யாகம் 16
யாகம் 16
யாகம் பதினாறு
திப்பியத்தில் மிதந்தவள் உஷ்ண பாலைநிலத்தில் தூக்கியயெரிப்பட்ட உணர்வாகத் தடுமாறினாள் இசை.
நீர் நிரம்பிய தடாகமொன்றில், மிதக்கும் பச்சைப் பாசிகளை சிறு கூழாங்கல் கொண்டு விசிரியடித்து, ஸ்தம்பிக்கச் செய்ததாக அவள் இதயமும் சிந்தனையும் சில மணிநேரத்தின் முன்னான நிகழ்வின் கனத்திலிருந்து வெளிவரமறுத்தது.
மதுரமாக காதலித்து, கைப்பிடித்து, விசும்பினில் மிதந்த போது, இப்படி யார் சதிராடியது எனும் வினாவுக்கான விடையை தேடிய இசையின் நினைவடுக்குகள் பின் நோக்கி சுழன்றது.
டெல்லிக்கு பணிநிமிர்த்தம் சென்ற பாேதும் சரி, திருமணத்திற்காக சென்னைக்கு திரும்பிய போதும் சரி, ஹஸ்வந் காதலான தன் கடமைகளையும் உரிமைகளையும் இசை மீது நிலைநாட்டிக் கொண்டேயிருந்தான்.
அவளுக்காகவென, நகை, புடவை,ஏன் ஒரு குண்டூசி கூட வாங்கினாலும் அதில் அவளின் விருப்பு, திருப்திக்கே அத்தனை முக்கியத்துவம் வழங்கினான்.
மணமகன் வீட்டாரின் செல்வச் செழிப்பினை தம்பட்டமிடும் தாலியினைக் கூட, இசையின் ஆசைக்கிணங்க மெல்லிய சங்கிலியாகவே இரண்டு பவுணில் தெரிவு செய்தான் அவன்.
தனக்காக எதையும் செய்யும் கணவனை எந்தப் பெண்தான் நேசிக்க மாட்டாள்? இசையும் அவ்வாரே நேசத்தில் பாகாக உருகிக்கொண்டிருந்தாள்.
அடுத்தடுத்த நாட்களும் நகரவே, நிச்சயதார்த்த நாளும் வந்தது. அவன் கைகளினால் விரலணி அணிந்த போது, தன் கரத்தினை அழுத்திப் பற்றி ‘இனி உனைக் கைவிடமாட்டேன்’ என அவன் கண்களால் வாக்களிக்கும் போதே அவனை கணவனாக துதித்துக் கொண்டாள் காரிகை.
அன்று இரவே, ‘தனியாக பேசவேண்டும்’ என்ற குறுஞ்செய்தியை இசைக்கு அனுப்பி வைத்தவன், அவளுக்காக வீட்டின் நீச்சல்தடாகம் அருகில் அரைமணி நேரம் காத்திருந்தான். ஆனால் இவளை அசையவிடாமல் பிடித்துக் கொண்டிருந்தது என்னவோ அமரா தான்.
மறுநாள் சுபமுகூர்த்தத்தில் மங்கள நாண் ஏற்றும் போதும், ‘நேற்று காத்திருந்தேன்’ என அவள் செவிகளில் தன் மீசை முடி உராய, கூச்சத்தை உண்டுபண்ணும் வகையில் கிசுகிசுத்தே இரகசியம் பேசினான்.
அடுத்ததோ அமராவினை நாத்தனார் பந்தத்தில் புகுத்தியதும், பின் அவனின் சென்னை வீட்டில் சாலினி அவர்களின் நட்பை விளக்கியதும் என ஒவ்வொன்றாக சபையேறியது.
காலை மாலையாகி, மாலை இரவுமாக காலபகவான் தன் சக்கரத்தை சுற்றிவிட்டு பொழுதுகளை மாற்றினான். மேகவியும், சாலினியும் இணைந்தே அவளை அலங்கரித்து ஹஸ்வந்தின் அறையில் அமர்த்திவிட்டு வந்தனர்.
அவனில்லாத அறைகூட அவளுக்கு வெற்றிடமாக தோன்ற, சுவரினை வேடிக்கை பார்த்தாள் இசை. வெள்ளைத் தீந்தை பூசப்பட்ட அறைதனில், மூன்று பக்கச் சுவர்கள் வெறுமையாய் இருக்க, ஒரு பக்க சுவர் முழுவதையும் அடைக்கும் வண்ணம் பல சட்டத்துக்குள், குழந்தையாக பின் வாலிபனாக இறுதியில் தற்போது இருக்கும் தோற்றத்தில் என,
ஹஸ்வந் தவழ்ந்து, நடத்து, ஓடி, ஆடி என புகைப்படங்களில் மிளிர்ந்து கொண்டிருந்தான். அதில் ஒரு புகைப்படத்தில் சின்னக் கண்ணாக உடையணிந்து, கொழுகொழு கன்னத்துடன் வாயில் பால்வடிய முறுவலிட்டுக்கொண்டிருந்த அவளவனின் மழலைத் தோற்றத்தை நுனி விரலால் தடவும் பொழுது அவள் பின்னால் அவன் அரவம் கேட்டது.
பதட்டத்தில் சுவருடன் உடல் உராயநின்று திரும்பி ஏறிட்ட அவளின் இமைகள் மூடமறுத்தது என்பதே நிஜம். வேஸ்டி சட்டையில் வருவான் என அவள் எதிர்பார்க்க, பட்டுச் சட்டை அணிந்து வேஸ்டிக்குப் பதிலாக ஷார்ட்ஸ் அணிந்து விட்டத்தைத் தொடுமளவு நெடுமரமென உயர்தவனை காணக் காண,
இசைக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு குபீரென பீரிட்டது. “ஹா,ஹா” வாயில் உள்ளங்கையை வைத்து தடுத்தும் அவள் கலகலப்பு காற்றில் கலந்தது.
“என்னமா?” ஹஸ்வந்துக்கோ, ஒன்றும் புரியாதநிலை. சிரித்து சிரித்து கண்கள் சிவக்க, புரையேரவும் தலையில் தட்டிக் கொண்டு இசை சிரமப்பட, “இதை குடி பிரபா” அவள் சொம்பு தழும்ப கொண்டு வந்த பாலை அவளுக்கே பருக கொடுத்து,
தோள்களை சுற்றிவளைத்து கரங்களைப் போட்டு மஞ்சத்தில் கொணர்ந்து இருக்கச் செய்தான் அவன். தன்னை சமப்படுத்திக் கொண்ட இசையோ,
“இ…இல்லை. இப்போ தான் ஃபோடோல கியூட்டா கண்ணன் ட்ரெஸ்ல இருக்கிங்கனு பார்தேன். பட் இவ்வளவு வளர்ந்தும் வேஷ்டி கட்டத்தெரியாம வந்து நிக்கவும்…சாரி…ஹா ஹா” மீண்டும் கிளுங்கியவளிடம்,
“அது…அது உண்மையை சொல்லப் போன தெரியாதுமா” பாவமாக அவன் முகம் சுருக்கவும்,
“பெரிய லாயர்னுதான் பந்தா, இது கூட தெரியாத யாருட்டையும் கத்துக்க வேண்டியது தானே” அவள் கேலியைத் தொடர,
“ஆமாம், காலேஜ்ல எப்படி வேட்டி கட்டணும்னு எங்க புரோஃபசர் லெக்சர் எடுத்தாரு. நானும் கிலாசக் கட் அடிச்சிட்டு சினிமாக்கு பேனேன். அதனால தெரிஞ்சுக்காம விட்டுட்டேன். ஏதுவும் ஃபங்ஷன்னா இந்தர் கட்டி விடுவான். இப்போ அவனே குடும்பஸ்தனாகிட்டான்” என்று பெருமூச்சை இழுத்து விட,
“ம்கூம்” என இசை முகத்தை சுளித்துக் கொண்டாள். அவளின் செய்கையை கண்டவனுக்கு புன்னகை எழ, “என்னவாம் பிரபாக்கு” கேள்வி எழுப்ப,
“ஏன், என்கிட்ட உண்மையை சொல்லல. உங்க அக்கா சொல்லாம விட்டிருந்தா, எனக்குத் தெரியாமலே போயிருக்கும்” முகத்தை வெட்டித் திருப்பியவளின்,
கன்னங்களை இரு கைகளில் தாங்கி, கண்களோடு கண்கள் கலக்கவிட்டவன், “யாரு நானா சொல்லலை? அன்னைக்கு கேண்டீன்ல காஃபி வாங்கிக் கொடுத்தப்போ சொல்ல வந்தா, உங்க இன்ட்ரோ போதும்னு சொன்ன. நேத்து ராத்திரி, ஃபூல் கிட்ட அரைமணிநேரமா பேசனும்னு நிலவை வேடிக்கை பார்த்துட்டு நின்னா, மேடம் என்ன பண்ணிங்க?”
“மேடம் எதுவும் பண்ணல, உங்க டெடி தான் என்னைப் பிடிச்சி வைச்சிட்டு ஹிந்தி, இங்லீஸ்னு ஏதோ கிலாஸ் எடுத்தாங்க, பின்ன எப்படி வரதாம்” உங்க டெடி என்ற வார்த்தையில் அத்தனை அழுத்தம்,
“ஹா, பொசசிவா பிரபாக்கு? சாலு சொல்லியிருப்பானு நினைக்கிறேன். கொஞ்சம் சண்டை, தேவ் விசயத்துல. அதனால இந்தர், அமராகிட்ட பேசிக்கல. அன்னைக்கு ஹஸ்பிடல்ல கூட முறைச்சு முறைச்சு பார்த்தான் தெரியுமா? ஐ எம் பேட்லி மிஸ்ஸிங் மை இந்துமா..” இழுத்தவன்,
சுவரில் மாட்டப்பட்டிருந்த; அமரா, இந்தர்,ஹஸ்வந் மூவரும் ஒரே வடிவ, நிற ஆடை அணிந்து கடற்கரையில் அலைகளுக்கு மத்தியில் விளையாடும் புகைப்படத்தை நோக்கியவன். இதழில் புன்னகை ஒட்டிக் கொள்ள,
“என்னோட வாழ்கையில சந்தோசமான, ஏன் துக்கமான எல்லாப் பக்கங்களிலும் இவங்க இரண்டு பெயரோடதும் கையெழுத்தால நிரம்பியிருக்கும். தே போத் ஆர் மை சப்போட்டிங் ப்பில்லர்” முடித்தான்.
“இப்போ புரியுது, ஏன் அண்ணி விழுந்து, விழுந்து கல்யாண வேலைகளைச் செய்தாங்கனு” நாடியில் விரலால் தட்டி யோசிப்பதாக பாங்கு செய்தவளை ஏறிட்டவனின் பார்வை மாறியது.
“எஸ், அவ எனக்காக எதுவும் செய்வா, ஆஸ் சேம், அவளுக்காக நானும் எதுவும் செய்வேன்” இசையை ரசித்தவாரே தொடர,
“நானும்” என்றவள் அவன் புஜத்தில் சாய்ந்து கொள்ள, அவனுக்குள் ஜீவ நதி, பேரலைகளை ஜனனித்தது.
“உண்மையை சொல்லப்போனா, எனக்கு அவங்க இரண்டு பெயரையும் சுத்தமா பிடிக்காது, ஆன உங்களுக்காக மாத்திக்கலாம்” அவள் கதை அளக்க, அவனின் மௌனத்தை உணர்ந்து, கண்களை மட்டும் நிமிர்த்தி அவனை அவதானித்தாள்,
செவ்வரலி நிறத்தில் ஜரிகை ஏதுமில்லாத சேலையை உடலில் பாந்தமாக உடுத்தி, அதற்குப் பொருத்தமான எடைகுறைந்த தங்க நகைகளை அணிந்தவள், ஒப்பனையிட்டு தீபமொன்றைப் போல் சுடர்விட்டு ஜெலித்துக் கொண்டிருக்க, அவன் காலையில் அணிவித்த தங்கத்தாலி அவன் உரிமை அவனிடம் எடுத்துக் கூறியது.
அஞ்சனமிட்ட நயனங்களும், சாயம் பூசப்பட்ட அதரங்களும் ஹஸ்வந்தை பித்தனாக்கிக் கொண்டிருக்க, ஆயிரம் கோடி நீர்வீழ்ச்சிகள் அவன் தலையில் கவிழ்ந்து, வண்டாக அவன் உடலைக்குடைந்து, உணர்ச்சி பிரவாகத்தில் மிதக்க கட்டளையிட்டது அவன் ஆண்மை.
அவனின் பார்வை மாற்றத்தை அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவளொன்றும் பேதையில்லையே. முழு வைத்தியராக கடமை புரிபவள், பாடத்தலைப்புகளானா தாள்களை மேய்ந்திருப்பினும், நூதனமான உணர்வுகள் உள்ளுக்குள் முதன்முறை தலைவிரித்தாட,
விழிகளும், இதழ்களும் இறகுவிரித்த பட்டாம்பூச்சியாக துடிக்க, முகம் முழுவதும் செம்மை அரிதாரம் பூச, புடவையின் தொங்கலை ஆட்காட்டி விரலில் கவர்ந்து கொண்டாள்.
“எ..என்..என்ன” மூன்று சொல்லை, வார்தையாக வடிப்பதற்கே நாவு முரசுடன் ஒட்டிக்கொள்ள, திக்கினாள் இசை. ஆனால் அவனோ அவளின் வரிவடிவத்தை அளந்து கொண்டே,
“அடுத்து என்னனு கேட்கிறியா பிரபா?” வேட்கையில் விளைந்தது வார்த்தை, “இ..இல்லை” மீண்டும் குழைந்தாள்,
“பாருடா டாக்டருக்கு வெட்கத்தை” அவன் சிரிக்க, அவள் முறைத்தாள். “அன்னைக்கு எங்க போச்சாம், என்னை என்னமா டெம்ட் பண்ணின தெரியுமா? இச்சு இச்சுனு” அவனின் அதரங்களை தன் உள்ளங்கையால் மூடிவிட்டு, “நான் ஒன்னும் சுயநினைவுல பண்ணல” மிடுக்காக இசை கூற,
அவள் உள்ளங்கையிலேயே முத்தமொன்றை பரிசாக வழங்கியவன், “இப்போ சுய நினைவுல கொடு…” என்றவன், அவளின் கன்னக் கதும்புகளில் பெருவிரால் அழுத்த ஸ்பரிசித்து, கன்னத்தைக் காகிதமாக்கி விரலைத் தூரிகையாக்கி ஓவியம் தீட்டினான்.
அவனின் பேச்சிலும் செய்கையிலும் அவளின் உதடுகள் துடிதுடிக்க,
அவனே அவளுக்கு வைத்தியராகி, அவள் துடிப்பை தனக்குள் தணிய அடக்க, இதழ்களில் தீமூட்டினான். பொறியாக சிதறிய தீ, எரிமலையாக கொழுந்துவிட்டெரிய, சிருங்காரத்தில் ஓர் ஆகங்காரியை பொசுக்கி, ராட்சசனை கலவி ரட்சகனாக்கியது.
அக மொத்தத்தில் தேடல் யுத்தத்தில், மெல்லினமும் வல்லினமும் இடையில் இடையினம் இழந்து ஒரு மையலில் சிக்கி கரை தேடி கடல் எனும் காதலின் கூடலில் மூழ்கியது.
ஆதி அந்தமில்லா ஆதித்தன், நீலவானத்தில் நித்திரை எழுந்த போது, இமைகளைக் கசக்கி விழித்த இசையோ, தன் ஆடைக் கசக்கத்தை அவதானித்து நாணம் பிடுங்கித்திண்ண, குளியறைக்குள் புகுந்து கொண்டாள்.
தன் மார்பின் மீது நெகிழ்ந்த, மலர்ச்செண்டின் சுமை குறைந்ததில், கைகளை கட்டிலில் துலாவியவனுக்கு மென்மை தென்படாமல் போகவே கண்விழித்தவனுக்குள்ளும், வெட்கம் வெளிப்பட, தன்னை சமன் செய்தவன்,
இசை குளித்து வரும்வரை தொலைபேசியை நோண்ட எத்தனித்தான். நண்பர்களிடமிருந்து ‘இனி வனவாசம் தான்டி மாப்புள’ என பலதரப்பட்ட வாழ்த்துக்கள் குவிந்தவண்ணமிருக்க, அவனுடை இலத்தினியல் அஞ்சல் செயலி மணியடித்தது.
‘மெயில்ல கூட விஸ் பண்ணுரன்னு பீலா விடுறானுங்க’ முனங்கியவாரு, அதனைத் திறந்தவனின், கரங்கள் நடுங்க, கண்கள் சடசடவென இடுங்கிச் சிவந்தது.
சுருள் கூந்தல் ஜலஅபிசேகத்தால் அதிகம் சுருண்டிருக்க, அவற்றில் நீர் திவலைகள் நர்தணமாட, ஹஸ்வந்தை எப்படி ஏறிடுவது என்ற கூச்சத்தில் கால்கள் பின்னிக் கொண்டு வந்தவள், தன் உடையவனைப் பார்க்க,
அவனோ தலையை இருகைகளாலும் பொத்திக் கொண்டு மெத்தையில் சம்மணமிட்டிருந்தான். அவனின் நிலை அவளுக்குப் பதட்டத்தைக் கொடுக்க, வேகமாக சென்று அவன் தோள்களைத் தொட்டாள் இசை,
குளிர்கரங்களின் தொடுகையால், தசை சில்லிட்டாலும் உள்ளம் கொதிக்க, ஹஸ்வந் “உனக்கு யாரும் எதிரி…” ஆரம்பித்தவன், “எனக்கு கன்னத்தில அடிச்சியே அது போல யாருக்கும்” அவனின் கேள்வி விளங்கியவளாக,
“தெரியலியே, அது எதுக்கு இப்போ” உதட்டை இசை பிதுக்க, “இதைப்பாரு” என அவனது தொலைபேசியை அவளிடம் நீட்டினான். அதனை சாதாரணமாக வாங்கிய இசையின் கைகள் சிறிது நேரத்தில் வெடவெடுக்க, கண்களில் அருவியாக உவர்நீர் கொட்டியது.
“இது நான், நான் இல்லை. பிளீஸ் நம்புங்க” அவன் உடலைத் துளைத்து அதனுள் தன் உயிரைப் புகுத்தி விடுவது போல் நுழைந்த இசை கதர ஆரம்பித்தாள். எந்தப் பெண்ணும் திருமணமுடித்த கணவனிடமும் கூச்சம் விலகி தன்னை ஒப்படைப்பதற்கே இருளைப் போர்வையாக்கி கொள்ளுவாள்,
ஆனால் ஹஸ்வந்தின் தொலைபேசியில் அவள் பார்த்த, அவள் உருவ அங்கங்கள், இசையின் முகமும் வேறுயாருடைய உடலும் இணைக்கப்பட்டிருப்பினும் இசையினால் உண்மையின்மையைக் கூட ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை.
“நான் இல்ல, ஹஸ்ஸு என்ன நம்பு” பிதற்றி பிதற்றி பித்துக்குளியாகி விடுபவள் போல கால்கள் தொய்ந்து, உடல் தளர்ந்து அவன் மீதே தஞ்சம் என சரிந்தாள் இசை.
இத்தனைக்கும் எத்தனை தைரியமான பெண் அவள். அவளாளே ஜீரனிக்க முடியாத அருவருப்பாகவல்லவா அப்புகைப்படங்கள் ஹஸ்வந்தின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
“பிரபா! அது நீயில்லைடா மா. நான் உன்னோட ஹஸ்ஸு உன்னை நம்பாமல் யாரை நம்புவது, ரிலாக்ஸ்டா. நீ தூங்குடா நான் பார்த்துக்கொள்வேன்” அவளை தட்டிக் கொடுத்து தூங்க வைத்து,
குளியளறைக்குள் புகுந்தவன் நீரைத்திறந்து விட்டு அதற்கடியில் நின்றவன், தகிக்கமுடியாமல், “ஆ” வெனக் கத்தி, கையை முஷ்டியாக்கி வலிக்கும் படி சுவரில் குத்திக் கொண்டான்.
பின், அடுத்தடுத்த சடங்கு என தம்பதிகள் இருவரையும் வீட்டினர் விரட்டிக் கொள்ள, அன்று மாலை அவளின் வீட்டினில் இருவரையும் அழைத்து வந்து விட்டவர்கள்,
முன்பு பேசியது போல சில நடைமுறைச் சிக்கலினால் ஒன்றரை மாதம் கடந்த பின்பே, திருமணவரவேற்ப்பு என்பதனால் அன்றே கிளம்பவேண்டி விடைபெறும் போது சாலினியோ,
இசையிடம், “பிரபா, நான் ஹஸ்வாக்கு அக்காவா இருக்கலாம் ஆனா சின்ன வயசுல இருந்தே, பாட்டி வீட்டுல வளர்ந்ததால அவனோட அதிகமா ஒட்டிக்க முடியல. சிபிலிங்னு உறவு இருந்தாலும் என்னை விட அமரா அவனுக்கு ரொம்ப ஸ்பெசல் ஒன். அதனாலே நாத்தனார்னு எனக்கு கொடுக்க வேண்டிய உரிமை, மரியாதை எல்லாம் அமராக்கு கொடுத்துக்கோ”
அனுசரித்துப்போ என குடம் மறைத்த தீபமாக பட்டும் படாமலும் புத்திகூறி விடைபெற்றாள் அவள்.
தனக்குள் மீண்டும் மீண்டும் விம்பமாக தோன்றும் புகைப்படத்தை படாத பாடுபட்டு, அடக்கிய இசை காலையிலிருந்து அனைவர் சொல்லுக்கும் கட்டுப்பட்டு சாங்கியம் செய்தவள், இப்போது சாலினியின் பேச்சில் சிந்தனை ரேகையுடன் அவள் அறைக்குள் முடங்கிக் கொண்டாள்.
ஒரு கண்ணில் நீர் வடிய மறு கண்ணில் ஆத்திரம் பொங்க தன் காதல் வாழ்வு சிதைவதாக கற்பனை செய்தவளுக்கு இன்னுமொன்று இடித்தது. ‘ஹஸ்ஸூ இது உண்மைனு நம்பிட்டான்’ மனம் அசரீரி எழுப்ப, அதற்கான ஆதாரமாக அவள் தேடிக்கொண்டது,
சடங்குகளுக்கு நடுவில் நின்று சரிவர பேசாத ஹஸ்வந்தின் முகமே. அவன் தன்னை தவறாக புரிந்துவிட்டான் என போலியாக தனக்குள் பதிப்பித்துக்கொண்டாள் இசை. ஆனால் அவள் அறியாத நிதர்சனம் அவள் அறியும் போது, அவள் கண்ணீர் வற்றாத கடலாக அவன் மார்பை நனைக்கும் என்பதே மெய்.
போதைக் கொடியும் நீதானே,
தீமை விதையும் நீதானே,
நிழலில் நிஜமாய் அவனிருக்க,
அவளில் ஒடுங்கினாள் அவன் பாவை!
அவள் வீழ்த்துவாள்….