” வார்த்தைகள் தந்தியடிக்க,

 

“உன் விஷ்வாவே தான் பொண்டாட்டி” என்றான் உல்லாச குரலில்.

 

“இங்க பாரு விஷ்வா, இனி ஹாலில் அப்படி நடந்துக்காத பா. நம்ம குழந்தை நம்மளை பார்த்து தான் வளருவா. அதனால நாம எச்சரிக்கையா இருக்கணும். அருண் சாரை பத்தி நாம யோசிக்கணும் விஷ்வா. அவரோட வாழ்க்கை அந்தரத்தில் தொங்குது. என்ன தான் அத்தை இப்போதைக்கு சந்தோஷமா இருந்தாலும் அவங்களுக்கு அருண் சார் பத்தின கவலை இருக்கத்தான் செய்யும்” மனைவி குடும்பத்தின் நலனை குறித்து பேச, ஆசையாய் அணைத்து கொண்டான் விஷ்வா.

 

“அவனோட வாழ்க்கை நல்லபடியா அமையும் டா. நாம அமைச்சி கொடுக்கலாம்” சொன்ன விஷ்வா தன் புறம் திருப்பி அமர்த்தியவன், அவளின் வலது கையை பிடித்தான்.

 

“நம்மளோட கல்யாணம் தான் எதிர்ப்பாராம நடந்திடுச்சு. சோ…”பேசாது நிறுத்திட,

 

“சோ… என்ன விஷ்வா?” ஆர்வமாகினாள் அருவி.

 

“நமக்கு நிச்சயம் எதுவும் நடக்கலைல . அதனால இப்போ ரிங் மாத்திக்கலாம்” சொல்லி மறைத்து வைத்திருந்த பெட்டியை எடுத்து அவள் முன் நீட்டினான்.

 

அதில் கப்பில் ரிங் இருக்க, கண்கள் லேசாய் கலங்கி போனது பெண்ணிற்கு‌.

 

“என்னை ஏன் இத்தனை காதலிக்கிற விஷ்வா? அப்படி என்ன நான் செய்திட்டேன்”

 

“காதலிக்க காரணம் இருக்க கூடாது டா. அப்படி காரணம்னு ஒன்னு இருந்திச்சின்னா அது காதலே கிடையாது” சொல்லவும் கணவனை நெகிழ்ச்சியுடன் பார்த்திருந்தாள்.

 

அந்த கண்களில் ஆசையாய் முத்தமிட்டவன், அவளின் மோதிர விரலில் மோதிரத்தை மாட்டிவிட, லேசாய் கண் கலங்கிய நிலையில் அவனுக்கும் அணிவித்தாள்.

 

“அழாதே டா” என்று மனைவியை சமாதானப் படுத்தியவன், இருவரின் கைகளையும் கோர்த்தவாறு ஒரு புகைப்படத்தை எடுத்து அதனை பேஸ்புக்கில் போட்டு விட்டான்.

 

எதார்த்தமாக விஷ்வா இதனை செய்ய, அவனது ஐடியையே இருபத்தி நாலு மணி நேரமும் பார்க்கும் நேத்ராவிற்கு ஆத்திரமாக வந்தது.

 

அவனை அடைய வேண்டும் என்று ஆசை வெறி கொண்டவளுக்கு அவனின் இந்த திருமண விடயம் கட்டுக்கடங்காத ஆத்திரத்தை மூட்டியது.

 

அவளால் தான் ஆசைப்பட்ட ஒருத்தன் இன்னொருத்திக்கு சொந்தமானத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

 

அவனை அடைய வேண்டும் என்ற நோக்குடன் இந்திய கிளம்ப ஆயத்தமாகினாள்.

 

இங்கே காதல் ஜோடிகளாய் அறைக்குள்ளும், வெளியே பொறுப்புள்ள பெற்றவர்களாவும் வளம் வந்தனர்.

 

இரவு ஒன்பது மணிப்போல் அனைவரும் சாப்பிட அமர ஏதுவாய் இருந்த நேரம் பார்த்து அருவிக்கு அன்னையிடமிருந்து ஃபோன் வந்தது.

 

“யாரு அருவி?” விஷ்வா கேட்கவும்,” அம்மா தான் விஷ்வா. இந்த நேரத்தில கூப்பிடுறாங்க” யோசனையுடனே கணவனிடம் சொன்னவள் அதனை உயிர்ப்பித்தாள்.

 

“அம்மா! சொல்லுங்க என்ன இந்த நேரத்தில? ஏதும் பிரச்சனையா?” கேட்டவளுக்கு ஒருவித பதற்றம் தோன்ற விஷ்வாவின் கரத்தை இறுக்க பற்றிக்கொண்டாள்.

 

அவனுமே மனைவியின் பதற்றம் புரிந்து, ஆறுதலான அணைப்பு அவனிடமிருந்து கிடைத்தது‌.

 

“தேனு! உங்க அப்பா பேச்சு மூச்சில்லாம மயங்கி கிடக்கிறாரு டி. பர்மா இருக்கு” சொல்லவுமே ஒரு மகளாய் கலங்கினாள்.

 

“கவலைப்படாதீங்க ம்மா.. இதோ நானும் விஷ்வாவும் கிளம்பி வரோம்” சொன்னவள் உடனடியாக கணவனிடம் விவரத்தை கூறி கிளம்பிவிட்டாள்.

 

மஞ்சுளாவும் கங்காதரனும் வருகிறேன் என்று சொன்னதற்கு வேணாம் என்று சொல்லி கிளம்பிவிட்டனர்.

 

அடுத்த அரைமணி நேரத்தில் பொறந்த வீட்டையடைந்த அருவி, கணவனுடன் உள்ளே சென்றாள்.

 

மூர்த்தியின் நிலையை பார்த்த அருவி கண்ணீர் வடிக்க, இயலாமையுடன் பார்த்திருந்தார் மூர்த்தி.

 

இத்தனைக்கும் அவருக்கு இயற்கை வேறு அவசரமாய் அழைப்பு விட, கைகால்களை நகற்ற கூட முடியவில்லை. தன்னையே அந்த நேரத்தில் அவர் வெறுத்தார்.அதிலும் இவர்கள் முன்னிலையிலா தனக்கு இப்படி ஒரு நிலை வரவேண்டும் என்று மனதளவில் கொதித்து இருந்தார்.

 

இப்படியான நிலையில் கூட அவருக்காய் துடிக்கும் இதயங்களை துச்சமென தான் பார்த்தார்.

 

விஷ்வா உடனே ஆம்புலன்ஸ் வர சொல்லிட, அதுவும் அடுத்த அரைமணி நேரத்தில் வந்து விட்டது. உடனே விஷ்வா அவரை தூக்கி ஸ்டெரக்சரில் படுக்க வைத்திட, ஆம்புலன்சில் அருவியும் சந்திராவும் ஏறிக்கொள்ள, மதியுடன் காரில் சென்றான் விஷ்வா. அந்த நேரம் வரையிலும் அகல்விழி நம்முடன் இல்லையென்பதை யாரும் உணரவில்லை. 

 

மருத்துவமனையில் மூர்த்தி அனுமதிக்கபட, அவருக்கான சிகிச்சை தொடங்கியிருந்தது.

 

அவரின் உடல்நிலையை ஆராய்ந்தவர்கள், பக்கவாதமாக இருக்கோமோ என்றெண்ணி எக்ஸ்ரே, சிடீ ஸ்கேன் மற்றும் எம் ஆர் ஐ ஸ்கேன்கள் எடுக்கப்பட்டது.

 

அடுத்த இரண்டு மணிநேரத்தில் ரிசல்ட் எல்லாம் வந்து விட,பக்கவாதம் என்று அறிந்து கொண்டனர். அதனை குடும்பத்தாரிடமும் சொல்ல மூவரும் ஒரே அழுகை. விடயம் தெரிந்து கொண்ட மூர்த்திக்கு இனி இதுகளின் உதவியோடு தான் காலத்தை தள்ள வேண்டுமா என்று யோசிக்கும்போதே அருவெறுத்து போனார் மனிதர்.

 

மூன்று பெண்களையும் சமாதான படுத்திய விஷ்வா அவர்களுக்கு உணவுகளை வாங்கிக்கொடுத்தவன், மாமனார் இருந்த அறைக்குள் நுழைந்தான்.

 

“என்ன மாமனாரே உங்களுக்கு போய்யா இப்படி வரணும்” நக்கலாய் சொல்ல,பேசமுடியாத நிலையில் பற்களை நறநறத்தார்.

 

“கடவுளுக்கு தெரியும் யாருக்கு எப்படியான தண்டனை கொடுக்கணும்னு. வச்சாரா பெரிய ஆப்பா, கொஞ்சநஞ்சமா எத்தன எத்தனை கஷ்டத்தை உங்க குடும்பத்துக்கு செய்திங்க. நீங்க வீட்ல உட்காந்து அத்தைய வேலைக்கு போக வச்சீங்க, படிக்குற பொண்ணுகளை படிக்கவிடாம செய்திங்க, இதைவிட கேவலமா உங்க சுயநலத்துக்காக அருவியை பயன்படுத்தி அவளோட வாழ்க்கையை கெடுத்து, மதியை கடத்தி அம்முவை கடத்தி ச்சீ என்ன பொழப்பு இது? நீங்க கஷ்டப்படுத்துன யாருமே உங்களுக்கு இப்டி ஆகிடுச்சு இனியாவது நிம்மதியா இருக்கலாம்னு நினைக்கல. அங்க உங்களுக்காக கண்ணீர் சிந்திட்டு இருக்காங்க. உங்க வாழ்க்கையில்ல அவங்க எல்லாம் கிடைக்கப்பெற்ற விலைமதிப்பில்லாத செல்வங்கள். அவங்களை நோககடிக்க எப்படி தான் மனசு வந்ததோ தெர்ல. இவளோ நாள் வேணும்னா அவங்களோட பாசம் உங்களுக்கு புரியாம இருந்திருக்கலாம் இனி புரியும்” சொல்லி உணவை வலுக்கட்டாயமாக ஊட்டிவிட்டவன் வெளிவந்துவிட்டான்.

 

விஷ்வாவிற்கு இவருக்கு இப்படியானது கவலை தான். இருப்பினும் அவர் செய்த கர்மாவின் விலை என மனதை தேற்றிக்கொண்டான்.

 

சிறிது நாழிகையில் மூவரையும் பார்த்தவனுக்கு, விழி இல்லாதது அப்போது தான் உணர்த்த” அகல் மா எங்க அத்த?” மாமியாரிடம் கேட்கவும் தான் அருவிக்கே அவள் இல்லாதது உரைத்தது.

 

“அது அவ…” என்று ஏதோ சொல்ல வந்த சந்திரா மகள் சொன்ன’ அம்மா அக்காக்கும் மாமாக்கும் நான் வேலைக்கு போறது தெரிய வேணாம். தெரிஞ்சா பிரச்சனை தான் ம்மா, சொல்லிறாதீங்க’ ஞாபகத்திற்கு வரவே வாய் வரை வந்த வார்த்தைகளை அப்படியே முழுங்கி விட்டார்.

 

“என்ன அம்மா? ஏதோ சொல்ல வந்துட்டு அமைதியாகிட்டீங்க ?”

 

“அது அவ ஏதோ படிக்குற விஷயமா அவ தோழியை பார்க்க போனா, இன்னேரம் வந்திருப்பா” சந்திரா மழுப்பலாய் ஏதோ ஒரு பதிலை சொல்லி சமாதான படுத்த முயலும்போதே உண்மையை உடைத்திருந்தாள் மதி.

 

“என்ன…?” இருவரும் அதிர்வாய் கேட்டனர்.

 

“ஆமா க்கா, விழி அக்கா வேலைக்கு போறா. அதுவும் இல்லாம அக்கா எக்ஸாம்ஸ் எதுவும் எழுதல அப்பா அவளோட ஹால்டிக்கெட்டை கிழிச்சி போட்டுட்டாரு ” சொல்லவும் ரௌத்திரத்தில் அருவியின் கண்கள் அக்னி பிழம்பாய் எரிந்தது.

 

“எனக்கு தெளிவா சொல்லு மதி? அப்பா எதுக்கு அப்டி செய்தாரு?” அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டாள். அவளுக்கு குறையாது கோபத்தில் இருந்தான் விஷ்வா.

 

“அது உனக்கு கல்யாணம் ஆனதுல இருந்து அப்பாக்கு எந்த பணமும் நீ கொடுக்காததால அப்பா என்னோட ஹால்டிக்கெட்டை வாங்கிட்டு எல்லாரையும் வேலைக்கு போக சொல்லி சொல்ல, விழி அக்கா சண்டை போட்டா. ஆனா அப்பா நீங்க வேலைக்கு போகலைன்னா என்னோட ஹால்டிக்கெட்டை கிழிச்சுடுவேன்னு சொல்ல, அக்கா வேற வழி இல்லாம சம்மதம் சொல்ல அப்பவும் அப்பா சும்மா விடல அக்கா. நீ இப்போவே இவளோ திமிரோட இருக்கேனா நீ மட்டும் படிச்சு பட்டம் வாங்கிட்டா என்னை மதிக்கவே மாட்டனு சொல்லி அக்காவோட ஹால்டிக்கெட்டை அவ கண்ணுமுன்னாடி கிழிச்சு போட்டுட்டாரு” அழுகையோடே நடந்ததை விவரிக்கவும் ச்சி என்றானது அருவிக்கு.

 

வேகமாய் மூர்த்தி இருந்த அறைக்குள் நுழைந்த அருவி,” உங்களை அப்பான்னு சொல்லவே எனக்கு அசிங்கமா இருக்கு.உங்களுக்கு அப்பாவா கணவனா இருக்க தகுதியே இல்ல. உங்கள மாதிரியான மனுஷனை நான் பார்த்ததே இல்லை. அப்படியென்ன சொந்த குடும்பத்துமேல விரோதம் உங்களுக்கு? இவ்ளோ கீழ்தரமா நடந்துக்குறிங்க? நீங்க பிறந்ததுக்கு பிறக்காமலே இருந்து இருக்கலாம். பிறந்து எல்லாரோட வாழ்க்கையும் நாசம் பண்ணிட்டீங்க” கோபத்தில் கத்தியவள் வெளியேறிவிட்டாள்.

 

அடுத்து சந்திராவையும் சும்மா விடவில்லை. ஒரு பிடி பிடித்த பிறகே விட்டாள்.

 

“விழி எங்க வேலை பார்குறா?” என்றபடி அவளுக்கு அழைப்பு விடுக்க, அதுவோ அணைத்து இருப்பதாய் சொல்ல, பதற்றமானாள் அருவி. 

 

“சொல்லுங்க, ஏன் அமைதியா இருக்கீங்க?” 

 

“அது…” என அவர் இழுக்க,

 

“என்ன அத்தை? அகல் மா எங்க வேலை பார்க்கிறா?”

 

“ஏதோ சாக்லேட் செய்ற கம்பெனில வேலை பாக்குறதா சொன்னா” சொன்னதுமே,” என்ன ம்மா இப்படி ஒரு பதிலை சொல்றிங்க அவ எங்க வேலை பாக்குறானு கூட உங்களுக்கு தெரியாதா?” என்றவள் நெற்றியை நீவினாள்.

 

“விஷ்வா…” என்றபடி கணவனை கலங்கிய விழிகளால் நோக்க, அவளை விழிகளாலே சமாதானம் செய்தவன்” நீ பயப்படாத நான் பார்த்துகிறேன்” என்றவன் அருணுக்கு அழைத்தவாறே அங்கே இருந்து வெளியேறினான்.

 

அருணும் அழைப்பை எடுக்காது போக, உடனே ஜீவாவை அழைத்து மருத்துவமனை பெயர் சொல்லி வர சொல்லி விட்டான்.

 

அவன் வந்ததும் நடந்ததை சுருக்கமாய் சொல்லி,” ஜீவா! நீ இங்க இருந்து இவங்களை பார்த்துக்க. நான் அகல் மாவை கூட்டிட்டு வரேன்” சொல்லவும் ,” நானும் வரேனே” என்றான்.

 

“இல்ல வேணாம் டா. நீ இங்கேயே இரு அது தான் இப்போ நல்லது” சொல்லி ஜீவாவை அவர்கள் துணைக்கு வைத்து கிளம்பிவிட்டான்.

 

அவனுக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் தேடி அழைந்தவனுக்கு தெரியவில்லை ,அகல்விழி வேலை செய்கிறதே தங்களிடம் தான் என்று.

 

அவனுக்கும் யோசனை வரவில்லை.தங்கள் சாக்லேட் பாக்டரியை தவிர்த்து அனைத்திலும் தேடியலைந்தான். அப்போது தான் களைத்து போன தோற்றத்துடன் வீட்டிற்குள் நுழைந்த அருண் அன்னையும் தந்தையும் உறங்காது விழித்திருப்பதை கண்டு அவர்களை நோக்கி வந்தான்.

 

“ரெண்டு பேரும் தூங்க போகலையா? மணி பதினொன்னு ஆக போகுதே?” கேள்வி கேட்க,

 

“தேனுவோட அப்பாக்கு உடம்பு சரியில்லன்னு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்காங்க டா. அதான் அவங்க ஏதாவது போன் பண்ணுவாங்களான்னு உட்காந்து இருக்கோம்” மஞ்சுளா சொல்லி முடிக்க, மொபைலை எடுத்து பார்த்தான்.

 

அதில் தம்பியிடமிருந்து ஏகப்பட்ட மிஸ்ட்கால்ஸ் இருக்க , உடனே அழைத்து விட்டான். அதிலும் விழியின் அழைப்பிதலும் இருக்க புருவங்கள் இரண்டும் முடிச்சிட்டது.

 

அந்த பக்கம் அழைப்பை விஷ்வா எடுத்ததும் காச்மூச்சென காத்த, ” என்ன ஆச்சி விஷ்வா? அந்த ஆளுக்கு ஒன்னும் இல்லையே? அகல்விழி வேற எனக்கு கூப்பிட்டு இருக்காங்க” சாதாரணமாய் இவன் இதனை சொல்ல,

 

“அகல் மா எத்தனை மணிக்கு கூப்பிட்டு இருக்கா?”

 

“எதுக்கு டா? அவ உங்களோட தானே இருக்கா?” கேட்கவுமே ஏதோ சரியில்லை என மனம் சொன்னது.

 

“அவ இன்னும் வீட்டுக்கு வரல டா” சொல்லவும் அதிர்ந்தே விட்டான்.

 

“இல்லையே. இன்னேரம் வீட்டுக்கு போயிருக்கணுமே டா” 

 

“என்ன சொல்ற அருண்? அது எப்படி உனக்கு தெரியும்?” கேட்க, சிறிது தயங்கி பேசாது அமைதி காத்தவனை, ” சொல்லு டா ” என்று தமையனை துரிதப்படுத்தினான்.

 

“அகல்விழி நம்மளோட சாக்லேட் பாக்டரில தான் வேலை பாக்குறா ” அருண் உண்மையை கூறிட, அதிரிச்சியின் உச்சத்திலிருந்தான் விஷ்வா.

 

“அவளை இங்க காணோம்னு நான் ஊரு முழுக்க தேடிட்டு இருக்கேன்.உனக்கு இந்த விஷயத்தை என்கிட்ட சொல்ல தோணலைல ” கண்டபடி தமையனை திட்டியவன் வைத்துவிட்டான்.

 

இங்கே அருண் நொடி கூட தாமதிக்காது காரினை எடுத்து கிளம்பிவிட்டான். ஏனோ மனம் தவியாய் தவித்தது. ஒரு நிலையிலே இல்லை. இதே போலான நிகழ்வு மீண்டும் அவன் வாழ்வில். முதலான பொழுதில் அவன் காதல் மனைவியை இழந்திருந்தான். இந்த பொழுதில் அகல்விழியை அவன் இழக்க விரும்பவில்லை.

 

எத்தனை வேகமாய் சென்றானோ தெரியாது. அடுத்த சில மணி துளிகளில் பாக்ட்ரியை அடைந்திருந்தான். 

 

செக்யூரிட்டியிடம் விசாரித்ததற்கு அனைவரும் சென்றுவிட்டதாக கூற, உடனே அவருடன் உள்ளே சென்று ஒரு இடம் விடாமல் தேடலானான்.

 

இறுதியாக உறைவிப்பான் அறைக்கு செல்ல, கதவை திறக்கவே கைகள் நடுங்கியது. இங்கே இருந்திருந்தால் அவளின் நிலையை நினைக்கவே மனம் பதறியது.

 

கதவை திறந்து உள்ளே சென்று தேடி பார்த்தவனுக்கு அங்கே விழி இல்லாதது ஒரு வித நிம்மதியை கொடுத்தது.

 

அடுத்ததாக ஸ்டோர் ரூம் சென்று பார்க்க, அங்கே மூச்சு பேச்சில்லாமல் மயங்கிய நிலையில் இருந்த அகல்விழியை கண்ட அருண் ஓடிச்சென்று அவளை தனக்குள் பொதித்துக்கொண்டான். சரியாக அந்த நேரம் விவரம் கேட்டு விஷ்வாவும் வர, அவன் அங்கே கண்டது அகல்விழியை அணைத்தநிலையில் கண்ணீர் சிந்திய அருணை தான்.

 

” அருண்…” பதறியவனாய் அவனை அழைத்தான்.

 

“விஷ்வா… அகல்விழி கண்ணு திறக்க மாட்டேங்கிறா டா.எனக்கு பயமா இருக்கு ஏதாவது பண்ணி இவளை முழிக்க வச்சிடு டா” சொன்னவன் அவள் கன்னத்தை பிடித்து தட்ட அசைவுகள் ஏதுமில்லை.

 

“முழிச்சுக்கோ அகி… முழிச்சிக்கோ டா. இனி என்கூட எவ்வளோ வேணும்னாலும் சண்டை போடு. ஆன கண்ண திறந்து என்னை பாரு. இந்திரா மாதிரி என்னைய விட்டுட்டு போயிடாத” அணைத்தபடியே புலம்பி தள்ள, சுதாரித்த விஷ்வா ” ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போகலாம் டா ” சொன்ன நொடி பூவாய் அவளை இரு கரங்களில் ஏந்தியவன் காரை நோக்கி சென்றான்.

 

அடுத்த அரைமணி நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட,” சரியான காற்று இல்லாததால தான் மயங்கிட்டாங்க. க்ளுகோஸ் போட்ருக்கோம் கொஞ்ச நேரத்துல முழிச்சிப்பாங்க போய் பாருங்க” சொல்லி மருத்துவர் சென்றுவிட, உள்ளே வேகமாய் சென்றான்.

 

விஷ்வா அமைதியாய் அருணை கவனிக்க துவங்கினான். ஆனால் அவனின் சிந்தனை எத்தனை தூரம் சரி வரும் என்று தெரியவில்லை. அதிலும் அருணின் மற்றைய பக்கத்தை அறிந்தவனாகிற்றே. ஒரு பக்கம் சந்தோசமாக தான் இருந்தது. 

 

அவள் அருணின் பிபியை அதிகரித்த பிறகே கண் விழிக்க, முதலில் புரியாது முழித்த அகல்விழியை கண்டதும் திட்ட துவங்கினான் அருண்.

 

“என்ன வீராங்கனைன்னு நினைப்பா உனக்கு? உன்ன யாரு ஸ்டோர் ரூம்க்கு போக சொன்னது? எப்ப பார்த்தாலும் பெரிய ஜான்சி ராணி மாதிரி பேச தெரியுதுல, நான் எடுக்கலான வேற யாருக்கும் கூப்பிட தெரியாதா?” கண்டமேனிக்கு விழிக்கு அருணிடமிருந்து திட்டு விழ, அமைதியாய் கேட்டு படுத்திருந்தாள்.

 

புயலை அடக்க ஒரு சூறாவளியா? புன்னகை அரும்பியது விஷ்வாவின் இதழில்.

 

“சார்…” விழி சன்னக்குரலில் அழைக்க,

 

“என்ன… என்ன சாரு வேண்டி கிடக்குது? உன்னைய பார்த்துக்க உனக்கு தெரியல , இனி வாய திறந்த அப்புறம் அந்த வாய திறக்க விடாம பண்ணிடுவேன்” விழியையே மிரட்டினான்.

“மாமா…” துணைக்கு மாமனை அழைக்க, அவனோ சிரித்தபடி “அகல் மா! இந்த சண்டைக்கு நான் வரல ப்பா ” நைஸாக கழண்டுகொண்டான்.

 

இப்படியே அருண் திட்டத்திட்ட அவள் வாங்கிக்கொண்டே இருந்தவள், ஒரு கட்டத்தில் தூங்கிப்போனாள்.

 

வெளி வந்த விஷ்வா வீட்டினருக்கு விவரத்தை கூற, நிம்மதி பெருமூச்சொன்றை விட்டான்.

 

அன்று முதல் அருணையும் அகல்விழியையும் கவனிப்பதை முதல் வேலையாக மாற்றினான்.