யாகம் 5

யாகம் 5

யாகம் ஐந்து

 

வெய்யோனின் வெண்கதிர்கள், மேற்குத்தொடர்ச்சி மலையினைத் தொட்டு திசையெங்கும் ஔிபரப்பிச் சென்றன. அவ் ஔியில் ஓவியமாய், தென்னைக் கீற்றுகளின் பிளப்புகளுக்கிடையில் அமரா வெற்றுக்கால்களில் நின்றிருந்தாள். காலைப் பனித்துளிகள் புல்லின் நுணியில் வைரமாக மிளிர, பட்சிகளின் கீதங்கள் காதல் கதைகள் பேச, படைத்தவனின் சாயங்கள் நிலப்பரப்பில் காட்சிகளாய் தோன்றியது. பிரசாத்தின் காணிநிலத்தின் ஒருபக்க எல்லை முழுவதும் வெள்ளமோடும் நீரோடையாக நீண்டுகிடந்தது. ஓடைக்கு எதிர்புறம் பச்சைவயலும் செஞ்சோளக் கதிரும் அதையும் தாண்டி விசும்பினைத் தொட்ட மலைச்சிகரங்களுமாக எழில் கோலமாகவிருந்தது. 

 

தெளிந்த நீரோடையில், மலர்ந்த முகமாக அமரா அவளுருவத்தையே இமைதட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். நேற்றைய நாள் அவள் கண்முன் விரிந்துசென்றது. வீட்டினுள் எதிர்பாராத விதமாக நாகம் நுழைந்ததும், அதற்கு முன்னதான திருமண நிகழ்வில் இடம்பெற்ற குழறுபடிகளினாலும் பிரசாத்தின் உறவினர்கள் அனைவரும் மனக்கசப்பில் நடமாடினார்கள். 

 

உணவு கூட சரியாக யாரும் உண்டபாடுமில்லை, உறக்கம் கூட எட்டா தூரத்தில் என திசைக்கொரு பக்கம் முகத்தை வைத்துக் கொண்டு வளையவந்தனர். சிவகாமி அம்மா மாத்திரம் குடுப்பத்தலைவியாக காரியங்களை கையிலெடுத்து செயற்பட்டார். இடையில் மாலை மங்கும் வேளையில், அவர்களின் ஊருக்கு அருகிலுள்ள நகரத்தின், ஆடைக்கடையின் உடமையாளர் இரண்டு, மூன்று பைகளில் உடைகள் சிலவற்றைக் கொண்டுவந்து இந்தரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்.

 

காலம் காத்திருக்காமல் கடக்க, கடைசி சம்பிரதாயமான முதலிரவுக்கு சிவகாமியின் கட்டளைப்படி இசை, கவியை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அருகிலே கௌரி, அமராவின் கூந்தலைச் சீவிக்கொண்டிருந்தார். “கவி, இந்தாடாமா. பரம்பர நகைங்க, போட்டுக்கோ” தட்டு முழுவதும் பவளங்கள் பளபளக்க ஆபரணங்களை சிவகாமி கவியிடம் நீட்டினார். 

 

கவியின் கரங்களுக்கு முன்பாகவே அமராவின் கரங்கள் நகையடங்கிய தட்டினை வாங்கிக் கொண்டது. “அத்தை, பரம்பரை நகை மருமகளுக்குத்தான் கொடுக்கப்படும். அப்படினா இது எல்லாமே எனக்கு தானே?” கேள்விகளுக்கிடையே, காசி மாலையை அவள் கழுத்திலிட்டுக் கொண்டாள்.

 

காலையில் திருமணத்தின் போது கவியின் அனைத்து நகைகளையும் அமரா எடுத்துக்கொண்டதனால், கவி இசையின் நகைகளையே இப்போதும் அணிந்துகொண்டிருக்க, அவளுக்கு நகைகளைக் கொடுக்க வேண்டிய அவசியம் உணர்ந்து சிவகாமி தட்டுடன் வந்தார். ஆனால் இங்கு? ‘எதைச் சொல்வது’ எதுவும் தோன்றாமல் சிவகாமி வந்தவழியே திரும்பினார். 

 

ஆயத்தங்கள் முடிந்து கௌரி, அமராவினை பிரசாத்தின் அறைக்கதவின் முன் அவளை நிறுத்தி அணைத்து “பார்த்துக்கோடா” நெற்றியில் இதழ்பதித்து நகர்ந்தார். தாழிப்படாத கதவை இடது கையால் திறந்துகொண்டு அறையில் புகுந்தாள் அமரா. சலனமில்லாமல் உட்சென்றவளை வரவேற்றது என்னவோ வெற்று அறைதான். தேக்குமரக் கட்டில், அலமாரி என மரத்தளபாடங்கள் வீற்றிருக்க, மஞ்சத்தில் மலர் அலங்காரமும் பூவிதழ் வாசமும் மோன நிலையை எழுப்பியது. நான்கு எட்டுக்களை வைத்த அமராவே நிலைக்கண்ணாடி முன்சென்று நின்று, தன் தோற்றதைப் பார்த்தாள்.

 

குவளைப் பூவின் நிறத்தலான மென்பட்டினை கொசுவமாக மடித்து தோளில் போட்டு நேர்த்தியாக உடுக்கப்பட்ட புடவை, இந்தரின் தேர்வு என சொல்லாமல் சொல்லியது. ஆனால் உடல் முழுவதும் கொடிபோல தழுவியிருக்கும் நகைகள், ‘என்னடி அமரா? நகைக் கடையை உடல்ல பரப்பி வைச்சிருக்க!’ கீழுதட்டை பற்களால் கட்டித்து சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

 

நெற்றி வகிட்டிலும் புருவ மத்தியிலுமிருக்கும் குங்குமத் தடங்களை, புடவையின் நுனியினால் துடைத்துக்கொண்டாள். பின் அசுர வேகத்தில் நகைகளைக் களைந்து கொண்டிருந்தவளின் கைகளில் கடைசியாக சிக்கியது என்னவோ தாலிக்கொடிதான். ஒற்றை விரலால் அதை தொட்டுத் தூக்கும் போது, அவளின் பின்னால் அவன் உருவம்.

 

“வெல்கம் டூ மை ரூம்!” எள்ளலாக வளைந்தது பிரசாத்தின் அதரங்கள். “நாட் ஒன்லி யூவர்ஸ், இட்ஸ் அவர் ரூம் தேவா” அவனை மிஞ்சிவிடும் தொனி அவளிடம்.

 

“எப்போதிருந்து இது உன்னோட அறையாச்சு?” கேள்வியாக நிருத்தி “காலையில தாலிகட்டினத்துல இருந்தா இல்ல…” இழுவையாக நிருத்தினான். “ஏன் தேவா! பழையது மறந்து போச்சா?, தாலி கட்டிக்கும் முன்னமே நாம…” அதே இழுவை இப்போது அவளிடம். 

 

“ஏய்! என்ன சீண்டிப் பார்கிறியா?” சீறினான். “இல்லையே தேவா, உன்னைத் தீண்டிப் பார்த்தே பல மாதம் ஆச்சு” கண்சிமிட்டினாள். “ஹேய், நிருத்துடீ. பொண்ணு மாதிரியா பேசுற நீ!” அடித்து விடுபவன் போல ஆவேசம் அவனிடம்,

“பொண்ணு இப்படித்தான் பேசனும்னு ஏதும் சட்ட திட்டம் வச்சிருங்கிங்களா தேவா” இரண்டடி முன்னே வந்து அவன் கண்களில் கண்களை கலக்கவிட்டு கேட்டாள் அவள்.

“ச்சீ, உன் கூட நின்னு பேசினேன் பார் என்ன சொல்லனும்.”

 

“நின்னு பேசலனா என்ன? பேசத்தான் ஆயிரம் வழியிருக்கே” மீண்டும் சீண்டினாள் அவனை. “நீ எல்லாம் என்ன பொண்னோ, வீம்புக்கு வளர்த்து விட்டிருக்காங்க உன் வீட்டாளுங்க.” அவள் வளர்பைச் சாடினான்.

 

“ஓஹ், த்தங் காட்! அது என்ன நீ ஆம்பளாயானு கேட்டா, பசங்களுக்கு ரோசம் வந்து தன்னை நிருபிப்பாங்களே, அப்படி பெண்ணுங்களும் ஏதும் சாகசம் பண்ணணும் என ஆசையா? நீ பெண்ணாணு என்ன தைரியத்துல பேசரிங்க.

ஆண்களின் தவறுகள் ஆண்மைனா, பெண்மையின் தவறுகள் என்ன கோழைத்தனமா?” புதுமைப் பெண்ணாக பேசினாள்.

 

‘படைத்தவனுக்கு எல்லாமே படைப்புக்கள்தான். ஒருவரின் தேவையை அடுத்தவர் ஈடுசெய்ய ஆண், பெண் எனும் பாலினம் தவறி யார் பெரிது எனும் போட்டிக்காக அல்ல’. பிரசாதும் ஆணாதிக்க வாதியல்ல அவனுக்கே அமராவின் கேள்வி குறுகுறுப்பை உண்டுபண்ணியது.

 

“சரி, விடு. யார் நீ? எதுக்காக இங்க வந்திருக்க?” தன்மையாக வந்தது வார்த்தை. “தேவா, என்ன மறந்துட்டியா? ஆறு மாதம் முன்னே நாம எப்படி…” விக்ரமாதித்யன் வேதாளம் போல மீண்டும் பழைய கதையைத் தொடங்கினாள்.

 

“சோ! நம்ம லவ்வர்ஸ் ரைட்? விட்டா குழந்தை கூட பெறந்திருக்கும்னு சொல்ல வார!, என்னைய முழுசா தெரிஞ்சு வைச்சிருக்கே!” பெருவிரலால் நெற்றியை நீவிவிட்டுக் கொண்டே, அருகிலிருந்தவளின் பின் தலையைப் பற்றி அவள் அதரங்களில் இதழ் பொறுத்தினான்.

 

ஒரு நொடியேனும் தாமதமின்றி, ‘பளார்’ என அமராவின் இடது கை அவனது வலது கண்ணத்தில் இறங்கியது. “ஏய்” என ஓங்கப்பட்ட, அவன் கைகளையும் அழுத்தமாக பிடித்து நிறுத்திவிட்டாள். “உன் சுண்டுவிரல் நகம் கூட என்மேல படக்கூடாது.”, ‘பட்டால் என்னடீ செய்வ’ அவனுடைய பார்வையை அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்தாள்.

 

“மீறிப் பட்டது பிசிக்கல் வைலன்ஸ்னு கேஸ்ஸ போட்டு, உன் சினிமா, நடிப்பு, கொளரவம் எல்லாமே கம்பிக்கு பின்னால குழி தோண்டிப் புதைச்சிடுவேன்.” சொன்னால் செய்துவிடுவேன் என்ற தீவிரம் அவளிடம்.

 

“உன்னையெல்லாய் இந்த ஜென்மத்தில தொடுவேன்னு வேற ஆசையா! இந்த ஜென்மம் இல்ல எந்த ஜென்மத்திலேயும் நீ எனக்கு மனைவினு கூட வெளில சொல்லிக்க மாட்டேன்டீ.” 

 

“அதுக்கென்ன? நீ வைஃப்னு சொல்ல வேண்டாம். பட் நான் நீ என் ஹஸ்ப்ஃன்ட்னு சொல்லிக்கிறேன். ஆனா ஒன்னு இடிக்கிதே!” தாடையில் விரலால் தட்டி யோசிப்பது போல பாவணை செய்தாள். பின், கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலிக் கொடியை ஒரே மூச்சில் கழற்றி அவன் முகத்தில் வீசி எறிந்து கொண்டே, “இதைக் கட்டிக்கிட்டு என் பின்னால சுத்து, உன்னைய கணவனா பூஜிக்கிறேன்.” என்றாள்.

 

அவனை நோக்கி வீசப்பட்ட தாலியானது, அவன் முகத்தில் உரசிக் கொண்டு மஞ்சத்தின் மீது தூவப்பட்டிருந்த ரோஜா இதழ்களின் மீது வீழ்ந்தது. பக்கவாட்டாக திரும்பி அத் தாலியினைப் பார்த்துவிட்டு, ரௌத்திரத்துடன் அவள் முகத்தைப் பார்த்தான்.

 

“என்ன!.அடிக்கனும்னு தோனுதா? இல்ல வெட்டிப் போடனும்னு கை பதறுதா?, முடிஞ்சா பண்ணிக்கோ” கைகளை விரித்துக் காட்டினாள். மௌனியாக அவளை முறைத்தான் தேவ்.

 

“ஜாக்கிரத” என கைவிரலை நீட்டிக் காட்டிவிட்டு, விறுவிறு வென கட்டிலின் ஒரு பக்கமாக சென்று, அதில் பரப்பிக்கிடந்த பூக்களைத் தட்டிவிட்டு, ஒரு தலையணையினில் தலைக்கு கொடுத்து மற்றயதை அவள் கைவளைவுக்கு கொடுத்து இறுக்க அணைத்துக் கொண்டு கண்ணகளை மூடினாள்.

 

“டிவோஸ் பண்ணலாம்னு யோசிக்காம தூங்குங்க நடிகரே! கனவுல கூட அது எதுவும் நடக்காது. ண்ட் எங்கே தூங்கனு யோசிக்கவும் வேண்டாம், இங்க பக்கத்திலயும் தூங்கலாம் இல்லைனா வௌவால் போல எங்கேயும் தலைகீழாவும் தொங்கலாம்.” படுக்கையில் கிடந்தவளின் முதுகை வெறித்தவனுக்கு கடைசியாக கிடைத்த பதில் அதுவே.

 

பேச்சை முடித்துக் கொண்டு நித்திரையில் ஆழ்ந்தவளின் விடியல் என்னவோ பிரசாத்தின் முகத்தில் தான் விழித்தது. தலையணை கூட இல்லாமல் கட்டிலின் முனையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். முகத்தில் இளநகையுடன் எழுந்து, குளித்துவிட்டு, சுடிதாருடன் வெளியில் வந்தவளை வரவேற்றது என்னவோ சிவகாமியின் பூஜை மணியோசைதான். பூஜை முடித்து வந்தவர் இவள் நெற்றியில் குங்குமத்தை இட்டுவிட்டு சமையறைப் பக்கமாக சென்றார். இவளே பின்கட்டு தாண்டி இந்த ஓடையருகில் வந்து வேடிக்கை பார்க்கலானாள்.

 

காலை நீரில் வைக்க முயற்சிப்பதும் பின், காலை வெளியில் எடுப்பதுமாக முகத்தைச் சுருக்கும் அமராவின் பின்னால், தென்னை மரமொன்றில் சாய்ந்தவாறு அவளின் செய்கையை வேடிக்கை பார்த்து நின்றான் இந்தர். மீண்டும் அதே செய்கையை தொடர்ந்தவளின் காலின் கீழ் மண்டியிட்டு, அவளின் கால்சட்டையை சற்று உயர்த்திவிட்டு எழுந்த அவன், அவள் அருகினில் இருந்த பாதணியைப் போடுமாறு கண்களால் பணித்தான்.

 

“குட்டா, நீயா எடுத்துவந்த?” பாதணியைப் பார்த்து வினவிக்கொண்டே அணிந்தாள். “இல்லையே, மேல இருந்து விழுந்திச்சு போல” தென்னை மரத்தை கை காட்டினான். கிளுக்கி சிரித்துவிட்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அப்போது சற்று வேகமாக வீசிய காற்றில் அவள் முடிக்கற்றைகள் அவள் கண்களில் வீழ்ந்தது.

 

“பிஸ்னஸ் லேடிக்கு ஒரு பொனிடையில் கூட போடத்தெரியல” அவள் முடிகளை சரிசெய்தவன், அவன் ஷட் பாக்கட்டில் இருந்து, காலையில் கவியின் அலமாரியில் இருந்து எடுத்த, ஒரு பேன்ட்டை எடுத்து, முடியினை குதிரைவாலிட்டு கட்டிவிட்டவன், அவள் நெற்றியிலிருந்த குங்குமத்தையும் துடைத்து விட்டான். 

 

“வா” கையின் விரல்களைக் கோர்த்து ஓடை நீரில் அவனுடன் அவளையும் இறக்கினான். நீரின் சீதளம் இருவர் உடம்பிலும் உச்சிவரை பரவினாலும் உள்ளிருக்கும் கைபிடியளவான சதைத் துண்டு தகித்துக் கொண்டு எரிந்தது. 

 

அமராவோ தலையை மட்டும் வீட்டின் இரண்டாவது மாடியில் பூட்டப்பட்டிருந்த சன்னலினை நோக்கித் திருப்பி விட்டு மீண்டும் இந்தரின் புஜத்தில் சாய்ந்து கொண்டாள். “ச்சில் பார்பி கேர்ல்”, ‘நான் இருக்கிறேன் உனக்காக’ என்பதைப் போல முதுகில் வருடிக்கொண்டே தொடர்ந்தான்.

 

“தேவா எதுவும் பேசினானா?” சின்னக் குரலில் கேட்டான். “எதிர்பார்த்தது தான்” என்றவள், “உன் மேகம் தூறினிச்சா” அவன் கண்களைப் பார்த்தாள். “கெழுத்தி மீனைப் பிடிக்கனும்னா கென்டை மீனை தூண்டில்ல சாக வைக்கிறதுல தப்பொன்னும் கிடையாது.”

 

“ஹா” இருவர் சிரிப்பும் காற்றில் கலந்தது. அதே நேரம் இந்தருடைய கையடக்கதொலைபேசி அதிர்ந்து, அதன் இருப்பை உணர்த்தியது. தொடுதிரையில் அழைத்தவரின் பெயரினைப் பார்த்த இந்தரின் முகம் நொடியில் பல உணர்வுகளைக் காட்டி மறைந்தது.

 

“வசுமா!”, அழைப்பை ஏற்று செல்லக் குரலில் பேசினான். “யாருடா உனக்கு வசுமா?, வசுமா, கொசுமானு கூப்ட பல்லத்தட்டி கையில கொடுத்துடுவேன் பாத்துக்கோ!. என்ன காரியம்டா பண்ணி வைச்சிருங்கிங்க, கல்யாணமாம் கல்யாணம் ஊருக்கு வாங்க பாத்துக்குறேன். அங்க சென்னயைில என் பையன் சின்னக் கண்ணன் இரண்டு நாளா சாப்பிடாம படுத்துக் கிடக்கானன். இங்க உம் பொண்ணு நிமிசத்துக்கு நிமிசம் அம்முப்பானு கேட்டு அடம்பிடிக்கிறா, எங்க உன் பார்பி கேள்ர். அது தான் எம் பொண்ணு அமரா. போன கொடு வகுந்துடுறேன்.” மூச்சு கூட விடாமல் சரமாரியாக திட்டிக் கொண்டிருந்தார், இந்தரின் அத்தை வசுந்தரா.

 

‘என்னவாம்’ இதழை அசைத்துக் கேட்டாள் அரமா. ‘பேசனுமாம்’ அவனும் அதே போல செய்தான். ‘முடியாது, நீயே சமாளி’ என்பதாக இடம் வலமாக தலையை அசைத்துவிட்டு, அவனிடம் இருந்து விலகி மரத்தின் ஓரமாக போய் நின்றாள்.

 

“வசுமாக்கு என்ன கோபமாம்!, எல்லாம் தெரிஞ்ச விசயம் தானே. சின்னுவ அமரா பாத்துக்குவா. நீங்க ச்சில் பண்ணுங்க.” அவரை சமாதானப் படுத்தும் முயற்ச்சியில் இறங்கினான்.

 

“எம் பையன, என் பெண்ணு பாத்துக்குவா சரி. உங்க பெண்ண யாரு சார் சமாதானப் படுத்துவா?” அவர் முடிக்கும் முன்னமே, “அத்தே! பட்டுமா பக்கத்துல இருக்காளா? பிளீஸ் கொடுங்க. அவ குரலைக் கேட்காம என்னவோ பண்ணுது.” தந்தையாக கண்கள் பரபரக்க கேட்டான்.

 

“அம்முப்பா” ஐந்து வயது மழலையின் சொற்கள் அவன் காதில் தேனாய் இனித்தது. “பட்டுமா! என் தங்கம், சக்கர, வெள்ளிமணி…என்ன பண்ணுறிங்களாம்.”

 

“பாப்பா, பாட்டிக்கூட விளையாடினனாம். பாப்பாக்கு இன்னும் விளையாட நிறைய பொம்ம வேணுமாம். அப்பறம் அம்முமா…” ஏதோ பேசிக் கொண்டே தொடர்ந்தவளிடம் “அம்மும்மா தூங்குங்க கண்ணா. அம்முப்பா ஊர்ல இருந்து வரும்போது பாப்பாக்கு டோய்ஸ் வாங்கி வருவேனாம். பாப்பா சமத்தா பாட்டிக் கூட அடம்பிடிக்காம சாப்ட்டு விளையாடனுமாம்.” குழந்தையிடம் பேசிக் கொண்டே அமராவினைத் திரும்பிப் பார்த்தான். 

 

அவளோ, கைப்பேசியில் சின்னுவுடன் பேசிக் கொண்டு நின்றிருந்தாள். “இனி உன்னோட ஆட்டம் ஆரம்பம் சின்னு. ப்பிலே யூவர் கேம்” அழைப்பை துண்டித்து விட்டு இந்தரைப் பார்த்தாள். அவனும் மகளுடன் பேசி, கொஞ்சி, கெஞ்சி அழைப்பை துண்டித்து விட்டு அவளின் அருகில் வந்தான்.

 

“சின்னுக்கு என்னவாம்” என கேட்டவனிடம், “எல்லாம் ஒகேவாம், உன் பெண்ணு என்ன சொல்லிச்சாம்?”, “என் பெண்ணு அவ அம்மாவ தேடினா. நிறைய டாயிஸ் கேட்டா.” நிருத்தினான் அவன்.

 

“டாயிஸ்” கேள்வியாக பார்த்தவளின் முகத்தை இரு கைகளாலும் பற்றி, நெற்றியோடு நெற்றியை முட்டி “பெண்ணுக்கு டாயிஸ், பெண்ணேட அம்மாக்கு என்ன வேணுமாம்?” கேட்டவனிடம், “தெரியல” என்றாள் அமரா. அளை கைவளைவிற்குள் கொண்டுவந்து உச்சியில் ஈர இதழ்பதித்தான்.

 

இந்தரையும், அவன் கைகளுக்குள் அடங்கியிருக்கும் அமராவினையும் வீட்டின் பின் கட்டின் நிலைப்பட்டியில் சாய்ந்தவாறு ஒரு ஜோடி கண்களில் நீர் சொறிய பார்த்திருந்தாள் கவி. நேற்றைய இரவின் நிகழ்வுகள் அவள் கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தன.

 

பேசா மடந்தையாக அலங்காரங்களுக்கு தன் உடலை ஒப்புவித்த கவியின் நெஞ்சத்தில் பயப் பந்து உருண்டு கொண்டே இருந்தது. அதை மேலும் வலுச் சேர்ப்பது போல, அவளின் இருகைகளையும் தன் கைகளுக்குள் அடக்கி, “அம்மாடி, அந்த தம்பிய பத்தி எதுவும் தெரியாதாக்கும். பௌயமா நடந்துக்க கண்ணு” என சிவகாமி கூறி அவளின் அறை வாசலில் விட்டுச் சென்றார்.

 

நடுங்கும் கரங்களைக் கொண்டு கதவினைத் திறந்தவளை இருட்டு அறையே வரவேற்றது. ‘அவர் இல்ல’ என உள் மூச்சை இழுத்துவிட்டு விளக்கைப் போட்டவளின் பார்வை, மஞ்சத்தில் கைப்பேசியில் கேன்டி கிரஸ் விளையாடிக் கொண்டிருந்த இந்தரில் நிலைக்குத்தி நின்றது.

 

அறையின் மின்னொளி வந்த கணம், முகத்தை நிமிர்த்தி கவியை விழுங்கும் பார்வை பார்த்தான் அவன். அவனுடைய பார்வையானது அவளை அங்குலம் அங்குலமாக அளந்தது.

 

பழுப்புப்பொன் நிறப்புடவையில் மஞ்சள் பூசிய மேகமாகய் மேகவி, மருண்ட விழிகளில் அவனையே பார்த்திருந்தாள். யாரையும் எதிர்பார்க்காத வெற்று அறையில் இவனைப் பார்த்த அதிர்ச்சி அவள் முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது.

 

கட்டிலில் இருந்து எழுந்த அவனோ ஒவ்வொரு அடியாக வைத்து அவளை நோக்கி நடக்க, அவளோ பின்பக்கமாக எட்டுக்களை வைத்து இறுதியில் சுவரில் ஒட்டிக் கொண்டு நின்றாள். ஆனால் இந்தரோ தடை ஏதும் இன்றி, அவளின் முன்னால் வந்து இருபக்க சுவரில் கைகளை ஊன்றி கவியை கைவசப்படுத்தினான்.

 

மிக மிக அண்மையில் ஆண்மையின் வாசத்தை உணர்ந்தவள், உடல் விதிர்விதிர்க்க கண்களை மூடிக்கொண்டாள். இதயம் துடிக்கும் சத்தத்தை தாண்டி எந்தவித ஒசையும் காதுகளுக்குள் பாயாமலிருக்கவும் மெல்ல இமை திறந்தாள் கவி.

 

மீண்டும் அதிர்ச்சியே, காரணம் காலையில் அவன் முடிச்சிட்ட மஞ்சள் நாண் இப்போது அவன் கைகளிலேயே சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. அச்சத்தில் எச்சிலைக் கூட்டி விழுங்கியவாறு மாங்கல்யத்தை தன் கையால் அழுத்தப் பிடித்தாள்.

 

தொண்டையை சரி செய்தவாறு, “வெல் கம் டூ மை லைப் எஸ் எ சர்வன்ட்” கண்ணில் மின்னல் வெட்ட முறுவலளித்தான். “ப்ச், இங்லிஸ் புரியாது என்ன? என்னோட வாழ்கையில புது வேலைக்காரியா உன்ன வரவேற்கிறேன்.” எள்ளலாக பேசினான்.

 

கவியின் உயிர் அடங்கிவிடும் போல உடல் முழுவதும் அவனது கம்பீரக் குரல் நடுக்கத்தை ஏற்படுத்தியது. மயங்கி சரிந்து விடுவோம் என எண்ணி அருகிலிருந்த மேசையைப் பிடித்துக்கொண்டாள். இதை எதுவும் சட்டை செய்யாமல் வார்தைகளை சாட்டையாக சுழற்றினான் அவன்.

 

“நீ எம்.ஏ படிக்கிற ரைட். பட்டிக்காடு உனக்கு புரியுர மாதிரி பேசிக்கலாம்.” இதழைக் குவித்து ஊதி விட்டு தொடர்ந்தான். “ஆதிகாலத்துல நாட்டு ராஜாங்க போர்க் கைதிகளான எதிரி நாட்டு அரச பெண்களை, தன்னோட மாளிகையில அரசிக்கும் தனக்கும் சேவகம் செய்ய நியமிப்பாங்க. அதே போலத் தான் நீயும், எங்களுக்கு சேவை செய்ற, நான் என்ன சொன்னாலும் மண்டைய ஆட்டனும். உன்னய மாதிரி மிச்ச சொச்சத்துக்கு இந்த இந்தர் கணவனா வாரதா?” 

 

அவள் தலையில் மீளமுடியாத கனத்தை தூக்கி வைத்தவன். தாலியை இழுத்து, “இட்ஸ் ஜஸ்ட் எ ரூப் ஆஃப் அக்ரீமண்ட்”, “ப்ச், தமிழ்ல என்ன செல்லுவாங்க உடன்படிக்கை. என்னோட சேவகியா இருக்க சம்மதம்னா இது உன் கழுத்துல தொங்கும் இல்லனா” அவன் முடிக்கும் முன்பே, கவி அதனைப் பறித்து தன் மார்போடு அணைத்துக் கொண்டு நிலத்தில் மடிந்து அழ ஆரம்பித்தாள்.

 

“உப், அப்போ உனக்கு சம்மதம்னு எடுத்துக்குறேன். இனி அந்த தேவா கிட்ட நீ பேசினத கண்டேன் தொலைச்சிடுவேன். அது எப்படி காலையில தாலி நான் கட்டுவேனாம், நீ பயத்துல அவனக் கட்டி பிடிப்பியாம்” ஆழ்ந்த சுவாத்தை வெளியிட்டு விட்டு கவி மேசை மீது வைத்திருந்த பாலைக் குடித்தான். “கஞ்ஜூஸ்! பாதாம் கொஞ்சம் எக்ஸ்ரா போட்டு இருக்கலாம்” கூறிக் கொண்டே கட்டிலில் போய் படுத்துக் கொண்டான்.

 

‘யார்ரா நீ எனக்கு கட்டளை போட, நான் ஒன்றும் பட்டிக்காடு எல்லாம் கிடையாது. அது என்ன எச்சில்னு வார்தைக்கு வார்த்த முள்ளைத் தைக்க, நான் பிரசாத் மாமா கூட தனிமையில பேசினது கூட கிடையாதுடா. உனக்கு பாதாம் வேணும்னா போய் மரத்துல தொங்கி பறிக்க வேண்டியது தான. எந்திருச்சி நின்னாலே வானம் தலையில தட்டும் வளந்துகெட்டவன்.” 

 

வாழ்கையை நினைத்து குலுங்கி அழும் போதும் இந்தர் மீது கவிக்கு சொல்லோனா ஆத்திரம் உள்ளுக்குள் கனன்றது. ஆனால் பயத்தையே ஆடையாய் சுமக்கும் பாவைக்கு மனதினைத் தாண்டி அவனை வையமுடியாமல் போனது என்னவோ நிதர்சனம்.

 

கட்டிலில் நீண்டு கிடந்த இந்திரின் முதுகினையும் காற்றில் ஆடும் அவன் பின்உச்சி முடிகளையும் பார்த்துக் கொண்டு விசும்பினாள் கவி. “ஏய், கண்ணுல தண்ணித்தொட்டிய கட்டி வைச்சிருக்கியா? மனிசன நிம்மதியா படுக்க விடுறியா கொஞ்சம். லைட்ட அணைச்சிட்டு வந்து படு. எனக்கு வேற தனியத் தூங்க முடியாது. ஒருவேளை ஏதும் கனவு..” அவன் கூற வருவது புரிந்தவளாக, விளக்கை அணைத்து விட்டு மஞ்சத்தின் மூலையில் முடங்கிக் கொண்டாள்.

 

காலையில் வழக்கம் போல எழும் போது இந்தர் அழ்ந்த உறக்கத்திலிருக்கவே, கண்களில் வடிந்த நீருடன் குளித்து, தயாராகி வெளியேறிய கவியிடம் சிவகாமி பால் குவளையை திணித்து இந்தருக்கு கொடுக்குமாறு பணித்தார். அவளே அவனை வீடு முழுவதும் தேடி, கடைசியாக கண்டு கொண்டது என்னவோ அமராவினை கைக்குள் அடைத்து வைத்திருக்கும் நிலையில்தான்.

 

கண்ணீர் கன்னத்தில் வழிந்தோட தன் அறைக்குள் ஓடினாள் கவி. அதே நேரம் பிரசாதோ மொட்டை மாடியில் நடைபயின்று கொண்டிருந்தவனின் அகத்திரை முழுவதும் நேற்றைய நாளின் நினைவுகள்.

 

யாரென அறிமுகமில்லாத கும்பல் திருமணத்தை நிறுத்தி, பொய்ச்சாட்டிட்டு இவனைத் திருமணம் செய்தது. பின் நாகம் வீட்டில் நூழைந்தது. அடுத்ததாக அவனின் குடும்பத்தினர் ஒருவர் மாறி ஒருவராக ஏதோ துக்க வீட்டில் விசாரிப்பது போல இவனை அழைத்து விசாரித்து ஒரு வழி பண்ணியிருந்தனர். 

 

தனது கையடக்க தொலைபேசி கார்த்திக்கிடம் இருப்பதனாலும் மேலும் அவன் அவசரமாக மனைவியினை வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தியிருப்பதனால் திருமணத்திற்கே வருகை தரதா காரணத்தினால் யாருக்கும் அழைத்து அமரா பற்றி விசாரிக்க கூட முடியாத நிலையில் இருந்தான்.

 

அவனுடைய அறைக்கு செல்வதற்கு முதல் தீவிரமாக யோசித்து ஒரு முடிவுக்கும் வந்திருந்தான். ஏனெனின் உறவினரிடம் இருந்து தப்பித்து மாடிக்கு செல்லும் போது இசையும் சிவகாமியியும் பேசிக் கொள்வது அவன் காதில் ஒலித்தது.

 

“இசை! நீ சின்னப் பொண்ணுடாமா. பிரசாத்து தப்பு செய்யுதானோ இல்லியோ அது இரண்டாம் பட்சம்மா. ஆனா சுப காரியத்தை கவிக்கு செய்யத் தானே வேண்டியிருக்கு. நான் தூக்கி வளர்த்த புள்ள, ஏம் மகன கண்ணாலம் கட்டலனாலும் எம் மருமக தானுவ. அந்தப் பொண்ணு, அதாம் உன் புது அண்ணி கவிக்கு மட்டும் சாந்திமுகூர்த்தம் ஏற்ப்பாடு பண்ணுனா உரண்ட பிடிக்கும். அதே இரண்டு பேருக்கும் பண்ணுரவ.”

 

அறைக்கு சென்றவுடன், அமராவிடம் தன்மையாக பேசி உண்மையை வாங்க வேண்டும் என எண்ணிய பிரசாத்தின் கோபம் வேண்டுமென்றே, அவளினால் சீண்டப்பட்டது. இறுதி வாய்ப்பாக அவள் வழியலேயே சென்று ‘படத்துக்காக முத்தமிடுவது போல’ எனும் விதமாக முத்தமிட்டதும் அதன் பின்தான காட்சிகளும் எண்ணத்தில் சங்கமிக்க, மொட்டை மாடியின் கைபிடி சுவரின் அருகில் வந்தான் பிரசாத்.

 

கழுத்து நரம்புகள் புடைக்க, கையை முஷ்டியாக இறுக்கிக் கொண்டு பிரசாத் கண்ட காட்சி என்னவோ இந்தர் அமராவின் உச்சியில் முத்தம் வைப்பதுதான். எல்லையில்லா அலைகள் மோதும் கரையாக அவன் மனம் கொத்தித்துக் கொண்டிருந்தது. 

 

சஞ்சலங்கள் கண்ணோடு,

அஞ்சன விழிகளோ நீரோடு,

மதுரம் சிந்தும் மலர்களின் துளிகள் மட்டும்; உன்னைக் கடந்து போகும் மேகத்தோடா கண்ணா?

 

அவள் வீழ்த்தினாள்...

Leave a Reply

error: Content is protected !!