யாகம் 8
யாகம் 8
யாகம் எட்டு
கரைகளைத் தொட்டுச்செல்லும் அலைகளும், அவ் அலைகளுக்குச் சொந்தமான கடலின் மீதும் கரங்களை விரித்த ஆதி பகவான் செவ்வென தன் பணியைத்தொடர்ந்தார்.
காலையில் தாமதமாகவே துயிலெழுந்து பழக்கப்பட்ட இசை, அவசரகெதியில் புறப்பட்டு வைத்திய சாலைக்கு செல்வதற்காக கீழ் அறைக்கு வந்த போது, பிரசாத் மற்றும் இந்தர் எதிர் எதிர் திசையில் நீள்விருக்கையில் அமர்ந்திருந்தனர்.
திருமணம் முடிந்து அன்றுடன் ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் பிரசாத் இன்று படப்பிடிப்புக்கு செல்லவிருப்பது இசையறிந்த ஒன்றே. தன் பாசமிகு அண்ணனிடம் பேசாமல் விட்டும் ஒரு வாரம் முடிவடைந்து விட்டதல்லவா? என நினைத்து, இசை சாப்பாட்டு மேசையில் சென்று அமர்ந்தாள்.
‘ஏன் அண்ணா கவிக்கு இப்படி துரோகம் பண்ணின?, புதுசா இரண்டு பெயரை அழைச்சு வந்தாலும், அவங்க நடவடிக்கைங்க எதுவுமே சரி கிடையாது. என்னதான் மேல்வர்க்க கலாச்சாரம்னு சொன்னாலும், நம்ம வீட்டு பாரம்பரியத்தை துளி கூட மதிக்க மாட்டாங்களா?’ மனதினுள் பழித்துக் கொண்டே தட்டில் உணவுடன் அமர்ந்தாள் இசை.
“சார்!, புது சார்க்கு கொரியர் ஒன்று வந்திருக்கு” என காவலாளி, கடதாசி சுற்றப்பட்ட கூடையொன்றை கொண்டு வந்தான். அதே நேரம் அமராவும் அவ்விடம் வந்து பிரசாத்தின் அருகில் அமர்ந்து கொண்டாள்.
மாடியிலிருந்து, உணவறைக்கு செல்ல வந்த கவியும் சரியாக அப்பொழுது கீழே வர, “மேகம்! வா… வா, உனக்குத்தான் இந்த பாக்ஸ். லெட்ஸ் ஓப்பன் இட்” என்று இந்தர் அவன் பெயரில் வந்த கூடையை, கவியைத் திறக்க கட்டளையிட்டான்.
‘நான் எது சொன்னாலும் செய்யணும்’ இந்த ஏழு நாட்களாக இந்தரின் கட்டளை அதுவாகவே இருப்பதினால், கவியும் கூடையில் கையை வைத்தாள்.
மெதுவாக அவள் கூடையைத்திறக்க ஏதோ கருப்பு உருவம் அவள் மீது பாய்ந்தது. “அப்பா” வென பெரும் குரலெடுத்து பயத்தில் கத்தினாள் கவி.
இத்தனை நேரம் அடைபட்டுக் கிடந்து வெளியில் வந்த உட்சாகத்தில், அக் கூடையில் அடைக்கப்பட்டிருந்த கருப்பு பூனையோ கவி மீது பாய்ந்து விளையாட ஆரம்பித்தது.
ஆனால் அவளாே பூனை என்று எழுதிவைத்தாலே பயத்தில் எச்சிலை விழுங்குபவள். தன் மீதே இப்போது பூனை பாயவும், வீரிட்டு அழ ஆரம்பித்தாள்.
பிரசாத்தோ அவள் கண்ணீரைத் தாங்க மாட்டாமல், பாய்ந்தெழுந்து பூனையைப் பிடிக்க எத்தனிக்க, “கம் ஆன் லூக்கா” என அமரா வேண்டுமென்றே குரல்கொடுத்தாள்.
அவளை பக்கவாடாக திரும்பி பார்த்துக் கொண்டே பிரசாத் பூனையின் வாலினில் கையை வைக்க, ‘அந்தோ பரிதாபமென’ அப்பூனை பாய்ந்து அவன் முதுகில் நன்கு பதம்பார்க்க நான்கு கீறலையிட்டது.
கவி அழுத சத்ததில் அறையை விட்டு வெளியேவந்த வேலுவைக் கண்ட கவி “அப்பா” என்ற கேவலுடன் அவரின் இடையைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
இதற்கிடையில் சிவகாமி, நடராஜனும் வீட்டில் நடக்கும் அமளியினை அவர்களின் அறையை விட்டு வெளியில் வந்து பார்த்தனர்.
லூக்காவோ, புது இடத்தைக் கண்ட துடிப்பினால், வரவேற்பறையை ஒரு கலக்கு கலக்கிவிட்டு, சாப்பாட்டறையில் புகுந்து இசை அமர்ந்திருந்த மேசை மீது தாவி ஏறி, அவள் உண்டு கொண்டிருந்த தட்டில் நாக்கை நீட்டியது.
அடக்கப்பட்ட கோபத்துடன், ‘உணவை முடிக்காமல் எழக்கூடாது’ எப்போதும் சொல்லப்படும் சிவகாமியின் கட்டளையின் படி, அவசரமாக உண்டு கொண்டிருந்தவளுக்கு, பூனையின் செய்கை ஆத்திரத்தை மூட்ட “ச்சீ” என சாப்பாட்டுத் தட்டை நிலத்தில் தள்ளிவிட்டு எழுந்தாள்.
“லூக்கா பயந்துட போகுது” என இசையை அதட்டிவிட்டு தன் வளர்ப்பு பூனையை “லூக்கா, மை பெய்பி” கொஞ்சிக் கொண்டு முத்தமிட்டாள் அமரா.
இதற்கிடையில் பூனை முதுகில் ஏற்படுத்திய நகக் காயத்திலிருந்து, துளியாக உதிரம் கசிந்து பிரசாத்தின் ஷட்டை நனைத்தது. இசையோ கைகளை கழுவிவிட்டு தனது அறைக்குச் சென்று மருந்து மற்றும் ஊசியை எடுத்து வந்து தனது அண்ணணுக்கு முதலுதவி செய்தாள்.
கவியின் அழுகை இன்னும் நின்ற பாடில்லை, இந்தரோ ‘நான் எதுவுமே செய்யவில்லையே’ என்பது போல கவியையே முகம் சுருக்கி பார்த்துக் கொண்டிருந்தான் தவிர, தவறியும் ஒரு வார்த்தை பேசவில்லை.
பிரசாத்தின் பெற்றவர்களுக்கே ‘என்னடா’ எனும் நிலைதான். வேலுவோ “கவிமா! அதுதேன் அப்பா வந்துட்டேன்லே, வெசனப்படாத தாயி.” மகளை அணைத்து தலைகோதி சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார்.
“நத்திங் சீரியஸ்ணா, ஜஸ்ட் சின்ன தழும்புதான். டீடீ போட்டாச்சு. எதுக்கும் இந்த டெப்லட்ட போடு”, இரண்டு மாத்திரைகளை கையில் கொடுத்து, தன் அண்ணணுடன் பேசாமலிருந்த பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்தாள்.
“மாமா, நான் பேசுறேன்” வேலுவின் மீது கொடியென சுருண்டு கிடந்த கவியை தன்னை நோக்கித் திருப்பி, அவள் முகத்தை கைகளில் ஏந்தி, “கவி அண்ணி, நீ என்னடா குழந்தை போல அழுதுட்டு. எத்தனை வாட்டி சொல்றது. வ்வீ ஸ்டாங். கடவுள் படைச்சதுலேயே சக்தியான படைப்பு பொண்ணுங்க தான். இனியாச்சும் பயப்படாம தைரியமா சில பல ஜந்துக்களுக்கு எதிரா துணிஞ்சு நின்னு பைட் பண்ணு.” எனக் கூறினாள்.
அவள் “ஜந்து” எனும் போது, அவளின் கண்கள் தாமாகவே இந்தர், அமராவைப் பார்த்ததை அவர்களிருவரும் நன்கு அவதானித்தனர்.
“ம்ம், ச்சரி”, இசையுடைய ஆலோசனைக்கு கவியும் ஒருவகையில் சமாதானப்பட்டு தலையை இடவலமாக அசைத்தாள்.
அமராவோ, “இந்தர் உனக்கெதுவும், இல்ல இல்ல!, யாரும் தங்கை இருக்கா என்ன?” பூடகமாக வினவினாள்.
“சிஸ்டர்ஸ்! ஓஹ் நோ வேய், நமக்கு தங்கைனு போர்வை போட்டு பெண்ணுங்க கூட பேசியே பழக்கமில்லியே.” கன்னத்தில் நாக்கை துருத்தி, இசையைப் பார்த்து இளநகை புரிந்தான்.
“அதுதானே!” அவன் உள்ளங்கையில் இவள் உள்ளங்கையைத் தட்டி விட்டு, இசையின் முகத்திற்கு நேரே சொடக்கிட்டாள் அமரா.
“பிரபா!, இதோபாரு உனக்கு தேவா மட்டும் தானே அண்ணன். அப்படினா இனிமே என்னைய மட்டும் தான் அண்ணினு சொல்லணும். மைன்ட் இட்” இடது புருவத்தை உயர்த்தியவளிடம் எந்த பதிலும் சொல்லாமல் தனது தோள்பையை எடுத்துக் கொண்டு வெளியேரினாள் இசை.
‘திமிருடீ உனக்கு, அடக்கவைக்குறேனா இல்லையானு காத்திருந்து பாரு, இசையாம் இசை. பெரிய இன்னிசைக் கச்சேரி வைச்சிட்டாளும். உன் பெயருக்காகவே எனக்கு உன்னைய பிடிக்க மாட்டுது.’ விசமமாக மனதில் நினைத்துக் கொண்டு இந்தருடன் அவளுடைய சென்னை கிளை நிருவனத்திற்குச் செல்ல, தனது ரோல்ஸ் ரோயிஸ் காரை நோக்கிச் சென்றாள்.
பிரசாத்தும் படப்படிப்புக்காக, வெளியில் காருடன் காத்திருந்த, கார்த்திக் மற்றும் பாதுகாவலருடன் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றான்.
வீட்டிலோ, கவி அவளறைக்குள் புகுந்து கொள்ள, பெரியவர்கள் மூவரும் நீள்விருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
“மொத தடவ, பிரசாத்த நடிக்க அனுப்பியிருக்க கூடாதோனு தோனுது. அந்தப் பொண்ணு நடவடிக்கை எதுவுமே சரியாப் படலே. இதுல கவிப் புள்ள வேற ரொம்ப வெசனப்படுது.” என்றார் நடராஜன்.
“பிரசாத்து என்னதேன், அந்தப் பெண்ண விரும்பியிருந்தாலும், எம் பையன் இத்தன தப்பா நடந்துக்க மாட்டானுவ. அது மட்டுமா? புருசன் பொஞ்சாதினு அந்நியோன்யம் கூட அவக கிட்ட இல்லியே! ஹூம்” என மூச்சை இழுத்துவிட்டார் சிவகாமி.
“எம் பொஞ்ஞாதி போனத்துக்கு அப்புறம், நான் வாழுரதே எம் பொண்ணுக்காகத்தேன். இந்தப் பையன் எம் மவள ரொம்ப படுத்தி எடுக்குறவேன். ஒரு நாள் இல்ல ஒரு நாள் எம்ம சுயரூபத்த காட்டவேண்டி வந்துரும்.” முகத்தில் வெறியுடன் பேசினார் வேலுப்பாண்டி.
அங்காே, படப்படிப்பிற்காக பிரசாத் கேரவனில் ஒப்பணை செய்து கொண்டிருந்தவனிடம், “சார், இன்னைக்கு பையிட் சீன். அதனால ஷட் ரிமூவ் பண்ண வேண்டிய சீன்க்கு மேக்கப் போட்டுடலாம். சோ” ஒப்பணைக் கலைஞர் கூறவும், தனது ஷட்டைக் கழற்றவும், அக் கலைஞரோ பிரசாத்தைக் குறுகுறுவென பார்த்தான்.
“என்ன?” பிரசாத் கேட்கவும், “நெயில் மார்க்” வெட்கத்துடன் பதிலளித்தான் அவன். ‘நெயில் மார்க்? அடக் கடவுளே! பூனையின் நகத்துக்கும் பெண்ணோட நகத்துக்கும் வித்தியாசம் தெரியாதா? லவ் மேக்னு வேறு நினைப்பா? சரிதான், அதுக்கெல்லாம் இந்த ஜென்மத்தில வாய்பே இல்லியே’ உள்ளுக்குள் புகைந்து கொண்டே வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் ஒப்பணையிட்டுக்கொண்டான்.
“ஆக்ஷன்” எனும் கட்டளைக்கு இணங்கி நடிப்பில் இறங்கினான் பிரசாத். “ஏன்டா, பொண்ணுனா உனக்கு கிள்ளுக் கீரையா?” தன் வலது பக்கத்திலிருந்தவனின் கையை முறுக்குவது போல நடிக்க, “கட்”, “சார், இந்த டையலோக் அடிச்சதுக்கு பின் சொல்ல வேண்டியது.” எனக் கூறினார் படத்தின் இயக்குனர்.
இவ்வாறு, “சார், ஷட்டை மூனாவது ஆளை அடிச்சதுக்கு பின் தான் கழற்ற வேண்டும்”, “வயிற்றில் உதைக்க வேண்டியவன் நான்காவது நிற்பவன்”, “சார் ஒன்ஸ் மோர் டேக் பிலீஸ்” என்று இருபதுக்கும் மேலாக காட்சிகள் மீள மீள எடுக்கப்பட்டது.
‘படப்பிடிப்பில் அத்தனை ஒத்துழைப்பாக இருப்பவர் நடிகர் பிரசாத்’ எனும் அவனுக்கான அடையாளம் காற்றில் பறப்பது போன்ற உணர்வு அவனைத் தகித்தது. நடிப்பதற்காக புகைப்படகருவியைப் பார்க்கும் போதெல்லாம் அமரா அவனைப் பார்த்து நக்கலாக சிரிப்பது போன்ற மாயை அவனை வதைக்க, “பேக் அப், பிளீஸ். ஐ எம் நாட் கம்பர்ட்டபுள் டுடே. இன்னொரு நாள் பார்த்துக்களாம்” என்று காரில் சென்று அமர்ந்தான் பிரசாத்.
“சார்!” என பின்னால் வந்த ஓட்டுனரிடம் சாவியை வாங்கி விட்டு, பாதுகாவலரைக் கூட வேண்டாம் என்று கட்டளையிட்டு தனியாக வண்டியைக் கிளப்பிக் கொண்டு, இலக்கேயில்லாமல் வண்டியை தார்ச்சாலையில் பறக்கவிட்டான்.
இசைபிரபாவோ; வைத்தியசாலையில் நோயாளிகளைப் பார்வையிட்டு முடிந்ததும், தன் அறையில் வந்து மேசை மீது தலையை சாய்த்து கடந்த காலத்தை நிகழ்காலத்துக்கு கொண்டுவரும் சிந்தனையில் ஆழ்ந்தாள்.
நடராஜன் மற்றும் சிவகாமிக்கு மூன்று வாரிசுகள். மூத்தவள் இசைபிரியா, தாதிக்கு படித்துவிட்டு கணவன் மற்றும் வயிற்றில் சுமந்த மகவுடன் தீயில் வெந்துவிட்டாள். அடுத்து தேவ் பிரசாத், இசைபிரியாவை விட பதினாறு வருடம் சிறியவன். கடைக்குட்டி இசைபிரபா, இசைபிரியா இறந்து ஒரு வருடத்தின் பின் பிறந்தவள். அதனால்தான் என்னவோ இசைபிரியாவின் நியபகமாக இவளையும் இசை என்றே அழைக்கின்றனர்.
தனது இருபத்து மூன்று வயதில் இசைபிரியா இறக்கும் போது பிரசாத்திற்கு ஆறு வயது பூர்த்தியாகியிருந்தது. ஆக மூன்று பிள்ளைகளுக்கும் இடையிலிருக்கும் அதிக வயது வித்தியாசம் போல, அவர்களின் பெற்றோர்களும் வயதான தம்பதிகளே! எழுபதைத் தாண்டிய வயதிலும் இளமையாக அத்தம்பதியினர் வாழ்வதற்க்கு காரணம், அவர்களின் கிராமிய வாழ்வுமுறை தான்.
அடுத்து வேலுப்பாண்டி, அக்கா மற்றும் மாமாவின் வீட்டிலேயே வளர்ந்துவர, இசைப்பிரியாவின் மரணத்திற்க்கு பின்னே மேகவியின் அம்மாவை திருமணம் முடித்திருந்தார்.
இசைபிரபாவுக்கு இரண்டு வருடங்கள் சிறியவளாக அவ்வீட்டில் கோலொச்சிய மேகவியின் மீது பெரியவர் முதல் சிறியவள் இசை வரை அன்பைக் கொட்டி வளர்தனர்.
பிரசாத் சினிமா என வந்து நிற்கும் போதும் அவ்வீட்டில் தடையில்லை, இசைபிரபா வைத்தியம் எனும் போதும் ஆதரவே! மேகவி மாத்திரம் பரீட்சையில் முதலிடம் வந்தும் தமிழ் இலக்கியம் எனும் போது மறத்துக்கூறாமல் அவள் விருப்பத்திற்கே விட்டனர்.
வீட்டில் பிரசாத் எப்போதும் சிறந்த குணவானாகவே வளர்ந்தான். அதற்கு நேர்மாற்றமாகவே இசைபிரபா வளர்ந்தாள். பிடிவாதம், கோபம், சண்டை என இவள் வளரவும்; சிவகாமியோ அச்சத்தில் மேகவியை மிகவும் மென்மையானவளாக வளர்க்க ஆசைப்பட்டு, அதன் படியே வளர்த்தார்.
“அம்மா! ரொம்ப தப்புப் பண்ணிட்ட, கவியை இவ்வளவு பயம்கொள்ளியா வளர்த்து விட்டிருக்க தேவையில்லியே! கவி இடத்துல நான் இருந்து இருந்தா, அந்த இரண்டு பிடாரிங்களையும் எப்போவோ அடக்கி வைச்சிருப்பேன். இப்படி அவ நடுங்கி சாகுறத பார்த்தா எனக்கே கவலையா இருக்கு. பாரதி கவிதைய வாசிச்சும் புதுமைப் பெண்ணா இல்லனாக் கூட சாதாரண மனுசி மாதிறியாச்சும் இருக்க வேணாமா? இனிமே அம்மா பேச்சு எதும் சரிப்பட்டு வராது. நானே என் கவிக் குட்டிய பத்துக்குறேன்” நெஞ்சில் உரத்துடன் முனங்கிக் கொண்டிருந்தவள் அறியவில்லை, அதிக துணிவும் ஆபத்து என்பதை.
அவளுடைய சிந்தனையைக் சீர்செய்யும் வண்ணம் அவள் அறைக்கதவை தட்டி உள்ளே நுழைந்த தாதியோ, “டாக்டர், உங்கள ச்சீப் டாக்டர் ரூம்க்கு வர சொன்னார்” என்றார்.
தலைமை வைத்தியர் அறையிலோ, மருந்து எழுத பயன்படுத்தப்படும் சிட்டைகளை ஒவ்வொன்றாக கிழித்து, அவற்றை மடித்து காகிதக் கப்பல் செய்து விளையாடிக் கொண்டிருந்தான் ஹஸ்வந்.
“டுவண்டி சிக்ஸ்” என அவன் கப்பலை எண்ணிக் கொண்டிருக்கையில் அறைக்கதவை திறந்து உள்ளே நுழைந்தார், அவ் வைத்தியசாலையின் தலையை வைத்தியர் காந்திமதி.
“அடேய், கண்ணா! இருபத்தி எட்டு வயசாச்சு, கல்யாணம்னு ஒன்னு பண்ணியிருந்த உன் குழந்தைக் கூட விளையாடுயிருக்க வேண்டிய வயசுல கப்பல் விட்டு விளையாடுறியா?” என நிறுத்தி தன் இருக்கையில் சாய்ந்தவர், “செல்லம் கொடுத்து கெட வைச்சிட்டாள் உன் அம்மா தேவி” என்றார்.
“ச்சு, அது என்ன எங்கம்மா? இதுவே வேறு நேரமா இருந்தா, உனக்கு அம்மாவாக முதலே அவ என் பிரண்டுனு பீலா விடுவிங்க” உதட்டை பிதுக்கியவனிடம், “உன்னைச் சொல்லக் கூடாது, உன்னை ஆப்ரேசன் பண்ணி வெளியில எடுத்த டாக்டரைச் சொல்லனும்” மூச்சை இழுத்து விட்டார்.
“அது என்னவோ மறைமுகமா தாக்க வேண்டியது? அந்த டாக்டரே நீங்க தானே? மிஸஸ் காந்திமதி” எனச் சத்தமாக சிரித்தான்.
“குறும்புக் கண்ணன் தானடா நீ, இத்துனூன்டு வயசுல திக்கி திக்கி பேசுவியே, இப்போ என்னமா வாய் பேசுற!” என்றவரிடம் “நம்ம தொழிலே, வாய்மையே வெல்லும் தானே!” கண்சிமிட்டியவன் “தீ கிரேட் கிர்மினல் லாயர் ஹஸ்வந் கமலக்கண்ணன் வாய் பேசலனா, அன்னைக்கு கோட் எல்லாம் உயிரவிட்டு இருக்குதுனு அர்த்தம் மதி” எட்டி அவர் கன்னத்தைக் கிள்ளினான்.
“எக்ஸ்க்யூஸ் மீ மேம்” சரியாக இசையும் கதவைத் திறக்க, அவன் கதிரையிலிருந்து எம்பி காந்திமதியை தொடுவதை, அதிலும் அவன் முதுகுப் பகுதி மட்டுமே அவள் பார்வைக்கு கிடைத்தது.
தலைமை வைத்தியரினை ஒரு நெடியவன் கழுத்தை நெருக்குவது போலவே இசைக்குத் தோன்ற, வேகமெடுத்துப் போய் அவன் சட்டையை பிடித்து, தன் பக்கமாக அவனைத் திருப்பி கன்னத்தில் அவள் கையை இறக்கினாள் இசை.
தொடாமலே தொடரும் நேசமோ ஒருவகை,
விடாமலே துரத்தும் நிலவின் மேகங்களோ! அவள் அவன் முகை!
அவள் வீழ்த்தினாள்…..