யாகம் 13

யாகம் பதின்மூன்று

 

பகலவன் தன்பணியை முடித்துக் கொண்டு விடைபெற, திங்களவன் உதித்து நடு வானில் சவாரி செய்யும் பொழுதிலே, தெருவிளக்கின் மெல்லிய பிரகாசத்தின் கீழ், கைக்கடிகாரத்தை இத்துடன் பத்தாவது தடவையாக பார்த்துக் கொண்டிருந்தாள் இசை.

 

திரளாக வளர்ந்து, இடைதாண்டி நீண்டிருந்த சுருள் கேசத்தினை ஒரு கிளிப்பில் அடக்கி விரித்து விட்டிருக்க அதுவோ, காற்றுக்கு அங்குமிங்கும் ஆடி, வெற்றிடத்தில் சித்திரம் வரைந்தது.

 

அசையும் முடிகளை அடக்கிவைக்க, மொத்தமாக கைகளுக்குள் வாரியெடுத்து, தன் தோள்களிலும், உடலின் முன்பக்கமாகவும் போட்டுக் கொண்டவள்,

 

“பத்துமணியைத் தாண்டிப் போச்சு, ஃபோன்ல சார்ஜ் வேற இல்லாம ஆப் ஆகிட்டு, காரும் பஞ்சர். எப்படி வீடு போய்ச்சேர.” 

முணுமுணுத்துக் கொண்டவள் நின்றிருந்தது என்வோ, அதிக பயணிகளில்லாத பேருந்துநிறுத்தமொன்றில் தான்.

 

உள் நோயார்களின் பார்வை நேரம் முடிந்தும், ஹஸ்வந்தினிடம் உரையாட வேண்டும் என்ற உந்துதலால், அரைமணி நேரம் அவனுக்காக வைத்தியசாலை வரவேற்பு பகுதியில் காத்திருந்தவளுக்கு பெறுபேறாக கிடைத்தது, பூஜியம் மட்டுமே.

 

இதற்கு மேலும் தாமதிக்க முடியாதென, ‘நாளை கண்டிப்பாக வருவான்’ அபார நம்பிக்கையில், நேராக தனது கார் நிறுத்திவைக்கப்பட்ட இடத்திற்கு விரைய அதுவோ, அசைய மறுத்தது. வீட்டிற்கு அழைத்து தகவலைத் தெரியப்படுத்த நினைக்கையில் தொலைபேசி தற்காலிகமாக உயிரை மாய்த்திருக்க, 

 

‘ஏதும் முச்சக்கர வண்டியில் செல்வோம்’ யோசனையுடன், வைத்தியசாலையிலிருந்து  ஐந்து நிமிட நடையிடைவெளி தூரத்திலுள்ள முச்சக்கர வண்டி நிறுத்தத்திற்கு வர, அங்கு ‘பணிப் பகிஷ்கரிப்பு’ என விதி செவ்வென அதன் வேலையைச் செய்து தடை போட்டது.

 

அசட்டையான தையிரியத்தைப் பின்பற்றிய இசை, பேருந்துத் தரிப்பிடத்திற்கு நடையை விட, அவள் வந்து நிற்பதோ, ஆள்அவரமில்லாத இவ்விடமே.

 

‘ஒரு பேருந்தாவது வராதா?’ கடந்த அரைமணி நேரமாக இசையின் தேடல் தொடர, கண்களைத் துளாவி தெருமுனைவரை அலசியவள், சகிக்க மாட்டாமல், வேறு பேருந்துநிறுத்ததை நோக்கி வீதியின் ஓரமாக நடக்க ஆரம்பித்தாள்.

 

விரைந்த நடை நடந்தவளின் மனதில் சலனமொன்று எட்டிப்பார்க்க, திருப்பியவள் விழிகளுக்கு அவள் விரும்பியவனின் சங்கமம்கிடைத்தது. அவள் அவனையே கண்சிட்டாமல் ஏறிட,

 

வீதியின் தடுப்புக்கு எதிர்பக்க வீதியில், தனது இருசக்கர வண்டியில் சாய்ந்து, ஷாட்சின் பாக்கட்டினுள் கைகளை விட்டிருந்த ஹஸ்வந், ”பிரபா” வென சத்தமிட்டான்.

 

இசையோ, நிம்மதிப் பெரும்மூச்சுடன் அவளின் நெடியவனைப் பார்க்க, அவனோ சகையில் ‘இரு அந்தப்பக்கம் வருகிறேன்’ கூறிவிட்டு, வண்டியைத்திருப்பித் தடுப்பைத் தாண்ட விளைய,

 

இசையின் முன், கருப்புநிற ஜீப்பொன்று க்ரீச்சிட்டது. ஹஸ்வந்திற்காக பூத்த புன்னகைப்பூ உதிராமலே, அவ்வண்டியை ஆராய்ந்தவளின் முகத்தில், வண்டியின் கண்ணாடியை மட்டும் தாழ்த்திய அடியாளொருவன் திரவத்திவலைகளைத் தெளிக்க, அந்நொடியே மயங்கினாள் இசை.

 

கும்மிருட்டாக இருந்த அறையின் நடுவே, நாற்காலி ஒன்றில் கைகள் சணலால் கட்டப்பட்ட நிலையில், மூர்சையாகி முடிகள் குலைந்து, கயிறுகளாக முகத்தை சூழ, ஒருபக்கமாக சாய்ந்து கிடந்தது அவளின் சோபையிழந்த மதிமுகம்.

 

மதியம் பாந்தமாக உடுத்தியிருந்த காட்டன் புடவையும் கூட கந்தலாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் சல்லடையிட்டிருக்க வெதும்பிக் கிடந்த கோதையை சுற்றி நின்ற, ஐந்து தடியன்கள் கைகொட்டிக் கொக்கரித்தனர்.

 

நடுநிசியில் ஊளையிடும் நரிகளின் கூக்குரலைவிட இவர்களின் குரல் நாரசமாகவொலித்தது.

 

“ஆடேய், குண்டா! நம்ம பாஸ் கேட்டதுமாதிரி ஃபோட்டோ எடுத்தாச்சு. இந்த பிகர்ர அடுத்து என்னடா செய்யலாம்” ஒருத்தன் வினவ,

 

“இவ சும்மா அம்சமா, நச்சுனு இருக்காடா” என்றான் மற்றையவன்.

 

“கஸ்மாலம், நமக்காே எப்பவாச்சும் தான் இப்படி பீஸ்ஸு மாட்டுது. முட்டுச் சந்து அமலாக் கிட்ட பாயுர மாதிரி பாய்ஞ்சுடாதடா” அடுத்தவன் பிதற்ற,

 

“வெச்சி செய்யனும்டா” கலவிப்பார்வையுடன் உதட்டை ஈரமாக்கினான் நான்காமவன்.

 

“தல, பர்ஸ்டு நான்…” இறுதியாக, இசையின் சேலையில் நகம் படத்தொடும் போதே, அவனின் கரத்தை இழுத்து, அவன் முதுகுப்பக்காம ஒடித்துத் திருப்பினான் ஹஸ்வந்.

 

“யாருடா நீ! கரடி பூந்தமாதிரி. உனக்கும் வேணும்னா, கடைசியா அனுபவிச்சிட்டுப் போ” என்றவனிடம்,

 

“ஏய்” கர்ஜித்த ஹஸ்வந், “கையையா வைக்கப்போற. அவ மேல உன் நிழல் பட்டாலே, தோலை உரிச்சிருப்பேன். நீ…” கூறிக்கொண்டே,

 

அடியாளின் கையை சுண்டி, ஒரே மடக்காக மடக்கியவன், எலும்பு நொருங்கும் சப்தம் செவிகளை அடையும் வண்ணம் முறித்துவிட, “ஆ” வென துடிதுடித்தான் அவ் அடியாள்.

 

மீதியிருந்த அடியாட்களும் இவனின் திடீர் தாக்குதலிலும், அவனது நெடிய தோற்றத்திலும் ஒடுங்கிப் போக, ஹஸ்வந்தின் சார்பாக நான்கைந்து அடியாட்கள் உள்ளே புக, அவ்விடமே கலவர பூமியானது.

 

கைக்கலப்புக்கு மத்தியில்; ஹஸ்வந் இசையினருகில் மண்டியிட்டு, அவளின் கட்டுக்களைத் தளர்த்திவிட்டவன், அவள் மேவாயை வலதுகரம் கொண்டு தாங்கி, “பிரபா” வென அழைக்கவும்,

 

மென் அசைவுடன் உதட்டைப் பிதுக்கியவள், இமைதிறக்காமல் போக, மீண்டும் அவள் கன்னத்தில் தட்டி, “பிரபா! உங்களுக்கு எதுவும் இல்ல. கண்ணைத் திறந்து என்னைப் பாருடாமா. பிளீஸ்!” நடுங்கும் குரலை சரிசெய்யாமலே பேசியவனின் கைகளிலும் சிறு நடுக்கம் பாய்ந்தது.

 

அவனினை மேலும் பதற்றமடையவிடாமல், தன் அல்லிமலர் நயனங்களை சிமிட்டியவள், நொடிப் பொழுதில், தன்மெய்யுடன் அவன் மெய் ஊடுருவும் வகையில் அணைத்துக்கொண்டவள், அவனைத் திக்குமுக்காடச் செய்வது போல், அவன் முகத்தில் முத்த ஊர்வலமிட்டாள்.

 

வெட்கம், பெண்களின் உடமை மட்டுமல்ல, ஆணிகளினாலும் அனுபவிக்க, வெளிப்படுதக்கூடிய உணர்வல்லவா? 

 

உயிரியல் கற்றவளின் எச்சில்களால் உருவான ஈர இதழொற்றலினால், அவன் செல்களில் சொல்லெனா வேதியியல் மாற்றங்கள் உடைப்பெடுக்க, அவளிடமிருந்து முகத்தை விடுவித்தவனின் முகத்தில் சில வெட்கரேகைகள் படிந்தது.

 

தாய், தமக்கையைத் தவிர்த்து, முதல்முதலாக அந்நிய பெண்ணொருத்தியின் முத்தங்கள் அவனுள் விந்தை செய்ய, அதிபிராயத்தனப்பட்டு

தலையை உலுக்கியவன், அவளின் இருபக்க கன்னங்களையும் தன் உள்ளங்கைக்குள் தாங்கி,

 

“பிரபா!, என்னடாமா? ஏன் இப்படி நடந்துக்குற?” என பதட்டப்பட, “ஈஈ…” என்று வரிசையான வெண் பற்களைக் காட்டியவள், “டாக்டர்கே…ஊ…ஊசி….ச்சுனு..வலி” அண்ணம் தந்தியடிக்க குழறினாள் பெண்.

 

“காட், ட்ரக்ஸ்ஸா?” தனது நெற்றியில் தட்டியவன், அவளை தன் கைவளைவிற்குள் கொண்டுவந்து, தோளினைச் சுற்றி கையைப் போட்டு தன் புஜத்தில் சாய்துக்கொண்டான்.

 

“வாமா” கைத்தாங்கலாக அவளை வழிநடத்த, அவளோ அடியாட்களை வேடிக்கையாக எண்ணத் தொடங்கினாள்.

 

“வ்வன், டூவ்… நெக்ஸ்ட் என்ன?” ஹஸ்வந்தின் டீஷட்டின் கழுத்துப் பொத்தானை திருகியவள், அதனை கையில் பிய்தெடுத்தாள்.

 

“ச்ஷூ!” தன் அதரத்தில் விரல்வைத்து மிரட்டியவனின், நாசியைக் வலிக்கும் படி கடித்த இசையோ, “யூ..யூவ் மக்கு லாயர்” தொடர்ந்தவள்,

 

“நெக்ஸ்ட் த்திரீ, மூனு எழுத்து வார்த்தை…. இல்ல சொல்லை…க்கேட்பியா?” என்றவள் “ஐ லவ் யூ!” என்று அவன் பிடரிமுடிகளை இழுத்தாள்.

 

“சரிதான்மா, தெளிவாயிருந்தா அடிக்குற. போதையேரினா கடிக்குற, விட்டா மென்னு முழுங்கி ஏப்பம் விடுவமா” அவனிடம் மல்லுக்கு நின்றவளை, வம்படியாக தள்ளியவன், சண்டிவீரர்களை அழைத்துவந்த காரில் இசையை கிடத்தி வண்டியை அவளின் வைத்தியசாலைக்கே விட்டான்.

 

நெடுஞ்சாலை முழுக்க, இசையின் இம்சையைத்தாங்கவே பெரும்பாடு பட்டுவிட்டான் ஹஸ்வந். அவனின் இடையைக் கிள்ளுவது, மீசையை இழுப்பது, ஷாட்ஸ் அணிந்த வெற்று கால்முட்டியில் விரலால் கோலமிடுவதென அடங்காமல் ஆடிக் கொண்டிருந்தாள் அவனின் ராங்கி.

 

‘சப்பா! ராங்கி டெம்ட் பண்ணுறாளே! கையை சும்மா வைச்சிருக்க மாட்டாளா? இப்படியே போன மெய்யாலுமே ராட்ச்சசனாகிடுவேன் போல’ முனங்கியவன் நேராக சாலையை மட்டும் கருத்திலிட்டு ஓட்டுனர் வேலையில் குதித்தான்.

 

பிரசாத்தின் வீட்டிலோ சிவகாமி, குட்டிபோட்ட பூனையாக முன்னறையில் நடைபோட, வேலுவும் நடராஜனும் நீள்விருக்கையில் அமர்ந்து வாயில் கதவையே நோட்டமிட்டனர்.

 

“இசைப் பொண்ணு எங்க போயிட்டா? வெரசா வீட்டுக்கு வந்துடும்” சிவகாமி அமைதியற்றவராக நடமாட,

 

மாடியிலிருந்து இறங்கிவந்த கவி, “ஹாஸ்பிடலுக்கு ஃபோன் பண்ணினேன் அத்த. இசை கிளம்பிட்டதா சொன்னாங்க, நீங்க மூனுபேரும் போய்த் தூங்குங்க நான் காத்திருக்கேன்” என்றாள்.

 

பிரசாத் மாலையே படப்பிடிப்பிற்காக வெளியூருக்கு சென்றிருந்தான். அவன் நாளை மாலையே வீடுதிரும்புவதாக தகவலும் வழங்கியிருந்தான். 

 

வீட்டில் பெரியவர்களும் கவியும் மாத்திரமே இருக்க, அலுவலக வேலைகளை முடித்துவிட்டு இல்லம் திரும்பிய இந்தரும், அமராவும் வீட்டின் அங்கத்தவர்கள் உறங்காமல் விழித்திருக்கவும்,

 

“அத்தை ஏன் எல்லோரும் ஹால்ல உட்காந்து இருக்கிங்க” அமரா வினா எழுப்ப, “இசை இன்னும் வீட்டுக்கு வரல தாயி!” பதில் வழங்கினார் சிவகாமி.

 

“அவ என்ன குழந்தையா அம்மா? வந்துடுவா. படிச்ச பொண்ணு எங்கேயும் பார்ட்டி அது இதுனு போய் இருப்பா” நோகாமல் ஊசியேற்றினான் இந்தர்.

 

“எங்க பொண்ணு அப்படியொன்னும் கிடையாதுவே” சினம் உச்சத்திலேர நடராஜன் அமராவினைக் கடைக்கண்ணினால் நோக்கியவாரே கூறினார்.

 

அவரின் வார்த்தையின் தாக்கம் அமராவினை அழுத்தவும், வெட்கிக்க வைக்கவேண்டுமென்பதில் குறியாக இருந்தார். இது புதிதல்லவே, எப்போது அமரா இவ்வீட்டின் மருமகளானாலோ அன்றிலிருந்து இவ்வாறு நடராஜனினால் தாக்கப்படுகிறாள் என்பதே நிஜம்.

 

இந்தர் வாய்க்கடை வரை வந்த வார்தையை பல்லைக் கடித்து தடைபோட, கவியோ ‘இவர் வார்த்தையை விடக்கூடாதே’ என கடவுளை வேண்டிக்கொண்டாள். அமரா எதையும் வெளிக்காட்டாமல் உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்துடன் அகத்தில், பத்திலிருந்து ஒன்றுவரை இறங்குவரிசையில் எண்ண,

 

ஒன்று என இதயம் ஸ்தம்பிக்க, வீட்டின் தொலைபேசி மணி அடித்தது. அடித்தது மாத்திரமின்றி பெரியவர்கள் தலையில் இடியை இடித்தது.

 

இசை மயக்க மருந்து செலுத்தப்பட்டு மீண்டும் உறக்கத்தில் ஆழ்த்தப்பட்டிருந்தாள். வைத்திய அறைக்குள் அழைத்துவந்த பிறகும் அவள் சில்மிசம் குறைந்த பாடில்லை. காந்திமதியே அவளைப் பரிசோதித்து,

 

‘பயப்படும் படியாக ஏதுமில்லை மேலும் மெடிக்கல் ட்ரக்ஸ் வகையைச் சார்ந்த போதைஊசி ஏற்றப்பட்டிருப்பதால், நடந்த மற்றும் நடக்கவேண்டுமென ஆசைகொள்ளும் விடயங்களை உழறுவதாவும் கூறி’ அவளுக்கு சிகிச்சையளித்தார்.

 

இசையின் உதவித் தாதியே, அவளுக்கு ஆடையை மாற்றிவிட்டு அவளின் வீட்டிற்கும் தகவலை வழங்கியிருந்தார்.

 

அமரா காரினை ஓட்டி, அனைவரையும் வைத்தியசாலைக்கு அழைத்து வந்தவள், அவர்களுடனே இசையை பார்வையிட சென்றவள்,

 

அவசரபிரிவு பகுதியைக் கடந்து இசையின் அறைக்குச் செல்லும் போது இந்தரின் கையைக்கெட்டியாக பற்றிக் கொண்டாள்.

 

நடராஜரும் வேலுவும் வேக எட்டு வைத்து நடந்து இசை அனுமதிக்கப்பட்டிருந்த அறையை அடையும் போது, கதவருகில் ஹஸ்வந் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு காந்திமதியுடன் பேசிக் கொண்டிருந்தான்.

 

“சரி மதி” அவனின் கதையில் குறுக்கிட்டது நடராஜனின் கேள்வி, “இசைக்கு என்னாச்சு டாக்டர் அம்மா?” காந்திமதியை அடையாளம் கண்டவராக அவர் வினவ, காந்திமதியும் விடயத்தை விளக்கி “இவர்தான் உங்க பொண்ணக் காப்பாத்தியவர்” என ஹஸ்வந்தையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

 

“ரொம்ப நன்றி தம்பி” நன்றி நல்கியவர் அவனிடம் கைகூப்பிக் கூற, இந்தரோ, “யூ மிஸ்டர்” என்றான்.

 

“ஹல்லோ சார், அம் ஹஸ்வந்” அறிமுகப்படுத்தியவனிடம், “எனி போலீஸ் கேசஸ்” என அமரா கேள்வி தொடுக்க,

 

“ஐ கேன் ஹேன்டில் இட். பிகாஸ் ஐ அம் எ லாயர்” முடித்தவன், “எஸ்கியூஸ்மீ” விடைபெற்று காந்திமதியுடன் சென்றான்.

 

இசை அவ் வைத்தியசாலையின் வைத்தியர் எனும் சலுகையினால், அவள் வீட்டினர் அனைவரும் அங்கேயே, அவள் கண்விழிக்கும் வரை அமர்ந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

 

இரவு பிரிந்து பிரபஞ்சம் வெளிச்சத்திற்கு வந்த பிறகே இசை இமைதட்ட, அவளுக்கு அதிர்சியொன்று ஆனந்தமாய் வரவேற்க காத்திருந்தது.

 

காலை ஏழு மணியை ஒட்டி, வைத்தியரொருவர் இசையைப் பரிசோதித்து, “ஒரு மணி நேரத்தில் சுயத்துக்கு மீள்வாள்” என அறிக்கையிட்டார்.

 

சிவகாமியும் அவருக்கு துணையென வேலுவையும் இங்கேயே விட்டுவிட்டு, ஏனையவர் வீடுக்கு கிளம்பினர். இதில் கவியும் நடராஜனும் இசைக்குத் தேவையான பொருட்களை எடுத்து வருவதாக கூறிவிட்டே சென்றனர்.

 

மீண்டும் அமராவே வண்டியோட்டி வீட்டிற்கு அழைத்து வந்தவள், அவள் கைகளினாலேயே பால் கலக்கி அனைவருக்கும் கொடுத்தாள். பின் காலை வேளைக்கான உண்டியையும் தயார் செய்தவள், வீட்டின் பொறுப்பிலுள்ள தலைவியாகவே நடந்து கொண்டாள்.

 

நேரத்தை சரிபார்த்து வேலைகளை முடித்தவள், தயாராகி இந்தருடன் தன் நிறுவனத்தில் முக்கியமான பணியிருப்பதாக விடைபெற்றவள், நடராஜனிடம் ‘வண்டியோட்ட முடியவில்லை எனின் ஓட்டுனரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ பாசமாக ஒட்டிஉறவாடிச் சென்றாள்.

 

குளித்து, உடை மாற்றி இசையைக் காணச் செல்லலாம் என மேகவியோ, தனதறையின் குளியலறையில் புகுந்து கொள்ள, நடராஜனோ அவர் அறைக்குச் செல்ல, அங்கு அவர் தொலைபேசி சிணுங்கியது.

 

மறுபக்கம் தினேஸ் அழைத்திருந்தான். “இதுதான் பொண்னை வளக்குற லட்சனமா? எவன் கூடவோ கூத்தடிச்சவள என் தலையில கட்டப் பார்கிங்களா? நான் என்ன இளிச்சவாயனா? உங்க வீட்டோட மாப்பிள்ளையா வேற வரணும், பத்தாததுக்கு எவனுக்கோ கெட்டு சீரலழிஞ்சவள கட்டிக்கணும்” வெடித்துச் சிதறினான் அவன்.

 

“ஏய்! என்னவே எம் பொண்ணச் சொல்லுதே? பாத்துப் பேசுவே. இந்த நடராஜன் யாருனு தெரியாம வாயவிடாதவே” தன் மகளினை ‘சீ’ எனக் கூறினாலே கொதித்தெழும் தந்தை, இவனின் பாரதூரமான வார்தைக்கு அவனை கூறுபோட பரபரத்தார்.

 

“வெட்டிக் கிளிச்சிடுவ போல, ஐயோ பயமா இருக்கே. முதல்ல தப்புப் பண்ணின உன் பொண்ணை வெட்டிப் போடு. அடுத்து என் கிட்ட வா. நான் அனுப்பியிருக்குற போட்டோ, வீடியோவ பாருயா” என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.

 

நடராஜனோ, தினேஸ் அனுப்பிய நிழல்படங்களையும் காணொளியையும் கண்டவர், வில்லென உடல் விரைத்தார். அதில் ஹஸ்வந்துடன் சண்டை போடும் இசை, அவனுடன் குளம்பி பருகும் இசை, நகைக் கடையில் அருகிலிருக்கும் இசை, இறுதியாக அவனுக்கு இதழ் பதிக்கும் இசையென புகைப்படமும், காணொளியும் திரையிட்டது.

 

பஞ்சுப்பாதம் ஏறி மிதித்து, செம்பட்டை முடிகளுடைய தலையுடன் மகவாக இசை குதித்து விளையாடிய அவரின் நெஞ்சத்தில் ஆயிரம் குண்டூசியினால் குத்திக் குடைவது போன்ற வலியை உணர்ந்தவர், மார்பை நீவிக் கொள்ள, 

 

அவர் செவிக்கோ; ஸ்ருதி மற்றும் லயம் தப்பாமல் தேன்குரலில் பாடலொன்று புலனானது.

 

தாய்ப்பறவை, மிதித்தால் சேய்ப்பறவை, நோவதில்லை, காயம் ஆவதில்லை!

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?

கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?

 

“இசை…இசை! அப்பாகிட்ட வந்துட்டியா தாயி! வாடா இசை… நீயா பாடுற…. என்ன விட்டுப் போயிடாத தாயி…அப்பா…அப்பா…” உடலின் அவயங்கள் உதரலெடுக்க, முகம் கன்றிப் போக, துடிதுடித்திடும் இதயம் ஏகத்துக்கும் துடிப்பதும் நிறுத்துவதுமாக நாடகமாட, 

மாரடைப்பினால் தரையில் தலைசாய்த்தார் முதியவர்.

 

 நெஞ்சில் சுமக்க வரம் கொடுத்தாய், 

நினைவில் எல்லாம் ஏன் தகித்தாய்?

சுகிக்கும் முத்தம் நீ கொடுக்க;

தெகிட்டாமல் நான் பருக தயங்குவேனா கண்மனி?

 

அவள் வீழ்த்தினாள்…